Thursday, October 4, 2012

பக்தியோகம்-ஸ்வாமி குருபரானந்தா




பக்தியோகம்
Bhakthi Yogam
ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்

பக்தியை பாதையாக அமைத்து பக்தியை அடைதல். உதாரணமாக நெல்லை விதைத்து நெல்லை அறுவடை செய்வது போல.

இறைவனிடத்தில் வைக்கும் அன்புக்கு பக்தி என்று அழைக்கப்படுகிறது.  அதாவது மேலான ஒன்றில் வைக்கும் அன்புக்கும் பக்தி என்று பெயர். உதாரணமாக குருவின் மீது வைக்கும் அன்புக்கு குருபக்தி, வாழும் தேச்த்தின் மீது வைக்கும் அன்புக்கு தேசபக்தி என்று கூறுகிறோம்.

ஒவ்வொரு உயிரும் அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறது.  ஆகவே அன்பானது எல்லோருக்கும் அடைய வேண்டிய லட்சியமாகிறது, சாத்தியமாகிறது.  அன்பை அன்பால்தான் அடைய முடியும், வேறேந்த மார்க்கமும் இல்லை.  அன்பை விலை பேச முடியாது. நாரதர் சொல்கிறார், “இறைவனிடத்தில் வைக்கும் அன்புதான் மிக மிக மேலானது.  ஊமையால் எப்படி தான் சுவைத்த கனியின் சுவையை சொல்ல முதியாதோ அது போல அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பக்தி வருவதற்கான காரணங்கள்: (பக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது)
நாரதர் இதற்கு மூன்று காரணங்கள் கூறுகிறார்.

1.       இறைவனைப் பற்றிய அறிவின் அடிப்படையில்தான் அன்பும் வறும் அது பின் பக்தியாக மாறும்.
2.       அன்யோன்ய ஆஸ்ரயம் என்ற நியதிப்படி பக்தியும், அன்பும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும்.  எண்ணெய் நிற்பதற்கு தொன்னை ஆதாரம், அதே மாதிரி தொன்னை நிற்பதற்கு எண்ணெய் ஆதாரமாக இருப்பது போல.  பணத்தை வைத்துத்தான் பணம் அதிகமாக வியாபாரத்தி சம்பாதிக்க முடியும். அது போல பக்தி வளர்வதற்கு பக்திதான் தேவை.
3.       விஷயத்தியாகம், சங்கத்தியாகம். உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்றும், நமக்கு நெருங்கியவர்களிடம் வைக்கும் அன்புதான் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கிறது.  என்வே இவைகளை விட்டு விலகி, இறைவன் மீது பக்தி செலுத்தி கொண்டேயிருக்க வேண்டும்.

பக்தியானது இரண்டாக பிரிக்கப்படுகிறது. 
அவைகள்,
1.       சாத்திய பக்தி      - பிளவு படாத பக்தி
2.       சாதனை பக்தி     - பிளவு பட்ட பக்தி

நமக்கு இறைவனிடத்தில் எவ்வளவு பக்தி இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமானால், நாம் இறைவனுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறோமோ அவ்வளவு பக்தி நாம் இறைவனிடத்தில் வைத்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம்.

அன்பே சிவம் என்று திருமூலர் கூறியிருப்பதைப் போல, நாம் எவ்வளவுக்கெவ்வளவு இறைவன் மீது அன்பு செலுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவரிடம் நெருங்கி விடுவோம்.  இறைவனைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நாம் சிரத்தையோடு அவரை வழிபடவேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கிற இரண்டு சொற்றொடர்களின் பொருளை பார்ப்போம்.

1.       கடவுளை காட்டினால் பிறகு நான் நம்புவேன்
2.       கடவுளை நம்பினால், கடவுளைக் காண்பாய்.


முதல் சொற்றொடரில் பிழை இருக்கிறது, ஒரு பொருளை நாம் பார்த்தப் பின் நம்பிக்கை தானாகவே உண்டாகும், நம்ப வேண்டிய அவசியம் இல்லை. கடவுளை நேரில் கண்ட பின் பிறகு எப்படி நம்பாமல் இருக்க முடியும். 

