வேதத்தின் முதல் பகுதியானது நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை உபதேசிக்கிறது। இறுதி பகுதியானது வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை உபதேசிக்கிறது।
தர்மப்படி வாழாமல் இருப்பவனால் ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது। தர்மப்படி வாழ்ந்து கொண்டிருபவன்தான் வேதந்தத்திற்கு வரமுடியும்।
நாம் சாஸ்திரம் உரைக்கும் விதிப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கருத்தின் அடிப்படையில் சங்கரர் உபநிஷத்திற்கு விளக்கம் எழுதியிருக்கிறார்।
சித்தாந்தம் : உபதேசத்தின் மையக்கருத்து।
சங்க்ரஹ: படிப்படியாக முறையாக விளக்கப்பட்டிருப்பது।
இந்த நூலில் முதல் 250 ஸ்லோகங்கள் மோட்சத்தை அடைவதற்கு தேவையான தகுதிகளை எடுத்து வைக்கிறது
முதல் மூன்று ஸலோகங்கள் பிரார்த்தனை ஸலோகங்கள் ।
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கப்படுகிறது।
ஸ்லோகம்-1
अखण्डानन्दसम्बोधो वन्दनाद्यस्य जायते ।
गोविनदं तमहं वनदे चिदानन्दतनुं गुरुम् ॥
அஹம் குரும் வந்தே கோவிந்தம் – குரு கோவிந்த பகவானுக்கு நமஸ்காரம்.
கோவிந்தம் - வேத ஸப்தத்தினால் அறியப்படுபவன்.
யஸ்ய வந்தனாத் ஸம்போத ஜாயதே – குருவின் உதவியால் தெளிவான ஞானம் வந்தடையட்டும். குரு என்பவர் முறையாக வேதத்தை சீடர்களுக்கு உபதேசிப்பவர்.
அகண்டானந்தா – நிலையான முழுமையான மனநிறைவு.
சிதானண்ட தனும் குரும் – ஞானத்தையடைந்த குருவுக்கு நமஸ்காரம். குருவானவர் சைதன்ய ஆனந்த ஸ்வரூபமானவர்.
ஸ்லோகம்-2
अखणडं सच्चिदान्दमवाड्मनसगोचरम् ।
आत्मानमखिलाधारमाश्रयेऽभीष्टसिद्धये ॥
அகங்கார பார்வையில் ஈஸ்வரன் எனது கடவுள்
சாக்ஷி பார்வையில் நானே ஈஸ்வரன்.
அகண்டம் – பிளவுபடாதவர் – ஆகாசத்தைப்போல் பிளவுபடாமல் எங்கும் நிறைந்திருக்கின்ற.
சச்சிதானந்தம் – ஸத்- இருத்தல், சித் – உணர்வுமயமானதும், அறிவுபூர்வமானதும், ஆனந்தம்- முழு மன அமைதியுடனும்,
அவாங் மனஸ் அகோசரம் – இந்திரியங்களால் அறியப்படாவராகவும்,
ஆத்மானம் – எனக்குள் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்ற
அகிலாதாரம் – அனைத்திற்கும் ஆதாரமாகவும், புகலிடமாகவும் இருக்கின்ற
அபீஷ்ட ஸித்தயே – என்னுடைய குறிக்கோளை அடைவதற்கு
உன்னிடம் சரணடைகின்றேன்.
ஞானிகளின் ஆசைகளானது அவரை கட்டுப்படுத்தாததாகவும், தார்மீகமானதாகவும் இருக்கும். இந்த ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் அதனால் அவர் மனமானது சஞ்சலப்படாது எந்த விகாரமும் அடையாது, பாவ புண்ணியங்களையும் கொடுக்காது, வருத்தமுமடையாது.
நம்மை கட்டுப்படுத்தாத ஆசைகளினால் நமக்கு எந்தவிதமான கெடுதலும் கிடையாது. அவைகள் நிறைவேறாவிட்டால் கோபமும், ஆத்திரமும் எரிச்சலும் ஏற்படாது. அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வேகமும், எதிர்ப்பார்ப்பும் ஏற்படாது, இவ்வகையான ஆசைகளை தூய்மையான ஆசைகள் என்று அழைக்கப்படுகிறது. நம்மிடத்தே உள்ள அசுத்த ஆசைகளை நீக்க வேண்டுமென்றால் வேதாந்தத்தை பரம்பரையில் வந்த குருமுகமாக படிப்பதுதான் ஒரே வழி.
