அத்தியாயம்-18
சாங்க்ய யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின்
உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-23-02-2022
ஶ்ரீபகவான் உவாச
அத2 தே
ஸம்ப்ரவக்ஷ்யாமி ஸாங்க்2யம் பூர்வைர்வினிஶ்சிதம் |
யத்3விக்ஞாய
புமான்ஸத்3யோ ஜஹயாத்3வைகல்பிகம் ப்4ரமம் || 1 ||
ஸ்ரீபகவான்
கூறுகிறார்.
இப்பொழுது உனக்கு
ஏற்கனவே ரிஷிகளால் நன்கு நிலைநாட்டப்பட்ட ஆத்ம ஞானத்தை தெளிவாக உபதேசிக்கப்போகிறேன். இந்த ஆத்ம தத்துவத்தை ஒரு மனிதன் அறிந்து
கொண்டால் அவன் உயிரோடிருக்கும்போதே இருமையினால் வருகின்ற சம்சாரமானது அவனிடமிருந்து
நீக்கப்படுகின்றது. இந்த அறிவின் உடனடி பலனாக இது நிகழ்கின்றது.
ஆஸீஜ்ஜானமதோ2
அர்த2 ஏகமேவாவிகல்பிதம் |
யதா3
விவேகநிபுணா ஆதௌ க்ருதயுகே3ऽயுகே3 || 2 ||
இந்த பிளவுபடாத
பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது. ஞானம், அர்த்தம் என்ற இரு தத்துவங்கள் அதற்குள் சேர்ந்திருக்கிறது. ஞானம் என்பது ஜீவனாகவும், அர்த்தம் என்பது
ஜகத்தாகவும், அயுகம் என்பது பிரளய காலத்தையே குறிக்கிறது.
ஸ்வரூப லட்சணம் –
ஏகமேவ அவிகல்பிதம்,
தடஸ்த லட்சணம் –
ஞானம், அர்த்தம்.
ஆழ்ந்த உறக்கத்தில்
காலத்தைப் பற்றி பேச முடியாது. ஈஸ்வரனுடைய ஆழ்ந்த உறக்கம் பிரளய காலமாகும். நம்முடைய ஜாக்ரத் அவஸ்தை அவருடைய கனவு நிலை.
பிரளய காலத்தில் ஞானம், அர்த்தம், ஸ்ருஷ்டியும், ஸ்ருஷ்டி செய்வதற்குரிய சக்தியும்
வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கும்.
பிரம்மன் மட்டும்தான் இருக்கும். மனிதர்கள் கிருதயுக காலத்தில் நித்ய-அநித்ய
வஸ்துவை பிரித்தறியும் விஷயத்தில் நிபுணனாக இருந்த போதிலும் அவர்களுக்கும்
பிரம்மன் ஒன்றாக இருந்தது.
தன்மாயாப2லரூபேண
கேவலம் நிர்விகல்பிதம் |
வாங்மனோऽகோ3சரம் ஸத்யம் த்3விதா4
ஸமப4வத்3ப்3ருஹத் || 3 ||
இதில் பிரம்மத்தின்
ஸ்வரூப லட்சணத்தை பகவான் கூறுகின்றார்.
இது தன்னிடத்தில் உள்ள மாயை என்ற சக்தியை கொண்டு படைப்பை
உருவாக்கிறது. முதலில் இரண்டுவிதமான
படைப்புக்களான அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று படைக்கப்பட்டது. கனவில் வரும் எண்ணங்களில் முதல் எண்ணம்
காண்பவன், மற்றதெல்லாம் அனுபவிக்கப்படுகின்ற பொருளாகின்றது.
ப்3ருஹத் – பிரம்மன்
(மிகப்பெரியது)
கேவலம் – அது
மட்டும்தான் இரண்டற்றதாக
நிர்விகல்பிதம் –
பிளவுபடாததாக இருக்கின்றது.
