சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம்- பகுதி-6
முகவுரை
முதல் 250 ஸ்லோகங்களில்
ஞானயோக சாதனத்தை பின்பற்றவதற்கு தேவையான தகுதிகள் கூறப்பட்டது. இதன் மூலமாக
மனத்தூய்மை அடைந்து மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினல் உந்தப்பட்டு அதற்கான
பாதையான ஞானயோக பாதைக்கு வருவான். இத்தகைய அதிகாரிக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைந்து
அதில் நிலைபெறுவதற்கான வழிய இந்த கிரந்தத்தில் உள்ள மீதி ஸ்லோகங்கள் மூலமாக
விளக்கியிருக்கிறார்.
இதன் மூலமாக
முமுக்ஷுக்களுக்கு நன்கு முறையாக சிரமமில்லாமல் ஆத்ம ஞானம் ஏற்படுவதற்காக
ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த கிரந்தம் சாதகர்களுடைய உள்ளத்தில்
இருக்கின்ற அவித்யா என்ற முடிச்சு நாசமடைவதற்காக உதவி செய்கின்றது..
ஸ்லோகம் 251-259
வேதாந்த குருவின்
லட்சணங்களும், அவரிடம் போக வேண்டிய முறையும் விளக்கப்படுகிறது. அவரிடம் கேட்க
வேண்டியது என்ன என்பதும் கூறப்படுகிறது.
விவேகம், வைராக்கியம்,
சமாதிஷட்கம், முமுக்ஷை ஆகிய தகுதிகளை அடைந்தவன் வேதாந்த விசாரம் செய்வதற்கு
தகுதியுடையவனாகிறான். எனவே ஆத்ம
தத்துவத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அதை நன்கு அறிந்திருக்கும் குருவை தேடி அடைய
வேண்டும். அவரிடம் செல்லும்போது கையில் சமித்து
கட்டைகளை எடுத்துக் கொண்டு மிகவும் பணிவுடன் செல்ல வேண்டும்.
குருவானவர் ஆத்ம வித்யாவை முறைப்படி கற்றுணர்ந்தவராகவும், அடைந்த ஞானத்தில்
நிலைபெற்றவராகவும் இருக்க வேண்டும். சாந்த ஸ்வரூபியாகவும், எல்லா
உயிர்களிடத்திலும் சமமான பார்வை உடையவராகவும், மமகாரம், அகங்காரம் இல்லாதவராகவும்,
சரீரங்களில் அபிமானம் இல்லாதவராகவும், இருமைகளை கடந்தவராகவும், அவைகளால
தாக்கப்படாதவராகவும், தனக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவராகவும்,உலகப்
பொருட்களில் பற்றற்றவராகவும், மனத்தூய்மை உடையவராகவும், கருணை, பயமின்மை
உடையவராகவும், உபதேசம் செய்வதில் திறமையுள்ளவராகவும், ஜீவன் முக்தனாக இருக்கின்ற
குருவை ஆத்ம ஞானத்தை அடையும் பொருட்டு முயற்சி செய்து தேடி அடைய வேண்டும்.
இத்தகைய லட்சணங்களுடன்
கூடிய குரு கிடைப்பாரா என்ற சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கையோடு தேடினால் பகவான்
அருளால் அடையப்பெறுவோம். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக்
கொடுப்பார். பல பிறவிகளில் செய்த கர்மயோக, பக்தியோகத்தின் மூலமாக பகவானின் அருள்
பெற்று இருந்தால் அவர் மூலம் இந்த சம்சாரக் கடலிலிருந்து கரையேறி விடலாம்.
குருவின் மூலம்தான்
மனதிலுள்ள அக்ஞான முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும். அத்தகைய குருவையே இறைவனாக எண்ணி
அவர் மீது முழு சிரத்தைக் கொண்டு சேவை செய்து அறிவை அடைய சாதகர்கள் விரும்ப
வேண்டும். குருவினுடைய அருளால் சம்சார
கடலை சிறு குட்டையை தாண்டுவது போல தாண்டி விடலாம். சம்சார பந்தத்திலிருந்து
விடுதலைப் பெற்றவரும், பிரம்மத்தில் நிலைத்தவருமான குருவுக்கு செய்ய வேண்டியது
எதுவுமில்லை. அத்தகையவருக்கு சேவை செய்து வர வேண்டும். இவ்வாறு எப்பொழுதும் குருவுக்கு பக்தியுடன்
சேவை செய்து வருவதானாலும், பணிவோடு நடந்து கொண்டும், அடிக்கடி வணங்கியும், அவரை
மகிழ்ச்சி அடைய செய்து அவரருகில் சென்று ஆத்மஞானத்தை அடைய உதவுமாறு கேட்க
வேண்டும்.
ஸ்லோகம்
– 260-265
குருவிடம் கேட்க
வேண்டிய விஷயங்களையும், கேட்கும் முறையும் இனி விளக்கப்படுகிறது.
ஹே பகவானே! சம்சாரக்
கடலை கடக்க உதவும் படகுபோல் இருக்கும் தங்களால் சிரமில்லாமல் பலர் சம்சாரக் கடலைத்
தாண்டி முக்தி அடைந்துவிட்டார்கள். நான் முற்பிறவியில் செய்திருக்கும் எல்லையற்ற
நற்செயல்களால் அடைந்த புண்ணியத்தின் பலனாக தங்களை வந்தடைந்து சீடனாக
ஏற்கப்பட்டுவிட்டேன். பிரம்மநிஷ்டனான குருவின் பார்வை பட்டதாலே கண்களில் ஓளியும்,
முகத்தில் தெளிவும், நிறைவும் வந்துவிடுகிறது.
மனமயக்கத்தை நீக்கி நற்கதியை காட்டுகிறது.
மனதிலுள்ள அறியாமயென்ற இருளானது ஒளிதருகின்ற சக்தியை உடைய எதனாலும் நீக்க
முடியாது. ஆனால் பிரம்மஞானியின்
பார்வையானது இந்த முடிவு இல்லாத அக்ஞான இருளைப் போக்கக்கூடியது. சம்சார கடலை கடக்க
தடையாக இருக்கின்ற பிறப்பு, இறப்பு, வியாதி போன்ற கொடிய முதலைகள் கூடியிருப்பதால்,
கர்மபலன்கள் என்கின்ற பெரிய அலைகளை உடைய சுழல்களை உடையதும், அடிக்கடி கடலுக்குள்ளே
மூழ்கடித்து துயரத்தை கொடுக்க கூடியதாகவும், கஷ்டங்களை அனுபவித்துக்
கொண்டிருக்கும் எனக்கு தங்கள் சரணார விந்தங்களை தவிர வேறெதுவும் காப்பாற்றக்
கூடியதாக காணவில்லை. நான் செய்த பெரும் புண்ணியத்தால், தங்களை சரணடைந்திருக்கும்
என்னை பிறப்பு-இறப்பில் இருந்து காப்பாற்றி விடுங்கள்
ஸ்லோகம்
– 266-271 – குரு உபதேசிக்கின்ற முறை கூறப்படுகிறது
தன்னை தஞ்சம் சீடனுக்கு
முதலில் பயப்படாதே என்று அபயம் கொடுக்க வேண்டும்.
அறிவுள்ள சீடனே! மரண பயத்தை விட்டுவிடு, இரண்டற்றதாக, நிலையானதாகவும்,
ஆனந்த ஸ்வரூபமாகவும் உள்ள பிரம்மனாகவே இருக்கும். உனக்கு எக்காலத்திலும்,
எதனிடத்திலிருந்தும் மரணம் கிடையவே கிடையாது.
அறியாமையினால் பயத்தை அடைந்திருக்கிறாய். கனவில் பயங்கரமான புலியை கண்டு
பயப்படுவதைப் போல இருக்கிறது உன்னுடைய இந்த பயம்.
உன்னுடைய இந்த வாக்கியம் பொய்யானது.
நீ நித்யமாக இருப்பதால் உனக்கு அழிவே கிடையாது. இரண்டற்றதாக இருப்பதால் பயப்படுத்தக்கூடிய
வேறொன்று கிடையாது. ஆனந்தமே ஸ்வரூபமாக இருப்பதால் துயரத்திற்கு இடமில்லை. இப்படியிருக்கும்போது மரணத்தைக் கண்டு
பயப்படுவது இந்த ஆத்ம ஞானம் இல்லாதிருப்பதனால்தான்.
கனவில் பாம்பு
துரத்தினால் பயத்துடன் காப்பாற்றுங்கள் என்று பிதற்றும் ஒருவனை எழுப்பி ஏன்
பிதற்றுகிறாய் என்று கேட்டால் அவனும் ஒன்றுமில்லை என்று அவனே சொல்கிறான். அவன் பயத்தினால் சொன்ன வாக்கியம் பொய்யாக
இருப்பதால்தானே இவ்வாறு அவனே பொய்யென்று கூறுகிறான். கனவில் மட்டுமல்ல விழிப்பு நிலையிலும் மங்கலான
வெளிச்சத்தில் கயிற்றை பாம்பு என்று தவறாக எண்ணி பயப்படும்போது அது பாம்பு
இல்லையென்று மற்றொருவன் சொல்லும் போது அந்த பயம் அவனிடமிருந்து சென்றுவிடும்.
அதுபோல தனக்கு பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, போன்ற துக்கங்கள் இருப்பதாக உன்னால்
சொல்லப்பட்டதெல்லாம் பொய்தான். உன்
அறியாமையினால் கூறப்பட்ட இவைகளை நன்கு விசாரித்து அறிவையடைந்தால் இவைகளெல்லாம்
பொய்யென்று நினைப்பாய், சனாத்மாவின் லட்சணங்களை ஆத்மாவில் ஏற்றி சோகத்தை
அடைகிறாய். ஆகையால் அக்ஞானத்தால் தோன்றுகின்ற எல்லா பயங்களையும் விட்டுவிட்டு
சுகமாக இருப்பாயாக.
ஸ்லோகம்
– 272-278 – சீடனின் சந்தேகங்கள்
குரு தெளிவாக
உபதேசிப்பது நன்கு புரிந்தாலும், அவைகள் தன்னுடைய அனுபவத்திற்கு முரணாக இருப்பதால்
பலவித சந்தேகங்கள் மனதில் எழுகிறது.
