Friday, April 27, 2018

வாக்கிய விருத்தி


வாக்கிய விருத்தி
ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்

ஸ்வாமி பரமார்த்தானந்தாவின் முகவுரை:
மனிதர்கள் அனைவரும் சுகத்தைத்தான் விதவிதமான வழிகளிலே அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சுகமானது நிலையானது, நிலையற்றது என்று இரண்டுவகையாக இருக்கிறது. கர்மகாண்டம் நிலையற்ற சுகத்தை அடைவதற்கான வழிகளையும், ஞானகாண்டம் நிலையான சுகத்தை அடைவதற்கான வழிகளையும் உபதேசிக்கிறது. 

உலகம் கொடுக்கும் சுகங்கள் நிலையற்றவை. அதை அனுபவித்து முடித்த பின்னர் துயரத்தைத்தான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நிலையான சுகம் வேண்டும் என்றால் அதை கொடுக்க கூடிய நிலையான வஸ்துவாக இருக்கின்ற பிரம்மத்தை நாட வேண்டும். அதை எப்படி அடைய வேண்டும் என்பதை உபநிஷத் உபதேசிக்கிறது. பிரம்மன் எது என்பதை தீர விசாரிக்கும் போது அது நானே என்றுதான் உபநிஷத்தின் மூலம் அறியப்படுகிறது.  நான் பிரம்மன் என்றால் அதை அடைய வேண்டிய அவசியமில்லை, உணர்ந்து விட்டாலே போதும்.  எனவே இதிலிருந்து பிரம்மன் என்றவொன்று அடைய வேண்டிய பொருளும் அல்ல, அறியக்கூடிய பொருளும் அல்ல என்று புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நானே பிரம்மன் என்று ஏற்றுக் கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய அனுபவத்தில் நான் துக்க ஸ்வரூபமாகவும், தேச,கால, வஸ்துவிற்கு வரையறுக்கப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் பிரம்மமோ எதனாலும் வரையறுக்கப்படாததாகவும், பூரணமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது.  எனவே இதை விசாரம் செய்துதான் உறுதியான முடிவுக்கு வரமுடியும்.  இதற்கு உபநிஷத் நமக்கு உதவி செய்கின்றது.  இதுவே மகாவாக்கிய விசாரம் என்று கூறுவர். சங்கராச்சாரியார் இந்த மகாவாக்கியத்தை இந்த நூலில் மிகவும் தெளிவாக விசாரம் செய்து கொடுத்திருக்கிறார்.

ஸ்வாமி குருபரானந்தாவின் முகவுரை
ஒரு பொருளை இரண்டுவிதமாக இழந்துவிட்டதாக கருதலாம். அது எங்கேயோ தொலைந்து விட்டிருக்கலாம் அல்லது தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தொலைந்துவிட்டதாக நினைக்கலாம்.  பத்தாவது மனிதன் என்ற உதாரணத்தில், பத்தாவது மனிதனாக தானே இருந்தும் அவன் தொலைந்துவிட்டான் என்று கருதிக் கொண்டிருப்பது இரண்டாவது வகையான இழப்புக்கு உதாரணம்.  அதைபோல என்றும் இருக்கின்ற வஸ்துவான பிரம்மத்தைப் பற்றிய வேதாந்த உபதேசத்தின்படி சிந்தித்து, தியானித்து அடையவேண்டும்.


கடவுள் வாழ்த்து
படைத்தல், காத்தல், அழித்தல் என்கின்ற மூன்று சக்திகளையுடைய ஈஸ்வரனுக்கு நமஸ்காரம். மாயையுடன் கூடியவராகவும், ஜகத்திற்கு தலைவராகவும், அனைத்தையும் அறியும் சக்தியுள்ளவராகவும், நாம-ரூபங்களாக காட்சியளித்துக் கொண்டு இருப்பவராகவும், பந்தங்களற்றவராகவும், ஆனந்தக் கடலாகவும் இருப்பவரும், மகாலட்சுமிக்கு கணவராக இருப்பவரும், குறைவற்ற எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவரும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்ற ஈஸ்வரனுக்கு நமஸ்காரம்.

