Saturday, January 19, 2019

வைராக்கிய சதகம்-பகுதி-1 (Vairagya Satakam-Part1)

வைராக்கிய ஶதகம்-பகுதி-1
பர்த்ருஹரி
ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்

முகவுரை
மகரிஷி பர்த்ருஹரி என்பவர் ஶ்ருங்கார ஶதகம், நீதி ஶதகம் மற்றும் வைராக்கிய ஶதகம் என்கின்ற மூன்று நூல்களை எழுதியிருக்கிறார். இந்த நூல்கள் மூன்றிலும் வாழ்க்கையில் அடைய வேண்டிய நான்கு புருஷார்த்தங்களான அறம், பொருள், இன்பம் வீடுபேறு ஆகியவைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.

இன்பத்தை அடைவது என்பது எல்லா ஜீவராசிகளின் இயல்பு. மனிதன் பகுத்தறிவைக் கொண்டு புத்திசாலித்தனத்துடன் இன்பத்தை தேடுகிறான். சாஸ்திரம் இன்பத்தை தர்மப்படி அடைந்து அனுபவிப்பதை அனுமதிக்கின்றது. மேலும் எப்படி தர்மப்படி அடையவேண்டும் என்கின்ற வழியையும் கூறியிருக்கிறது. வேதத்தின் முற்பகுதியான கர்மகாண்டத்தில் எப்படி உலக இன்பத்தை அடைய வேண்டும் என்பதைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. உலக இன்பத்தை அடைவதற்காக செய்யப்படுகின்ற செயல்கள் யாவும் காம்ய கர்மம் என்றழைக்கப்படுகிறது. இத்தகைய செயல்களை செய்யும்போது சிலவித நியமங்களை விதித்திருக்கின்றது. தர்மத்திற்குட்பட்ட உலக இன்பங்களை மட்டும் சாஸ்திர விதிப்படி செய்து அடைய முயற்சிக்க வேண்டும். பர்த்ருஹரி தனது ஶ்ருங்கார ஶதகத்தில் எவ்வாறு காம்ய கர்மங்களை செய்ய வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்.

தனது அடுத்த நூலான நீதி ஶதகத்தில் அறம், பொருள் இவைகளை எப்படி முறைப்படி அடைய வேண்டும் என்பதைப் பற்றி கூறியிருக்கிறார். வாழ்க்கையில் செல்வத்தை அடைய முயற்சிப்பது தவறில்லை. ஏனென்றால் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படுகின்ற அடிப்படையான பொருட்களை பெறுவதற்கும், அதற்கு மேற்கொள்கின்ற செயல்களுக்கும் செல்வம் நிச்சயம் தேவை.  ஆனால் அவைகளை தர்மப்படி பெற்று, தர்மப்படி அனுபவிக்க வேண்டும். தேவையான அளவுக்கு செல்வம் இல்லையென்றால் யாரும் நம்மை மதிக்கமாட்டார்கள். உறவுகளும் அலட்சியப்படுத்தி விடுவார்கள். எனவே இல்லறத்தில் செல்வத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. பர்த்ருஹரி தனது நீதி ஶதகத்தில் அறம், பொருள் இவைகளின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கியிருக்கிறார்.

தர்மம் மூன்று வகையான விஷயங்களைப் பற்றி கூறுகிறது. அவைகள். 1. சாஸ்திரம் விதித்த முறைப்படி வாழ்தல், 2. அன்பு, கருணை, பொறுமை போன்ற நற்குணங்களுடன் வாழ்தல், 3. மற்றவர்களுடன் நல்ல பாவனையுடன் பழகுதல், விவகாரம் செய்தல் ஆகிய
மூன்று வகையாக தர்மமானது பிரிக்கப்படுகிறது.

மற்றவர்களிடம் பழகும் விதமானது பெற்றோர்களிடம் நடந்து கொள்ளும் விதம், ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதம், இயற்கையை அனுபவிக்கும் விதம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வைராக்கிய ஶதகம் நான்காவது புருஷார்த்தமான மோட்சத்தைப் பற்றி கூறுகின்றது.  ஆத்மஞானத்தை அடையும் வழியைப் பற்றி நேரடியாக இதில் சொல்லப்படவில்லை. இதை அடைவதற்கு தேவையான தகுதிகளான விவேகம், வைராக்கியம், ஸமாதிஶட்கம் மற்றும் முமுக்ஷுத்துவம் ஆகியவைகள் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு தகுதிகளில் வைராக்கியம் என்பது மிகவும் முக்கியமான தகுதியாகும். இது பொதுவாக சந்நியாசத்தைக் குறிக்கின்றது.