வாங்மனோ அகோசரம் – இதை
வாக்காலும், மனதாலும், வரையறுக்க முடியாது, வாக்கினால் நேரிடையாக விளக்க முடியாது.
மனதினால் நேரிடையாக கிரகிக்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது.
ஸத்யம் –
உண்மைப்பொருள், பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது
தத்ர மாய பல ரூபோ
திவிதா4 ஸமப4வதி – இந்த பிரம்மன் மாயா ரூபமாகவும், பலன் ரூபமாகவும் இரண்டு
தத்துவங்களாக தன்னை மாற்றிக் கொண்டது.
**மாயா –
பார்க்கப்படும் உலகமாகவும்
**பலம் –
பார்ப்பனவாகவும், ஜீவனாகவும்
தயோரேகதரோ
ஹ்யர்த2: ப்ரக்ருதி: ஸோப4யாத்மிகா |
ஞானம்
த்வன்யதமோ பா4வ்அ: புருஷ: ஸோऽபி4தீ4யதே || 4 ||
பிரம்மனிடம்
இருக்கின்ற இரண்டு தத்துவங்கள் இருக்கிறது. அதிலொன்று அர்த்தம். இது பிரகிருதி என்று
கூறப்படுகின்றது. மற்றொன்று ஞானம் என்ற தத்துவம்
பிரகிருதியில் இருந்து வேறுபட்டது. இதை புருஷன் என்று அழைக்கப்படுகிறது.
தமோ ரஜ: ஸத்த்வமிதி
ப்ரகிருதேரப4வங்கு3ணா: |
மயா
ப்ரக்ஷோப்4யமாணாயா: புருஷானுமதேன ச || 5 ||
மயா-என்னால், இங்கே
பகவான் கிருஷ்ணன் தன்னை ஈஸ்வரனாக பாவித்துக் கொள்கிறார். இந்த பிரகிருதியானது(ப்ரக்ஷோப்4யமாணாயா)
கலைத்துவிடப்பட்டது. பிரகிருதியில் உள்ள மூன்று குணங்களும், சமவிகிதத்தில்
இருக்கும்போது அது அமைதியாக இருக்கும்,.
இந்த விகிதாசாரம் கலைந்து விடும்போது செயல்பட துவங்கிவிடும். எனவே பிரளயம்
என்பது மூன்று குணங்களும் சமமாக இருக்கின்ற நிலையென்று புரிந்து கொள்ளலாம்..
என்னால் இந்த பிரகிருதியானது ஸ்ருஷ்டிக்கு தயார் செய்யப்பட்டது. பிரம்ம ஸ்வரூபமான
என்னால் இதை ஸ்ருஷ்டி செய்ய அனுமதிக்கப்பட்டது.
தேப்4ய:
ஸமப4வத்மூத்ரம் மஹான்ஸூத்ரேண ஸம்யுத: |
ததோ
விகுர்வதோ ஜாதோ யோऽஹங்காரோ விமேஹன: || 6 ||
பிரகிருதி – ஈஸ்வரன்;
மகத் – ஞானத்துடன்
கூடிய ஹிரண்யகர்ப்பன், கிரியா சக்தியுடன் கூடிய ஹிரண்யகர்ப்பன் (சூத்ராத்மா).
பிரகிருதியிடமிருந்து
சூத்திரம் என்கின்ற தத்துவம் தோன்றியது. இந்த மகத் தத்துவம் சூத்ர தத்துவத்துடன்
சேர்ந்துள்ளது. இதிலிருந்து ஹிரண்யகர்ப்பன் தோன்றினான். இந்த சூத்திரத்திடமிருந்து அகங்காரம் என்ற
தத்துவம் தோன்றியது. ஜீவனை இதில் அபிமானம்
கொள்ளச் செய்கிறது.
