Tuesday, May 15, 2018

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி
ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்
www.poornalayam.org

முகவுரை:
அனுபூதி – ஞானம், உணர்தல், அனுபவித்தல்
அபரோக்ஷ அனுபூதி – சுயமாக பிரகாசிக்கின்ற ஞானம், பிரம்ம ஞானம். ஆத்மாவை நேரிடையாக அனுபவித்தல்
இந்த நூலில் உபநிஷத் மூலமாக அடைந்த அறிவானது அனுபவமாக மாறுவதற்கு தேவையான சாதனங்கள், விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கடவுள் வாழ்த்து
1. மோட்சத்தை விரும்புபவர்களுக்கு ஆத்ம வித்யாவை கொடுத்து அவித்யாவை நீக்குகின்றவர், புனிதமான ஆனந்த ஸ்வரூபமாக இருப்பவர், ஈஸ்வரனாக இருப்பவர், உலகத்தையே ஆள்பவர், ஜகத்தின் தோற்றத்திற்கு உபாதான, நிமித்த காரணமாக இருப்பவர், அனைத்து உலகங்களையும் வியாபித்திருப்பவர். இத்தகைய பெருமை மிக்க ஶ்ரீஹரியை நான் வணங்குகிறேன்.

2. மனத்தூய்மையுடன் இருப்பவர்கள், சாதன சதுஷ்ட தகுதிகளை அடைந்திருப்பவர்கள் ஆத்மாவை நேரிடையாக அனுபவிக்கும் நிலையான மோட்சத்தை அடைவதற்கு முழுமுயற்சியுடன் ஆத்மாவை மீண்டும், மீண்டும் விசாரம் செய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகள் இனி விரிவாக சொல்லப்படுகிறது.

3. அவரவர் வர்ணாசிரம வாழ்க்கை நெறிகளின்படியும், மற்ற தவத்தினாலும், தர்மப்படி வாழ்வதாலும், இறைவனை பக்திமூலம் திருப்தி செய்வதன் மூலம் மனிதன் ஞானயோக தகுதியை அடைந்துவிடுவான்.  விவேக, வைராக்கியம், சமாதிஷட்3கம், முமூக்ஷுத்வம் ஆகிய நான்கு வகையான சாதனங்கள் ஞானயோகத்திற்கான தகுதியாக கூறப்படுகிறது. இங்கு வர்ணம் என்பது அவரவர் செய்யும் வேலையிலுள்ள பொறுப்புக்களை குறிக்கிறது. ஆசிரமம் என்பது வாழ்க்கை முறை

4. இன்பங்களை கொடுக்கின்ற பிரம்மலோகத்திலிருந்து நாம் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் வரை உள்ள இன்பத்தை கொடுக்கின்ற பொருட்கள் மீது தொடர்ந்து வருகின்ற வைராக்கியம், பற்றின்மை. பார்க்கும் விஷயங்களிலும், கேட்கும் விஷயங்களிலும் வைராக்கியம் வர வேண்டும். வைராக்கியம் என்பது மனதில் இருக்க வேண்டிய பக்குவம். இந்த உலகத்திலுள்ள புலனுகர் போகப்பொருட்கள் மீது பற்றற்று இருக்க வேண்டும். இப்படிபட்ட வைராக்கியம்தான் முழுமையானது.

5. நான் என்ற சொல்லின் உண்மையான ஸ்வரூபம்தான் நிலையானது. நிலையற்ற பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் ஆத்மாவுக்கு எதிராக இருக்கின்றது.  இவ்விதமாக ஆத்மா, ஜகத் ஆகிய இவ்விரண்டில் எந்தவொன்று சரியாக உறுதி செய்யப்படுகிறதோ அதுதான் உண்மையான விவேகம் என்று அழைக்கப்படுகிறது. சாத்வீகமான மனதால்தான் இந்த விவேகத்தை அடைய முடியும்.

6. ஶமஹ என்பது சாஸ்திரம் விதித்த விலக்கப்பட வேண்டியவைகளை மனதால் நாடாமல். நினைக்காமல் இருத்தல். செயலுக்கு வரும் முன்னே அவைகளை மனதிலிருந்து நீக்கிவிடுதல்.  பயனற்ற விஷயங்களை சிந்திக்காமல் இருக்க மனதை பழக்கி வைத்திருக்க வேண்டும். எல்லா நேரத்திலும் உள்ளேயிருக்கும் எண்ணப்பதிவுகளை துறக்க வேண்டும். ஏற்கனவே அனுபவித்தவைகள், கேட்டவைகள் நம்முடைய முயற்சியின்றி எண்ணங்களாக பதிந்திருக்கும். அவைகள்தான் எந்த நேரத்திலும் மனதில் எழுந்து ஆசையைத் தூண்டி நம்மை செயலில் ஈடுபடுத்தும்.

சமத்தை அடைய உதவும் வழிகள்: வைராக்கியத்தை அடைய வேண்டும். நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்து பழக வேண்டும். இதனால் மனம் நாம் விரும்புவதை நினைக்கும். தமம் என்பது புலனடக்கம். சாஸ்திரம் உபதேசித்த செய்யக்கூடாதவைகளை புலன்கள் கொண்டு செய்யாதிருக்க வேண்டும். பயனற்ற விஷயங்களின் புலன்களை பயன்படுத்தக் கூடாது. வெளியேயுள்ள பத்து புலன்கள் நெறிபடுத்துதல் தமம் என்று கூறப்படுகிறது.  தமத்தை அடைவதற்கு சில வழிகளை கூறப்படுகிறது.  சில சூழ்நிலைகளால் நாம் பாதிக்கப்படுவோம், நம் இந்திரியங்கள் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.  புலன்கள் சக்தியை பெறவும், கட்டுபடுத்தக்கூடிய, முறைப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் இருக்க வேண்டும்.  எந்த விஷயங்களில் பலவீனமாக இருக்கின்றோமோ அதை போக்குவதற்கு விரதமிருக்க வேண்டும்.

7. உபரதி என்பது கர்ம தியாக3ஹ – பொறுப்புக்களை விட்டுவிடுதல் அதனால் அதிக காலத்தை அடைந்து அதை ஞானயோகத்திற்கு பயன்படுத்தலாம். சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்தல். இவைகளை சுபாவமாக வைத்திருத்தல்.

உலக விஷயங்களிலிருந்து திரும்பி விடுதலே மேலான உபரதி என்று கூறப்படுகிறது. அனைத்து துன்பத்தையும், கஷ்டத்தையும் சகித்துக் கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல் இதுவே நன்மையை தரக்கூடிய திதிக்ஷா என்று கூறப்படுகிறது.

8. வேதாந்தம் உபதேசிக்கின்ற வார்த்தைகளிலும், குருவின் உபதேசத்திலும் முழுநம்பிக்கை வைத்தலே சிரத்தை என்று அழைக்கப்படுகிறது. மேலும் பிரமாணத்தில் வைக்கும் முழுநம்பிக்கையே சிரத்தை என்று புரிந்து கொள்ள வேண்டும்.  அழியாத பிரம்மத்தை அடைதல், உணர்தல் இந்த முயற்சியில் மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருத்தலே சமாதானம் என்று அழைக்கப்படும்

9. குரு பகவானே! சம்சாரம் என்பது மனதிலுள்ள நிறைவின்மை, இதிலிருந்து எப்படி, எப்பொழுது முழுமையாக விடுதலை எனக்கு கிடைக்கும்? என்ற எந்தவொரு உறுதியான புத்தியிருக்கிறதோ அதுவே முமுக்ஷுத்வம் என்று அழைக்கப்படும்.

10. ஆத்ம ஞானத்தை அடைவதற்காக மேற்கூறிய சாதனங்களுடன் கூடிய மனிதர்களால், மோட்சத்தை விரும்புகின்ற மனிதர்களால் விசாரமானது செய்யப்படவேண்டும்.

11. ஆத்ம ஞானம் என்ற லட்சியத்தை அடைவதற்கு விசாரம் என்கின்ற ஒரேயொரு  பாதைதான் இருக்கிறது. எப்படி இருளிலுள்ள பொருளை பார்ப்பதற்கு வெளிச்சத்தை தவிர வேறு எதுவும் பயன்படாதோ அதுபோல விசாரத்தை தவிர வேறெதனாலும் வேறெந்த சாதனங்களாலும் ஆத்ம ஞானத்தை அடைய முடியாது.

12. உபநிஷத்தும், குருவும் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணங்கள். இவைகளை பயன்படுத்தி நான் யார்? (ஜீவன் சம்பந்தமான கேள்வி) பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் எப்படி தோன்றியது? (ஜகத் விஷயமான கேள்வி) இதற்கு காரணமாக இருப்பவர் யார்? (ஈஸ்வரன் விஷய கேள்வி) எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது எது? என்ற கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை தேடி அடைவதே ஆத்ம விசாரம் செய்ய வேண்டியமுறையாகும்.

13. நான் இந்த ஸ்தூல உடல் அல்ல.  இந்த தேகமானது பஞ்சபூத கூட்டங்களால் ஆனது.  இவைகளை நாம் “நான்” என்று சொல்வதில்லை. அதனால் அவைகளின் சேர்க்கையிலான ஸ்தூல உடலும் நானல்ல. அவ்விதமே ஐம்புலன்களும் நானல்ல. யாரோவொருவன், ஏதோவொன்றுதான் இவைகளுக்கு வேறாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதான் இங்கே விசாரம் செய்ய வேண்டிய முறை.