யாருடைய உபதேசத்தினால் நானே பிரம்மன் என்ற அறிவையும், அனைத்தும் என்னிடத்தில்தான் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவையும் அடைந்து இருக்கின்றேனோ அந்த குருவுக்கு நமஸ்காரம். மேலும் என்னை எப்பொழுதும் ஆத்ம ஸ்வரூபமாகவும், இருத்தல் ஸ்வரூபமாகவும் அறிய வைத்தாரோ அந்த குருவினுடைய பாத கமலங்களை எப்போதும் வணங்குகின்றேன்.

யாரோவொருவன் மூலமாக மூன்றுவிதமான துயரங்களால் நன்கு வாட்டப்பட்டவனாக இருக்கிறேன். என்ற அறிவையும் அதேசமயம் விவேகத்தை அடைந்தவனாகவும் இருக்கிறேன் என்ற அறிவையும் அடைந்திருக்கின்றான். மனதில் சோர்வை அடைந்திருக்கின்றான், நிம்மதியை இழந்திருக்கிறான், துயரத்துடன் இருக்கின்றான், சோகத்துடன் இருக்கின்றான். சம, தம, உபரதி, திதிக்ஷா போன்ற தகுதிகளை அடைந்தவனாகவும், வைராக்கியத்தை அடைந்தவனாகவும் இருக்கிறான். இவனே முமுக்ஷூவாக இருந்து கொண்டு ஸ்ரோத்திரியனாகவும், பிரம்ம நிஷ்டனாகவும் இருக்கின்ற குருவை அடைந்து கேள்விகளை கேட்கின்றான்

மூன்று விதமான துயரங்களாவது 1. ஆதியாத்மிகம், 2. ஆதிபௌதிகம், 3. ஆதிதைவீகம்.
1.       ஆதியாத்மிகம் – ஸ்தூல, சூட்சும சரீர சம்பந்தமாக அடைகின்ற துயரங்கள். ஸ்தூல சரீர துயரங்களாவது வியாதி, வயோதிகம், மரணம் ஆகும். சூட்சும சரீர துயரங்களாவது மனிதில் உள்ள தீய குணத்தினால் அடையப்படுகின்றது. ஆசை, கோபம் போன்ற தீய குணங்களினால் அனுபவிக்கப்படுகின்ற துயரங்கள்.
2.       ஆதிபௌதிகம் – சூழ்நிலைகளினால் அடைகின்ற துயரங்கள்
3.       ஆதிதைவீகம் – இயற்கையிலிருந்து அடைகின்ற துயரங்கள், அதிக மழை, அதிக வெப்பம், புயல் போன்றவைகள்

குருபகவானே! “எதனால் இந்த சம்சாரம் என்கின்ற பந்தத்திலிருந்து நான்விடுபட முடியுமோ அந்த வழியை எனக்கு சுருக்கமாக, தெளிவாக கருணைக் கூர்ந்து அன்போடு எனக்கு கூறுங்கள்” என்று வேண்டினான்.

சீடனே! உன்னுடைய இந்த கேள்வி சரியானது என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கான பதிலை மிகத்தெளிவாக சொல்கிறேன். அதை. மிக கவனத்துடனும், மனவொருமுகப்பாடோடும் கேட்பாயாக.

சம்சார விடுதலைக்கு ஆத்மஞானம்தான் சாதனமாக இருக்கிறது. எந்த அறிவானது  ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை புரிய வைக்கின்றதோ அதுவே “தத்-த்வம்-அஸி” போன்ற மகாவாக்கியங்களிலிருந்து அடையப்படுகின்ற அறிவாகும். இதுதான் சம்சார விடுதலைக்கு சாதனமாக இருக்கின்றது.

ஜீவாத்மா என்பது என்ன என்றும், பரமாத்மா என்பவர் யார்? இருவருக்கும் ஒன்றாக இருக்கும் தன்மை எப்படி ஏற்படும்? தத்+த்வம்+அஸி போன்ற வாக்கியங்கள் எப்படி சம்சார விடுதலைக்கு உதவியாக இருக்கின்ற ஞானத்தை அடைய உதவி புரியும். இந்த வாக்கியம் எப்படி ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை போதிக்கிறது? என்று மேலும் நான்கு கேள்விகள் சீடனால் கேட்கப்பட்டது.

