Wednesday, June 20, 2018

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் - பகுதி-7

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் - பகுதி-7

ஸ்லோகங்கள் 519-609 ஆத்மா-அனாத்மா பிரித்தறியும் விவேகம்
ஆத்மாவையும், அனாத்மாவையும் பிரித்தறிவதினால் மட்டும்தான் ஞானத்தை அடைய முடியும். வேறுவிதமாக அடைய முடியாது. ஆகையினால் யுக்தியைக் கொண்டு ஆத்மா, அனாத்மா இவைகளுக்கு இடையே வேற்றுமையை விசாரம் செய்ய வேண்டும். இதனால் அனாத்மாவை ஆத்மாவாக நினைத்துக் கொண்டிருக்க வைக்கும் முடிச்சுக்கள் அறுக்கப்பட்டுவிடும்.

ஆத்மாவை விதவிதமாக தவறாக புரிந்து கொண்டிருப்பது எடுத்துக் காட்டப்படுகிறது.  சிலர் புத்திரனை ஆத்மாவென்று நினைக்கிறார்கள்.  புத்திரன் என்ற பெயருடன் நீயே ஆத்மாவாக இருக்கிறாய் என்ற ஸ்ருதியின் பிரமாணத்தையும், புத்திரனுக்கு வரும் கஷ்ட, நஷ்டங்களால் தானும் பாதிக்கப்படுகின்றது என்ற யுக்தியின் துணைக் கொண்டும் உறுதி செய்கின்றனர். தீபத்திலிருந்து தீபம் ஏற்றப்படுவதையும், விதையிலுள்ள குணங்கள் முளையில் ஏற்படுவது போல தகப்பனின் குணங்கள் புத்திரனிடம் காணப்படுவதால் யுக்தியையும் பிரமாணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

வேறொருவன் இது தவறு கூறுகிறான்.  நிலம், சொத்து முதலியவற்றில் ஆசை கொள்வதால் அவைகள் ஆத்மாவாக முடியுமா? எனவே புத்திரன் ஆத்மாவாக இருக்க முடியாது, தேகம்தான் ஆத்மாவாக இருக்க முடியும்.  வேறு சிலர் புலன்கள்தான் ஆத்மாவென்றூம், மனம்தான் ஆத்மாவாக இருக்க முடியுமென்றும், புத்திதான் ஆத்மாவாகும் என்று சிலரும், அக்ஞானம்தான் என்று சிலரும், ஞானமும், அக்ஞானமும் சேர்ந்ததுதான் என்று சிலரும், சூன்யம்தான் என்று சிலரும் கூறுகின்றனர். ஒவ்வொருவரும் தனக்கு முன்கூறிய கருத்தை தவறென்று  பிரமாணங்கள் மூலமாகவும், யுக்தி மூலமாகவும் நீக்கிவிட்டதால் அனைத்தும் அனாத்மாவென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடைசியாக கூறிய சூன்யத்தை மட்டும் அனாத்மா என்று நிரூபணம் செய்யவில்லையே என்ற சந்தேகத்தை சீடன் கேட்கின்றான்.

நல்ல தூக்க சமயத்தில் எல்லாம் லயமடைந்திருக்கும்போது சூன்யத்தைவிட இங்கு வேறு எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் சூன்யமோ அனாத்மா என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு வேறாக ஆத்மாவென்று அறிந்துக் கொள்ளக் கூடிய எதுவும் காணப்படவில்லை. ஆத்மா இருக்கின்றது என்று ஏன் தெரியவில்லை?  தூக்கத்தில் இருக்கிறது என்பதற்கு என்ன பிரமாணம்? அதனுடைய லட்சணம் என்ன? அகங்காரம் முதலியதெல்லாம் பாதிக்கப்படும் போது இது மட்டும் எதனால் பாதிக்கப்படவில்லை.  இந்த கேள்விகளாகிற முடிச்சுக்களை எல்லாம் வெட்டியெறிந்து விடுவீர்களாக.

தூங்கும்போது புத்தி முதலியதெல்லாம் தன் காரணமாகிய அவ்யக்தத்தில் அடங்கி, ஆலமரம் அதனுடைய விதையில் இருப்பது போல மாறுதலடையாத ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டிருக்கிறது.  இந்த ஜகத்தும் அப்படியேதான் இருக்கிறது.  சூன்யமாகி விடுவதில்லை. ஜகத் லயகாலத்திலும், ஆழ்ந்த உறக்கத்திலும் வெளித்தோற்றத்திற்கு வராக நிலைக்கு சென்று அடங்கி விடுகிறது. இந்த கருத்தை ஸ்ருதியும் உறுதி செய்கின்றது.

இல்லாதவொன்றிலிருந்து இருக்கிற பதார்த்தம் தோன்றாது.  இல்லாத முயல் கொம்பிலிருந்து, ஆகாயத்தாமரையிலிருந்து எதுவும் வராது. இருப்பதிலிருந்து தான் ஏதோவொன்று தோன்ற முடியும். அப்படி தோன்றியதில் அதன் காரணப் பொருளின் தன்மையும் இருக்கும்.  அதனால் சூன்யம் என்பது பொய்.  ஆத்மாயென்ற ஒரு தத்துவம் இருக்கும்போது சூன்யத்தன்மை எப்படி வரும்? ஆழ்ந்த உறக்கத்தில் சூன்யம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த நிலையில் அனுபவிக்கும் சுகத்தை விழித்தவுடன் நினைவு படுத்தி சொல்ல முடிகின்றது. ஆத்மா என்றவொன்று சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால்தான் இவ்வாறு நினைவுகூற முடிகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆத்மாதான் அனைத்தையும் பிரகாசிக்கிறது ஆனால் அதை பிரகாசிக்க எதுவும் தேவையில்லை.  யாரால் ஜாக்ரத், கனவு, ஆழ்ந்த உறக்க அனுபவங்களை அனுபவிக்கப்படுகிறதோ அந்த அறிவு ஸ்வரூபமானதை யார்தான் எப்படித்தான் அறிய முடியும்?  சூரியன் எல்லாவற்றையும் பிரகாசிக்கிறது ஆனால் அதை பிரகாசிக்க கூடியது எதுவும் கிடையாது.  நெருப்பு அனைத்தையும் எரிக்கக்கூடியது ஆனால் அதை எரிக்கக்கூடியது எதுவும் இல்லை.

தூக்கத்தில் புத்தி முதலான அறியப்படும் வஸ்துக்கள் லயமாகிவிட்டபடியால் ஆத்மா மட்டும்தான் இருக்கிறது.  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற அக்ஞானத்தை தானே சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டு சுகமாக எவ்வித மாற்றத்தையும் அடையாமல் இருக்கிறது ஆத்மா.

காலையில் விழித்ததும், "இரவில் நான் சுகமாக தூங்கினேன்" என்று நினைவுபடுத்தி கூறமுடிகிறது. ஏற்கனவே அனுபவித்த ஒன்றைத்தான் மீண்டும் நினைவுபடுத்தி அனுபவிக்க முடியும்.  இதிலிருந்து ஆத்மாவானது சுஷுப்தி அனுபவத்தை பெற்றிருப்பதால்தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது என்று யுக்திமூலமாக அதன் இருப்பை புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாக ஶ்ருதி, யுக்தி, பிரத்யக்ஷம் என்கின்ற பிரமாணங்களால் ஆத்மாவின் இருப்பு உறுதி செய்யப்படுகிறது.  இது தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.  .  எதனாலும் அறியப்படாதது. ஆனால் மூன்று நிலையில் நடக்கின்றதை அறிகின்றவராக இருக்கிறது என்று நிரூபணம் செய்யப்பட்டது.  இனி ஆத்மா ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமுடையது என்பதை விளக்கப்படுகிறது.

ஆத்மாவிற்கு இருத்தல் தன்மை, அறிவுத்தன்மை, ஆனந்த தன்மை என்கின்ற லட்சணங்கள் உண்டு. அதை ஒவ்வொன்றாக விளக்கப்படுகிறது.

ஸ்லோகங்கள் 610-631 ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூப விளக்கம்
ஆத்மாவிற்கு இருத்தல் தன்மை (ஸத்) என்பது நித்யமான ஸ்வரூபமாக இருப்பதால் மூன்று காலங்களிலும் கூட பாதிக்க முடியாத தன்மையுடன் இருக்கிறது.  சித்தாக இருக்கும் தன்மை என்பது ஞானஸ்வரூபமாக இருப்பதால் சுத்த சைதன்ய ஸ்வரூபத் தன்மையுடன் கூடியதாக இருக்கிறது.  பரிபூரணமான சுக ஸ்வரூபமாக இருப்பதால், ஆனந்த தன்மை என்று சொல்லப்படுகிறது.

ஜாக்ரத், கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளிலும் "நான் இருக்கிறேன்" என்ற ஆத்மாவின் இருப்பானது தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது. ஆகையால் இந்த ஆத்மா நிலையானது, குறைகளெதுவும் இல்லாதது. எப்பொழுதும் "நான் இருக்கிறேன்" என்ற வேறுபடாத எண்ணம் காணப்படுகிறது. "நான் இல்லை" என்ற எண்ணம் எப்பொழுதும் காணப்படுவது இல்லை.  இந்தக் காரணத்தால் ஆத்மாவிற்கு நித்யாமாக இருக்கும் தன்மை உறுதி செய்கிறது.

மனிதனுடைய குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் ஆகிய் ஆறுவிதமான பெற்றாலும் நான் என்ற ஆத்ம ஸ்வரூபமானது தொடர்ந்து இருக்கிறது.  ஆத்மாவிற்கு அவயவங்கள் கிடையாததால் மாறுதல்கள் கிடையாது. அதனால் நித்யமானதாக இருக்கிறது.  எந்த நான் கனவைக் கண்டேனோ, எந்த நான் சுகமாக தூங்கினேனோ அதே நான்தான் விழிப்பு நிலையிலும் இருக்கிறேன். இவ்விதமாக ஆத்மாவின் இருத்தல் தன்மையானது சந்தேகமில்லாமல் நிரூபணமாகின்றது.  ஆத்மாவிற்கு அவயவங்கள் இல்லாததால் அதற்கு அழிவும் கிடையாது. ஆகையால் ஆத்மாவிற்கு நித்யமாக இருக்கின்ற தன்மை நிலை நாட்டப்படுகிறது.

ஜடமான பொருட்களை பிரகாசிக்கின்ற சூரியன் ஜடமானதல்ல, பிரகாச ஸ்வரூபன்தான் அப்படியே ஜடமான, புத்தி முதலியதை பிரகாசிக்க செய்யும். ஆத்மா ஞானஸ்வரூபமானதென்று தீர்மானிக்கப்படுகிறது. ஜடமாக இருக்கின்ற சுவர் முதலியவற்றிற்கு எக்காலத்திலும், எவ்விடத்திலும், சூரியன் போன்ற பிரகாசிக்க செய்கின்றவற்றின் பிரகாசமில்லாமல் தானாகவே பிரகாசிக்கும் தன்மை ஏற்படவே ஏற்படாது. அப்படியே புத்தி முதலியவற்றிற்கு ஆத்மா இல்லாமல் தானாகவே பிரகாசிக்கும் என்ற நிலை கொஞ்சம் கூடக்கிடையாது.

