Wednesday, September 26, 2012

அஷ்டாங்கயோகம்


அஷ்டாங்கயோகம்பதஞ்சலி
ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்

பதஞ்சலி மகரிஷி மூன்று மிகப்பெரிய நூல்களை எழுதியிருக்கிறார்அவைகள் . யோக சூத்திரம், பாணினி சமஸ்க்ருத இலக்கண நூலுக்கு விளக்கவுரை, ஆயுர்வேத சாஸ்திரம் (இது இப்போது வழக்கத்தில் இல்லை)

நம் மனதை பிறர்தான் நன்கு அறிவார்கள்நாமே மனமாக இருப்பதால் அதை நம்மால் சரியாக அறிய முடியாது, அதனிடம் உள்ள நிறைகுறைகளை கண்டு பிடிக்கவும் முடியாது.

இவர் எழுதிய யோக சூத்திரம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறதுஅவையாவன என்றால்  சமாதி, சாதனம்,  விபூதிகைவல்யம்இவர் மனதை அமைதிபடுத்தும் வழியை சில சூத்திரங்களில் அழகாக விளக்கியிருக்கிறார்.

முதல் பகுதியான சமாதியில் முதல் மூன்று சூத்திரங்களும், மூன்றாவது பகுதியில் 37வது சூத்திரம்

1.      அத யோக அனுஸாஸனம்
யோகத்தைப்பற்றிய விளக்கமானது குரு சிஷ்ய பரம்பரையாக (அனுஸாஸனம்) சொல்லப்பட்டு வந்ததை இப்போது விளக்கப்போகிறேன்.

2.      யோகஹ சித்தவிருத்தி நிரோதஹ
யோகம் என்றால் மனதில் எழும் எண்ணஙளை நிரோதம் செய்தல், நெறி படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், அமைதிப்படுத்துதல்,  ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை விசாரம் செய்வது யோகம். இது சாதனமாகவும், சாத்தியமாகவும் இருக்கிறது.

யோகம் : கரணம் + கருவி [சாதனம்]
நிரோதஹ (சரியான பொருள்) – ஒழுங்குபடுத்துதல், முறைபடுத்துதல், செம்மைபடுத்துதல்
நிரோதஹ (தவறான் பொருள்) – மனதை நாசம் செய்தல், ஒடுக்குதல், அடக்குதல்.
சித்தவிருத்திமனதில் எழும் எண்ணங்கள்

இந்த லட்சியமான மனதில் எழும் எண்ணங்களை ஒழுங்குபடுத்துதல் இதில் எட்டு படிகளாக விளக்கப்பட்டிருக்கிறது.

3.      ததா த்ருஷ்டஹ ஸ்வரூப அவஸ்தானம்
இப்படி மனதில் எழும் எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதில் வெற்றி அடைந்தால் தனி ஸ்வரூபத்தையே அடையலாம்.

1.       மனம் நமக்கு ஒரு கரணமாக (கருவியாக) செயல்படுகிறது
a.        ஐம்புலன்களின் வழியே அடையும் அறிவுக்கு மனம் பொதுவான கரணமாக இருக்கிறது.
b.       ஒருவருடைய செயல் மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்று கண்டுபிடிப்பதுமனம் இதை யுக்தி மூலமாக அறிவதற்கு விசேஷ கரணமாக செயல்படுகிறது.
c.        தியானம் செய்வதற்கு மனம் ஒரு முக்கியமான கரணமாக இருக்கிறது.
d.       ஆகவே மனம் சரியாக இல்லையென்றால் விபரீதமான அறிவைத்தான் அடைவோம், தியானமும் சரியாக செய்ய முடியாது.
2.       மனம் கர்த்தாவாகவும் செயல்படுகிறது.
a.        சுதந்திரமாக செயல்படுபவன் கர்த்தா என்று அழைக்கப்படுவான்.
b.       செயலின் தன்மை தெரிய வேண்டும், சரியான பாவனையும் இருக்க வேண்டும்.
3.       மனம ஒரு போக்தா:
மனம் ஒரு போக்தாவாகவும், செயலின் விளைவை அனுபவிக்கும் தன்மை உடையதாகவும் இருக்கிறது.  நாம் இந்த உலகத்தை மனம் மூலமாகத்தான் பார்த்து அனுபவிக்கிறோம்.  மனம் எப்படி வெளி உலக விஷயங்களை, பொருட்களை புரிந்து கொள்கிறதோ அதன் அடிப்படையில் எழும் உணர்ச்சிகளைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.

