Saturday, August 11, 2018

விவேகசூடாமணி


விவேகசூடாமணி
ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-26-02-2022
முகவுரை
சாஸ்திரமானது ஒரு முக்கியமான பலனை அடைய உதவுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.  அந்த பலனை அடைவதற்கான சம்பந்தபட்ட அறிவை கொடுக்கின்ற மறை நூலாகும்.  நான்கு வேதங்களும் சாஸ்திரம் என்ற பொதுவாக அழைக்கப்படுகிறது. மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை உபதேசிப்பது வேதமாகும்.
 
மோட்சம் என்பது முழுமையான மனநிறைவாகும். பிரம்மத்தை அடைதல், இறைவனை அடைதல், எல்லையற்ற ஆனந்தத்தை அடைதல், மனதிலுள்ள துயரங்கள் முழுமையாக நீங்கி இருத்தல் போன்றவைகளையும் மோட்சம் என்று அழைக்கலாம்.

வேதம் என்ற சொல்லினுடைய பொருளானது அறிவைக் கொடுக்கும் கருவி என்றும் அழைக்கப்படுகிறது. சப்த ரூபமான பிரமாணமாக இருக்கிறது. இது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.  முதல் பகுதியை கர்ம காண்டம் என்றும், கடைசி பகுதியை வேதாந்தம் என்றும் ஞான காண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ம காண்டம்
இதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்

1.     விதவிதமான கர்மங்கள்யாகங்கள், வாக்கு உடலை பிரதானமாகக் கொண்டு செய்கின்ற கர்மங்கள். இவைகளைப் பற்றிய அறிவு கொடுக்கப்படுகிறது.

2.     விதவிதமான தியானங்கள், மனதால் செய்யப்படும் செயல்களான உபாஸனம், ஜபம் போன்றவைகள்.
3.     விதவிதமான கடமைகள்,பாவனைகள் கூறப்பட்டிருக்கிறது. உலகில் எப்படி வாழவேண்டும் என்ற வாழ்க்கை நெறிமுறைகளை கூறியிருக்கிறது. உதாரணமாக தாயை தெய்வமாக பாவிக்க வேண்டும். தந்தையும், ஆசிரியரையும், விருந்தினர்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறது. தர்மப்படி நட, உண்மையை பேசு, போன்ற தர்மநெறிகளை கூறியிருக்கிறது.

இவை மூன்றும் சேர்ந்துள்ளதையே தர்ம சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கூறப்பட்டுள்ள முறைப்படி வாழ்வதால் அடையும் பலன்கள்:
1.       உலக இன்பங்களை அடைய வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்ற திடமான ஆசைகளை அடைந்து தர்மமான முறையிலே அந்த சுகங்களை அடைதல் பலனாகும்.  இன்பத்தை அனுபவிப்பதற்கு உடல் நல்ல ஆரோக்கியத்துடனும்,. சக்தியுடனும் இருக்க வேண்டும். எனவே நல்ல உடலாரோக்கியத்தைப் பெறுவோம், மனநலத்தையும் பெறுவோம்.  இன்பத்தை தருகின்ற பொருட்களையும்,  விஷயங்களையும் அடைவோம். மேற்சொன்ன இரண்டும் அனுபவிக்க கூடிய நல்ல சூழ்நிலைகளை அடைவோம்.
2.       மேலோக சுகத்தை அனுபவிக்கலாம், இறந்த பிறகு நல்லுலகத்தை அடையலாம்.. மேற்கூறிய பலனில் பற்றுடையவர்கள் பின்பற்றினால் அவைகளை அடையலாம்.  கர்மகாண்டத்தில் கூறப்பட்டிருக்கின்ற வழிமுறையை தவறில்லாமல் முழுமையாக கடைப்பிடித்தால்தான் அதனால் சொல்லப்பட்ட பலன்களை அடையலாம். செய்யக் கூடாது என்று வகுக்கப்பட்ட செயல்களை செய்வதனால் தீய பலன்களை அடைவோம்.
3.       கர்மகாண்ட வாழ்க்கை நெறிமுறைகளை நன்கு கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு அவைகளால் அடையப்படுகின்ற இகலோக, பரலோக இன்பங்களில் உள்ள சில உண்மைகள் காண்கின்றனர். அதாவது இவைகள் நிலையற்றவைகள், முடிவில் துன்பத்தைக் கொடுக்க கூடியது என்ற மிகப்பெரிய குறையை காண்கிறார்கள். இந்த போகங்களை எவ்வளவுதான் அனுபவித்தாலும் மனநிறைவை அடைய மாட்டோம். ஒவ்வொரு சுகத்திலும் துன்பமும் கலந்திருக்கிறது என்ற உண்மையையும் அறியும் சக்தி கிடைக்கிறது.  எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிகின்ற அறிவு கிடைக்கிறது. இந்த நிலையில் நிலையான ஆனந்தத்தை கொடுக்க கூடிய முழு மனநிறைவைக் கொடுக்கக்கூடிய ஒன்றை அடையவேண்டும் என்ற ஆசை மனதில் எழுகின்றது.  இந்த நிலையற்ற போகப்பொருட்களிலிருந்து விலகியிருக்கும் மனநிலையான வைராக்கியமும் பலனாக கிடைக்கின்றது.

இந்தப்பலனை அடைந்துவிட்டால் அதை வைத்துக் காப்பாற்ற வேண்டும். இதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் இருக்க வேண்டும். இந்த நிலையை அடையும்வரை கர்மகாண்டத்தை பின்பற்றி வர வேண்டும். நிஷ்காமமாக செய்யப்படும் செயல்முறையே கர்மயோகம் என்று அழைக்கப்படும்.  பக்தியுடன் செய்யப்படும் உபாஸனையே பக்தியோகம்.

ஞான காண்டம்
மோட்சத்தை அடைய வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் இருக்கும் ஒருவனால் பின்பற்ற வேண்டியது இந்த ஞானகாண்ட உபதேசமாகும்.  இதில் உபதேசிக்கப்படும் மையக்கருத்தானது எதை அடைந்தால் மனநிறைவை அடைவோமோ அதைக் கொடுக்கக்கூடிய பிரம்மத்தை பற்றிய அறிவாகும்.  மேற்கூறிய கர்மகாண்டத்தினால் விவேக, வைராக்கியத்தை அடைந்தவனே அதிகாரியாக கருதப்படுகிறான்.  இந்த பரபிரம்மத்தை அடைவதால் நிலையான ஆனந்தத்துடன் இருக்கின்ற மோட்சத்தை அடைந்து விடுகிறான்;. இதுவே ஒருவனின் இறுதியான லட்சியமாகும். இந்த பிரம்மத்தை அடைவதற்கான வழியை உபதேசிப்பதே ஞானகாண்டமாகும்.

பகவான் சங்கராச்சாரியாரால் எழுதப்பட்ட விவேக சூடாமணி என்ற இந்த நூலில் உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிறது.  ஶ்ரீமத் சங்கரபகவத்பாதாசார்யாரவர்கள் இயற்றியுள்ள பிரகரணங்களுக்குள் விவேகசூடாமணி என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. உபநிஷத்துக்களில் சிதறிக் கிடக்கும் உபதேச ரத்தினங்களை வெகு அழகாக தொகுத்து இந்த சூடாமணி என்கின்ற அற்புதமான ஆபரணம் செய்யப்பட்டிருக்கிறது.  இதில் மொத்தம் 581 ஸ்லோகங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான 108 ஸ்லோகங்களுக்கு மட்டும் ஸ்வாமி குருபரானந்தா அவர்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 

1.கடவுள் வாழ்த்து
வேதவாக்கியத்தினாலே அடையதக்க பரமாத்வானவரும்ஆனந்த ஸ்வரூபமாகவே இருக்கின்றவரும்கோவிந்தம் என்ற பெயரை உடையவருமான உயர்ந்த நிலையிலுள்ள குருவை நான் வணங்கியவனாக இருக்கிறேன். இந்த ஸத் குருவை உபநிஷத்தின் உதவியால் மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும்.. வேறெதனாலும் அறிந்து கொள்ள முடியாது.  எல்லா உபநிஷத்துக்களிலும் நிச்சயம் செய்யப்பட்டுள்ள முடிவான பொருளாக அறியப்படுபவராகவும்பிரம்மமாகவே இருப்பவராகவும் வேறெந்த பிரமாணத்தாலும் அறிய முடியாதவராகவும் இருக்கின்ற குருவுக்கு நமஸ்காரம்.
02.
ஜீவராசிகளுக்குள் மனிதப்பிறவி மிகவும் அரிதானது. அதைவிட மோட்சத்தை அடைய வேண்டும் ஆசை வருவது மிகவும் அரிது.  இதையும் விட அரிதானது சான்றோர்கள்குருமார்கள்பரமாத்மாக்கள்சாதுக்களின் அன்பும்ஆதரவும்நட்பும் கிடைப்பது.  இது இறைவனுடைய அனுக்கிரகத்தினால்தான் நடக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாகவும் கிடைக்கலாம்.
03.
எப்படியோ கிடைத்தற்கரிதான மனிதப்பிறவியையும்அத்தோடு நல்ல உடல்மன ஆரோக்கியத்தையும் அடைந்துவிட்டுநல்ல அறிவுத்திறனும் அடையப்பெற்றவன் வேதாந்தத்தை புரிந்து கொள்கின்ற அறிவுத்திறனும் அடையப்பெற்றவன் தன்னுடைய மோட்சத்திற்காக முயற்சி செய்யவில்லையெனின் அவன் அறிவிலியாக கருதப்படுகிறான்.  மேலும் அவன் தன்னைதானே அழித்துக் கொள்கின்ற செயலை செய்பவனாக கருதப்படுகிறான். அவன் பொய்யானவொன்ற (உலகத்தையும் உடலையும்) பற்றிக் கொண்டு இருப்பதால் தன்னையே கொலை செய்து கொள்பவனாக இருக்கின்றான்.
04.
விதவிதமான சாஸ்திரங்களை படிக்கட்டும்விதவிதமான தேவதைகளை குறித்து யாகங்கள் செய்யட்டும்பலவிதமான நற்செயல்களை செய்யட்டும். விதவிதமான தேவதைகளை உபாஸனை செய்யட்டும். இவைகளால் எவ்வளவு காலம் செய்தாலும் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவைத் தவிர மோட்சமானது கிடைக்காது.
05.
கர்மமானது மனதை தூய்மைப்படுத்த மட்டும்தான் பயன்படும் ஆனால் ஒரு பொருளைப் பற்றிய அறிவை அடைவதற்கு பயன்படாது.  இங்கு கர்மம் என்று குறிப்பிடுவது வாக்குமனம்உடல் இவைகளினால் செய்யும் செயல்களாகும்.  செயல் செய்வதனால் நான்கு வகையான பலனை அடையலாம்.  அவைகள்

  1.  ஒரு பொருளை உருவாக்கலாம்
  2. இருக்கின்ற ஒன்றில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்
  3. பொருட்களை தூய்மைப்படுத்தலாம்
  4. ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.