அவைகளை குருவிடம் சொல்லி அவைகளையும் நீக்கிவிட கேட்கின்றான்.
குருபகவானே!
காண்பதெல்லாம் பொய் என்ற கருத்து தாங்கள் எடுத்துக் காட்டிய உதாரணத்திற்கு நன்கு
பொருந்தி வருகின்றது. ஆனால் பிரம்ம விஷயத்தில் பொருந்தி வருவதாக எனக்கு
தோன்றவில்லை. ஏனென்றால் சம்சாரம் முதலான துயரங்கள் பிரத்யக்ஷமாக சகல குணங்களாலும்
அனுபவிக்கப்படுகிறதே! உலகில் எல்லோருக்கும் பிரத்யக்ஷ பிரமாணமத்தின் உதவியால்தான் வஸ்துவின்
இருப்பை நன்கு தெரிந்து கொள்கிறோம்.
பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்படும் பொருள் எப்படி பொய்யென்று கூறமுடியும்? என்
கண்ணெதிரே இருக்கும் பானையை எப்படி பொய்யென்று எடுத்துக் கொள்ள முடியும். நான்
மரணத்திர்குட்பட்டவன் பிறப்பு, இறப்பு போன்றவைகளால் துக்கமுண்டு. சிறிது காலமே
வாழ்பவன், இப்படிபட்ட நான் நித்யமான, ஆனந்த ஸ்வரூபமான பிரம்மனாக எப்படி இருக்க முடியும்?
ஆத்மா எது? அனாத்மா
எது? இவையிரண்டின் லட்சணங்கள் என்ன? ஆத்மாவிடத்தில் அனாத்மாக்களின் தர்மங்களை
எவ்வாறு ஏற்றி வைக்கப்படுகிறது? அக்ஞானம் என்பது என்ன? அதனால் அனுபவிக்கும் பயத்தை
எவ்வாறு போக்குவது? ஆத்ம ஞானம் என்பதென்ன? அதனால் எப்படி சுகத்தை அடைய முடியும்? குரு பகவானே! உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு
தெளிவாக புரியும்படி உபதேசித்து அருள வேண்டும்.
ஸ்லோகம்
– 279-609 – குருவின் பதில்கள்
நீ கேட்ட இந்த
கேள்விகளிலிருந்து பிரம்மத்தை அறிய விரும்பும் சரியான பாதையில் செல்கின்றாய் என்று
தெரிந்து கொள்வாயாக. அந்த ஈஸ்வரனின்
அருளால் உன் முயற்சியில் வெற்றி அடைவாய். ஈஸ்வரனுடைய பூரண அருள் உனக்கு
கிடைத்திருக்கிறது. ஈஸ்வரனின் அருளில்லாமல் தொடங்கப்படுகின்ற எந்த காரியத்திலும்
வெற்றி கிடைக்காது. நல்ல புத்தி
உண்டாகாது. நல்ல யுக்தி தோன்றாது.
மோட்சத்தையும் அடையமுடியாது. பல பிறவிகளில் செய்திருக்கின்ற கர்மயோக,
பக்தியோக சாதனங்களினால் பகவானுடைய அருளைப் பெற்றிருக்க முடியும். அது ஒன்றே
பிறவித்தளையிலிருந்து உன்னை விடுவிக்க முடியும். ஶுகர் போன்ற ஞானிகள் அவருடைய
அருளினால்தான் எல்லா பற்றுகளையும் நீக்கி சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்திநிலையை
அடைந்திருக்கிறார்கள். விவேகத்தை அடைந்தவன்தான். ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள
முயற்சி செய்வான். விவேக, வைராக்கியத்தை அடைந்தும் மோட்சத்தை அடைய முயற்சி
செய்யாவிட்டால் இவைகள் இருந்தும் பயனெதுவும் இல்லை. இவ்வாறு சீடனை புகழ்ந்துவிட்டு
அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்குகிறார்.
மரணமடையும் தன்மை
ஜீவாத்மாவிடத்தில் ( உன்னிடத்தில் ) இயல்பாகவே கிடையாது. அது தேகத்தைச் சார்ந்தது. ஆனால் மன
மயக்கத்தினால் ஆத்மாவினுடையது என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றாய். இதனால்தான்
பிறப்பும்,
இறப்பும் அதனால் துன்பங்களும் அனுபவிக்கப்படுகின்றது. இவைகள் கனவில்
தோன்றூம், அனுபவிக்கும் சுக, துக்கங்களைப் போன்று
கற்பணையானது. விழிப்பு நிலையில் அனுபவிக்கும் அனைத்தும் கனவைப் போல் பொய்யானது
என்று உணர்வு கொள்ள வேண்டும். நேரில் பார்த்து அனுபவிக்கின்ற இந்த உலகத்தை
ஆராய்ந்து பார்க்காமல் மோகத்தால் உண்மையென்று எண்ணி மயங்கி விடக்கூடாது. பகலில்
ஆந்தைக்கு இருட்டானது பிரத்யக்ஷமாக தெரிவதால் அது உண்மையாகி விடாது. அதுபோல
பிரத்யக்ஷமாக தெரிந்து கொண்டிருக்கும். உலகம் விசாரம் செய்து அறிவை அடைந்தவனுக்கு
மித்யாவாக தெரியும், அக்ஞானிகளுக்கு சத்யமாக தெரியும். பானையைப் பார்க்கும் போது உண்மையில்
களிமண்ணைத்தான் பார்க்கின்றோம். பானை
பிரத்யக்ஷமாக பார்த்தாலும் அதை ஆராய்ந்து பார்த்தோமானால் அதன் காரணமான களிமண்தான்
பானையாக தெரிந்து கொண்டு இருக்கிறது. அது பானையின் தன்மைக்கு மாறுபட்டதாக
இருக்கிறது. சூரியன் நம் கண்ணுக்கு ஒரு அடி அகலம் போல்தான் தெரிகிறது. இந்த பிரத்யக்ஷமானது வேறு பிரமாணத்தினால்
பொய்யாகி இருக்கிறது. ஆகையால் காண்பதெல்லாம் நம்முடைய மனமயக்கத்தினால் உண்மை போல
தெரிந்தாலும் அவைகள் பொய்தான். நீயே ஆனந்த ஸ்வரூபமானவன் ஒன்றானவன், இரண்டற்றதாக இருப்பவன். இதனை புத்தி கொண்டு விசாரம் செய்து அறிவை அடைந்து
கொள்.
பிரம்மமானது
வேறு உலகத்திலோ,
நீருக்குள்ளேயோ, குகைக்குள்ளேயோ
கர்மங்களுக்குள்ளேயோ, வேத சாஸ்திரங்களுக்குள்ளேயோ இல்லை.
இந்த உலகத்திலேயே நன்கு விசாரம் செய்து நான்தான் அந்த பிரம்மன் என்று உணர்ந்து
கொள்ள வேண்டும்.
ஆடு
மேய்ப்பவன் ஆட்டுக்குட்டியை தன் தோளில் மீது வைத்துக் கொண்டு தேடியலைந்து, கிணற்றில்
எட்டிப்பார்த்து ஆட்டுகுட்டியின் பிரதிபிம்பத்தை பார்த்து அங்கே இருப்பதாக
நினைக்கின்றானோ, அது போல தானே ஆத்மா என்பதை அறியாமல் அதை
எங்கெங்கோயோ தேடிப் பார்க்கிறான். மேலும்
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறென்றும் எண்ணுகிறான். ஆத்மாவை அன்னமயாதி கோசங்களில்
தேடுகின்றான். ஆத்மாவின் உண்மைத் தன்மையை
மறந்து, அதனிடத்தில் அனாத்மாவின் தர்மங்களை ஏற்றி வைத்து
சோகத்தில் உழன்று கொண்டு இருக்கின்றான். எனவே ஆத்மாவையும் அனாத்மாவையும் நன்கு
பிரித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் முறையே சொல்கிறேன். கவனமாக கேட்பாயாக. கேட்டவுடன் சம்சார பந்தத்திலிருந்து
விடுபடுவாய். இந்த பிரித்தறியும்
விவேகத்தை அத்யாரோப, அபவாத முறைப்படி பிரித்துக் காட்டி
புரிய வைக்கப்படுகிறது
கயிற்றில்
பாம்பை ஏற்றி வைப்பது போல,
ஒரு பொருளிடத்தில் வேறொன்றை ஏற்றி வைப்பது அத்யாரோபம் எனப்படுகிறது.
இங்கு முக்காலத்திலும் மாறாததும், இருத்தல் ஸ்வரூபமாகவும்,
அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்ற பிரம்மத்தின் மீது எப்படி வானத்தில்
நீல நிறத்தை ஏற்றிவைத்து பார்க்கின்றோமோ அதுபோல ஜகத்தானது ஏற்றி வைக்கப்பட்டு
பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு காரணமாக இருப்பது அக்ஞானமும், அதனுடைய காரியங்களேயாகும். இதுவே
பின்னால் இல்லை என்று நீக்கப்படும்.
எது
பிரமாணங்களினால் பாதிக்கப்படுகிறதோ, இல்லையென்று நீக்கப்படுகிறதோ
அது அவஸ்து என்று கூறுவர். எது மூன்று
காலங்களிலும் பாதிக்கப்படாமல் நிலையாக இருக்கின்றதோ. அதுவே மெய்ப்பொருளாகும்.
சிப்பியில் தோன்றும் வெள்ளியானது உண்மையான சிப்பி என்ற அறிவு வரும் போது
நீக்கப்படுகின்றதோ. ஆனால் சிப்பி எல்லாகாலத்திலும் அதுவாகவே இருக்கிறது.
சிப்பியில் தோன்றும் வெள்ளி தோன்றுவதற்கு முன் இல்லை. சிப்பி என்ற அறிவு வந்த பிறகு இல்லை. எனவே இது
அவஸ்துவாக கூறப்படுகிறது.
ஒரு
பொருளிடத்தில் இருக்கும் மித்யா தன்மையினால்தான் ஜகத்தானது பிரம்மனிடத்தில்
தோன்றிக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த அக்ஞானம் பிரம்மத்தின் ஸ்வரூப ஞானம் வந்தவுடன் சென்றுவிடுகிறது. எனவே ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றொ
சொல்ல முடிவதில்லை. எது மூன்று காலங்களிலும் இருக்கின்றதோ அதைத்தான் நிலையான, சத்யமான
பொருளாக இருக்கிறது என்று சொல்லலாம்.