(உ-ம்) ஒரு குரு எப்போதும் தன் சிஷ்யனுடன் ஒரு வீட்டிற்கு உணவருந்த செல்வார், அந்த வீட்டில் உள்ளவர்கள் சிஷ்யனுக்கு வெrrrrrrறுப்புடன் உணவு அளிப்பார்கள். இதைக்கண்டு வருத்தமடைந்த சிஷ்யன் அடுத்த தடவை செல்லும்போது அந்த வீட்டில் எனக்கு வெறுப்புடன் உணவளிக்கிறார்கள் அதனால் தான் வரவில்லை என்றுக் கூறினான்.  குரு சிஷயனிடம், “இதை நீ எப்படி எடுத்து கொள்ளவேண்டும் என்றால் அவர்கள் அறியாமையால்தான் இவ்வாறு செய்கிறார்கள், எனவே நீ அவர்களிடம் கோபம் கொள்வதை தவிர்த்து பரிதாபப்பட வேண்டும் அப்போது உனக்கு வருத்தம் உண்டாகாது மாறாக பரிதாபம்தான் ஏற்படும் என்று அறிவுரைக்கூறி அழைத்துச் சென்றார்.  இந்த தடவை சிஷ்யனுக்கு வருத்தமேற்படவில்லை, பரிதாபத்துடன் மகிழ்ச்சித்தான் ஏற்பட்டது.  நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு மனம்தான் காரணம், எனவே பிறரது செயல்கள் எப்படி இருந்தாலும் அது நம்மை தாக்காது இருக்க வேண்டுமானால் நம் மனதை செம்மைப்படுத்த வேண்டும்.

4.       நம் மனமானது எண்ணங்களையெல்லாம் பதிவு செய்யும் வேலையையும் செய்கிறதுநல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் எல்லாமே பதிவு செய்யப்படுகின்றன. இந்த எண்ணப்பதிவுகளை சம்ஸ்காரங்கள் என்று சமஸ்கிருத்த்தில் கூறப்படுகிறது. மனதில் தீய எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அது நமக்கு அதிக சுமையை சுமந்து கொண்டிருப்பதுப்போல் இருக்கும்.

5.       நானே மனமாக இருப்பதால், மனது சஞ்சலப்பட்டால் நான் சஞ்சலத்துடன் இருக்கிறேன், மனம் வெறுப்படைந்தால் நான் வெறுப்பாக இருக்கிறேன் என்று கூறுகிறோம்.  சாஸ்திரம், “மனமே பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணமாக இருக்கிறது. என்று சொல்கிறது.  எனவே மனதை நெறிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.

தமோ, ராஜஸ எண்ணங்களை நீக்கி மனதில் தெய்வீகமான எண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

மனதை செம்மைப்படுத்துவதற்கு எட்டு சாதனங்கள், பதஞ்சலி மகரிஷி அவருடைய யோக சூத்திரத்தில் இரண்டாவது பாதம் 29வது சூத்திரத்தில் கூறியிருக்கிறார்.
1.       யமம்             தவிர்க்க வேண்டியவைகள்
2.       நியமம்            செய்ய வேண்டியவைகள்
3.       ஆஸனம்          உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல்
4.       பிராணாயாமம்     பிராணனை சமப்படுத்துதல்
5.       பிரத்யாஹாரம்     இந்திரியங்களை கட்டுபடுத்தி வைத்திருத்தல்
6.       தாரணை          விரும்பிய இடத்தில் மனதை பொருத்துதல்
7.       தியானம்          தியானம் செய்து மனதை அமைதியாக வைத்தல்
8.       சமாதி             மனதை தொடர்ந்து அமைதியாக வைத்திருத்தல்