உன்னுடைய இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கின்றோம். உன்னைத் தவிர வேறாக ஜீவன் என்ற ஒருவன் இருக்கின்றான். நீயேதான் ஜீவாத்மாவாகவும், “நான் யார்” என்ற கேள்வி கேட்ட நீயேதான் பிரம்மனாகவும் இருக்கிறாய்.  இதில் சந்தேகமே கிடையாது

குருபகவானே! இப்போது கூட இந்த மகாவாக்கியத்தில் உள்ள சொற்களினுடைய அர்த்தமே என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கும் போது நான் பிரம்மனாக இருக்கிறேன் என்ற மகாவாக்கியத்தின் பொருளை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக கூறுங்கள்

சீடனே! நீ சொல்வது சரிதான்.  வாக்கியத்தின் பொருளை புரிந்து கொள்ளும் விஷயத்தில் எந்தவொரு கருத்து வேறுபாடும் இருக்கக்கூடாது.  ஒரு வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லினுடைய பொருளையும் அறிந்திருப்பதுதான் அந்த வாக்கியத்தின் முழு பொருளை புரிந்து கொள்வதற்கு காரணமாக இருக்கிறது.

ஜீவாத்மா சாட்சியாக இருக்கின்ற சைதன்ய ஸ்வரூபம், அந்தக்கரணத்தையும் அதில் உருவாகின்ற எண்ணங்களையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவே த்வம் (நான்) சொல்லின் லட்சியார்த்தமாகும். இது பூர்ணமாக, எல்லையற்றதாக, ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றது. எதனாலும் வரையறுக்கப்படாத இருத்தல் என்ற ஸ்வரூபமாகவும், சத்யமானதாகவும் இருக்கின்றது. இப்படி ஜீவாத்மாவான நீ இருந்து கொண்டு எதனால் உன்னை புரிந்து கொள்ளவில்லை.

நிலையான ஆனந்த ஸ்வரூபமாகவும், அந்தக்கரணத்திற்கு சாட்சியாக இருந்து கொண்டும், அதை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதும், ஞான ஸ்வரூபமாகவும் இருப்பதையே ஆத்மாவாக, இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். அனாத்மாவில் இருக்கும் ஆத்ம புத்தியை துறக்க வேண்டும்.  ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களில் நான் என்ற அபிமானத்தை விட்டுவிட வேண்டும்.

மூன்று சரீரங்களை பக்ஷமாக வைத்துக் கொண்டு இவைகள் ஆத்மாவல்ல என்ற சாத்தியத்தை அடைவதற்கு இவைகள் உருவங்களாக இருப்பதே காரணமாகிறது.  இது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது.  ஆத்மா அறிபவனாக இருப்பதால் அது பார்க்கப்படும் பொருளான சரீரத்திற்கு வேறாக இருக்கிறது. எதனால் ஸ்தூல சரீரமானது உருவம் போன்றவைகளுடன் இருக்கின்றதோ அதனால் ஆத்மாவல்ல (நானல்ல) பானைக்கு உருவமிருப்பதால் அது களிமண் அல்ல என்று நாம் அறிந்து கொள்வது போல ஸ்தூல சரீரம் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஸ்தூல உடல் மாற்றத்திற்குட்பட்டு இருப்பதலும் அது நானல்ல.  ஆகாசம் முதலிய ஸ்தூல பஞ்ச பூதங்களினுடைய விகாரங்கள்தான் இந்த ஸ்தூல உடல். இது பானையுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.

உங்களால் சொல்லப்பட்ட சரியான, பொருத்தமான காரணத்தினால் இந்த ஸ்தூல உடல் அனாத்மா என்று புரிந்து கொள்கிறேன். மேலும் ஆத்ம தத்துவத்தை  உள்ளங்கனி நெல்லிகனி போல புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக மீண்டும் உபதேசிக்க வேண்டும்.

இந்த உடலை அனுபவிக்கின்றவனான நான் உடல் அல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்படிக்கு அனுபவிக்கின்ற பானைக்கு வேறுபட்டவனாக நீ இருக்கின்றாயோ அதுபோல இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திரியங்கள் புலன்கள் வழியாக உலகத்தை அனுபவிக்கின்றோம். எனவே புலன்களை பயன்படுத்துவதால் அவைகள் நானல்ல, மனம் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல, அதேபோல புத்தியையும், பிராணனையும் அனுபவிக்கப்படுவதால் அவைகளும் நானல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் இவைகளின் (உடல், புலன்கள், அந்தக்கரணம்) சேர்க்கையும் நானல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பார்க்கப்படும் பொருளுக்கு வேறுபட்டவனாக இருக்கின்ற பார்ப்பவனை அனுமானத்தினால் அறிவுபூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