ரத்தினக்
கல்லில் இருக்கும் பளபளக்கும் விசேஷமான சக்திபோல் பிரம்மத்தோடு பொய்யான சம்பந்தத்தினால் அக்ஞானமானது சார்ந்து
இருக்கிறது. ஆனால் இந்த சம்பந்தத்தால் பிரம்மத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரத்தினக்
கல்லிலிருக்கும் இந்த விசேஷமான சக்தி தனியாக காணமுடியாது. ஆனாலும் இது வேறெந்த
பொருளிலும் இல்லையென்றும் சொல்ல முடியாது.
இரண்டு பொருட்கள் வெவ்வேறாக இருந்தால் இரண்டிற்கும் இடையே சம்பந்தத்தை
சொல்ல முடியும். இப்படியில்லாத விஷயத்தில் இருக்கும் சம்பந்தம் பொய்யென்றுதானே
சொல்ல முடியும். மேலும் இந்த பொய்யான
சம்பந்தத்தால் இருக்கின்ற பொருளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கயிற்றில் தோன்றும் பாம்பினால் கயிறு விஷமுள்ளதாகி
விடாது. தூணில் தெரியும் திருடனால் எதையும் திருட முடியாது. அதுபோல அக்ஞானத்தினால் பிரம்மத்திற்கு எந்தவித
பாதிப்பும் ஏற்படாது.
இனி அக்ஞானம்
இருக்கிறது என்பதை எவ்வாறு அறியப்படுகிற்து என்பது விளக்கப்படுகிறது. அக்ஞானம்
இருக்கிறது என்பதற்கான பிரமாணம் தோன்றி இந்த ஜகத்தேயாகும். நம்முடைய அனுபவமும்
இந்த அக்ஞானம் இருக்கிறது என்பதற்கான பிரமாணங்களாகும். அக்ஞானமானது
பிரகிருதியென்றும், மாயா சக்தியென்றும், அவித்யா என்றும்
அழைக்கப்படுகிறது
இந்த அக்ஞானம்
இருக்கிறது என்றோ,
இல்லையென்றோ கூற முடியாது. சிப்பியில் தோன்றும் வெள்ளியைப் போல
சத்யமாக இருக்கும் வஸ்துவில் இருந்து வேறுபட்டதாகவும் இல்லை, வேறுபடாததாகவும் இல்லை. சிப்பியில் தோன்றும் வெள்ளி இல்லாத பதார்த்தமானால்
தோன்றாது. இருக்கின்ற பதார்த்தமானால் மறையாது.
ஆகையால் இது இரண்டு விதத்திற்கும் சேராது.
தீபத்தின் வெளிச்சம் அதைவிட்டு தனித்து இருக்க முடியாது. இருந்தாலும் அது இல்லாத இடத்திலும்
வியாபிக்கிறது. அதனால் தீபத்தை விட வேறானது என்றோ, வேறில்லையென்றோ
கூறமுடியவில்லை. விதையை ஆராய்ந்து
பார்க்கும் போது அதில் முளை தெரியவில்ல்லை.
ஆனால் அதிலிருந்து முளை வெளிக்கிளம்புகிறது. இதிலிருந்து விதையானது
முளையென்கின்ற அவயவத்துடன் கூடியது என்றோ, அவயமற்றது என்றோ
சொல்ல முடியாது. இவ்விதமே தோற்றமாகவும், சக்தியாகவும் உள்ள
அக்ஞானம் இன்னதென்று சொல்ல முடியவில்லை. இதை அனீர்வசனீயம் என்று கூறுவர்.
அக்ஞானமானது
வியஷ்டி,
சமஷ்டி என்று இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. பல மரங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதை காடு
என்கிறோம். இது சமஷ்டியாகும். தனித்தனி
மரமாக பார்க்கும்போது வியஷ்டி எனப்படுகிறது.
அதுபோல எல்லா அக்ஞானங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் சமஷ்டி என்றும்,
தனித்தனியே பார்த்தால் வியஷ்டி என்றும் கூறப்படும்.
இந்த சமஷ்டி
அக்ஞானத்தில் முக்குணங்கள் சேர்ந்து இருந்தாலும் சத்துவ குணமே உயர்ந்திருப்பதால்
அது மாயை என்று அழைக்கப்படுகிறது. மாயையை உபாதியாகக் கொண்ட பிரம்ம சைதன்யம்
மாயையில் பிரதிபலிப்பதால் சத்துவ குணம் மேலோங்கி சர்வக்ஞதன்மை, ஸர்வ
சக்திகளுடன் கூடியிருக்கும் தன்மை முதலான குணங்களுடன் கூடியதாக இருக்கும் சக்தியே
ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது, அந்த ஈஸ்வரன் எல்லா
சக்திகளோடும், குணங்களோடும் கூடியவராகவும், எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவராகவும், தனித்து
இயங்குபவராகவும் இருக்கிறார். அவருடைய
சங்கல்பம் சத்யமானது, நிறைவேறக் கூடியது. வீண்போகாத ஆசைகளை
உடையவர், மாயை ஜடமானதாக இருந்த போதிலும். அதில்
பிரதிபலிக்கும் பிரம்ம சைதன்யத்தின் சம்பந்தத்தினால் ஸர்வக்ஞதன்மை, ஸர்வ சக்தி தன்மை ஏற்படுகிறது. மாயை பிரம்மத்தின் ஸ்வரூபத்தில் சாராமல்
இருந்து கொண்டு அதை வெவ்வேறாக தோன்றும்படி செய்து கொண்டிருக்கிறது. இது
பிரம்மத்தோடு சேராமலிருந்தும், சேர்ந்து இருப்பது போல்
தோன்றுவதால் மித்யா என்று அழைக்கப்படுகிறது.
இந்த சமஷ்டி அக்ஞானமே காரண சரீரம் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சகோச
விவேகம் – 323 - 486
ஆனந்தம்
அதிகமாக இருப்பதாலும் சைதன்யத்தையே மறைக்கின்ற காரணத்தினால் இந்த சமஷ்டி அக்ஞானம் ஈஸ்வரனுடைய ஆனந்தமய கோசம்
எனப்படுகிறது. அனைத்தும் ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பதால் அந்த சமஷ்டி அக்ஞானம்
ஆழ்ந்த உறக்கநிலை என்று கருதப்படுகிறது. இந்த சமஷ்டி அக்ஞானத்தில் எல்லாரும்
ஒடுங்குகின்ற நிலையைத்தான் ப்ராக்ருத ப்ரளயம் என்று வேதம் கூறுகிறது.
வியஷ்டி
அக்ஞானத்தை உபாதியாகக் கொண்டுள்ள அந்தக்கரணத்தில் பிரதிபலிக்கும் சைதன்யமே ப்ரதியகாத்மா
என்று அழைக்கப்படுகிறது. இதுவே குறைவான சக்தி கொண்டதாகவும், சுதந்திரமற்ற
தன்மையுடையதாகவும் சம்சாரத்தை அனுபவிப்பதாகவும் உள்ளது. இதையே ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த
ஜீவனுக்கு அகங்காரம் நான் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு காரணமே வியஷ்டி
அக்ஞானம்தான். ஜீவாத்மாவுக்கு வியஷ்டி
அக்ஞானமே காரண சரீரமாகும். இந்தக் காரண சரீரத்தில் அபிமானம் கொண்டிருக்கும்
ஜீவாத்மா பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.
இந்த வியஷ்டி
அக்ஞானமானது பரமாத்மாவின் ஸ்வரூபத்தை மறைப்பதாலும், ஆனந்தம் அதிகமாக
இருப்பதாலும், ஆனந்தமய கோசம் என்று கூறப்படுகிறது. நான்
சுகமாக தூங்கினேன் எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தூக்கத்திலிருந்து விழித்துக்
கொண்டவன் என்று கூறுவதிலிருந்து தான் அனுபவித்த ஆனந்தத்தை நினைவு கூறுவதால்,
ஆழ்ந்த உறக்கத்தில் அதிக ஆனந்தம் இருக்கிறது என்பது புரிந்து
கொள்ளப்படுகிறது. ஆகையால் ஆனந்தமய கோசமென்று அழைக்கப்படுகிறது காரண சரீரத்தில்
அபிமானம் கொண்ட ஜீவாத்மாவை பிராக்ஞனுக்கு ஆழ்நிலை உறக்கம் இருப்பிடமாக இருக்கிறது.
இனி பிராக்ஞனுக்கும், ஈஸ்வரனுக்கும் ஸ்வரூபத்தில்
வேறுபட்டவர்களில்லை என்று விளக்கப்படுகிறது.
தனியாக
இருக்கின்ற மரமே கூட்டங்களாக இருந்தால் அதை காடு என்று கூறுகிறோம். இவையிரண்டிலும்
மரம் என்ற ஒரே இனம் மட்டும் இருப்பதால் இரண்டிற்கும் வேற்றுமை கிடையாது. அதேபோல
வியஷ்டி,
சமஷ்டி இரண்டு அக்ஞானமும் ஒரே இனத்தை சேர்ந்ததால் இரண்டும்
ஒன்றுதான். இவைகளை உபாதியாகக் கொண்ட
பிராக்ஞனுக்கும், ஈஸ்வரனுக்கும் வேற்றுமை கிடையாது. உபாதிகள்
இரண்டுக்கும் ஒன்றாக இருக்கும் போது அவைகளுடன் சேர்ந்து இருப்பவைகளுக்குள்ளும்
எந்த வேற்றுமையும் இருக்காது, அலைகளும் கடலும் ஒன்றாக
இருக்கும் போது அவைகளில் பிரதிபலிக்கும் பிம்பங்களும் ஒன்றாகவே இருக்கும்.