பரம்பொருளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வேதாந்தத்தை நன்கு விசாரம் செய்ய வேண்டும்.  இதை தவிர்த்து கோடிக்கணக்கான செயல்களை செய்தாலும் த்மஞானம் சிறிதளவு கூட ஏற்படாது.
06.
ஆகவே ஆத்மவிசாரமானது செய்ய வேண்டும்.  ஆத்மஞானத்தை அடைய விரும்புபவன் அந்த பரம்பொருளைப் பற்றிய விசாரம் செய்ய வேண்டும்.  இந்த விசாரத்தை கருணைக் கடலாகவும்பிரம்மஞானியாகவும்புனிதமானவராகவும் இருக்கின்ற குருவை முறைப்படி அடைந்து அவர் துணைக் கொண்டு செய்ய வேண்டும்.
07.
விசாரத்தினுடைய பலனான ஆத்மஞானத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான தகுதியை அடைந்திருக்க வேண்டும். இந்த விசாரம் செய்வதற்கு பலவிதமான சாதனங்களான தேசம்காலம் முதலியவைகள் உதவக்கூடியவைகளாக இருக்கின்றன.  அவைகள் முக்கியமானவைகள் அல்லஆனால் பலன் ஏற்படுவதில் கூடவேயிருந்து உதவக்கூடியவைகளாக இருக்கின்றன.
08.
ஞானயோகத்தை பின்பற்றுவதற்கு தேவையான நான்கு சாதனங்கள் இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.  வேதத்தின் தாத்பர்யத்தை அறிந்தவர்களால் கூறப்பட்டு இருக்கிறது.  எவைகள் இருந்தால் ஸத் வஸ்துவான பிரம்மத்தை அறிந்து அதில் நிலைபெற முடியுமோஎவைகள் இல்லையென்றால் ஞானநிஷ்டை ஏற்படாதோ அவைகளே இந்த நான்கு சாதனங்களாகும்.
09.
முதல் சாதனம் நிலையானநிலையற்ற வஸ்துக்களை பிரித்தறிகின்ற விவேகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது சாதனம் வைராக்கியமாகும். இகலோகத்திலும், பரலோகத்திலும் உள்ள போகப்பொருட்களில் பற்றற்று இருத்தல். மூன்றாவது சாதனம் ஶமம், தமம், உபரதி, திதிக்ஷா, சிரத்தை, சமாதானம் என்ற ஆறுவிதமான  சாதனங்கள் சேர்ந்து இருப்பதாகும். நான்காவது சாதனம் முமுக்ஷுத்வம் என்கின்ற மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை என்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.\
10.
பூரணமானநிலையான ஏதோவொன்றே நிலையானது. உலகத்திலுள்ள நாம் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்தும் பொய்யாக தோன்றிக் கொண்டிருப்பது, நிலையற்றது. இந்த லட்சணங்களை மனதில் உறுதியாக பதிய வைத்துக் கொள்வதுதான் விவேகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிவானது நித்ய-அநித்ய விவேகம் என்று சொல்லப்படுகிறது.
11/21
உலகத்திலுள்ள புலனுகர் போகப் பொருட்களில் இருக்கும் பற்றற்ற நிலை வைராக்கியம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த வைராக்கியத்தில் மேற்சொன்ன விவேகம் நன்கு மனதில் பதிந்திருக்க வேண்டும்.  போகப் பொருட்களைப் பார்க்கும்போது இந்த விவேகம் மனதில் வெளிபட்டு அதன் தன்மையை ஆராய்ந்து பார்க்கும்போது வைராக்கியம் வந்துவிடும்.

போகப்பொருட்களை பார்க்கும் போது வரவேண்டிய எண்ணங்களாவது:
1.       நிலையற்றது
2.       பந்தப்படுத்தி விடும் தன்மை - அனுபவிக்கப்பட்ட ஆசையானது முடிவில் துன்பத்தை கொடுத்துவிட்டுத்தான் நீங்கும். அதேப் பொருள் கிடைக்காமல் போனாலும்கிடைப்பதற்கு  தடைவந்தாலும் துன்பத்தை அனுபவிப்போம்
3.       திருப்தியற்ற நிலைதான் அடைவோம்.  ஆசைகள் நிறைவேறினாலும் மனதிருப்தியை அடையமாட்டோம்
4.       இன்பத்தோடு துன்பமும் சேர்ந்தே இருக்கும்.  எதையாவது இழந்தால்தான் இன்பத்தை அடைய முடியும்.  காலத்தை இழக்கலாம்பணத்தை இழக்கலாம் உடலாரோக்கியத்தை இழக்கலாம்புலன்களின் சக்தியை இழக்கலாம்.
5.       விவேகத்தை அடைந்தாலும் வைராக்கியத்தை அடைவோம் என்று உறுதி கிடையாது. விவேகத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது இறுதியில் வைராக்கியத்தை அடையலாம்.
 
வைராக்கியம் என்பது போகத்தை கொடுக்கின்ற பொருட்களில் மீதுவருகின்ற ஆசைகளை விட்டுவிடுகின்ற மனநிலையாகும்.  தேகம் முதலிய இகலோக பிரம்மலோக போகப்பொருட்கள் நிலையற்ற தன்மை உடையது என்று தன்னுடைய அனுபவத்தின் துணைக் கொண்டு பார்ப்பதன் மூலமாகவும், , மற்றவர்களுடைய அனுபவத்தை கேட்பதன் மூலமாகவும்சாஸ்திரங்கள் சொல்கின்ற கருத்துக்கள் மூலமாகவும் அவைகள் மீது பற்றற்ற நிலையை அடைவதே வைராக்கியமாகும்.
12/22
ஶமஹ - மனக்கட்டுப்பாடுமனவமைதிமனவொழுக்கம்மனதை ஆரோக்கியமாக வைத்திருத்தல்தீயகுணங்கள்தீயபாவனைகள் இல்லாமல் வைத்திருத்தல்,  மனவலிமை அடைதல்அமைதியடைந்த மனதை திரும்பவும் பழைய நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு இந்த அறிவுடன் இருத்தல்மற்றவர்களுடைய இழிபேச்சினாலும்அவமதிப்பினாலும் மனம் பாதிக்கப்படாமல் இருக்கும் சக்தியை அடைதல். உலகத்திலுள்ள புலனுகர் போகப்பொருட்களில் உள்ள குறைகளை தொடர்ந்து பார்த்து மனதை அவைகளிலிருந்து விலக்கி நம்முடைய லட்சியத்தில் முறையாக செயல்படுமாறு வைத்திருத்தலே மனக்கட்டுப்பாடு(சமம்) என்று சொல்லப்படுகிறது.
13/23
த3மஹ - புலனடக்கம்புலனொழுக்கம்புலன்கள் கட்டுப்பாடு. மனதை பாதிக்கின்ற விஷயங்களை புலன்களின் மூலமாக மனதிற்கு செல்லாமல் கட்டுப்பாடுடன் புலன்களை வைத்திருத்தல். இரண்டுவிதமான இந்திரியங்களான ஞானேந்திரியங்களையும்கர்மேந்திரியங்களையும் மனதை பாதிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து திருப்பி அதனதன் இருப்பிடத்திலேயே வைக்க வேண்டும்.  இதுவே புலனடக்கம் என்று சொல்லப்படுகிறது.
14//24
உபரதி    கட்டுபடுத்தப்பட்ட மனதை தொடர்ந்து நமது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருத்தல்முறைப்படி படிப்படியாக பொறுப்புக்களிலிருந்து விலகி கொள்ளுதல்நம்முடைய கடமைகளை மட்டும் செய்து கொண்டிருத்தல். வெளிவிஷயங்களை பற்றிக் கொள்ளாதிருத்தல்மனதிலுள்ள எண்ணங்கள் இதையே மேலான உபரதியாகும். 

திதிக்ஷா சகிப்புதன்மை,பொறுமையுடன் இருத்தல்விருப்பமில்லாத சூழ்நிலை மாற்ற முடியாத போது அதை சகிப்புத்தன்மையுடன் அனுபவித்து தீர்க்க வேண்டும். அனைத்து துயரங்களையும் பழிவாங்கும் நோக்கமில்லாமலும்கவலை இல்லாமலும்புலம்பாமலும் சகித்துக் கொள்ளுதலே திதிக்ஷா என்று அழைக்கப்படுகிறது.
15/26
சிரத்தை நம்பிக்கைமற்றவர்களின் அறிவை தரும் வார்த்தைகளின் மீது வைக்கபடவேண்டிய முழுநம்பிக்கை. எந்த உண்மையானதுஅறிவானது அடையப்படுகிறதோ அதை கொடுக்கின்ற சாஸ்திர உபதேசத்திலும்குரு உபதேசத்திலும் உண்மையே என்ற நினைக்கின்ற திடமான புத்தியையே சிரத்தை என்று அழைக்கப்படுகிறது.
16/27
சமாதானம் சமதமஉபரதி ஆகிய தகுதிகளை அடைந்த பிறகு அவைகளை ஏதாவது ஒரு விஷயத்தில் மனதை ஈடுபடுத்துவதே சமாதானமாகும். மனதைபுத்தியை எப்பொழுதும் நன்றாகதிடமாக தூய்மையான பரம்பொருளிடத்தில் நிலை நிறுத்தி வைத்தலே சமாதானம் என்று சொல்லப்படுகிறது.  மனமானது அலைபாய்ந்து கொண்டு இருந்தால் அது சமாதானமாகாது.
17/28
முமுக்ஷுத்வம் அகங்காரத்திலிருந்து தேகம் வரை இருக்கின்ற பந்தமானது அக்ஞானத்தினால் பொய்யாக ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.   தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை நன்றாக அறிவதனால் விலக்கிவிட வேண்டுமென்ற ஆசையைத்தான் முமுக்ஷுத்வம் என்று கூறப்படுகிறது.

18/33   
மேற்கூறிய தகுதிகளை நன்கு கூடியவனாகதன்னுடைய உண்மையான ஸ்வரூபமான ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகின்றவன் ஆத்மஞானியாக இருக்கின்ற குருவை சரணடைய வேண்டும். எப்படிபட்டவரின் உபதேசத்தால் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைவோமோ அப்படிபட்ட குருவை அணுக வேண்டும்

19/34,35
பரம்பரை பரம்பரையாக வேதாந்த சாஸ்திரத்தை உபதேசம் செய்கின்ற குருகுலத்திலிருந்து முறைப்படி வேதாந்த சாஸ்திரத்தை படித்தவராகவும், உபதேசிக்கின்ற ஞானத்தில் நிலைபெற்றவராகவும் இருக்கின்ற இரண்டு தகுதிகளையும் உடையவரான உத்தமமான குருவை அடையவேண்டும்.  இவர் எந்தவித பாவங்களுமற்றவர், எந்தவித ஆசையினாலும் தாக்கப்படாதவர், பாதிக்கப்படாதவர், மேலான பிரம்மத்தை அறிந்து, அந்த ஞானத்திலே நிலை பெற்றிருப்பவர். பிரம்மனிடத்தில் மனம் லயித்தவராகவும், எரிபொருளில்லாத அணைந்த நெருப்பைப் போல அமைதியான மனதை உடையவராகவும், எதையும் எதிர்ப்பார்க்காத கருணைக் கடலாகவும், தன்னை பக்தியுடன் வணங்குபவர்களுக்கு நெருங்கிய உறவினராகவும் இருப்பார். இத்தகைய லட்சணங்களுடன் கூடிய குருவை அடைய வேண்டும்.

