Showing posts with label பகவத் கீதை-15. Show all posts
Showing posts with label பகவத் கீதை-15. Show all posts

Wednesday, June 1, 2016

Srimad Bhagavath Gita - Chapter-15

அத்தியாயம்-15
புருஷோத்தம யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-27-01-2022

श्रीभगवानुवाच
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि य्स्य पर्णानि यस्तं वेद स वॆदवित् ॥ 15-01॥
இதில் சம்சாரமானது வர்ணிக்கப்படுகின்றது.  சம்சாரம் ஆதாரமற்றது என்ற தன்மையை புரிந்து கொள்ள உதவுகின்றது.  இந்த உலகத்தை விசாரம் பண்ணினால் அது ஒன்றுமில்லை என்று அறிந்து கொள்ள முடியும்.  சம்சாரத்தை ஒரு மரத்தோடு ஒப்பிட்டு நன்கு புரிகின்றமாதிரி எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.. இது வைராக்கியம் என்ற தகுதியை அடைய உதவுகின்றது.  நித்ய-அநித்ய விவேகத்தை அப்யாஸம் செய்வதனால் வைராக்கியம் ஏற்படுகிறது.  

இந்த உலகம் துயரத்தைக் கொடுக்கிறது என்ற எண்ணத்தை விட சுகத்தைக் கொடுக்கக் கூடியது என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றது.  சுகமும் கூட துயரத்துடன் கூடியதாகத்தான் இருக்கின்றது. எனவே சம்சார வர்ணனை வைராக்கியத்தை கொடுக்க கூடியது என்ற அறிந்து அதை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும்.  சம்சாரத்திற்கு பிரம்மன்தான் ஆதாரம் என்று புரிந்து கொள்ளவும் இந்த கருத்து தேவைப்படுகின்றது.

சம்சாரமானது அரசமரத்தோடு ஒப்பிடப்படுகின்றது.  மூன்றுவித ஒற்றுமைகள் கூறப்பட்டிருக்கின்றது.  அவைகள் மரம், வெட்டுதல், மாறிக் கொண்டேயிருத்தல் என்பதாகும்.  மரத்தின் ஆனி வேரை மாயையுடன் கூடிய பிரம்மத்துடனும், பெரிய கிளைகளை (ஶாகா) ஸ்தூல,சூட்சும பூதங்களுடனும், இலைகளை (பர்ணானி) கர்மகாண்டத்தினுடனும் ஒப்பிடப்பட்டு இருக்கிறது.

ஊர்த்வம் – மாயாசக்தியுடன் கூடிய பிரம்மன், இது அரச மரத்தின் ஆனிவேருக்கு (மூலம்) ஒப்பிடப்படுகிறது.

ஊர்த்வம் என்ற சொல்லுக்கு உயர்ந்தது, மேலானது என்று பொருள். எனவே இங்கு பிரம்மன் என்ற பொருள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது., இது சூட்சுமமாகவும், இந்திரியங்களால் கிரகிக்க முடியாததாகவும்  இருக்கின்றது.  மரத்தின் வேரும் புலன்களால் கிரகிக்க முடியாததாக இருக்கிறது. சம்சாரத்திற்கு காரணமாக பிரம்மன் இருக்கின்றது.  வேரும் மரத்திற்கு காரணமாக இருக்கிறது. 
நித்யத்வாத் - என்றும் இருப்பதனால்  இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 
ஸத்யம் – எல்லா காலத்திலும் உண்மையாக இருக்கின்றது. 
ஆகையால் ஊர்த்வம் என்ற சொல்லுக்கு பொருளாக இங்கு பிரம்மன் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  மேலான பிரம்மத்தை இந்த சம்சாரம் ஆனிவேராக கொண்டுள்ளது. 

அத4ஹ ஶாக2ம் - கீழ் நோக்கி இருக்கின்ற பெரிய கிளைகள் உடைய,
அஸ்வத்தம் ப்ராஹூ: - அரச மரம் என்று சொல்கிறார்கள்

கீழ்நோக்கி இருத்தல் என்பது நம் கண்களால் பார்க்கக்கூடிய ஸ்தூல பூதங்கள்,  அவைகள் காரியமாக வந்திருப்பதாலும், நிலையற்றதாகவும்,  மாறிக் கொண்டிருப்பதாலும், வெறும் தோற்றமாக இருப்பதாலும் பெரிய கிளைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது.

அவ்யயம் – நித்யமானது, என்றுமுள்ளது.
நித்யம் என்பது இரண்டு வகையாக உள்ளது. அவைகள் பிரவாக நித்யம், கூடஸ்த நித்யம்.  பிரவாக நித்யம் என்பது மாறிக்கொண்டெ இருந்து கொண்டிருக்கும் (உ-ம்) நதியில் ஓடும் நீர்.  கூடஸ்த நித்யம் என்பது மாறாமல் என்றும் இருந்து கொண்டிருப்பது அதுவே பிரம்மன். 
நாம் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த உலகம் தோன்றிக் கொண்டு இருந்தாலும் மாறிக்கொண்டேயிருக்கும் என்ற கருத்தை அவ்யயம் என்பதற்கு பொருளாக பகவான் குறிப்பிடுகிறார்.

ச2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணானி - இந்த மரத்தினுடைய இலைகள் வேதத்தின் கர்ம காண்டத்தை குறிக்கின்றது. இலைகள்தான் மரத்திற்கு அழகையும், வளர்ச்சியையும், பாதுகாப்பையும் கொடுக்கின்றது.  மேலும் மரத்தின் தன்மையையும் மறைக்கின்றது.  அதுபோல கர்ம காண்டமானது நம்மை சம்சாரத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றது.  சம்சாரத்தை அழகுபடுத்தி காட்டுகின்றது.  உலகத்தின் உண்மை ஸ்வரூபத்தை மறைக்கின்றது.

வேதத்தின் முதல் பகுதி கர்ம காண்டம் என்று அழைக்கப்படுகின்றது. இறுதி பகுதியானது ஞானகாண்டம் என்றும், உபநிஷத் என்றும், வேதாந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.  கர்மகாண்டமானது விதவிதமான யாகங்களை செய்யும் முறையை விவரிக்கின்றது.  இந்த யாகங்கள் பணம், பதவி, புகழ், புத்திரன் போன்றவைகளை அடைவதற்கான சாதனங்களாக இருக்கின்றது.  இகலோகத்திலும், பரலோகத்திலுமுள்ள சுகங்களை அடைவதற்கான யாகங்கள், கர்மங்கள் இவைகளை  கொடுக்கின்றது.  இன்பத்தை அனுபவிப்பதற்கான பொருட்கள் வேண்டும், உடல்சக்தி வேண்டும் இவைகள் கிடைப்பதற்கு புண்ணியம் தேவை. இந்த புண்ணியத்தை அடைவதற்கு தேவையான வழிமுறைகள் இதில் கூறப்பட்டுள்ளது. இன்பத்தை அடைய தடைவரும்போது பாவக்காரியங்களை செய்ய தூண்டப்படுவோம். இவ்வாறு கர்மகாண்டம் ஜீவர்களை சுக-துக்கங்களை கொடுக்கின்ற சம்சார நிலையிலே வைத்திருக்கின்றது.  கர்மகாண்ட கர்மங்களை செய்து கொண்டிருப்பது ஆன்மீகமல்ல ஞானகாண்டத்தில் இருப்பதுதான் ஆன்மீகத்தில் இருப்பதை குறிக்கும்.

எந்த இடத்தில் குறையிருக்கின்றதோ அதை நீக்குவதற்கு, மறைப்பதற்கு முயற்சி செய்வோம்இது  கர்மத்தினால் அடைகின்ற இன்பத்தை மட்டும் சொல்லி நம்மை அழகுபடுத்துகின்றதுஇன்பத்தினால் அடையும் துன்பத்தை மறைத்து விடுகின்றதுஇந்த உலகத்திலுள்ள குறைகளை மறைத்து விடுகின்றதுசம்சாரத்திலுள்ள குறைகளை எல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றது.  கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகள பின்பற்றினால் மனநிறைவை அடைய முடியாது என்ற உண்மையும்   மறைக்கப்பட்டுள்ளது.