சமஷ்டி, வியஷ்டி
அக்ஞானங்களில் உள்ள பிரதிபிம்பம்தான் இவைகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற சுத்த
சைதன்யம். இதையே துரியம் என்றும் கூறுவர். காரணம், ஸ்தூல,
சூட்சுமம் என்கின்ற மூன்றினுக்கும் ஆதாரமாக இருப்பதால் சைதன்யத்தை
நான்காவது என்று கூறப்படுகிறது. இரண்டுவித உபாதிகளில் இருந்தும் அவைகளின்
குணங்களிலிருந்தும் வேறுபடாமல் இருக்கும் சைதன்யமானது மகாவாக்கியத்தில் உள்ள
சொற்களின் நேரிடையான பொருளை எடுத்துக் கொள்ளாமல் உபாதியை விடுத்த லட்சணையால்
குறிக்கப்படுகின்றது.
ஈஸ்வரனுக்கு
மாயை உபாதியாக உள்ளது. அதனால் அவரிடம்
எல்லையற்ற சக்திகள் உள்ளன. அவர் தமது
சங்கல்பம் ஒன்றினாலேயே தாவரங்களில் தொடங்கி மனிதன் வரையுள்ள எல்லாவிதமான
ரூபங்களையுடைய இந்த ப்ரபஞ்சம் முழுவதும் ஸ்ருஷ்டிக்கிறார். அவர் தனித்திருக்கிறார், ஜகத்திற்கு
உபாதான காரணாமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார்.
எப்படி சிலந்தி பூச்சியானது தன்னிடத்தில் இருந்து நூலையெடுத்து தானே வலையை
பின்னிக் கொள்கிறது. அதுபோலவே ஈஸ்வரன் காரணமாகவும், சைதன்ய
அம்சத்தைக் கொண்டு நிமித்த காரணமாகவும் ஆகிறார்.
தமோ குணத்தை
பிரதனமாகவுடைய பிரகிருதியென்ற மாயைக் கொண்டு ஆகாசம் தொடங்கி கிரமமாக வாயு, அக்னி,
நீர், நிலம் என்று தோன்றி இருக்கிறது.
காரணத்தின் குணங்களானது அதனிடமிருந்து தோன்றிய காரியங்களிலும் இருக்கும். ஜகத்தின் ஜடத்தன்மை மாயையின் தமோ குணத்தினால்தான்
வந்திருக்கிறது. இவைகளனைத்தும் சூட்சும பூதங்களாகும், இவைகளிலிருந்து,
ஸ்தூல பூதங்களும் தோன்றின. சூட்சும பூதங்களிலிருந்து சூட்சும சரீரம்
உண்டாயின. இது 17 உறுப்புக்களை
கொண்டது. இவைகளே பிறப்பு, இறப்பு
என்கின்ற சம்சார துயரத்தை அனுபவிப்பதிற்கு காரணங்களாகும். காது, தோல், கண், காது, மூக்கு ஆகிய ஐந்து
ஞானேந்திரியங்களும், வாக்கு, கை,
கால், பாயு, உபஸ்தம்
ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும், பிராணன், அபாணன், வியானன், சமானன்,
உதானன் ஆதிய ஐந்து பிராணன்களும் புத்தி, மனம்
ஆகிய இரண்டோது சேர்ந்து 17 உறுப்புகளாகும்.
இவையனைத்தையும் ஒன்று சேர்ந்ததையே லிங்க சரீரம் எனப்படுகின்றது. ஞானேந்திரியங்கள் ஆகாசம் முதலிய ஐந்து
பூதங்களிலும் உள்ள ஐந்து சத்துவ அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அந்தகரணம்
தோன்றியிருக்கின்றன. ஞானேந்திரியங்கள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் அவைகள் சத்துவ
குணத்திலிருந்துதான் தோன்றியிருக்கக்கூடும் என்று உறுதி செய்து கொள்ளலாம்.
அந்தக்கரணம்
செயல்களின் பொறுத்து மனம்,
புத்தி, அகங்காரம், சித்தம்
என்று அழைக்கப்படுகிறது. சித்தத்தை மனதோடு சேர்த்தும், அகங்காரத்தை
புத்தியோடு சேர்த்தும் மனம், புத்தி என்ற இரண்டு மட்டுமே
குறிப்பிடலாம்.
ஆலோசனை
செய்கின்ற காரணத்தினால் மனமென்றும், முடிவெடுக்கும் திறன் உடையதால்
புத்தியென்றும் நான் என்ற அபிமானம் செய்வதால் அகங்காரமென்றும், விஷயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதால் சித்தம் என்றும் அந்தகரணமானது
நான்காக பிரிக்கப்பட்டிருக்கிறது. எப்படி ஆலோசனை செய்வது மனதின் தர்மமோ அப்படியோ
நினைத்துப் பார்ப்பதும் மனோதர்மம்தான். ஆகையால் சித்தத்தை மனதில் அடக்குவதுதான்
சரியானது. தேகம் முதலானதில் நான் என்கின்ற உறுதியான எண்ணம் புத்திக்குத்தான்
காணப்படுகிறது. ஆகையால் இந்த புத்தியில் நான் என்கின்ற அகங்காரம்
சேர்க்கப்படுகிறது. புத்தியால் தேகாதிகளை நான் என்று அபிமானிப்பதால்
சர்த்தாவாகவும், சங்கல்ப முதலியவைகளை செய்யும் மனதை
கரணமாகவும் இருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்துதான் அக்ஞானியை சம்சாரத்தில்
வைத்திருக்கிறது.
புத்தியுடன்
ஞானேந்திரியங்களுடன் கூடியது விக்ஞானமய கோசமாகும். இந்த ஆறு கரணங்களாலும் விஷய ஞானம்
ஏற்படுவதாலும் இவை ஆத்ம ஸ்வரூபத்தை மறைக்கும் போர்வை போல இருப்பதாலும், இதற்கு
விக்ஞானமய கோசம் என்ற பெயர் வந்தது. இதில்தான் நான் தேகம் என்ற எண்ணமும், அனைத்து காரியங்களாகவும் செய்கிறது. சுக, துக்க சம்சாரத்தில் வைத்திருப்பதும்
இதுதான். இது தேகம், புலன்கள் முதலியவற்றில் நான்
என்கின்ற எண்ணத்தையும், வீடு, மனைவி,
சொத்து ஆகியவற்றில் என்னுடையது என்ற அபிமானமும்
கொள்கின்றான். தன்னை ஜீவன் என்று எண்ணுகிறவனும் இவனே. செயல்களைச் செய்பவனும்,
அதன் பலன்களை அனுபவிப்பவனும் இவனே. முற்பிறவிகளில் செய்த
கர்மாக்களால் சேர்க்கப்பட்ட பாவ-புண்ணியங்கள் பலனாக இந்த பிறவியில்
இன்ப-துன்பங்களை அனுபவிக்கும்படியும்,
நல்லது, கெட்ட செயல்களை
செய்யும்படியும் தூண்டப்-படுகிறான்.
இவ்வாறு இந்த
ஜீவன் பல்லாயிரக்கணக்கான பிறவிகளில் பிறப்பு, இறப்பு என்கின்ற சம்சார
சுழலில் சிக்கி தவிக்கின்றான். இதுவரை விக்ஞானமய கோசம் விளக்கப்பட்டது. இனி மனோமய
கோசம் விளக்கப்படுகிறது.
ஞானேந்திரியங்களுடன்
சேர்ந்த மனமே மனோமய கோசமாகும். இதில் மனம்
சம்பந்தப்பட்டதான செயல்கள் நடைபெறுவதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. கவலை,
துயரம், மகிழ்ச்சி முதலியவைகளும், ஆசை முதலியவைகளும் மனதினுடைய காரியங்களாகும்.
வெளியிலுள்ள பொருட்களினால் கிடைக்கும் சுகத்தைப் பற்றிய எண்ணம் மனதில்
தோன்றுகிற்து. பிறகு அவைகளை அடைய வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. பிறகு ஆசை நிறைவேறுவதற்காக அவைகளை அடைய வேண்டிய
ஆசை பிறக்கிறது. பிறகு அதை நிறைவேறுவதற்காக அவைகளை அடைய வேண்டிய செயல்களை செய்து
அடைந்து அனுபவிக்கிறான். ஆதலால் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் மனம்தான் என்று
தெளிவாக தெரிகிறது.
ஜீவன்
உள்ளேயும், வெளியேயும் உள்ள விஷயங்களை மனதில் கொண்டு வந்துதான் அறிவை
அடைகிறான். கேட்பது, பார்ப்பது, தொடுவது,
முகர்வது, ருசிப்பது, பேசுவது இவையெல்லாம் மனதின் துணையோடுதான்
அனுபவிக்கிறோம். சமாதி நிலையிலும்,
ஆழ்நிலை உறக்கத்திலும் மனம் ஒடுங்கியிருக்கும்போது ஒன்றும் அறிவில்லாத
அனுபவிப்பதுமில்லை. மனம் வேறொன்றில்
லயித்திருக்கும்போது ஒன்றும் அறிவில்லை, அனுபவிப்பதுமில்லை. மனம் வேறொன்றில்
லயித்திருக்கும் போது கண்கள் திறந்திருந்தும் பார்ப்பதில்லை, காதால் எதையும்
கேட்பதில்லை. இது போலவே மற்றவைகளும் என்று புரிந்து கொள்ளலாம். கண் பார்த்துக் கொண்டு இருந்தாலும் மனம் அதனோடு
சேராமலிருந்தால் எந்த அறிவையும் அடைவது இல்லை.
இதிலிருந்து மனமே எல்லாவற்றிற்கும் காரணமென்று புரிந்து கொள்ளலாம்.
மனிதனுக்கு
பந்தமும், மோட்சமும் மனதால்தான் ஏற்படுகிறது.
அவ்விதமே புருஷார்த்தமும், துன்பங்களும் கூட மனதால்தான் உண்டாகிறது. மனத்தூய்மை மோட்ச பாதைக்கு அழைத்து சென்று அதை
அடையச் செய்யும் அழுக்கடைந்து இருக்கும்போது பந்தம் ஏற்படுகின்றது. ஆத்ம, அனாத்மா
விவேகம் புருஷார்தத்தை அடைய செய்யும், இந்த விவேகம் இல்லாததும் சம்சாரத்திலேயே
இருந்து கொண்டு துயருற்று கொண்டிருப்பான்.