தேகம், புலன்கள் ஆகியவைகள் ஜடமான வஸ்துக்கள் என்றாலும் செயல்களை செய்கின்ற திறனுடையதாக இருக்கிறது. இவைகளின் செயல்களை எடுத்துக் கொள்ளுதல்,.  விட்டுவிடுதல் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். இந்த சைதன்யத்தின் இருப்பினால் அனுகிரகத்தால் இவைகள் செயல்பட முடிகிறது. அந்த சாட்சி சைதன்யமே நான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எந்தவிதமான மாற்றமடையாமல் இருந்து கொண்டு காந்தத்தைப்போல இருக்கின்ற  எந்தவொன்றானது புத்தி, மனம் முதலியவைகளை செயல்பட வைத்துக் கொண்டு இருக்கிறது. இது மிகவும் அருகில் இருக்கிறது.  அப்படிபட்ட சாட்சி சைதன்யம் “நான்” என்று அறிந்து கொள்வாயாக.

உணர்வுடையது போல தெரிகின்றது. தேகம், புலன்கள், மனம், பிராணன் ஆகியவைகள். ஆனால் இவைகள் ஜடமாக இருக்கின்றது. யாருடைய இருப்பினால் இவைகள் உணர்வுடையதாக இருப்பது போல தெரிகிறது.  அதுவே நான் என்று நிச்சயம் செய்ய வேண்டும்.

எது வந்து செல்கின்றதோ அது நிலையாக இருப்பதைக் காட்டிலும் வேறானது என்பது ஒரு நியாயம் இருக்கின்றது.  என்னுடைய மனமானது எங்கேயோ சென்றுவிட்டது. மீண்டும் கொண்டு வந்து விட்டேன். இப்போது திரும்பி வந்து விட்டது. இவ்வாறு  யாரொருவன் அறிகின்றானோ, மனம் சென்றதையும், திரும்பி வந்துவிட்டதையும் எது அறிகின்றதோ அதுவே நானாக இருக்கின்றேன் என்று உறுதியாக தெரிந்து கொள்வாயாக.

விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்நிலை உறக்கம் ஆகிய மூன்றும் மனதுக்குள் வருகிறது. புத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலை, புத்தி செயல்படாத நிலையிலும் எந்தவொன்று இவைகளை மாற்றமடையாமல் அறிகின்றானோ, நேரிடையாக அறிகின்றதோ அதுவே நான் என்று தெரிந்து கொள்வாயாக. அறிபவன் இரண்டுவிதமாக இருக்கிறது. 1.பிரமாதா- சேதனமான அந்தக்கரணம் மூலம் ஒன்றை அறிந்து கொண்டிருப்பவன்.  அறிவை அடைவதற்கு ஏதாவது ஒரு பிரமாணத்தை பயன்படுத்தியாக வேண்டும். உதாரணமாக ஒரு பொருளின் நிறத்தை அறிவதற்கு கண் என்கின்ற பிரமாணத்தை, பயன்படுத்த அறிவை அடைவது. 2. சாட்சி – நேரிடையாக பிரமாணம் இல்லாமல் விருத்திகளை, பாவம், அபாவங்களை பிரகாசப்படுத்துவது.

பானையை பிரகாசிக்கின்ற தீபமானது, பானைக்கு வேறாக எப்படி ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ அதேபோல தேகத்திற்கு வேறாக இருந்து தேகத்தை பிரகாசிப்பது சாட்சி சைதன்யம். நானே இந்த சாட்சி சைதன்யம் என்று உறுதியாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஆசைப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஆனந்தம் இருக்கின்றது. இந்த நியாயப்படி பார்க்கும் போது நாம் நம்மை அதிகமாக நேசிப்பதால், நாமே ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றோம். நம்மை நேசிப்பதில் எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. ஆனால் மற்றவற்றை நேசிப்பதில் நிபந்தனையுடன் கூடியதாக இருக்கிறது.  நமக்கு அப்பாற்பட்டவற்றை விரும்புகிறேன் என்ற விஷயத்தில் தன்னுடைய சம்பந்தம் இருப்பதனால்தான் அவைகள் விரும்பப்படுகிறது.  நம்முடைய சம்பந்தம்தான் எல்லாம் இன்ப துன்பங்களாக நிர்ணயிக்கப்படுகிறது.