பிறகு எதற்கு கர்மகாண்டம் வேதத்தில் கூறப்பட்டிருக்கின்றது என்று கேட்டால், ஒருவனுடைய மனதில் இருக்கும் ஆசையை அறிவினால் மட்டும் அனுபவிக்க முடியாது, செயலினால்தான் அனுபவிக்க முடியும் என்ற நியதிப்படி, ஆசைகளை தர்மப்படி அனுபவித்து கொள்ளட்டும் என்ற காரணத்தினால் கர்மகாண்டம் உள்ளது. அவனாகவே இதிலுள்ள குறையை தெரிந்து கொண்டு ஞானகாண்டத்திற்கு செல்லட்டும் என்ற காரணத்திற்காகவும் கர்மகாண்டம் உள்ளது. இது தர்மப்படி வாழ்க்கையை வாழ்வதற்கும், மனத்தூய்மை அடைவதற்கும் உதவுகின்றது.

யஸ்தம் வேத்3 ஸ வேத3வித்எவனொருவன் ஆனிவேரையும், கிளைகளையும், இலைகளையும் சேர்த்து அரச மரத்தை சம்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை அறிகின்றானோ அவனே அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.

अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणपवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ 15-02॥
இதில் சிறிய கிளைகளை ஜீவராசிகளின் உடலுக்கு ஒப்பிடுகின்றார். கிளைகளிலிருந்து வெளிவரும் தளிர்(ப்ரவாலாஹா) உலகத்தில் போகத்தை கொடுக்கக்கூடிய விஷயங்களுக்கு ஒப்பிடுகின்றார்.  சிறிய சிறிய வேர்கள் மனதிலிருக்கின்ற ராக-துவேஷங்கள், வாஸனைகளுக்கு ஒப்பிடுகின்றார்.

உப4ஶாகா2 – சிறிய கிளைகள் – ஜீவர்களின் ஸ்தூல சரீரங்கள்
அத4ஶ்ச ஊர்த்வம் ப்ரஸ்ருதா – மேலேயும், கீழேயும் வியாபித்திருக்கின்ற
தஸ்ய ஶாகா2 -  சம்சார மரத்தினுடைய சிறிய கிளைகள்

சம்சார மரத்தினுடைய பெரிய கிளைகளில் மேலும், கீழும் வளர்ந்திருக்கும் சிறிய கிளைகளை ஜீவராசிகளின் மேலான, கீழான சரீரங்களுக்கு ஒப்பிட்டு இருக்கின்றார்.  மனித உடல் உயர்வானதாக கூறப்படுகின்றது.  இதிலிருந்துதான் மோட்சத்தை அடைய முடியும். விலங்குகள், தாவரங்கள் கீழான நிலையில் உள்ள உடல்களுக்கு ஒப்பிடப்படுகின்றது.  எல்லா சரீரங்களும் ஒன்றுதான் என்றாலும் மேலான லட்சியத்திற்கு உபயோகப்படுகின்ற உடல்கள் மேலானதாக கருதப்படுகின்றது. மற்றவைகள் கீழான சரீரங்கள்.  தேவர்களின் சரீரம் சுகத்தின் அடிப்படையில் மேலானதாக இருக்கின்றது.

ப்ரவாலாஹா – கிளைகளில் துளிர்க்கும் தளிர்கள் விஷயங்களுக்கு ஒப்பிட்டு இருக்கின்றார்.  இந்த தளிர்களே வளர்ந்து சிறு கிளைகளாக மாறுகின்றது. நம் உடல் தோன்றுவதற்கு காரணம் இந்த உலகத்திலிருக்கும் விஷயங்கள்தான்.  ஒரு பொருளை பார்க்காமல் அதன் மீது ஆசை உருவாகாது.  முதலில் ஒரு பொருளை பற்றிய அறிவை அடைகின்றான்.  பிறகு அதன் மீது ஆசைப்படுகின்றான்.  அதை அடைவதற்கு செயல்படுவான். இந்த செயல்கள் மூலம் பாவ-புண்ணியங்களை அடைவான்.  இவைகளை அனுபவித்து தீர்ப்பதற்கு அதற்கேற்ற உடல் எடுக்கின்றான்.  எனவே வெளி விஷயங்கள்தான் இந்த இந்த உடலை தோற்றுவிக்கின்றது.  உடல் விஷயங்களை திரும்பவும் அனுபவிக்கின்றது.  இந்த உடல் மீது அதிக பற்றுடன் இருப்பார்கள். உயிரை விடுவதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

குணப்ரவ்ருத்தா4: இந்த உடல் முக்குணங்களைக் கொண்டது.  இந்த குணங்கள் அதற்கேற்ற கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்.  உடல் மீது உறுதியான பற்று  ஏற்படுவதற்கு காரணமாக இந்தக் குணங்கள் இருக்கின்றது.

இந்த சம்சார மரத்தின் சிறிய கிளைகளானது ஸ்தூல உடல்களுக்கு ஒப்பிடப்படுகிறது.  மேலும் கீழும் வளர்ந்துள்ளது என்பது மேலான, கீழான உடல்களுக்கு ஒப்பிடப்படுகிறது. குணங்களினால் இந்தக் கிளைகள் உறுதியாகிறது. அதேப்போன்று ஜீவர்களுக்கும் இந்த சரீரங்கள் மீது பற்று  உறுதியாகின்றது.  வெளிப்பொருட்களான தளிர்கள் சிறு கிளைகளுக்கு காரணமாக இருப்பது போல இந்த உடல் தோன்றுவதற்கு போகத்தை கொடுக்கக்கூடிய விஷயங்களே காரணமாக இருக்கின்றது.

அத4ஶ்ச மூலானி அனுஸந்தானி – கீழே வேர்கள் வியாபித்திருக்கின்றது.
கர்ம அனுப3ந்தீ4னி – கர்மத்திற்கு காரணமாக இருக்கின்ற (விருப்பு-வெறுப்புக்கள்)  நம்முடைய ராக-துவேஷங்களே நாம் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது.  மனதிலிருக்கும் வாஸனைகள் சிறிய வேர்களுக்கு ஒப்பிடப்படுகின்றன.  

ஜீவனின் இருத்தலுக்கு பொதுவான காரணம் பிரம்மனாக இருந்தாலும், வாழ்க்கை முறைகள் ராக-துவேஷங்களைப் பொறுத்திருக்கின்றது.  இது மனதிலிருக்கும் வாஸனைகளை பொறுத்து அமைகின்றது.  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாம் இருக்கின்ற நிலைக்கு காரணம் நம்முடைய கர்மபலன்களைத் தவிர வேறு யாருமில்லை.

மனுஷ்ய லோகே – மனித உடலில் இவைகளெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.

न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्टा ।
अश्वत्थमेनं सुविरूढमूलं असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥ 15-03 ॥
ந ரூபமஸ்யேஹ – இங்கு சொல்லப்பட்ட ஸ்ருஷ்டியினுடைய ஸ்வரூபம்
ததா2 ந உபலப்யதே -  இப்படித்தான் என்று சொல்ல முடியாது.
ந அந்தஹ ந ச ஆதி: – இதற்கு முதலும் முடிவும் கிடையாது
ந ச ஸம்ப்ரதிஷ்டா – இரண்டுக்குமிடையேயுள்ள நிலையும் கிடையாது.

ஸுவிரூதமூலம் – நன்கு பரவி உறுதியாக இருக்கின்ற வேர்களையுடைய
அஶ்வத்தம் ஏனம் – இந்த அரச மரத்தை
அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்த்வா -  வைராக்கியம் என்ற உறுதியான வாளால் வெட்டிட வேண்டும்.