ஸ்லோகம்-3
यदालम्बो दरं हन्ति सतां प्रत्यूहसंभवम् ।
तदालम्बो दयालम्बं लम्बोदरपदाम्बुजम् ॥
லம்போதரம் – பானை போன்ற வயிறு உடையோனே
பதாம்புஜம் – தாமரை போன்ற பாதங்களை உடையவனே
தத் அஹம் ஆலம்பே – உங்களை நான் சரணடைகின்றேன்.
தயாலம்பம் – தயாள குணத்தையுடையோனே
யத் ஆலம்பம் – உன்னுடைய அருளை நாடுவதற்கு காரணம்
தரம் ஸதாம் ப்ரத்யூஹம் ஹந்தி– என் முயற்சிக்கு வரும் தடைகளை அழித்து விடுவாயாக.
சம்சாரத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் எனக்கு அதை நிறைவேற விடாமல் தடுக்கும் தடைகளை நீக்குவாயாக.
ஹந்தி – அழித்து விடுவாயாக.
ஸதாம் – உன்னுடைய பக்தர்களுக்கு, தங்கள் உதவியை நாடுபவர்களுக்கு
ப்ரத்யூக சம்பவம் – தடைகளால் வரும் பயம்
பயமற்ற தன்மை ஜீவனுடைய இயற்கையான ஸ்வரூபம். அதை அடைய வேண்டும், உணர வேண்டும் என்ற முயற்சிக்கு வரும் தடைகளை நீக்கி அருள் புரிய வேண்டும். வேத ஞானம் எனக்கும் அறியாமைக்கும் இடையே இருக்கும் தடைகளை நீக்கி பயமற்ற ஸ்வரூபத்தை அடைய உதவி புரிய வேண்டும்.
ஸ்லோகம்-4
वेदान्तशास्त्रसिद्धान्तसारसंग्रह उच्यते ।
प्रेक्षावतां मुमुक्षूणां सुखबोधोपपत्तये ॥
வேதாந்த சாஸ்திரம் – ஜீவர்கள் தங்களுடைய உண்மையான ஸ்வரூப ஞானத்தை அடைவதற்கு உதவி செய்யும் வாக்கியங்களையுடைய வழிகாட்டி.
சித்தாந்தஹ – யுக்திபூர்வமாகவும், பலவிதமான விசாரத்தினாலும் அடைகின்ற முடிவு
ஸார ஸங்கிரஹ – சுருக்கமாகவும்,தெளிவாகவும்
உச்யதே – சொல்லப்பட்டிருக்கின்றது.
ப்ரோக்ஷா வதாம் – புத்திசாலிகளுக்கும், நித்ய-அநித்ய வஸ்துவை பிரித்துணரும் அறிவுடையவர்களுக்கும், ஞானத்தை அடைவதற்கு தேவையான அடிப்படை அறிவை
முமுக்ஷூனாம் – ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையையுடைவர்களுக்கு
உடையவர்களுக்கும்
ஸூகபோதே உபபத்தயே – முறையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
ஸ்லோகம்-5
अस्य शास्त्रानुसारित्वादनुबन्धचतुष्ट्यम् ।
यदेव मूलं शास्त्रस्य निर्दष्टं तदिहोच्यते ॥ ५ ॥
அஸ்ய – இந்த புத்தகம்
சாஸ்திர அனுஸார அனுபந்த சதுஷ்டயம் மூலம் – வேதாந்த சாஸ்திரத்தை பற்றி கூறுவதால், அதன் அனுபந்த சதுஷ்டயமே இதனுடையதாகும்.
ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால், எழுதப்போகின்ற விஷயத்தைப் பற்றிய முழுமையான அறிவு இருக்க வேண்டும். புத்தகத்திலிருக்கும் விஷயங்கள் சொல்ல விரும்புகின்ற கருத்து படிப்பவர்களுக்கு தெளிவாக புரியும்படி இருக்க வேண்டும்.
உதாரணமாக நாம் மற்றவர்களிடம் உரையாடும்போதோ, மேடையில் பேசும்போதோ எந்த விஷயத்தை புரிய வைக்கவேண்டும் அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். அரைகுறையான அறிவோடு எதையும் பேசக்கூடாது. நேரத்தை வெறுமனே போக்குவதற்காகவோ, மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதற்கான வெட்டி பேச்சாகவோ இருக்கக் கூடாது.