தன்னை பிரகாசப்படுத்தி கொள்வதற்கோ, வேறு பொருட்களை பிரகாசிக்க செய்வதற்கோ, சூரியன் வேறொன்றின் துணையை சிறிது கூட நாடுவதில்லை. அதேபோல ஞானஸ்வரூபமான ஆத்மா தன்னை பிரகாசப்படுத்திக் கொள்வது இல்லை.  ஆத்மாவானது தானே பிரகாசிக்கும் தன்மையோடு இருப்பதால் வேறொன்றின் பிரகாசத்தன்மை நாட தேவையில்லை. இந்த ஆத்மாவை சூரியன், சந்திரன், மின்னல், அக்னி இவைகளால் பிரகாசப்படுத்த தேவையில்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டுதான் இந்த உலகமும் தெரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆத்மா எல்லா நிலைகளிலும் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

ஆத்மா சுக ஸ்வரூபமாக இருப்பதால் ஆனந்ததன்மை அதனுடைய லட்சணமாகிறது.  இது மேலான சுகத்திற்கு விஷயமாக இருப்பதால் அதற்கு இந்த தன்மை இருக்கிறது.  எல்லோருக்கும் சுகத்தை கொடுக்கின்ற பொருட்களின் மீது எல்லையற்ற பற்று காணப்படுகிறது.   இந்த ஆத்மா மீது பற்றிருப்பதால், புலன்கள் சக்தி இழந்தாலும், கடும் நோயில் வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்தாலும், தான் உயிர் வாழ என்ற ஆசை மட்டும் இருந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து சரீரமுள்ள அனைத்து உயிர்கட்கும் ஆத்மாதான் உயர்ந்த பற்று வைப்பதற்கு பாத்திரமாக இருக்கிறது.  இந்த ஆத்மா மீதுதான் மனைவி, மக்கள், வீடு, நிலம் இவைகளின் மீது கொண்டுள்ள பற்றைவிட அதிகமாக பற்றும் கொண்டிருக்கிறார்கள். இது ஜீவனுக்குள்ளே இருக்கிறது.

எந்தப் பொருள் மீது ஆசைப்படுகின்றோமோ அது எப்போதும் பிரியமாக இருப்பதில்லை.  ஆனால் ஆத்மா எல்லா நிலைகளிலும் பிரியமாக இருக்கிறது. மனைவி, மக்கள், விடு, பணம் முதலானவைகளும், விவசாயம் செய்தல், அரசாங்க வேலையில் இருத்தல், வியாபாரம் செய்தல் போன்ற பலவிதமான செயல்கள் யாருடைய நன்மைக்காகவோ அந்த ஆத்மா உயிர் வாழும் அனைத்து ஜீவர்களுக்கும் மிகப்பிரியமானதாக இருக்கிறது.  இதைவிட மேலுள்ள பிரியமானது வேறு எதுவும் கிடையாது. செயல்களை செய்து கொண்டிருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் ஆத்மாவின் மீதுள்ள பிரியத்திற்காகத்தான் இவ்வாறு நடந்து கொள்ளப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆத்மாதான் ஆனந்த ஸ்வரூபமானது என்று நிரூபணம் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர வேறெதை நாடினாலும் துன்பத்தைதான் அனுபவிக்க நேரிடும்.

ஸ்லோகங்கள் 632-697 சீடனின் இன்னொரு சந்தேகமும் அதற்கான குருவின் பதிலும்
சீடனின் கேள்வி
ஆத்மா வேறு, ஆனந்தம் வேறு. ஆத்மாவிற்கே ஆனந்தம் நாடக்கூடியதாக இருக்கிறது.  ஆத்மாவே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து விட்டால் மக்கள் எதற்கு ஆனந்தத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். குரு பகவானே இந்த சந்தேகத்தையும் தீர்த்து வைக்க வேண்டும்.
குருவின் பதில்
ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது என்று அறியாதவர்களால்தான் ஆனந்தத்தை அடைய முயற்சி செய்கிறார்கள்.  ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிகள் இதற்காக முயற்சி செய்வது கிடையாது.  தான் வசிக்கும் வீட்டினுள்ளே புதையல் இருப்பதை அறியாமல் பணத்தை தேடி அலைந்து கொண்டு இருப்பவனுக்கு அது மட்டும் தெரிந்து விட்டால் செல்வத்தை தேடி வெளியே செல்ல மாட்டான்.

இயல்பாகவே துக்க ஸ்வரூபமாக இருக்கின்ற ஸ்தூல, சூட்சும உடலையே ஆத்மாவாக எண்ணிக் கொண்டு, சுக ஸ்வரூபமான ஆத்மாவை மறந்துவிட்டு துயரத்தைக் கொடுக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுகத்தையடைய அக்ஞானி முயற்சி செய்கின்றான்.  ஆத்மா வேறு, ஆனந்தம் வேறு என்று நினைத்துக் கொண்டு அக்ஞானி சுகத்தை வெளியிலுள்ள பொருட்களிலிருந்து அடைய முயற்சி செய்வது உண்மைதான்.

புலனுகர் போகப்பொருட்களில் தெரிகின்ற ஆனந்தமானது அதனுடைய தர்மமல்ல.  ஏனென்றால் ஆனந்த உணர்வு மனதில்தான் காணப்படுகிறது.  வஸ்துவின் தர்மத்திற்கு மனதில் உணர்ச்சி எப்படி ஏற்படும்? ஒரு வஸ்துவின் தர்மங்களுக்கு வேறொரு வஸ்துவில் காணப்படுவதில்லை.  எனவே இந்த ஆனந்தம் நிச்சயமாக அவைகளின் தர்மமாகாது. அந்தப் பொருட்கள் இல்லாத போதும் ஆனந்தத்தை உணர்வதால் இது மனதின் தர்மமுமாகாது.  வெளிப்படுத்திக் காட்டும் பொருள் இல்லாததினால் காட்டப்பட வேண்டிய பதார்த்தங்கள் தெரியவில்லை என்று நினைத்துவிடக்கூடாது. உதாரணமாக வாழைப்பழம்த்தின் இருக்கும் சுவையானது அதனுடைய தர்மம் ஆனால் அதைப் பார்க்கும்போது ஏற்படும் சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசையும், அதை அடைய வேண்டும் என்ற ஆவலும், அதனை அடைந்து சுவைக்கும் ஆனந்தமும் மனதில் தோன்றுவதால் இவைகள் வாழைப்பழத்தை சேர்ந்ததல்ல, மனதினுடைய தர்மமும் அல்ல. ஏனென்றால் பழமில்லாமல் மனம் மட்டும் இருக்கும்போது இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஆனந்தம் மனதின் தர்மம்தான் என்றால் அதை வெளிக்காட்டுவதற்கு பழம் வெளியே இல்லையென்று சொல்லி விடலாமா என்று பார்த்தால் பழம் இருந்தாலும் மனதில் ஆனந்தம் ஏற்படாமல் இருக்கும் நிலையையையும் பார்க்கின்றோம். இது யுக்திக்கு பொருத்தமாக இல்லையே என்று தோன்றலாம். இந்த விஷயத்தில் துரதிருஷ்டம் போன்ற தடைகள் உண்டு என்று கற்பணை செய்யக் கூடாது.  ஆகையால் விஷயத்திலிருந்து கிடைக்கும் சுகம் மனதின் தர்மமல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  ஆத்மா குணங்களற்றதால் அதனுடைய தர்மமும் கிடையாது. பிறகு எப்படி ஆனந்தம் மனதில் தோன்றுகிறது என்பது இனி விளக்கப்படுகிறது.

புண்ணியத்தின் பலனாக விரும்பிய பொருளை அடைந்து இருப்பதாலும், சத்துவகுண பிரதானமான மனதில் ஆனந்த ஸ்வரூபமான ஆத்மா பிரதிபிம்பிப்பிதாலும் ஆனந்தம் ஏற்படுகிறது. இதையே விஷயானந்தம் என்றும் கூறப்படுகிறது.  புண்ணிய பலனில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஏற்றபடி அதனால் அனுபவிக்கப்படுகின்ற ஆனந்தத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.  புண்ணியம் தீர்ந்து போனதும் இந்த விஷயானந்தமும் சென்றுவிடும். இந்த விஷயானந்தத்தை அனுபவிக்கும் காலத்திலும் துயரம் இருக்கும், சென்றுவிட்டதும் அதைவிட அதிக துயரத்தை அடைகிறார்கள்.  விஷயத்துடம் சம்பந்தபட்ட ஆனந்தமானது விஷம் கலந்த உணவுப் போன்றது அதை அனுபவிக்கும் காலத்திலும், அனுபவித்து முடித்துவிட்ட காலத்திலும் துன்பத்தையே கொடுக்கும் இதை சாதகர்கள் நன்கு புரிந்து கொண்டு அதை அடையும் முயற்சியை விட்டுவிட வேண்டும்.  பிம்பமாக இருக்கின்ற ஆனந்தமே அடையதக்கது. அதுவே ஆத்மாவாகும். இது மாறுதலற்றது, பூரணமானது, இரண்டற்றது, நித்யமானது, ஒன்றாக உள்ளது. விஷயானந்தம் ஆத்மாவின் பிரதிபிம்பானந்தம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. யுக்தியின் துணைக் கொண்டு இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விஷயானந்தம் ஒருபோதும் நேரில் அனுபவிக்கபடுவது இல்லை.

இந்த ஆத்மாவானது கனவிலும், விழிப்பு நிலையிலும் அக்ஞானத்துடன் கூடிய அந்தக்கரணத்தாலும், புலன்களாலும் கிரகிக்க முடியாததாக இருக்கிறது. இவைகளுக்கு விஷயமாக இருக்கும் தன்மை உடையதல்ல. துயரத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கின்ற ஸ்தூல, சூட்சும சரீரங்கள் லயமடைந்திருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மா வெளிப்படுகிறார்.  இந்த நிலையில் மனம், புத்தி முதலானவைகள் கிரகிக்கக்கூடிய விஷயங்களும் இல்லாததால் இரண்டற்றதான ஆத்மாதான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எல்லா ஜீவர்களாலும் நான் ஆனந்தமாக தூங்கினேன் என்று விழித்தவுடன் நினைத்துப் பார்க்கப்படுகிறது.  எனவே ஆத்மா அறியப்படவில்லை என்ற சந்தேகத்தை விட்டுவிடு.

துயரமற்ற நிலைதான் சுகம் என்று சொல்வது தவறு. மண், கால் போன்ற ஜடபதார்த்தங்களுக்கும் துயரமில்லை அதனால் அவைகள் சுகமாக இருக்கின்றது, சுகத்தை அனுபவிக்கின்றது என்று சொல்வது போல இது இருக்கிறது.

வேதம் மட்டும்தான் ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று கூறவில்லை. மகான்களின் அனுபவமும் அப்படியேதான் இருக்கிறது என்பது இனி எடுத்துக் காட்டபடுகிறது. மகான்களால் சமாதி நிலையில் ஆனந்த ஸ்வரூபமாக ஆத்மா அனுபவிக்கப்படுகிறது.  ஞானிகளால் எல்லா நேரத்திலும் ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவாகவே அனுபவிப்பதிலிருந்து இந்த விஷயத்தில் இருக்கும் சந்தேகம் நீக்கப்படுகிறது.

எல்லா ஜீவராசிகளும் அனுபவிக்கும் ஆனந்தமும் ஆத்மானந்தம்தான் என்று கூறுகிறார்.  இனிப்பு பண்டங்களில் உள்ள இனிக்கின்ற தன்மை அந்த பண்டத்தின் தன்மையல்ல அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையே உள்ள தன்மையாகும்.  அதுபோல எப்பொழுதெல்லாம் ஆனந்தம் அனுபவிக்கப்படுகின்றதோ அது ஆத்மாவின் இயல்பான ஆனந்த தன்மைதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்த், சித், ஆனந்தம் இவை மூன்றும் ஆத்மாவின் ஸ்வரூபமாகும்.  இது குணங்களற்றது, உஷ்ணமாக இருக்கும் தன்மையும், ஓளிதருகின்ற தன்மையும் அக்னியின் ஸ்வரூபமாக இருப்பது போல இவை மூன்று ஆத்மாவின் ஸ்வரூபமாக இருக்கிறது.  ஆத்மாவில் ஸஜாதீயம், விஜாதீயம், ஸ்வகதம் என்கின்ற மூன்றுவிதமான வேற்றுமைகளும் கிடையாது.