20/36
இப்படிபட்ட குருவை வணங்கி, பக்தியுடன் கூப்பிய கரங்களுடனும், பணிவான சொற்களுடனும், அவருக்கு சேவை செய்து கொண்டும், நமஸ்காரம் செய்து கொண்டும் அமைதியான மனதை உடைய குருவை அணுகி, அருகில் சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப் பற்றி கேட்க வேண்டும். தனக்கு ஆத்ம உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
21/38
அணைக்க முடியாத சம்சாரமென்கின்ற காட்டுத்தீயினால் வாட்டப்பட்டும், கண்ணுக்கு தெரியாத பாவமாகிய பெருங்காற்றினால் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டவனாகவும், மரணத்தைக் கண்டு பயந்தவனாகவும் இருக்கின்ற தங்களையே சரணடைந்து இருக்கும் என்னை காப்பாற்றுங்கள். தங்களைத் தவிர வேறொன்றையும் சரணடைய தகுந்ததாக நான் பார்க்கவில்லை.
22/39
தாங்கள் சாந்தமான மனதை உடையவராகவும், மகாத்மாவாகவும் இருக்கிறீர்கள். மகான்கள், சாதுக்கள் போல வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வசந்த காலத்தைப் போல உலகுக்கு நன்மை செய்து கொண்டும், பயங்கரமான சம்சாரக் கடலை கடந்தவராகவும் இருந்து கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களையும் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள். 
23/45
இப்படி பணிவுடன் அணுகி, ஆத்மஞானத்தை உபதேசிக்குமாறு கேட்ட சீடனைப் பார்த்து குரு பேசலானார்.
அறிவாளியான சீடனே! பயப்படாதே! உனக்கு எந்த கெடுதலும், துன்பமும் ஏற்படாது.  சம்சாரக் கடலை தாண்டுவதற்கு உபாயம் இருக்கின்றது. எந்த வழியினால் முயற்சி செய்து கடத்தற்கரிய இந்த பெருங்கடலை கடந்து அக்கரையை அடைந்திருக்கிறார்களோ அந்த வழியை உனக்கு நான் காட்டுகிறேன்.
24/49
உத்தமான ஆத்மாவாக இருக்கின்ற உனக்கு அறியாமையின் சேர்க்கையால் அல்லவா அனாத்மாக்களுடன் சேர்த்து வைத்து கட்டப்பட்டிருக்கிறாய், அனாத்மாக்களுடன் சம்பந்தம்  ஏற்பட்டிருப்பதால்தான் அவ்விதம் கட்டுப்பட்டதினாலேயே சம்சாரமாகிய துயரத்தில் இருக்கிறாய். ஆத்மா, அனாத்மா ஆகிய இரண்டையும் பிரித்தறிவதனால் ஏற்படும் அறிவென்ற அக்னியானது அறியாமையினால் ஏற்பட்டிருக்கும் துயரம் முதலிய எல்லாவற்றையும் வேருடன் நன்கு எரித்துவிடும்.
25/51
உற்சாகப்படுத்தப்பட்ட சீடன் கீழ்கண்ட ஏழு கேள்விகளை குருவிடம் கேட்கின்றான்.
1.   பந்தம் (சம்சாரம்) என்றால் என்ன?
2.   இந்த சம்சாரம் எவ்விதம் வந்திருக்கிறது?
3.   இது எவ்வாறு ஜீவனிடத்தில் நிலைத்திருக்கிறது?
4.   எப்படி இதிலிருந்து விடுபடுவது?
5.   ஆத்மாவல்லாதது (அனாத்மாக்கள்) என்பது எவைகள்?
6.   மேலான ஆத்மா என்பது எது?
7.   ஆத்மா, அனாத்மா இவையிரண்டையும் பிரித்தறிவது எப்படி?
இந்த கேள்விகளுக்கெல்லாம் தாங்கள் பதில் அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறான்..
26/73
குருவின் பதில் தொடர்கிறது
சீடனே! எந்தவொன்று அறியப்படவேண்டுமோ அதை இப்பொழுது உனக்கு என்னால் தெளிவாக சொல்லப்பட இருக்கிறது. ஆத்மா அனாத்மாக்களிலிருந்து பிரித்து அறிந்து கொள்கின்ற அந்த வழியை நன்கு கவனமாக கேட்டு மனதில் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும்.
27/ 90,91
முதலில் ஐந்தாவது கேள்வியான அனாத்மா என்பது எது என்ற கேள்விக்கான பதிலை சொல்கிறார்.
நாம் ’நான்" என்று சொல்லும்போது ஆத்மாவையும், அனாத்மாவையும் சேர்த்துத்தான் சொல்கின்றோம். ஆத்மா என்பது எல்லாவற்றையும் அறிகின்ற சக்தி படைத்த அறிவு ஸ்வரூபம். அனாத்மா என்பது அறியப்படுவதாக இருக்கின்றவைகள். நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றதும், அறியப்படுவதாக இருக்கின்ற உடலும், மனமும் அனாத்மாவாகும். எதுவொன்று உடலுக்குள் இருந்து கொண்டு அறிபவனாக இருக்கின்றதோ அதுவே ஆத்மாவாகும். இந்த ஸ்தூல சரீரமானது பஞ்சீகரணம் செய்யப்பட்ட ஸ்தூலமாக ஐந்து பூதங்களிலிருந்து முற்பிறவியில் செய்து பாவ-புண்ணிய ரூபமான கர்மபலனால் தோன்றி இருக்கின்றது.  அதுவே ஜீவனுக்கு போகங்களை, சுக-துக்கங்களை அனுபவிப்பதற்கான இருப்பிடமாக இருக்கிறது.   ஸ்தூலமான பொருட்களில் அனுபவம் வருகின்ற காரணத்தால் அந்த ஸ்தூல சரீரத்திற்கு ஏற்பட்ட நிலையே விழிப்பு நிலையாகும்.
28/98
வாக்கு முதலிய ஐந்து கர்மேந்திரியங்கள், காது முதலான ஐந்து ஞானேந்திரியங்கள், பிராணன் முதலான ஐந்து பிராணன்கள், ஆகாசம் முதலான ஐந்து சூட்சும பூதங்கள், புத்தி, மனம், சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு கரணங்கள் அக்ஞானத்தின் விளைவாக மனதில் ஆத்மாவல்லாததை ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  வெளியேயுள்ள பொருட்களில் ஏற்படும் ஆசை, ஆசையினால் ஏற்படும் செயல்கள் மேற்கூறிய எட்டு கூட்டங்களும் சேர்ந்து இருப்பதை சூட்சும சரீரம் என்று சொல்கிறார்கள்.
29/99
இந்த சூட்சும சரீரமானது ஆத்மாவை பிரதிபலித்து அதன் அறிவு ஸ்வரூபத்தை காட்டுவதால் லிங்க சரீரம் என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்சீகரணம் செய்யப்படாத சூட்சும பூதங்களால் ஏற்பட்டது. மனதில் பதிந்துள்ள கர்மபலன்கள், வாஸனைகளுடன் கூடியது. கர்ம பலன்களை அனுபவிக்க உதவுகிறது. எது தன்னுடைய கர்மங்களை வேறொன்றுடையது போல காட்சியளிக்க வைக்கக்கூடியதோ அதையே உபாதி என்று கூறப்படுகிறது. தன்னைப் பற்றி அறியாத காரணத்தினால் தொன்று தொட்டு பரமாத்மாவுக்கு உபாதியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.  எந்த நிலையில் சூட்சும சரீரத்தில் மட்டும் அபிமானமுள்ளவனாக விளங்குகிறானோ அதுவே கனவுநிலையாகும். மேலும் இந்த சூட்சும சரீரத்தை பிரித்து அறியக் கூடிய நிலையையும்  கனவு என்று கூறப்படுகிறது.
30/102
இந்த சூட்சும சரீரம் அறிவு ஸ்வரூபமான மனிதனுக்கு எல்லாவிதமான செயல்களையும் செய்வதற்கு தச்சனுக்கு உளிப் போன்ற கருவிகள் இருப்பது போல கருவியாக இருக்கிறது. அதனால் அந்தகரணத்திலிருந்து வேறாக இந்த ஆத்மா சம்பந்தப்படாததாக இருக்கிறது. தச்சனும் அவன் பயன்படுத்துகின்ற கருவி உபகரணங்கள் வெவ்வேறாக இருப்பது போல ஆத்மாவும், அந்தக்கரணமும் வெவ்வேறாக இருக்கிறது.
31/110
காரண பிரபஞ்சமே நம்முடைய காரண சரீரத்திற்கு காரணமாக இருக்கிறது.  இந்த காரண பிரபஞ்சமே மாயா என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனின் சக்தியாக இருக்கின்ற இந்த மாயையே ஜகத்திற்கும், ஸ்தூல சரீரத்திற்கும் காரணமாக இருக்கிறது. காரண சரீரம் அவ்யக்தம் என்ற பெயரை உடையது. அதாவது வெளித்தோற்றத்திற்கு வராதது என்ற பெயருடையது. மாயை  ஈஸ்வரனுடைய சக்தியாக இருக்கிறது. இது ஆவரணம், விக்ஷேபம் என்ற இருபெரும் சக்திகளை உடையது.  இந்த இரண்டு சக்திகளினால் நம்மால் ஆத்மாவை உணர்ந்து கொள்ள முடியவில்லை. மாயையின் ஆதியந்தத்தை கூறமுடியாது.  இது ஆவரண சக்தியை குறிக்கின்ற அறியாமையுடன் இருத்தலாகவும், மூன்று குணங்களின் ஸ்வரூபமானதாகவும் இருக்கிறது.  தன்னுடைய காரியங்களைக் காட்டிலும் மேலானது, அதிபுத்திசாலிகளால் மட்டும் அதன் காரியங்களிலிருந்து ஊகிக்க முடியும். மாயைதான் இந்த அனைத்து உலகத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
32/111
எதையாவது இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமென்றால் அது எப்போதும் இருந்து கொண்டு இருக்க வேண்டும். எந்தக் காலத்திலும் இல்லாமல் போகக்கூடாது. இந்த மாயை ஆத்ம ஞானம் வந்தவுடன் இல்லாமல் போய்விடுவதால் இது இருக்கிற வஸ்துவாகவும் இல்லை, இல்லாத வஸ்துவாகவும் இல்லை. இந்தத் தன்மையையே மித்யா என்று அழைக்கப்படுகிறது. மாயை இருக்கிற வஸ்துவாகவும் இல்லை, இல்லாததாகவும் இல்லை. இரண்டுவிதமான ஸ்வபாவமுள்ளதாகவும் இல்லை. மேலும் பிரம்மத்திற்கு வேறாகவோ, வேறல்லதாகவோ, இருவித தன்மையும் உடையதாகவோ கூறமுடியாது.  இதற்கு அவயவங்கள் உள்ளது என்றோ, அவயவங்கள் அற்றது என்ற கூறமுடியாது. அவயவங்கள் உள்ளதாகவும், இல்லாததாகவும் ஒரே வஸ்து இருக்க முடியாததனால் இருவித தன்மைகள் உடையது என்றும் கூறமுடியாது. இது மிகப்பெரிய ஆச்சரியமான வஸ்து. இவ்விதமானது என்று எடுத்துச் சொல்ல முடியாத ஸ்வரூபத்தை உடையது.
33/122
இந்த மாயை வெளித்தோற்றத்திற்கு வராததும், மூன்று குணங்களுடன் கூடியதாகவும் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இதுதான் ஆத்மாவிற்கு காரண சரீரம் என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு தனிப்பட்ட அனுபவம், தனிப்பட்ட நிலை என்று கூறுவது ஆழ்ந்த உறக்கம். இந்த நிலையில் அனைத்து இந்திரியங்களும், புத்தி, மனமும் அதில் உள்ள எண்ணங்களும் ஆத்மாவில் லயம் அடைந்து இருக்கின்றன. 
34/126
ஆத்மா என்பது எது என்ற கேள்விக்கு இனி பதில் சொல்லப்படுகிறது.
இதுவரை அனாத்மாவை பற்றி சொல்லப்பட்டது அடுத்து மனிதன் எதை நன்கு அறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைந்து, விடுபட்டவனாக பிரம்மத்தை அடைவானோ. அந்த மேலான பிரம்மத்தினுடைய ஸ்வரூபத்தை தெளிவாக, விரிவாக சொல்லுகிறேன்.
35/127
ஏதோவொரு தத்துவம் இருக்கிறது. அது தானாகவே தனித்து இருக்கிறது. அதன் இருத்தலுக்கு எதையும் சார்ந்து இருப்பதில்லை. எப்பொழுதும் "நான்" என்கின்ற எண்ணத்திற்கு ஆதாரமாக, மூன்று அவஸ்தைகளிலும் சாட்சியாக இருக்கின்றது. ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்டும் இருக்கிறது.
36/128
எது விழிப்பு, கனவு, ஆழ்உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ள அனைத்தையும், கனவு, விழிப்பு நிலைகளின் போது மனம், புத்தி ஆகியவைகளையும் அதிலுள்ள எண்ணங்களையும், அவைகளின் இருப்பையும், ஆழ்ந்த உறக்கத்தில் மனம், புத்தி ஆதியவைகள் லயம் அடைந்து இருக்கின்ற நிலையும் "நான்" என்று அறிகிறதோ அதுவே ஆத்மா.  இந்த ஞானஸ்வரூபமான ஆத்மா எல்லாவற்றையும் அறிகின்றது. ஆனால் தான் மட்டும் வேறு எதனாலும் அறியப்படக் கூடியதாக இல்லை.  இது எல்லாவற்றையும் வியாபித்துக் கொண்டிருக்கும். ஆனால் தான் மட்டும் எதனாலும் வியாபிக்கப்படாமல் இருக்கிறது.  இது எல்லா பதார்த்தங்களையும் பிரகாசிக்கின்றது ஆனால் தான் மட்டும் எதனாலும் பிரகாசப்படுத்தபடுவதில்லை.
37/129
எது தானே எல்லாவற்றையும் பார்க்கிறதோ, ஆனால் அதை எதுவும் பார்ப்பது கிடையாதோ.  எது புத்தி, மனம், புலன்கள், பிராணன்கள், சரீரங்கள் முதலானவைகளை அறிவுள்ளது போல செயல்பட வைக்கிறதோ, அதை அவைகளில் யாதொன்றும் அறிவுடையதாக செய்ய முடியாதோ அதுவே பரமாத்மா.
38/137
காரிய காரணத்திற்கு வேறுபட்டதாகவும், தூய்மையான அறிவு ஸ்வரூபமான உள்ளதாகவும், வெளித்தோற்றத்திற்கு வந்ததும், வராததுமாக உள்ளதும், அனைத்தையும் பிரகாசித்துக் கொண்டு தான் எவ்விதத்திலும் காரண, காரியமுமில்லாமல் இருந்து கொண்டு, எவ்வித குணங்களுமில்லாமல் இருந்து கொண்டும் இருக்கின்ற ஒன்று, ஜாக்ரத் முதலிய அவஸ்கைகளில் "நான்","நான்" என்று புத்திக்கு சாட்சி ரூபமாக நன்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதுவே ஆத்மாவாகும்.
39/139
பந்தம் என்பது எது?
மனிதனுக்கு இந்த அனாத்மாவிடத்தில் நான் என்கின்ற எண்ணம்தான் பந்தம் என்று கூறப்படுகிறது.  இது ஆத்மாவைப் பற்றி அறிவில்லாததனால் அடையப்பட்டு இருக்கிறது.  பிறப்பு, இறப்பு துயரங்கள் இவைகளை அனுபவிப்பதற்காக அக்ஞானம் இருந்து கொண்டு இருக்கிறது, உடலில் நான் என்ற புத்திதான் அக்ஞானமாகும். இதனால் இவன் பொய்யான இந்த சரீரத்தை உண்மையென்றும், நான் என்ற எண்ணத்துடனும் உணவைக் கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறான் நீரால் குளிப்பாட்டுகிறான், காப்பாற்றி கொண்டிருக்கிறான். எப்படி நூலால் கூடு கட்டும் பூச்சியானது தான் கட்டிய அந்தக் நூல் கூட்டுக்குள்ளே அகப்பட்டுக் கொண்டு வெளியில் வரமுடியாமல் மடிகிறதோ அது போல சப்தம், தொடுதல், போன்ற உலக விஷயங்களை தானே ஏற்படுத்திக் கொன்டு அவைகளாலேயே தன்னை பந்தப் படுத்திக் கொள்கிறான். பந்தம் அக்ஞானத்தினால் ஏற்பட்டது என்பதால் அது விலகினால்தான் பந்தமும் விலகும் என்று தெரிகிறது.  அக்ஞானம் ஞானத்தினால்தான் நீங்கும். ஆகவே ஞானத்தால்தான் அக்ஞான மூலமான பந்தம் நீங்கிவிடுகிறது. இதனால் பந்தம் பொய்யென்று தெரிகிறது
40/141
பந்தம் எவ்விதம் வருகிறது?
ஆத்மாவானது பூரணமாகவும், நிலையானதாகவும், இரண்டற்றதாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.  இதுவே எல்லாவற்றையும் வியாபித்துக் கொண்டும் இருக்கிறது.  இந்த தமோரூபமாக இருக்கின்ற ஆவரண சக்தியானது சூரிய பிம்பத்தை பூமி, சந்திரன் மறைப்பது போல ஆத்மாவை நன்கு மறைத்துக் கொண்டிருக்கிறது.
41/142
தூய்மையான, அறிவு ஸ்வரூபமான தன்னுடைய ஆத்ம ஸ்வரூபம் மறைக்கப்பட்டவுடன் மனிதன் ஆத்மாவல்லாததை மோகத்தினால் நான் என்று எண்ணுகிறான். அதன் பிறகு ரஜோ குணத்தின் உறுதியுள்ள விக்ஷேபம் என்ற பெயருடைய சக்தியானது இந்த புருஷனை ஆசை, கோபம் முதலானவைகள் பந்தப்படுத்தும் குணங்களால் மிகவும் துயரப்படுத்துகிறது
42/146
இந்த இரண்டு சக்திகளினால்தான் மனிதனுக்கு பந்தம் வந்திருக்கிறது.  இவன் இவைகளால் விசேஷமான மோகத்தை அடைந்து சரீரத்தை  ஆத்மாவாக நினைத்து மயங்கி இருக்கிறான். அலைந்து கொண்டு இருக்கிறான்.
43/147
சம்சாரமான மரத்திற்கு அக்ஞானம்தான் விதை, தேகம்தான் ஆத்மாவென்கின்ற எண்ணம்தான் முளை, ஆசைதான் துளிர் உடலின் மீது வைக்கும் பற்றினால்தான் ஆசையே எழுகின்றது. கர்மபலன்களானது மரம் வளர உதவும் நீரைப்போன்றது. உடலோடு அபிமானம் வைப்பதனால் வருகின்ற ஆசையினால் தூண்டப்பட்டு செய்யும் செயல்களினால் வரும் பாவ-புண்ணியங்கள் தான் நம்மை செயலில் ஈடுபடுத்துகின்றன. இந்த ஸ்தூல சரீரம் மரத்தின் நடுபகுதிக்கு ஒப்பிடப்படுகிறது.  மரத்தின் கிளைகளானது உடலின் பிராண சக்திகளைக் குறிக்கின்றது. கிளைகளின் நுனிகள் புலன்களின் கூட்டத்தை குறிக்கின்றது.  மலர்களானது விதவிதமான விஷயங்களான சப்தம், தொடுதல் போன்ற இன்பம் தரும் விஷயங்களுக்கு ஒப்பிடப்படுகிறது. பழமானது பலவிதமான கர்மாக்களால் ஏற்படுகின்ற துக்கங்களுக்கு ஒப்பிடப்படுகிறது. விஷய சுகங்களும், உண்மையில் ஏற்படுவதற்கு முன்பும், இருக்கும்போதும், தீர்ந்த பின்பும், துன்பத்தையே கொடுப்பதால் அவைகளையும் துக்க ஸ்வரூபமாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரத்தில் பழுக்கும் பழங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பறவைப் போன்று ஜீவன் இருக்கின்றான்.
44/150
வேதம்தான் பிரமாணம் என்ற ஒரே தீர்மானமான எண்ணமுள்ளவனுக்கு தன்னுடைய கடமையில் முழுமனதோடு ஈடுபடுவது நிறைவேறும்.  இவனுக்கு அதனாலேதான் மனம் நன்கு தெளிவடையும், தூய்மையடையும்.  தூய்மையான மனதை அடைந்தவன் ஞானயோக வழியை பின்பற்றினால் உத்தமமான பரமாத்மாவைப் பற்றிய அறிவை அடைந்துவிடுவான். இந்த ஆத்மா ஞானத்தினால் சம்சார்மும் அதற்கு காரணமான அக்ஞானமும் நாசமடைந்து விடும்.
45/155
ஆத்மாவை, அனாத்மாவை பிரித்தறியும் உபாயம் எது?
அன்னமய கோசம் (ஸ்தூல உடல்), பிராணமய கோசம், மனோமய கோசம், விக்ஞானமய கோசம் (சூட்சும உடல்), ஆனந்தமய கோசம் (காரண சரீரம்) என்கின்ற இந்து ஐந்து விதமான மறைப்புக்களால் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றோம். இந்த மறைப்புக்களை ஒவ்வொன்றாக நீக்கி ஆத்மாவை உணரவேண்டும்.