14. நாம் பார்த்து அனுபவிக்கின்ற உலகமானது மாயையிலிருந்து தோன்றியுள்ளது. அறியாமையிலிருந்து தோன்றியுள்ளது. இந்த அறியாமையை, மாயையை ஞானத்தினால்  நீக்கிவிடலாம். மேற்கூறிய அறியாமை, மாயையினால் ஏற்பட்டிருப்பதால் மாயையை நீக்கினால் அறியாமையும் சென்று விடும். இந்த உலகம் இப்படி இருப்பதற்கு காரணம் நம்முடைய மனதில் எழுகின்ற விதவிதமான எண்ணவோட்டங்களால்தான் என்ற இந்த முறையில் விசாரம் செய்யப்பட வேண்டும்.

15. இந்த இரண்டிற்கும் (அக்ஞானம், ஜகத்திற்கும்) எந்தவொன்று ஆதாரமாக இருக்கின்றதோ அந்த ஒன்றுதான், ஒன்றாக இருக்குமொன்றுதான் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது, பார்க்க முடிகின்ற ஸ்தூலமானதாக இல்லை. இருத்தல் என்ற ஸ்வரூபமுடையது. மாறாமல் அப்படியே இருக்கின்றது, மாற்றமடையாமல் இருப்பது. எவ்விதம் களிமண் பானைக்கு ஆதாரமாக இருக்கின்றதோ அதுபோல இது இருக்கின்றது. இவ்விதம் விசாரம் செய்ய வேண்டும்.

16. நான் ஒருவன்தான் அதிசூட்சுமமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும், அனைத்தையும் அறிபவனாகவும், அனைத்தையும் பார்த்து கொண்டிருப்பவனாகவும், சாட்சி ஸ்வரூபமாகவும் இருக்கிறேன்.  ஆகவே நான் அழியாத பிரம்மனாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் சந்தேகமேயில்லை என்ற முறையில் விசாரம் செய்ய வேண்டும்.

17. ஆத்மாவானது ஒன்றாகவும், பிளவுப்படாததாகவும் இருக்கிறது.  இந்த ஸ்தூல, சூட்சுமமான உடலானது, பலவகையான அவயவங்களின் சேர்க்கையாலானது. இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து பார்க்கிறார்கள். இதற்குமேல் வேறென்ன அறியாமை இருக்கும்.

18. ஆத்மா அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, உள்ளேயிருப்பது. தேகமானது வெளியே இருப்பது, கட்டுப்படுத்தப்படுவதாக இருப்பது.  இவ்வாறு இரண்டும் வெவ்வேறு ஸ்வரூபங்களை உடையதாக இருந்தாலும் அவைகளை  சேர்த்து பார்க்கிறார்கள். இதற்கு மேல் வேறென்ன அறியாமை இருக்கும்.
ஆத்மாவின் இருப்பினால்தான் ஸ்தூல, சூட்சும சரீரங்கள் இருக்கிறது. செயல்பட்டு கொண்டும் இருக்கிறது.  கயிற்றின் இருப்பினால்தான் பாம்பு தெரிகிறது.  பாம்பு மறைந்தாலும் கயிறு இருந்துக் கொண்டிருப்பதை போல ஸ்தூல உடல் அழிந்தாலும் ஆத்மா இருந்து கொண்டிருக்கும்.
உள்ளேயிருப்பது என்பது “நான்” என்கின்ற எண்ணத்தை குறிப்பது. வெளியே இருத்தல் என்பது “இது” என்கின்ற எண்ணத்தையும் குறிக்கிறது. நான் இதை பார்க்கிறேன் என்ற வாக்கியத்தில் “நான்” என்பது ஆத்மாவையும், “இது” என்பது வெளியே இருக்கின்ற மெய்ப்பொருளை குறிக்கின்றதாக புரிந்து கொள்ள வேண்டும்.

19. ஆத்மா ஞான ஸ்வரூபமானது, தூய்மையானது. தேகமானது மாமிசத்தினாலான  ஜட ஸ்வரூபமானது, அசுத்தமானது. இப்படியிருக்கும்போது இவை இரண்டையும் ஒன்று சேர்த்து பார்க்கிறார்கள். இதற்கு மேல் வேறென்ன அறியாமை இருக்கப் போகிறது. இது தூய்மையாக இருக்கிறது என்று சொல்வதற்கு காரணம் எந்த செயல்களும் செய்வதில்லை. அதனால் அதன் பலன்களான பாவ-புண்ணியங்களை அடையாமல் இருப்பதனால் தூய்மையானது என்று அழைக்கப்படுகிறது

20. ஆத்மாவானது அனைத்தையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. தேகங்களானது அதனால் பிரகாசத்தப்படுகிறது. ஆத்மா தூய்மையானது, உடலை பிரகாசித்து கொண்டிருக்கிறது, உடலினுடைய நலம் கேடுகளால் பாதிக்கப்படுவது இல்லை. இதையே இங்கே தூய்மையானது என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வாறு இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானதாக இருந்த போதிலும் அவைகளை ஒன்றாக பார்ப்பது அறியாமையாகும்.

21. ஆத்மா நிலையானது, என்றென்றும் இருந்து கொண்டிருப்பது மற்றும் இருத்தல் என்கின்ற தன்மையுடன் இருக்கிறது.  இது சத்யமாக இருக்கிறது. தேகமானது நிலையற்றது, அழியக்கூடியது மற்று இல்லாமை தன்மையுடன் கூடியது. எனவே இது மித்யாவாக கருதப்படுகிறது. ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டையும் ஒன்றாக பார்ப்பது அறியாமையாகும்.

22. ஆத்மாவினிடத்திருக்கும் மற்றவைகளை பிரகாசிக்கின்ற தன்மையான பொருட்களை பிரகாசிக்கின்ற தன்மை, அக்னி போன்ற ஒளிதரும் பொருட்களில் பிரகாசிக்கும் தன்மை வெவ்வேறானது. ஓளிதரும் இவைகள் இல்லாதபோது இருள் இருக்கின்றது. 1) அனாத்மாவை பிரகாசிக்கின்ற தன்மை ஆத்மாவின் ஸ்வரூபமே தவிர அதன் செயல்பாடல்ல. 2) ஓளிதரும் தத்துவங்கள் இருளும், ஒளியுமான இருமைகளுடன் கூடியது. ஆத்மாவிடம் இந்த இருமை கிடையாது.  3) அக்னி, சூரியன் மற்றவைகளை பிரகாசித்தாலும் அவைகளை பிரகாசிக்க வேறொன்று தேவைப்படுகிறது. ஆத்மா தானே பிரகாசித்துக் கொண்டு இருப்பதால் அதை பிரகாசிக்க வேறொன்று தேவையில்லை.

23. அறியாமையிலிருக்கும் மனிதர்கள் நானே இந்த தேகம் என்று உறுதியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களே பானையை என்னுடையது என்று கூறும்போது அவைகளே நானென்று கூறமாட்டார்கள். ஆனால் என்னுடைய தேகம் என்று சொல்லும்போது மட்டும் நான் தேகமல்ல என்று புரிந்து கொள்ளாமல் நான் தேகம்தான் என்று அறியாமையோடு நினைக்கிறான்.

24. இருத்தல், அறிவு, பூரணத்வம் என்கின்ற லட்சணங்களோடு இருக்கின்ற நானே பரபிரம்மன்.  1) என்னுடைய லட்சணமும், பிரம்மத்தின் லட்சணமும் ஒன்றாக இருக்கின்றன. 2) அனைத்தையும் சமமாக பாவிக்கின்றேன். எல்லாவற்றிலும் இருத்தல் என்ற தன்மையுடன் சமமாக இருக்கின்றேன். நான் அமைதி ஸ்வரூபமாக இருக்கிறேன். எனக்குள் எந்தவிதமான சஞ்சலங்களும் இல்லை. நான் இந்த உடல் அல்ல.  இல்லாமையுடன் கூடிய தன்மையுடன் கூடிய உடலும் நானல்ல. உடல் மித்யா ஸ்வரூபமாக இருக்கின்றது. இதைத்தான் ஞானிகளால் ஞானம் என்று சொல்லப்படுகின்றது.

25. நம் அனுபவத்திற்கு மாறாக யாராவது உபதேசம் கூறினால் பொதுவாக யாரும் ஏற்றுக் கொள்ளவதில்லை. ஆனால் நான் எந்தவித மாற்றமும் இல்லாதவன், உருவமற்றவன், எந்தவிதமான குற்றம், குறைகளில்லாதவன், அழியக்கூடியவனும் அல்ல என்றும் மித்யாவாக இருக்கின்ற உடல் அல்ல என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது. இதைத்தான் ஆத்ம ஞானம் என்று கூறப்படுகிறது.

26. சுக-துக்கங்கள் வரும்போது அவைகள் எனக்கு வந்ததல்ல.  இந்த தேகத்தினுடையது என்ற உணர்வு இயல்பாக வரவேண்டும். நான் யாராலும் பார்க்கப்படுபவனுமல்ல, அனுபவிக்கப்படும் விஷயங்களுமில்லை, மாற்றத்திற்கு உட்படாதவன், யாரலும் புரிந்து கொள்ள முடியாதவன், அனைத்திலும் வியாபித்து இருப்பவன். எனவே மித்யாவான இந்த தேகம் நானல்ல என்று அடையும் அறிவுதான் உண்மையான அறிவு என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது.

27. நான் மாயையின் முக்குணங்களை கடந்தவன். தர்ம-அதர்மங்களை கடந்தவன். நல்ல-தீய குணங்களற்றவன். செயல்கள் எதுவும் செய்யாதவன், பாவ-புண்ணியங்களற்றவன். எப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவன், சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைந்திருப்பவன், முக்தியடைந்தவன், எதிலேயும் வீழ்ச்சி அடையாதவன். மேலும் நான் மித்யாவான தேகமல்ல என்ற அறிவே உண்மையான அறிவு என்று ஞானிகள் சொல்கிறார்கள்

28. அசுத்தமற்றவன், அக்ஞான என்ற அழுக்கில்லாதவன், அசைவற்றவன், மன சஞ்சலங்களற்றவன், எல்லையற்றவன், தூய்மையானவன், சரீர நிமித்த துக்கங்களற்றவன், வயோதிகமில்லாதவன், மரணமற்றவன் என்ற அறிவும், ஸ்தூல சரீரமுமல்ல ஏனென்றால் இது மித்யாவாக இருக்கிறது. இத்தகைய அறிவே உண்மையான அறிவென்று ஞானிகளால கூறப்படுகிறது.