ஜகத்தை அபவாதம் செய்வதால் வேறு இனத்தைச் சேர்ந்த வஸ்துவின் மூலம் ஏற்படக்கூடிய பேதம் ஆத்மாவிடம் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.  கயிற்றில் தோன்றும் பொய்யான பாம்புக்கு கயிறே ஆதாரமாக இருப்பது போல தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்துக்கு ஆத்மாதான் ஆதாரமாக இருக்கிறது.  இதனால் ஜகத் வெறும் பொய்யான தோற்றமென்று அறிவது அபவாதமாகும். முதலில் ஜகத் தோன்றியது என்று சொல்லியிருப்பது அத்யாரோபம் என்பதாகும்.  பிறகு அது இல்லையென்று நீக்குவது அபவாதமாகும்.

எதனுடைய காரிய ரூபமாக எது பார்க்கப்படுகிறதோ, அதை நன்கு விசாரம் செய்து பார்த்தால் காரணமே காரியமாக இருப்பதை அறிந்து விடுவோம்.  களிமண்ணால் செய்யப்பட்ட பானையில் தெரிவது களிமண்தான் என்று ஆராய்ந்து பார்த்தால் விளங்கிவிடும்.  அதுபோல பிரம்மத்திலிருந்து தோன்றிய அனைத்துமே வெறும் நாம-ரூபங்கள்தான் உண்மையில் தெரிந்து கொண்டிருப்பது பிரம்மம் மட்டும்தான் என்று புரிந்து கொள்ளலாம்.  கயிற்றின் ஸ்வரூபம் தெரிந்துவிட்டால் ஜகத்தும் மறைந்துவிடும்.  எனவே இரண்டற்றதாக இருக்கின்ற பிரம்மனிடத்தில் விஜாதீய பேதம் கிடையாது என்பதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

உபாதிகளோடு பார்க்கும் போது ஆத்மாவிடத்தில் ஸஜாதீய பேதம் தெரிவது போல இருக்கிறது.  உபாதிகள் நீக்கிவிட்டு பார்த்தால் ஆத்மா, பிரம்மம் இரண்டுமே ஒரேபொருள்தான் என்று ஆகிவிடும்போது ஸஜாதீய பேதமும் இல்லையென்றாகி விடுகிறது. குடாகாசம் குடம் இல்லாத போது மகாகாசமாகவே இருக்கிறதோ அதுபோல உபாதிகள் நீக்கிவிடும்போது ஆத்மாவே பிரம்மமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆகவே பிரம்மத்திற்கும், ஆத்மாவிற்கும் உள்ள வேற்றுமை கற்பணையானதே தவிர உண்மையில்லை.

உபநிஷத்தின் மகாவாக்கியமான "தத்-த்வம்-அஸி" என்ற வாக்கியமும் இதையே குறிக்கிறது.  இந்த வாக்கியத்தின் உள்ள லட்சியார்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்தான் தத், த்வம் என்கின்ற இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கிறது என்பது புரிந்து கொள்ளப்படும்.

ஸ்லோகங்கள் 698-792 – தத்துவமஸி மகாவாக்கிய விளக்கம்
தத், த்வம் என்கின்ற இந்த இரண்டு சொற்களுக்கு எத்தனைவிதமான அர்த்தங்கள் உண்டு? நேரிடையாக குறிக்கின்ற பொருளென்ன? மறைமுகமாக குறிக்கின்ற பொருளென்ன?

"அதுவாக நீ இருக்கிறாய்" என்ற மகா வாக்கியத்தில் இருக்கின்ற அது என்ற சொல்லின் பொருள் ஈஸ்வரனாகும். "ஆம்பல் நீலமாகவிருக்கிறது" என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தம் பொருந்தி வருகின்றது. ஆனால் நீ பிரம்மனாக இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தம் பொருந்தி வராது.  உதாரண வாக்கியத்தில் உள்ள இரண்டு சொற்களும் சேர்ந்து எது நீல நிறமாகவும், ஆம்பல் மலராகவும் இருக்கிறதோ அதுவேதான் இது என்று பொருள் கொடுக்கிறது. இந்த இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள சம்பந்தம் விசேஷண - விசேஷ்யத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

"அதுவே நீ" என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தம் பொருந்தி வராது. அது (தத்) என்ற சொல்லின் வாச்யார்த்தமான நேரில் அறியப்படாத தன்மை முதலியவைகளுடன் கூடிய சைதன்யத்திற்கும், நீ (த்வம்) சொல்லின் வாச்யார்த்தமான நேரில் அறியப்படும் தன்மை முதலானவைகளுடன் கூடிய சைதன்யத்திற்கும் ஒன்றுக்கொன்று வேற்றுமையுடன் இருப்பதால் வாச்யார்த்தம் இங்கு பொருந்தி வராது.  அனைத்தும் அறிபவராகவும், அனைத்தையும் ஆள்பவராகவும், தனித்திருப்பதாகவும், உள்ள குணங்களுடைய ஈஸ்வரனே “தத்” பதத்தின் வாச்யார்த்தம். ஆனால் த்வம் பத வாச்யார்த்தமானது சிறிதளவே அறிந்துள்ளவன், சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும், பிறப்பு-இறப்பு என்கின்ற சக்கரத்தில் உழன்று கொண்டு துன்பத்திலே இருக்கின்றவனும், இத்தகைய குணங்களை உடைய ஜீவன். இந்த இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள வேற்றுமை ப்ரதியக்ஷமாக தெரிகிறது.  இப்படி இருக்கும்போது எப்படி ஐக்கியமானது சம்பவிக்கும்? ஆனால் உபநிஷத் இவர்கள் இருவருக்கும் ஒன்றே என்று உறுதியுடன் கூறுகிறது.

சாந்தோக்ய உபநிஷத்தில் ஸத் வஸ்து ஒன்றே உள்ளது என்று எடுத்துக் காட்டுவதற்காக ஸ்தூல, சூட்சும பிரபஞ்சங்கள் ஸத் ஸ்வரூபமாகவே உள்ளது என்றும், ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா பிரம்மத்திற்கு வேறாக இல்லாமல் இருப்பதை விளக்கி, இந்தப் பிரபஞ்சம் எல்லாம் ஸத் ஸ்வரூபம்தான் என்று சொல்லி பிரம்மம் இரண்டற்றது, அத்வைதம் என்பதை புரிய வைப்பதற்காக ஸத் என்கின்ற பிரம்மனும், ஆத்மாவும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறது.  வேதத்தின் தாத்பர்யம் இரண்டும் ஒன்றுதான் என்பதாகும்.  ஆனால் இந்த வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று விரோதமான பொருளையே கொடுக்கிறது.  எனவே இந்த ஐக்கியத்தை எப்படி நிரூபிக்கப்படுகின்றது என்பது விளக்கப்படுகிறது.

இந்த இரண்டு சொற்களில் உள்ள வேற்றுமை கொடுக்கின்ற அம்சங்களை விட்டுவிட்டு ஒற்றுமையை குறிக்கும் அம்சங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் ஐக்கியம் கிடைத்து விடும்.  அதாவது வாக்கியத்தின் வாச்யார்தத்தை விட்டுவிட்டு லட்சியார்தத்தை எடுத்துக் கொண்டு ஐக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

மூன்று விதமான லட்சணைகள் இருக்கின்றது அவைகள்
1.   ஜஹத் லட்சணை - வாச்யார்தத்தை முழுவதும் விட்டுவிட்டு வேறு அர்த்தத்தை எடுத்துக் கொள்வது. உதாரணமாக கங்கையில் கிராமம் என்ற வார்த்தையில் உள்ள கங்கை என்ற சொல்லின் வாச்யார்தத்தை விட்டுவிட்டு கங்கைகரை என்ற வாச்யார்தத்தை எடுத்துக் கொண்டு வாக்கியத்தின் முழு பொருளை புரிந்து கொள்ளலாம்.
2.   அஜஹத் லட்சணை - வாச்யார்தத்தை முழுவதும் விட்டுவிடாமலே வேறு ஒன்றை சேர்த்து அர்த்தம் எடுத்துக் கொள்வது - உதாரணமாக "சிவப்பு ஓடுகிறது" என்ற வாக்கியத்தில் உள்ள சிவப்பு என்ற சொல்லை விட்டுவிடாமல், அதனோடு குதிரை என்ற சொல்லையும் சேர்த்து வாக்கியத்தின் பொருளை புரிந்து கொள்ளப்படுகிறது.
3.   ஜஹத்-அஜஹத் லட்சணை (அ) பாக தியாக லட்சணை - வாக்கியத்தின் ஒருபகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை வைத்துக் கொண்டு அர்த்தம் புரிந்து கொள்ளுதல். உதாரணமாக "அவனே இந்த தேவதத்தன்" என்ற வாக்கியத்தில் அவன் என்ற சொல்லிலுள்ள தேச, காலத்தை விட்டு விட்டு அந்த சரீரத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாக்கியத்தின் பொருள் புரிய வைக்கப்படுகிறது.

"தத்-த்வம்-அஸி" என்ற வாக்கியத்தில் தத் பதத்தின் பொருளான பரோக்ஷமான சைதன்யத்தில் உள்ள பரோக்ஷத் தன்மையும், த்வம் பதத்தின் பொருளான அபரோக்ஷ தன்மையும் விட்டுவிட்டு இரண்டிலும் உள்ள பொதுவான சைதன்யம் மட்டும் இருக்கும்போடு ஐக்கியமானது ஏற்பட்டுவிடுகிறது. எனவே பாக-தியாக லட்சணை மூலம் இந்த வாக்கியத்தின் சரியான பொருளை புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மத்தையும், ஆத்மாவையும், ஒரே வஸ்துவாக அறிய வேண்டிய விஷயத்தில் வேற்றுமையானது உபாதிகளின் சேர்க்கையால் காணப்படுகிறது.  இந்த உபாதிகளை நீக்கி பார்த்தோமானால் ஒன்றேயென்று புரிந்து கொள்ள முடியும்.

ஜீவ்-பிரம்ம ஐக்கியத்தை தெரிய விடாமல் செய்வது அக்ஞானம்தான். எனவே இந்த அக்ஞானத்தை நீக்கி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஜீவன் ஈஸ்வரன் இவர்களிடத்திலுள்ள உபாதிகளும், அதனுடன் சேர்ந்திருக்கின்ற தன்மையும், அதன் தர்மங்களை அடைவதும், ஒன்றுகொன்று விரோதமாக தோன்றுவதும் எல்லாம் அறியாமையினால்தான் ஏற்படுகிறது.  கனவில் காணும் பொருட்களைப் போலவும் ஜாக்ரத் காலத்தில் காணும் பொருட்களைப் போலவும் பொய்யானவைகள்தான்.