முஞ்சம் என்கின்ற புல்லில் இருந்து அதன் நடுவில் இருக்கும் இஷீணம் என்ற தண்டை உருவி எடுப்பது போல எதனோடும் சேர்ந்திருக்காததாகவும், மிகவும் அருகில் இருக்கின்றதாகவும், நமக்கு உள்ளே இருப்பதாகவும், செயலற்றதாகவும் உள்ள ஆத்மாவை பார்க்கக்கூடிய அனாத்மாக்களை மூன்று உடலிலிருந்து தனியாகப் பிரித்தறிந்து அவைகளை அந்த ஆத்மாவிடத்திலேயே லயமடையச் செய்து அந்த ஆத்ம ஸ்வரூபமாகவே எவனொருவன் நிலைத்து விடுகிறானோ அவன் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைந்து முக்தனாகிறான்.
46/156
அன்னமய கோசமானது இந்த ஸ்தூல உடல். அன்னத்தினால், பெற்றோர்கள் சாப்பிட்ட அன்னத்தின் ரசமாகிய சுக்லசோணிதத்தினால் உண்டானது. அன்னத்தினால் அல்லவா ஜீவித்து இருக்கிறது. அன்னம் இல்லையென்றால் அது நாசத்தை அடைந்து விடுகிறது.  உள்தோல், வெளிதோல், மாமிசம், ரத்தம், எலும்பு, மலம் இவைகளின் கூட்டமாக இருக்கிறது.  இந்த சரீரம் நித்யமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கின்ற ஆத்மாவாக இருப்பதற்கு யோக்கியதை அற்றது. சரீரம் அநித்யமாக இருப்பதுடன், பலவாகவும், அறிவற்றதாகவும், அறியப்படும் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், எல்லாவற்றையும் அறியும் தன்மையுள்ளதும், இரண்டற்றதுமான ஆத்மாவாக இருக்க முடியாது.
47/157
இந்த சரீரம் பிறப்பதற்கு முன்னும், இறந்த பின்னும் இருப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இப்படித்தான் இருக்குமென்று உறுதியாக சொல்ல முடியாத இயல்புடையது.  பலவிதமானதாக இருக்கின்றது.  ஜடமாகவும் இருக்கின்றது. பானையைப் போல அனுபவிக்கக்கூடியதாகவும், பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது.  அனாத்மாவான சரீரத்தின் மாற்றங்களை அறிந்து கொண்டிருக்கின்ற ஆத்மாவாக இது எப்படி இருக்க முடியும். பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருப்பது சரீரம். அவைகளில் ஏதேனுமொன்று குறைந்தாலும் ஆத்மாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.
48/167
இந்த பிராணன்கள் ஐந்து கர்மேந்திரியங்களுடன் சேர்ந்து பிராணமயமென்ற கோசமாகிறது.  பசி, தாகம் இரண்டும் இதை சேர்ந்தது ஆத்மாவை சேர்ந்தது கிடையாது.  ஆனால் பிராணமய கோசம் ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை மறைத்து அதனிடம் பசி, தாகம் இவைகளை ஏற்றி நான் பசி, தாகத்தினால் வருந்துகிறேன், துன்புறுகிறேன் என்ற எண்ணத்தை உண்டு பண்ணுகிறது. எதனாலே அன்னமய கோசமானது உடலின் தன்மைகளை உடையதாக ஆகியிருக்கிறதோ அதனாலே அது எல்லாவிதமான செயல்களில் ஈடுபடுகிறது.
49/168
இந்த காற்றின் மாற்றமான பிராணமய கோசமானது ஆத்மாவாக இல்லவேயில்லை.  இது காற்றைப்போல உள்ளேயும், வெளியேயும் போவதும், வருவதுமாக இருக்கிறது.  எந்தக் காரணத்தினாலும் எதையுமே எக்காலத்திலும் வேண்டுவதையும், வேண்டாததையும் அறிவதில்லை. எப்பொழுதும் தன்னையோ, வேறெதையோ சார்ந்திருக்கிறது.  எனவே இது ஆத்மாவாக இருக்க முடியாது.
50/16
மனமானது ஞானேந்திரியங்களுடன் சேர்ந்து மனோமய கோசமாக இருக்கிறது. "நான்", "என்னுடையது" என்று உலகத்திலுள்ள பொருட்களை பிரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.  நாம, ரூப முதலிய வேற்றுமைகளை புரிந்து கொள்ளும் தன்மையுடையது.  மிகவும் பலமானது, இது தனக்கு முந்தைய கோசங்களை வியாபித்து, கட்டுப்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.
51/185
மனோமய கோசமும் உத்தமமான ஆத்மாவாக இருக்க முடியாது.  இது தோற்றமும், முடிவும் கொண்டதாக இருப்பதாலும், மாறுதலுக்கு உட்பட்டதாக இருப்பதாலும், துக்க ஸ்வரூபமாக இருப்பதாலும், அறியப்படும் தன்மை உடையதாக இருப்பதாலும் இது ஆத்மாவாக இருக்க முடியாது. அறிகிறவன் அறியப்படும் விஷயரூபமாக பார்க்கப்படுவது இல்லை. மனம் அறியப்படும் பொருளாக இருப்பதால் அறிகிறவனாக இருக்க முடியாது எனவே இது ஆத்மாவல்ல.
52/186
தீர்மானம் செய்கின்ற செயலை உடைய புத்தியானது ஐந்து ஞானேந்திரியங்களுடன் சேர்ந்து விக்ஞானமய கோசமாகின்றது. இது ஒன்றை நிச்சயம் செய்கின்ற எண்ணங்கள் ரூபமானது. நான் செய்கிறேன் என்ற லட்சணத்தை உடையதாக இருக்கிறது.  இதுவே ஜீவனுக்கு சம்சாரத்தை கொடுத்து கொண்டிருக்கிறது. ஜீவனுடைய துயரங்களுக்கு காரணமாக இருக்கின்றது.
53/187
விக்ஞானமய கோசம் என்கின்ற பெயருடைய இந்த கோசமானது எப்பொழுதும் உள்ளேயே இருக்கின்ற சைதன்யத்தின் பிரதிபிம்பத்தினுடைய சக்தியோடு கூடியது. காரண சரீரமான ஆனந்தமய கோசத்தின் மாறுபாடான அறிவை அடைகின்ற செயலையும், அறிவையும் உடையது.  உடலையும், புலன்களையும் தொடர்ந்து "நான்" என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது.
54/188
நான் என்று அபிமானிக்கும் இயல்பானது ஜீவனுடன் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  எல்லா செயல்களையும் நிர்வாகம் செய்து கொண்டிருப்பவனாகவும், பாவ, புண்ணியங்களை தரக்கூடிய எல்லா செயல்களையும் கர்மவாஸனைகளின் அடிப்படையில் செய்து கொண்டு இருக்கிறான். பாவ, புண்ணியங்களால் வருகின்ற பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.
55/189
கர்ம பலன்களால் விதவிதமான பிறவிகளை அடைந்து அனுபவிக்கிறான்.  அவ்விதம் அனுபவிப்பதற்காக பாவ கர்மபலனாக நரகம், தாவர, விலங்கு போன்ற கீழான பிறவிகளுக்கோ அல்லது புண்ணிய பலனாக மேலான சொர்க்கம், தேவர்கள் போன்ற பிறவிகளுக்கோ வருகிறான் அல்லது போகிறான். இந்த விக்ஞானமய கோசத்திற்குத்தான் விழிப்பு, கனவு, ஆழ்வுறக்கம் முதலிய நிலைகளில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.  மேலும் தேகம் முதலானவைகளில் வர்ணாசிரம தர்மங்கள், கர்மாக்கள், குணங்கள் இவைகளில் அபிமானமும் என்னைச் சேர்ந்தது என்று எப்பொழுதும் இருந்து வருகிறது.
56/208
ஆகையால் இந்த விக்ஞானமய கோசம் என்ற பெயருடைய கோசமானது மேலான ஆத்மாவல்ல.  இது ஜடமாக இருப்பதாலும், வரையறுக்கப்படகூடியதாக இருப்பதாலும், எப்பொழுதும் இருக்கின்ற தன்மையற்றதாக இருப்பதாலும், அறியப்படுகின்றதாக இருப்பதாலும், நிலையற்றதாக இருப்பதாலும், நித்யமாக இருக்கின்ற ஆத்மாவாக இருக்க முடியாது.
57/209
ஆத்மாவின் ஸ்வரூபமான ஆனந்தத்தின் பிரதிபிம்பத்துடன் சேர்ந்த ஸ்வரூபத்துடன் கூடியதாகவும், அறியாமையிலிருந்து உண்டானதாகவும், பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய அம்சங்களுடன் கூடியதாகவும் இருக்கின்ற தனக்கு இஷ்டமான பொருட்கள் கிடைப்பதனால் ஏற்படுவதாக உள்ள எண்ணங்களே ஆனந்தமய கோசமாகும். புண்ணியம் செய்தவர்களுக்கு அதன் பலனாக உள்ள அனுபவம் ஏற்படும்போது தானே ஆனந்த ரூபமாக  பிரகாசிக்கிறது. எந்த சமயத்தில் சரீரம் எடுத்திருக்கும் அனைவரும் எந்தவித முயற்சியும் இல்லாமலே நன்றாக மகிழ்ச்சியடைகின்றனரோ அப்போது ஆனந்தமய கோசத்தில் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
58/210
ஆனந்தமய கோசமானது ஆழ்ந்த தூக்கத்தில்தான் மிகவும் நன்றாக விளங்கி கொண்டு இருக்கும். கனவிலும், விழிப்பு நிலையிலும் விருப்பமான பொருட்களை பார்ப்பது, அடைவது, அனுபவிப்பது போன்றவைகளால் கொஞ்சமாகத்தான் விளங்கிக் கொண்டிருக்கும்.
59/211
ஆனந்தமய கோசமானது உபாதியுடன் கூடியிருப்பதாலும், நிபந்தனையுடன் கூடியிருக்கின்ற காரணத்தினாலும் மேலான பரமாத்மா ஆகாது. நெருப்பின் நிமித்தமாக நீரில் உஷ்ணத்தை பார்க்கிறோம். ஆனால் நெருப்பு உஷ்ணமாக இருப்பது அதன் ஸ்வரூபம். மனதில் அனுபவிக்கின்ற பிரதிபிம்பானந்தம் அதனுடைய ஸ்வரூபம் அல்ல. இஷ்ட வஸ்துவை பார்க்கின்ற நிமித்தமாக இருப்பதால் வருவது. பார்த்தல், அடைதல், அனுபவித்தல் போன்ற நிமித்தங்களை சார்ந்திருப்பதாலும், காரண சரீரத்தினுடைய மாற்றமாக இருப்பதாலும், புண்ணிய கர்மங்களின் காரியமாக இருக்கும் தன்மையுடையதாக இருக்கின்ற காரணத்தாலும் பிரியம், மோதம், பிரமோதம் முதலான விகாரங்களின் சேர்க்கையாலும் ஆனந்தமய கோசம் ஆத்மாவாக இருக்க முடியாது.
60/212
ஐந்து கோசங்களையும் மேற்சொன்ன காரணங்களினால் அறிவு பூர்வமாக உண்மையாக இல்லையென்று நீக்கம் செய்துவிட்டால் அந்த மறுப்புக்கு ஆதாரமாக இருக்கின்றதும் ஞான ஸ்வரூபமாக இருக்கின்றதும், எல்லாவற்றையும் தான் சம்பந்தப்படாமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் மீதமிருக்கும். பொதுவாக "நான்","நான்" என்று நினைக்கப்படுகின்ற ஐந்து கோசங்களையும் "நானல்ல" என்று நினைத்து விட்டால் "நான்" என்று சொல்வதற்கு மீதமிருப்பது ஆத்மா மட்டும்தான்.
61/213
இந்த ஆத்மா தானே பிரகாசமாகவும் ஐந்து கோசங்களுக்கு வேறுபட்டதாகவும் விழிப்பு, கனவு, ஆழ்வுறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் சாட்சியாக இருக்கின்றது. எந்தவிதமான மாறுதலற்றதாகவும், தூய்மையானதாகவும், எப்பொழுதும் ஆனந்தஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  இத்தகைய ஆத்மாவை அறிவுள்ளவரால் தன்னுடைய ஸ்வரூபமாக நன்கு அறியத்தக்கது,
62//214
சீடனின் சந்தேக கேள்வி 
இந்த ஐந்து கோசங்களும் உண்மையில்லையென்று மறுக்கப்பட்டுவிட்டால், நீக்கப்பட்டு விட்டால், எல்லாவற்றினுடைய இல்லாமைக்கு பிறகு தனியாக வேறொன்றுமேயில்லாததை தவிர எதையுமே நான் பார்க்கவில்லை. குருபகவானே! அப்படியானால் அறிவுள்ளவனால் தன்னுடைய ஸ்வரூபமாக தானாக இங்கே அறியத்தக்கதான பொருள் எதுதான் இருக்கிறது.
63,64/215,216
சீடனே!  ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்வதில் திறமையுள்ளவனாக இருக்கிறாய். அந்த நானென்ற அகங்காரம் முதலான விகாரங்களும் அதன்பிறகு அவைகளின் இல்லாமையும் யாரால் அனுபவிக்கப்படுகின்றனவோ, எந்தவொன்று தான் மட்டும் எதனாலேயும் அனுபவிக்கப்படுகிறதாக இல்லையோ, அந்த அறிகின்றவரை ஆத்மாவென்று மிகமிக நுண்ணியமான, சூட்சுமமான புத்தியினால் அறிந்து கொள்.
65/219