இந்த ஆயுதம் கூர்மையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.  விவேக அப்யாஸத்தினால் மனதை கூர்மையாக்க வேண்டும். வைராக்கியத்தை அடைய வேண்டும்.  வைராக்கியம் உறுதி அடைய வேண்டும்.  உலகம் கொடுக்கும் இன்பத்தை விட மேலான இன்பத்தை கொடுக்கும் ஒன்றை அறிந்து கொண்டால் இவைகளை எளிதாக துறந்து விடலாம். அந்த மேலான இன்பம் பரமாத்மாவை அடைவதினால் கிடைக்கும்.  எனவே அதை நோக்கி செல்லும்போது மற்றவைகளை மனம் நாடாது.  சம்சாரத்திலிருந்து விடுபட முதலில் நமக்கு உலகத்தின் மீது வைராக்கியம் வர வேண்டும்.  ஆத்ம ஞானம் அடைந்துவிட்டால் முழுவதுமாக விடுபட்டுவிடலாம்.

ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये । यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥ 15-04 ॥
வைராக்கிய விசாரம்:
இகலோகத்தில், பரலோகத்தில் கிடைக்கும் போக விஷயத்தில் பற்றற்று இருப்பதே வைராக்கியம்.  இது மனதில் இருக்க வேண்டிய உணர்வு.  விவேகம் இருந்தாலும் வைராக்கியம் இல்லாமல் இருக்கலாம்.  எனவே விவேகமே வைராக்கியத்தை கொடுக்காது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆசையற்ற மனதை முயற்சி செய்து அடைந்திட வேண்டும். உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும் போதே இதை அடைந்திட வேண்டும்.

நிறைவேறாத சில ஆசைகள் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால்தான் அவைகள்  நம்மை வாட்டுகின்றன.  ஆசையின் மூலகாரணம் சங்கல்பம், இதுவே ஸோபானாத்யாஸம் செய்து ஆசையை பலமாக மனதில் பதிய வைக்கின்றது.  இதையையே விஷய தியானம் என்று பகவான் கூறுகின்றார். ஒரு பொருள் கொடுக்கும் ஆசையையே நினைத்துக் கொண்டிருப்பதே சங்கல்பம்.  இதை நீக்கினால் அதனால் உருவாகியிருக்கும் பலமான ஆசை நீங்கிவிடும்.  ஆசைபட்டுள்ள பொருளினால் அடையப்போகும் துயரத்தை நினைத்துப்பார்ப்பதினால் இந்த சங்கல்பம் நீங்கிவிடும். அதனால் ஆசையும் சென்றுவிடும்.

விவேகம் இரண்டாக இருக்கின்றது.  
யதார்த்த தர்ஶனம் – ஒரு பொருள் எப்படி இருக்கின்றதோ அப்படியே பார்த்தல், 
தோஷ தர்ஶணம் – பார்க்கும் பொருளில் உள்ள குறையை பார்த்தல் போகம் தரும் பொருட்களில் உள்ள குறையை பார்க்க வேண்டும். மனதில் மோகம் இருக்கும்போது தோஷ தர்ஶனத்தை பயன்படுத்த வேண்டும்.  வைராக்கியத்தை கூர்மைபடுத்துதல் என்பது விவேக அப்யாஸம் செய்தலேயாகும்.

ஸங்கம் – மனைவி, புத்திரர்கள், உறவினர்கள், செல்வம், நிலம், வீடு இவைகளில் உள்ள பற்றை வைராக்கியம் கொண்டு நீக்க வேண்டும்.  இவைகள் நிலையற்ற இன்பத்தைதான் கொடுக்கும், அதேசமயம் துயரத்தையும் அதிகம் கொடுக்கும்.
தத: - அதற்குப்பிறகு (வைராக்கியம் அடைந்த பிறகு)
பத3ம் தத் – அந்த பர பிரம்மத்தை
பரிமார்கிதவ்யம் – அடைய வேண்டும், நாட வேண்டும், அறிய வேண்டும், அறிதலே அடைதல்.

இப்படி அடைந்த மோட்சத்தின் லட்சணத்தை கூறுகின்றார்.
யஸ்மின் க3தா        - ஞானத்தை அடைந்தவர்கள்
ந நிவர்தந்தி பூ4ய: - மீண்டும் திரும்பி வராத நிலையை அடைவார்கள். இது மோக்ஷத்தின் ஸ்வரூபத்தை குறிக்கின்றது.
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்3யே – அவரையே, மேலான இறைவனையே நான் சரணடைகிறேன், முழுமையாக நம்புகின்றேன். இது பக்தியோகத்தை குறிக்கின்றது
யத: ப்ரவ்ருத்தி ப்ரஸுத புராணி – எவரிடமிருந்து தொன்றுதொட்டு படைப்பு என்கின்ற செயல் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றதோ.  யாரிடம் சரணடைந்து இருக்கின்றேனோ அந்த ஈஸ்வரனே இந்த ஸ்ருஷ்டிக்கு காரணமாக இருக்கிறார்..  இது ஈஸ்வரன் லட்சணத்தை குறிக்கின்றது.

விளக்கம் (முதல் வரி)
சம்சாரம் என்ற மரத்தை வேரோடு வெட்டியெறிய வேண்டும்.  இங்கு வேர் என்பது அக்ஞானத்தை குறிக்கின்றது.
1.    கயிற்றில் தோன்றும் பாம்புக்கு கயிறு ஆதாரமாக இருப்பது போல் மரத்திற்கு பிரம்மன் ஆனி வேராக இருக்கிறது
2.   கயிற்றைப் பற்றிய அறியாமையினால் பாம்பு தோன்றுகின்றது. அதேபோல ஆனிவேரைப் பற்றிய அறியாமையோடு மரம் தோன்றிக் கொண்டிருக்கிறது

பிரம்மத்தை பற்றிய அறியாமையை நீக்க பயன்படுவதே ஞானயோகம். பிரம்ம ஞானத்தை அடைவதற்கு உதவும் சாதனம் ஞானயோகம்.  இவைகள் சிரவணம் (கேட்டல்), மனனம் (கேட்டதை சிந்தித்து ஐயமின்றி புரிந்து கொள்ளுதல்), நிதித்யாஸனம் (அடைந்த அறிவில் நிலைபெறுதல்).

ஈஸ்வரனுடைய தன்மை பற்றிய சரியான அறிவையும், இந்த உலகத்தின் நிலையற்ற தன்மை பற்றிய அறிவையும் அடைந்து அதில் நிலைபெறுவதற்கு இந்த அறிவானது மனதோடு கலந்து விட வேண்டும்,  நாம் மனதோடுதான் இந்த உலகத்தை அனுபவிக்கின்றோம். எனவே மனதில் இந்த அறிவு நிலைபெற்ற பிறகுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும். இந்த சாதனத்தை பயன்படுத்தும்போது உதவி செய்வதற்கு நம்மைத் தவிர யாராலும் முடியாது. நாமேதான் நமக்கு உதவி செய்து கொள்ள முடியும்  இவை மூன்றும் சேர்ந்துதான் ஞானயோகம் என்று கூறப்பதுகிறது.

விளக்கம் (2வது வரி)
இதில் மோட்சத்தின ஸ்வரூபம் கூறப்படுகின்றது.  நாம் விரும்பிய பொருளை அடைந்தாலும் அது நம்மிடத்தில் நிலையாக இருக்காது. என்றாவது ஒரு பொருள் நம்மை விட்டு சென்றுவிடும்.  அதேபோல ஆத்மஞானமும் அடைந்தாலும் சென்று விடுமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.  அதை அடைந்து அனுபவமாகி விட்டால் அது நம்மை விட்டு செல்லாது.  இந்த நிலையில் உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும் நமக்கு துயரம் கொடுக்கும் சக்தியிருக்காது.. நம்மை விட்டு சென்று விட்ட சம்சாரமும் திரும்ப வந்துவிடாது.