A.    யமம்: (யோக சூத்திரம் - 2/30)
இது ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1.       அஹிம்சை       மற்றவர்களுக்கு துயரத்தைக் கொடுக்காமலிருத்தல்
2.       சத்யம்           உண்மை பேசுதல், பொய்யை தவிர்த்தல்
3.       அஸ்தேயம்      மற்றவர்கள் பொருளை எடுத்துக் கொள்ளாதிருத்தல்
4.       பிரம்மசர்யம்     ஒழுக்கமாக வாழ்தல்
5.       அபரிகிரஹம்     தேவைக்கு மேல் பொருட்களை சேர்க்காது இருத்தல்.
                    தம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும
                    இறைவனுடையது என்ற மனப்பான்மையோடு அனுபவித்தல்

இவை ஐந்தும் மகா விரதங்கள் என்று பதஞ்சலி மகரிஷி கூறியிருக்கிறார்.

அஹிம்சை
உடல், சொல், மனம் இவை மூன்றாலும் யாருக்கும் துன்பம் கொடுக்காமல் இருத்தல்.  மனதாலும் மற்றவர்க்கு தீங்கு வர வேண்டும் என்று எண்ணக்கூடாது.  நமக்கு துயரம் வரக்கூடாது என்று விரும்பினால், நாம் யாருக்கும் துயரத்தை இந்த மூன்று வழிகளிலும் கொடுக்ககூடாது
நாம் துயரம் அடைவதற்கான காரணஙகள் என்னவென்று பார்க்கலாம்:
1.       நம் மனதில் உள்ள வெறுப்பை அறவே நீக்க வேண்டும்.
2.       கோபம் என்னும் கொடிய குணத்தையும் நீக்க வேண்டும். இது மற்றவர்களை மட்டுமல்ல தன்னை சேர்ந்தாரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது.
3.       மற்றவர்களால் துன்பம் அடையும் போது, நாம் அவர்களுக்கு அன்பைக் கொடுக்க வேண்டும்.
4.       பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5.       நாம் பேசும் போது ஒருபோதும் கவனக்குறைவாக பேசி அதனால் மற்றவர்கள் மனது துன்பம் அடைவதற்கு காரணமாக இருக்க கூடாது
6.       நமக்கு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக எந்த உயிரினத்தையும் ஹிம்சை செய்யக் கூடாது.
7.       வரப்போகும் பெரிய துன்பத்தை தடுப்பதற்கு, சிறிய துன்பத்தை பிறருக்கு கொடுக்கலாம்.

சத்யம்
·         நிகழ்ந்ததை கூறுதல் -  எதைப் பார்த்தோமோ, கேட்டோமோ அதை அப்படியே உரைத்தல்
·         நிகழ்ந்ததை கூறாதிருத்தல் - உண்மையை எற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவரிடத்தில் உண்மையை மறைத்து விடுதல்
·         பொய் கூறுதல் - உண்மை உரைத்தால் தீங்கு ஏற்படும் என்ற இடத்தில் பொய் சொல்வதில் தவறில்லை.
                
அஸ்தேயம் (திருடாமை)
மற்றவருடைய பொருட்களையோ, உழைப்பையோ, அறிவையோ திருடக்கூடாது.  எந்த பொருளையும் உழைப்பின்றி பெறக்கூடாது.  இது தமோ குணத்தின் விளைவு.  எவ்வித்திலும் பிறருடைய உரிமைகளையோ, உடைமைகளையோ திருடாமல் இருப்பது, பிறருடைய சொத்தை அபகரிக்காமல் இருப்பது.