எந்த இது விழிப்பு, கனவு, ஆழ்வுறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் தொடர்ந்து நான், நான் என்று நமக்குள்ளே அருகிலிருக்கும் ஸ்வரூபமாக வெகு தெளிவாக நன்கு விளங்கிக் கொண்டு இருக்கின்றதும், பலவிதமான ரூபங்களையும், மாறுதல்களையும் அடையக்கூடிய இவைகளை அதாவது அகங்காரம், புத்தி முதலியவற்றை ஒன்றாக இருந்து கொண்டு தான் எந்தவிதமான மாறுதலையும் அடையாமல் பிரகாசித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு நித்யமாகவும், பூரணமாகவும், ஆனந்தமாகவும், அறிவு தன்மையுடன் இருதயத்தில், மனதிற்குள் விளங்கிக் கொண்டிருக்கிறதோ அத்தகையதை ஆத்மா என்று அறிந்து கொள். “நான்” என்ற சொல்லின் உண்மையான பொருளாக அறிந்து கொள்.
66/225
எதனால் இரண்டாவதற்ற ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தை பிரம்மமாக அறிந்து அந்த பிரம்மமாகவே ஆகிவிடுகின்றானோ, அவன் அந்த பிரமத்திலிருந்து வேறுபடாக தன்மையை நன்கு அறிந்து அனுபவிப்பதே சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு காரணமாக இருக்கிறது.
67/227
பிரம்மன் என்பது என்றும் இருப்பது, பூரணமானது, அறிவு ஸ்வரூபமானது, எதனாலும் வரையறுக்கப்படாதது, தூய்மையானது, மேலானது, தானே விளங்கிக் கொண்டிருப்பது, இது பிரகாசிப்பதற்கு வேறெந்த பிரமாணத்தையும் சார்ந்திருக்கவில்லை. பிரம்மமும், மாயையும் சேர்ந்திருப்பதையே ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. மாயை ஜடமானது முக்குணத்தை லட்சணமாக கொண்டிருக்கிறது. பிரம்மத்தை சார்ந்திருக்கிறது. மித்யாவாக இருக்கிறது. எப்பொழுதும் ஒரேயொரு ஆனந்த ரஸ ஸ்வரூபமாக இருப்பது, ஆத்மாவிடமிருந்து வேறுபடாது, நிலையாக என்று இருந்து கொண்டிருக்கிறது.
68/232
ஸத்தாயிருக்கின்ற பிரம்மத்திடமிருந்து தோன்றிய அனைத்தும் எப்பொழுதும் ஸத்தாக மட்டும்தான் இருக்கிறது. இது (காரியமான ஜகத் முதலானவைகள்) பிரம்மத்திற்கும் வேறாக இருப்பதில்லை. யாராவது வேறாக இருக்கிறது என்று சொன்னால் அது அவரிடமுள்ள அறியாமையை காட்டுகிறது, அறியாமை அவரை விட்டு சென்றுவிடவில்லை என்று தெரிகிறது. அவன் இவ்வாறு சொல்வது தூங்கிக்கொண்டிருப்பவன் கனவில் பிதற்றுவது போல இருக்கிறது.
69/233
பிரம்மம்தான் இந்த ஜகத் என்று அதர்வாவிற்கு பிரம்மதேவனால் உபதேசிக்கப்பட்ட உபநிஷத்திலுள்ள மிகவும் மேலான வார்த்தை சொல்கிறது, இந்த உலகம் பிரம்மன் மட்டும்தான். அதில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ற ஒன்றிற்கு  வேறுபட்டதாக இல்லை.
70/234
இந்த உலகமானது உண்மையாக பிரம்மத்தை போல எப்பொழுதும் இருக்கின்ற வஸ்துவாக இருக்குமேயானால் ஆத்மாவிற்கு அனந்தமாக இருக்கும் தன்மை, பூரணமாக இருக்கும் தன்மை  இல்லாமால் போய்விடும். இடம், காலம், பொருட்கள் போன்ற எதனாலும் வரையறுக்கப்படாத தன்மையை பிரம்மன் இழந்துவிடும். வேதத்திற்கு பிரமாணம் இல்லாத தன்மை வந்துவிடும். வேதம் பிரம்மத்தை அனந்தம் என்று உபதேசிக்கிறது, ஆனால் ஜகத் உண்மையாகும் போது இந்த உபதேசம் பொய்யாகி விடுகிறது. அதனால் வேதத்திற்கு பிரமாணத்தன்மை போய்விடும். அத்துடன் பகவானைக் கூட உண்மையில்லாததை சொல்கிறவர் என்று நினைக்ககூடிய நிலை ஏற்படும். 
71/235
பதார்த்தங்களுடைய வாஸ்தவமான தன்மை நன்கு அறிந்திருக்கும் ஶ்ரீகிருஷ்ணபகவான் இவ்வாறு கூறியிருக்கிறார், "தோன்றியிருக்கின்ற பொருட்களில் நான் இருப்பது இல்லை, அவைகளும் என்னிடத்தில் இல்லை" உதாரணமாக களிமண்ணிடத்தில் அதிலிருந்து உருவாக்கப்பட்ட பானைகள் இல்லை. அதேசமயம் களிமண் பானைகளில் இருக்கிறது.. அதாவது களிமண் பானையை சார்ந்ததில்லை, பானை களிமண்ணை சார்ந்திருக்கிறது. பானை என்பது வெறும் நாம-ரூபம்தான் எனவே இது களிமண்ணிடத்தில் இல்லை.
72/236
ஜகத்தானது சத்யமாக இருக்குமேயானால் நல்ல தூக்கத்தில் அனுபவிக்கப்பட்டிருக்க வேண்டுமே, அது காணப்படவேயில்லை. அந்தக் காரணத்தினால் அது உண்மையானது அல்ல, மித்யாவாகும். ஜாக்ரத் காலத்தில் தோன்றாமல் கனவு காணும் காலத்தில் மட்டும் தோன்றுகிறது. கனவு எப்படி பொய்யோ அதேபோல நல்ல தூக்கத்தில் தோன்றாமல் ஜாக்ரத் நிலையில் மட்டும் தோன்றும் உலகம் பொய்தான், மித்யாதான்.
73/237
ஆகையால் ஜகத் என்பது பிரம்மத்தைத் தவிர தனியாக கிடையாது, தனியாக காட்சியளிப்பது கயிற்றில் தோன்றும் பாம்பு போல் பொய்தான். ஒன்றில் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருளுக்கு இருத்தல் தன்மை கிடையாது, பயன்படும் தன்மையிருக்கும் தன்மை கிடையாது. அதிஷ்டானமாக இருக்கின்றதுதான் மதிமயக்கத்தால் அவ்விதம் ஏற்றி வைக்கப்பட்ட பொருள் தோன்றிக் கொண்டிருக்கிறது.
74/243
தத், த்வம்  என்ற இரண்டு சொற்களால் சொல்லப்படுகின்ற பிரம்மத்திற்கும், ஆத்மாவிற்கும், இதுவரை சொல்லப்பட்ட விதமாக நன்கு விசாரம் செய்யப்பட்டு அவ்விரண்டிற்கும் இடையே உள்ள ஒன்றாக இருத்தல் எதுவோ அந்த ஒன்றாக இருக்கும் தன்மைதான் உபநிஷத்தினால் அதுவாக நீ இருக்கிறாய் என்று மிகத் தெளிவாக பலதடவை எடுத்துச் சொல்கிறது.
75/244
ஜீவனுக்கு, ஈஸ்வரனுக்கும் இடையே உள்ள ஒன்றாயிருக்கும் தன்மை லட்சியார்த்தத்தின் அடிப்படையில்தான் கூறப்பட்டிருக்கிறது. வாச்யார்த்தத்தின் அடிப்படையில் ஐக்கியம் சொல்லப்படவில்லை. உதாரணமாக அவன் சிங்கம் என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தத்தின் அடிப்படையில் ஐக்கியமில்லை, லட்சியார்த்தமான அவன் தைரியசாலி என்ற குணத்தின் அடிப்படையில்தான் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுவது போல ஜீவனும், ஈஸ்வரனும் ஒருவருக்கொருவர் முரண்பாடுடைய தன்மையை உடையவர்களாக இருந்தாலும் லட்சியார்த்தத்தின் அடிப்படையில் ஒன்றாக இருக்கும் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். மின்மினிபூச்சியிடத்திலும் வெளிச்சம் இருக்கிறது. சூரியனிடத்திலும் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் இருவருக்குமிடையே வேறுபாடு இருக்கிறது. அரசனுக்கும், காவலாளிக்கும் இடையே உள்ள வேற்றுமை போலவும், கிணற்றுக்கும், கடலுக்கும் இடையே உள்ள வேற்றுமையை போலவும், அணுவுக்கும், மேரு மலைக்கும் இடையேயுள்ள வேற்றுமை போலவும், ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே வேற்றுமை வாச்யார்த்தத்தில் இருக்கிறது. எனவே வாச்யார்த்தத்தின் மூலம் ஐக்கியம் சம்பவிக்காது.
76/245
இவ்விரண்டிற்கும் இடையே உள்ள இந்த வேற்றுமை உபாதிகளினால் காணப்படுகிறது. எதுவும் உண்மையில் அவைகளினுடைய தன்மை கிடையாது. அதனால் இரண்டிற்கும் இடையே வேற்றுமைகள் எதுவும் கிடையாது.. ஈஸ்வரனுடைய இந்த உபாதி மாயையாகும். மகத் தத்துவம் முதலியவைகளுக்கு காரணமாக இந்த மாயை இருக்கிறது. ஜீவனுக்கு உபாதியாக இருப்பது மாயையின் காரியமான ஐந்து கோசங்கள் என்பதை கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.
77/246
ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே உள்ள இரண்டு உபாதிகளை அறிவினால் நன்றாக நீக்கி விட்டால் ஈஸ்வரன் என்பதும் கிடையாது, ஜீவனும் கிடையாது.  வெறும் பிரம்மன் மட்டும்தான் எஞ்சி நிற்கும்.  அரசனிடம் உள்ள அரசாங்கத்தையும், காவலாளியிடமுள்ள வாள், கேடயத்தையும் நீக்கிவிட்டால் அரசனும், காவலாளியும் வெறும் மனிதர்கள்தான் எஞ்சியிருப்பார்கள்.
78/249
ஈஸ்வரன், ஜீவன் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வேறுபடாமல் ஒரே சுபாவத்துடன் இருக்கும் தன்மைதை உறுதிபடுத்துவதற்கு, நிலைநாட்டுவதற்கு உபாதிகளை முன்சொன்ன அந்தக்கரணத்தினாலேயே நீக்கி பார்க்க வேண்டிதாயிருப்பதால் அவ்விருவரும் லட்சணையார்த்தத்தினால்தான் நன்கு அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விட்ட லட்சணையும், விடாத லட்சணையும் இதை அறிந்து கொள்வதற்கு உதவாது.  இரண்டு சொற்களின் அர்த்தங்களும் நன்றாக புரியக் கூடியதாக இருப்பதற்கு விட்டும் விடாத லட்சணைதான் உதவி செய்யும்.
79/250
“அந்த தேவதத்தன்தான் இவன்” என்ற உதாரணத்தில் வேறுபடுகின்ற தன்மையுள்ள பகுதியை விலக்கிவிட்டு ஒன்றாயிருக்கும் தன்மையை எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அப்படியே அதுவாக நீ இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் இரண்டிலுமுள்ள வேறாக இருக்கும் தர்மங்களை விட்டுவிட்டு சைதன்யம் மட்டுமாகவே இருப்பதை நன்கு லட்சணையால் அறிந்து கொண்டு ஸத்வஸ்துவான ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் இடையே உள்ள வேறுபடாத தன்மையானது அறிவாளிகளால் அறியப்படுகிறது, ஞானிகளால் அனுபவிக்கப்படுகிறது,
80/251
இப்படியே பிரம்மத்திற்கும், ஆத்மாவிற்கும் ஐக்கியம், வேறுபடாத தன்மை நூற்றுக்கணக்கான மகாவாக்கியங்களில் சொல்லப்படுகிறது.
81/253
களிமண்ணால் உருவாகியிருக்கும் பானை முதலியதெல்லாம் எப்பொழுதும் எல்லாப் பக்கத்திலும் களிமண்ணாகத்தான் இருக்கிறது. அதுபோல ஸத்தாக இருக்கின்ற ஈஸ்வரனிடம் இருந்து தோன்றியுள்ள இந்த அனைத்து பிரபஞ்சமே ஸத் தன்மை உடையதாகவே இருக்கிறது. எந்தக் காரணத்தினால் ஸத்திற்கு வேறாக எதுவும் கிடையாதோ அதுவே சத்யமானதும், முக்காலத்திலும் இருக்கின்ற ஆத்மாவாகும். அது தானாக பிரகாசிக்கிறது, அதுவே  தூய்மையானதாகவும், இரண்டற்றதாகவும், மேலானதாகவும் இருக்கின்ற பிரம்மன், அந்தக் காரணத்தால் அதுவாகவே நீ இருக்கிறாய்.
82/254
உறக்கத்தில் காணும் கனவில் அறியப்படுகின்ற இடம், காலம், பொருட்கள், விஷயங்களை பார்க்கின்றவன் முதலானவைகள் எல்லாமே எப்படி பொய்யானதோ,அதேபோல இப்பொழுது விழிப்புநிலையிலும் அனுபவிக்கின்ற ஜகத்தானது பொய்யானது, மித்யாவானது. தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை அறியாத காரியமாக இருப்பதால் இடம், காலம், பொருட்கள் எல்லாம் தோன்றினாலும் பொய்யானதுதான். எந்தக் காரணத்தினால் இவ்விதமாக இந்த உடல், புலன்கள், பிராணன், அகங்காரம் முதலியவைகளுடன் கூடியதான அஸத் உண்மை இல்லையோ அந்தக்காரணத்தினால், மிகவும் சாந்தமானதாகவும், தூய்மையானதாகவும், இரண்டற்றதாகவும், மேலானதாகவும் இருக்கின்ற பிரம்மமாக (அதுவாக) நீ இருக்கிறாய்