ஒரு புத்தகம் எழுதுவதற்கு சாஸ்திரம் நான்கு வகையான விதிகளை கூறுகிறது.
1. யார் இந்த புத்தகத்தை படிக்கலாம் என்று சொல்ல வேண்டும்.
2. எந்த விஷயத்தைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்
3. எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கும், படிப்பவர்களுக்கும் இடையே உள்ள சம்மந்தத்தை தெரிவிக்க வேண்டும்.
4. புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் குறிப்பிட வேண்டும்.
இந்த நான்கு விதிகளையே அனுபந்த சதுஷ்டயம் என்ற் சாஸ்திரம் கூறுகிறது.
நம்முடைய பேச்சோ, எழுத்தோ மற்றவர்களுக்கு இதமாகவும், உபயோகமாகவும், யார் மனமும் புண்படாததாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக அவர்களுக்கு சம்மந்தமுடையதாக இருக்க வேண்டும். உதாரணமாக கணிதத்தில் ஆர்வமுடையவர்களிடம், ரசாயன பாடத்தைப் பற்றிப் பேசுதல் அவர்களுக்கு பயனும் அளிக்காது, எரிச்சலையே உண்டு பண்ணும், ஆனால் ரசாயன பாடத்தில் ஆர்வம் உடையவர்களுக்கு மகிழ்ச்சியையும், பலனையும் அளிக்கும்.
ஸ்லோகம்-6
अधिकारी च विषय: सम्बन्धश्र्च प्रयोजनम् ।
शास्त्रारम्भफलं प्राहुरनुबन्धचतुष्टयम् ॥ 6 ॥
1. இந்த புத்தகம் யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த புத்தகத்தை எப்படிபட்ட அறிவுடையவர்களுக்கு எழுதுகிறேன் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
2. எழுதப்போகும் விஷயத்தைப் பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும். எழுதும் ஆசிரியருக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு இருக்க வேண்டும்.
3. இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்ற விஷயத்திற்கும் படிப்பவருக்கும் இடையே இருக்கும் சரியான சம்பந்தத்தையும் தெரிவிக்க வேண்டும்.,
4. இதைப் படிப்பதினால் நான் அடையும் பலன் என்ன என்பதைப் பற்றியும் தெரிவித்திருக்க வேண்டும்,
மேலே குறிப்பிட்டிருக்கும் நான்கு விதிகளையே சாஸ்திரம் அனுபந்த சதுஷ்டயம் என்று அழைக்கிறது. இந்த விதிகளுடன் கூடிய எந்தப் புத்தகமும் படிப்பவரையும் ஆசிரியரையும் இணைத்து வைக்கும், படிக்கும் விஷயமும் பலனைக் கொடுக்கும்.
ஸ்லோகம்-7 (அதிகாரியைப் பற்றிய விளக்கம்)
चतुर्भि: साधनै: सम्यक्सम्पन्नो युक्तिदक्षिण: ।
मेधावी पुरुषो विद्वानधिकार्यत्र संमत: ॥ 7 ॥
வேதாந்தத்தை படிப்பதற்கு தகுதியுடையவர் யார்?
சதுர்பிஹி சாதனைஹி சம்யக் சம்பன்ன – நான்கு வகையான தகுதிகளை நன்கு உடையவன் தான் வேதத்தை படிப்பதற்கு முழு தகுதியுடையவன்.
யுக்தி தக்ஷிணஹ – யுக்தி அறிவையுடைவன்
நம் புத்தியானது யுக்திபூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். எந்த ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றாலும் நமக்கு நான்கு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அவைகள்:
1. அடைய நினைக்கும் இலக்கில் உறுதியாக, தெளிவாக இருக்க வேண்டும்.
2. அதை அடைய உதவும் வழிமுறைகளுக்கும் இலக்கிற்கும் இடையே உள்ள உறவை நன்கு புரிந்திருக்க வேண்டும்.
3. இலக்கை அடையும் வழிமுறைகள்
4. அந்த இலக்கை அடைவதற்கு தகுதியுடையவன்தானா என்றும் தெரிந்து இருக்க வேண்டும்,
மேதாவி – விஷயத்தை சரியாக கிரகிக்கும் திறனுடையவர், கூர்ந்து கவனிக்கும் ஆற்றலுடையவர், கேட்டதை நடைமுறையில் பயன்படுத்தும் திறனுடையவர்.