ஆனால் இரண்டாவது சொற்றொடரிலிருந்து எதையும் அறிவதற்கு முன் அதை முழுமையாக நம்ப வேண்டும் என்று உணர்த்துகிறது.  எனவே கடவுளை காண வேண்டுமானால், முதலில் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஒரு பொருள் இருக்கிறது அல்லது இல்லை என்பதை ஆதாரமில்லாமல் கூறுவது அந்த பொருளின் இருப்பின் அல்ல்து இல்லாமையின் மீது உள்ள நம்பிக்கையில்தான்.

பிளவுபட்ட பக்தி:

பக்தன் இறைவனிடம் இருந்து இதை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செலுத்தும் பக்திக்கு பிளவு பட்ட பக்தியென்று அழைக்கப்படுகிறது.  இங்கே அன்பானது பகவான், நான், அடைய வேண்டிய பொருள் என்று மூன்றாக பிரிந்து இருக்கிறது.  இதில் நம்மைத்தான் முதலில் நேசிக்கிறோம், பிறகு அடைய வேண்டிய லட்சியம் மூன்றாவதாகத்தான் இறைவன்  வேண்டியது கிடைத்த்தும் இறைவனை தற்காலிகமாக மறந்து விடுவோம்.  நம் மீதுள்ள அன்பானது எல்லையற்றது, நிபந்தனை அற்றது.  நமக்கு எது சுகம் கொடுக்கிறதோ அதையும் நேசிப்போம். பிறகு எஞ்சியிருக்கும் அன்புதான் பகவான் மீது செல்கிறது.  இதற்கு சகாம பக்தி என்று அழைக்கப்படுகிறது, இதில் அன்பானது மூன்று இடத்தில் பிரிந்து இருக்கிறது. நான் பக்தன், பகவானிடம் வேண்டுவது அவரையே அடைய வேண்டும், இது நிஷ்காம பக்தி, இதில் அன்பானது இரண்டாக பிரிந்து இருக்கிறது.

பிளவுபடாத பக்தி:
பக்தன் தானே பகவான் என்று நினைக்கும்போது அது பிளவு படாக பக்தியாகிறது.
சகாம பக்தி:

இந்த வகையில் பக்தி செலுத்தும் பக்தன் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறான். முதல் வகை ஆர்த்தஹ பக்தன், இரண்டாவது வகை அர்த்தார்த்தி பக்தன்.

ஆர்த்தஹ பக்தன்
துயரத்தில் இருக்கும்போது இறைவனை நினைக்கும் பக்தன் இந்த வகையை சேர்ந்தவன்.  மற்ற நேரத்தில் இறைவனை நினைப்பதில்லை.  இறைவன் நம் மீது அனுக்கிரகம் வைத்திருந்தால் நம் கஷ்டங்களை அப்படியே வைத்திருப்பார், அனுக்கிரகம் வைக்காதிருப்பவருக்கு கஷடத்தை நீக்கி விடுவார்.

அர்த்தார்த்தி பக்தன்
துன்பம் வரும்போது மட்டுமல்லாமல் சுகமாக இருக்கும்போதும் இறைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டிருப்பவன்.

இந்த பக்தர்களுடைய இலட்சியம் வாழ்க்கையில் வரும் துயரங்கள் யாவும் நீங்க வேண்டும், சுகங்கள் கிடைத்து கொண்டேயிருக்க வேண்டும்.  இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு கிடையாது. அதே சமயம் தாங்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையிலேயே இருப்பார்கள்.  துயரம் வரும் போது இறைவனை நாடுவது, கேட்ட வரம் கிடைத்தால் மகிழ்ச்சியடைந்து பின்பு பழைய நிலைக்கே சென்று விடுவார்கள்.  இவர்கள் பக்திக்கு ஆசையும், பயமும்தான் காரணமாகிறது.