83/ 429
உபாதிகளை நீக்கிவிட்ட பிறகுநீக்காத லட்சணங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கும் போது இவையிரண்டும் ஒன்றேதான் என்று புரிந்து கொள்ளலாம். வேற்றுமையற்றது என்ற அறிவானது அடையப்படும். அந்த எண்ணமானது அறிவு ஸ்வரூபமாக மட்டும் இருக்கிறது.  இந்த எண்ணம்தான் ஆத்மஞானம் என்று சொல்லப்படுகிறது.

நன்கு விசாரம் செய்து பார்த்து உபாதிகள் விலக்கப்பட்ட மகாவாக்கியத்தின் லட்சியார்த்தமான பிரம்மத்திற்கும், ஆத்மாவிற்கும் இரண்டும் சைதன்யம் என்ற முறையில் ஒன்றாக இருக்கும் தன்மையுடையது என்று புரிந்து கொள்ளும்போது எந்தவித வேற்றுமையில்லாத, சைதன்ய ஸ்வரூபத்தை மட்டும் உணர்ந்து கொண்டதை மனதில் எழுகின்ற எண்ணமே ஆத்மஞானம் என்று சொல்லப்படுகிறது. இந்த எண்ணமான ஆத்மஞானம் எப்பொழுதும் யாருக்கு இருக்குமோ அவர்தான் ஜீவன்முக்தன். வாழ்ந்து கொண்டிருக்கும்போது சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைந்தவர் என்று கருதப்படுகிறார்