ரஜோகுணம்
விக்ஷேபத்தை உண்டு பண்ணுகின்ற இயல்புடையது, ரஜோ குணத்தின் தோஷங்கள் மனதில்
இருக்குமானால், காமம் போன்றவைகள் மனதைப்பற்றிக் கொண்டு
துயரத்தில் ஆழ்த்திவிடும். எப்போதாவது
சூட்சுமமான விஷயங்களை அறிய மனம் முற்பட்ட போதிலும் அதனால் உறுதியாக அந்த நிலையில்
இருக்க முடிவதில்லை. பலமான காற்றினால்
அலைபாய்கின்ற தீபத்திலிருந்து வருகின்ற வெளிச்சமானது மங்கி இருக்குமோ அதுபோல
மனதின் சக்தியும் மங்கிவிடுகிறது.
ஆகயால்
முமுக்ஷுவாக இருப்பவன் சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை அடையும் பொருட்டு
மனதிலுள்ள ரஜோ,
தமோ குணங்களின் காரியங்களை அடியோடு விலக்கி விட்டு அவைகள் மீண்டும்
தலைதூக்காமல் கவனத்துடன் இருந்து கொண்டு சத்துவ குண மேலோங்கிய நிலையிலே உறுதியாக
இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அறிவுள்ளவன் புலனுகர் போகப் பொருட்களிலும்,
விஷயங்களிலும் மறைந்து இருக்கின்ற குறைகளை நினைத்துப் பார்த்து
அவைகளின் மீது ஆசை ஏற்படாதபடி மனதை வைத்திருக்க வேண்டியதால் எப்பொழுது சத்துவ குண
மேலோங்கிய நிலையிலே மனதை வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில்தான் ஆத்ம தத்துவத்தை
புரிந்து கொள்ளும் சக்தியை பெற்றிருக்கும். இத்தகைய மனமே முக்தியை அடைவதற்கு
கரணமாக இருப்பதால் மனதை இவ்வாறு வைத்திருக்க பின்பற்ற வேண்டிய வழிகள்
கூறப்படுகிறது.
யாரொருவன்
யமம், நியமம், என்ற இந்த இரண்டுவித சாதனங்களை தனது
சுபாவமாக கொண்டு விடுகின்றானோ அவனுதைய மனது நுட்பமான விஷயத்தை புரிந்து கொள்ளும்
சக்தி உடையதாகி விடுகின்றது. யாரொருவன் மோட்ச அடைய வேண்டும் என்ற ஒரே
குறிக்கோளுடன் தீய குணங்களை எல்லாம் நீக்கிவிட்டு நற்குணங்களை அடைகின்ற அவனுடைய
மனதும் இந்த தகுதியை அடைகின்றது. பொதுவாக
எந்த குணங்களெல்லாம் நம்மை சம்சார பந்தத்திலேயே வைத்திருக்கின்றதோ அவைகளனைத்தும்
தீயகுணங்கள், எவையெல்லாம் சம்சார விடுதலைக்கு பயன்படுகின்றதோ
அவைகள் நற்குணங்களாகும். பிறர் பொருள் ஆசை கொள்ளாமலும், பிறருக்கு
தீங்கு செய்யாமலும், நிந்திக்காமலும் இருப்பவனுடைய மனதும்
மிகத் தெளிவாக இருக்கும், யாரொருவன் மற்றவர்களின் சுக,
துக்கங்களையும் தன்னுடையது போலவே பார்க்கின்றானோ, பொறுமையுடன் மிக சிரத்தையுடன் குருவையும், இறைவனையும்
எப்பொழுதும் வணங்குகின்றானோ அவனுடைய மனதும் தெளிவாக இருக்கும். சாஸ்திரம் விதித்த நியதிப்படி கூடிய உணவையும்,
இறைவனை வழிபடுவது, மகான்களுக்கு சேவை செய்வது, புண்ணிய
ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தன்னுடைய ஆசிரம தர்மங்களை சரிவர
கடைப்பிடித்துக் கொண்டு வாழ்வது. யம, நியமங்கள்படி வாழ்வது.
இவையெல்லாம் மனத்தெளிவடைவதற்கு உதவுகின்ற சாதனங்கள் என்று மகான்களால்
கூறப்பட்டிருக்கிறது.
அதிகமான
கசப்பு, புளிப்பு, உப்பு, சூடு,
உரைப்பு, காய்ந்த எரிச்சலை உண்டு பண்ணக்கூடிய
ராஜஸமான உணவுகளையும், அழுகின, நாட்பட்ட
உணவுகளான தாமஸமான உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பவனுக்கு சத்துவகுணம் மேலோங்கும். சாத்வீகமான புராண கதைகளைக் கேட்பதனாலும்,
சாத்விகமான பொருட்களை மனதில் சாத்விகமான எண்ணங்கள்
உண்டாகின்றது. யாருடைய மனம் உலக
விஷயங்களில் ஆசைக் கொள்ளாமலும் அதைப் பற்றி சிந்திக்காமல், காமக்ரோதாதிகளால்
கொதிக்காமல், குளிர்ந்து இருக்கிறதோ அவனை எல்லோரும் நேசிப்பார்கள்.
அவனுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.
உடலுக்கும், மனதுக்கும்
சுகத்தை தருகின்ற சாஸ்திரத்தில் உரைக்கப்பட்ட அளவுப்படி சாப்பிட வேண்டும். அதிக
காலம் தனிமையில் இருக்க வேண்டும். பிறர் மனம் நோகாதபடியும், இதமாக
பேச வேண்டும். சொன்னதையே திருப்பி திருப்பி கூறிக் கொண்டிருக்கக்கூடாது. அதிக தூக்கமும், அலைச்சலும்
கூடாது. மனதையும், புலன்களை
கட்டுபடுத்தி கொண்டு தன்னுடைய கடமைகளை காலம் தவறாமல் செய்துவர வேண்டும். இவ்வாறு
வாழ்பவனுக்கு மனம் விரைவில் ஒருமுகப்படும், தெளிவடையும்.
மனம் தூய்மையாக இல்லாவிட்டால் சம்சார பந்தத்தையும் அறிய முடியாது. மேலான ஆத்ம
தத்துவத்தையும் அறிய முடியாது. ஆத்ம ஞானத்தை அடையாமல் மோட்சத்தை
அடையமுடியாது. மனத்தூய்மையற்ற நிலையே
பந்தத்திற்கு காரணமாகும். மனத்தூய்மை அடைந்து
ஞானயோக சாதனத்தை பயன்படுத்துவதற்கு தகுதியடைந்து ஞானத்தை அடைந்து பந்தத்திலிருந்து
நீங்கி விடலாம். அதனால் சாதகன் தன்னுடைய மனதிலுள்ள அழுக்குகளான அசுரகுணங்களை
நீக்கிவிட வேண்டும். இதனால் மனோமய கோசத்தை நீக்கிவிட முடியும்.
இனி பிராணமய
கோசமானது விளக்கப்படுகிறது. ஆகாசம் முதலான ஐந்து பூதங்களுடைய ரஜோ அம்சத்திலிருந்து
ஐந்து பிராணன்கள் உண்டாயின. வெளியே செல்கின்ற பிராணன் என்றும், கீழே
செல்லும் சுபாவத்தை உடையது அபானன் என்றும், நாலா
பக்கங்களிலும் செல்வதால் வியானன் என்றும், மேலே
செல்லக்கூடியதாக இருப்பதால் உதானன் என்றும், சாப்பிட்ட
அன்னம், ரஸம் முதலானவைகளை உடலிலுள்ள எல்லா
உறுப்புக்களுக்கும் கொண்டு செல்வதால் சமானன் என்றும் பிராணனானது ஐந்து வகையாக
பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிராணன்
முதலான ஐந்தும், ஐந்து கர்மேந்திரியங்களும் சேர்ந்ததே
பிராணமய கோசமாகும். இதனால்தான் ஸ்தூல உடல்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வாக்கு
முதலியவைகளாலும் தேகத்தால் செய்யப்படும் பாவ-புண்ணியங்களைக் கொடுக்கக்கூடிய
செயல்களை செய்வது பிராணமய கோசத்தின் காரியமாகும்.
காற்று
வீசும் போது மரம் அசைகிறது. காற்றில்லாதபோது மரங்கள் அசைவதில்லை. அதுபோல பிராணனாலும், கர்மேந்திரியங்களின்
தூண்டுதலாலும் தேகம் நல்லது, கெட்டதுமான காரியங்களை செய்ய வைக்கின்றது. இதுவரை விளக்கப்பட்ட விக்ஞானமய கோசம், மனோமய
கோசம், பிராணமய கோசம் மூன்றும் சேர்ந்து சூட்சும சரீரம் என்றும், லிங்க சரீரம்
என்றும் சொல்லப்பட்டது. அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் இனி கூறப்படுகிறது.
இந்த மூன்று
கோசங்களும் ஆத்மாவின் சூட்சும சரீரமாகும், மிகவும் சூட்சுமமாக
இருப்பதாலும், மறைந்திருக்கும் ஆத்மாவை காட்டிக் கொடுக்கும்
காரணத்தினால் இது லிங்க சரீரம் என்றூம் கூறப்படுகிறது. இது ஸ்தூல சரீரத்தின் அடிப்படையில் இவ்வாறு
அழைக்கப்படுகிறது. எல்லா சூட்சும சரீரங்களும்
ஒன்றாக பார்த்தால் அதுவே சமஷ்டி சூட்சும சரீரமாகும். இந்த சமஷ்டி சூட்சும சரீரத்தை
உபாதியாக உடைய சைதன்யம் பிரதிபிம்பமே ஹிரண்யகர்ப்பன் என்றும், சூத்ராத்மா என்றும் கூறப்படுகிறது.
புத்தியில் தங்கம் போல பிரகாசித்துக் கொண்டிருப்பதால் இந்த ஹிரண்யகர்ப்பன்
என்ற வந்திருக்கிறது. ரத்தின மாலையில் ரத்தினங்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கின்ற
நூலைப்போல எல்லா சூட்சும சரீரங்களுக்குள்ளும் ஊடுருவி இருப்பதால் சூத்ராத்மா என்ற
பெயரும், ஜீவிக்கும்படி செய்வதால் பிராணன் என்ற பெயரும்
இவருக்கும் வந்திருக்கிறது.