வைகாரிகஸ்தைஜஸ்ஶ்ச
தாமஸ்ஶ்சேத்யஹம் த்ரிவ்ருத் |
தன்மாத்ரேந்த்3ரியமனஸாம்
காரணம் சித3சின்மய: || 7 ||
இதில்
அகங்காரத்திலுள்ள அம்சத்தை பற்றி கூறப்படுகிறது. இது சத்துவ குணம், ரஜோ குணம், தமோ
குணம். இந்த மூன்று குணங்களுடன் கூடியது. இது மூன்று குணங்களின் அடிப்படையில் மூன்று
பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. இது ஜட
ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது பல படைப்புக்களுக்கு காரணமாக
இருக்கின்றது. பஞ்சபூதங்கள், தன்மாத்திரைகள்,
இந்திரியங்கள், மனம் இவைகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.
அர்த2ஸ்தன்மாத்ரிகாஜ்ஜக்ஞே
தாமஸாதி3ந்த்3ரியாணி ச |
தைஜஸாத்3தே3வதா
ஆஸன்னேகாத3ஶ ச வைக்ருதாத் || 8 ||
அகங்காரத்தின் தமோ
அம்சத்திலிருந்து தன்மாத்திரையாகி அதிலிருந்து ஸ்தூல பஞ்ச பூதங்கள்
தோன்றியது. ரஜோ குண அம்சத்திலிருந்து
இந்திரியங்கள் தோன்றின. சத்துவ குண அம்சத்திலிருந்து மனமும், பதினொன்று தேவதைகளும்
தோன்றின.
மயா ஸஞ்சோதி3தா பா4வா:
ஸர்வே ஸம்ஹத்யகாரிண: |
அண்டமுத்பாத3யாமாஸுர்ம
மாயதனமுத்தமம் || 9 ||
படைக்கப்பட்டுள்ள
அனைத்தும் என்னுடைய கண்காணிப்புக்குட்பட்டுத்தான் இருக்கின்றது. இவைகள் அனைத்தும் ஒன்றொடொன்று இணைந்து இயங்கிக்
கொண்டிருக்கின்றது. இந்த உயிர்கள் வாழும்
உலகங்கள் படைக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே என்னுடைய உத்தமமான இருப்பிடம்.
தஸ்மின்னஹம்
ஸம்ப4வமண்டே3 ஸலிலஸம்ஸ்தி2தௌ |
மம
நாப்4யாமபூ4த்பத்3மம் விஶ்வாக்2யம் தத்ர சாத்மபூ4: || 10 ||
இந்த அண்டத்தில் நான் விஷ்ணுரூபமாக
வெளிப்படுகின்றேன். பாற்கடலில் நாராயணனாக
இருக்கின்றேன். என்னுடைய நாபியிலிருந்து விஸ்வம் என்ற தாமரை தோன்றியது. அந்த
தாமரையில் பிரம்ம தேவன் தோன்றினார்.
ஸோऽஸ்ருஜத்தபஸா
யுக்தோ ரஜஸா மத3னுக்3ரஹாத் |
லோகான்ஸபாலான்விஶ்வாத்மா
பூ4ர்பு4வ: ஸ்வரிதி த்ரிதா4 || 11 ||
அந்த பிரம்மதேவன்
ஸ்ருஷ்டி செய்ய தயாரானார். ரஜோ குணத்தின்
துணைக் கொண்டு தவத்தின் மூலமாக என்னுடைய அனுமதியுடன் உலகங்களையும், தேவர்களையும்
படைத்தார். பூ:, புவ, ஸ்வ ஆகிய லோகங்களையும், ஜீவராசிகளையும் படைத்தார்.
தே3வானாமோக
ஆஸீத்ஸ்வர்பூ4தானாம் ச பு4வ: பத3ம் |
மர்த்யாதீ3னாம் ச
பூ4லோக: ஸித்3தா4னாம் த்ரிதயாத்பரம் || 12 ||
தேவர்களுக்கு
சொர்க்கலோகம் இருப்பிடமாக ஆயிற்று.