மனைவி, மக்கள், சொத்து போன்றவற்றில் யாருக்கும் சம்பந்தம் இருக்கிற்து.தனால் அவர்களுக்கு இவைகள் விரும்பத்தகுந்தவையாக இருக்கின்றது. நிர்விகார சாட்சி சைதன்யத்தைதான் எல்லாவற்றையும் விட உண்மையில் நாம் விரும்புகிறோம். எனவே அதுதான் நான் என்று உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும்.

நான் இல்லாமல் போகக்கூடாது, என்றென்றும் நலமுடன் இருந்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பது ஒருவன் தன்னை முழுமையாக, எந்தவித நிபந்தனையில்லாமல் நேசிப்பதைக்காட்டுகிறது. இப்படிபட்ட ஆத்மாவே நான் என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

எது சாட்சி ஸ்வரூபமாக இருக்கிறதோ, அதுவே சாட்சி சைதன்யம், இது அந்தகரணத்தையும், அதிலெழுகின்ற எண்ணங்களையும் பிரகாசிக்கிறது. அந்தக் கரணத்தில் பிரதிபலிக்கின்ற சிதாபாஸன் பிரபஞ்சத்தை பிரகாசிக்கிறது.  இதுதான் த்வம் (நான்) என்ற சொல் குறிக்கின்ற லட்சியார்த்தம் என்று புரிந்து கொள்ள வேண்டும். சாட்சி சைதன்யமானது அந்தகரணத்தை அறிதல் என்ற தன்மை மாற்றத்திற்குள்ளாகாமல் இருக்கிறது. அறிபவனும் அல்ல வெறும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது

தேகம், புலன்கள், மனம், பிராணன், அகங்காரம் இவைகளிலிருந்து வேறுபட்டதாக சாட்சி சைதன்யம் இருக்கிறது. ஆறுவிதமான மாறுதல்களிலிருந்தும் விடுபட்டது இந்த சாட்சி த்வம் (நான்) என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

த்வம் (நான்) என்ற சொல்லின் பொருளை இவ்விதம் மேற்கூறியபடி நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். இனி “தத்3 (அது)” என்ற சொல்லின் பொருளை மீண்டும் விசாரம் செய்ய வேண்டும்.  இல்லாததை நீக்குதல் மூலமாகவோ, விதிமுகமாகவும், நேரடியாகவும் இந்த சொல்லின் பொருள் இனி விளக்கப்படுகிறது

பிரம்மன் எல்லாவித சம்சாரம் என்கின்ற தோஷங்கள் மீதியில்லாமல் (அஶேஷம்) நீக்கப்பட்டதாக (நிரஸ்த) இருக்கின்றது. ஸ்தூல தன்மையற்றதாக இருக்கிறது. பார்க்கப்படாததாக ஸ்வரூபமாக இருக்கிறது.  நிர்குணமாக இருக்கிறது.  அறியாமையென்ற அழுக்கு இல்லாதது. இவையெல்லாம் பிரம்மத்தின் லட்சணமாக கூறப்பட்டிருக்கிறது.

எது ஏற்றத்தாழ்வு அற்ற (நிரஸ்த அதிஶயம்) ஆனந்தமாகவும், இது பூரணமான ஆனந்த ஸ்வரூபமாகவும், என்றும் இருக்கின்ற அழியாத ஞான ஸ்வரூபமாகவும், இருத்தல் என்ற தன்மையுடையதாகவும், தேசம், காலம், வஸ்து இவைகளால் வரையறுக்கப்படாதாகவும் (பூரணமானது) இருக்கிறதோ இதையே பரமாத்மா என்று ஸ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஈஸ்வரன் அனைத்தையும் அறிந்தவர் (ஸர்வக்ஞன்), அனைத்தையும் ஆள்பவர், அனைத்துக்கும் தலைவராக இருப்பவர், எல்லாவிதமான சக்திகளையும் பூரணமாக கொண்டிருப்பவர். இந்த ஈஸ்வரன் மாயையுடன் கூடிய பிரம்மன் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

எந்தவொன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றதோ களிமண்-பானை போன்ற விதவிதமான உதாரணங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அதை பிரம்மன் என்று அறிந்து கொள்வாயாக.  இந்த ஜகத்தை பிரம்மத்தின் காரியம் என்று கூறி பிரம்மத்தின் பூரணத்வத்தை அத்வைத தன்மையை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அத்தகைய பிரம்மனை உறுதி செய்ய வேண்டும்.