இவர்களுக்கு இறைவனைப் பற்றிய முழுமையான அறிவு கிடையாது. தாங்களடையும் வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்று நம்புகிறார்கள்.  அவனருள் இன்றி எதுவும் நடக்காது, அவருடைய அனுக்கிரகம் தேவை என்ற அறிவுடையவர்கள்.  மூன்று குணத்தின் அடிப்படையில் இவர்கள் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.  பக்தியானது ஒரு பாவனைதான் ஆனால் செயலாகும் போது அது வேறுபடுகிறது.

சகாம பக்தன் தர்மவானாக இருக்கும்போது அது அவனை நிஷ்காம பக்திக்கு கொண்டு செல்லும்.

நிஷ்காம பக்தி:

பகவானை சாத்தியம், சாதனை என்று பக்தி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் [JIGNASU]
இப்படிபட்ட பக்தர்கள் அவர்களிடத்தில் இருக்கும் தீய குணங்களை நீக்குவதுதான் முதல் சாத்தியம், அதற்குப் பிறகுதான் இறைவனை சாத்தியமாக்க முடியும்.  இப்படி நம் குணங்களை மாற்றுவதற்கு நல்ல சூழ்நிலைகள் அமைய வேண்டும்.  நல்ல உடல் நலம் தேவை.  இவையெல்லாம் இறைவனிடம் கேட்கலாம்.  இதுவும் நிஷ்காம பக்தியில்தான் சேரலாம். 
இந்த மாதிரி இறைவனையே அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு காரணம் என்ன?
அறிவின் அடிப்படையில்தான் உணர்வு தோன்றுகிறது.  பக்திக்கு செலுத்துவதற்கு காரணம் வெளிவிஷயங்கள் மீது பற்றாக நம் அன்பானது சென்று விட்டால், இறைவனிடத்தில் வைக்க முடியாது.  இந்த பற்றை இறைவனின் மீது செலுத்த பழக வேண்டும்.  இரண்டு விதமான அறிவு இந்த நிஷ்காம பக்திக்கு கொண்டு செல்லும் ஒன்று உலகத்தைப் பற்றிய ஞானம் (த்த்துவ ஞானம் - ஒரு பொருளின் உண்மையான தன்மையை அறிவதாகும்), இரண்டாவது இறைவனைப் பற்றிய உண்மையான அறிவு.

தத்துவ ஞானம்:
உலகத்தின் முதல் தன்மை, இதிலுள்ள பொருட்கள் யாவும் நிலையற்றது, கால வரையறைக்குட்பட்டது.  ஆனாலும் அவற்றிலிருந்து இன்பம் பெறுகிறோம்.  காலம் செல்ல அதே பொருட்கள் துன்பத்தை கொடுக்கும்.  ஆகவே இந்த உலகத்தில் இன்பம் தரும் பொருட்களும் இருக்கின்றது, துன்பம் தரும் பொருட்களும் இருக்கின்றது ஆனால் இவைகள் காலவரையறைக்குட்பட்டது. இதிலிருந்து நாம் பெறும் அறிவு எந்தப்பொருளும், விஷயங்களும் எனக்கு நிலையான் இன்பத்தையும், பாதுகாப்பும் கொடுக்காது, இதுவே வைராக்யம் என்று கூறப்படுகிறது.  இதன் விளைவால் மனதானது உலக விஷயங்களில் இருந்து விலகி, இறைவனிடம் செலுத்தப்படுகிறது.  அப்போதுதான் இறைவனே சாத்தியம், சாதனையாக இருக்கிறார்.