சூட்சும
சரீரங்களை தனித்தனியாக பார்க்கும் போது, வியஷ்டி சூட்சும சரீரம் என்ற
அழைக்கப்படுகிறது. இந்த வியஷ்டி சரீரத்தோடு கூடிய சைதன்யம் பிரதிபிம்பமே
தைஜஸனென்று அழைக்கப்படுகிறது. அந்தக்கரணம்
உபாதியாக இருப்பதால் தைஜஸன் என்ற பெயர் வந்திருக்கிறது. இது ஸ்தூல சரீரத்தை விட சூட்சுமமாக இருப்பதால்
ஜீவனுடைய சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஜீவனுக்கு ஜாக்ரத் காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் எண்ணப்பதிவுகளாக
இதில் நிறைந்திருப்பதால் இது ஜீவனுடைய சரீரம் என்று சொல்லப்படுகிறது
விழிப்பு
நிலையில் அனுபவிக்க விஷயங்களை கனவு நிலையில் தைஜஸன் விருத்திகளால்
அனுபவிக்கின்றான். காரண சரீரம் போலவே சமஷ்டி சூட்சும சரீரம், வியஷ்டி
சூட்சும சரீரம் இவற்றில் சூட்சும தன்மை ஒன்றாக இருப்பதால் இவை இரண்டிற்கும்
வேற்றுமை கிடையாது. இது போலவே சமஷ்டி சரீர அபிமானியான ஹிரணயகர்ப்பனும், வியஷ்டி சரீர அபிமானியான தைஜஸனும் ஒன்றுதான் என்று நிரூபணமாகின்றது.
ஆகாசம் முதலான
சூட்சும பூதங்களிலிருந்து ஒன்றோடொன்று பஞ்சீகரண முறையில் சேர்க்கப்பட்டு ஸ்தூல
பூதங்களாக தோன்றின. ஆகாசம் சப்த
குணத்தையும்,
வாயுவில் சப்தம், ஸ்பரிசம் ஆகிய குணங்களும்,
அக்னியில் சப்தம், ஸ்பரிசம், ஒளி என்ற மூன்று குணங்களையும், நீரில் சப்தம், ஸ்பரிசம், ஒளி, சுவை என்கின்ற
நான்கு குணங்களையும், நிலத்தில் சப்தம், ஸ்பரிசம், ஒளி, சுவை, வாசனை ஆகிய ஐந்து குணங்களையும் உடையதாக இருக்கிறது.
பூதங்கள்
|
ஞானேந்திரியங்கள்
|
கர்மேந்திரியங்கள்
|
ஆகாசம்
|
கேட்கும்
சக்தி - காது
|
பேசும்
சக்தி - வாய்
|
வாயு
|
தொட்டுணரும்
சக்தி - தோல்
|
செல்லுதல்
போன்ற செயல்கள் - கால்கள்
|
அக்னி
|
பார்க்கும்
சக்தி - கண்கள்
|
தூக்குதல்
போன்ற செயல்கள் - கைகள்
|
நீர்
|
சுவைக்கும்
சக்தி - நாக்கு
|
ரேதஸ்
போன்ற நீர்வகைகளை வெளியேற்றுதல்- உபஸ்தம்
|
நிலம்
|
நுகர்ந்துணரும்
சக்தி - மூக்கு
|
மலம்
போன்ற திடப்பொருட்களை வெளியேற்றுகின்ற சக்தி - குதம்
|
முற்பிறவிகளில்
செய்த செயல்களினால் சேர்ந்திருக்கும் பாவ-புண்ணியங்களை பொறுத்து ராஜஸ, தாமஸ,
சத்துவ காரியங்களில் மனம் ஈடுபடுகிறது. மனதை அனுசரித்தே புலன்களால் பாவ,புண்ணியத்தை
தருகின்ற செயல்கள் செய்யப்படுகிறது.
புத்தியானது
நானே கர்த்தா என்ற அபிமானத்தை ஏற்படுத்துகிறது.
ஆத்மாவோ ஒன்றையும் செய்வது கிடையாது.
நதியின் பிரவாகத்தை வேடிக்கை பார்க்கின்றவனை போல ஆத்மா புலன்களால்
செய்யப்படும் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அகங்காரம்தான்
பார்க்கின்றவனாகவும், கேட்கின்றவனாகவும், பேசுகின்றவனாகவும் இருக்கிறது. ஆத்மா
இவ்வித மாறுதல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு அவைகளில் பற்றில்லாமல் இருக்கிறது.
எப்படி உலகத்திலுள்ள ஜீவன்கள் செயல்படுவதை சூரியன் சாட்சியாக மட்டும் பார்த்துக்
கொன்டிருக்கிறது அதுபோல ஆத்மா சாட்சியாக மட்டும் இருக்கிறது. சூரியன் உதயமானதும்
அனைத்து ஜீவராசிகளும் தத்தம் கடமைகளை தாமே செய்யத் தொடங்குகிறார்கள். சூரியன்
அவைகளை செய்ய தூண்டுவதில்லை. அதுபோல உள்ளேயிருக்கும் ஆத்மாவும் இயல்பாகவே
செயலெதுவும் செய்யாமல்,
தேகம் முதலானவைகள் செயல்களை செய்யும்போது சாட்சியாக மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறது. உடல், மனம், புலன்கள் யாவும் ஏதோவொரு செயலை செய்து கொண்டிருப்பதை வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் ஜீவர்கள்
மாயையால் மறைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆத்மாவின் ஸ்வரூபத்தை விசாரம்
செய்து அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.. அக்ஞானத்தால் ஆத்மாதான் அனைத்தும்
செய்கின்ற காரியங்களை எல்லாம் செய்கிறது என்று தவறாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் உண்மையில் ஆத்மா எதனோடும் சேராதது, தனித்திருப்பது,
சைதன்ய அறிவு ஸ்வரூபமானது, செயல்களற்றது,
ஆகாயத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும்போது சந்திரனும் நகர்வது போல
தவறாக தெரிகின்றதோ அதுபோல அனாத்மாவின் செயல்கள் ஆத்மா செய்வதாக தவறாக
எண்ணுகிறார்கள்.
ஆத்மஸ்வரூபம்
விளக்கிவிட்டு ஸ்ருஷ்டி கிரமமானது மீண்டும் சொல்லப்படுகிறது. ஆத்மாவையும், அனாத்மாவையும்
பிரித்துப் பார்க்க இந்த விளக்கம் கொடுக்கப்படுகிறது. பஞ்சீகரணம் செய்யப்பட்ட
ஆகாசம் முதலான பூதங்களிலிருந்து ஈஸ்வரனுடைய சங்கல்பத்தினால், அசைகின்றதும் அசையாததுமான பொருட்களடங்கிய இந்த ஸ்தூலமான பிரம்மாண்டம்
உருவாக்கப்பட்டது. தானியங்கள், காற்று, சூரிய ஒளி, சந்திர ஒளி,
நீர், மண், இலை, புல், மாமிசம் போன்றவைகள் அன்னமாக உட்கொண்டு
ஜீவிக்கின்ற ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஜீவர்களின் பிராரப்தத்தின் விளைவாக
நான்குவிதமாக பிறக்கின்றார்கள். அவைகள் கருவிலிருந்தும், வியர்வை
போன்ற நிரிலிருந்தும், முட்டையிலிருந்தும், பூமியை பிளந்து கொண்டு பிறக்கின்ற ஜீவராசிகள். மனிதர்கள், விலங்குகள் கருவிலிருந்தும், பறவைகள்
முட்டையிலிருந்தும், வியர்வை போன்ற நீரிலிருந்து தோன்றீய
புழு, பூச்சிகளும், பூமியிலிருந்து
தாவரங்களும் பிறக்கின்றன. இதுவரை வியஷ்டி
ஸ்தூல சரீரத்தைப் பற்றி கூறப்பட்டன. இனி சமஷ்டி ஸ்தூல சரீரம் சொல்லப்படுகிறது. சமஷ்டி ஸ்தூல சரீரத்தினால் வரையறுக்கப்பட்டு
இருக்கும் சைதன்ய பிரதிபிம்பமே வைசுவாநரன் என்றும், விராட்
என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா பிராணிகளிடத்திலும் தான் என்று அபிமானிப்பதல்
வைசுவாநரம் என்றும், தானே பலவிதமாக பிரகாசிப்பதால் விராட்
என்றும் அழைக்கப்படுகிறார். வியஷ்டி ஸ்தூல சரீரத்தை உபாதியாகக் கொண்ட சைதன்ய
பிரதிபிம்பமே விஸ்வன் என்று அழைக்கப்படுகின்றது. எல்லா ஸ்தூல சரீரங்களிலும்
தனித்தனியாக நான் என்று அபிமானிப்பதால் விஸ்வன் என்று பொருட் கொள்ளப்படுகிறது.
இந்த விஸ்வத்தினுடைய வியஷ்டி ஸ்தூல
சரீரம்தான் அன்னமாக மாறுபடுவதால் இது அன்னமய கோசம் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள் உட்கொண்ட அன்னத்தின்
ரேதஸிலிருந்தும், ரத்தத்திலிருந்தும் உண்டானது, அன்னத்தால் வளர்கிறது, அன்னமில்லாதபோது
அழிந்துவிடுகிறது. அன்னத்தின் விகாரமாக இருப்பதால் இதற்கு அன்னமய கோசம் என்று
பெயர்.
ஜீவர்களுக்கு
ஸ்தூலமான விஷயங்களை அனுபவிக்க இருப்பிடமாக, ஆதாரமாக அன்னமய கோசம்
இருப்பதாக கருதப்படுகிறது. ஜீவாத்மா இந்த ஸ்தூல சரீரத்தில் இருந்து கொண்டு
வெளியேயுள்ள சப்தம் போன்ற ஸ்தூலமாக விஷயங்களை அனுபவிக்கின்றான். ஆகையால் இது
ஸ்தூலமான விஷய யோகங்களுக்கு இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஜீவாத்மாதான் தேகம், புலன்கள், மனம் இவைகளுடன் சேர்ந்து வெளி விஷயங்களை
அனுபவிக்கின்றான். இவனுக்கு பதினோரு வாயில்கள்(கண்கள், மூக்கு
துவாரங்கள், வாய், உபஸ்தம், குதம், தொப்புள், பிரஹ்மந்திரம்)
உள்ள சரீரத்தில் மகாராஜாவைப் போல இருக்கின்றான்.