வித்வான் – வேதாந்தத்தை சார்ந்துள்ள கர்மயோகம், பக்தியோகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் கூடிய அறிவுடையவர், யுக்திபூர்வமாக சிந்திக்கும் திறனுடையவர். இவைகள் வேத உபதேசத்தை தெளிவாகவும், விரைவாகவும் புரிந்து அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் மனபக்குவத்தை கொடுக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் உடையவர்தான் வேதாந்தத்தை படிப்பதற்கு தகுதியானவர்.
அத்ர சம்மதஹ – இது எல்லோராலும் ஒருமனதாக் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம்-8
विषयः शुद्धचैतन्यं जीवब्रह्मैकयलक्षणम् ।
यत्रैव दृश्यते सरवेदान्तानां समन्वयः ॥ 8 ॥
விஷயஹ - இந்த ப்ரகரணத்தில் கூறப்பட்டிருக்கின்ற விஷயாமானது ஜீவ-பிரம்ம ஐக்கியம். இங்கே ஐக்கியம் என்பதை ஒன்று சேர்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஜீவன், பிரம்மன் இரண்டும் வெவ்வேறு அல்ல, இரண்டும் ஒன்றையே குறிக்கும் இரு சொற்கள்தான். அந்த ஒன்றை அறிந்து கொள்ள உதவும் விஷயங்கள்தான் இதில் கூறப்பட்டிருக்கின்றது.
சுத்த சைதன்யம் – பரபிரம்மன், பரமாத்மா
யத்ர எவ ஸர்வ வேதாந்த ஸமன்வயஹ – வேதாந்த த்தில் உள்ள எல்லா வாக்கியங்களும் அந்த ஒன்றை பற்றித்தான் உபதேசிக்கின்றது.
ஸ்லோகம்-9
एतदैक्यप्रमेयस्य प्रमाणस्यापि च श्रुतेः ।
सम्बन्धः कथ्यते सद्भिर्बोध्यबोधकलक्षणः ॥ 9 ॥
என்னை அறிவதுதான் என்னுடைய முடிவான குறிக்கோள் என்றால் அதை அடைவதற்கு ஏன் வேதாந்தம் படிக்க வேண்டுமென்றால், வேதாந்தம்தான் அதை அறிய வைப்பதற்கான ஒரே ஒரு பிரமானம் எனவே அதை குருமுகமாக படிக்க வேண்டும்.
கண்ணாடியில் தெரியும் நம் பிம்பம் சரியாக தெரிய வேண்டுமென்றால், கண்ணாடியில் உள்ள அழுக்கை நீக்க அதை நன்கு துடைக்க வேண்டும் அல்லது நம் கண்களை சரி செய்ய வேண்டும். அந்த பிம்பத்தை ஒன்றும் செய்ய தேவையில்லை. அதுபோல என்னை அறிவதற்கு திரும்ப திரும்ப வேதாந்தத்தை படிப்பதை தவிர வேறு வழியில்லை.
ஏதத் ஐக்ய ப்ரமேயஸ்ய – இந்த ஐக்கியத்தை அறிவதற்கு (குறிக்கோள்)
ப்ரமான ஸ்யாபி – உபநிஷத்தான் ஒரே வழி (குறிக்கோளை அடைவதற்கு)
சம்பந்த கத்யதே போதக போத்ய லக்ஷணை – படிப்பவனுக்கும், படிக்கப்படும் விஷயத்திற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது. எனவே உபநிஷத்தை குருமுகமாக முறையாகவும், அறிவு அடையும் வரை தொடர்ந்தும் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஸத்பிஹி – இது கற்றறிந்த சான்றோர்களாக் கூறப்படுகின்றது.