29. உன்னுடைய உடலுக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற, பிரகாசிக்கின்ற, உத்தம புருஷன் என்கின்ற பெயருடைய, மேலும் உபநிஷத்துக்களால் நிச்சயிக்கப்பட்டு உள்ள உபநிஷத்துக்கு சம்மதமான தேகத்தை கடந்தும் இருக்கின்ற ஆத்மாவை சூன்யமாக மூடர்கள்தன் மாற்றுகிறார்கள்.

30. ஹே மூடனே! உன்னைப்பற்றிய உண்மையை சொல்கிறேன் கேள். சிரவணத்தை செய்ய வேண்டும்.  உபநிஷத் மூலமாகவும், சுய சிந்தனையின் மூலமாகவும் ஆத்மாவை பற்றி கேட்க வேண்டும். இந்த ஆத்மாவானது தேகத்தை கடந்துள்ளது. இருத்தல் ஸ்வரூபமாக இருக்கின்றது. இதை உன்னைப் போன்றவர்களால் புரிந்து கொள்வது மிகக்கடினம்.  சாஸ்திரத்திலும், அதை உபதேசிக்கும் குருவின் மீதும் சிரத்தை இல்லாதவர்களுக்கு ஆத்மாவை புரிந்து கொள்வது கடினம்.

31. நான் என்ற சப்தத்தின் மூலம் தெளிவாக அறியப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஒருவனாகத்தான் இருக்கிறேன். உடலுக்கு வேறாக இருக்கிறேன். ஸ்தூலமான இந்த உடலானது பலவற்றினுடைய சேர்க்கையால் பிரிந்து இருக்கின்றது. எனவே அழியக்கூடிய தேகமானது எப்படி ஆத்மாவாக இருக்க முடியும்.

32. நான் அறிபவனாக நிலைநாட்டப்பட்டுள்ளேன். தேகமானது அறியப்படுபவையாக இருக்கிறது. மேலும் “இது என்னுடையது” என்று தேகத்தை காட்டுவதால் அது நானல்ல என்று தெளிவாகிறது.  இப்படி இருக்கும்போது ஸ்தூல உடல் எப்படி ஆத்மாவாக கூறமுடியும்.

33. நான் விகாரமற்றவன் ஆனால் தேகமானது எப்பொழுதும் மாறிக்கொண்டிருப்பது. இதை நேரிடையாக அனுபவிக்கிறோம் என்று தெரிகின்றது. இப்படி இருக்கும் போது ஸ்தூலமான தேகத்தை ஆத்மாவாக கூறமுடியும்.

34. எதனால் மேலானதாக என்று தொடங்கும் வேதாந்த வாக்கியத்தில் ஆத்மாவின் ஸ்வரூபமானது குரு உபதேசத்தின் மூலமாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.  இப்படி இருக்கும்போது தேகம் எப்படி ஆத்மாவாக இருக்க முடியும்.

35. எல்லாமே ஆத்ம ஸ்வரூபம்தான் என்று புருஷனைப் பற்றி விளக்குகின்ற ஸூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டிருக்கும்போது தேகம் ஆத்மாவாக இருக்க முடியும்

36. இந்த புருஷன் எதனோடும் சம்பந்தப்படாதது என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. எண்ணற்ற அசுத்தங்களுடன் கூடிய தேகமானது எப்படி ஆத்மாவாக இருக்க முடியும்.

37. மேலும் இதே உபநிஷத்தில் ஆத்மாவானது தானே பிரகாசித்துக் கொண்டிருப்பது என்றும் தேகமானது தானே பிரகாசிப்பதில்லை என்று நன்கு கூறப்பட்டு இருக்கிறது.  ஏனென்றால் இது ஜடமானது, மற்றதினால் பிரகாசப்படுத்தப்படுகிறது. இப்படியிருக்கும் தேகமானது எப்படி ஆத்மாவாக முடியும்.

38. கர்ம காண்டத்தின் மூலம் ஸ்தூல சரீரத்திற்கும் வேறானது என்ற கருத்து அடையப்படுகிறது.  இந்த சூட்சும சரீரம் என்றும் இருக்கிறது. ஸ்தூல உடல் அழிந்தாலும் அதன் மூலம் அடைந்த பாவ-புண்ணியங்களை சூட்சும சரீரம் வேறொரு உடலைக் கொண்டு அனுபவிக்கின்றது என்ற கருத்து கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

39. சூட்சும சரீரம் பல அவயவங்களுடன் கூடியது, பல ஸ்தூல உடல்களை எடுக்க கூடியது. சஞ்சலத்துடன் இருப்பது, மனதை பிரதானமாக கொண்டது. நம்மாலே அறியக் கூடியதாகவும். மாறிக் கொண்டேயிருக்கின்ற தன்மைய்டையதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும்(பரிச்சின்னம்) நிலையற்றதாகவும், மித்யாவாகவும் இருக்கிறது.  இந்த சூட்சும சரீரமானது எப்படி ஆத்மாவாக முடியும்.

40. இதுவரை சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் ஆத்மாவானது இரண்டு சரீரங்களுக்கும் வேறாக உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். ஆத்மா பூரணமானதாக இருக்கிறது. இந்த உலகத்துக்கு தலைவனாக, ஈஸ்வரனாக இருக்கிறது. அனைத்து சரீரத்திற்கும், ஆத்மாவாக இருக்கிறது, அனைத்துமாக இருக்கிறது, அனைத்தையும் கடந்தும் இருக்கிறது. அகங்காரத்திற்கு சாட்சியாக இருக்கிறது.

41. ஜகத் மித்யா என்ற அறிவுதான் நம்மை சம்சாரத்திலிருந்து விடுவித்து விடும். இதுவரை ஆத்மா தேகமல்ல என்ற விசாரத்தின் மூலம் பிரபஞ்சம் சத்யம் என்று நிலைநாட்டப்பட்டிருக்கிறதே. தர்க்கவாதிகளால் உலகம் சத்யம் என்று சொல்வதைப் போன்று ஆத்மாவை தேகத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்று விளக்கும் போது நீங்களும் அதையேதான் சொல்வது போல் இருக்கிறது. அதனால் எனக்கு புருஷார்த்தம் எப்படி கிடைக்கும்? இருமைகள் சம்சாரம் கிடைக்கும் போது புருஷார்த்தமான மோட்சத்தை எப்படி அடைய முடியும்.

42. இவ்விதம் ஆத்மாவுக்கும், தேகத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் கூறி, ஆத்மாவை தேகத்திற்கும் வேறானது என்ற அறிவைக் கொடுத்து இந்த சரீரம்தான் நான் என்ற கருத்து நீக்கப்பட்டுவிட்டது.  இப்போது இந்த ஆத்மாவுக்கு வேறாக உள்ள தேகத்தினுடைய பொய்யான தன்மையை தெளிவாக, விரிவாக இனிமேல் கூறப்படுகிறது.

43. இதில் ஜீவனின் மித்யாத்வம் விளக்கப்படுகிறது. சைதன்யம் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் வேற்றுமையானது எப்போதும் பொருந்தாது. ஜீவனாக இருக்கும் தன்மை பொய்யென்றும், மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.  எப்படி கயிறானது பாம்பாக தோன்றி கொண்டு இருக்கிறதோ அதுபோல இந்த கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

44. இது கயிறு என்ற அறியாமையிலிருக்கும் போது அதிலே பாம்பு தோன்றுகின்றது. அதுபோல நிர்குணமான சைதன்யம்தான் அறியாமையில் இருக்கும்போது இந்த ஜகத் சத்யமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

45. இந்த உலகத்திற்கு உபாதான காரணமாக இருப்பது பிரம்மன். அதற்கு வேறாக எதுவும் கிடையாது. ஆகவே இந்த அனைத்து பிரபஞ்சமும் பிரம்மனாகவே இருக்கிறது தவிர வேறெதுவும் கிடையாது

46. வியாபிப்பது, வியாபிக்கப்படுவது என்ற நியாயப்படி இந்த ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். அனைத்துமே ஆத்மாதான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவே இறுதியாக அடைய வேண்டிய உயர்ந்த அறிவாகும்.  இந்த அறிவை அடைந்த பிறகு இருமைக்கு இடமேயில்லை

47. உபநிஷத் உபதேசத்தினால் நேரிடையாக இருமைகளானது, சந்தேகமில்லாமல் உறுதியாக நீக்கப்பட்டுள்ளது.   எப்படி வேறொன்று (ஆத்மாவைத்தவிர) விளங்கிக் கொண்டிருக்கும், தன்னுடைய உபதேசமாக அத்வைதமே இருக்கும் போது எப்படி வேறொன்று விளங்கிக் கொண்டிருக்கும்.

48. இந்த உலகத்தை சத்யம் என்ற நினைப்பதில் குறையிருக்கின்றது என்று உபநிஷத் கூறுகின்றது. இப்படி நினைப்பவன் மரணத்திலிருந்து மரணத்திற்கு செல்கின்ற  சம்சாரம் என்கின்ற துயரத்தை குற்றமாக சொல்லியிருக்கிறது. யார் இங்கு இருமைகளை பார்க்கின்றார்களோ அவர்கள் இந்த சம்சாரத்திலே இருந்து கொண்டிருப்பார்கள். மாயையினால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கின்ற மனிதர்கள் ஜகத்தை சத்யமாக நினைக்கிறார்கள்

49. பரமாத்மாவான பிரம்மத்திடமிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் தோன்றி இருக்கிறது. இந்த அனைத்து உலகத்திற்கும் பிரம்மனே உபாதான காரணமாக இருப்பதால் அவைகள் அனைத்தும் பிரம்மனாக இருக்கிறது என்று மனதில் உறுதியாக நினைக்க வேண்டும்.