பிரம்மச்சர்யம்( மாணவப் பருவம்)

பிரம்ம + சர்யம் à வேதத்தை படிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய சாதனை.  குருவுக்கு சேவை செய்து அறிவை அடைதல். அறிவை அடைய வேண்டுமென்றால் சுகத்தை விட்டு விடவேண்டும். பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம், வாக்கு, உடலினால் எந்த நிலையிலும் எவ்விதமான சிற்றின்பங்களையும் நுகராமல் இருப்பது.

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்:
·         காக்கையை போன்று குளித்திட வேண்டும்.
·         கொக்குப் போன்று மனதை ஒருமுகப்படுத்தி இருக்க வேண்டும்.
·         நாயைப் போன்று தூங்கிட வேண்டும்.
·         குரு உபதேசித்த சாஸ்திர நூல்களை ப்டித்துக் கொண்டிருக்க வேண்டும்.
·         மனதை கட்டுப்பாட்டுடன் வைத்து இருக்க வேண்டும். 
·         பணத்தை சம்பாதிக்க கூடாது.  அதிகம் பணமும் வைத்திருக்க கூடாது.
அபரிகிரஹம்
·         தேவைக்கு மேல் பொருள் வைத்துக் கொள்ளாதிருத்தல். 
·         இல்லறத்தில் இருப்பவர்கள் தாம் அனுபவிக்கும் பொருட்களில் என்னுடையது என்ற பற்றை நீக்கி இருக்க வேண்டும். 
·         அனைத்தும் இறைவனுடயது என்ற மனப்பான்மையோடு இருத்தல்
·         சந்நியாசத்தில் இருப்பவர்கள் தம் பெயரில் எதுவும் வைத்திருக்க் கூடாது.
.
B.    நியமம்: (யோக சூத்திரம் - 2/32)
இதுவும் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1.       தூய்மை                 அகத்தூய்மை, புறத்தூய்மை
2.       சந்தோஷம்              கிடைத்ததில் திருப்தி அடைதல்
3.       தவம்                   மன ஒருமுகத்துடன் செயல் செய்தல்
4.       ஸ்வாத்யாயம்           சாஸ்திரம் படித்தல்
5.        ஈஸ்வர ப்ரணிதானம்     இறை வழிபாடு.

தூய்மை
இது அகத்தூய்மையும், புறத்தூய்மையும் சேர்த்து கருதப்படுகிறது.
1.       உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
2.       உடலைத்தூய்மையாக வைத்திருத்தல்
3.       உடைகளைத் தூய்மையாக வைத்திருத்தல்,
4.       நாம் வசிக்கும் வீடு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல்
5.       நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களையும் தூய்மையாக வைத்திருத்தல்
6.       தூய்மையான உணவையே உட்கொள்ள வேண்டும். மாமிசம் அசுத்தமான் உணவு என்று சாஸ்திரம் கூறுகிறது.
7.       மனதில் நல்ல எண்ணங்களையே வைத்திருத்தல்
8.       தீய எண்ணங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளுதல்.  இதற்கு பிரதிபக்ஷ பாவனா என்ற உபாயத்தை பயன்படுத்தி நம் மனத்திலுள்ள தீய குணங்களை விரட்ட அதற்கெதிரான நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்
   (௨.ம்) விருப்பு, வெறுப்பு - வைராக்யத்தின் மூலம் விலக்குதல்
      கோபம், பொறாமை - அன்பு, கருணை இவைகளை கொண்டு
                           நீக்குதல்
      