புவர்லோகம் பூதங்களுக்கு இருப்பிடமானதாக ஆயிற்று, மனிதன் முதலியவர்களுக்கு
பூலோகம் இருப்பிடம் ஆயிற்று. இம்மூன்றுலகங்களுக்கும் மேலுள்ள மஹ: தப: ஸத்யம்
என்றவை சித்தர்களுக்கு ஸ்தானமாயிற்று.
அதோ4ऽஸுராணாம்
நாகா3னாம் பூ4மேரோகோऽஸ்ருஜத்ப்ரபு4:
|
த்ரிலோக்யாம் க3தய:
ஸர்வா: கர்மணாம் த்ரிகு3ணாத்மனாம் || 13 ||
அசுரர்களுக்கும்,
நாகர்களுக்கும் பூமிக்கும் கீழுள்ள அதலம் முதலியவற்றை இருப்பிடமாக பிரபுவானவர்,
சிருஷ்டித்தார். இம்மூவுலகங்களிலும் சத்துவம் முதலிய குணங்களாலுண்டான கர்மங்களூடைய
பலன்கள் உண்டாகின்றன
யோக3ஸ்ய தபஸ்ஶ்சைவ
ந்யாஸஸ்ய க3தயோऽமலா:
|
மஹர்ஜனஸ்தப: ஸத்யம்
ப4க்தியோக3ஸ்ய மத்3க3தி: || 14 ||
யோகத்திற்கும்,
தவத்திற்கும், சன்யாசத்திற்கும் மஹ: ஜன: தப: ஸத்யம் என்ற மிக சுத்தங்களான (ராகம்,
லோபம் முதலிய தோஷங்களில்லாத) ஸ்தானங்கள் பலன் ஆகின்றன. பக்தியோகத்திற்கு வைகுண்டலோகம் பலனாகின்றது
மயா காலாத்மனா தா4த்ரா
கர்மயுக்தமித3ம் ஜக3த் |
கு3ணப்ரவாஹ
ஏதஸ்மின்னுன்மஜ்ஜதி நிமஜ்ஜதி || 15 ||
கர்மத்துடன் கூடின
இந்தப் பிராணிகள் கூட்டம் காலத்தை சக்தியாக உடையவனும் கர்மங்களுக்கு பலனைக்
கொடுப்பவனுமான பரமேசுவரனான என்னால் இந்த சம்சாரத்தில், சத்யலோகம் வரையிலுள்ள
உத்தமகதிகளை அடைகிறது. தாவரம் வரையிலுள்ள தாழ்ந்த கதிகளையுமடைகிறது
அணுர்ப்3ருஹத்க்ருஶ:
ஸ்தூ2லோ யோ யோ பா4வ: ப்ரஸித்4யதி |
ஸர்வோऽப்யுப4யஸம்யுக்த:
ப்ரக்ருத்யா புருஷேண ச || 16 ||
சிறிதாகவும்,
பெரிதாகவும், இளைத்ததாகவும், பெருத்ததாகவும் எந்தெந்தப் பொருள் பிரசித்தமாக
இருக்கிறதோ அதெல்லாம் பிரகிருதி, புருஷன் என்ற இரண்டுடனும் கூடினதாகவே இருக்கிறது.
யஸ்து யஸ்யாதி3ரந்தஶ்ச
ஸ வை மத்4யம் ச தஸ்ய ஸன் |
விகாரோ வ்யவஹாரார்தோ2
யதா2 தைஜஸபார்தி2வா: || 17 ||
எந்தக்காரியத்திற்கு
எந்தப்பொருள் ஆதியாகவும், காரணமாகவும், முடிவாகவும், லயஸ்தானமாகவும் ஆகிறதோ அதன்
நடுவும் அதே பொருள்தான் இருக்கிறது.. அந்தப்பொருள் தான் ஸத் என்று கூறப்படுகிறது.
தங்கத்தின் விகாரங்களான மோதிரம், குண்டலம் முதலியதும், பிருதிவியின் விகாரங்களான பானை
முதலியதும் போலவே காரியமும் உலக வியவஹாரத்திற்காக ஏற்பட்டது.