கனவில் காண்கின்ற உடலும், ஜகத்தும், சுகமும், துக்கமும், ஜீவன்,ஈஸ்வரன் இவர்களுக்குமிடையே இருக்கின்ற வேற்றுமைகளும் எப்பொழுதும் உண்மையாகி விட முடியாது.  மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட காலம், தேசம், ஜகத் முதலானவைகள் இருக்கின்றது என்று நினைப்பதும் பொய்தான்.  அறியாமையில் இருக்கின்றவன் பார்க்கின்ற பார்வை, பார்க்கப்படும் பொருள் முதலியவைகள் கனவு, விழிப்பு ஆகிய நிலைகளில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.  கனவில் காணும் காட்சிகள் எப்படி பொய்யோ அதுபோல விழிப்பு நிலை அனுபவங்களும் பொய்தான்.  இவ்விரண்டு நிலைகளும் அவித்யாவின் காரியமாக இருப்பதால் ஒன்றுக்கொன்று சமமாகவே இருக்கிறது.  இரண்டு நிலைகளிலும் பார்க்கின்றவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் முதலியவைகள் கற்பணை செய்வதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இவ்விரண்டும் இல்லாமல் இருப்பது எல்லோராலும் அனுபவிக்கப்படுகிறது.  எனவே இவ்விரண்டும் பொய்தான் என்று உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது.  ஸஜாதீயம், விஜாதீயம், ஸ்வகதம் ஆகிய மூன்றுவிதமான வேற்றுமைகளும் அக்ஞானத்தினால்தான் தோன்றுகிறது. உண்மையில் பிரம்மத்தினிடத்தில் முக்காலத்திலும் ஒருவிதமான பேதமும் கிடையாது

எல்லாவற்றையும் விட மிகப்பெரியதான பிரம்மத்தில், அறியாமையினால் ஏற்றி வைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பொய்தன்மையை, மித்யா தன்மையை அறிந்து கொள்வதற்காக உபநிஷத் “எந்த வஸ்துவில் வேறொன்றை பார்க்கின்றது இல்லையோ”  என்ற வாக்கியத்தில் த்வைதத்தை மறுக்கிறது.  இதிலிருந்து பிரம்மமானது இரண்டாவதற்றது, உபாதியற்றது, சூன்யமற்றது, குறைகளற்றது, பிளவுபடாத எல்லையற்றது, செயல்களற்றது, தனித்திருப்பது, ஒன்றாக இருப்பது என்று புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரம்ம தத்துவத்தை உணர்ந்து கொண்ட பின் ஜீவன், உடல் முதலியவைகளின் "நான்" என்ற அபிமானம் வைத்துக் கொள்ளக்கூடாது.  நானே பிரம்மன் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த தேகம் நீயல்ல, பிராணனும், புலன்களின் கூட்டங்களும், மனம், புத்தி, அகங்காரம் இவைகளெல்லாம் சேர்ந்ததோ, தனியாகவோ ஒருபோது நீயாக இருப்பது கிடையாது.  இவைகளுக்கெல்லாம் எது மேலானதாக இருந்து கொண்டு சாட்சியாகவும், ஸ்வயம் பிரகாசமாகவும், நிர்மலமாகவும் இருக்கிறதோ அந்த பிரம்மமே நீயாகும்.

எது பிறக்கிறதோ, அதுதான் மாற்றத்திற்குள்ளாகிறது, வளர்கிறது பிறகு நாசத்தை அடைகிறது. நித்யனாகவும், எங்கும் வியாபித்துக் கொண்டிருப்பதாகவும் இருக்கும் உனக்கு பிறப்பு-இறப்பு கிடையாது.  பிறந்த தேகம்தான் கர்மபலனால் விதவிதமான அனுபவங்களையும் பெறுகிறது் மாற்றத்திற்குள்ளாகிறது, மரணத்தை அடைகிறது. ஞான ஸ்வரூபமாக இருக்கின்ற நீ இந்த தேகத்தின் எல்லா நிலைகளிலும் சாட்சியாக இருந்து கொண்டு அவைகளுடன் சம்பந்தப்படாமல் அவைகளை அறிகின்றவனாக இருந்து கொண்டிருக்கிறாய்.

எது ஸ்வரூபம் பிரகாசமாகவும், எல்லாமுமாகவும் இருந்து கொண்டு ஜாக்ரத், கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளிலும் மாறாமல் சாட்சியாக இருந்து கொண்டு நான், நான் என்று பிரகாசிக்கிறதோ, எது தான் எந்தவித மாறுதலையும் அடையாமல் புத்தியினுடைய எல்லா மாற்றத்தையும் அறிகிறதோ அந்த சுத்த ஞான ஸ்வரூபமாக விளங்கும் பிரம்மமே நீயேதான்.

ஞான ஸ்வரூபமான பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டு இருக்கின்ற ஆகாசம், ஜகத் முதலியவற்றிற்கு இருக்கும் தன்மையை கொடுப்பதும், தன்னுடைய பிரகாசத்தினால் ஜகத்தையும் பிரகாசிக்க செய்வதுமாக இருக்கின்ற பிரம்மமே நீயாவாய்.  பிரபஞ்சம் இருப்பதும், விளங்குவதும் பிரம்மத்தால்தான், ஆதாரமாக இருக்கின்ற பிரமத்தின் இருத்தல் தன்மையும், பிரகாசிக்கும் தன்மையும் ஆரோபிதமான பிரபஞ்சத்தில் தோன்றுகின்றன. பிரபஞ்சத்திற்கென்று தனியான இருப்பும், பிரகாசிக்கும் தன்மையும் கிடையாது.

ஞான நிஷ்டையில் இருக்கும் ஞானிகளால் அனுபவிக்கிப்படுகின்ற எல்லையற்றதும், அறிவு ஸ்வரூபமானதும், ஆனந்த ஸ்வரூபமானதுமான பிரம்மனே நீயாவாய். அக்ஞானிகளுக்கு பிரம்மமே ஜகத்தாக காட்சியளிக்கிறது. களிமண் பானை போல காட்சியளிக்கின்றது அதுபோல பிரபஞ்சம் என்பது தனித்த பொருளில்லாவிட்டாலும் பிரம்மத்தை அறியாத அக்ஞானிகளூக்கு பிரம்மமே ஜகத்தாக தெரிகிறது.

எது உபநிஷத்தில் கூறப்பட்டதாகவும், வெளித்தோற்றத்திற்கு வராததாகவும், எல்லையற்றதாகவும், ஆதியந்தம் இல்லாததாகவும், சூட்சுமமாகவும், அழிவற்றதாகவும், எதையும் ஆதாரமாக கொண்டில்லாததும், எந்த பிரமாணத்தாலும் அறிய முடியாததாகவும், ஆனந்த ஸ்வருபமாகவும், தோஷமற்றதாகவும், இரண்டாவது என்று எதுவும் இல்லாததாகவும், ஞான ஸ்வரூபமாக மட்டும் இருக்கின்றதோ அந்த பிரம்மமே நீதான்.

தேகமும், அதனுடைய சம்பந்தமும், தர்மங்களும் உன்னிடத்தில் அறியாமையில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அவைகள் ஒன்றும் கிடையாது.  ஆகையால் நீ பிறப்பு, இறப்பற்றவன்.  பூரணமான உனக்கு மரண பயம் ஏற்படவே ஏற்படாது. அறியாமையினால் எவையெல்லாம் உன்னைக் காட்டிலும் வேறாக பார்க்கப்படுகிறதோ அவைகளெல்லாம் ஞானத்தோடு பார்க்கப்படும்போது நீயாகவே தெரிவாய்.  உலகத்தில் உன்னைத் தவிர வேறெதுவும் இல்லாதபோது எதிலிருந்து பயம் ஏற்படக்கூடும். பயத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் எதுவும் இல்லையென்ற போது எதனிடமிருந்து பயம் ஏற்படக்கூடும்.

ஆகையால் நீ பயமற்றதாய், நித்யமாய, சுத்த ஆனந்த ஸ்வரூபமாய், அவயவங்கள் அற்றதாய், எந்தவித செயல்கள் அற்றதாகவும், சாந்தமாகவும், இரண்டற்றதாகவும் உள்ள பிரம்மமாகவே நீ எப்பொழுதும் இருக்கிறாய்.  நீ அறிகிறவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற வேற்றுமைகள் அற்றவன். அறிகிறவனிடமிருந்து வேறுபடாதவனாகவும், பிளவுபடாத ஞான ஸ்வரூபமாகவும், அறியத்தக்க தன்மை, அறியத்தகாத தன்மை முதலியவற்றிலிருந்த் விடுபட்டவனாகவும் ஞான ஸ்வருபமாகவும், உண்மைப் பொருளாகவும் இருக்கிறாய்.

"நான் பிரம்மன்" என்ற ஒரே எண்ணமே தொடர்ந்து இருக்கும்படி செயல்கள் அற்ற பிரம்மத்திலேயே நிலைத்திருப்பாயாக.  உத்தமமான ஆனந்த அலைகளுடன் கூடியதாக, இரண்டாவதென்ற எண்ணமே போய்விட்டதாகவும், நிர்மலமாயுள்ள இந்த இடைவெளியற்ற எண்ணத்தை விடாமலேயே தனது ஆத்ம ஸ்வரூபத்திலேயே எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருப்பாயாக.  பிராரப்த கர்மபலனை இந்த ஆனந்த விருத்தியுடனே தீர்த்துக் கொள்வாயாக.  நிதித்யாஸன தியானத்தில் இருந்து கொண்டு பிரம்மத்தினுடைய ஆனந்த ரஸத்தை அனுபவிப்பதிலேயே நோக்கமுள்ள மனதுடன் நீ எப்பொழுதும் இருப்பாயாக.

ஸ்லோகங்கள் 793-923 – ஸவிகல்ப, நிர்விகல்ப சமாதி விளக்கம்
இந்த இடைவிடாத விருத்தியானது மகாவாக்கியத்தை பொருள் புரிய கேட்பதனாலே உண்டாகிவிடுமா? அல்லது வேறு ஏதாவதொரு சாதனத்தை பயன்படுத்துவதனால் உண்டாகுமா? சமாதி என்றால் என்ன? அது எத்தனை விதம்? அதை அடைவதற்கான சாதனம் எது? சமாதிக்கு வரும் தடைகள் எவைகள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் நன்கு விளங்கும்படி தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சீடன் தன்னுடைய குருவிடம் பணிந்து கேட்கின்றான்.

இந்த கேள்விக்கான நேரிடை பதிலை சொல்வதற்கு முன்னர் யாருக்கு எப்பொழுது இந்த அகண்டமான விருத்தி ஏற்படுமென்று சொல்லப்படுகிறது. இந்த விருத்தி முக்கியமானவர், கௌணர் போன்ற பலவித அதிகாரிகளின் அறிவுக்கேற்றபடி ஏற்படுகிறது.

சிரத்தையுடனும், பக்தியுடனும் சாஸ்திரம் விதித்திருக்கின்ற கர்மங்களை செய்து கொண்டு இறைவனை சந்தோஷமடையச் செய்து, அதன் பலனாக அவரது அருளை பெற்றவனாக இருப்பவனாகவும், முற்பிறவிகளில் செய்த நற்காரியங்களின் பலனாக நித்ய-அநித்ய விவேகம், தீவிரமான வைராக்கியம், சந்நியாஸம் இவைகளை அடைவதற்கான சாதனங்களை கூடியுள்ளவனாக இருப்பவனாகவும் உள்ள சாதகன் சிரவணத்தில் முக்கியமான அதிகாரியாக கருதப்படுகிறான்.

இந்த தகுதியுடைய சாதகனுக்கு குருவானவர் அத்யாரோப அபவாதம்  என்கின்ற முறையை பயன்படுத்தி மகாவாக்கியத்தின் அர்த்தம் உபதேசிக்கும் போது உடனே எந்த தத்துவமானது நித்யமாக, ஆனந்த ஸ்வருபமாக, இரண்டற்றதாக, நிர்மலமானதாக, ஒன்றாக மட்டும் இருக்கின்ற அந்த பிரம்மனே நான் என்கின்ற உத்தமமான அகண்ட ஸ்வரூபமான விருத்தி உதயமாகும்.

இந்த அகண்டாகார விருத்தியானது சைதன்ய பிரதிபிம்பத்தோடு சேர்ந்து கொண்டு ஆத்மாவிற்கு வேறுபடாத ப்ரபிரம்மத்தை மட்டும் விஷயமாக செய்து கொண்டு எது மறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளதோ, அந்த சைதன்யத்திலுள்ள அக்ஞானத்தை அடியோடு நாசம் செய்து விடுகிறது. அதனால் அதன் காரியமான எல்லாமே அத்துடன்கூட நாசமாகி விடுகிறது.  உதாரணமாக நூல்களை எரிப்பதன் மூலம் அதன் காரியமான துணியும் எரிந்து விடுவது போல அக்ஞானம் அழிந்தவுடன் அதனுடைய காரியமாக இருக்கின்ற அகண்டாகார மனோவிருத்தியும் நாசமடைந்து விடுகிறது.

சூரியனை பிரகாசிப்படுத்துவதற்கு மற்ற ஒளிதரும் பொருட்களான அக்னி முதலியவைகள் சக்தியற்றதாக இருக்கிறதோ அதுபோல விருத்தியில் இருக்கின்ற சைதன்யத்தின் பிரதிபிம்பத்திற்கு பரபிரம்மத்தை விளக்கும் சக்தி கிடையாது. கடும் வெயிலிலிருக்கும் தீபம் போல பரபிரம்ம பிரகாசத்தால் சிதாபாஸன் பிரகாசிக்கும் சக்தியை இழந்துவிடுவதால் அதன் உபாதியும் மறைந்து விடுகிறது.  தனித்திருக்கும் பிம்பமான பரபிரம்மமாகவே ஆகி விடுகிறது.  கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம், அதை எடுத்துவிட்டால் மறைந்து பிம்பம் மட்டும் இருக்குமோ அதுபோல சிதாபாஸனுடைய உபாதியான புத்தியும், மனமும் நீக்கப்பட்டுவிட்டால் அது மறைந்து பிம்பமான பிரம்மன் மட்டும் இருக்கும்.

விஷய ஞானமடைய உதவும் சிதாபாஸனால் பரபிரம்மத்தை அறிய உதவ முடியாது.  ஜட வஸ்துக்களை அறிந்து கொள்வதற்கு விருத்தி வியாப்தி, பல வியாப்தி என்ற இரண்டும் தேவை.  அந்தக்கரண விருத்தியால் அக்ஞானத்தை போக்கி சைதன்யத்தால் வஸ்து விளங்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் பார்க்கின்ற பொருளைப் பற்றிய அறிவை அடைய முடியும்.  ஆனால் இருட்டறையில் இருக்கும் தீபத்தைப் பார்ப்பதற்கு, அறையின் கதவை திறந்தாலே தீபத்தை பார்க்கலாம்.  அதேபோல ஸ்வயம் பிரகாசமான பிரம்மன்தான் விளங்குவதற்கு சிதாபாஸனுடைய உதவியை நாட வேண்டியதில்லை.  ஆகவே மனதால் பிரம்மத்தை அறிகிறான் என்பதற்கும் பிரம்மம் ஸ்வயம் பிரகாசம் என்பதற்கும் விரோதம் அல்ல.  விருத்தி வியாப்தியால் அக்ஞானம் நீங்குவதைத்தான் அறிகிறான் என்று சொல்லப்படுகிறது.

ஆவரணத்தை விலக்குவதற்கு விருத்தி வேண்டியிருப்பதால் பிரம்மத்தை அறிவதற்கு புத்தி விருத்தியை கருவியாக வேதாந்தம் சொல்கிறது என்பதை இனி விளக்கப்படுகிறது. ஆகவே பிரம்மமானது சூட்சுமமான புத்தியினால்தான் அறிய முடியும் என்று வேதம் உரைக்கிறது. சூட்சுமமான புத்தியென்பது குரு செய்கின்ற உபதேசம் நன்கு புரிந்து அனுபவத்திற்கு வரக்கூடியதாக அளவுக்கு சுத்தமாகவும், கூர்மையுடனுமிருக்கிற தன்மையுடையதாகும்.  இத்தகைய புத்தியானது வெகு சிலருக்கு இருக்கும் மற்றவர்களுக்கு அவரவர்களுடைய புத்தியின் சூட்சுமமான அளவுக்கு ஏற்ப சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்ற படிகளை பின்பற்றி ஞானத்தை அடையமுடிகிறது.

மந்த புத்தியுள்ளவர்களுக்கு சிரவணத்தினால் மட்டும் ஞானம் அடைந்து அதில் நிஷ்டை அடையமுடியாது. இடைவிடாமலே அதிலேயே ஈடுபட்டுக் கொண்டு செய்யப்படும் சிரவணத்தாலும், மனனத்தாலும், தியானத்தினாலும் புத்திக்கு சூட்சும தன்மை வந்துவிடுகிறது. அதனால் வஸ்து அறிந்து அனுபவத்திற்கு வருகிறது.

குரு உபதேசித்த உபநிஷத் மகாவாக்கியங்களின் பொருளை நன்கு புரிந்து கொண்டு பிரம்மத்தின் இருத்தலை அதன் லட்சணங்களுடன் உறுதியாக அறிந்து கொள்வது சிரவணமாகும்.  அறிந்த பிரம்மத்தை தர்க்கத்தினாலும், யுக்தியினாலும், தொடர்ந்து சிந்தனை செய்து இருக்கின்ற சந்தேகங்களை முழுவதுமாக நீக்கி கொள்ள உதவும் சாதனம் மனனமாகும். அடைந்த பிரம்ம ஞானத்தில் நிலைபெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சாதனம் நிதித்யாஸனம். இந்த தியானத்தின் போது நானே பிரம்மன் என்ற ஒரு எண்ணம் மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும். பரோக்ஷமான ஞானமானது அபரோக்ஷமாக மாறுவதற்கு பயன்படக்கூடிய சாதனம் இதுவாகும். இதையே ஆத்ம தியானம் என்றும் அழைக்கப்படும். எதுவரையில் உபநிஷத் உபதேசத்தில் இருக்கும் சந்தேகம் முழுவதுமாக நீங்கவில்லையோ அதுவரை கடும் முயற்சியுடன் தொடர்ந்து ஆத்ம தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

உபநிஷத் சொல்ல விரும்பும் மையக்கருத்தை கீழ்கண்ட அறு அடையாளங்கள்  கொண்டு அறிந்து கொள்ளலாம்.
1.       ஆரம்பத்திலும், முடிவிலும் ஒரே விஷயத்தை சொல்லியிருக்க வேண்டும்
2.       எந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றதோ
3.       வேறு பிரமாணங்களால் அறியப்படாமல் இங்கே புதியதாக சொல்லி இருத்தல்
4.       எதை அறிவதனால் விசேஷமான பலன் அடைப்படுவதாக கூறியிருத்தல்
5.       எதை மிகவும் புகழ்ந்து கூறுகின்றதோ
6.       எதை புரியவைப்பதற்கு பக்க பலமாக யுக்திகள் சொல்லியிருத்தல்

இவைகளை வைத்து ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உபதேசிப்பதுதான் உபநிஷத்தின் மையக்கருத்து என்று புரிந்து கொள்வதே சிரவணமாகும். இந்த கருத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் ஆத்மாவினுடைய வாஸ்தவமான ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள உதவுகின்ற சாதனமே மனனமாகும். மனதில் ஆத்மாவைத் தவிர வேறு பதார்தத்தில் ஆத்மா என்கின்ற எண்ணம் எதுவரை நாசமடையவில்லையோ அதுவரை மோட்சத்தில் ஆசையுள்ளவரால் இடைவிடாது தியானம் செய்யப்பட வேண்டும். சிரவண, மனனத்தின் மூலமாக நிச்சயமாக ஆத்மஞானத்தை அடைந்தாலும் அனுபவத்திற்கு கொண்டு வருவது மிகவும் கடினம். இந்த ஆத்ம அனுபவத்தை அடைவதற்கு, அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சாதனம் நிதித்யாஸனம். யுக்தியினால் ஜகத் மித்யா என்று அறிந்து கொண்ட போதிலும், ஆத்ம ஞானத்தினால் ஜகத் பொய்யான தோற்றம் என்று மறையவில்லையோ அதுவரை நிதித்யாஸனம் செய்யப்பட வேண்டும்.

ஸமாதி என்பது சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி என்று இரண்டுவிதமாக இருக்கிறது. இவைகளை மிக விளக்கமாக இனிகூறப்படுகிறது.
சவிகல்ப சமாதி:
அறிகிறவன், அறியப்படும் பொருள், அறிவு என்கின்ற மூன்றும் மறையாமலே அறியப்படும் பிரம்மத்தின் மட்டும் அதனுடைய ஸ்வரூப வடிவத்தை அடைந்த மனதின் விருத்தி இருக்கின்ற நிலையே சவிகல்ப சமாதி என்று பெரியோர்களால் கூறப்படுகிறது.  உதாரணமாக களிமண் தோன்றிக் கொண்டு இருக்கும் போதே அதனால் செய்யப்பட்ட பானையும் தோன்றிக் கொண்டிருப்பது போல இந்த நிலை இருக்கிறது.  ஸத்தாகவே இருக்கும் ப்ரம்மன் தோன்றிக் கொண்டிருக்கும் போதிலும் அதிலிருந்து உருவான அனைத்தும் தோன்றிக் கொண்டிருக்கும். அதனால் இந்தநிலையை சவிகல்ப சமாதி என்று கூறுப்படுகிறது.
நிர்விகல்ப சமாதி
அறிகிறவன், அறிவு, அறியப்படும்பொருள் என்ற மூன்றுவிதமாக இல்லாமல் மனமானது அறியப்படும் பொருளாக மட்டும் திடமாக இருக்கும் தியான நிலைக்கு நிர்விகல்ப சமாதி என்று பெயர்.  இதுவே ஞானயோக சாதனமான நிதித்யாஸனம் என்றும் அழைக்கப்படுகிறது.  உதாரணமாக நீரில் கரைக்கப்பட்ட உப்பானது நீரிலிருந்து வேறாக தெரியாத வண்ணம் அதனோடு கலந்துவிடுவது போல மனதிலுள்ள விருத்திகளானது பிரம்மத்தோடு கலந்து பிரம்மன் மட்டும் தோன்றி கொண்டிருக்கும் சமாதி நிலையே இதுவாகும்.
இந்த நிலையில் ஞானம் இருப்பதால் விருத்தி உள்ளது ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானம் இருப்பதால் இந்த விருத்தி இருப்பதில்லை.  இந்த நிலையில் மனம் லயமடைந்து விட்டதால் மனோவிருத்தி ஏற்பட இடமில்லை. ஆதலால் உறக்கத்தில் எதுவுமே இல்லையென்றாலும் அந்த நிலையானது சமாதியாகாது.

மேற்சொன்ன இரண்டு நிலைகளும் மோட்சத்தை அடைய விரும்புகின்ற சாதகன் முயற்சி செய்து அடைய வேண்டும். இதனால் விபரீதமான எண்ணங்கள் நீங்கி பிரம்மானந்தம் கிடைக்கும். 

சவிகல்ப சமாதி த்ருஶ்யானுவித்தம், ஶப்தானுவித்தம் என்று இருவகையாக இருக்கிறது. அறியதக்கதான கர்மம் முத்லியவைகளின் எண்ணங்களுடன் ஒட்டாத தன்மை எங்கே காணப்படுகிறதோ அதுவே த்ருஶ்யானுவித்த சவிகல்ப சமாதி என்று கூறப்படுகிறது "நான்","என்னுடையது" என்பது முத்லான காமம், க்ரோதம் முதலிய விருத்திகள் எந்த பார்க்கிறவனால் பார்க்கப்படுகின்றதோ அவனுக்கு அகங்காரம் முதலியவையும் பார்க்கப்படுபவைகளாகும்.  காமம் முதலான அனைத்து எண்ணங்களையும் பார்த்துக் கொண்டு எவ்வித விகாரத்தையும் அடையாமல் இருக்கிற சாட்சியாக தன்னை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த எண்ணங்களை பார்த்து கொண்டு இருப்பவர் சாட்சியாவார்.  காமம் முதலியவைகள் என்னால் பார்க்கப்படுகிறது ஆகையால் அவைகளுக்கு நான் சாட்சி என்ற தன்மையுடன் ஆத்மாவை அறிந்து அந்த சாட்சியால் பார்க்கப்படும் காமம் முதலியவைகளை தன்னிடத்திலேயே ஒடுங்கும்படி செய்ய வேண்டும்.