சந்தோஷம்
·         சுகம்-துக்கம், பிடித்த்து-பிடிக்காத்து முதலியவற்றை மல்ர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொள்வது
·         கிடைத்ததில் திருப்தி அடைதல்
·         நம்மிடத்தில் இருக்கும் பொருட்கள், வசதி வாய்ப்புக்கள் அனைத்தும் போதும் என்ற மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
·         யாரிடத்திலும் எதற்காகவும் பொறாமைப் படக்கூடாது, பொறாமை நீங்க வேண்டுமென்றால், எதிலும் திருப்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
·         எனக்கு கிடைத்ததெல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று நினைக்கும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தவம்
·         தீய குணங்களை நீக்குவதற்கும், இனி சேராதிருக்கவும், நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளவும் செய்யும் முயற்சியே தவம் என்று கூறப்படுகிறது.
·         நம்மை வந்து சேரும் துயரத்தை சகித்துக் கொள்ளுதல்,
·         ஏகாதசி போன்ற விரதங்களை, உபவாஸங்கள் மேற்கொள்ளுதல், மௌனவிரதம் இருத்தல் போன்றவை அனைத்தும் தவத்தின் லக்ஷணங்கள்
·         தவம் செய்வதின் பலனாக நம் சக்தி பெருகிட வேண்டுமே தவிர, பலவீனம் அடையக் கூடாது.
·         மூன்று விதமான் தவங்கள் சொல்லப்படுகிறது. உடலளவில் செய்வது, மனதளவில் செய்வது, சொல்லளவில் செய்வது
·         உடலளவில் செய்வது - தூய்மையாக இருத்தல், சொன்னதை செய்தல், பாதயாத்திரை போவது, பூஜை செய்வது, எளிமையாக இருத்தல்
·         சொல்லளவில் செய்வது - உண்மை பேசுதல், சொல்லால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல், நல்லதையே பேசுதல், இதமாக பேசுதல், அன்பாகவும், அளவாகவும் பேசுதல்.
·         மனதளவில் செய்வது - தியானம் செய்தல், மனதை தூய்மையாக வைத்து இருத்தல், மௌனமாக இருத்தல்.
·         சாத்வீக தவம் ; மனத்தூய்மைக்காக செய்வது
·         ராஜஸ தவம் : பிறர் பாரட்டைப் பெற செய்யும் தவம்,
·         தாமஸ தவம் : பிறரை அழிப்பதற்கு, தன்னை வருத்திக்கொண்டு செய்வது
·         சுகம் அடைவதற்கு செய்யும் தவங்களாக, கடின உழைப்பையும், சில விஷயங்களை தியாகம் செய்வது போன்றவற்றைக் கூறலாம்.

ஸ்வாத்யாயம்
·         சாஸ்திரம் படித்தல், நல்ல நூல்களைப் படித்தல்,
·         பகவத் நாமங்களை சொல்லிக்கொண்டிருத்தல், பகவத் குணங்களைப் பாடிக் கொண்டிருத்தல்
·         சப்தகிரகணம் : புத்தகத்தை படித்தல்.
·         அர்த்தகிரகணம் : அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்
·         நம்மிடத்தே உள்ள தீய குணங்களை நீக்கி கொள்ளவும், நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சாதனைகளை அறிந்து கொள்ள சாஸ்திரங்களை படித்தல்,
·         பெரிய மகான்களின் நூல்களை படிப்பது, அவர்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்வதற்கு சம்மாகும்
·         வயதான காலத்தில் நாம் நம்மில் இருக்க இந்த சாதனை உதவும்.

ஈஸ்வர பிரணிதானம்

·         இறைவனை வழிபடுதல்
·         தினந்தோறும் காலையின் இரண்டு அல்லது ஐந்து நிமிடங்கள் முதலில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டுத்தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும்.
·         இறைவனிடம் நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். இப்படி செய்வது நாம் அடைய வேண்டிய லட்சியங்களை நமக்கே நினைவூட்டிக் கொள்வது போலவும் இருக்கும், இறைவனின் உதவியை நாடியது போலவும் இருக்கும்.
·         பிரார்த்தனையில் நம்முடைய அகங்காரம் இறைவனிடம் சரணடைகிறது.  அப்ப்டி சரணடையும் போது இறைவனின் சக்தி நமக்கு கிடைக்கிறது.
·         அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, அவர் ஆணையை நிறைவேற்றுவது