யது3பாதா3ய பூர்வஸ்து
பா4வோ விகுருதேऽபரம்
|
ஆதி3ரந்தோ யதா3 யஸ்ய
தத்ஸத்யமபி4தீ4யதே || 18 ||
இந்த
வெளிதோற்றத்திற்கு வந்த அனைத்து படைப்புக்களுக்கும் மூன்று தத்துவங்கள் ஆதாரமாக
இருக்கின்றது. ஒன்று பிரகிருதி (மாயை), உபாதான காரணமாக இருக்கின்றது. இரண்டாவது பரமபுருஷன்
மேலான அறிவு ஸ்வருபமான தத்துவம்(பிரம்மன்), மூன்றாவது காலம் என்கின்ற தத்துவம்
மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது. இந்த
மூன்று தத்துவங்களும் நானே என்று அறிந்து கொள்.
பிரகிருதி – மாயை
காரியமாக வெளிப்படும்போது, அதுவே இந்த உலகம் காலம் என்ற தத்துவம் பிரகிருதியை
தாண்டிவிட்டு காரியமாக வெளிப்பட வைக்கின்றது. காலம் ஜீவனுடைய கர்மபலன்களாக
இருக்கின்றது. பிரம்மத்திற்கும்,
மாயைக்கும் உள்ள சம்பந்தமே காலம் என்ற கூறப்படுகின்றது.
ப்ரக்ருதிர்யஸ்யோபாதா3னமாதா4ர:
புருஷ: பர: |
ஸதோ பி4வ்யஞ்ஜகள் காலோ
ப்3ரஹ்ம தத் த்ரிதயம் த்வஹம் || 19 ||
பிரகிருதியானது
படைக்கப்பட்ட ஜகத்துக்கு உபாதான காரணமாக இருக்கிறது. புருஷன் ஜகத்துக்கு நிமித்த காரணமாக
இருக்கின்றது. காலம் என்பது படைப்புக்கு
ஒரு காரணியாக இருக்கின்றது. இவைகள்
மூன்றும் சேர்ந்துதான் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது
ஸர்க3: ப்ரவர்ததே
தாவத்பௌர்வாபர்யேண நித்யஶ: |
மஹான்கு3ணவிஸர்கா3ர்த2:
ஸ்தி2த்யந்தோ யாவதீ3க்ஷணம் || 20 ||
இந்த ஸ்ருஷ்டி
எதற்காக, யாருக்காக என்று பதில் கூறப்படுகின்றது. ஜீவர்களுக்காக எல்லா
படைப்புக்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகத்திலிருந்து
நன்றாக வாழ்ந்துவிட்டு மீண்டும் பிறவாத நிலைக்கு செல்ல வேண்டும். இந்த பெரிய படைப்பு, புரிந்து கொள்ளமுடியாத
பிரமாண்ட படைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஈஸ்வரனின் கட்டுப்பட்டுக்குள் இருக்கும்
வரை ம் மீண்டும், மீண்டும் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றது.
குணவிஸர்கஹ – ஜீவன்
என்று பொருள், சரீரத்தில் வெளிப்படுபவன்.
இந்த ஜீவனுக்காகத்தான்
இந்த படைப்பு அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது
விராண்மயாஸாத்3யமானோ
லோக கல்பவிகல்பக: |
பஞ்சத்வாய விஶேஷாய
கல்பதே பு4வனை: ஸஹ || 21 ||
தோன்றி மறையும்
தன்மையுடைய விராட் என்கின்ற தத்துவமான அனைத்து படைப்புக்களும் இறைவனான என்னால்
வியாபிக்கபட்டதாக இருக்கின்றது.