நான் தேகமல்ல, பிராணனுமல்ல, புலன்களின் கூட்டமுமல்ல, அகங்காரமுமல்ல, மனமுமல்ல, புத்தியுமல்ல ஆனால் அவைகளுக்குள்ளே இருந்து கொண்டு அவைகளை இயக்கிக் கொண்டிருக்கும் சாட்சிஸ்வரூபமானதும், நித்யமானதுமான ஆத்மாவாகவே நான் இருக்கிறேன். நான் வாக்குக்கும், மனதுக்கும், பிராணனுக்கும், மனதில் எழுகின்ற எண்ணங்களுக்கும், புத்திக்கும் அதில் உருவாகின்ற எண்ணங்களுக்கும், ஞானேந்திரியங்களுக்கும் சாட்சியாக இருக்கிறேன். இவ்விதம் சாட்சியாகவும், நித்யமாகவும் இருக்கின்ற ஆத்மாவாக நான் இருக்கிறேன்.

நான் பருத்தவனல்ல, மெலிந்தவனுமல்ல, சூட்சுமமானவனும் அல்ல, புத்திசாலியுமல்ல, சிறுவனுமல்ல, இளைஞனுமல்ல, பெரியவனுமல்ல, கிழவனுமல்ல, குருடனுமல்ல, ஊமையுமல்ல ஆனால் சாட்சியாகவும் நித்யமாகவும் இருக்கின்ற ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். 

நான் வருகிறவனுமல்ல, போகிறவனுமல்ல, செயல்படுபவனுமல்ல, செயல்களை செய்விக்கின்றவனுமல்ல, பேசிக் கொண்டிருப்பவனுமல்ல, அனுபவிக்கின்றவனும் அல்ல, சுகத்தையோ துக்கத்தையோ அனுபவிப்பனுமல்ல, சுக, துக்கங்களை ஸ்வரூபமானவனும் அல்ல ஆனால் சாட்சியாகவும் நித்யமாகவும் இருக்கின்ற ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். 

நான் குணங்களற்றவன், உணர்ச்சிகளற்றவன், பந்தங்களற்றவன், முக்தனுமல்ல, அழிவற்ற சாட்சியாக உள்ளேயிருக்கின்றதும் சாட்சியாகவும் நித்யமாகவும் இருக்கின்ற ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். 

இந்த நான் கனவு விஷயங்களை அனுபவிப்பவனுமல்ல. ஜாக்ரத் விஷயங்களை அனுபவிப்பவனுமல்ல.  ஆழ்ந்த உறக்கத்திலுள்ள சுகத்தை அனுபவிப்பவனுமல்ல. ஜடமானவனும் அல்ல, கேட்கின்றவனுமல்ல, அறிகின்றவனுமல்ல, நினைக்கின்றவனுமல்ல, நித்யமானதும், சாட்சி ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவாகவே நான் இருக்கின்றேன்.

எனக்கு உடல், புலன்கள், மனம், புத்தி இவைகளுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. பாவ-புண்ணியங்கள் சிறிதும் கிடையாது.  பசி, தாகம், வயோதிகம், மரணம், வியாதி, மோகம் என்கின்ற ஆறுவிதமான துயரங்களை கடந்தவன், எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவனாகவும், தனித்திருப்பவனாகவும், இருக்கின்ற சாட்சி சைதன்யமே நான்.

நான் கை, கால் போன்ற கர்மேந்திரியங்களும், வாக்கு, கண், காது போன்ற ஞானேந்திரியங்களும், பிராணன்களும் இல்லாதவனாக இருக்கிறேன். மனமோ, புத்தியும் இல்லாதவன் ஆகாசம் போன்று எங்கும் வியாபித்து இருப்பவன.  நிர்மலமாகவும், எப்பொழுதும் ஒரே ஸ்வரூபத்துடனும் இருக்கிறேன், சுத்த சைதன்யமாக இருக்கிறேன்.

இவ்விதமாக தன்னுடைய ஆத்மாவைப் பார்த்துக் கொண்டு பார்க்கப்படுகின்ற ஒவ்வொரு அறியப்படும் பொருட்களை எப்போதும் இல்லையென்று பொய்யென்று என்ற அறிவுடன் மறைத்துக் கொண்டு இயல்பான அறியாமையால் இருக்கின்ற விபரீத எண்ணங்களை ஞானியானவன் நீக்கி விடுகிறான்.

ஆத்மாவிற்கு விபரீதமான அனாத்மா வஸ்துக்களில் ஆத்ம தன்மை தோன்றாமல் இருப்பதே முக்தி என்று சொல்லப்படுகிறது. இது எப்பொழுதும் சமாதியில் இருப்பவர்களுக்குத்தன் சித்திக்கும். வேறெந்த முறையிலும் சித்திக்காது.

சுத்தமான அகண்ட சைதன்ய ஸ்வருபமாகவே இருக்கிறது எதுவோ அந்த முக்தி இவனுக்கு வெளி விஷயங்களிலோ, பேச்சுக்களிலோ ஏற்பட்டுவிடாது. அது ஏற்படுவதற்கு எப்பொழுதும் தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருந்து கொண்டு சரீரம் முதலான உபாதிகளில் :"நான்", "என்னுடையது" என்பதை விட்டுவிட வேண்டும்.

தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு பிடித்துக் கொண்டு மாயையை வெல்ல வேண்டும். பிறகு இவன் முக்தனாகி விடுகிறான். இதைத்தவிர கோடிக்கணக்கான வெவ்வேறு செயல்களைச் செய்தாலும் ஜீவன் முக்தி ஏற்படாது.  தானே பிரகாசிக்கக்கூடிய ஆத்மாவே நான் என்பது தெரிந்து கொண்டுவிட்டால், அறியாமையினால் ஏற்பட்ட முடிச்சுக்கள் அனைத்தும் அவிழ்ந்து போய்விடுவதால் பிறப்பு-இறப்பற்ற முக்தி நிலையை அடையட்டும்.  இந்த கருத்தையே ஸ்வேதாச்வர உபநிஷத் மனதிலுள்ள கிலேசங்கள் சென்று விட்டால் ஜனன, மரணம் சென்றுவிடும் என்று சொல்கிறது.  ஆத்மாவொன்றில் நிலை பெற்றால்தான் இந்த நிலை ஏற்படும். எனவே இதை அவசியம் அடைந்திட வேண்டும்.

கர்ம வாசனைகள்தான் பிராணிகளுக்கு பிறப்பு முதலியவற்றிற்கு காரணமாகவுள்ள கிலேசங்களாகும்.  ஞானநிஷ்டையில் மூலம் இந்த வாசனைகளை எரித்துவிட்டால், அவைகளுடைய காரியங்களான மீண்டும் பிறத்தல் என்பது இருக்காது. வறுக்கப்பட்ட விதையானது மீண்டும் முளைக்காது எப்படியோ அப்படியே அழிக்கப்பட்ட வாசனைகளுக்கு மீண்டும் பிறக்கும் சக்தியை இல்லாமல் செய்து விடுகிறது.  ஆகையால் முமுக்ஷுவால் வாசனைகள் அனைத்தும் முழுவதுமாக அழிவதற்கும், விபரீத பாவனைகள் நீங்குவதற்கும் கடின முயற்சியுடன் ஞானநிஷ்டையை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும்.

நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இருப்பது கர்மா, நான் எதையும் செய்பவனில்லை என்ற லட்சணத்துடன் இருப்பது ஞான நிஷ்டை. தேகத்தில் நான் என்ற அபிமானம் நீங்கிய நிலையே ஞானம். அதில் உறுதியுடன் இருந்து கொண்டு செயல்களை செய்விப்பது கர்மா.  அக்ஞானத்தைக் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது கர்மா. ஞானமோ அக்ஞானத்தையும், கர்மாவையும் நாசம் செய்து விடுகிறது.  எனவே ஞானமும், கர்மாவும் இருட்டும், ஒளியும் போல, கண்ணை மூடுதல், கண்ணை திறத்தல் போல ஒன்று சேரவே முடியாது.  ஆத்மாவே நான் என்று இருப்பவனால் எப்படி செயல்பட முடியும். தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தில் மனம் நிலைத்திருக்கும்போது மனம், வாக்கு, தேகம் இவைகளால் செய்யப்படும் செயல்கள் உண்மையில் செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.  காண்கின்ற அனைத்தையும் இல்லாமல் செய்துவிட்டு தன் ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பது எதுவோ அதுதான் தானம், போஜனம் போன்ற செயல்களாகும். ஆகையால் சாதகர்கள் எப்பொழுதுமே ஆத்மநிஷ்டையுடன் இருந்து வரவேண்டும்.

கர்மயோகத்தை பின்பற்றுவதன் மூலம் மனத்தூய்மையை பெற்று ஞானயோக சாதனத்தை பின்பற்றுவதற்கு தகுதியை அடைந்து விடலாம்.  ஞானயோக சாதனத்தை பின்பற்றுவதற்கு செயல்கள் செய்ய வேண்டியது எதுவுமில்லாது இருக்கும்போது ஞானநிஷ்டை அடைந்திருக்கின்ற ஞானிக்கு செய்ய வேண்டியது எதுவுமே இல்லை என்பது உறுதியாகின்றது.

இதுவரை த்3ரிஶ்யானுவித்த ஸவிகல்ப சமாதியானது விளக்கப்பட்டுவிட்டது.  இனி இரண்டாவது விதமான ஶப்தானுவித்த சவிகல்ப சமாதியானது விளக்கப்படுகிறது

ஶப்தானுவித்தா4 ஸவிகல்ப சமாதி
நான் மனத்தூய்மையை அடைந்தவன், தோஷங்களற்றவன், அறிவுடையவன், தேகாதிகளைக் காட்டிலும் வேறான ஆத்மஸ்வரூபமாக இருப்பதால் என்றும் இருப்பவன், மன அமைதியுடையவன், முடிவில்லாதவன், நிரந்தர பேரானந்தக் கடலாகவும் இருப்பவன் நான்.

நான் ஆதியந்தமில்லாதவன், வாக்காலும் மனதாலும் கிரகிக்க முடியாதவன், உபநிஷத் மகாவாக்கியங்களால் அறியதக்கவன், தோஷமற்றவன், பூரணமானவன், சைதன்ய ஸ்வரூபமானவன். மேலும் நான் அறியப்பட்டதாகவும் இருக்கிறேன், அறியப்படாததாகவும் இருக்கிறேன்.  மாயையின் காரியங்களால் பாதிக்கப்படாதவன்.  ஞானஸ்வரூபமாக இருப்பவன், தானே பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கிறேன். நான் மேலானவனுமல்ல, கீழானவனுமல்ல, வெளியேயும்,உள்ளேயும் கூட நிறைந்திருப்பவன். வயோதிகமில்லாதவன், அழிவில்லாதவன், ஆனந்தமே நான். என்னைக் காட்டிலும் வேறு இரண்டாவதான எதுவும் கிடையாது.  சத்யாமாகவும், ஞான ஸ்வரூபமாகவும், தூய்மை உடையதாகவும், உபநிஷத்துக்களால் அறியதக்கதும், உண்மையானதாகவும், ஜோதி ஸ்வரூபமானதாகவும் இருக்கின்ற பிரம்மனே நான். இவ்விதமாக ஸத் பதார்த்தமான பிரம்மத்தை மட்டும் விஷயமாகக் கொண்ட விருத்தியினால் அதை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தைகளினால் சொல்லப்படும் வஸ்துவான பிரம்மத்தை எப்படி ஞானியானவர் அந்த ஸ்வரூபத்திலிருந்து மனம் சலிக்காதவராக அதிலேயே மனதை நிலைநிறுத்தி தியானம் செய்து கொண்டிருப்பதுபோல தியானம் செய்ய வேண்டும்.  நானே பிரம்மன் தூய்மையானவன் என்ற எண்ணங்களுடன் கலந்த தியானமானது சப்தானுவித்த சவிகல்ப சமாதி என்று சொல்லப்படுகிறது

சவிகல்ப சமாதியில் ஆத்மாவுக்கு திருஶ்யவஸ்துக்களுடன் சம்பந்தம் இல்லாவிட்டாலும் அவைகளை நேரில் அறியும் ஆத்மா சாட்சியாக இருப்பதால் திருஸ்யங்களின் தோற்றமும் நீங்கிய நிலை நிர்விகல்ப சமாதி என்று கூறப்படுகிறது. சாட்சி என்கின்ற தோற்றமும் இல்லாத நிலைதான் நிர்விகல்ப சமாதியாகும். ஸ்விகல்ப சமாதியை யாரொருவன் நீண்ட காலம் இடைவிடாமல் சிரத்தையோடு (ஸ்த்கார பூர்வமாக) செய்கிறானோ அவனுக்கு நிர்விகல்ப சமாதி சித்திக்கும்.