விளக்கம் (3வது வரி)
இதில் பக்தியை பற்றி குறிப்பிடுகின்றார்.  மேலான அழியாத உண்மைப்பொருளான ஈஸ்வரனையே நான் சரணடைகின்றேன்.  முழுமையாக நம்புகிறேன் என்று சரணடைய வேண்டும் என்று பகவான் கூறுகிறார்.

பக்தி என்ற சாதனமானது ஆரம்பத்திலிருந்து ஆத்மஞானத்தை அடையும்வரை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.  பகவானோடு ஐக்கியமாகி விட்ட பிறகு இந்த பக்தியின செயல் முடிந்துவிடுகின்றது.

மீமாம்ஸம் – பூஜ்ய விசாரம் (அ) வணக்கத்துக்குரிய விசாரம் யார் மீது நமக்கு உண்மையான அன்பு மரியாதை இருக்கின்றதோ அவர்கள் சொல்வதை கேட்போம். வேதாந்த சாஸ்திரங்களை படிப்பதற்கு அதை உலகுக்கு அளித்த ஈஸ்வரனின் மீது அன்பு செலுத்த வேண்டும். உணர்வு பூர்வமாக பக்தி செலுத்தி கொண்டிருக்க வேண்டும். பகவானிடத்தில் சரணடைதல் என்பது நம்மை முழுவதுமாக அவரிடம் ஒப்படைப்பதாகும்.  நம்முடைய அகங்காரத்தை அவரிடம் சமர்பிப்பதாகும். அகங்காரம் சரணடைவது என்றால் நாம் இன்று இருக்கும் நிலைக்கு காரணம் பகவானுடைய அனுக்கிரஹம், ஈஸ்வரனுடைய பிரசாதம் என்ற மனப்பக்குவத்தை அடைய வேண்டும். என்னுடைய உயர்வுக்கும், புகழுக்கும் நானே காரணம் என்று நினைப்பதுதான் அகங்காரம். இந்த எண்ணத்தை நீக்குவதுதான் பகவானிடம் சரணடைவதற்கு சமமாகும்.  இதை இறைவன் மீது வைக்கும் பக்தியினால்தான் செய்ய முடியும்.

விளக்கம் (4வது வரி)
எந்த இறைவனிடமிருந்து காலம்காலமாக இந்த உலகம் தோன்றியிருக்கின்றதோ அவரே அனைத்து படைப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றார்.  அவர் உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கின்றார்.  இந்த உலகமாகவே மாறியிருப்பது உபாதான காரணம்.  அவரே உலகத்தை வெறும் தோற்றமாக காட்டிக் கொண்டிருக்கின்றார். இவைகள் பானைகள் போல வெறும் நாம-ரூபங்கள்

निर्मानमोहा हितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैरगच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥ 15-05॥
ஞானியிடத்து சுபாவமாக இருக்கும் குணங்களே சாதகனுக்கு அடைய வேண்டிய சாத்தியமாக இருக்கின்றது. இந்த ஸ்லோகத்தில் ஐந்து சாத்தியங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றது.

நிர்மானமோஹா - உடல் மீதுள்ள அபிமானமும், மோகமும் அற்றவர்கள்.  
உடலே நான் என்ற உணர்வுடனும், நினைவுடனும் இருந்து கொண்டிருப்பதையே அகங்காரம் என்றும் கூறுவர். மோகம் என்பது விவேகமற்ற நிலை, ஆத்ம அக்ஞான நிலை. சரீரத்தில் அபிமானமற்றவர்கள் ஆத்ம ஞானத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள்.  அகங்காரத்தை தொடர்ந்து வருவது மமகாரம் (என்னுடையது). என்னுடைய உடலோடு சம்பந்தப்பட்டது அனைத்தும் என்னுடையது என்ற எண்ணம்.  மோகம் என்பது அகங்காரம், மமகாரம் இவற்றிற்கு காரணமாக இருக்கின்ற அவிவேகத்தை குறிக்கின்றது.

ஹிதஸங்க தோஷா - ஸங்கம் என்ற தோஷத்தை வென்றவர்கள். 
இது நம் மனதில் இயற்கையாகவே இருக்கின்ற குறை.  ஒரு பொருளோடு நீண்ட நாள் இருந்து விட்டால் அதன் மீது பற்று வந்துவிடும். அதை விட்டு நீங்காதிருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விடும்.  ஸங்கதோஷம் விருப்பமாகவும் இருக்கலாம், வெறுப்பாகவும் இருக்கலாம். இந்த தோஷம் ஏற்கனவே இருக்கின்ற பொருள்மீது வருவது.  இது மன அமைதியை கெடுக்கும், பலவித தீய உணர்வுகள் வருவதற்கு காரணமாக இருக்கும். இந்த  ஸங்கதோஷமானது பொருள், சூழ்நிலை, மனிதர்கள் போன்றவைகளிலிருந்து வருகின்றது.

இந்த குறையை நீக்கும் வழியானது, அந்தப் பொருள் இல்லாமல் இருந்து பார்க்க வேண்டும். நமக்கு எந்த பாதிப்பும் வரவில்லையென்றால் அதனிடம் ஸங்க தோஷம் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். அந்தப்பொருள் இல்லாமல் இருக்கும் நிலையை கற்பணை செய்து பார்த்தும் சோதிக்கலாம்.  நாம் பற்று வைத்து இருக்கும் பொருளிலுள்ள குறையை பார்த்து விட்டாலும் இந்தக் குறையை போக்கி விடலாம்.  ஆத்ம ஞானத்தை அடைந்துவிட்டால் இந்தக்குறை முழுமையாக நீங்கி விடும்,  நான் ஒருவன்தான் இருக்கின்றேன் என்ற நிலையில் ஆசைபடுவதற்கு இரண்டாவதாக எதுவும் இருக்காது.

அத்4யாத்ம நித்யா - ஆத்ம  சிந்தனையில் முழுமையாக ஈடுபட்டிருத்தல் (ஆத்ம-அனாத்மாவை பிரித்தல், அதில் எழும் சந்தேகங்களை நீக்குதல், அடைந்த ஆத்ம ஞானத்தில் நிலைத்தல்.)
ஆத்மஞானத்தில் நிலை பெற்றிருப்பவர்கள், எப்பொழுதும் ஆத்ம சிந்தனையோடு இருந்து கொண்டு இருப்பார்கள். 

வினிவ்ருத்தகாம: - ஆசையை  முழுமையாக நீக்கியவர்கள். நம்மிடம் இல்லாத பொருட்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் மீது கொண்டுள்ள பற்றை அறவே நீக்கிக்கொண்டவர்கள்.

த்3வந்த்3வை: விமுக்தா: - இருமைகளிலிருந்து விடுதலை அடைந்தவர்கள். 
சுக-துக்கம், குளிர்-வெப்பம் போன்ற இருமைகளிருந்து விடுபட்டவர்கள்.  இரண்டு எதிரெதிரான விஷயங்களிலிருந்து விடுபட்டவர்கள். இந்த உலகமே இருமைகளாலானதாக இருக்கின்றது.  இந்த உலகத்தில் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் என்று புரிந்து கொள்ளலாம். 

இருமைகளிலிருந்து விடுபடுதல் என்பது இந்த சரீரம் மட்டும் இருமைகளை அனுபவிக்கும்.  ஆனால் இந்த அனுபவத்தினால் வெளிப்படும் எதிர்செயல்கள் எதுவும் செய்யாமல் அதை ஏற்றுக்கொண்டு சமநிலையோடு இருப்பார்கள்.  இருமைகளின் தாக்குதலால் பாதிக்கப்படமாட்டார்கள். இவைகளை ஈஸ்வர பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மனதினால் பாதிக்கப்படமாட்டார்கள். இருமைகளுக்கு காரணமாக இருப்பவைகளிடமும் விடுதலை பெற்றிருப்பார்கள்.

க3ச்ச2ந்த்ய மூடா: பத3மவ்யயம் தத் - ஞானிகள் மேற்கூறிய குணங்களை அடைந்திருப்பார்கள்.  அழியாக, மாறாத, தேயாத பிரம்ம பதத்தை அடைந்து இருப்பார்கள்.

न त्द्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ 15-06 ॥
ந தத்3பா4ஸயதே ஸூர்ய - சூரியனாலும் அந்த பிரம்மத்தை விளக்க முடியாது.
ந ஶஶாங்க: - சந்திரனாலும் விளக்க முடியாது,
ந பாவக: - நட்சத்திரங்களாலும் விளக்க முடியாது.
எந்தவொன்றாலும் இந்த பிரம்மத்தை விளக்க முடியாது ஆனால் தானே விளங்கிக் கொண்டு மற்றதையெல்லாம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
யத்3க3த்வா ந நிவர்தந்தே - எதை அடைந்ததும் அங்கேயிருந்து திரும்புவதில்லையோ
தத்3தா4ம பரமம் மம - அதுவே என்னுடைய மேலான இருப்பிடம். அதாவது பிரம்மத்தை அடைந்து விடுவது.

ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनः षष्टानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥ 15-07 ॥
शरीरं यदवप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहित्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥ 15-08 ॥

எல்லோராலும் தன்னிடத்திலே இருக்க முடியாது.  தனிமையிலே பயத்தைத்தான் அடைகின்றார்கள்.  ஜீவன் என்பதில் இரண்டு தத்துவங்கள் உண்டு. ஒன்று ஜீவனுடைய உண்மையான பிரம்ம ஸ்வரூபம், இன்னொன்று பொய்யான, போலியான ஸ்வரூபம். இந்த பொய்யான ஜீவன் என்னைச் சார்ந்துதான் இருக்கின்றான். பிரம்மத்தை சொல்லால் விளக்க முடியாததாக  இருந்தாலும் புரிய வைக்க சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டியதாக இருக்கின்றது.  மனத்தூய்மையிருந்தால் புரிந்து கொள்ளலாம்.  இந்த பொய்யான ஜீவனை எப்படி புரிந்து கொள்ளலாம் என்று கேட்டால் குளத்தில் தெரியும் சூரியனின் பிரதிபிம்பத்திற்கும், உண்மையான சூரியனுக்கும் எந்தவித உறவும் சொல்லமுடியாது ஆனால் சூரியனின் அம்சமாக பிரதிபிம்பம் சொல்லப்படுகிறது..  உண்மையான  பிரம்மத்தின ஒரு அம்சமாகத்தான் பொய்யான ஜீவனை பகவான் குறிப்பிடுகின்றார்.

அம்சம் என்பது ஒன்றின் பகுதியாக பொருட்படுத்துகின்றது. இங்கே இந்த பொருளை எடுத்துக் கொள்ளக்கூடாது. சூரியனின் பிரதிபிம்பம் அதன் அம்சமாக சொல்வதுபோல் புரிந்து கொள்ள வேண்டும். குளத்தில் நீர் வற்றிவிட்டால் பிரதிபிம்பம் தோன்றாது. அது நிஜ சூரியனோடு ஒடுங்கிவிட்டது என்று கூறலாம்.  திரும்பவும் குளம் நீரால் நிரம்பி விட்டால் பிரதிபிம்பம் தோன்றிவிடும்.  முதலில் இருந்த பிரதிபிம்பம் வேறு, இப்பொழுது தெரியும் பிரதிபிம்பம் வேறு. ஜீவ-ஈஸ்வர சம்பந்தம் பிம்ப-பிரதிபிம்ப போல என்று ஆதி சங்கரர் கூறுகிறார். குளத்திலுள்ள நீர் அசைந்தால் பிரதிபிம்பமும் அசையும், ஆனால் உண்மையான சூரியன் நிலையாகத்தான் இருக்கும்.  பிரதிபிம்பம் இருக்கும் குளம் உபாதி என்று கூறலாம். அதுபோல ஜீவனின் உண்மையான ஸ்வரூபம் அசையாது, அதன் பிரதிபிம்பம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிரதிபிம்பம் பிம்பம் இருப்பதை உறுதி செய்கின்றது.  பொய்யான ஜீவனான சம்சாரியை வைத்து உண்மையான பிரம்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

மம ஏவ அம்ஶஹ               - பரமாத்வான என்னுடைய ஒரு அம்சம்தான்
ஜீவ லோகே ஜீவபூதஹ  - ஜீவ லோகத்தில் ஜீவனாக விளங்கிக் கொண்டு
ஸனாதனஹ                        - என்றும் இருக்கின்றது.

மனதில் பிரதிபலிக்கும் சித் (அறிவு) ஸ்வரூபத்தை சிதாபாஸம் என்று அழைப்பர்.  நம்மிடத்தில் இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்கள் ஆத்மாவும் சிதாபாஸனும்தான். இந்த சிதாபாஸன் பொய்யான ஜீவன். குளத்து நீரில் இருக்கும் சூரியபிம்பம் தான் குளத்தை சேர்ந்தவன் என்று நினைப்பது போல சிதாபாஸமும் இந்த ஸ்தூல உடலை சார்ந்து இருக்கிறேன் என்று நினைக்கிறது.  சிதாபாஸனான ஜீவன் ஸ்தூல உடலை பற்றிக் கொண்டிருக்கின்றான்.  மரணம் ஜீவனின் முடிவல்ல, ஸ்தூல உடலின் அழிவாகும்.  மனமும், சிதாபாஸமும் ஒரு உடலை விட்டு வேறொரு உடலை பற்றிக் கொள்கின்றன.

யச்ச அபி உத்கிராமதீ ஈஸ்வர: -  ஜீவனால் எப்பொழுது இருக்கின்ற உடல் விடப்படுகின்றதோ
ப்ரக்ருதிஸ்தானி மனஷஷ்டானி இந்த்ரியானி கர்ஷதி -  உடலுக்குள் இருக்கின்ற புலன்களையும், மனதையும் எடுத்துக்கொண்டு
வாயு கந்தானி வாஶயாத் – மலரிடமிருந்து காற்று மணத்தை எடுத்து செல்வது போலக்ருஹித்வா ஏதானி ஸம்யாத் – மேற்சொன்ன சூட்சும சரீரங்களை எடுத்துக்கொண்டு
ஶரீரம் யத்2 அவாப்னோதி  - சரீரத்தை விட்டு வேறொரு சரீரத்தை அடைகின்றான்.

மணம் வீசும் மலரின் மீது தொட்டு செல்லும் காற்று மணத்தை எடுத்துக் கொண்டு வேறிடத்திற்கு செல்வது போல சிதாபாஸன் சூட்சும சரீரத்தை எடுத்துக்கொண்டு  வேறு உடலை அடைகின்றது. இதுவே மரணம் என்று அழைக்கப்படுகின்றது

श्रॊत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्रानमेव च ।
अधिष्टाय मनश्चायं विषयानुपसेवते ॥ 15-09 ॥            
கேட்கும் சக்தி, பார்க்கும் சக்தி, சுவைக்கும் சக்தி, நுகர்ந்து பார்க்கும் சக்தி, தொட்டுணரும் சக்தி மேலும் கர்மேந்திரியங்களின் சக்திகளும், பிராணன்களும்
அதிஷ்டாய மனஶ்சாயம் - இவைகள் மனதின் துணைக் கொண்டு
அயம் விஷயானுபஸேவதே -  இந்த ஜீவன் விஷயங்களை அனுபவிக்கின்றான், கர்ம பலனை அனுபவித்து தீர்த்தும், புதிய கர்ம பலனை சேர்த்துக் கொண்டும் இருக்கிறான்.

उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥ 15-10
உத்க்ராமந்தம்  - இறக்கின்ற உடலை விட்டு செல்கின்ற சிதாபாசம்

உயிருடன் இருக்கும் உடல் விவகாரம் செய்கின்றது.  அழுகிப்போவதில்லை, ஆனால் உயிரற்ற உடல் அழுகிப்போகிறது.  இதிலிருந்து நாம் ஸ்தூல உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ உணர்வுபூர்வமான ஒன்று இருக்கிறது என்று யூகிக்க முடிகின்றது.  இதுவே சிதாபாஸம்.  சிதாபாஸத்தை உணர்ந்தால் அதற்கு காரணமான அறிவு ஸ்வரூபம் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.  இவ்வாறு ஞானிகள் கூறுகிறார்கள்.

ஸ்திதம் -  உடலில் இருக்கும்போது ( உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது)
புஞ்ஜானம் – விவகாரம் செய்து கொண்டிருக்கின்றது, அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.

இந்த ஸ்தூல சரீரம் ஜடம், உலகப்பொருட்களும் ஜடம்தான்.  ஆனால் உடல் உலகத்திலுள்ள பொருட்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.  இதிலிருந்து உடலுக்குள் உள்ள சிதாபாஸத்தினால் இது சாத்தியம் என்று உணர்ந்து கொள்ளலாம்.

குணான்விதம் - விதவிதமான குணங்களை உடையது
குணங்களோடு கூடியது இந்த உடல், குணங்கள் வந்து போவது ஆனால் நிலையாக வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
விமூடா ந அனுபஶ்யந்தி – இப்படிபட்ட தன்மைகளையுடைய ஜீவனை அக்ஞானிகள் அறிவதில்லை
பஶ்யந்தி ஞானசக்தி – இவ்வாறாக ஞானிகள் ஜீவனின் உண்மை ஸ்வரூபத்தை அறிகிறார்கள்.

यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यक्रुतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥ 15-11
மனத்தூய்மையுடன் ஆத்மவிசாரம் செய்தால்தான் ஞானத்தை அடைந்து அதன் பலனை அடைய முடியும்.  மனதில் சில அசுத்தங்கள் இயற்கையாகவே இருக்கும். சில அசுத்தங்கள் மற்றவர்களிடமிருந்து வந்து சேருகின்றது. பொறாமை, லோபம், கோபம், மதம், மாச்சர்யம் போன்றவைகள் சுபாவமாகவே இருக்கும் அசுத்தங்கள்.  திருடுதல், பொய் சொல்லுதல் போன்றவைகள் மற்றவர்கள் மூலமாக வந்து சேரும். இந்த அசுத்தங்கள் எல்லாம் நீங்கப்பெற்ற மனம்தான் தூய்மையானதாகும்.  மனதில் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதலும் மனதை தூய்மைப்படுத்தும்.
யதந்தஹ      - ஞானயோக சாதனங்களை செய்து கொண்டிருப்பவர்கள்
யோகினஹ - மனத்தூய்மை அடைந்தவர்கள்
ஆத்மனி அவஸ்திதம் – உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இருந்து கொண்டிருக்கின்ற
ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை, பிரம்ம ஞானத்தை
பஶ்யந்தி – அறிகிறார்கள், அடைகிறார்கள்
யதந்தஹ அபி – ஞானயோகத்தை பின்பற்றிக் கொண்டிருந்தாலும் கூட
அகிருதாத்மானஹ - - மனத்தூய்மை இல்லாதவர்களாக இருந்தால்
ஏனம் – இந்த ஞானத்தை
ந பஶ்யந்தி – அடைய மாட்டார்கள்
அசேதஹ – அறிவிலிகளாக இருப்பார்கள்.

यदादित्यगनं तेजो जगद्भासयतेऽकिलम् ।
यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥ 15-12
ஸ்லோகம் 12-15 பரமாத்மாவே ஜகத் ரூபமாகவே விளங்குகிறார் என்பதையும் பிரம்மன் உலகமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது என்று விளக்கப்படுகிறது. 

இந்த ஜகத் ஈஸ்வரனிடமிருந்து வெளிப்பட்டது.  இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து சக்திகளும் அவருடையதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே பார்க்கும் அனைத்தையும் ஈஸ்வரனாகவே பார்க்கும் மனதை அடைய வேண்டும்.
யதா3தி3த்யக3னம் தேஜ:    - எந்த சூரியனிடமிருந்து வெளிப்படுகின்ற ஒளிமயமான சக்தி,
ஜக3த்3பா4ஸயதே அகிலம் - அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கின்றதோ
யச்சந்த்3ரமஸி               - எந்த சக்தி சந்திரனிடம் இருக்கின்றதோ
யச்சக்3னி                     - எந்த சக்தி அக்னியிடம் இருக்கின்றதோ
தத்3 தேஜ:                    - அந்த சக்திகளானது
வித்3தி4 மாமகம் - என்னையே சார்ந்தது, என்னுடையதுதான் என்று அறிந்து கொள்.

யாரிடத்தில் என்ன திறமையிருந்தாலும், சக்திகள் இருந்தாலும் அவைகளனைத்தும் பகவானுடையதே என்று நாம் நினைக்க ஆரம்பித்து விட்டால், நம்மிடமிருந்து பொறாமை என்ற தீய குணம் சென்றுவிடும். சூரியனிடத்தில் இருக்கும் சக்தியும், ஒளியும் பகவானுடையது.  இதுபோன்ற எல்லா சக்திகளும் பகவானைச் சார்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

गामविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥ 15-13 ॥
ஓஜஸா அஹம் – சூரிய ஸக்தியாக நான்
காமம் ஆவிஶ்ய - .இந்த உலகத்தை அடைந்து
பூதானி தா4ரயாம் -  ஜீவராசிகளின் உடல்களை காப்பாற்றுகிறேன்.
ரஸாத்மகஹ – ஒளிக்கதிர் சக்தியை உடைய
ஸோமஹ பூ4த்வா – சந்திரனாக மாறி
புஷ்ணாமி ச ஔஷதி4 ஸர்வா – எல்லா தாவரங்கள் வளர்வதற்கு உதவுகிறேன்.

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥ 15-14
ஜாடராக்னி என்கின்ற அக்னி நம் வயிற்றுக்குள் இருக்கின்றது.  அது நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்க வைக்கிறது.  பிராண, அபானன்கள் ஜாடராக்னி வளர்ப்பதற்கு காரணமாகின்றது.
அஹம் வைஶ்வானர பூத்வா –நான் வயிற்றிலிருக்கும் ஜீரண சக்தியாக இருந்து  கொண்டிருக்கின்றேன்.
ப்ராணினாம் தேஹமாஶ்ரித: - எல்லா ஜீவராசிகளின் உடலுக்குள் இருக்கும்
ப்ராண அபான ஸமாயுக்த: - பிராணன்-அபானன் துணைக்கொண்டு இந்த சக்தியானது செயல்படுகிறது
இவையிரண்டும் பசியெடுப்பதற்கும், ஜீரணிப்பதற்கும் காரணமாக இருக்கின்றன.
பசாம் அன்னம் சதுர்விதம் – நான்கு விதமான உணவை ஜீரணிக்க செய்கின்றேன்.
நான்கு விதமான உணவு என்பது 
1.பூக்ஷியம்       - கடித்து உண்ணும் உணவு (), 
2.போஜ்யம்     - விழுங்குதல்,குடித்தல், 
3.ஸோஷ்யம்- உறிஞ்சி சாப்பிடுதல், 
4.லேஹ்யம்   - நக்கி சாப்பிடுதல் (ஊறுகாய், தேன்)

सर्वस्य चाहं ह्रदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनङ्ज्च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो चेदान्तकृद्वेदविदेव चाहम् ॥ 15-15 ||
அஹம் ஸர்வஸ்ய ஹ்ருதி3 – நான் எல்லோருடைய இதயத்திற்குள்ளும்
ஸன்னிவிஷ்டஹ – அமர்ந்து கொண்டிருக்கின்றேன்.
மத்த: ஸ்ம்ருதி ஞானம் அபோஹன ச – மேலும் என்னிடமிருந்துதான் ஞாபக சக்தி, அறிவு, புத்திக்கூர்மை, மறதி போன்றவைகள் வந்திருக்கின்றன.  

வயோகத்தில் வரும் மறதி பகவானின் அனுக்கிரகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் நம் அறிவும், ஞாபக சக்தியும், மறதியும் உதவிக்கு வருவதற்கும், வராமல் போவதற்கும் பாவ-புண்ணியங்கள் காரணமாக அமைகின்றது.

வேதைஶ்ச ஸர்வை – எல்லா சாஸ்திரங்களுக்குள்ளும்
அஹமேவ வேத்யஹ – நான்தான் அறிவாக இருக்கின்றேன்
வேதாந்தக்ருத்3 வேதவித் ஏவ அஹம் – மேலும் நான்தான் வேதாந்தத்தை உருவாக்கிய குருவாகவும், குருமுகமாக அதை புரிந்து கொள்ளும் சிஷயனாகவும் கூட இருக்கின்றேன்.
குருவாகவும், சிஷயனாகவும் நானே இருந்து கொண்டீருக்கின்றேன்.   

द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥ 15-16
ஸ்லோகம் 16லிருந்து  18 வரை நிர்குண தத்துவமானது விளக்கப்படுகிறது. ஜீவர்களையும் உலகத்தையும் ஒன்றாக சேர்த்து க்ஷர புருஷன் என்று கூறுகிறார்.  இவைகள் அழியக்கூடிய தத்துவமாக இருக்கின்றது.  இரண்டாவது மாயையை அக்ஷர புருஷன் என்று அழைக்கிறார். மாயை என்பது உண்மையை மறைத்து நம்மை வஞ்சிப்பதால் இதை கூடஸ்தன் என்று அழைக்கிறார்.  மூன்றாவது உத்தம புருஷன் என்று நிர்குண பிரம்மத்தை அழைக்கிறார்.  இவ்வாறு மூன்று விதமான தத்துவத்தையும் அறிமுகப்படுத்தி தன்னுடைய உண்மையான ஸ்வரூபம் புருஷோத்தமன்-நிர்குண பிரம்மன் என்று கூறுகின்றார்.

லோகே – இந்த உலகத்தில்
ஸர்வானி பூதானி – ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்திலும்
த்3வௌ இமௌ புருஶௌ – இரண்டு தத்துவங்கள் உண்டு.
க்ஷர அக்ஷர ஏவ ச – அவைகள் க்ஷரம், அக்ஷரம் என்பதாகும்
க்ஷர ஸர்வானி பூதானி – க்ஷரம் என்பது அனைத்து படைப்புக்களையும் குறிக்கின்றது
கூடஸ்தௌ அக்ஷர உச்யதே – அக்ஷரம் என்பது கூடஸ்தனை (மாயா) குறிக்கின்றது

க்ஷர புருஷனுடைய ஸ்வரூபங்கள்:
காரியம் – வெளித்தோற்றத்திற்கு வந்தவைகள், படைக்கப்பட்டவைகள்

அக்ஷர புருஷனுடைய ஶ்வருபங்கள்:
இது காரண ஸ்வரூபம், பால் எப்படி தயிருக்கு உபாதான காரணமாகவும், பரிணாம காரணமாகவும் இருக்கின்றது. அதுபோல இது ஸ்ருஷ்டிக்கு உபாதான காரணமாக இருக்கின்றது.  இது மாற்றத்தை அடைந்து படைப்புகளுக்கு காரணமாக இருக்கின்றது.   இந்த மாயையின் ஒரு அம்சம்தான் இவ்வாறு உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது.  அறிவுள்ள ஒன்றுதான் நிமித்தக் காரணமாக இருக்க முடியும்.  இந்த ஸ்ருஷ்டிக்கு நிமித்தக் காரணம் ஈஸ்வரனின் மனமாக இருக்கின்ற  அறிவு பூர்வமான மாயைதான். இந்த மாயை மூன்று குணங்களை உடையதாக இருக்கின்றது. இதன் ஸ்வரூபம் மித்யா.

उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युधाह्रत  ।
यो लोकत्रयमाविश्य विभर्त्यव्यय ईश्वरः ॥ 15-17 ॥
அனன்யஹ      -   வேறுபட்டவன்;
உத்தம புருஷ  -  உத்தம புருஷன் 
விலக்ஷணம்   -   க்ஷர-அக்ஷர புருஷனிடமிருந்து வேறுபட்டவன்
பரமாத்மா இதி உதாஹ்ருத – இவரே பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார்
யஹ - இவர்
லோகத்ரயம் ஆவிஶ்ய - மூன்று உலகத்தையும் வியாபித்து
பிப4த்ய  - பாதுகாத்து வருகின்றார்
அவ்யய - தேய்வடையாதவர்
ஈஸ்வரன் - என்றும் ஆள்பவனாக இருக்கின்றார்.

விளக்கம்: (உத்தம புருஷன்)
*   காரிய-காரண விலக்ஷணமாக இருக்கின்றார்
*   விவர்த்த, உபாதான காரணமாக இருக்கின்றார். 
       ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடையாமல் காரியத்தை தோற்றுவித்தல் (உ-ம்) கயிறு பாம்புக்கு விவர்த்த காரணமாக இருக்கின்றது.  கயிறு பாம்புக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுக்கின்றது.  பாம்பு மறைந்ததும் இருத்தல் கயிறுக்கு சென்று விடுகின்றது.  மாயை உத்தமபுருஷனிடம் இருத்தலை வாங்கி ஸ்ருஷ்டியாக மாறி இருக்கின்றது.
*   அவ்யயம்  -  நிர்விகாரம் – எந்த மாற்றத்தை அடையாதது.
*   ஸாக்ஷி ஸ்வரூபமாக ஆத்ம ஸ்வரூபமாக இருக்கின்றது.
*   ஈஸ்வரஹ – தலைவனாக இருக்கின்றது
*   பிபத்ய – அனைத்து உலகத்தையும் தாங்கிக் கொண்டு இருப்பவர்
*   லோகத்ரயம் ஆவிஶ்ய – பூ,பு4வ,ஸ்வ என்று மூன்று உலகங்களுக்குள்ளும் நுழைந்திருக்கின்றார். மூன்று சரீரத்தையும், மூன்று அவஸ்தைகளிலும் வியாபித்திருக்கின்றார்.

यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदेच प्रथितः पुरुषोत्तमः ॥ 15-18 ॥
யஸ்மாத் – எனவே நான்
க்ஷரம் அதீத – க்ஷர புருஷனை கடந்தவனாக இருக்கின்றேன்
அக்ஷர அத அபி அஹம் – அக்ஷர புருஷனையும் கடந்தவனாகவும் இருக்கின்றேன்.
அதாவது காரண-காரியத்தை கடந்தவனாக இருக்கின்றேன்.
அதஹ – அதனால்;
அஸ்மி –புருஷோத்தமஹ – புருஷோத்தமனாக இருக்கின்றேன்
லோகே ச வேதே – வேதத்தினாலும், உலகத்திலுள்ளவர்களாலும் புருஷோத்தமன் என்று
ப்ரதித – அழைக்கப்படுபவனாக இருக்கிறேன்

விளக்கம்:-

அதீ தத்வம் – ஆதாரமாக இருந்து கொண்டு ஒட்டிக் கொள்ளாமல் இருத்தல்
இல்லறத்தில் இருந்து கொண்டு எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே (அதீதத்வம்) . இல்லறமானது தன்னைவிட குறைவான சத்தாவாக இருக்கின்றது என்று நன்றாக புரிந்திருக்க வேண்டும்.  சம்சாரம் பொய்யானது என்ற அசையாத அறிவோடு இருக்கும்போது அதனால் பாதிக்கப்படாமல் இருத்தலே அதீதன் என்று கூறுவர். 
பாரமார்த்திக ஸத்யம் – உயர்ந்த உண்மையானது. 
உத்தம புருஷனாக இருக்கின்ற நான் க்ஷரம், அக்ஷரம் இரண்டையும் கடந்தவனாக இருக்கின்றேன். இவ்வாறு இருப்பதனால் நான் வேதங்களினாலும், உலகத்தினவர்களாலும்  புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகின்றேன்.