ஆஸாத்யமானஹ –
எண்ணங்களால் வியாபிக்கப்படுதல்
உயிரினங்கள் வாழ்கின்ற
இந்த உலகம் அனைத்தும் பஞ்ச பூதங்களாக மாறி வியாபித்திருக்கிறது. அதாவது
எண்ணங்களால் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
அபவாதம் என்பது மனதளவில் செய்வதுதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அன்னே ப்ரலீயதே
மர்த்யமன்னம் தா4னாஸு லீயதே |
தா4னா பூ4மௌ
ப்ரலீயந்தே பூ4மிர்கந்தே4 ப்ரலீயதே || 22 ||
மரணமடையக் கூடிய இந்த
ஸ்தூல சரீரமானது அன்னத்தில் ஒடுக்க வேண்டும். அன்னம்தான் ஸ்தூல உடலுக்கு காரணம்
எனவே அதுவே சத்யம். இந்த அன்னத்தை
விதைக்குள் ஒடுக்க வேண்டும். அன்னம் காரியமாகி விடுவதால் அது அழியக்கூடியதாக
இருக்கிறது. விதைகள் பூமியில்
ஒடுங்குகின்றன.
எல்லா உடல்களையும்
உணவில் லயம் செய்ய வேண்டும். எனவே எல்லா
உடல்களும் ஒன்றுதான். இவைகள் அனைத்தும் விதைக்குள் ஒடுங்குகின்றது. எல்லா விதைகளும் பூமியில் ஒடுக்க வேண்டும். இந்த ஸ்தூல பூமியானது சூட்சும பூமியோடு
ஒடுங்குகின்றது.
அப்ஸு ப்ரலீயதே க3ந்த4
ஆபஶ்ச ஸ்வகு3ணே ரஸே |
லீயதே ஜ்யோதிஷி ரஸோ
ஜ்யோதீ ரூபே ப்ரலீயதே || 23 ||
சூட்சும பூமியானது
நீரில் ஒடுங்கிவிட்டது. நீரானது அக்னியில்
ஒடுங்குகின்றது. ஸ்தூல அக்னியானது சூட்சும அக்னியோடு ஒடுங்குகின்றது. சூட்சுமமான அக்னியானது ஸ்தூல வாயுவிடமும், ஸ்தூல
வாயு சூட்சும வாயுவிடமும் ஒடுங்குகின்றது.
இந்திரியங்கள் தன்னுடைய காரணமாக இருக்கின்ற ரஜோ குணத்தோடு ஒடுங்குகின்றது.
ரூபம் வாயௌ ஸ ச
ஸ்பர்ஶே லீயதே ஸோऽபி
சாம்பரே |
அம்ப3ரம்
ஶப்3த3தன்மாத்ர இந்த்ரியாணி ஸ்வயோனிஷு || 24 ||
சூட்சுமமான ஆகாசமானது
தமோ குணத்தினுடைய அகங்காரத்திற்குள் ஒடுங்குகிறது. நம்முடைய மனமும் அதற்குரிய தேவதைகளும்
அகங்காரத்தின் சத்துவ குணத்தில் இருந்து தோன்றியதால் அதற்குள் ஒடுங்குகின்றது. அகங்காரம் மஹத் தத்துவத்தில் ஒடுங்குகின்றது.
யோனிர்வைகாரிகே ஸௌம்ய
லீயதே மனஸீஶ்வரே |
ஶப்3தோ
பூ4தாதி3மப்யேதி பூ4தாதி3ர்மஹதி ப்ரபு4: || 25 ||
அகங்காரத்தை விராட் என்று
சொல்லலாம். அதேபோல மகத் தத்துவத்தை
ஹிரண்யகர்ப்பன் என்றும் சொல்லலாம்.
ஹிரண்யகர்ப்பத்தில் எல்லா குணங்களும் வெளிப்படாமல் இருக்கின்றது.