இறைவன் என்பவர் யார்? என்ற கேள்விக்கு விடை யார் இந்த அனைத்து உலகத்திற்கும் காரணமாக இருக்கிறாரோ அந்த ஈஸ்வரன்தான் இறைவன் என்று கூறலாம்.  காரணம் இரண்டு வகையாக உள்ளது.  ஒன்று உபாதான காரணம் மற்றொன்று நிமித்தகாரணம். உதாரணமாக பானை காரியம் என்றால் அது உருவாவதற்கு காரணமாக இருக்கும் மண் உபாதான காரணம், அதை உருவாக்கிய குயவன் நிமித்த காரணம்.  அதே போல் இந்த உலகம் உருவாவதற்கு உபாதான காரணமும், நிமித்த காரணமும் ஈஸ்வரன்தான்.  எப்படி சிலந்தி பூச்சியானது வலையை உண்டாக்குவதற்கு தேவையான பொருளை தன்னிடத்திலிருந்தே எடுத்துக் கொண்டு தானே வலை உருவாவதற்கு இரண்டு காரணமுமாக இருக்கிறத்தோ அதே போல இறைவன் இருக்கிறார்.

இறைவனே எல்லா படைப்புக்கும் நிமித்தக் காரணமாக இருப்பதால் அவரை சர்வக்ஞன் என்று சாஸ்திரம் கூறுகிறது.  அனைத்து சக்திகளும் தன்னிடத்திலே வைத்திருப்பதால் சர்வ சக்திமான் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் பெயரில்லாதவர், உருவமில்லாதவர், சர்வ சக்திமான் என்ற அறிவுடைய பக்தன்தான் நிஷ்காம பக்தன்.  இதன் அடிப்படையில்தான் இறைவன் மீது அன்பு செலுத்துகிறான்.



பக்தியை வெளிப்படுத்தும் விதம்:

நிஷ்காம பக்தன் வைராக்யத்தோடு ஈஸ்வரனை பற்றிய சிறிது அறிவுடன் பக்தி செலுத்துகிறான்.  நாம் கடமைகளை செய்யும் போது அதை இறை வழிபாடாக செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.  இவ்வாறு செய்யும்போது கிடைக்கும் வெற்றி, தோல்விகளால் பாதிக்கப்படாமல் ஸமபாவனையோது இருக்க வேண்டும்.
செயலின் விளைவுகளை இறைவனுக்கு சமர்ப்பித்து விட வேண்டும்.  வெற்றி கிடைக்கும் போது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும், தோல்வி வந்தால் அதை மன உறுதியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்விகளையும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும்.

வயதாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக கடமைகளிலிருந்து விலகி, பொறுப்புக்களை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு, தியான நிலைக்கு செல்ல வேண்டும் அதிலிருந்து தியானயோகி நிலைக்கு செல்ல வேண்டும்.  இந்த சமயத்தில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்.  இந்த நேரத்தை விரதம், மௌனம், தியானம், இந்திரிய மனக்கட்டுபாட்டை வளர்த்தல் போன்ற சாதனைகளில் ஈடுபட வேண்டும்.  இந்த நிலையிலுள்ளவரை உபாஸகன் என்றும் அழைப்பர்.

கிருஷ்ண பகவான் தான் அருளிய கீதையில், “இப்படிபட்ட பக்தனாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு தேவையான பொருளை, பாதுகாப்பை நானே கொடுப்பேன், அது என்னுடைய கடமை, என்று உறுதியளிக்கிறார்.

இப்படிபட்ட பக்தர்கள் பக்தி செலுத்தும் விதத்தில் எந்த நியதியும் கிடையாது.
(யோகஷேமம் வஹாமி - கிருஷ்ண பகவான்)

பக்தி என்பது பாவனையா? அல்லது செயலா?:
     
பக்தியின் உணர்வால் செய்யும் செயலும் பக்திதான்.  பக்தியை வெளிப்படுத்தும் செயலுக்கு எந்த நியதியும் கிடையாது.  நம்மிடத்தில் உள்ள பக்தியை வெளிப்படுத்தாமல் விட்டால் அது நம்மை விட்டு சென்று விடும்.  எனவே பக்தி வெளிப்பட்டால்தான் அது வளரும்.  சில சமயம் இறைவனுக்கு செய்யும் செயல் பக்தியை வளர்க்கும்.