84/430
யாருடைய ஆத்மஞானமானது நிலைத்து நிற்பதாக இருக்குமோ, யாருக்கு மனநிறைவானது தொடர்ந்து எல்லாகாலத்திலும் இருந்து கொண்டிருக்குமோ, யாருக்கு உலகமானது மறந்துவிட்டது போலவே இருக்குமோ அவர்தான் ஜீவன்முக்தன்.
85/433
நிழல்போல கூடவே இந்த உடல் இருக்கும்போதும் கூட அதில் நான் என்றோ, என்னுடையது என்றோ நினைக்காமலிருப்பது ஜீவன்முக்தனுடைய லட்சணமாகும். பிறருடைய சரீரத்தில் “நான்”, “என்னுடையது” என்ற அபிமானம் எப்படி இருப்பதில்லையோ அப்படியே நிழல்போல தன் கூடவே வந்து கொண்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் “நான், என்னுடையது” என்ற அபிமானம் ஜீவன்முக்தனுக்கு இருக்கவே இருக்காது.  ராக-துவேஷங்கள், வயோதிகம், மரணம் முதலான எல்லா மாற்றங்களுக்கும் ஸ்தூல தேகாபிமானமே மூல காரணமாக இருப்பதால் இந்த அபிமானம் இல்லை என்று கூறுவதன் மூலம் எவ்வித விகாரமும் இல்லை என்று எடுத்துக் காட்டப்பட்டது.
86/434
முன்பு நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பதும், இனி வரப்போவதை நினைக்காமல் இருப்பதும், இப்பொழுது நடந்து கொண்டிருப்பதிலும் கூட பற்றுதலில்லாமல் உதாசீனமாக இருப்பது இவைகளெல்லாம் ஜீவன்முக்தனுடைய லட்சணங்களாகும்.
87/435
பலவித நிறை, குறைகளுடன் இயல்பாக இருக்கக்கூடியதாக இருப்பதனாலே, சுபாவத்திலே வேறுபட்ட லட்சணத்தோடு கூடியதாக இருக்கும்.  இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் பார்வையோடிருப்பது ஜீவன்முக்தனுடைய லட்சணமாகும். நல்லது என்று எதையும் எடுத்துக் கொள்வதுமில்லை, கெட்டதென்று எதையுமே வெறுப்பதுமில்லை.
88/436
சமமான பார்வையென்பது எல்லோரிடத்திலும் சமமாக நடந்து கொள்ளும் சுபாவம். இது மனதளவிலே இருக்க வேண்டிய சமமான பாவனை.  விரும்பத்தக்கதோ, விரும்பத்தகாததோ வந்து சேரும்போது இந்த வேறுபாட்டை எண்ணிப்பார்க்காமல் இரண்டையும் சமமாக பாவிக்கும் தன்மையினால் இந்த இருவிதமான சந்தர்ப்பத்திலும் தன் மனதில் எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல் இருப்பது ஜீவன்முக்தனுடைய லட்சணம்.
89/442
இந்த சரீரம் நல்ல மனிதர்களால் பூஜிக்கப்பட்டாலும், தீயமனிதர்களால் அவமதிக்கப்பட்டலும் யாருக்கு இந்த இரண்டு நிலைகளிலும் ஒரேமாதிரியான மனநிலையிருக்கின்றதோ, ஒரேமாதிரியான உணர்ச்சியோடு இருக்கின்றானோ அவனே ஜீவன்முக்தன்.
90/444
பிரம்மத்தின் உண்மையான தன்மையை நன்கு அறிந்தவருக்கு, இந்த அறிவை அடைந்ததற்கு முன்பு இருந்தது போல சம்சாரம் (சுக-துக்க அனுபவம்) இருக்காது.  அப்படி இருந்ததேயானால் அவர் பிரம்ம ஞானத்தை அடைந்தவராக இருக்க மாட்டார். வெளிப்பார்வை உள்ளவராகவே இருப்பார், அதாவது வெளிவிஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவராகவே இருப்பார்.  ஞானிக்கு பிரபஞ்சம் பொய் என்ற திடமான அறிவு இருப்பதால் எதனிடத்திலும் அபிமானம் இருக்காது.  அதனால் சுகத்தில் ஆசையும், துக்கத்தில் பயமும், வருத்தமும் இருக்காது. இவைகள் இருந்தால் அவர் ஞானியல்ல.
91/449
கனவில் செய்த செயல்களானது விழித்துக் கொண்டபிறகு அவைகளுக்கு எந்தப் பலனையும் கொடுக்கின்ற சக்தியிருக்காது.  அதேபோல கோடிக்கணக்கான பிரம்ம கல்ப காலங்களில் சம்பாதித்து சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் கர்மபலன்களானது "நானே பிரம்மன்" என்ற அனுபவ அறிவை அடைந்ததனால் நன்கு லயத்தை அடைந்து விடுகிறது.
92/450
கனவு காணும் சமயத்தில் செய்யப்படுகின்ற பெரியதான பாவமோ, புண்ணியமோ தூங்கி எழுந்துகொண்டவனுக்கு சொர்க்கத்தை கொடுக்குமா, நரகத்தை கொடுக்குமா என்று கேட்டால் எதுவுமே எந்த பலனையும் கொடுக்காது என்பதைத்தான் நாம் அறிந்து இருக்கிறோம்.
93/451
ஞானி தன்னை எதனோடும் சம்பந்தமற்றவனாகவும், நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாதவனாகவும், உதாசீனனாகவும், பயனில் பற்றற்றவனாகவும் நன்கு அறிந்து கொண்ட பிறகு ஆகாசத்தைப் போல சிறிதளவும் ஒருபொழுதும் பின்னால் செய்யப்போகின்ற செயல்களினால் வரும் பலன்களால் பாதிக்கப்படமாட்டார்.
94/452
ஆகாசம் நாற்றத்தோடு சம்பந்தம் தோன்றுவதற்கு காரணமாக அந்தக் குடத்திலுள்ள மதுபானத்தினுடைய நாற்றத்தினால்தான், என்றாலும் அதனோடு ஒட்டிக்கொள்வதில்லை, சம்பந்தப்படுவதில்லை. ஆத்மாவும் மூன்று சரீர உபாதிகளுடன் சேர்ந்ததாக தோன்றினாலும் அந்த உபாதிகளின் தர்மங்களால் ஒட்டிக்கொள்ளப்படுவதில்லை, சம்பந்தப்படுவதில்லை.
95/453
ஞானம் உதயமாவதற்கு முன்னாலே ஆரம்பித்துவிட்ட பிராரப்த கர்மமானது ஞானம் வந்தாலும் அழிவதில்லை. எப்படி குறிவைத்து செலுத்தப்பட்ட அம்பானது குறியை தாக்கிவிட்டு நிற்குமே தவிர அதற்கிடையிலே அதை தடுத்து நிறுத்த முடியாது அதுபோல வெளிப்பட்ட பிராரப்தமானது பலனை கொடுத்துத்தான் நீங்கும் என்றிருப்பதால் ஞானத்தால் அது அழிவதில்லை..
96/454
புலியை கொல்ல வேண்டும் என்று நினைத்து அதை நோக்கி வேகமாக இழுத்துவிடப்பட்ட அம்பானது இடையில் குறி புலியாக இல்லாமல் பசு என்று தெரிந்து விட்டாலும் அம்பை தடுத்த நிறுத்த முடியாது. அது குறிவைத்து செலுத்திய இலக்கை வேகத்துடன் தாக்கிவிட்டுத்தான் நிற்கும்.
97/456
அனாத்மாவான மூன்று உடல்களை தானாக எண்ணிக் கொள்ளுதல் என்பது விலகி பிரம்ம  ஸ்வரூபமாகவே மட்டும் அதனிடத்தில் நிலைத்திருக்கின்ற ஞானிக்கு பிராரப்த கர்மமானது இருக்கின்றது என்பது பொருந்தாது.  விழித்துக் கொண்டிருப்பவனுக்கு கனவில் கண்ட பொருட்களின் சம்பந்தம் உண்டென்று சொல்வதைப் போல இது இருக்கின்றது.
98/461
ஆத்மாவானது பிறப்பற்றது, நிலையானது என்று வேதாந்தம் அல்லவா சொல்கிறது. வேதாந்த சாஸ்திரம் நிறைவேறக்கூடிய உண்மையான உபதேசத்தைத்தான் சொல்கிறது. இந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஞானிக்கு பிராரப்தத்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?
99/463
உடலுக்கும் கூட பிராரப்த கர்மம் உண்டென்று கற்பனை செய்வது மனமயக்கத்தினால்தான் இருக்க முடியும். ஒன்றின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட மற்றொன்றிற்கு இருத்தல் என்ற தன்மை கிடையாது.  இல்லாத தன்மையுடன் உள்ளதற்கு பிறப்பு, இறப்பு எப்படி ஏற்பட முடியும். இல்லாததற்கு எப்படி பிராரப்தம் இருக்க முடியும்?
100/464
ஆத்மஞானத்தால் அக்ஞானமும் அதன் காரியங்களும் அழிந்து விடுகின்றதென்றால் இந்த ஸ்தூல உடலானது எப்படி நாசமடையாமல் இருந்து வருகிறது என்று சந்தேகப்படுகின்ற அறிவில்லாதவர்களை சமாதானம் செய்வதற்காக அவர்களுக்கு வெளியே உள்ளவர்களின் பார்வை என்ற முறையில் பிராரப்தம் உண்டென்று உபநிஷத் சொல்கிறது.
101/480
இது உபநிஷத்தினால் நிச்சயிக்கபட்ட சுருக்கமான கருத்து. ஜீவன் பிரம்மனாகத்தான் இருக்கிறான். எல்லா ஜகத்தும் பிரம்மமேதான். பிளவுபடாத, பூரணமான பிரம்ம ஸ்வரூபத்திலேயே இருந்துவிடுவதுதான் மோட்சமாகும். பிரம்மன் இரண்டற்றதாக இருக்கின்றது என்ற அறிவு உபநிஷத் என்கின்ற பிரமாணத்தின் மூலம்தான் அடையப் படுகிறது.
102/470
நான் பேறு பெற்றவன், செய்யப்பட வேண்டியவைகளெல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. நான் சம்சாரத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறேன். நிலையான ஆனந்த ஸ்வரூபமாக உள்ளேன். பூரணமானவனாக இருக்கிறேன். இவையெல்லாம் குருவாகிய தங்களுடைய அனுக்கிரகத்தால் சாத்தியமாயிற்று.
103/519
இவ்விதமாக தனக்குத்தானே அரசனாக இருக்கும் தன்மையுடனும், எல்லாவற்றையும் ஆளக்கூடிய தன்மையுடனும் இருக்கின்ற பெருமையானது என்னால் அடையப்பட்டுவிட்டது. தங்களுடைய கருணையுள்ள பெருமை வாய்ந்த பிரசாதத்தினால் அடையப்பட்டுவிட்டது. மேலானவரும், மகாத்மாவாகவும் இருக்கின்ற குருவுக்கு என்னுடைய நமஸ்காரம். உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம் மீண்டும், மீண்டும் இருக்கட்டும்.
104/526
மேலான அறிவை உடைய சீடனே! எல்லா பக்கத்திலும், எல்லாவற்றிலும் தன்னையே பார்த்துக் கொண்டும், தன்னை இரண்டற்றதாகவும் அறிந்து கொண்டு தன் ஸ்வரூப ஆனந்தத்தை இடைவிடாமல் அனுபவித்துக் கொண்டு வாழ்நாளை நடத்துவாயாக.
105/578
இவ்விதம் குருவினுடைய உபதேசத்தை கேட்டுவிட்டு மிகவும் பணிவுடன் நமஸ்காரம் செய்தவனாக அந்த குருவினால் நன்கு அனுமதி கொடுக்கப்பட்டவனாகவும் இருக்கின்ற சீடன் சம்சார பந்தத்திலிருந்து நீங்கியவனாக புறப்பட்டு சென்று விட்டான்.
106/579
இந்த குருவும் எப்பொழுதும் ஆனந்தகடலில் நன்கு மூழ்கிய மனதுள்ளவராக இருந்து கொண்டு உலகத்தை தூய்மைபடுத்திக் கொண்டு மேலே செய்ய வேண்டிய செயல்கள் எதுவும் இல்லாதவராக வாழ்ந்து கொண்டு இருந்தார்.
107/580
இவ்விதம் குருவுக்கும், சீடனுக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் மூலம் ஆத்மாவின் ஸ்வரூபமானது நன்கு விளக்கப்பட்டது. சம்சாரத்திலிருந்து விடுதலையடைய விரும்புவோர்களுக்கு சுலபமாக ஞானத்தை புரிந்து கொள்வதற்கு இந்த உரையாடல் பயன்படுகின்றது.
108/582
நாம் வெய்லினால் ஏற்பட்ட தாகத்தினால் வருந்திக் கொண்டிருப்பவர்களாகவும் அதை நீக்கிக் கொள்வதற்காக நீரை பருகுவதற்கு ஆசையுடன் வறண்ட பூமியில் பிராந்தியினால் காணப்படுகின்ற கானல்நீரை அருந்த அங்குமிங்கும் அலைகின்றவர்களுக்கு மிக அருகில் இருக்கின்ற அமிர்தத்திற்கு ஒப்பான நீரைக் கண்டால் எவ்வளவு ஆனந்தம் அடைவோமோ அதேபோல சம்சாரத்திலிருந்து கொண்டு அதில் அனுபவிக்கின்ற துயரங்களை நீக்கிக் கொள்ள வழிதேடுவோர்க்கு மிக அருகிலே இருந்துகொண்டு ஆனந்தத்தை கொடுக்கக்
கூடியதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்ற பிரம்மத்தை காட்டிக் கொடுக்கின்ற இந்த மோட்சத்தைக் கொடுக்ககூடிய வார்த்தைகளானது, உபதேசமானது உத்தமமான சுகத்தை, மனநிறைக் கொடுக்கின்ற வல்லமை உடையதாக இருந்து கொண்டு மிகவும் உயர்ந்ததாக விளங்குகின்றது.

தொகுப்புரை
·         கடவுள் வாழ்த்து
·         மனிதபிறவியின் மேன்மை
·         ஆத்மஞானம்தான் மோட்சத்தைக் கொடுக்கும்
·         ஞானயோகத்திற்கான தகுதிகள்
·         குரு-சிஷ்ய லட்சணம்
·         சீடனுடைய கேள்விகள்
·         குருவின் பதில்கள்
·         ஜீவன்முக்தனுடைய லட்சணங்கள்
·         பிராரப்த கர்மத்தின் விளக்கம்
---------oooooOOOOoooooo------------





Thursday, July 12, 2018

சாதன பஞ்சகம்


சாதன பஞ்சகம்

1.1 வேதோ3 நித்யம் அதீ4தாம்
வேதாந்த சாஸ்திரத்தை எப்பொழுதும் படிக்க வேண்டும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையை தர்மம்படி இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிவை. உபதேசிக்கின்ற சாஸ்திரத்தை எப்பொழுதும் படிக்கப்படவேண்டும். மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.