இந்த மகத் தத்துவம்
எல்லா குணங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. இது தன்னுடைய குணம் அதனுடைய
நிலையோடு ஒடுங்குகின்றது. சூட்சுமமான மகத்
தத்துவம் அவ்யக்தமான பிரகிருதியுடன் ஒடுங்குகின்றது. அவ்யக்தம் என்பது ஸ்ருஷ்டிக்கு தயாராக
இருக்கும் பிரகிருதியை குறிக்கின்றது. இந்த
அவ்யக்தம் அமைதியாக இருக்கின்ற பிரகிருதியான மாயையுடன் ஒடுங்குகின்றது.
ஸ
லீயதே மஹான்ஸ்வேஷு கு3ணேஸு கு3ணவத்தம: |
தேऽவ்யக்தே ஸம்ப்ரலீயந்தே
தத்காலே லீயதேऽவ்யயே || 26 ||
அவ்யக்தமான மாய தத்துவமான
காலமானது ஈஸ்வரனிடம் லயமடைகிறது. மாயையை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்
ஈஸ்வரன். இதில் ஜீவஹ என்ற வார்த்தைக்கு
ஈஸ்வரன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.
எல்லா ஜீவர்களுக்கும் உணர்வு சக்தியை கொடுத்து கொண்டிருப்பவர்
காலோ மாயாமயே ஜீவே ஜீவ
ஆத்மனி மய்யஜே |
ஆத்மா கேவல ஆத்மஸ்தோ2
விகல்பாபாயலக்ஷண: || 27 ||
கடைசியில் ஈஸ்வரனையே
பிறப்பற்ற பிரம்ம தத்துவத்தில் ஒடுக்கிவிட வேண்டும். சாஸ்திரத்தையும், குருவையும்
கூட இதில் ஒடுக்கி விட வேண்டும்.
ஆத்மா கேவல லக்ஷணஹ –
ஆத்மா இரண்டற்றதாக தன்னிடத்திலே இருக்கின்றது
விகல்ப அபாய லக்ஷணஹ –
இத் பிளவற்ற தன்மையுடையதாக இருக்கின்றது
ஞானியும் எப்பொழுதும்
தன்னிடத்திலேதான் மகிழ்ந்திருப்பான். இது ஆத்மஞான நிலையை எடுத்துக் காட்டுகின்றது.
ஏவமன்வீக்ஷமாணஸ்ய
கத2ம் வைகல்பிகோ ப்4ரம: |
மனஸோ ஹ்ருதி3 திஷ்டே2த
வ்யோம்னீவார்கோத3யே தம: || 28 ||
இவ்விதம் ஞானம்
அடைந்துவிட்டால் சம்சாரியாக இருக்க முடியாது.
இவ்வாறு ஆத்மாவை விசாரம் செய்து அதை அறிந்து கொண்டவனுக்கு எப்படி
இருமையினால் துயரம் வரும். மனதிலிருக்கும் இந்த சம்சாரமானது இதயத்திற்குள் எப்படி
வரும். இது ஆகாயத்தில் சூரியன் வந்தவுடன் இருள் நீங்கிவிடுவது போல சம்சாரமும்
ஆத்மஞானம் வந்தவுடன் மறைந்து விடும்.
ஏஷ ஸாங்க்2யவிதி4:
ப்ரோக்த: ஸம்ஶயக்3ரந்தி2பே3த3ன: |
ப்ரதிலோமானுலோமாப்4யாம்
பராவரத்3ருஶ மயா || 29 ||
இந்த ஆத்மஞானம்
என்னால் உபதேசிக்கப்பட்டது. காரண-காரியமான
அனைத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்ற என்னால் அத்யாரோப-அபவாதம் என்ற
முறையில் உபதேசிக்கப்பட்டது. இந்தப்
பாதையானது மனதிலிருக்கும் மோகத்தை அழிக்கக்கூடியது. இந்த ஞானத்தை நன்கு புரிந்து உணர்ந்து
கொள்வதற்கு மனமாற்றம் தேவை. மனதிலுள்ள ரஜோ,தமோ
குணத்தை நீக்கி சத்துவ குணத்தை மட்டும் வைத்திருக்க வேண்டும்.
ஓம்
தத் ஸத்