நிர்விகல்ப சமாதியில் நிலைத்திருப்பவனுக்கு நித்யமாக இருக்கும் தன்மை நிச்சயம் ஏற்படும். பிறப்பு, இறப்பு என்கின்ற சம்சாரம் நீங்கிவிடும்.  எவ்வித தடையுமில்லாத அழிவில்லாத, மாறுதலற்ற சுகமும் ஏற்படுகிறது.  உள்ளே நான் என்றோ, வெளியில் என்னுடையது என்றொ கொஞ்சமும் நினைக்காதவனாக தானாகவே இருக்கின்ற ஆனந்தக் கடலில் முழ்கியவனாக வேறொன்றுமற்றவனாக ஞானியானவன் செயலெதுவும் செய்யாமலிருப்பார்.

எந்தவிதமான விகல்பங்கள் (வேற்றுமைகள்) இல்லாத பர பிரம்மத்திலேயே நிலைத்து இருக்கும் இவர்கள் பாக்கியசாலிகள் மற்றவர்களுக்கு இவர்கள் ஜீவித்திருப்பவர்களாக தெரிந்தாலும் இவர்கள் முக்தி நிலையை அடைந்த முக்தர்களே.

பிரம்மன்தான் அக்ஞானிகளுக்கு ஜகத்தாக காட்சியளிக்கிறது.  அதற்கென்று தனி இருப்பு கிடையாது என்ற அனுபவம் ஏற்பட வேண்டுமானால் யுக்தியுடன் செய்யப்பட வேண்டிய வேறு செயல்களையும் கூறுகிறார்.

எப்படி இதயத்தில் முயற்சி செய்து மூன்று சமாதிகளானது செய்யப்படுகிறதோ அப்படியே த்வைதம் நீங்குவதற்காக வெளியிடத்திலும்  மூன்று சமாதிகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அவைகள் செய்யும் முறையானது சொல்லப்படுகிறது.

ஸத், சித், ஆனந்தம் இவைகளை ஸ்வரூபமாக உடைய பிரம்மத்தின் மீது ஜகத்தானது நாம-ரூபமாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஸத், சித், ஆனந்தம், நாம, ரூபம், இவைகள் ஐந்தும் ஒன்று சேர்த்து ஜகத் என்று அக்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. நீரைச் சேர்ந்த குளிர்ச்சி, வெண்மை, ருசி இவைகளையும் அலையின் ஓடுகின்ற தன்மையுடன் சேர்த்து அலையென்று நீரையே குறிக்கப்படுவது போல ஜகத் குறிக்கப்படுகிறது.  ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் நாம-ரூபங்களை கவனிக்காமல் ஸத்தாவிருக்கும் பிரம்மத்தினுடைய ஸ்வரூபத்தை மட்டும் கிரகிப்பது வெளிவிஷயமான முதல் சமாதி என்று அறிந்து கொள்ள வேண்டும். மோதிரத்தினுடைய நாம-ரூபத்திற்கு மதிப்பு கொடுக்காமல் அதன் காரணமான தங்கத்தை மட்டும் மதிப்பது போல பிரம்மத்தை ஜகத்திலிருந்து பிரித்தறிந்து கொள்ள வேண்டும்.

ஸத்-சித் ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தினிடமிருந்து நாம-ரூபங்களை தனியாக பிரித்தெடுத்து பிரம்மத்திலேயே லயமடையும்படி செய்து, நித்யமாகவும், சித்தாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும், ஜகத்திற்கு ஆதாரமாக பரபிரம்மமே நான் என்று உறுதியான மனதுடையவரே ஞானி. நிலம், நீர், வாயு, ஆகாசம், அக்னி இந்த பஞ்ச ஸ்தூல, சூட்சும பூதங்களும் ஸத் அல்ல. அவைகளின் காரியங்களும் ஸத் அல்ல. ஆனால் இவைகளுக்கு காரணமாக இருந்து கொண்டு நிர்மலமாகவும், ஒன்றாகவும், மேலானதாகவும் இருக்கின்ற ஸத் வஸ்துவே நான்.

இந்த த்ருஶ்யம் நாம ரூபாதிகளாகயிருப்பது உண்மையல்ல. இதற்கு ஆதாரமாக உள்ள அந்த பிரம்மன்தான் சத்யம் என்று அறிந்தவன் எல்லா நிலைகளிலும் இந்த வெளிவிஷயமாகவுள்ள த்ருஶ்யாதுவித்த ஸமாதியை செய்ய வேண்டும். ஏற்றி வைக்கப்பட்ட நாம-ரூபங்கள் இல்லாதபடி செய்து விடுவதால் நிர்மலமான, இரண்டற்ற, மேலான ஆனந்த ஸ்வரூபமான பிரம்மனே நான்தான் என்று பாவிக்க வேண்டும். மாறுதல்களற்றது, தோஷங்களற்றது, கெடுதல்களற்றதும், ஆதியந்தம் இல்லாததுமான பிரம்மனே நான் இதில் சந்தேகமில்லை

களங்கமற்ற, கவலைகளற்ற, மூன்றுவித பிரிவுகளற்ற, ஆனந்தமயமான, அழிவற்ற, பந்தத்திலிருந்து விடுபட்ட, மாறுதல்களை அடையாத, ஞான ஸ்வரூபமான, சத்யமாக இருக்கின்ற, தூய்மையானதும், சைதன்யமாகவும், அனைத்தையும் அடையப் பெற்றதும், மேலானதுமான, பிளவுபடாததுமான, ஸ்வயம் பிரகாசமாக விளங்கிகொண்டிருக்கின்ற, மற்றவைகளையும் பிரகாசித்துக் கொண்டிருப்பதுமாகவும் இருக்கின்ற பிரம்மமாகவே நான் இருக்கிறேன் என்று பாவிக்க வேண்டும்.

மிக சூட்சுமமாகவும், இருத்தல் என்ற தனிமையுடையதுமாக இருப்பதும், வேற்றுமைகளற்றதும், எல்லாவற்றையும் விட பெரியதாகவும், தனியாகவும், வேறு எதனோடும் சம்பந்தப்படாமல் இருப்பதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்ற பிரம்மமே நான் என்று பாவிக்க வேண்டும். இவ்விதமாக மேலே குறிப்பிட்ட சப்தங்களினால் மட்டும் குறிப்பிடப்படுகின்ற சுத்த வஸ்துவை தியானம் செய்பவனுடைய மனம் பிரம்மத்தில் நன்கு நிறைபெறும் பிரம்மானந்த ரஸம் ஏற்பட்டு விட்டதால் அந்த ஸ்வரூபத்தோடு ஒன்றாகி மனோவிருத்தியின் எந்த சலனமற்ற நிலையுண்டோ அதுவே நிர்விகல்ப சமாதியாகும்.

சாதகன் வெளிப்பார்வையுள்ள சமயத்திலும், வெளிப்பார்வையில்லாத சமயத்திலும் கூட கவனத்துடன் இருந்து கொண்டும், புலன்களை வென்றவனாக, மனத்தூய்மையின் எப்போது இந்த ஆறு சமாதிகளையும் செய்து கொண்டிருக்க வேண்டும்.  பிரம்மம்தான் ஆத்மா என்பதற்கு விரோதமான விஷயத்திலுள்ள சந்தேகம் எதுவரை முழுமையாக செல்லவில்லையோ எதுவரை தன் ஸ்வரூபம் தடையில்லாமல் நன்கு ஸ்புரிக்கவில்லையோ அதுவரை இந்த ஆறு சமாதிகளைக் இடைவிடாமல் பயிற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். சாதகன் இந்த விஷயத்தில் தவறெதுவும் செய்யக்கூடாது. சூரியன் மறைந்தால் எப்படி இருட்டு வந்துவிடுமோ அதுபோல தவறு ஏற்பட்டால் மாயை நம்மை பற்றிக் கொண்டு மோகத்தில் ஆழ்த்திவிடும்.

ஞானிகள் ஆத்மானுபவத்தை விட்டுவிட்டு ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டார்கள். சாதுக்களுக்கு ஆத்மானுபவத்தில் கவனக்குறைவு என்பது எதுவோ அதுவே ம்ருத்யுவாகும்.

இந்த சமாதியை யார் முழுகவனத்துடனும், முயற்சியுடனும் ஈடுபடுகிறார்களோ அவருக்கு மறுபடியும் வேற்றுமைகள் ஏற்படாது.  இந்த சமாதியின் முடிவிலே எல்லாமே நான் என்கின்ற அனுபவம் ஏற்படும்.  ஞானிக்கு ஸர்வாத்மபாவம் பிரம்மத்தை அறிவதன் பலனாக அறிந்திருக்கிறார்கள். வாழும்போதே சம்சாரத்திலிருந்து முழுமையாக விடுபட்டு இருக்கின்ற அவருக்குத்தான் தன் ஸ்வரூபானந்தத்தின் அனுபவம் பலனாகும்.

நான் என்னுடையது இது முதலான அஸத் பதார்த்தங்களை விஷயமாக உள்ளதும், சூட்சும வாஸனாமயமுமான முடிச்சு எல்லாம் சமாதியினால் போய்விடும்.  கர்மாக்களினால் ஏற்பட்டிருக்கும் பந்தமும் நசித்துவிடும். அப்போது பிரம்மமே ஆத்மா என்கிற அறிவு எவ்வித தடையுமில்லாமல் இருக்கும்.

மிகத்தூய்மையான மனமுள்ள மோட்சத்தில் நாட்டமுடையவர்களுக்கு பிரம்மம் ஒன்றுதான் என்ற அனுபவத்திற்கு வருகின்றதோ அந்த நிலைதான் பிரம்ம ஸ்வரூபமாகவே நிலைத்திருப்பதுமான மோட்சத்திற்கு போவதற்கு முன் எந்தவித தடைகளுகுமில்லாத வழியாகும்.

ஆகையால் கவனக்குறைவில்லாமல் மனதையடக்கி இந்த ஆறு சமாதிகளையும் செய்து "நான்", "என்னுடையது" என்ற அத்யாஸத்தை நீக்கி எப்போது பிரம்மானந்த கடலில் மூழ்கிக் கொண்டு, விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியை அடைந்து இருப்பாயாக.