ஸ்லோகம்-10
ब्रह्मात्मैकविज्ञानं सन्तः प्राहुः प्रयोजनम् ।
येन निःशेषसंसारबन्धात्सद्यः प्रमुच्यते ॥ 10 ॥
எந்தவொரு படிப்பும் அதற்கேற்ற அறிவைக் கொடுக்கும். அதுபோல வேதாந்தத்தை படிப்பதனால் ஆத்மஞானத்தை-ஜீவ-ஈஸ்வர ஐக்கிய அறிவை அடைவோம். இந்த அறிவினால் என்ன கிடைக்கும் என்றால் சம்சார பந்தத்திலிருந்து நம்மை விடுவித்து மோட்சத்தைக் கொடுக்கும் எனவே இதை பரா வித்யா என்றும் கூறுவர். இந்த பராவித்யா நான் யார் என்ற தத்துவத்தை புரிய வைக்கும், அதாவது அகங்கார நான் என்ற நிலையிலிருந்து நானே ஈஸ்வரன் என்ற நிலைக்கு கொண்டு செல்லும். இதை தவிர அறிவக்கொடுக்கும் மற்ற அனைத்தும் அபராவித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
யேன – இதிலிருந்து
ஸத்ய ப்ரமுச்யதே – நான் யார் என்று அறிவை அடைந்தவுடனே நானே ஈஸ்வரன், நானே பிரம்மன் என்ற ஞானம் ஏற்பட்டு விடும். இதுவே ஜீவன் முக்தி நிலையாகும்.
நிஹ்சேஷ சம்சார பந்தாத் – இந்த அறிவானது முழுமையாக சம்சார பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.
இதுவே ஜீவன் முக்தி, இதுவே இந்த நூலை படிப்பதனால் அடையும் பலன்.
வேதாந்த சாஸ்திரம் படிப்பதினால் அறியாமை என்னும் இருள் நீங்கி, இந்த உலகத்தை நாம் அதன் உண்மையான தன்மையான மித்யத்வத்துடன் அணுகுவோம். நான் யார் என்பதை எந்தவித சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டுவிடுவோம் அந்த ஞான நிஷ்டையிலே நிலைத்து நிற்போம். ஜீவனுக்கும் ஜகத்திற்கும் உள்ள உறவும், ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே உள்ள உறவும், ஈஸ்வரனுக்கும் ஜகத்துக்கும் இடையே உள்ள உறவும் நன்கு புரிந்து விடும்,
ஸ்லோகம்-11
प्रयोजनं संप्रवृत्तेः कारणं फललक्षणम् ।
प्रयोजनमनुद्दिश्य न मन्दोऽपि प्रवर्तते ॥ 11 ॥
ஒரு பொருளோ, பதவியோ அல்லது இதைப்போன்ற ஏதோ ஒன்றை அடைவதால் அடையும் பலனானது மனதில் ஆசையை உண்டாக்கும். இந்த ஆசையானது அதை அடையும் செயலில் ஈடுபடுத்தும். அதை அடையும் வரை மனதில் நிம்மதி ஏற்படாது. அடைவதி தோல்வியடைந்தால் வருத்தமும், கோபமும் உண்டாகும், மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும், அடைந்துவிட்டாலோ அதை விட்டுவிட்டு வேறொன்றை நாடும். இது தொடர்ந்து நடைபெறும் ஒரு முடிவில்லா பயணம்.
எத்ர எத்ர காமஹ தத்ர தத்ர ப்ரவிருத்திஹி, காம அபாவஹ ப்ரவ்ருத்தி அபாவஹ என்ற வேத வாக்கியங்கள் இதை உறுதி செய்கின்றன.
ப்ரயோஜனம் ஸ்ம்ப்ரவ்ருத்தே – பலன் செயலில் ஈடுபட வைக்கும்
காரணம் பல லக்ஷணம் – பலனுடைய தன்மைதான் இதற்கு காரணம்
ப்ரயோஜனம் அனுத்திஷ்ய - பலனில்லாத விஷயத்தில்
ந மந்தோ அபி ப்ரவர்ததே – மந்தப்புத்தியுடையவன் கூட ஈடுபடமாட்டான்.
நிஷ்காம கர்மம் – பலனில் பற்றில்லாமல் செய்யப்படும் செயல்.
ஸ்லோகம்-12 (அதிகாரி யார் என்பதை விளக்குகிறது)
साधनचतुष्टयसंपत्तिर्यस्यास्ति धीमतः पुंसः ।
तस्यैवैतत्फलसिद्धिर्नान्यस्य किंचिदूनस्य ॥ 12 ॥
ஸாதன சதுஷ்ட ஸ்ம்பத்தி – நான்கு வகையான தகுதிகள், இவைகளை செல்வங்களாக கருதப்படுகிறது.