பொதுவாக வைராக்கியத்திற்கும் சந்நியாசத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடானது வெளிவிஷயங்களை துறந்துவிடுதல், மனதுக்குள்ளேயும் உலக விஷயங்களிலிருந்து விலகி இருத்தல் என்று கூறப்படுகிறது. வைராக்கியத்துடன் இருக்கும்போது மெய்ப்பொருளைப் பற்றிய அறிவை அடையமுடியும். இதனால சம்சாரத்திலிருந்து விடுதலை அடைய முடியும்.

ஸ்லோகம்-1 (மங்கள ஸ்லோகம், தியான ஸ்லோகம்)
சூடோத்தம்ஸிட3சந்த்3ரசாருகலிகாசச்சாச்சி2கா2பா4ஸ்வரோ
   லீலாட3க்3தா4விலோலகாமஶலப4: ஶ்ரேயோத3ஶாக்3ர்ஏ ஸ்பு2ரன் |
அந்தஜஸ்பூ2ர்ஜத3பாரமோஹதி3மிரப்ரக்3பா4ரமுச்சாடயன்:
   சேத:ஸத்3மனி யோகி3னாம் விஜயதே ஞானப்ரதீ3போ ஹர: || 1 ||

இந்த இறைவணக்க ஸ்லோகத்தில் பகவான் சிவபெருமானை அறிவொளியாக உருவகப்படுத்தி அவரை தியானித்து நூலை தொடங்குகிறார்.

ஞானப்ரதீ3போ ஹர: - ஆத்மஞானத்தை விளக்கவல்ல விளக்காக உள்ள சிவபெருமானே! ஹர என்கின்ற வார்த்தை அறியாமையை நீக்கவல்ல பகவானே என்று குறிக்கிறது. பகவான் விஷ்ணுவை குறிக்கின்ற ஹரி என்கின்ற வார்த்தையும் இதேப்பொருளையே குறிக்கிறது.

இந்த உபதேசத்தில் இந்த நூலானது நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு முக்கியமான ஸ்லோகங்களுக்கு மட்டும் விளக்கவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள்
1.   சம்சாரத்தில் குறையை பார்த்தல், அதாவது உலக வாழ்க்கையில் இருக்கின்ற பலவீனங்களையும், குறைகளையும் பார்த்தல்.
2.   மோகம். உலக வாழ்க்கையிலுள்ள குறைகளை காண்பதில் மதிமயக்கம் அடைதல்.
3.   வைராக்கியத்தின் மேன்மையை விளக்குவது,
4.   அறிவுரை.

1.சம்சாரத்தில் குறை காணுதல்
மனிதர்கள் அனைவரும் குழந்தை பருவத்திலிருந்து எதையாவது அடைய வேண்டும் என்பதில்தான் முழுகவனத்துடன் இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் இது எனக்கு தேவை, அது எனக்கு வேண்டும் என்று தேடி அடைவதில் வாழ்நாட்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை அடைந்தாலும் அத்தோடு நின்றுவிடாமல் வேறொன்றை குறி வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேண்டும் என்கின்ற எண்ணம் மனதில் வருவதற்கு அதிலிருந்து கிடைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பும், மகிழ்ச்சியும்தான்.

உலகத்தில் இவையிரண்டும் கிடைக்கும் என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் தேடுகின்ற அந்த பொருட்களின் ஒரு பக்கம்தான். அதன் மறுபக்கம் துயரத்தையும், திருப்தியற்ற மனநிலையையும் கொடுக்கின்ற தன்மையாக இருக்கிறது. இதைத்தான் இந்த நூலில் விளக்கப்படுகிறது.