புலனகளின் கூட்டங்களால் சேவிக்கப்பட்டு, உபாதியான
அந்தக்கரணத்தின் துணைக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கின்றான். காது முதலான
ஞானேந்திரியங்கள், வாக்கு முதலான கர்மேந்திரியங்கள் அப்படியே
மனம் முதலானவைகள் தத்தம் அதிஷ்டான தேவதைகளால் ஏவப்பட்டு தத்தம் காரியத்தில்
ஈடுபட்டவைகளாக இருந்து கொண்டு வேலையாட்களைப்போல ஆத்மாவை சேவிக்கின்றான்.
எப்போது
ஸ்தூலமான விஷயங்களை நான்,
என்னுடையது என்று நினைக்கிறானோ அப்போது உள்ள நிலையே விழிப்பு
நிலையாகும். இந்த சமஷ்டி ஸ்தூல சரீரத்தை
அபிமானிக்கும் விராட்டுக்கும், வியஷ்டி ஸ்தூல சரீரத்தை
அபிமானிக்கும் விஸ்வனுக்கும் இடையே எந்த வேற்றுமையும் கிடையாது
இதுவரை
கூறப்பட்ட ஸ்தூல,
சூட்சும, காரணம் என்ற பெயருடைய ஜகத்துக்கள்
எல்லாமே சேர்ந்து ஒரு பெரிய பிரபஞ்சம் என்று கூறப்படுகிறது. இந்த மகபிரபஞ்சத்துடன்
கூடியிருக்கும், விஸ்வம், தைஜஸன்,
ப்ராக்ஞன், விராட்,
ஹிரண்யகர்ப்பன், ஈஸ்வரன் என்று பலவாகத் தோன்றும் சைதன்யமும்
உண்மையில் ஒன்றுதான்.
தொடக்கமும், முடிவுமில்லாததும்
புலன்களால் கிரகிக்க முடியாததும், பிறப்பற்றதும், அழிவற்றதுமாக இருக்கின்ற சுதன்யம் பழுக்க காய்ச்சிய இரும்பில் தோன்றும்
நெருப்பைப்போல பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கப்படாமல் இருக்கிறதோ அது "இது
எல்லாம் பிரம்மமே ( ஸர்வம் கலு இத3ம் ப்3ரஹ்மம்) என்ற மகாவாக்கியத்தினுடைய
நேரிடையான பொருளாகும்.
பிரபஞ்சத்திலிருந்து பிரித்து தனிப்பட்ட சுத்த சைதன்யம் என்பது லட்சணையால்
குறிக்கப்படும் பொருள் என்றும் கூறப்படுகிறது
எனவே
காரிய-காரணமாக இருக்கும் ஸ்தூல முதல் அக்ஞானம் முடிய உள்ள அறியக்கூடிய
பொருட்களெல்லாம் அனாத்மாவே ஆத்மாவல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த சைதன்யம் அந்தக் கரணத்தையும், அவைகளின்
செயல்பாடுகளையும் சாட்சியாக மட்டும் பார்த்து கொண்டிருக்கிறதோ, நிலையானதாகவும், மாற்றமில்லாததாகவும் உள்ள அந்த
சைதன்யமே ஆத்மாவென்று அறிந்து கொள்வாயாக.
எல்லா
ஜீவராசிகளுக்குள்ளே இருக்கின்ற இந்த ஆத்மாவானது தானே பிரகாசித்துக் கொண்டிருப்பது, அவயவங்களற்றது,
எதனோடும் ஒட்டிக் கொள்ளாதது, பற்றற்றது,
தூய்மையானது, குறைகளற்றது, என்றென்றும் மாறாத ஒரே சுபாவமுடையது, நித்யாமாகவும்,
பூரணமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் இருப்பது,
சாட்சியாக இருப்பது, தனித்திருப்பது, குணங்களற்றது, இது பிறப்பதும் இல்லை, வளர்வதும் இல்லை, தேய்வதும் இல்லை, அழிவற்றது, பழமையாகவும் இருக்கக்கூடியது, புதியதாகவும் இருக்கக்கூடியது.
சரீரத்திற்கு வருகின்ற நலம், கேடுகளால்
பாதிக்கப்படாதது.
பிறப்பு, இருத்தல்,
வளர்தல், மாறுதல், குறைதல்,
அழிதல் என்கின்ற ஆறுவித மாறுதல்களும், அறியப்படும்
பொருட்களுக்குத்தான் உண்டு. பலவிதமான
வியாதிகள், பௌதீக மாற்றங்கள், நிறம்,
ஜாதி, ஆசிரமம் முதலியவைகள் சரீரத்திற்குத்தான்
உண்டு. அவைகளை சாட்சியாக பார்த்து கொண்டிருக்கின்ற ஆத்மாவிற்கு கிடையாது
அக்ஞானத்தால்
ஜீவர்கள் அனாத்மாவின் தர்மங்களை ஆத்மாவில் ஏற்றி வைத்து சம்சாரத்திலே உழன்று
கொண்டிருக்கிரார்கள். ஆத்மாவை
அனாத்மாகவும், அனாத்மாவை ஆத்மாவாகவும் காண்பது மதிமயக்கத்தினால் ஏற்படுகின்ற தவறான
அறிவு. இது மோகத்தின் வசத்தினால் உண்மையை அறிகின்ற சக்தியில்லாததால் ஏற்படுகிறது.
இந்த தவறான ஞானத்தால் ஆத்மாவை மனிதனாகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும், துயரத்தை
அனுபவிப்பனாகவும், இன்னும் பற்பலவிதமான காண்கிறார்கள்.
பிறப்பு, மூப்பு,
மரணம், பசி, தாகம்,
சுகம், துக்கம், பயம்
முதலான தர்மங்கள் அனாத்மாக்களைச் சேர்ந்தவை. ஆத்மாவுக்கு இத்தகைய மாற்றங்கள்
கிடையாது என்றாலும் புத்தியில் உள்ள குறையால் எதிர்மாறாக இவைகள் ஆத்மாவில்
இருப்பதாக எண்ணுகிறார்கள். மதி மயக்கத்தால் ஒன்றில் வேறொன்றை வைத்தாலும், அதனுடைய குணங்களாலோ, குறைகளாலோ ஆதாரமாக இருக்கின்ற
ஆத்மாவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.
பாலைவன நிலத்தில் காணப்படுகின்ற நீரால் அந்த நிலம் நனைவதில்லை. காமாலை நோயால் பாதிக்கபட்டவனுடைய கண்களால்
பார்ப்பவைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக இருந்தாலும், உண்மையிலே
அவைகள் தத்தம் இயல்பான நிறங்களை இழப்பதில்லை. ஆகாயம் நீல நிறமாக பார்த்தாலும்
உண்மையில் அது அவ்வாறாக இல்லை. அதுபோல,
ஆத்மாவை அனாத்மாவாக பார்த்தாலும், அனாத்மாவின்
தர்மங்கள் ஆத்மாவை பாதிப்பதில்லை.
ஸ்லோகங்கள் 487-501 – சீடனின்
கேள்விகள்
இந்த
விஷயத்தில் சீடனுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. கிளிஞ்சலை வெள்ளியென்று நினைக்கும்
போது கிளிஞ்சல் தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒன்று நம் முன்னே தெரிகிறது. அதுபோல
ஆத்மா நம் முன்னே இது என்றாவது தெரிகின்றதா? வெள்ளியென்று தவறாக நினைத்தாலும் அதை இதற்கு முன்பு பார்த்திருந்தால்தான்
இவ்வாறு தவறாக கூட நினைக்க தோன்றும். அதுபோல ஜகத் எங்கேயாவது சத்யமாக இருந்து
அனுபவிக்கப் பட்டிருக்கின்றதா? மேலும் கிளிஞ்சலுக்கும்,
வெள்ளிக்கும் இடையே பளபளப்பு என்கின்ற தன்மை சமமாக இருப்பதால்
இவ்வாறு தவறாக நினைக்க முடிகிறது. இவ்வாறு
ஒரே குணமுடைய இரண்டு பொருட்களை பார்த்திருந்தால்தான் ஒன்றில் வேறொன்றை தவறாக
பார்க்க முடியும். ஆனால் ஆத்மாவை
பார்த்ததே கிடையாது. பிறகு எப்படி அனாத்மாவை ஆத்மாவாக பார்க்க முடியும்? அனாத்மாவில் ஆத்மா எப்படி ஏற்றி வைக்கப்படுகின்றது? அதை
எப்படி ஆத்ம ஞானமானது நீக்குகிறது. மேலும் அக்ஞானம் சமஷ்டி உபாதியாக் ஈஸ்வரன்,
வியஷ்டி உபாதியாக ஜீவனிடத்திலும் இருக்கும் போது ஜீவன் மட்டும்
எவ்வாறு சம்சரத்தை அனுபவிக்கிறான். ஈஸ்வரனுக்கு எப்படி சம்சாரம் இல்லை? இந்த சந்தேகங்களையெல்லாம் முற்றிலுமாக நீங்கும்படி உள்ளங்கை நெல்லிக்கனி
போல பதில் கூற வேண்டும் என்று குருவிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறான்
ஸ்லோகங்கள் 502-609 – குருவின்
பதில்கள்
நான் என்று
சொல்லும்போது நாம் ஆத்மாவைத்தான் நம்மையறியாமலே குறிப்பிடுகிறோம். ஆகவே ஆத்மா அறியப்படாததாக இல்லை. அனைவருக்கும் தன்னுடைய விஷயத்தில் எந்த
பிரமாணமும் தேவையில்லை. பிரமாணங்களுக்கு எல்லாம் அறிவைக் கொடுக்கின்ற சக்தியாக
இருப்பது ஆத்மாதான். மேகக் கூட்டங்களால்
சூரியன் சில சமயங்களில் மறைக்கப்படுவது போல மாயையின் காரியங்களான அகங்காரம்
போன்றவைகளால் ஆத்மாவானது மறைக்கப்பட்டு அனுபவத்திற்கு வருவதில்லை.