யஸ்ய அஸ்தி தீமத பும்ஸ – இவை நான்கும் இருந்தால்தான்
தஸ்யைவைதத் பல ஸித்திஹி - வேதத்தை படிப்பதானால் கிடைக்கும் பலனை அடைய முடியும்.
ந அன்யஸ்ய கிஞ்சிதனுஸ்ய – இந்த தகுதிகளைத் தவிர வேறெதனாலும் வேத படிப்பதனால அடையும் பலனான ஆத்மஞானத்தை அடைய முடியாது.
இந்த தகுதிகள் மனதை (அந்தகரணம்) அடிப்படையாக கொண்டது. இதுமட்டும்தான் வேத உபதேசத்தை ஆத்ம ஞானமாக மாற்றக்கூடிய சக்தியுடையது. யாருக்கு இவை நான்கும் முழுமையாக இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும்தான் ஜீவன் முக்தி கிடைக்கும், இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் நிச்சயமாக மோட்சம் கிடைக்காது. மந்த அதிகாரிக்கு சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இந்த மூன்று நிலைகளை கடந்தால்தான் மோட்சம், மத்திம அதிகாரிக்கு சிரவணம், மனனம் இவையிரண்டிலே மோட்சம் சித்திக்கும், தீவிர அதிகாரிக்கு சிரவணம் மட்டுமே போதும் மோட்சத்தை அடைவதற்கு.
ஸ்லோகம்-13
चत्वारि साधनान्यत्र वदन्ति परमर्षयः ।
मुक्तिर्येषां तु सद्भावे नाभावे सिद्धयति ध्रुवम् ॥ 13 ॥
பரமர்ஷ்யஹ – மிக மேலான ரிஷிகள்
வதந்தி – சொல்லியிருக்கிறார்கள்,
ஸாதன சத்வாரி – சாதன சதுஷ்டய தகுதிகள் (கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் இவைகள் மோட்சத்தை அடைய உதவும் கருகிகள் மட்டுமே)
அன்யத்ர – இதைத் தவிர்த்து
ஏஷாம் ஸத்பாவே – இந்த நான்கு தகுதிகளனைத்தும் முழுமையாக இருந்தால்
முக்தி பவேத் – முக்தி அடையலாம்.
அபாவேத் ந ஸ்த்தியதி – இவைகள் இல்லையென்றால் மோட்ச பலனை அடைய முடியாது.
த்ருவம் – இது நிச்சயம்.
ஸ்லோகம்-14, 15
आद्यं नित्यानित्यवस्तुविवेकः साधनं मतम् ।
इहामुत्रार्थफलभोकविरागो द्वितीयकम् ॥ 14 ॥
शमादिषट्कसंपत्तिस्तृतीयं साधनं मतम् ।
तुरीयं तु मुमुक्षुत्वं साधनं शास्त्रसंमतम् ॥ 15॥
ஆத்யம் சாதனம் – முதலாவது தகுதி
நித்ய அநித்ய வஸ்து விவேகஹ – நிலையான, நிலையற்ற பொருளை பற்றிய அறிவு,
இஹாமுத்ரா பலபோக விராகோ (வைராக்யம்) – இவ்வுலகம் மற்றும் பரலோகத்தில் உள்ள இன்பம் கொடுக்கும் பொருட்களிடத்தோ, விஷயங்களிடத்தோ, உயிர்களிடத்தோ விலகி இருத்தல், நாடாமல் இருத்தல். புலன்களினால் அடையும் இன்பத்தை நாடாமல் இருத்தல், விலக்கி வைத்தல். இதுவே இரண்டாவது தகுதி.
ஷமாதி ஷட்க ஸம்பத்தி ( செல்வம்) – சமம் போன்ற ஆறு வகையான செல்வங்கள், ஒழுக்கங்கள். சமம், தமம், திதிக்ஷா, உபரம, சிரத்தை, சமாதானம் இந்த ஆறு வகையான மன ஒழுக்கங்கள் நம்மிடத்தே என்றென்றும் இருந்தால் மனதும் அமைதியுடனும், நிம்மத்தியுடனும், நம் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். இவை ஆறும் சேர்ந்து மூன்றாவது தகுதியாகிறது
துரியம் து ஸாதனம் முமுக்ஷூம் – நான்காவது தகுதியானது முமுக்ஷூத்வம், மோட்சத்தை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசை, ஒரே ஒரு ஆசை. இந்த பலனானது மேலே குறிப்பிட்ட நான்கு தகுதிகளுடன் குருமுகமாக வேதத்தை படிப்பதனால் அடையலாம்.
சாஸ்திர சம்மதம் - சாஸ்திரம் இவ்வாறு உரைக்கிறது.
1. Discrimination ( Viveka )
2. Detachment ( Vairagyam ) or dispassion
3. Discipline
4. Desire for Moksha
இவ்வுலக அவ்வுலக இன்பம் தரும் விஷயங்களை அடைய வேண்டும் என்ற ஆசைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று இரண்டாவது தகுதியாக கூறப்படுகிறது ஆனால நான்காவது தகுதியானடு மோட்சத்தை அடைய ஆசைப்படு என்று கூறுவது முரண்பாடாக தோன்றினாலும், இதில் மோட்ச ஆசை மட்டும் விதிவிலக்காக கொள்ள வேண்டும், இந்த ஒன்றை அடைய வேண்டும் என்ற ஆசையை தவிர மற்ற அனைத்தையும் விலக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு மற்ற அனைத்து ஆசைகளை விலக்கி விடுவதால், நாம் நம்மையறியாமலே வேதத்தை படிக்கும் நிலைக்கு கொண்டு செல்லப்படுவோம். எனவே மோட்சத்தை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் வேதத்தை படிக்கும் போது நம் மனநிலையும் நமக்கு ஒத்துழைக்கும் அதனால் மோட்ச பலனை நிச்சயம் அடைந்து விடுவோம். இந்த ஆசையில்லாமல் படிப்பது வெறும் அறிவை மட்டும்தான் கொடுக்கும் முக்தியான மோட்சத்தை கொடுக்காது.
ஸ்லோகம் 16-21 விவேகத்தை பற்றி விவரிக்கிறது
ஸ்லோகம்-16
ब्रह्मैव नित्यमन्यत्तु ह्यनित्यमिति वेदनम् ।
सोऽयं नित्यानित्यवस्तुविवेक इति कथ्यते ॥ 16 ॥
वेदनम् – அறிவு,
பிரம்மத்தைப் பற்றியும், அதை தவிர்த்து உள்ள மற்ற
அனைத்தை பற்றிய அறிவு.
ब्रह्मैव नित्यम – பிரம்மன் மட்டும்தான் நிலையானது, இதையே
ஈஸ்வரன் என்று குறிப்பால் அழைக்கின்றோம்.
अन्यत्तु
ह्यनित्यमिति
– பிரம்மத்தை தவிர
மற்றனைத்தும் நிலையற்றது,
மாற்றத்திற்குள்ளானது. எல்லா அனாத்மாக்களும் தொடர்ந்து
மாறிக் கொண்டே இருக்கும் தன்மையுள்ளதால், நாம் மனிதர்களான அனாத்மாக்களிடம்
ஒரே மாதிரியான குணத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதை நன்கு உணர்ந்து கொண்டால் மற்றவர்களுடைய
திடீர் குணமாற்றத்தால் நமக்கு ஏமாற்றம் ஏற்படாது.
इति वेदनम् – இதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்-17
मृदाधिकारणं नित्यं त्रिषु कालॆषु
दर्शनात् ।
घटाद्यनित्यं तत्कार्यं यथ्स्तन्नाशईक्ष्यते ॥ 17 ॥
இந்த
அறிவானது சுலபத்தில் நம்மால் அடைய முடியாது. இந்த அறிவை அடைந்தாலும் அது நம்முடைய
சுபாவமாக மாற வேண்டும். சாஸ்திரம் வரையறுத்த மூன்று வகையான ஆசிரம தர்மங்கள் இந்த அறிவை அடைவதற்கு ஏதுவாக
இருக்கும். இந்த அறிவை அடையும் எல்லா வழிகளையும் பின்பற்றி உறுதியாக
அடைந்திட வேண்டும். மூன்று வகையான வழிகள் கூறப்படுகின்றது.
அவைகள் 1. ப்ரதியக்ஷ பிரமானம்-
நம் அனுபத்திலிருந்து அறிந்து கொள்வது,
2. சாஸ்திர பிரமானம் – ஈஸ்வரனை பிடித்துக் கொண்டு அவரைத்
தவிர மற்ற அனைத்தும் நிலையற்றவைகள் என்ற அறிவை அடைவது, 3. தர்க்க
பிரமானம் - யுக்தியின்
மூலமாகவும், தர்க்கத்தின் மூலமாகவும் இந்த அறிவை அடைவது,
உதாரணமாக எவையெல்லாம் உண்டாக்கப்படுகின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியது,
களிமண்ணால் உருவாக்கப்படும் அனைத்தும் அழியக்கூடியது ஆனால் களிமண் நிலையானது,
அதுபோல பிரம்மத்தால் உருவாக்கப்பட்ட இந்த உலகமும் அதில் இருக்கின்ற அனைத்தும்
நிலையற்றவை அழியக்கூடியது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்-18
तथैवतज्जगत्सर्वमनित्यं ब्रह्मकार्यत: ।
त्त्कारनं परम् ब्रह्म भवेन्नित्यं मृदादिवत् ॥ 18 ॥
இந்த
உலகம் உருவாக்கப்பட்டதாக இருப்பதால் இது நிலையற்றது, அழியக்கூடியது என்று புரிந்து
கொள்ள வேண்டும்.
ஸர்வ
ஜகத் அநித்யம்
– இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் நிலையற்றவைகள்.
ப்ரஹ்ம
காரியதஹ
– இவைகள் பிரம்மத்தால் உருவாக்கப்பட்டவை.
ப்ரம்மன்
நித்யதஹ தத் காரணம்
– இந்த ஜகத்திற்கு காரணமாக இருக்கின்ற பிரம்மன் நிலையானது.
ம்ருதாவத் – களிமண்ணைப்
போன்று பிரம்மன் நிலையானது.
ஸ்லோகம்-19
सर्ग वक्त्यस्य तस्माद्वा एतस्मादित्यपि श्रुतिः ।
सकाशाद्ब्रह्मणस्तस्मादनित्यत्वे न संशयः ॥ 19 ॥
இந்த
உலகமானது பிரம்மத்தால் உருவாக்கப்பட்டது என்று எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்றால்
வேத சாஸ்திர வாக்கியத்தின் அடிப்படையிலேதான் அறிந்து கொள்ள முடியும், நேரிடையான
அனுபவத்தினால் அறிய முடியாது. வேதமானது இந்த உலகம் பிரம்மத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக
உரைக்கிறது.
ஸ்லோகம்-20
सर्वस्यानित्यत्वे सावयवत्वेन सर्वतःसिद्धे ।
वैकुण्ठादिषु नित्यत्वमतिर्भ्रम एव मूढ्बुद्धिनाम् ॥ 20 ॥
பிரம்மத்தை தவிர அனைத்துமே எப்படி நிலையற்றதாக
இருக்க முடியும் என்ற கேட்கும்போது நாம் அனுபவிக்கும் அனைத்தும் கால தேசத்திற்கு உட்பட்டதாக
இருப்பதை புரிந்து கொண்டால் அவையனைத்தும் நிலையற்றது என்பதை புரிந்து கொள்ளல்லாம். எவையெல்லாம் கால, தேசத்திற்குட்பட்டதாக இருக்கின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியவை என்ற தர்க்கத்தின்
அடிப்படையில் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இதன் அடிப்படையில் எல்லாமும்
நிலையற்றவைகள் என்று உறுதி செய்யப்படுகிறது. வைகுண்டம், கைலாயம், பிரம்ம லோகம் போன்ற உலகங்களும் நிலையற்றவை.
सावयवत्वेन – உறுப்புக்கள் உடைய
எந்தப் பொருளும் நிலையற்றவை. நம்முடைய
தேகம் பல அவயவங்களை உடையது அதே சமயம் அழியக்கூடியது இந்த உதாரணத்தைக் கொண்டு இதை புரிந்து
கொள்ளலாம். இந்த உலகமே
பலவிதமான பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது, எனவே இது அநித்யம்,
அழியக்கூடியது என்று அறிய முடிகிறது. நம்முடைய அனுபவமே இந்த உண்மையை
உணர்த்துகின்றது. நம்மால்
அனுபவிக்கப்படுகின்ற பொருட்கள், உயிர்கள் மற்றும் பல பொருட்கள்
மாற்றங்களையடைந்து அழிந்து போவதை பார்க்கின்றோம். இந்த உண்மையை மூடர்களால் ஏற்றுக்
கொள்ள முடியாமல் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானது என்று நம்பி அதை தேடி ஒடுகிறார்கள்.
No comments:
Post a Comment