எவ்வளவுக்கெவ்வளவு இவையிரண்டும் கிடைக்குமோ அவ்வளவுக்கவ்வளவு துயரத்தை கொடுக்கக்கூடியது. பாதுகாப்பைக் கொடுப்பதாக நினைக்கின்ற பொருட்களே பயத்தை கொடுப்பதற்கு காரணமாகவும் அமைகின்றது. இந்த இரண்டு பக்கத் தன்மையை அறிந்து கொள்ளாத வரைக்கும் நாம் அடைந்திருக்கின்ற அறிவு முழுமையானதல்ல. இந்த அரைகுறையான அறிவால்தான் சம்சாரமானது அனுபவிக்கப்படுகிறது. கயிற்றில் தோன்றுகின்ற பாம்பு அரைகுறையான வெளிச்சத்தில்தான் ஏற்படுகிறது. அதேப்போன்று இன்பம்தரும் உலக விஷயங்களில் இருக்கும் அரைகுறையான அறிவானது நமக்கு துயரத்தை அனுபவிக்கச் செய்கிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, உலகமானது சுகம், துக்கம், பயம், பாதுகாப்பு ஆகியவைகள் கலந்ததாக இருக்கிறது என்பதாகும். இதை அறியாமை இருப்பதால்தான இன்பத்தை நாடிக்கொண்டிருக்கும் போதே துன்பத்தையும் நாடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவதில்லை.

உலகம் இன்பமும், துன்பமும் கலந்தது என்று தெரிந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும். இந்த வாழ்க்கை சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இன்பத்தை நாடாமல் இருந்துவிட்டால் துன்பத்திலும் சிக்கி கொள்ள மாட்டோம். இப்படி செய்தால் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிடும். நான் என்னதான் செய்யவேண்டும் என்ற குழப்பம் மனதில் ஏற்படும்.

வாழ்க்கை துணையில்லாதவர்களுக்கு மனதில் எப்பொழுதும் வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே உடலாரோக்கியத்திற்கு குறைவுக்கும் காரணமாக அமைந்துவிடும். தனிமையே இவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து கொண்டிருக்கும் வாழ்க்கைத்துணையுடன் வாழ்பவர்களுக்கு இன்பத்தை நாடி செய்கின்ற செயல்களால் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

புலனுகர் உலகப்பொருட்களை அடைய முயற்சி செய்யும்போது அதிலிருக்கும் துன்பத்தைக் கொடுக்கும் தன்மையை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து அதை சரியான வழியில் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.  பிரவிருத்தி மார்க்கத்தில் இன்பம் தரும் பொருட்களை, உறவுகளை அடையலாம். ஆனால் அதேசமயத்தில் அவைகளிலிருந்து துன்பமும் அடைய நேரிடும். ஆதலால். அவை கொடுக்கும் துயரத்தால் மனமானது பாதிக்கப்படாமல் இருக்குமளவுக்கு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். .

முதல் வழியானது இன்பத்தை நாடி செயல்படும்போது துன்பத்தையும் அனுபவிக்கின்ற மனநிலையோடு செயல்படுதல். இரண்டாவது வழியானது இன்பத்தை துறந்துவிடுதல், இதனால் இன்பத்தை நாடி செயல்படாமல் இருப்பதால் அதிலிருந்து வருகின்ற துயரத்தையும் விலக்கி விடுகிறோம். இந்த நிலையில் மனதில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிடும். இன்பத்தை கொடுக்கக்கூடிய பொருட்களை துறந்தநிலையில் மனதில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய வேறொன்று நம்மிடத்தில் இருக்க வேண்டும். இதுவே பூரணத்வம் அல்லது மனதிருப்தி அல்லது போதும் என்ற மனப்பான்மை என்று அழைக்கப்படுகிறது.

பிரவிருத்தி மார்க்கத்தில் சென்றால் துயரத்தினால் அடைகின்ற வலியை தாங்குகின்ற மனவுறுதியை அடைய வேண்டும். நிவிருத்தி மார்க்கத்தில் சென்றால் நமக்குள்ளே வெற்றிடத்தை நிரப்பக்கூடிய சக்தியிருக்க வேண்டும். இந்த இரண்டு மார்க்கத்திலும் மனவமைதி அடைய ஆத்ம ஞானத்தை அடையவேண்டும்.  அதாவது நான் யார் என்பதற்கான உண்மையான அறிவை அடையவேண்டும்.