பக்தியின் அவசியம், தரும் பலன்

ஸ்ரேயாம்ஸி பஹூ விதினானி - பல தடைகள்:

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் பல தடைகள் வரலாம்.  என்வே னாம் உயர வேண்டுமானால்,அதற்கு உதவுபவர்களை நாடிச் செல்லவேண்டும்.  நம்மிடத்தேயுள்ள தீய எண்ணங்களை அகற்றி, நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டும், நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.  இது மிக்க்கடினமானதாக இருந்தால் அதிக முயற்சி செய்து அதை அடைந்திட வேண்டும். இதற்கு நிறைய சக்தி தேவை.  எனவே அதிக சக்தியை அடைவதற்கான வழியை யோசித்து பெற வேண்டும்.

நம் இந்திரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.  நல்ல விஷயங்களில் ஈடுபடுமாறு பழக்க வேண்டும்.  மற்றவர்கள் நம்மை நிந்திக்கும் போது அவர்களை மன்னிப்பதற்கு அதிக பலம் தேவை.  இந்த பலம் எங்கிருந்து கிடைக்கும்? நாம் இறைவனிடத்தில் சரணடைந்து விட்டால், அதிக பலம் பெற்று விடுவோம்.  இறைவன் மூலம் கிடைக்கும் சக்தியை கொண்டு இந்திரியங்களை வென்று விடலாம்.

பிருஹதாரன்ய உபனிஷத்தில், “ஒருவன் அன்பை முழுவதுமாக அனுபவித்திருந்தால் நமக்கு மனோபலம் அதிகரிக்கும் என்று கூறுகிறது.  எங்கெல்லாம் அன்பு வெற்றிடமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பக்தியால் நிரப்பலாம்.  மனப்பக்குவத்தை பக்தியினால் அடையலாம்.  பக்தியினால் அன்பை வளர்த்துக் கொள்ளலாம்.

குருவினிடத்தில் இருக்கும் பக்தியானது (சிரத்தையானது) அவருடைய சிஷ்யர்களுக்கு பயன்படும்.  பக்தியில்லாமல் பெறும் எந்த சக்தியும் பயனற்றதாகி விடும்.  வேதம் உரைக்கும் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்தால்தான் நம்மிடம் உள்ள பக்திக்கு பயனுண்டு.  நம்முடைய மனம் யார் மீது அன்பு செலுத்துகிறதோ அவர் சொல்லுக்கு கட்டுபடுவோம்.  வேதம் கூறும் உபதேசத்தின் மீது சிரத்தை இருந்தால்தான் நம் மனம் தூய்மையடையும்.  இறைவன் மீது செலுத்தும் பக்திதான் நமக்கு இந்த சிரத்தையைக் கொடுக்கும்.  பக்தன் என்றால் தர்மத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும்.  மனோபலம், மனப்பக்குவம், மனத்தூய்மை துரிய பிராரப்தத்தை மாற்றக்கூடியது.

இறைவன் மீதுள்ள பக்தி பலவிதமான செயல்களில் வெளிப்படும்.  எந்த செயலைச் செய்தாலும் அதற்கென்று நிச்சயமாக பலனுண்டு.  பக்தியினால் செய்யும் செயலால் நமக்கு கிடைக்கும் பலன் புண்ணியம்.

இரண்டு வகையான பிராரப்தம் உள்ளது. ஒன்று பிரபல பிராரப்தம் மற்றொன்று துர்பல பிராரப்தம்.
பிரபல பிராரப்தம்: மாற்ற முடியாத நாம் அனுபவிக்கும் கர்ம பலன்கள்
துர்பல பிராரப்தம்: மாற்றத்தகுந்த நம்மை அடையும் கர்ம பலன்கள்

பக்தியினால் அடையும் புண்ணியம் இந்த துரிய பிராரப்த கர்ம பலனை மாற்றக்கூடிய சக்தி நமக்கு கிடைக்கும்.  ஆனால் மாற்ற முடியாத பிரபல பிராரப்தம் இது நீங்காது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்.  இதை கர்மயோகத்தின் மூலம் அழித்து விடலாம்.  கர்மத்தை யோகமாக செய்பவன் கர்மயோகி என்று அழைக்கப்படுவான்.  இவன் நிஷ்காம பக்தியில் முதல் படியில் இருப்பவன்.  பிறகு உபாஸகனாக இரண்டாவது படிக்கு சென்று பின்பு மேலே உயர்ந்து விஸ்வரூப பக்தனாகிறான்.