எந்தவொன்றை முமுக்ஷூக்களால் அறியதக்கதாக எல்லா உபநிஷத்துக்களிலும் கூறப்படுகின்றதோ அதை பிரம்மன் என்று தெரிந்து கொள். அதுதான் அதிக முயற்சி எடுத்துக் கொண்டு தேடத்தக்கது.  எந்தவொன்றை சாதன-சதுஷ்டய சம்பத்தை அதிக முயற்சியுடன் அடைந்து பிறகு நாடப்படுகின்றதோ அதையே பிரம்மன் என்று அறிந்து கொள்.

எந்தவொன்று ஜீவாத்மாவாக உடலுக்குள் நுழைந்து, பிறகு அதனை செயல்படுத்தி கொண்டிருக்கும் தலைவனாக இருந்து கொண்டிருக்கிறதோ என்று ஸ்ருதியால் சொல்லப்பட்டிருக்கின்றதோ அந்த பிரம்மனை நன்கு அறிந்துக் கொள்வயாக.

ஜீவ ஈஸ்வர ஐக்கியம்
ஈஸ்வரன் கர்மத்தின் பலனைக் கொடுப்பவராக உபநிஷத்தின் உபதேசம் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.. ஜீவர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிற சக்தியாகவும் பிரம்மன் இருக்கிறது.  ஜடமான ஜீவன் செயல்படுகின்ற தத்துவமாக இருப்பதற்கு காரணமாக இருப்பது பிரம்மன். இதை அறிந்து கொள்.

வியதிகரேண வாக்கியம் – ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் இருக்கின்றதோ அத்தனை சொற்களுக்கும் அர்த்தம் இருக்கும். உதாரணமாக ராமன் சொம்பில் நீர் கொண்டு வந்தான். இந்த வாக்கியத்தில் உள்ள சொற்களான ராமன், சொம்பு, நீர், கொண்டு வருதல் ஆகிய அனைத்து சொற்களுக்கும் தனிதனியான அர்த்தம் உண்டு.

சாமானதிகரண்யம் வாக்கியம் – தசரத புத்திர, தர்மஸ்தாபகனான, கருணையுடைய ராமர் வந்தார். என்ற வாக்கியத்தில் ராமர் என்ற சொல்லை விதவிதமாக மற்ற சொற்களால் குறிக்கப்படுகிறது. ஒருவாக்கியத்தில் பல சொற்கள் இருக்க வேண்டும். ஒவ்வொன்று அதிலுள்ள ஒரு சொல்லை விதவிதமாக குறித்திருக்க வேண்டும்.

மகாவாக்கியமான தத்3 த்வம் அஸி” இது சாமனாதிகரணய் வாக்கியமாக இருக்கிறது. நீ அதுவாக இருக்கிறாய், இதில் நீ என்ற சொல் அது என்ற சொல்லையேதான் குறிக்கிறது.

தத்3, த்வம்  என்ற சொற்களின் பொருளைப் பார்த்தோம். அதையே நிச்சயம் செய்து விட்டோம். இனி அந்த வாக்கியத்தின் பொருளை விசாரம் செய்யப் போகிறோம், சிந்திக்க போகிறோம். தத்-த்வம்-அஸி என்ற மகாவாக்கியத்தில் “தத்3”, “த்வம்” ஆகிய இரண்டினுடைய ஐக்கியம்தான் வாக்கியார்த்தமாக இருக்கிறது. இந்த இரண்டு சொற்களின் லட்சியார்த்தம் ஒன்றாகவே இருக்கிறது.

ஸம்ஸர்க3 அர்த்தம் – மிக அருகில் இருப்பது என்று பொருள். உதாரணமாக வெள்ளைப் பானை இருக்கிறது. என்ற வாக்கியத்தில் இரண்டு சொற்களும் ஒரு வஸ்துவைத்தான் குறிக்கிறது.  ஆனால் வெள்ளை நிறமும், பானையும் வெவ்வேறாக இருக்கிறது.
விசிஷ்டார்த்தம்
கையில் வில்லேந்திய முருகன் என்ற வாக்கியத்தில் முதல் இரண்டு சொற்களும் முருகனையே குறிக்கிறது. ஆனால் இவை மூன்றும் ஒன்றாக இல்லை. கை வேறு, வில் வேறு, முருகன் வேறு.

மகாவாக்கியம் ஸம்ஸர்க அர்த்தமும் கிடையாது, விசிஷ்டார்த்தமும் கிடையாது. ஆனால் அறிவாளிகளால் பிளவுபடாமல் ஒன்றாக இருக்கிறது. அவனே இந்த தேவதத்தன் என்ற வாக்கியத்தில் அவனும், தேவதத்தனும் ஒன்று என்று குறிப்பது போல மகாவாக்கியத்திலுள்ள இரு சொற்களும் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸம்ஸர்க அர்த்தம் பொருந்தாது ஏனென்றால் நீ என்ற சொல் அது என்ற சொல்லுக்கு உரிச்சொல்லாக இருக்கிறதா அல்லது அது என்ற சொல் நீ என்ற சொல்லுக்கு உரிச்சொல்லாக இருக்கிறதா என்று சிந்திக்கும்போது பரோக்ஷமாக இருக்கின்ற ஜீவன் அபரோக்ஷமாக இருக்கின்ற ஈஸ்வரனுக்கு அடைமொழியாக இருக்க முடியாது. அதேபோல விசிஷ்டார்த்தமும் பொருந்தாது.  ஜீவன் ஈஸ்வரனின் அம்சமாக இருக்க முடியாது. எனவே இவையிரண்டும் மகாவாக்கியத்திற்கு பொருந்தாது.

எந்தவொரு சைதன்யம் நமக்கு மிக அருகில் அறியப்படுகிறதோ அதுவே ஒன்றாக இருக்கின்ற ஆனந்த ஸவரூபம், பூரணமான, இரண்டற்ற ஸ்வரூபமான தத்3 பத லட்சியார்த்தம். அதுபோல இரண்டற்றதும், பூரணமானதும் ஆனந்த ஸ்வரூபமாக தத்3 பத லட்சியார்த்தம் அதுவே நமக்கருகில் இருக்கின்ற சாட்சி சைதன்யமாக இருக்கிறது.

மேற்சொன்ன விதம் இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று ஐக்கியாமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்கின்றது எப்பொழுது சம்பவிக்குமோ, ஏற்படுமோ அப்பொழுது த்வம் (நான்) என்ற சொல்லுக்கு பிரம்மனில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பது நீக்கப்படுகிறது

அதேபோல தத்3 (அது) என்ற சொல்லினுடைய அர்த்தம் புரிந்து கொண்டபிறகு மிக தொலைவில், எங்கேயோ இருப்பது போல உணர்கின்றோம். அது நீக்கப்படுகிறது. இவ்வாறு நன்றாக புரிந்தவுடன் இந்த இரண்டும் மறைந்து, அபரோக்ஷமாக, நமக்கருகிலே இருக்கின்ற சைதன்யம், ஆனந்தஸ்வரூபம், பூரணமானது, ஒன்றானது இவ்வாறாக இருக்கின்ற சாட்சி சைதன்யம் மட்டும் எஞ்சி இருக்கிறது.

“தத்த்வமஸி”  போன்ற மகாவாக்கியங்கள் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை விளக்குகின்ற விஷயத்தில் “தத்3”, “த்வம்” இரண்டு சொற்கள் குறிக்கின்ற லட்சியார்தத்தை  எடுத்துக் கொண்டுதான் உபதேசிக்கபடுகின்றது.

ஹித்வா – விட்டுவிடு, தியாகம் செய்வது
மகாவாக்கியமானது அதனுடைய உண்மைப் பொருளை உபதேசிப்பதற்காக அதில் இருக்கின்ற இரண்டு சொற்கள் குறிக்கும் வாச்யார்தத்தை விட்டுவிட்டு அவைகளில் ஏற்றிவைக்கப்படுகின்ற உபாதிகளை நீக்கி விட்டு எப்படி உபதேசிக்கிறதோ அவ்விதம் இங்கு மிகக்கவனத்துடன் விளக்கபட்டது.