அதனால் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் ஒருவன் அடைய வேண்டியது ஆத்மஞானத்தை மட்டும்தான். இதையேதான் பர்த்ருஹரி இந்த நூலில் சொல்ல விரும்புகிறார்.

எனவே சம்சாரத்தில் குறை பார்த்தல் என்ற தலைப்பில் நாம்  தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது படைக்கப்பட்ட அனைத்திலும் நிறையும், குறையும் இருக்கின்றன. இன்பமும், துன்பமும் கலந்தே இருக்கின்றன என்பதாகும். அதனால் குறைகளை மட்டும் நாம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்தக் குறைகளை மூன்று விதமாக கூறுகிறார்.

முதல் குறை (அதிருப்தி):-
முதல்வகையான குறையானது அதிருப்தி. அதாவது எது கிடைத்தாலும், அடைந்தாலும் அதில் திருப்தி அடையாத குறை. நம்முடைய தேவைகள் இருந்து கொண்டே இருக்கும்.

நி:ஸ்வோ ஏகஶதம் ஶதி த3ஶஶதம் லக்ஷம் ஸஸ்ராதி3ப:
   லக்ஷேஶ: க்ஷிதிபாலக: க்ஷிதிபதி சக்ரேஶதம் வாச்ச2தி |
சக்ரேஶ: புனரிந்த்ரதம் ஸுரபதிர் ப்3ரஹ்மாஸ்பதம் வாச்ச2தி
   ப்3ரஹ்ம விஷ்ணுபத3ம் ஹரிர் ஹர பத3ம் த்ரிஷ்ணா ந்தி3ம் கோக3த4: ||

பணமே இல்லாதவன் தனக்கு 100ரூபாய் போதும் என்பான். அது கிடைத்ததும் 1000 ரூபாய் வேண்டும் என்பான். அதுவும் கிடைத்ததும் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று கூறுவான். இப்படியே ஆசையானது லட்சத்திலிருந்து கோடிக்கு செல்லும். பிறகு பணத்தை அதிகமாக சம்பாதிக்க கூடிய பதவிக்கு ஆசைப்படுவான். முதலில் எம்.எல்.ஏ பதவியை நாடுவான். அது கிடைத்ததும் மந்திரி பதவிக்கு ஆசைப்படுவான். எதை அடைந்தாலும் துயரத்தைத்தான் அனுபவிக்க போகிறோம் என்பதை உணராமல் ஆசைப்பட்டு என்ன பயன். இதுமாதிரியான நிலைமை இந்திரலோகத்திலும் உண்டு, பிரம்ம லோகத்திலும் உண்டு. இதை அடைந்தால் மகிழ்ச்சியாகவும், மனதிருப்தியுடனும் இருப்பேன் என்று நினைத்துதான் இப்படியெல்லாம் ஆசைப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவைகளை அடைந்தும் இவையிரண்டும் கிடைப்பதில்லை. எனவே போதும் என்கின்ற மனதிருப்தியை அடையாமல் இருப்பதுதான் முதல் குறையாகும். 

இந்த அதிருப்தியை பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது.

ஸ்லோகம்-2
ப்4ராந்தம் தே3ஶமனேகது3ர்க3விஷமம் ப்ராப்த்ம் ந கிஞ்சித்ப2லம்
   த்யக்த்வா ஜாதிகுலாபி4மானமுசிதம் ஸேவா க்ருத நிஷ்ப2லா |
பு4க்தம் மானவிவர்ஜிதம் பரக்3ருஹேஷ்வாஶங்க்யா காகவத்
   த்ருஷ்ணே ஜ்ரும்ப4ஸி பாபகர்மபிஶுனே நாத்3யாபி ஸந்துஷ்யஸி ||

சுகத்தை கொடுக்கின்ற வீடு, மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றை அடைந்துவிட்ட வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் இருக்கின்ற ஒரு மனிதன் தன்னுடைய தற்போது நிலைமையை சிந்தித்து பார்க்கின்றான். இளமைக்காலத்தில், சுகத்தையும், மன அமைதியையும் கொடுக்கும் என்று நினைத்த அனைத்தையும் அடைந்துவிட்ட வயோதிக ஆரம்ப நிலையில் உள்ள எனக்கு உண்மையில் மனவமைதியும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. என் மனம் அதே நிலையில்தான் வெற்றிடத்துடன் கூடியதாக இருக்கிறது என்று வருந்துகிறான்.

இந்த நிலைமை வருவதற்கு காரணத்தை தர்க்கரீதியாக ஆராய்ந்து பார்த்தோமானால் உலகத்தில் உள்ள எந்த பொருட்களாலும் நம் மனதை நிறைக்க முடியாதென்ற உண்மை புரிந்துவிடும்.. ஒருவன் ஆயிரம் ரூபாய் அடைந்தாலும், கோடி ரூபாய் அடைந்தாலும் மன நிறைவின்மையுடன்தான் இருப்பான். மனதை நிறைக்ககூடிய உண்மையான வஸ்துவை அறிந்து கொள்ளாதவனால் எவ்வளவு சொத்து சுகத்தை அடைந்தாலும் மனநிறைவின்மையுடன்தான் இருப்பான். ஏழை பணக்காரனைப் பார்த்து அவன் எவ்வளவு சுகமாக, மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று வருத்தப்பட்டுக் கொள்வான். ஆனால் பணக்காரனுக்கு வேற விதமான மனநிறைவின்மை இருக்கும்.

ப்4ராந்தம் தே3ஶம் - சொத்து, சுகத்தை அடைவதற்கு உலகம் முழுவதும் பயணம் செய்தும், இருக்கின்ற சொத்தை பெருக்குவதற்கு பெரிய பதவிகளை அடைவதற்கு பலவிடங்களுக்கு சென்று முயற்சி செய்தும்
அனேகது3ர்க3விஷமம் - பலவிதமான தடைகளை கடந்து வெற்றி பெற்றும்
ப்ராப்தம் ந கிஞ்சித் ப2லம் -  உண்மையான பலனான மன அமைதியை கொஞ்சம் கூட அடையவில்லை. என் மனமானது முதலிலிருந்த அதே நிறைவின்மையுடனும், அதிருப்தியுடனும்தான் இருந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் எதை அடைந்தாலும் அதிருப்தியுடன்தான் இருப்போம். இந்த நிலை மனவியாதியல்ல. இதுவொரு குறை. இது வேறொன்றின் இல்லாமையையினால் வருகிறது. இது நம்முடைய இயலாமையினால் ஏற்படுகிறது. அதிருப்தியுடன் இருப்பதற்கான அடிப்படை பிரச்சனையை ஆராயாமல் அதை நீக்கி கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பதனால் இந்த குறை வருகிறது. நம்முடைய உடலுக்கு வருகின்ற வியாதியின் அடிப்படையான காரணத்தை நீக்காமல், வியாதியினால் அனுபவிக்கும் வலியை மட்டும் நீக்கிக் கொள்வது போன்று இருக்கின்றது. உதாரணமாக நம்முடைய தலைவலிக்கு நிறைய காரணங்கள் இருக்கும்போது அப்போது ஏற்படும் தலைவலியின் மூலகாரணத்தை நீக்கிக் கொள்ளாமல் எப்பொழுதும் பயன்படுத்தும் தைலம் போடுதல், மாத்திரை உட்கொள்ளுதல் தற்காலிகமான நிவாரணத்தைக் கொடுக்கலாம், ஆனால் மீண்டும் அது வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். மரத்தை வேரோடு வெட்டியெறியாமல் அதன் கிளைகளை மட்டும் வெட்டுவதால் அதை அழிக்க முடியாது. அதுபோல அதிருப்தியின் மூலகாரணத்தை நீக்காமல், அப்பொழுது அதிருப்திக்கு காரணமாக இருக்கின்றதை நீக்குவதனால், அந்த அதிருப்தி தற்காலிகமாக  நீங்கலாம் ஆனால் வேறொன்று வந்து மீண்டும் மனதை அலைகழிக்கும். எனவே அதை அடியோடு ஒழிக்க முடியாது

ஸ்லோகம் - 3
உத்கா2தம் நிதி4ஶங்கயா க்ஷிதிதலம் த்4மாதா கி3ரேர்தா4தவோ
   நிஸ்தீர்ண: ஸரிதாம் பதிர்ந்ருபதயோ யத்னேன ஸந்தோஷிதா: |
மந்த்ராரத4னதத்பரேண மனஸா நீதா: ஶ்மஶானே நிஶா:
   ப்ராப்த: காணவராடகோsபி ந மயா த்ருஷ்ணே ஸகாமா ப4வ || 3 ||