இரண்டாவது
சந்தேகமான ஏற்கனவே தெரிந்துள்ள பொருட்களில்தான் அத்யாஸம் ஏற்பட முடியும் என்பதற்கு
அப்படித்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. மதி மயக்கத்தாலும் அத்யாஸம் ஏற்படலாம். கண் போன்றவைகள் அறியமுடியாத ஆகாசத்தில் நீல
வர்ணத்தை எப்படி அத்யாஸம் செய்கிறார்களோ அதுபோல மதிமயக்கத்தால் இந்த அத்யாஸம்
ஏற்படுகிறது.
மூன்றாவது
பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கின்ற இரண்டு பொருட்களினால் அத்யாஸம் நடக்கும்
என்று சொல்ல முடியாது. வெள்ளை சங்கு மஞ்சளாக தெரிவதில் இந்தமாதிரி
நடப்பதில்லை. ஆதாரமில்லாமல் புத்தி
மயக்கத்தினால் ஏற்படும் அத்யாஸத்தில் ஒரே மாதிரியான தெரிகின்ற தன்மை தேவை இருப்பதில்லை. ஒரே மாதிரி தன்மையுடையதாகவும் ஆத்மாவும், புத்தியும்
இருப்பதாலும் அத்யாஸம் ஏற்படுகிறது. ஆத்மா நிர்மலமானது, சூட்சுமமானது,
பிரகாசமானது. அதேபோல அது பிரதிபலிக்கும் புத்தியும் நிர்மலமானது,
சூட்சுமமானது, பிரகாசமானது. எப்படி ஸ்படிகம் சூரிய வெளிச்சத்தின் உதவியால்
பிரகாசிக்கின்றதோ அதுபோல புத்தியும் ஆத்மாவின் பிரதிபலிப்பால்
பிரகாசிக்கிறது. ஆத்மாவின் இந்த பிரகாச
தன்மை மனதிற்கும் புலன்களுக்கு, தேகத்திற்கும்
செல்கிறது. ஆத்மாவின் புத்தியில்
பிரதிபலிப்பதால் அதனுடைய பிரகாசிக்கும் தன்மை சிறிதளவாவது இவைகளுக்கு கிடைக்கிறது.
ஆகையால்
அறியாத குழந்தைகளுக்கு நிலைக்கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம்தான் என்ற புத்தி
ஏற்படுவது போல அக்ஞானிகளும் மோகத்தினால் அனாத்மாக்களான தேகம், மனம்,
புலன்கள் முதலானவைகளில் ஆத்மா என்கின்ற புத்தி காணப்படுகிறது. எனவே
ஆத்மாவும், அனாத்மாவும் பிரகாசித்தால் என்ற ஒரே
தன்மையுடையதாகவும் அத்யாஸம் ஏற்படுகிறது என்று ஏற்றுக் கொள்ளலாம். இந்த அத்யாஸம் அனாதி காலமாக இருந்து கொண்டு
வருகிறது. விழிப்பு நிலையில் உள்ளவர்களிடம்தான்
இந்த சம்சார ரூபமான அத்யாஸம் காணப்படுகிறது.
இந்த அக்ஞானம் ஆதி அந்தமற்றது அதனுடைய சம்ஸ்காரங்களும் அப்படியே.
இந்த அத்யாஸம்
ஏற்படுவதற்கான காரணம் சொல்லப்படுகிறது. இந்த அக்ஞானத்திற்கு இரண்டு பெரிய சக்திகலான
ஆவரணம், விக்ஷேபம் என்கின்றவை இருக்கின்றது. இவைகளினால்தான் ஜீவாத்மாவுக்கு
சம்சாரம் ஏற்படுகிறது. ஆவரணம் என்பது தமோ
குணத்தின் சக்தி,
அதுதான் மறைப்பதற்குக் காரணம். எதனால் உலகமே மோகமடைந்து
இருக்கின்றதோ அந்த ஆவரண சக்திதான் மூல அக்ஞானம். எத்தகைய அறிவு உடையவனாக இருந்தாலும் இந்த ஆவரண
சக்தியானது ஆத்மாவை அறிந்து கொள்ள தடையாக இருந்துக் கொண்டிருக்கும். விக்ஷேபம் என்பது ரஜோ குண அம்சமாகும். இதுதான்
அனாத்மாவை ஆத்மாவாக மாற்றி நினைப்பதற்கு காரணமாக இருக்கிறது. இது ஆத்மாவை
மூடிக்கொண்டு அதன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில்தான் அனாத்மாவிடத்தில் நான் என்ற ஆத்ம எண்ணத்தோடு
இருக்கிறான். கனவில் தோன்றும் தேகத்தில் இது நான் என்று புத்தியோடு இருக்கின்றானோ
அதுபோல விழிப்பு நிலையிலும் இந்த தேகமே ஆத்மா என்ற புத்தியோடு செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றான். இந்த தேகத்திற்கு இருக்கின்ற தர்மங்களான, பிறப்பு, இறப்பு, பசி, தாகம், பயம் போன்றவைகளை ஆத்மாவிடத்தில் ஏற்றி
வைக்கிறான். விக்ஷேப சக்தியினால்
பாவ-புண்ணியங்களை தரக்கூடிய செயல்களை செய்து கொண்டு சம்சாரத்திலே உழன்று
கொண்டிருக்கிறான்.
அத்யாஸத்திலிருந்துதான்
ஜனன, மரண ரூபமான சம்சாரம் ஏற்படுகிறது. அது போய்விட்டால் சம்சாரமும்
நீங்கிவிடுகிறது. இவைகளை அக்ஞானிகளிடமும், ஞானிகளிடமும் பார்த்து
தெரிந்து கொள்ளலாம். உலக விவகாரங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பவன் அக்ஞானி, பந்தம் உள்ளவனென்று அவைகளிலிருந்து நீங்கியிருப்பவன் முக்தன், ஞானி என்று அறிந்து கொள்ளலாம்.
அக்ஞானம்
உபாதியாக ஈஸ்வரனுக்கும்,
ஜீவனுக்கும் இருக்கும் போது ஜீவன் மட்டும் ஏன் சம்சாரத்தை
அனுபவிக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லப்படுகிறது.
இருவருக்கும்
உள்ள உபாதிகளில் வேற்றுமையிருப்பதனால் ஜீவனுக்கு இருப்பது போல ஈஸ்வரனுக்கு
பந்தமும்,
அதன் காரியங்களும் கிடையாது.
ஈஸ்வரனிடத்தில் உள்ள உபாதியான மாயையானது சத்துவ குணம் மேலோங்கிய நிலைய
உடையது. அதனால் பந்தமோ, அதன் மூலம் விக்ஷேபமோ சிறிதும்
ஏற்படுவதில்லை. இந்த சுத்த சத்துவ பிரதானமான மாயையினால் எல்லாம் அறிந்தவராகவும்,
தடைப்படாத ஞான மகிமை உடையவராகவும், தன்னிஷ்டப்படி
நடப்பவராகவும், தலைவராகவும் இருந்து கொண்டு தானே ஜகத்தின்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் போன்ற
காரியங்களை செய்து கொண்டு தன்னுடைய சக்தியினால், ரஜஸ்,
தமஸ் ஆகியவைகளை அடக்கி வைத்துக் கொண்டு செயல்பட்டு கொண்டு
இருக்கிறார். ஆகையினால் மாயையின் இரண்டு பெரும் சக்திகளான ஆவரணம், விக்ஷேபம், அவரிடம் ஒன்றூம் செய்வதில்லை. ஏனென்றால்
அந்த இரண்டு சக்திகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். இவைகளுக்கு சக்திக்
கொடுத்து செயல்பட வைப்பதும் அவரேதான்.
ஜீவனுடைய
உபாதியில் சத்துவ குணம் மங்கி ரஜோ, தமோ குணங்களில் ஒன்று மேலோங்கி
நிற்பதால் அவைகளின் காரியங்களும் மிகவும் சக்தி உடையதாக இருக்கும். ஆதலால், ஜீவனுக்கு
பந்தமும், அத்னால் உண்டாகும் சம்சாரமும் ஏற்படுகிறது. சம்சாரத்தினால் அவன் மிகுந்த துயரத்தை
அனுபவிக்கின்றான்.. இந்த சம்சாரத்திற்கு காரணம் விஷயத்தை மாற்றி அறிந்து கொள்வது
என்கின்ற அத்யாஸமும் அதற்கு காரணமான மறைத்தலை லட்சணமாக உடைய அக்ஞானம் என்று
சொல்லப்படுகிறது.
இந்த அக்ஞானத்தின்
நிவிருத்தியானது ஞானத்தினால்தான் ஏற்படும் கர்மத்தினால் சாத்தியமே இல்லை. கர்மா அக்ஞானத்திற்கு எதிரானதல்ல. எனவே அது
அக்ஞானத்தை பாதிக்கிறது. கர்மாவினால் பிறப்பு, இறப்பு என்கின்ற சுழற்சி
ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தவிர வேறெதுவும் கர்மாவினால் ஏற்படுவதில்லை. இதுவும் அக்ஞானத்தினால் விருத்தி அடைவதால் அது
அக்ஞானத்தின் காரியமேயாகும். எது எதனால்
விருத்தி அடைகிறதோ அதற்கு அதனால் அழிவு ஏற்படாது. ஒன்றையொன்று பிரிக்க முடியாத
அளவுக்கு இரண்டு பொருட்கள் சேர்ந்திருக்குமானால் அவற்றில் ஒன்று மற்றொன்றை எப்படி
அழிக்க முடியும். எனவே அக்ஞானமானது செயல்
செய்து நீக்கிக் கொள்ள முடியாது.
ஒன்று
மற்றொன்றின் அழிவுக்கு காரணமாக இருக்கும் போது அவைகள் ஒன்றிற்கொன்று விரோதமானது
என்று சொல்ல முடியும். இருட்டிற்கும்
வெளிச்சத்திற்கும் எப்படி பரஸ்பரம் விரோதியாக இருக்கின்ற தன்மையிருக்கின்றதோ
அதேபோல அக்ஞானம்,
ஞானம் இவ்விரண்டிற்கு மட்டும்தான் பரஸ்பரம் விரோதியாக இருக்கும்
தன்மை காணப்படுகிறது. எனவே நாம் ஆத்ம
ஞானத்தை பெற முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment