Tuesday, October 31, 2017

ப்ரஶ்ண உபநிஷத் - அத்தியாயம்-3 - பிராண சக்தியின் செயல்கள்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-3
பிராண சக்தியின் செயல்கள்
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது 20/04/2022
www.poornalayam.org
முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.
 
ஸ்லோகம்-01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||
 
கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:
  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?
ஸ்லோகம்-02
தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி
        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| 2 ||
 
நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ- சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.
 
ஸ்லோகம்-03
ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |
யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||
 
ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.
 
பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
 
பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.
 
 
ஸ்லோகம்-04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||
 
எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.
 
ஸ்லோகம்-05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:
ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||
 
அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.
 
இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.
 
ஸ்லோகம்-06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||
 
இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும். 
 
இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.
 
ஸ்லோகம்-07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||
 
உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது
 
மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.
 
ஸ்லோகம்-08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||

சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் - இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது
 
ஸ்லோகம்-09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||
 
உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.
 
ஸ்லோகம்-10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||
 
மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.
 
ஸ்லோகம்-11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||
 
எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.
 
ஸ்லோகம்-10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||
 
பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
 

சுருக்கம்

01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?
03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
04-10  பிராணனின் செயல்பாடுகள்
11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்
----oo000oo----

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...