எந்தவொன்று மனதில் உள்ள எண்ணங்களுக்கு, நான் என்கின்ற எண்ணங்களுக்கு ஆதாரமாக தெரிந்து கொண்டிருக்கின்றதோ அதுதான் த்வம்(நான்) என்ற சொல்லின் வாச்யார்த்தம். அந்த கரணத்துடன் கலந்து இருப்பது போல விளங்குகின்ற சைதன்யம் என்பதுதான் அந்தக்கரணத்தை நீக்கிவிட்டு சைதன்யத்தை மட்டும் இருக்கிறது என்பது லட்சியார்த்தம்

தத்3 சொல்லின் வாச்யார்த்தம் ஈஸ்வரன். மாயையை உபாதியாக கொண்டுள்ள ஈஸ்வரனே ஜகத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருப்பவர். எல்லாம் அறிந்தவர் என்ற லட்சணத்தையுடையவர். நிமித்த காரணமாக இருப்பவர்.  பரோக்ஷத்துடன் இருப்பவராக கருதப்படுபவர்.  சத்யம் போன்ற குணங்களை உடையவர். இதுவே தத்3 சொல்லின் வாச்யார்த்தம்

ஒரு தத்துவம் அருகில் இருப்பதாகவும், தொலைவில் இருப்பதாகவும் கூறமுடியாது. த்வம்(நான்) என்ற சொல் அருகிலிருப்பது, தத்3 என்ற சொல் தொலைவில் இருப்பது. இவையிரண்டும் ஒன்று கூற முடியாது.  த்வம் சொல்லின் அர்த்தம் பலவாக இருக்கிறது. தத்3 என்ற சொல்லின் அர்த்தம் ஒன்றாக மட்டும் இருக்கிறது.  இவை இரண்டிற்கும் ஐக்கியம் சொல்ல முடியாது.  வாச்யார்தத்தில் இவையிரண்டும் இவ்வாறாக ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதால், அவைகளின் லட்சியார்தத்தின் அடிப்படையில் ஐக்கியம் சொல்ல முடியும்.

வாச்யார்தத்தை எடுத்துக் கொள்ளும்போது அது வேறு பிரமாணத்துக்கு வேறுபடும் ஆனால் வாச்யார்தத்தோடு சம்பந்தபட்டு இருந்துவிட்டால் அதுவே லட்சியார்த்தம் என்று கூறப்படுகிறது.

தத்3 த்வம் அஸி போன்ற மகாவாக்கியங்களில் பாக4 தியாக லட்சணையானது பயன்படுத்தப்படுகிறது.  பொருத்திப்பார்த்து லட்சியார்த்தத்தை புரிந்து கொள வேண்டும்.  அந்த தேவதத்தனே இந்த ஆள் என்ற ஐக்கியத்தில் இடம், காலம், இவைகளை விட்டுவிட்டு அந்த ஆளின் உடலை மட்டும் வைத்துக் கொள்வது போல தத், த்வம் சொற்களில் ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  இவைகளின் உபாதிகளை விட்டுவிட்டு, சைதன்யத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம். வேறுவிதமான லட்சணைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

“நானே பிரம்மன்” என்று மனதில் வருகின்ற மகாவாக்கிய ஞானம் எவ்வளவு காலம் உறுதியாகின்றதோ அவ்வளவு காலம் சம, தம போன்ற சாதனங்களுடன் இடைவிடாமல் சிரவணம் முதலியவைகளை பயிற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.

உபநிஷத் உபதேசம், குருமூலமாக எப்பொழுது ஆத்மஞானமாக உறுதியாகின்றதோ, நிலைப்படுகின்றதோ அப்போது எல்லாவித சம்சாரத்திற்கும் காரணமான ஆத்ம அக்ஞானம் நீங்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஞானி இறந்தபிறகு ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களிலிருந்து விடுபடுகின்றான். இவைகள் அந்தந்த பூதங்களோடு கலந்து விடுகின்றது. பிராரப்தம் முடிவடையும் போது, மரண காலத்திற்கு பிறகு கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைகின்றான். 

ஞானம் நிலைப்பட்டவுடன் பலன் கொடுக்க ஆரம்பிக்காத கர்மபலன்கள் உடனே நாசத்தை அடைந்து விடுகின்றது.  பிராரப்த கர்மபலன் நடந்து கொண்டிருக்கும் போது சில நாட்களில் ஜீவன் முக்தனாக இருந்து கொண்டிருப்பான், மனநிறைவின்மையில் இருந்து விடுபடுகின்றான்.

பூரணமான ஆனந்தத்துடன் இருக்கின்றான். எங்கும் வியாபித்திருக்கின்ற மேலான இருப்பிடத்தை அடைந்து மீண்டும் பிறவாமல் பிரம்மனோடு ஐக்கியமாகின்றான்.

--- ooo0OOOooo ---

1 comment:

Aham Brahmaasmi said...

பாமினி என்கின்ற பான்டை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால் படிக்க முடியும்.

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...