விஸ்வரூப பக்தன்:

இறைவனைப் பற்றிய மேலும் பல தத்துவங்களை அறிந்தவன், இந்த உலகத்திற்கு நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருப்பவர் இறைவனே என்று அறிந்து கொண்டவர்.  இந்த உண்மையை அறிந்து பக்தி செலுத்திக் கொண்டு இருக்கும் பக்தன் விஸ்வரூப பக்தன் அழைக்கப்படுவான்.  எனவே நாம் பார்க்கும் அனைத்துக்கும் ஈஸ்வரன் உபாதான காரணமாக இருப்பதால், எல்லாவற்றையும் ஈஸ்வரனாகவே கருதும் மனப்பக்குவம் வந்து விடும்.  இந்த அறிவை அப்யாஸம் செய்து கொண்டிருப்பார்கள்.  இந்த அறிவில் நின்று பழகுவதுதான் இவர்கள் பக்தி வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

இவர்கள் அடையும் பலன்:

இவர்களிடத்தில் இருக்கும் சக்திகள் எல்லாம் ஈஸ்வரன் உடையதாக எண்ணிக் கொள்கிறார்கள்.  அதே போல உலகத்திலுள்ள எல்லா ஐஸ்வர்யங்களும் ஈஸ்வருனுடையதே என்ற எண்ணம் வரும்போதுதான், அவனிடத்தில் உள்ள பொறாமை போன்ற தீய எண்ணங்கள் நீங்கி விடும்.

இந்த விஸ்வரூப பக்தனின் அடுத்த நிலையான நிர்குண பிரம்ம பக்தனாக உயர்வடைகிறான்.  இந்த நிலையில் இதுவரை ஈஸ்வரனை வேறாக எண்ணிக் கொண்டு பக்தி செலுத்திக் கொண்டு வந்தானோ அந்த ஈஸ்வரன் என்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் என்று உணர்கிறான்.  என்னிடத்தில் உள்ள அகங்காரம்தான் என்னை ஈஸ்வரனை வேறாக நினைக்க வைத்துக் கொண்டிருந்த்து.  அவனுடைய ஆத்ம விசாரத்தினால் ஈஸ்வரனும் என்னுடைய ஆத்ம ஸ்வரூபமும் வேறல்ல என்ற அறிவை அடைகிறான்.  இப்போதுதான் சாத்திய பக்தியை அடைகின்றான்.

பக்தியே பாதை, பக்தியே இலட்சியம், நானே ஈஸ்வரன் என்று உணரும் போது தன்னை எப்படி மற்றவர்கள் நடத்த வேண்டும் என்று நினைக்கிறானோ அதே மாதிரிதான் இவன் மற்றவர்களை நடத்துவான்.  இந்த உலகத்திலுள்ள எதுவும் அவனுக்கு துயரத்தைக் கொடுக்காது.  உடலுக்கு துன்பம் வரலாம், அது அனுபவிக்க வேண்டிய ப்ராரப்தின் காரணமாகும்.  இவன் யாருக்கும் துயரத்தைக் கொடுக்க மாட்டான், அதே மாதிரி இந்த உலகம் அவனுக்கு துயரத்தைக் கொடுக்கும் சக்தி இழந்து விடும்.  இப்படி அன்பே சிவமாக வாழ்வது ஜீவன் முக்தி, இறந்த பின் விதேக முக்தி அடைகிறான்.


--- ஓம் தத் ஸத் ---

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...