க்ஷிதிதலம் உத்கா2தம் நிதி4ஶங்கயா - மண்ணுக்குள் புதையல் இருக்கலாம் என்ற ஆசையால் மண்ணை தோண்டுகிறோம். பிறகு அந்த புதையலை அடைகிறோம்
கி3ரேர்தா4தவோ - அதேபோன்று மலையை குடைந்து உலோக தாதுப்பொருளை அடைகிறோம்
த்4மாதா - அந்த தாதுப்பொருளில் இருக்கின்ற அழுக்குகளை நீக்கி சுத்தமான உலோகத்தை அடைகிறோம். இதை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் இதை செய்கிறோம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை அடைந்தாலும் அதனால் மனமானது திருப்தி அடைந்து விடுகின்றதா என்று பார்க்கும் போது இல்லையென்றுதான் நினைக்கத் தோன்றும். எனவே மனதிருப்திக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஸரிதாம் பதிர்ந்ருபதயோ - கடலைக் கடந்து பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தை பெருக்குவதற்கு பலவிதமான செயல்களை செய்கிறோம். அந்தந்த நாடுகளிலுள்ள அரசாங்கத்தின் அனுமதியை பெற்று, அந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கேற்ப வியாபாரத்தை மேற்கொள்வதற்கான செயல்களை செய்கின்றோம். இதில் பலவிதமான சிக்கல்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும்.