மனோவிருத்தி சலனமற்றிருக்கும் தன்மையை லட்சணமாக உடைய நிர்விகல்ப சமாதி என்பது எதுவோ அதையேதான் யோக சாஸ்திரத்தின் அர்தத்தை அறிந்தவர்கள் "யோகம்" என்று சொல்கிறார்கள்.  இது எட்டு அங்கங்களைக் கொண்டது.  அவைகள் யமம், நியமம், ஆஸனம், பிராணாயாமம், ப்ரதியஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகும்.
1.   யமம் - எல்லாமே பிரம்மம் என்ற உணர்வதன் மூலம் புலன்களின் கூட்டங்களை அமைதிபடுத்த முடியும். இதுவே யமம் என்று அழைக்கப்படுகிறது. எனவே சாதகர்கள் இதை அடிக்கடி அப்யாஸம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
2.   நியமம் - ஒரேவகையான எண்ணங்கள் பிரவாகம் போல தொடர்ந்து வருவதும், வேறுவகையான எண்ணங்கள் நடுவே வராமலிருப்பதும் நியமமாகும்.
3.   ஆஸனம் - எப்படி அமர்ந்து தியானம் செய்தால் சுகமாக இருக்குமோ அந்த நிலைதான் சரியான ஆஸனமாகும்
4.   பிராணாயாமம் - சித்தம் முதலிய எல்லா விஷயங்களையும் பிரம்மமாகவே பாவிக்கின்றபடியால் எள்ள எண்ணங்களுக்கும் தடை ஏற்படுத்துவது எதுவோ அந்த பாவனையே பிராணாயமமாகும். பிரபஞ்சத்தை இல்லையென்று பாவிப்பது ரேசக பிராணாயாமம். பிரம்மமே நான் என்கின்ற எண்ணமே பூரக பிராணாயாமம். இந்த இருவிருத்திகளும் அசைவற்று இருப்பது, அதாவது எண்ணங்களே இல்லாத நிலையே கும்பக பிராணாயாமம்.
5.   விஷயங்களில் நான் என்ற ஆத்ம பாவத்தை விட்டுவிட்டு மனதை சைதன்யத்தில் ஒன்றச் செய்வது பிரத்யஹாரமாகும்.  முமுக்ஷுக்கள் இதை அப்யாஸம் செய்ய வேண்டியது அவசியம்
6.   எங்கேயெல்லாம் மனம் செல்கிறதோ அங்கேயெல்லாம் பிரம்மத்தை பார்க்கும்படி மனதை நிலைநிறுத்துவது தாரணையாக கூறப்படுகிறது. எல்லாவற்றையும் பிரம்மமாகவே பார்ப்பவதற்கு எந்த விஷயத்தை நோக்கி மனம் சென்றாலும் அந்த விஷயம் பிரம்மனாகவே காண்கின்றபடியில் பிரம்மத்தில் மனதின் தாரணை தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.
7.   பிரம்மமே நான் என்கின்ற விருத்தியுடன் வேறொன்றையும் நினைக்காத நிலையே தியானமாகும். இந்த நிலையில் புனிதமான ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
8.   விருத்தியானது எந்தவித விகாரத்தையும் அடையாமல் பிரம்மனாகவே இருக்கும்போது எண்ணங்களே இல்லாத நிலையே  சமாதியாகும். இதையே ஆத்மஞான நிஷ்டை என்றும் கூறலாம்

சமாதிக்கு ( நிதித்யாஸனத்திற்கு ) வரும் தடைகள்
நிதித்யாஸன காலத்தின் போது பல இடையூறுகள் வருகின்றன. அவைகள், விட்டுவிட்டு தியானம் செய்தல், சோம்பல், விஷயசுகத்தை அனுபவித்தல், பயம், அக்ஞானம், விக்ஷேபம் (வெவ்வேறு விஷயங்களால் மனம் இழுக்கப்படுதல்), சூன்யமாக தோன்றுதல் போன்ற பலவிதமான தடைகள் வரும்போது மிகக்கவனத்துடன் இருந்து கொண்டு அவைகளை ஒதுக்கிவிட வேண்டும்.

இந்த உபதேசங்களை மிகக்கவனத்துடன் கேட்டு அதன்படியே நடந்து ஆத்மாவிலேயே நிலைத்தவனாக, ஞானநிஷ்டை அடைந்தவனாக சீடன் இருந்து வந்தான்.  இந்த நிலையை அடைவதற்கு அருள்புரிந்த குருவை நாடி பலதடவை நமஸ்கரித்து அவரை பார்த்து பேசலானான்.

அழிவற்ற ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்ற குருவுக்கு, நமஸ்காரம். ஸங்கமற்றவராகவும், சாந்த ஸ்வரூபமாகவும், சுகங்களுமற்றவராகவும் இருக்கின்ற குருவுக்கு நமஸ்காரம். கருணைக் கடலாகவும், பிரம்மமாகவே இருப்பவரும் என்னுடைய ஞானநிஷ்டைக்கு காரணமானவரும், அதனுடைய பெருமையையுடைய தங்களுக்கு நமஸ்காரம்.

தோன்றிக் கொண்டிருக்கின்ற இந்த ஜகத் முழுவதும் நான் வியாபித்திருப்பதால், நான் என்னதான் செய்ய முடியும்? எங்கே போவேன்? எதை எடுத்துக் கொள்வேண்? எதை வேண்டாமென்று விட்டுவிடுவேன்? ஆனந்த சாகரமாக இருக்கின்ற என்னிடத்தில் ஆயிரக்கணக்கான பிரம்மாண்டங்களாகிற நீர்க்குமிழிகள் மாயாமயமான காற்றில் உண்டாகி, உண்டாகி மறைந்து விடுகின்றன.

ஹே ஸத்குருவே! தங்களுடைய அனுக்கிரகத்தால் நான் நித்யமான ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிறேன்.  நானே ஆத்மா, ஸங்கமற்றவன், தோஷங்கள் அற்றவன், தனித்திருப்பவன், பூரணமானவன். தங்களுடைய கடாக்ஷமாகிற உத்தமமான நிலா வெளிச்சம் விழுவதினால் சம்சார தாபத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கினவனாக நான் ஒரு நொடியில் எல்லையற்ற வைபவத்தோடு கூடிய ஆனந்தமாகாவுள்ள, அழிவற்ற, எல்லையற்ற பெருமையை உடைய ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவாகி விட்டேன்.

நிழலை தீண்டிய உஷ்ணத்தினாலோ, குளிரிச்சியினாலோ, நல்லதையோ, கெட்டதையோ, இன்பத்தையோ, துன்பத்தையோ அதற்கு ஆதாரமாகவும் வேறாகவும் உள்ள புருஷனை பாதிப்பதில்லை. வீட்டின் தர்மங்கள் அதை பிரகாசிக்கச் செய்யும் தீபத்தை எப்படி தொடாதோ அவ்விதமே பார்க்கப்படுகிற பதார்த்தங்களின் தர்மங்கள் வேறு லட்சணை உடையவனாக, விகாரமற்றவனாக உதாஸீனனாக இருக்கும் சாட்சியை தொடாது.  சூரியனுக்கு உலகில் செய்யப்படும் கர்மாவில் எப்படி சாட்சி தன்மையோ, இரும்பின் எப்படி அக்னியின் எரிக்கும் தன்மையோ, கயிற்றுக்கு அதில் பிராந்தியால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வஸ்துவின் ஸங்கம் எப்படியோ அப்படியேதான் கூடஸ்தனாக ஞான ஸ்வரூபனாக இருக்கும் எனக்கு இருக்கிறது.

ஸ்லோகங்கள் 936-1003 ஜீவன் முக்தி, விதேஹ லட்சணம்
1.   நான் மூடனாகவே ஏன் இருந்து கொண்டிருக்கிறேன்? சாஸ்திரத்தினாலும், சாதுக்களாலும் நான் ஆத்மாவை அறியப்போகிறேன் என்றும் வைராக்கியத்தை முன்னிட்டு ஏற்படும் விருப்பம் "ஶுபேச்சா" என்று அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது.
2.   சாஸ்திரம், சாதுக்களின் சேர்க்கை, வைராக்கியம், ஞானாப்யாஸம் இவைகளை முன்னிட்டுக் கொண்டு நல்ல காரியத்தில் (சிரவண, மனனம்) பிரவிருத்தி ஏற்படுவது "விசாரணை" எனப்படுகிறது.
3.   ஶுபேச்சையினாலும் விசாரணையினாலும், புலன்களுக்கு விஷயமான பதார்த்தங்களிலுள்ள பற்றுதல் குறைந்து விடுவது தனுமானஸீ எனப்படுகிறது.
4.   மேற்கூறப்பட்ட மூன்று பூமிகைகளையும் அப்யாஸம் செய்வதால் விஷயங்களில் உள்ள வைராக்கியம் காரணமாக சுத்தமான சித்தமானது ஸத்ஸ்வரூபத்திலேயே நிற்கும்போது ஸத்வபத்தி என்று கூறப்படுகிறது
5.   மேற்கூறிய நான்கு பூமிகைகளையும் அப்யாஸம் செய்வதினால் நன்கு நிலைத்த ஸத்வப்ரகாசத்தை உடையதும், பற்றுதலில்லாமையை பலனாக உடையதும் எதுவோ அதுவே அஸம்ஸக்தி எனப்படுகிறது.
6.   ஐந்து பூமிகைகளின் அப்யாஸத்தினால் நன்கு தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே ரமித்துக் கொண்டிருப்பதால் உள்ளேயுள்ளதோ, வெளியேயுள்ளதோ எந்தப்பதார்த்தங்களையும் எண்ணாமலேயிருப்பதால் வேறு யாரேனும் செய்யும் நீண்டகால முயற்சியாலேயே விழித்துக் கொள்வது எதுவோ அதுவே பதார்த்த-அபாவனை என்று அழைக்கப்படுகிறது.
7.   ஆறு பூமிகைகளையும் நீண்டநாட்கள் அப்யாஸம் செய்வதால் பேதமே தோன்றாமல் இருந்து விடுமாதலால் தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே நிலைத்து விடுவது துர்யகா என்று அறிந்து கொள்க.

ஜீவன் முக்தன் எப்படியிருப்பான் என்று சொல்லப்படுகிறது:

·         செயல்களை செய்து கொண்டிருந்தாலும், செய்யாமலிருந்தாலும் யாருக்கு நான் என்கின்ற எண்ணமில்லையோ, யாருடைய புத்தியானது எந்தவிதமான நல்லது-கெட்டதுகளினால் பாதிக்கப்படுவதில்லையோ அவனே ஜீவன் முக்தன்.
·         யார் எல்லாவித விஷயங்களிலும் வியவஹாரம் செய்கிறவனாக இருந்தாலும் இயல்பான மனநிறைவுடனும், மற்றவர்களுடைய காரியங்களில் தாபமில்லாதவனாக, பூரணமாக இருக்கிறானோ அவனே ஜீவன் முக்தன்

பொதுவாக நாம் உலகில் எல்லோருடனும் பழகிக்கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு வரும் கஷ்டங்களாலும், சுகங்களாலும் பாதிக்கப்படுவதில்லை.  அதுபோல ஜீவன் முக்தனுக்கு ஆத்மாவை தவிர சரீரம் முதலான அனாத்மாக்கல் அனைத்துமே வேறானதாக இருப்பதால் அவைகளால் இன்பமும் அடைவதில்லை, துன்பமும் அடைவதில்லை.

ஜீவன் முக்தன் காலமாகிவிட்டால் விதேஹமுக்தி நிலையை அடைகிறான். சரீர உபாதியை விட்டுவிட்டு பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறான்.

முடிவுரை
இதன் மூலமாக முமுக்ஷுக்களுக்கு நன்கு முறையாக சிரமமில்லாமல் ஆத்ம ஞானம் ஏற்படுவதற்காக ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்பட்டது. இந்த கிரந்தம் சாதகர்களுடைய இதயத்திலுள்ள அவித்யா என்ற முடிச்சு நாசமடைவதற்காக செய்யப்பட்டிருக்கிறது.

--------oooooooOOOOOOOoooooooo ------

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...