50. இந்த ஜகத்தானது நாம, ரூபம், செயல்பாடுகள் இவை மூன்றும் சேர்ந்ததுதான். எல்லா விதவிதமான நாம-ரூபங்களும் பிரம்மத்தையே குறிக்கின்றது.  மேலும் எல்லா பயன்பாடுகளும், செயல்களும் பிரம்மனையே சார்ந்து இருக்கின்றது என்று உபநிஷத் கூறியுள்ளது.

51. தங்கத்திலிருந்து செய்யப்பட்ட விதவிதமான ஆபரணங்களிடத்தில் தங்கம்தான் உண்மையாக இருக்கிறது.  அதேபோல பிரம்மத்தில் இருந்து தோன்றும் நாம ரூபங்கள், பயன்பாடுகள் அனைத்திலும் பிரம்மன்தான் நிலையாக, உண்மையாக இருக்கிறது.

52. ஜீவாத்மா, பரமாத்மா இவர்களுக்குமிடையே சிறிதளவு வேற்றுமைகளை பார்க்கின்ற அக்ஞானத்துடன் கூடிய மனிதனுக்கு பயம் இருப்பதாக உபநிஷத் கூறுகின்றது.  எல்லா பயமும் பொய்யிலிருந்துதான் வருகின்றது.

53. பிரம்ம ஸ்வரூபத்திற்கு நேர்மாறானதாக உள்ள ஜகத்தை எப்படி சத்யமாக பார்க்க முடிகின்றது. ஜீவனுக்கு ஞான அவஸ்தை அக்ஞான அவஸ்தை என்ற இரண்டு நிலைகள் உள்ளது. இந்த அக்ஞான அவஸ்தையில் இருக்கும்போதுதான் இருமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்பொழுது அக்ஞான நிலையில் இருமைகளை தனக்கு வேறாக பார்க்கிறானோ, அனைத்தும் ஆத்மாவாக மாறிவிடுகின்றதோ, தானாக பார்க்கின்றானோ அப்போது அவைகளுக்கு வேறாக தன்னை சிறிதளவுக்கூட பார்ப்பதில்லை.

54. எப்பொழுது (ஞான நிலையில்) அனைத்து ஜீவராசிகளையும் தானாகவே இருப்பதாக பார்க்கின்றானோ, தானேயென்று அறிகின்றானோ அப்பொழுது  கண்டிப்பாக அவனிடத்தில் மோகமும், சோகமும் இருப்பதில்லை. நான் இரண்டற்றவன் என்கின்ற ஞானத்தினால் இந்த நிலையை அடைந்திருக்கின்றான்.

55. எல்லாமுமாக இருக்கின்ற ஆத்மாவே பிரம்மனாகவே இருக்கிறது. இது ப்ருஹதாரண்யகம் என்ற உபநிஷத்தில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

56. ஒரு பொருளின் இருத்தலை இரண்டு முறையில் நிரூபிக்கலாம். அனுபவிக்கும் விஷயம் இருத்தலை உறுதி செய்கிறது. எது நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதற்கும் இருத்தலை கொடுத்து விடுகிறோம்.  பயனற்ற பொருட்களுக்கு இருத்தலை நாம் கொடுப்பதில்லை.  இல்லாமைக்கு சமமாக பாவிக்கப்படுகிறது. அன்யதா ஸித்தஹ – எதனால் அது இருந்தாலும், இல்லையென்றாலும் ஒரு பயனும் இல்லாததாக இருக்கிறதோ அதை இவ்வாறு கூறப்படுகிறது. இந்த உலகம் அன்யத ஸித்தவாக மாறும்போது நாம் முக்தனாக இருக்கிறோம் என்பதை உறுதிபடுக்கிக் கொள்ளலாம்.
வ்யவஹார க்ஷமஹ பயன்தரும் பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஜாக்ரத் பிரபஞ்சம் அனுபவத்திற்கும் இருக்கிறது. பயனுள்ளதாகவும் இருப்பதால் அது சத்யமாக தோன்றிக் கொண்டிருக்கிறது. அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற உலகமானது அனுபவிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், பயனை அளிக்கக்கூடியதாக இருந்தாலும் எவ்வாறு கனவில் காண்கின்ற பொருட்களைப் போல் மித்யாவாக இருக்கின்றதோ அதுபோல அது மித்யா ஸ்வரூபமாகத்தான் இருக்கிறது. கனவில் காணப்படும் பொருட்கள் அனுபவிக்கப்படுவதாக இருக்கும்.  பயனைக் கொடுப்பதாகவும் இருந்தாலும் அவைகள் பொய்யென்று என்று புரிந்துக் கொண்டிருக்கின்றோம். கனவில் காண்பவைகள் விழித்ததும் பொய்யென்று நீக்கி விடுகின்றோம்.

57. கனவில் காண்கின்ற அனைத்தும் விழிப்பு நிலையில் இல்லை. அதேபோல விழிப்பு நிலையில் பார்க்கின்றவைகள் கனவு நிலையில் இருப்பதில்லை.    ஆழ்ந்த உறக்கத்தில் இந்த இரண்டு நிலைகளும் கிடையாது.

58. இவ்விதம் யுக்தியை பயன்படுத்தி விசாரம் செய்யும்போது மூன்று நிலைகளிலும் இருக்கின்ற அனைத்தும் மித்யாவாகின்றது. இந்த உலகமானது மூன்று குணங்களினால் மாயையினால் நன்கு தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.  இது மித்யாவாகின்றது. இதை மித்யாவாக பார்ப்பவன் குணங்களை கடந்தவன், என்றும் இருப்பவன், ஒன்றாகவே இருப்பவன், அனைத்து உடல்களுக்கும் அறிவு ஸ்வரூபமாக இருப்பவன். மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருப்பவன் என்றும் கூறப்படுகிறது.

59. எவ்விதம் களிமண்ணால் உருவாக்கப்பட்ட பொய்யான பானை என்கின்ற உருவத்தையும் கிளிஞ்சலில் தோன்றுகின்ற வெள்ளி என்கின்ற பொய்யான தோற்றத்தையும் பார்க்கின்றோமோ அது போல பிரம்மனிடத்தில் ஜீவனைப் பார்க்கின்றோம். அதிஷ்டானத்தை தெளிவாக பார்க்கும்போது அதில் ஏற்றி வைத்திருக்கும் ஜீவனைப் பார்ப்பதில்லை.

60. எவ்விதம் களிமண்ணுக்கு பானை என்ற பெயரும், தங்கத்திற்கு மோதிரம் என்ற பெயரும், கிளிஞ்சலுக்கு வெள்ளி என்ற பெயரும் வந்ததோ அதுபோல பிரம்மத்திற்கு ஜீவன் என்ற சப்தம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது

61. எவ்வாறு ஆகாசத்தில் நீல வர்ணத்தையும், பாலைவனத்தில் தோன்றும் கானல் நீரும், கம்பத்தில் மனிதனையும் தவறாக பார்க்கப்படுகின்றதோ அதுபோல அறிவு ஸ்வரூபமான பிரம்மத்தில் ஜகத்தும் பார்க்கப்படுகின்றது.

62. எவ்வாறு யாருமில்லாத இடத்தில் பிசாசை கற்பணை செய்கின்றோமோ, மேகங்களில் கந்தர்வ கோட்டையை கற்பணை செய்து பார்க்கின்றோமோ, ஆகாசத்தில் இரண்டு சந்திரனை பார்க்கின்றோமோ அதுபோல சத்யமாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற பிரம்மனிடத்தில் பொய்யான ஜகத் பார்க்கப்படுகிறது

63. எவ்விதம் கடலில் தோன்றுகின்ற அலைகளில் நீர் மட்டும்தான் இருக்கின்றதோ, நீர்தான் அலைகளாக காட்சியளிக்கின்றதோ , பித்தளையானது பாத்திரங்களாக காட்சியளிக்கின்றதோ அவ்விதமே பிரம்மனே உலகமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

64. எவ்விதம் களிமண் பானை என்ற பெயருள்ளதாக தோன்றுகின்றதோ, நூலானது துணியென்ற பெயருடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவ்விதமே அறிவு ஸ்வரூபமான பிரம்மனே ஜகத் என்ற பெயரில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.  எனவே பிரம்மத்தை அது காட்சியளிக்கின்ற பெயரை விட்டுவிட்டு பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

65. அனைத்து உலக விவகாரங்களும் மனிதர்களால் பிரம்மத்துடன்தான் செய்யப்படுகிறது. ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாதவர்களால் இதை அறிவதில்லை.  எப்படி களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் போதும் களிமண்ணைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் பயன்படுத்துகின்றோம்.

66. பானைக்கும், களிமண்ணுக்கும் காரிய-காரண சம்பந்தம் என்றென்றும் உள்ளது. அதுபோல ஜகத்துக்கும், பிரம்மத்திற்கும் இதே சம்பந்தம் ஸ்ருதியில் யுக்தி மூலமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதிலிருந்து காரணம்தான் காரியத்தில் இருக்கும் என்ற விதிப்படி ஜகத்தாக பிரம்மன்தான் காட்சியளிக்கிறது.

67. பானையை கையாளும்போது கண்டிப்பாக அதனுடன் சேர்ந்து களிமண்ணைதான்  கையாள்கின்றோம். அதுபோல இந்த பிரபஞ்சத்தை பார்க்கும்போது ஸ்வயம் பிரகாசமான பிரம்மன்தான் எந்த பிரமாணத்தின் உதவியில்லாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.

68. எவ்விதம் கயிறானது பாம்பாகவும், கயிறாகவும் இரண்டுவிதமாக இரண்டு பேர்களால் பார்க்கப்படுகின்றதோ அதேபோல பிரம்மனானது தூய்மையானதாகவும், தூய்மையற்றதாகவும் காட்சியளிக்கின்றது. இந்த வேற்றுமை பார்ப்பவனின் அறிவைப் பொறுத்து அமைகின்றது. ஆத்ம ஞானத்தை உடையவனுக்கு தூய்மை உள்ளதாகவும், அறியாமையிலிருக்கின்றவனுக்கு தூய்மையற்றதாகவும் இருக்கிறது.

69. எவ்விதம் பானையானது களிமண் ஸ்வரூபமாகவே உள்ளதோ அவ்விதமே இந்த உடலும் சைதன்ய ஸ்வரூபமாகத்தான் உள்ளது. உடல் என்பது வெறும் பெயர்தான், உருவம்தான் என்று உணர வேண்டும். இது அனாத்மா, இது ஆத்மா என்று பிரித்துப் பார்க்கின்ற அத்வைத தத்துவத்தைப் பற்றி அறியாதவர்களால், இந்த விசாரத்தில் ஈடுபடுவது பயனற்றதாகும்.

70. எவ்விதம் கயிறானது பாம்பாக தவறாக பார்க்கப்படுகிறதோ, கிளிஞ்சலில் வெள்ளிக் காசாக பார்க்கப்படுகிறதோ, அவ்விதமே மூடர்களால் தேகமானது  தவறாக ஆத்மாவாக பார்க்கப்படுகிறது

71. எவ்விதம் களிமண் பானையாக பார்க்கப்படுகிறதோ, நூலானது துணியாக பார்க்கபடுகின்றதோ அதுபோல அக்ஞானிகளால் தேகமானது ஆத்மாவாக தவறாக பார்க்கபடுகின்றது..

72. தங்கமே காது குண்டலமாகவும், அலைகளே கடல்களாகவும் தவறாக பார்க்கப்படுவது போல தேகத்தையே ஆத்மாவாக பார்க்கிறான் அக்ஞானி

73. தூணை மனிதனாகவும், வறண்ட நிலத்தை கானல் நீராகவும், தவறாக பார்க்கப்படுவது  போல தேகத்தையே ஆத்மாவாக பார்க்கிறான் அக்ஞானி

74. பலமரக்கட்டைகள் ஒன்று சேர்ந்து வீடாகவும், இரும்பானது கத்தியாகவும் தவறாக பார்க்கப்படுவது போல தேகத்தையே ஆத்மாவாக பார்க்கிறான் அக்ஞானி

75. ஆத்மா அக்ஞானத்துடன் இருப்பதனால் ஆத்மாவிடத்தில் சரீரத்தின் தன்மையைப் பார்க்கிறான். எவ்விதம் தண்ணீரில் காணப்படும் மரத்தின் பிரதிபிம்பங்கள் தலைகீழாக தெரிகின்றதோ அவ்விதம் ஆத்ம தர்மமாக தவறாக சரீர தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

76. படகில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பார்ப்பவைகளெல்லாம் நகர்வது போல தோன்றும். அதுபோல அகர்த்தவான ஆத்மா செயல் செய்வதாக தவறாக நினைக்கிறார்கள்

77. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவன் கண்களால் பார்க்கப்படும் அனைத்தும் மஞ்சள் நிறத்தோடு தெரிவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

78. கண்களில் குறையுள்ளவனால் பார்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் குறை உள்ளதாக தெரிவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

79. தீப்பந்தத்தை வேகமாக சுழற்றும்போது சூரியனைப் போல பிரகாசமான ஒளிவட்டம் தோன்றுவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

80. உருவில் பெரியதாக இருக்கும் பொருட்கள் மிக தொலைவிலிருந்து பார்க்கும் போது சிறியதாக தோன்றுவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

81. உருவில் மிக சிறியதாக இருக்கின்ற பொருட்கள் பூதக்கண்ணாடியின் வழியே பார்க்கும்போது பெரியதாக தெரிவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

82. கண்ணாடியில் மேற்பரப்பு நீர்பரப்பை போலவும், நீரின் மேற்பரப்பானது கண்ணாடியின் மேற்பரப்பாக தெரிவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

83. சிறிய நெருப்புத்துண்டு மணி போலவும், மணியானது நெருப்புத் துண்டு போலவும் சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

84. மேகங்கள் நகர்ந்து செல்லும்போது சந்திரனும் நகர்வதைப்போல தெரிகிறது அதுபோல அகர்த்தாவாக இருக்கின்ற ஆத்மாவிடம் கர்த்தாவாக இருக்கின்ற  தேகத்தின் தர்மத்தை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

85. தவறாக திசைகளை புரிந்துகொள்ளுதல், சில பேருக்கு அறியாமையினால் மோகத்தால் ஏற்படுவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

86. நீரில் தெரிகின்ற நிலவின் பிரதிபிம்பம் அசைந்து கொண்டு இருப்பதாக தவறாக தோன்றுவது போல சரீர தர்மத்தை தவறாக ஆத்ம தர்மமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

87. இது வரை நாம் பார்த்த உதாரணங்களின் மூலமாக அறியாமையின் காரணமாக ஆத்மாவினிடத்தில் தேகத்தை ஏற்றி வைத்துள்ளோம் என்று புரிந்து கொள்ளலாம்.. பிரபஞ்சத்தை பிரம்மனிடத்தில் ஏற்றி வைத்துள்ளோம். இந்த அத்யாஸமானது ஆத்மாவைப் பற்றிய முழுமையான அறிவை அடையும் போது மறைந்து விடுகிறது. அந்த பரபிரம்மனிடத்தில் லயமடைந்து விடுகிறது

88. இந்த அசைகின்றதும், அசையாதாகவும் உள்ள அகில பிரபஞ்சமும் ஆத்மாவாக மித்யாவாக அறியப்பட்டு விட்டது. எல்லாப் பொருட்களும் இல்லாததாகிவிட்ட காரணத்தினால் இந்த உடலுக்கு ஆத்மா என்ற தன்மை எப்படி இருக்க முடியும். தேகம் ஆத்மாவல்ல என்றும், ஆத்மாவொன்றுதான் இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

89. ஆத்மாவான உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு  காலத்தை கழித்து கொண்டு வாழ்வாயாக. பெரிய அறிவாளியே! அறிவொளியுடன் இருக்கின்றவனே! முழுமையாக பிராரப்த காலத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது வரும் கஷ்டங்களை நினைத்து துயரப்படாதே! பொருட்படுத்தாமல் அனுபவித்துக் கொண்டிரு.

90. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு பிராரப்த கர்மபலன் ஞானியையும் விடுவதில்லை.  இவ்வாறு வேதாந்த சாஸ்திரத்தில் கேட்ட கருத்தானது. இனிவரும் ஸ்லோகங்களில் நீக்கப்படுகிறது.

91. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு அவரிடத்தில் பிராரப்த கர்மமானது கிடையாது. ஸ்தூல, சூட்சும சரீரங்கள் போன்றவைகள் இல்லாததாகி விட்டதால் எவ்விதம் சுக-துக்கங்களால் பாதிக்கபட முடியும். கனவில் அனுபவிக்கின்ற சுக-துக்கங்கள் அனைத்தும் அந்த நிலையில் இருக்கின்ற சரீரத்தினால்தான், விழித்ததும் அவைகள் இல்லாததினால் எதனாலும் பாதிக்கப்படமாட்டான்.  விழிப்பு நிலையில் இருக்கும் போதும் சரீரங்கள் இல்லாததாகி விட்டதால் அவைகளுக்கு வரும் சுக-துக்கங்களால் பாதிக்கப்படமாட்டான்.

92. முற்பிறவியில் செய்த கர்மத்தால்தான் இந்த பிறவியில் பிராரப்த கர்மமாக வந்து இருக்கிறது. ஆத்ம ஞானத்தை அடைந்தவுடன் ஞானிக்கு பிறப்பு  கிடையாததாகி விடுவதால், முற்பிறவி என்று இல்லாததாக விடுவதால் பிராரப்த கர்மமென்பதே இருக்காது

93. கனவில் காணும் தேகங்கள் கற்பணையாக உருவாக்கப்பட்டவை எனவே அவைகள் பிறந்திருக்கின்றது என்று சொல்ல முடியாது. அதேபோல இந்த விழிப்பு நிலை தேகமும் கற்பணையாக உருவாக்கப்பட்டது என்று நினைப்பதால் அதற்கு பிறப்பு என்பதே கிடையாது. எனவே பிறப்பற்ற ஒன்றில் எப்படி பிராரப்தம் இருக்க முடியும்.

94. இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாக இருப்பதை ஞானி அழித்து விட்டான். பானைக்கு களிமண் உபாதான காரணமாக இருப்பதை போன்ற உபாதான காரணத்தை அழித்துவிட்டால் காரியமான பிரபஞ்சமும் இல்லாது போய் விடும். ஆத்மாவை பற்றிய அறியாமையே இந்த உபாதான காரணம். வேதாந்திகளால் உரக்க சொல்லப்படுகிறது.  அந்த அக்ஞானம் அழிந்துவிட்டால் உலகமும் அழிந்து விடும்.  ஜகத்திற்கு உபாதான காரணமாக இருக்கின்ற  பிரம்மன் இல்லை ஆனால் அக்ஞானமும் இருக்கிறது.  பானை செய்வதற்கு முன் இருக்கின்ற உருண்டை செய்யப்பட களிமண்தான் அக்ஞானம். அதுதான் ஜகத் தோற்றத்துக்கு காரணம் என்று ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். மாயை மாறுகின்ற உபாதான காரணம், பிரம்மன் மாறாத உபாதான காரணமாக இருக்கிறது.

95. எவ்விதம் கயிற்றை விட்டுவிட்டு மதிமயக்கத்தினால் பாம்பைப் பார்க்கிறானோ அதுபோல சத்தியமாக உள்ள பிரம்மத்தை அறிந்து கொள்ளாமல் மோகத்தை அடைந்த புத்தியோடு கூடியவன் இந்த உலகத்தை சத்தியமாக பார்க்கிறான்.

96. கயிற்றின் தன்மையான முழுமையாக புரிந்து கொள்ளும்போது பாம்பினுடைய தோற்றம் அதில் இருக்காது. அதுபோல ஜகத்திற்கு ஆதாரமாக உள்ளதை அறியும் போது ஜகத் முழுமையாக இல்லாமல் போய்விடும்.

97. இந்த தேகமும் உலகத்தினுடைய அங்கமாக இருப்பதால் அதுவும் பொய்யென்று ஆகிவிடுகிறது. பிராரப்தம் உடலுக்கு வருவதால், தேகமே இல்லாத போது பிராரப்தம் எப்படி செயல்பட முடியும்? ஆகையால் அக்ஞானிகள் புரிந்து கொள்வதற்காக வேதாந்தம் பிராரப்தத்தைப்பற்றி பேசுகிறது.

98. இந்த ஞானியினுடைய அனைத்து கர்மபலன்களும் அந்த பிரம்ம ஞானத்தை அடைந்தவுடன் நாசமடைகிறது. இங்கு கர்மபலன்கள் என்று குறிப்பிடுவதால் பிராரப்த கர்மபலனும் அழிந்து விடுகின்றது என்று உபநிஷத்தினால் தெளிவாக கூறப்பட்டுள்ளது

99. ஆத்ம ஞானத்தை அடைந்தாலும் பிராரப்தத்தின் பிடியிலிருந்து விடுபட முடியாது என்று உறுதியாக கருதினால் மூன்று குறைகள் வந்துவிடும்.  உபநிஷத்தின் அத்வைத  உபதேசமும்  பயனற்றதாகி விடும்.    அந்த மூன்று  குறைகளானது 1. ஞானத்திற்கு கர்மபலன்களை அழிக்க முடியாதாகி விடுமானால், அதை அடைய வேண்டிய அவசியமில்லை, 2. குரு-சிஷ்ய பரம்பரையும் இல்லாமல் போய்விடும். 3. வேதாந்தத்தின் மையக்கருத்தான அத்வைதம் என்பது பயனற்றதாகி விடும்..

100. இப்பொழுது பதினைந்து விதமான சாதனங்களை சொல்லப்படுகிறது. ஞானத்தில் நிஷ்டை அடைவதற்காக இவைகளைப் பயன்படுத்தி நிதித்யாஸனம் என்ற இந்த தியானத்தை மட்டும் இடைவிடாமல் செய்துவர வேண்டும்.

101. நிதித்யாஸன சாதனத்தை தொடர்ந்து செய்யவில்லையென்றால் ஸத், சித் ஸ்வரூபமாக இருக்கின்ற பூரணமான பிரம்மனாக இருக்க முடியாது, ஆகவே நிதித்யாஸனத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.  பிரம்மத்தை தியானிக்க வேண்டும். ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற விரும்புவன், மோட்ச நிலையை அடைய விரும்புபவன் அதிக காலம் செய்ய வேண்டும்.

102. பதினைந்து சாதனங்களில் முதல் பத்து சாதனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
102.1. யமஹ – புலனடக்கம் (அஹிம்சை, சத்யம் அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரிக்ரஹம்,
102.2. நியமஹ – மனவடக்கம் (தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர பிரணிதானம்),
102.3. தியாகஹ – துறத்தல்,
102.4. மௌனம் – பேசாதிருத்தல்,
102.5. தேஶ - இடம் (தியானம் செய்வதற்கேற்ற சூழ்நிலையுள்ள இடம்),
102.6. காலம் – காலம் (தியான செய்ய வேண்டிய நேரம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும்.)
102.7. ஆஸானம் – அமர வேண்டிய நிலை,
102.8. மூலப3ந்த4ஹ – பந்தத்தின் மூலக்காரணத்தை நீக்குதல்,
102.9. தே3ஹஸாம்யம்- உடலை நேராக வைத்தல், அசையாது இருத்தல்,
102.10. த்3ருக் ஸ்தி2தஹ – நேர்பார்வை (தியானத்தின் போது பார்வை எப்படி வைத்திருக்க வேண்டும் என்ற முறை), 

103. கடைசி ஐந்து சாதனங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது
103.1. ப்ராண ஸம்யமனம் – பிராணாயமம்,
103.2. ப்ரத்யாஹாரம் – மனம் புலன்களின் வழியே வெளியே செல்லாமல் நெறிபடுத்தி வைத்திருத்தல்,
103.3. தா4ரணா – மனதை ஒரு விஷயத்தில் குவித்து வைத்திருத்தல்,
103.4. ஆத்ம த்3யானம் – ஆத்மாவை மட்டும் தியானித்தல்,
103.5. ஸமாதி4 – ஆத்ம தியானித்தல் நிலைத்திருத்தல்

104. யமஹ – புலனுகர் போகப்பொருட்களிலிருந்து புலன்களை விலக்கிவைத்தல். புலன்களை அமைதியாக வைத்திருத்தல்
105. சாதாரண மனிதனின் புலன்கள் சக்தி குறைந்திருந்தாலும், வைராக்கியம் இருந்து விட்டால் அவைகள் அமைதியாக வைத்திருக்க முடியும்.  ஆனால் ஆத்ம ஞானத்தை அடைந்தவனால் புலன்களை அமைதியாக வைத்திருக்க முடியும். அனைத்தும் பிரம்ம ஸ்வரூபம் என்ற இந்த விசேஷமான அறிவால் புலன்களின் கூட்டங்களை அமைதிப்படுத்த வேண்டும். இதுவே யமம் என்று கூறப்படுகிறது. இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்து அடைய வேண்டும்.

106. ஒரே எண்ணமே தொடர்ந்து இருத்தலே ஸஜாதீய வ்ருத்தி என்பதாகும்.  இந்த எண்ணங்களுக்கு வேறானவைகளாக தோன்றுவது விஜாதீய வ்ருத்தி ஆகும். ஒரு பொருளைக் குறிக்கின்ற எண்ணமே தொடர்ந்து இருக்க வைத்து அதற்கு வேறான எண்ணங்களை விட்டுவிடுதல் என்பதே நியமம் என்று கூறப்படுகிறது.  இது மேலான ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது. எனவே ஞான நிஷ்டை விரும்புபவர்கள் நிதித்யாஸனத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்..

107. த்யாகம் – எது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகின்றோமோ, அதிகமாக விரும்புகின்றோமோ அதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தலே தியாகம் என்று அழைக்கப்படுக்கிறது. இங்கு இந்த உலகத்தை துறந்துவிடுதலை குறிக்கிறது. அறிவு ஸ்வ்ரூபமான பிரம்மன் என்ற ஞானத்தால் ஜகத்தினுடைய தோற்றத்தை துறந்துவிடுகின்ற தியாகமானது மகான்களால் போற்றப்படுகின்றது. இந்த தியாகமானது உடனடியாக மோட்சத்தைக் கொடுக்கிறது.

108. அப்ராப்ய – அடையமுடியாமல், நிவர்தந்தே – திரும்பி வந்துவிடுதல், க3ம்யம் – அடையக் கூடியது, ஸர்வதா3 பவேதி – எப்போதும் அடையப்படுகிறது.
பிரம்மத்தையே மௌன ஸ்வரூபமாக இங்கே குறிப்பிடப்படுகிறது. பிரம்மத்திற்கு அவயவங்களற்றதாக இருப்பதாலும், அது மட்டுமே இருப்பதாலும் அதனால் பேச முடியாது. அந்த பிரம்மத்தை விளக்க முடியாமல் வாக்கானது திரும்பி வந்து விடுகிறது. எண்ணங்களும் திரும்பி வந்துவிடுகிறது.  மனதுடன் சேர்ந்து எண்ணத்தாலும் பிரம்மத்தை கிரகிக்க முடியாது. எனவே பிரம்மன் மௌனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையானது ஞானயோகத்தினால் அறிவை அடைந்த ஞானிகளால் மட்டும் அடையக் கூடியது.  புலன்களனைத்தும் பிரம்ம என்ற உணர்வுடன் இருக்க வேண்டும்.

109. எந்த பிரம்மத்திடமிருந்து வாக்கும், மனமும் திரும்பி வருகின்றதோ அந்த பிரம்மத்தை யாரால் உபதேசித்து விளக்கிவிட முடியும்.  இந்த உலகத்தை பற்றியும் பேசி புரிய வைக்க முடியாது.

110. இந்த எண்ணத்தினாலே அடையப்படும். அறிவே மௌனமாகும். ஞானிகளுக்கு இயல்பாக இருக்கின்ற நிலையே மௌனமாகும். ஆரம்ப நிலையில் உள்ள சாதகனுக்கு வாயிலிருந்து எந்த பேச்சும் வராமலிருக்கும் நிலையே மௌன நிலை என்று பிரம்மஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

111. ஆரம்பத்திலும் கடைசியிலும், இடையிலும் என்று குறிப்பிடுகின்ற மூன்று காலங்களிலும் மக்கள் இல்லை, ஆனால் பிரம்மன் எல்லாவிடத்திலும், எல்லா காலங்களிலும் வியாபித்திருக்கிறார். மனிதர்கள் இல்லாத இடத்திலும் இருப்பது பிரம்மனே என்று சொல்லப்படுகிறது

112. எப்படி நிதித்யாஸனத்திற்கு தேசம் கிடையாது என்று சொல்லப்படுகிறதோ.  அதேபோல காலமும் கிடையாது என்று சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார். பிரம்மதேவன் முதல் புல்பூண்டு வரை என்ற எல்லை எதுவும் இல்லாமல், தோற்றத்திற்கு வெளிக்கொண்டு வந்ததும் ஆதாரமாகவும் இருப்பதுமான காலம் என்ற சொல்லப்படுகின்ற பூரணமான, ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன்தான் என்று கூறப்படுகிறது.

113. ஆசனம் என்பது அமர்கின்ற இருக்கையையும், அமர்கின்ற நிலையையும் குறிக்கின்றது.  இங்கே எப்படி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை பற்றிய சிந்தனையை மேற்கொள்ளும் போது மிகவும் சுகமாக தடையில்லாமல் அதிக காலம் அமர முடியுமோ அதுவே சிறந்த ஆசனமாகும். உடலுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடிய மற்ற அனைத்து ஆசனங்களும் ஆசனங்களல்ல.

114. எது ஏற்கனவே உருவாக்கப்பட்டதாக, செய்யப்பட்டதாக, அடையப்பட்டதாக இருக்கின்றதோ, அதுவே தோன்றிய அனைத்தும் ஒடுங்குகின்ற இடமாக இருக்கின்றது. அதுவே ஜகத்திற்கு ஆதாரமாகவும், என்றும் அழியாதாகவும் இருக்கிறது. எந்த இடத்தில் ஞானிகளெல்லாம் சென்று ஒடுங்குகிறார்களோ பிரம்மனான அதுவே ஸித்தாசனம் என்று கூறப்படுகிறது.

115. எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாக இருப்பதும், எது மனதை அமைதியடைய, கட்டுபடுத்துவதற்கு காரணமாக இருப்பதுமாக இருக்கின்றது பிரம்மனேயாகும்.  இதையே மூலபந்தம் என்று கூறப்படுகிறது. இந்த பிரம்மத்திடம் தன்னை ஒப்படைத்தவர்கள் எப்பொழுதும் அதனிடத்தே இருப்பார்கள்.

116. காய்ந்த மரக்கட்டைப்போல இருத்தல், எல்லோரிடத்திலும் சமமாக விவகாரம் செய்தல், நிதித்யாஸனம் செய்யும் சாதகன் தனது எல்லா அங்கங்களையும், புலன்களையும், மனதையும், சமமாக வைத்திருத்தல், அளவுடன் விவகாரத்தில் ஈடுபடுத்தல். எல்லா அவயவங்களையும், புலன்களையும், மனதையும், புத்தியையும் சமமாக அளவாக விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவனாகவும், இவைகளனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்கியுள்ளதாகவும் இருக்கின்றது.  அப்படியில்லையென்றால் காய்ந்த மரக்கட்டைப்போல் நேராக உடலை வைத்துக் கொண்டிருக்கலாம். இடத்திற்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து அவயவங்களை சமநிலையில் வைத்துக் கொள்ளமுடியாது.

117. சாதகன் தன்னுடைய பார்வையை ஞானமயமாக வைத்திருக்க வேண்டும், நானே பிரம்மன், அனைத்தும் பிரம்மன் என்று மாற்றியமைத்து ஜகத்தை பிரம்மமயமாக பார்க்க வேண்டும்.  இந்த நிலையில் இருக்கும் போது உலகத்திலுள்ள எதுவும் பயத்தையோ, மோகத்தையோ, மன சஞ்சலத்தையோ கொடுக்காது.  இந்தப்பார்வைதான் மிக  உயர்ந்த மேலானதாகும். மூக்கினுடைய நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நியமமெல்லாம் கிடையாது.

118. பார்ப்பவன், பார்ப்பவன் பயன்படுத்தும் கருவி, பார்க்கப்படும் பொருள் இவை மூன்றும் இல்லாமல் எந்த பிரம்மனிடத்தில் இருக்கின்றதோ அந்த பிரம்மனிடத்தில் நம்முடைய பார்வையிருக்க வேண்டும். இதைத் தவிர மூக்கின் நுனியை பார்ப்பதல்ல.

119. பிராணனை அமைதிப்படுத்தினால் மனமும் அமைதியாகிவிடும். சித்தம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எல்லாவற்றையும் பிரம்மனாகவே பாவித்து எல்லா எண்ணங்களையும் நெறிபடுத்ததலே பிராணாயாமம் என்று சொல்லப்படுகிறது.

120. இந்த பிரபஞ்சத்தை பொய்யென்று விலக்கி விடுவதே ரேசக பிராணாயாமம் என்ற பெயருடையது.  நானே பிரம்மனாக இருக்கிறேன் என்ற எண்ணமே அதுவே பூரக பிரணாயாமம் என்ற பெயருடையது.

121. பிறகு நானே பிரம்மன் என்ற எண்ணத்தை உறுதியாக பிடித்து வைத்திருத்தலே கும்பக பிராணாயாமம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இவைகளெல்லாம் ஞானி செய்கின்ற பிராணாயாமமாகும். அக்ஞானிகளுடைய பிராணாயாமம் மூச்சுக் காற்றை கஷ்டப்படுத்தி நெறிப்படுத்துவதாகும்.

122. அனுபவிக்கப்படும் பொருட்களிடத்தில், தன்னிடத்தில் இருக்கின்ற  சைதன்ய ஸ்வரூபமான பிரம்மனிடத்தில் மூழ்கிவிட வேண்டும். இதையே பிரத்யாஹாரம் என்று அறிந்து கொள்ள வேண்டும். முமுக்ஷூக்கள் இதியே முயற்சி செய்து அடைய வேண்டும்.

123. எங்கேயெல்லாம் மனம் செல்கின்றதோ அங்கேயெல்லாம் பிரம்மனையே பார்ப்பாயாக. இதுதான் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தித்தலாகும். இப்படிபட்ட தாரணைதான் மிகவும் மேலான சாதனமாகும்.

124. நான் பிரம்மனாக மட்டும்தான் இருக்கிறேன் என்ற உண்மையான எண்ணத்துடன் இருத்தலே தியானம் என்ற சொல்லால் கூறப்படுகிறது. இந்த தியானத்திற்கு எந்த ஆலம்பனமும் கிடையாது.  எந்த ஆலம்பனத்தின் துணை இந்த தியானத்திற்கு அவசியமில்லை.  இந்த நிலையில் இருக்கும் போது மேலான ஆனந்தமானது அனுபவிக்கப்படுகிறது. ( இந்த எண்ணத்தை தவிர மற்ற அனைத்து எண்ணங்களும் பொய்யானவை (அஸத்) என்று இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையான எண்ணத்தை வேறெந்த பிரமாணத்தாலும் நீக்க முடியாது.)

125. சமாதி என்பது தியானத்தின் முதிர்ந்த நிலையே என்பது பதஞ்சலியின் அர்த்தமாகும்.  மாறாத பிரம்மத்தை விஷயமாகக். கொண்ட எண்ணத்தில் மீண்டும் மீண்டும் நிலைத்து இருந்து கொண்டு நான் தியானிக்கிறேன் என்ற எண்ணமே முழுவதுமாக இருந்து கொண்டிருக்கும் நிலையே சமாதி என்ற கூறப்படுகிறது. சமாதி நிலையில் பிரம்ம ஞானத்தில் நிலை பெற்றுவிட்டிருப்பான்.

126. நிதித்யாஸனம் எதுவரை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலாக இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.  நிதித்யாஸனத்தை செய்கின்ற சாதகனுக்கு ஞானத்தையினுடைய பலனை அனுபவத்திற்கு கொண்டு வரும் போது உடனடியாக எப்போது ஞான விருத்தியானது பலனைக் கொடூக்கின்றதோ அதுவரை இந்த நிதித்யாஸன சாதனத்தை நன்கு முயற்சியுடன் செய்து கொண்டு வர வேண்டும்.

127. ஞான நிஷ்டைக்காக நிதித்யாஸன சாதகன் அதன் பலனை அடைந்து விட்ட பிறகு அதிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.  இந்த சாதனத்தின் மூலம் முக்தனாக உயர்கின்றான்.  இந்த ஞானியினுடைய நிலையை சொல்லால் விளக்க முடியாது.  மனதாலும் புரிந்து கொள்ள முடியாது.

128. தியானம் போன்ற சாதனங்களை மேற்கொள்ளும்போது பலமான தடைகள் பல தானாகவே வரும். அந்த தடைகளாவது 1. அனுஸந்தான ராஹித்யம் – தொடர்ந்து செய்யாமல் இடையிலே விட்டுவிடுதல், 2. ஆலஸ்யம் – சோம்பல் வந்து விடலாம். 3. போ4க3லாலஸம் – போகத்தில் உள்ள பற்று, இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை

129. 4. லயஹ – தூக்கம், 5. தமஹ – செய்யலாம, வேண்டாம் என்ற மனக்குழப்பம்,  6. விக்ஷேபம் – தியானத்திற்கு எதிரான தேவையற்ற எண்ண ஓட்டங்கள்,       7. ரஸாஸ்வாதஹ – தியானத்தின் பலனை அடைவதற்கு முன்னரே, தியானம் செய்யும்போதே வருகின்ற சுகத்தை அனுபவித்தல், 8. ஸூன்யதா – காரணம் இல்லாமல் மனசோர்வடைதல், மன இறுக்கம் ஏற்படுதல். இத்தகைய தடைகளை சாதகன் ஒவ்வொன்றாக மெதுவாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

130. இருத்தல் என்று எண்ணிவிட்டால் அது இருக்கின்றது. அதேபோல இல்லை என்று எண்ணிவிட்டால் இல்லையென்றாகி விடுகிறது.  நான் பிரம்மன் என்ற எண்ணத்தினால் பூரண நிலைய அடைந்து விடுவான்.  ஆகவே இந்த பூரணமாக இருக்கும் தன்மையை அடைவதற்கு இந்த எண்ணத்தையே தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

131. யார் தன்னை தூய்மைபடுத்துகின்ற இந்த எண்ணத்தை விட்டுவிடுகிறார்களோ, அதாவது நானே பிரம்மன் என்கின்ற மேலானதும், வேறெந்த பிரமாணத்தாலும் நீக்க முடியாததுமான இந்த எண்ணத்தை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை பயனற்ற முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், விலங்குகளுக்கு சமமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

132. யார் இந்த பிரம்ம எண்ணத்தை அடைகிறார்களோ, பிறகு அதிலேயே நிலைபெற்று இருக்கிறார்களோ, உறுதிபடுத்திக் கொள்கிறார்களோ அவர்களே உண்மையிலே மேன்மையான மனிதர்கள், பேறு பெற்றவர்கள், முவ்வுலகிலும்  மற்றவர்களால் வணங்கத்தக்கவர்களாக இருப்பார்கள்.