1.2 தது3திதம் கர்ம ஸ்வனுஷ்டீ2தாம்
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். சாஸ்திரம் உபதேசிக்கின்ற வாழ்க்கை முறைகளை செயல்படுத்த வேண்டும்.

1.3 தேனேஶஸ்ய விதீயதாம் அபிசிதி:
தேனே - செய்கின்ற செயல்களால்
ஈஶஸ்ய - இறைவனை
அபிசிதி: - வழிபடுதல், பூஜை செய்தல்
விதீயதாம் - செய்ய வேண்டும்
நாம் அன்றாடம் தர்மப்படி செய்கின்ற செயல்கள் அனைத்தும் இறைவழிபாடாக இருக்க வேண்டும்

1.4 காம்யே மதிஸ்த்யஜ்யதாம்
ஆசையினால் தூண்டப்படும் புத்தியின் செயலை விட்டுவிட வேண்டும்.

1.5 பாபௌ3க4: பரிதூ4யதாம்
பாவக்கூட்டங்களை விலக்கிவிட வேண்டும். மனதிலுள்ள தீய குணங்களை நீக்கிவிட வேண்டும். தீய எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

1.6 ப4வஸுகே தோ3ஷா அனுஸந்தீ4யதாம்
இந்த உலகம் கொடுக்கும் இன்பத்தில் குறைகள் இருப்பதை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும். அதனால் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

1.7 ஆத்மேச்சா வ்யவஸீயதாம்
ஆத்மாவை அடைவதற்கு ஆசைப்படுவாயாக. முமுக்ஷுத்வத்தை அடைவாயாக.

1.8 நிஜக்3ருஹாத்தூர்ணம் வினிர்க3ம்யதாம்
நிஜக்3ருஹாத் - அவரவர்கள் தன்னுடைய வீட்டிலிருந்து
தூர்ணம் - உடனே
வினிர்க3ம்யதாம் - வெளியேற வேண்டும்
மேற்கூறிய சாதனங்களின் முதிர்ச்சியால் விவேகத்தை அடைவோம். விவேகமென்பது வாழ்க்கையின் நிலையானது எது, நிலையற்றது எது என்பதை பற்றிய அறிவு அடைய வேண்டும். பரம புருஷார்தத்தை அடைவதே இறுதியான லட்சியம் என்ற அறிவை அடைய வேண்டும். நிலையற்றதில் வைராக்கியமும், நிலையானதாக இருப்பதை அடைய வேண்டும் என்ற ஆசையும் உண்டாக வேண்டும்.  அடைந்த அறிவைக் காப்பாற்றுவதற்கு சத்சங்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதே இந்த சாதனத்தின் முக்கிய குறிக்கோள். முமுக்ஷுத்வத்தை அடைந்தவுடன் அதை அடைய உதவும் சரியான குருவை நாடி அடைவதற்கு உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

2.1 ஸங்க ஸத்ஸு விதீயதாம்
ஸத்ஸு - சான்றோர்களின், பெரியோர்களின்
ஸங்கஹ - சேர்க்கையை
விதீயதாம் - நாட வேண்டும்
சான்றோர்களின் நூல்களைப் படிப்பதிலும், அவர்களுடன் சம்பந்தம் வைப்பது போன்றதாகும்.

2.2. ப4கவதே பக்தி த்ருடா ஆதீயதாம்
பகவதஹ - இறைவனிடத்தில்
த்ருடா - உறுதியான
பக்தி - பக்தியானது
ஆதியதாம் - செலுத்தப்பட வேண்டும்
இறைவன் மீது நிபந்தனையில்லாத அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாய், தந்தை, ஆசார்யர்களுடைய முழு அன்பை பெற்றிருந்தாலும் ஆத்ம தத்துவ உபதேசம் நன்கு புரியும்.  யாரிடமிருந்து முழு அன்பை இழந்திருக்கின்றோமோ அதை இறைவனிடத்தில் பெற வேண்டும்.

2.3 ஶாந்த்யாதி3: பரீச்சீயதாம்
ஶாந்தியாதி3 - சாந்தி முதலியவைகளை, மனக்கட்டுபாடு முதலிய தகுதிகளை
பரீச்சீயதாம் - அடைந்திட வேண்டும்
மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், சகிப்புதன்மை, சாஸ்திர உபதேசத்தில் உறுதியான நம்பிக்கை போன்றவை அடைந்திட வேண்டும்.

இதுவரை கூறிய சாதனங்கள் அனைத்தும் ஆத்ம விசாரம் செய்வதற்கு நம்மை தகுதிப்படுத்துகின்றன.

2.4 த்3ருடதரம் கர்மாஸு ஸந்த்யஜ்யதாம்
த்ருடதரம் - மிகவும் உறுதியாக
கர்மாஸு - கொஞ்ச கொஞ்சமாக கடமைகளை, செயல்களை
ஸந்த்யஜ்யதாம் - துறக்க வேண்டும்

நம்மிடத்து இருக்கும் பொறுப்புக்களை கொஞ்ச கொஞ்சமாக மற்றவர்களிடம்  கொடுத்துவிட வேண்டும். இதனால் நம்முடைய செயல்களும் மிகவும் குறைந்து விடும் அதனால் காலம் அதிக கிடைக்கும். அந்தக் காலத்தை ஆத்ம ஞானம் சாதனங்களை பின்பற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.5 ஸத்வித்வான் உஅஸ்ருப்யதாம்
ஸத்வித்வான் - வேதாந்த சாஸ்திரத்தின் அறிவை உடையவரும், அதன்படியே வாழ்கின்றவருமான குருவை
உபஸ்ருப்யதாம் - நாட வேண்டும்

2.6 ப்ரதிதி3னம் தத்3பாது4கா ஸேவ்யதாம்
நாட்தோறும் குருவின் பாதங்களை வணங்கி, அவருக்கு சேவை செய்ய வேண்டும். குருவுக்கு சேவை செய்வதால் மனதூய்மையை அடையலாம்.  அவருடைய பாதத்தை வணங்குவதனால் பணிவு என்ற நற்குணத்தை அடையலாம். குருவும், சிஷ்யனும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துக் கொள்ளப்படுகிறது.  குருவை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யும் போது சிஷ்யனுடைய மனதினிலே ஆத்ம தத்துவத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும்.

2.7 ப்ரஹ்ம எகாக்ஷரம் அர்த்2யதா3ம்
ஓங்கார தத்துவமான பிரம்ம ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

2.8 ஶ்ருதிஸிரோ வாக்யம் ஸமாகர்ணயதாம்
வேதத்திற்கு தலையான பகுதியிலுள்ள வாக்கியத்தை நன்கு கேட்க வேண்டும்.

3.1 வாக்2யார்தஶ்ச விசார்யதாம்
குருவினால் உபதேசிக்கப்பட்ட உபநிஷத்தின் மகாவாக்கியங்களை விசாரம் செய்து தெளிவான, சந்தேகமற்ற அறிவை அடைய வேண்டும். மகாவாக்கியம் என்பது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உபதேசிக்கும் வாக்கியம். இதுவே சிரவண என்றும் கூறப்படுகிறது.

3.2 ஶ்ருதிஶிர: பக்ஷ: ஸமாஶ்ரீயதாம்
உபநிஷத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உபநிஷத்தின் உபதேசம் நமது அனுபவ அறிவுக்கு நேரெதிராக இருப்பதால் நமக்கு ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் வரலாம். இருந்தாலும் உபநிஷத்தின் மீது சிரத்தையுடன் இருந்து உபதேச வாக்கியங்களை அப்படியே எடுத்துக் கொண்டு விசாரம் செய்து தெளிவடைய வேண்டும்.

3.3. து3ஷ்தர்காத் ஸுவிரம்யதாம்
தவறான யுக்திகளை கையாண்டு விசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3.4 ஶ்ருதிமத தர்கோ அனுஸந்தி4யதாம்
உபநிஷத்தின் கருத்தை தெளிவுற அறிந்து கொள்வதற்கு தர்க்கத்தை பயன்படுத்தலாம்

3.5 ப்ரஹ்ம அஸ்மிதி விபா4ய்தாம்
நான் பிரம்மனாகவே இருக்கிறேன், என்று தியானிக்க வேண்டும். இதற்கு நிதித்யாஸனம் என்று பெயர்.

3.6 அஹரஹர் க3ர்வஹ பரித்யஜ்யதாம்
ஒவ்வொரு நாளும் நம்மிடையே எழும் அகந்தையை நீக்க வேண்டும். இந்த ஞானயோக சாதனத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நம்மிடத்தே கர்வமும் வந்து கொண்டிருக்கும். எனவே அதனை அவ்வப்பொழுது கண்டறிந்து நீக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

3.7 தேஹே அஹம் மதி: உஜ்யதாம்
இந்த உடலை “நான்” என்று நினைக்கின்ற எண்ணத்தை நீக்கிவிட வேண்டும்.

3.8 பு3த4ஜனைஹி வாதஹ பரித்யஜ்யதாம்
கற்றறிந்தவர்களிடம், பண்டிதர்களிடம், வாதம் செய்யக்கூடாது. நாம் அறிந்து கொண்டதை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது.

4.1 க்ஷுத்3வ்யாதி4ஶ்ச சிகித்ஸ்யதாம்
பசி, வியாதி இவைகளை நீக்குவதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும்.

4.2 ப்ரதிதினம் பிக்ஷு ஔஷதம் பு4ஜ்யதாம்
ஒவ்வொரு நாளும் பிக்ஷை எடுத்தும் பசியையும், மூலிகைகளைக்கொண்டு நோயையும் போக்கிக் கொள்ள வேண்டும். பசியென்ற நோயை நீக்கிக் கொள்ள உணவை மருந்தாக உட்கொள்ள வேண்டும்.

4.3 ஸ்வாத3ன்னம் ந து யாச்யதாம்
ருசியான உணவை நாட வேண்டாம்

4.4 விதி4வஶாத் ப்ராப்தேன ஸந்துஷ்யதாம்
விதியின் வசத்தால் கிடைத்ததில் திருப்தி அடைய வேண்டும்.

4.5 ஶீதோ3ஷ்ணாதி3 விஷஹ்யதாம்
குளிரையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய இரட்டைகளனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

4.6 ந து வ்ருதா வாக்யம் ஸமுச்சார்யதாம்
வ்ருதா2 வாக்யம்   - பயனற்ற பேச்சை
ந து ஸமுச்சார்யதாம் -  பேசக்கூடாது.

4.7 ஔதா3ஸீன்யம் அபீ3ப்ஸ்யதாம்
நடுநிலையில் இருக்க வேண்டும்

4.8 ஜனக்ருபானைஷ்குர்யம் உத்ஸ்ருஜ்யதாம்
மக்கள் காட்டுகின்ற கருணையும், அன்பிற்கும், கோபத்திற்கும் கட்டுப்படக்கூடாது.  யார் வெறுத்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது.

5.1 ஏகாந்தே ஸுக2ம் ஆஸ்யதாம்
தனிமையிலிருந்து பழகவேண்டும். தனிமையில் இருந்து சுகத்தையும், மனவமைதியையும் அனுபவிக்க பழக வேண்டும்.

5.2 பரதரே சேத: ஸமாதீ4யதாம்
மேலான பரபிரம்மனிடத்தில் மனதை வைக்க வேண்டும்.

5.3 பூர்ணாத்மா ஸுஸமிக்ஷ்யதாம்
நான் பூரணமானவன், ஆத்மஸ்வரூபமானவன் என்பதை உணரவேண்டும்.

5.4 ஜகதி3தம் தத்பா3தி4தம் த்ருஷ்யதாம்
தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகமானது வெறும் தோற்றம்தான், உண்மையானதல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

5.5 ப்ராகர்ம ப்ரவிலாப்யதாம்
5.6 சிதிப்லான்னாப்யுத்தரை: ஶ்லிஷ்யதாம்
தான் அடைந்த அறிவினால் இதுவரை செய்துள்ள செயல்களினால் வந்திருக்கின்ற பாவ-புண்ணியங்களை நீக்கி விடுகின்றான்.. ஞானத்தை அடைந்த பிறகு செய்யும் செயல்களினால் வரும் பாவ-புண்ணியங்களும் வராது..

5.7 பிராரப்தம் த்வி: பு4ஜ்யதாம்
பிராரப்த பலனை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்.

5.8 அத பரப்ரஹ்மாத்மனா ஸ்தீ2யதாம்
பிறகு பரமாத்ம ஆனந்த ஸ்வரூபமாக மனநிறைவுடன் இருக்க வேண்டும்.

----OOO----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...