यो मामेवमसम्मूढो जनति पुरुषोत्तमम् ।
स स्र्वविद्भजति मां सर्वभावेन भारत् ॥ 15-1919
யஹ –  எந்தவொரு 
அஸம்மூடஹ – ; உலகத்திலுள்ள உண்மை, பொய் இவைகளை பிரித்தறியும் விவேகியானவன்
புருஷோத்தமம் – புருஷோத்தமனாக, உத்தம புருஷனாக
மாம் ஏவம் ஜானாதி – என்னை இவ்விதம் அறிகின்றானோ
ஸஹ – அவன்
ஸர்வவித்3 அனைத்தையும் அறிபவனாகின்றான் (ஆத்ம விஷயத்தை அறிந்தவனாகின்றான்)
பஜதி மாம் ஸர்வபாவேன – என்னை அனைத்திலும் வழிபடுகின்றான்

ஸர்வபாவேன – ஸர்வாத்ம பாவம் -  உலகத்திலுள்ள அனைத்திற்கு ஈஸ்வரரூபமாக பாவித்தல், பிளவுபடாத பக்தியுடன் இருக்கும் நிலை.
 
इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥ 15-20 ॥

அனக – பாவங்களற்ற அர்ஜூனா!
இதி  - இதுவரை கூறியவைகள் அனைத்தும் 
குஹ்யதம்ம் ஶாஸ்திரம் – மிகவும் ரகசியமான சாஸ்திரம்
உக்தம் மயா – என்னால் சொல்லப்பட்டவைகள்
ஏதத் புத்3த்4வா - இதை அறிந்தால்
புத்திமான்           - அறிவுள்ளவனாக உயர்வடைவான்
க்ருதக்ருத்ய ச ஸ்யாத் – செய்ய வேண்டியவைகளை அனைத்தையும் செய்து முடித்தவனாக இருப்பான். முழு மனநிறைவை அடைந்தவனாக இருக்கின்றான்.

சாஸ்திரம் – புருஷார்த்த தத் ஸாதனம் – லட்சியத்தையும், அதை அடையவும் உதவும் சாதனங்களை கூறும் நூல்
மோக்ஷம் என்பது க்ருதக்ருத்யனாக மாறுதல்

தொகுப்பரை:
1-2    சம்சார வர்ணனை செய்யப்பட்டது. இந்த அகில பிரபஞ்சத்தை அரசமரத்திற்கு ஒப்பிட்டு விளக்கப்பட்டிருக்கின்றது. ஆனிவேரானது ப்ரஹ்ம தத்துவத்திற்கு ஒப்பிடப்பட்டது.  பெரிய கிளைகள் பஞ்சபூதங்களுக்கு உவமையாக சொல்லப்பட்டது. கிளை வேர்கள் ராக-துவேஷங்களுக்கும்,ஸம்ஸ்காரங்களுக்கும் உவமையாக சொல்லப்பட்டது.  இதுதான் ஜீவன் எப்படிபட்டவனாக இருக்கிறான் என்பதை நிர்ணயிக்கின்றது. வேதத்தில் உள்ள கர்ம காண்டம் கர்மத்தில் நம்மை ஈடுபட வழி வகுத்துள்ளது.
3-5     சம்சார வ்ருக்ஷத்தை நீக்க உபாயம் சொல்லப்பட்டது.  ஒரு மரத்தை வெட்டுவதற்கு சிறு கிளைகளை வெட்டுகிறோம், பிறகு பெரிய கிளைகளை வெட்டி பிறகுதான் முழுவதுமாக மரத்தை வெட்டுகிறோம்.  சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு அஸங்கம் (வைராக்கியம்) என்ற கோடாரியால் வெட்டி வீழ்த்த வேண்டும். வேரோடு நீக்குதலை அக்ஞானத்தை நீக்குவதற்கு உவமையாக கூறினார்.  ஞானயோகத்தின் மூலமாக அக்ஞானத்தை நீக்க வேண்டும். பிறகு பக்தியை ஆரம்பம் முதல் இறுதிவரை விடாமல் செலுத்து கொண்டிருக்க வேண்டும்.  பக்தி ஸ்வரூபம் – பந்த நிவிருத்தி உபாயம் சொல்லப்பட்டது
6         பிரஹ்ம லட்சணமானது கூறபட்டது.  எதை அடைந்தாலும் மீண்டும் திரும்பாத நிலைக்கு செல்வது, ஸ்வயம் பிரகாசமாக இருக்கின்றது. இதை அடைந்து விட்டால் பிறகு ஒரு நாளும் அதை இழந்து விட மாட்டோம்.
7-15  ஜீவனுடைய ஸ்வரூபத்தை விளக்கினார்.  இரண்டு தத்துவங்கள் ஜீவாத்மாவில் உள்ளது.  அவைகள் உண்மையும் அதன் பிரதிபிம்பமுமாகும், இந்த பிரதிபிம்பம் பொய்யானது. ஆத்கா மனதில் பிரதிபலிக்கும் போது பொய்யான ஜீவன் என்று கூறப்பட்டது.  உடலழிந்த பிறகு சிதாபாஸம் என்னவாகின்றது. வேறு உடலை அடைகிறான்.  அதில் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.  வெறும் சிலரால்தான் இந்த பிரஹ்ம தத்துவத்தை அறிந்த கொள்ள முடிகின்றது.  காரணம் மனத்தூய்மை அடைந்தவர்களால்தான் புரிந்து கொள்ள முடிகின்றது.  விசாரத்தின் நேரடி பலனாக ஞானத்தை அடைய முடியும். மனத்தூய்மை என்பது நற்குணங்களை அடைந்து, தீய குணங்களை நீங்கி இருக்கின்ற நிலையாகும்..  இந்த உலகத்தில் வெளிப்பட்டு இருக்கின்ற அனைத்து சக்திகளூம் என்னைச் சார்ந்தது என்று கூறி மூன்று உதாரணங்களை குறிப்பிட்டிருக்கிறார்.  அவைகள் அக்னி சக்தி, சூரிய சக்தி, சந்திர சக்தி, ஜீவனின் வயிற்றுக்குள்ளும் இருக்கின்ற அக்னியாகவும் நான் இருக்கின்றேன என்று கூறியிருக்கின்றார.  நான் அனைத்து ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் இருக்கின்றேன்.  ஞானம், மறதி, நினைவாற்றல் இவைகளை கொடுப்பவனும் நானே.  நான் வேதங்களினால் அறியப்படவேண்டியவன். நானே குருவாகவும், சிஷ்யனாகவும் இருக்கின்றேன்.
16-18 உபநிஷத்தின் சாரத்தை பகவான் இதில் கூறியிருக்கிறார்.  க்ஷர, அக்ஷர உத்தமபுருஷன் என்று மூன்றாக பிரித்து விளக்கியுள்ளார். க்ஷர – உலகமும், ஜீவராசிகளும், அக்ஷர புருஷன் – மாயை; உத்தம புருஷன் – பரமாத்மா
19-20 ஆத்ம ஞானத்தின் பெருமைகளையும், பலன்களையும் கூறியுள்ளார்.  இது மிகவும் ரகசியமானது என்றும், இந்த ஞானத்தை அடைந்தவனின் புத்தியில் நிறைவையும், மனதில் முழு நிறைவையும் அடைகின்றார்கள்.  செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தாகிவிட்டது என்ற மனநிறைவை அடைகின்றான்.  இதுவரை இந்த சாஸ்திரத்தையே உனக்கு உபதேசித்து இருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.

ஓம் தத் ஸத்

--- oo0oo ---

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...