133. நான் பிரம்மன் என்ற இந்த எண்ணமானது எல்லா நேரத்திலும் இருந்து கொண்டு இருக்க வேண்டும். விதவிதமான எண்ணங்கள் வந்தாலும் இந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.  உறுதியாக மனதில் இருக்க வேண்டும்.  மேலும் அந்த எண்ணமானது இயல்பாக, சுபாவமாக மனதில் வர வேண்டும்.  இத்தகையவர்கள்தான் பிரம்ம ஞானத்தை அடைந்து ஜீவன் முக்தி நிலையை அடைகிறார்கள். வெறும் சப்தத்தினால் மட்டும் இந்த எண்ணத்தை உடையவர்களால் முக்தனாக முடியவே முடியாது

134. பிரம்மத்தை பற்றி பேசுவதில், உரையாற்றுவதில் திறமையானவர்களாக இருந்தாலும், உறுதியான, இயல்பான, ஞானமற்றவர்கள் அதிகமான உலக பற்றுடையவர்களாக இருப்பார்கள்.  அவர்களும் அக்ஞானிகளாகத்தான் இருக்கிறார்கள். கண்டிப்பாக அவர்கள் மரணத்திற்கு பிறகு மீண்டும் பிறப்பார்கள். பிறப்பு-இறப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

135. நான் பிரம்மன் என்ற எண்ணமின்றி ஒரு கணப்பொழுதும் அவர்கள் இருந்தது இல்லை.  பிரம்மதேவர், சனக முனிவர்கள், ஶுகர் போன்றவர்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இருந்தார்கள்

136. இதில் காரிய-காரணம் விசாரம் செய்யப்படுகிறது.
1. காரியம் அஸ்தி – காரியத்தின் இருத்தல் – நாம,ரூபங்களைக் கொண்டது
2. காரணம் அஸ்தி – காரணம் இருத்தல் – காரியங்களுக்கு மூலக் காரணமாக ஒன்று மட்டும் இருத்தல்
3. காரிய நிஷேதம் – காரியத்தை நீக்கி விடுதல் – காரணம் மட்டும் இருத்தல்
4. காரன நிஷேதம் – காரணத்தை நீக்கி விடுதல் – காரியமே இல்லையென்ற போது காரணமும் இல்லையென்று நீக்கிவிடப்படுகிறது

இந்த நான்குபடிகளிலிருந்து அடையும் அறிவானது காரியமாக தெரிகின்ற ஜகத் மித்யா என்பதாகும். காரியத்தில் அதற்கு காரணத்தின் தன்மைதான் உள்ளது. பானையில் அதற்கு காரணமாக களிமண்ணின் தன்மைதான் இருக்கிறது. காரணத்தில் காரியம் இருக்காது. காரியத்தை சாராமல் காரணம் இருக்கிறது. பானையைச் சார்ந்து களிமண் இல்லை. காரியத்தில் இருக்கின்ற காரணம் என்ற தத்துவமும் சென்று விடும்.  காரியம் என்பது இல்லையென்றால், காரணமும் கிடையாது. விசாரத்தின் மூலமாகதான் இதை அறிய முடியும்.

137. பானை-களிமண் உதாரணத்தின் மூலமாக மீண்டும், மீண்டும் விசாரித்து பார்க்க வேண்டும். இறுதியில் தூய்மையான வஸ்து மட்டும் எஞ்சி இருக்கும்.  இதை வாக்கால் கிரகிக்க முடியாது.

138. நுட்பமான ஒன்றை புரிந்து கொண்டு அறிவை அடைவதற்கு அதேமாதிரியான நுட்பமான கருவிகளைத்தான் உபயோகிக்க வேண்டும். உபநிஷத் வகுத்து கொடுத்திருக்கின்ற முறையினால்தான், தூய்மையான மனதை அடைந்தவர்களுக்குத்தான் ஆத்ம ஞானமானது  அடையப்படுகிறது. பிறகு அடைந்த ஞானத்தின் நிலைபெற வேண்டும்.

139. முதலில் ஒரு சாதகன் காரணத்தை வியதிரோகத்துடன் உன்னிப்பாக கவனித்து பார்க்க வேண்டும். வியதிரேகம் என்பது காரியம் இல்லாத போதும் காரணத்தை பார்த்தலாகும். எப்பொழுதெல்லாம் காரியத்தை பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தக் காரணத்தைப் பார்க்க வேண்டும்.

140. இந்தக் காரியத்தில் காரணத்தைப் பார்க்க வேண்டும். பிறகு காரியத்தை விட்டுவிட வேண்டும்.  அதனால் இந்த காரணம் என்கின்ற தன்மையும் சென்று விடும். இறுதியில் பரம்பொருளான பிரம்மனே எஞ்சி நிற்கும்.

141. எந்தப் பொருளைப்பற்றிய உண்மையான அறிவுடன் தொடர்ந்து முழு முயற்சியுடன் தீவிரமாக பாவித்துக் கொண்டு தியானிக்கப்பட வேண்டும். அதனால் நிச்சயமாக விரைவில் அந்தப்பொருளாகவே ஆகிவிடுவான். எப்படி குளவியானது ஒரு புழுவை கொட்டி கொட்டியே குளவியாகவே மாற்றுகிறதோ அதுபோன்று இந்த நிலையை அடையலாம்.

142. ஞானத்தை அடைந்தவன் எந்தமாதிரி தியானிக்க வேண்டும். எதைத் தியானிக்க வேண்டும் என்பது இதில் கூறப்பட்டிருக்கின்றது. ஞானியானவன் தொடர்ந்து அதிக காலம் மிக கவனத்துடனும், பொறுமையுடனும் தன்னையே தியானிக்க வேண்டும். பார்க்கின்றவைகளையும், பார்க்காதவைகள் எல்லாம் ஆத்ம ஸ்வரூபமாகவும் உலகத்திலுள்ள அனைத்தும் கூட ஆத்ம ஸ்வரூபமாகவும், நானே அனைத்துமாகவும் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்.

143. இந்த ஞானி பார்க்கப்படுவதையே இல்லாததாக மாற்றி, மித்யாவாக மாற்றி அவனுடைய பிரம்ம ஸ்வரூப எண்ணத்தில் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்துடன் சைதன்யத்தை மனதில் நிறைத்தவனாக என்றும் ஆனந்த ஸ்வரூபமான பிரம்மனாகவே இருக்கின்றான்.

144. இந்த பதினைந்து அங்கங்களுடன் கூடியுள்ள ராஜயோகம் என்னால் கூறப்பட்டது. மிகக்குறைவான அளவு மனத்தூய்மை உள்ளவர்களால் இதை பின்பற்றக் கூடாது. அவர்கள் பதஞ்சலி கூறியுள்ள ஹடயோகத்தை பின்பற்ற வேண்டும்.

145. இங்கு கூறப்பட்ட ராஜயோகமானது  தூய்மையாக்கப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட மனதுடன் கூடியவர்களுக்கு பலனைக் கொடுக்கும். குருவிடத்திலும், இறைவனிடத்திலும் பக்தியுடன், சிரத்தையுடன் இருப்பவர்களுக்கு மிக எளிதாக உடனடியாக பலன் கிடைக்கும்.

தொகுப்புரை
01-01 மங்கல ஸ்லோகம்
01-02 நூலினுடைய கருத்து, பலன், அதிகாரித்வம் கூறப்படுகிறது
03-09 சாதன சதுஷ்டயம் விளக்கப்படுகிறது.
10-11 விசாரம் செய்து நானே பிரம்மன் என்ற எண்ணத்தை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
12-16 வேதாந்த சாரம் சொல்லப்பட்டது
17-40 ஆத்ம-அனாத்மா விசாரம், நான் தேகமல்ல என்றும், ஞான ஸ்வரூபம் விளக்கப்பட்டது. விவேகத்தை யுக்தி, ஶ்ருதி பிரமாணங்கள் மூலமாக இந்த கருத்து விளக்கப்பட்டது
41-88 ஜகத் மித்யா என்ற நிலை நாட்டப்பட்டிருக்கிறது
89-99 பிராரப்த கர்மபலன் ஞானிக்கு கிடையாது என்று விளக்கப்பட்டது
100-134 நிதித்யாஸனம் விளக்கப்படுகிறது. 15படிகள் கூறப்பட்டது, இந்த தியானத்தின் போது வரும் தடைகள் விளக்கப்பட்டது.
135-138 காரிய-காரணம் விளக்கப்பட்டது
139-144 நிதித்யாஸன சாதனங்களை பின்பற்றுபவர்களின் அதிகாரித்வம் விளக்கப்பட்டது

--- ooOOOoo ---


.

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...