C.     ஆஸனம்: (யோக சூத்திரம் - 2/46)
·         நாம் ஆஸனம் செய்வதற்கு அமர்கின்ற விதம் உடலுக்கு சுகமாகவும், அமர்வதற்கு உறுதியாகவும் இருக்க வேண்டும்.  இந்த நிலையில் இருந்து தியானம் செய்ய வேண்டும்.
·         அமரும் இடம் சற்று உயர்ந்த்தாகவும் இருக்க வேண்டும்.
·         கடினமாகவோ, மிருதுவாகவோ, மேடு பள்ளமாகவோ இருக்க கூடாது.
·         உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
·          
D.    பிராணாயாமம்: (யோக சூத்திரம் - 2/49)
·         மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துதல்.
·         மூச்சுக்காற்றை ஒரே சீராக உள்ளே இழுத்தல், பிறகு ஒரே சீராக வெளியே விட வேண்டும்.
·         தூக்கத்தை கலைக்க வேண்டுமென்றால், இதைச் செய்தால் தூக்கம் கலைந்து விடும்.  மனதில் இருக்கும் சஞ்சலங்களும் நீங்கி விடும், பொறுமையை வளர்க்கும்.

E.     பிரத்யாஹாரம்: (யோக சூத்திரம் - 2/54)
·         இந்திரியங்களை கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல்.  இதை மூன்று இடங்களில் பயன்படுத்துகிறோம்.
·         விவகாரத்திற்காக - வேலை செய்யும்போது
·         இன்பம் அடைவதற்காக - சினிமா, தொலைக்காட்சி பார்த்தல்
·         நன்மைக்காக - சாஸ்திரம் படிப்பது, கேட்பது

இந்திரியங்கள் வழியாக உள்ளே சென்ற எண்ணங்கள் நல்லவையாக இருந்தாலும் தீயவையாக இருந்தாலும் அதை நீக்குவது மிக கடினம்வெளியே இருந்து இந்திரியங்கள் வழியாக உள்ளே செல்லும் வேண்டாத விஷயங்கள் துன்பத்தை தரும், கோபத்தால் மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் போன்றவை நிகழும்.

முதல் ஐந்து சாதனங்கள் (யமம்,நியமம், ஆஸனம், பிராணாயாமம்,பிரதியாஹாரம்) பகிரங்க சாதனை என்றும் அடுத்த மூன்று சாதனைகள் (தாரணா, தியானம், சமாதி) அந்தரங்க சாதனையென்றும் பிரிக்கலாம்.

பகிரங்க சாதனம் à அந்தரங்க சாதனம் à சாத்தியம்
எடுத்து  கொண்ட லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் பகிரங்க சாதனையில் முழு வெற்றி அடைந்த பின்னர் அந்தரங்க சாதனத்தையும் பழக்கபடுத்தி கொண்டால்தான் இது சாத்தியமாகும்.

F.     தாரணா: (யோக சூத்திரம் - 3/1)
மனதை ஒரு இடத்தில் நிலை நிறுத்துதல்இறைவனை தியானிக்க வேண்டுமென்றால் அந்த சூட்சுமமான விஷயத்தை அடைவதற்கு ஸ்தூலமான ஒன்றை பயன்படுத்தி அதில் நம் மனதை நிலை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும்எதைத் துணைக் கொண்டு ஒரு தத்துவத்தை அறிய விரும்புகிறோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்அதில் நம் மனதை நிலை நிறுத்தி தியானிக்க வேண்டும்.

G.    தியானம் (யோக சூத்திரம் - 3/2)
மனதை ஆலம்பனத்தில் தொடர்ந்து வைத்திருந்து எதை அடைய விரும்புகிறோமோ அதையையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்இதில் நாம் தியானிக்க நினைக்கும் விஷயத்தை தவிர மற்ற விஷயங்களும், எண்ணங்களும் மாறி மாறி வந்து அந்த விஷயத்தையே மறக்கடிக்க செய்யும்நாம் துவண்டு விடாமல் நம் தியான விஷயத்தை திரும்ப திரும்ப மனதில் கொண்டு வர வேண்டும்இந்த முயற்சிதான் தியானம் என்று பதஞ்சலி கூறுகிறார்காலை நேரம் தியானத்திற்கு உகந்த நேரம்இது நான்கு நிலைகளாக விவரிக்கப்படுகிறது.

1. மனதை அமைதிபடுத்தும் நிலை:
நம் உடலை நன்கு தளர்த்தி வைக்க வேண்டும்பிறகு நாம் விடும் மூச்சுக் காற்றையே கவனித்து கொண்டேயிருக்க வேண்டும். ஐம்புலன்களையும் அமைதி படுத்த வேண்டும் பிறகு மனதை அப்படியே அமைதியாக வைத்திருக்க வேண்டும்நாம் ஒரு நதிக்கரையில் அமர்ந்திருக்கிற மாதிரி கற்பனைச் செய்து கொண்டு, நதி நீரில் மிதந்து செல்லும் விதவிதமான பொருட்களை கவனிக்க வேண்டும்அதே மாதிரி நம் மனதில் மாறி மாறி வரும் எண்ணங்களை ஒரு சாட்சிப் போல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்இந்த முயற்சி நம்மைப் பற்றி நாமே நன்கறிய உதவிச் செய்யும்அதே சமயம் அந்த எண்ணங்களுடன் போராடாமல் அதை கவனித்துக் கொண்டிருப்பதால் மனம் அமைதியடையும்இதனால் மனப்போராட்டத்திலிருந்து, சஞ்சலமான நிலையிலிருந்து விடுபட்டு அமைதியாக இருக்கலாம்.
புத்தியை அமைதிப் படுத்துதல்:
மேற் சொன்ன நிலையை அடைந்ததும் பின்பு புத்தியை அமைதிபடுத்த வேண்டும், எதையும் சிந்திக்காது இருத்தல், எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் திட்டத்தில் புத்தியை உபயோகிக்காமல் நிறுத்தி வைத்திருத்தல்.
2.      ஜபம்
இறைவனுடைய  நாமத்தையோ, பிரார்த்தனை ஸ்லோகத்தையோ எடுத்துக் கொண்டு அதை இடைவிடாமல் உச்சரித்து கொண்டேயிருக்க வேண்டும்இதனால் நம் மனதானது ஒருமுகப்படும்.
3.      நற்பண்புகளை தியானித்தல்
என்னென்ன நற்பண்புகள் சாஸ்திரத்தில் சொல்லபட்டு இருக்கிறதோ அதை அடைய வேண்டும் என்று இறைவனை வழிபட வேண்டும்.
4.       அத்வைத ஞானத்தை தியானித்தல்
இதையே நிதித்யாஸனம் என்றும் கூறுவர்இங்கு பிரம்ம ஞானமே தியானத்திற்கு பொருளாக இருக்கிறது.

H.    சமாதி (யோக சூத்திரம் - 3/3)
தியானத்தின் முதிர்ச்சி அடைந்த நிலை இதுஇதில் மனதை அமைதியாக தொடர்ந்து வைத்திருத்தல் இதிலும் இரண்டு நிலைகள் சொல்லபடுகிறதுஅவை சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி.
சவிகல்ப சமாதி: நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப்போடு தியானித்துக் கொண்டிருத்தல்.
நிர்விகல்ப சமாதி: நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வேயில்லாமல் ஆழ்ந்து போய் விடுதல்.

எதையாவது அடைந்தால் இது லாபம், அல்லது நஷ்டம் என்று நினைப்பது போல் மனதை அடைவது லாபம் மற்றதெல்லாம் நஷ்டம்.

நம் மனதை அடைவதுதான் நம் லட்சியம், அதுவே நம்மில் இருத்தலுக்கு சம்மாகும்.


1 comment:

Unknown said...

You have brought out the essence of Life and taught us how to live with peace of mind . Great job !!!

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...