யத்னேன ­- நிறைய நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறோம்.
இதனால் மனச்சோர்வையும், மன இறுக்கத்தையும், உடல் சோர்வையும், மனைவி, மக்களை பிரிந்திருக்க வேண்டிய நிலைமையும், தன்னுடைய குடும்பத்தினரின் நலத்தைக்கூட கவனிக்க முடியாத நிலையையும் அடைகிறோம் மனைவி, குழந்தை இவர்களின் நியாயமான எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் அவர்களின் மனநிலை, ஒழுக்கநிலை போன்றவைகள் பாதிக்கப்படலாம். ஆனால் அவர்களின், முன்னேற்றத்திற்காகவும்
மகிழ்ச்சிக்காகவும்தான் இவ்வாறு உழைக்கிறோம்.
அவர்கள் தங்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியாது. இவையிரண்டும் சேர்ந்து செய்ய இயலாது. கடைசியில் குழந்தைகள் தங்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தாய் என்று கேட்கும் நிலைக்கு சென்று விடுவோம். திருமணம் ஆனதும் அவரவர்கள் அவர்களுடைய சொந்த வாழ்க்கையை கவனிக்க செயல்படுவார்கள். நாம் நம்மை யாரும் கவனிக்கப்படாமல் இருக்கும் நிலைமைக்கு சென்று விடுவோம்.
ஸந்தோஷிதா - அவர்களின் சந்தோஷத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக உழைத்தும் இறுதியில் மிஞ்சுவது அதிருப்திதான்.
மந்த்ரா ஆராத4ன தத்பரேண மனஸா - மனதிருப்திக்கு சாஸ்திரம் விதித்த வெவ்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து விதவிதமான தேவதைகளை அதற்குரிய மந்திரங்களை பயன்படுத்தி வழிபடுகிறோம்.
நீதா: ஶ்மஶானே நிஶா: - மேலும் சுடுகாட்டுக்கு சென்று துர்தேவதைகளையும் ஆராதிக்கின்றோம்.
பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்காக மனிதன் எந்த வழிமுறைகளையும் கடைப்பிடிக்க தயங்க மாட்டான்.
ப்ராப்த: காணவராடகோsபி ந மயா - சிறிதளவு பணமே தேவைபட்டாலும் எந்த வழியிலும் அதை அடைய முயற்சிப்பார்கள்.
த்ருஷ்ணே ஸகாமா ப4- இவையெல்லாம் தன்னுடைய மனதிருப்திக்காகத்தான் செய்கிறார்கள். ஆசையை பூர்த்தி அடைந்தவுடன் அத்தோடு அந்த தேடுதல் சென்று விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஸ்லோகம் - 4
க2லாலாபா: ஸோடா4: கத2மபிததா3ராத4னபரை:
   நிக்3ருஹ்யாந்தர்பா3ஷ்பம் ஹஸிதமபி ஶூன்யேன மனஸா |
க்ருதோ வித்தஸ்தம்ப4ப்ரதிஹததி4யாமஞ்ஜலிரபி
   த்வமாஶே மோகா4ஶே கிமபரமதோ நர்தயஸி மாம் || 4 ||
க2லாலாபா: ஸோடா4: - எல்லா மனிதர்களும் என்ன செய்கிறார்கள் என்றால்,
ஆதிசங்கரர் உரைத்தபடி தங்களுடைய பாதுகாப்புக்காகவும், சொத்து சேர்ப்பதற்காகவும் நல்லவன், கெட்டவன், மூடன் என்று பார்க்காமல் எல்லாவகையான மனிதர்களிடமும் வேலை செய்கிறார்கள்.. தனது மேலதிகாரி எப்படி இருந்தாலும், எப்படி தன்னை நடத்தினாலும் அவைகளை பொருட்படுத்தாமல் அவரிடத்தில் வேலை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கத்துடன் பணி புரிகிறார்கள். ஏன் இவ்வாறு அனைத்தையும் பொறுத்துக் கொண்டு செய்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், பணத்தை அதிகமாக ஈட்ட வேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோள்தான் இருக்க முடியும்.
கத2மபிததா3ராத4னபரை: இந்த சூழ்நிலையில் எனது மேலதிகாரிகளையும், எனது கீழ் பணிபுரிபவர்களிடத்தும் அவர்கள் மனம் கோணாதபடியும், உற்சாகத்துடன் இருக்கும்படி வைத்திருப்பதற்காக அவர்களை செயற்கையாக புகழ்ந்தும், அவர்களுடைய தவறுகளை கண்டுக்காமலும், அவமரியாதையாக நடந்து கொள்ளும்போதும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். தனக்கே தெரியாமல் அவைகளை எப்படியோ கண்டுக்காமல் பொறுத்துக் கொள்கிறேன். பொதுவாக மனிதனுக்கென்றே சுயமரியாதை இருக்கிறது. தன்னை அவமதிக்கும்போது கோபப்படுவான், அவர்களையும் அவமதித்து கடுமையான சொற்களுடன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வான்.  ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை வந்தவுடன் தன்னுடைய இயல்பான குணத்தை கட்டுபடுத்திக் கொண்டு அவைகளை ஒதுக்கி விடுவான்.
நிக்3ருஹ்யாந்தர்பா3ஷ்பம் ஹஸிதமபி - தன்னுடைய மேலதிகாரி திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், குறைகூறினாலும் அவைகளினால் பாதிக்கப்படாமல் இருப்பது போல காட்டிக்கொள்வான். கண்களில் வருகின்ற கண்ணீரையும் அடக்கிக் கொண்டு பொய்யான சிரிப்பை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கைகட்டிக் கொண்டு நிற்பான்.
ஶூன்யேன மனஸா - உதட்டளவில் அவருடைய கோபமான சொற்களை ஏற்றுக் கொண்டு மனதில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் பொய்யான அமைதியுடன் சிரித்துக் கொண்டு இருப்பான்.
க்ருதோ வித்தஸ்தம்ப4 ப்ரதிஹததி4யாமஞ்ஜலிரபி - அதுமட்டுமல்லாமல் அவருக்கு உடல் வளைந்த நிலையில் கைகூப்பி வணக்கமும் செய்வான். இவரை திருப்தி
படுத்தினால் மட்டும் போதாது, அவருடைய மனைவி, மக்களையும் திருப்தி அடைகின்ற மாதிரி நடந்து கொள்வான். அவர்களுடைய பணத்தாசையானது இத்தகைய கீழான விதத்தில் நடந்து கொள்ள வைக்கிறது. தனது சுயமரியாதையையும் இழந்து, அடைந்த அறிவையும், திறமையையும் சரியான விதத்தில் பயன்படுத்த முடியாமல் பணி புரிய வைக்கிறது. சுயமாக சிந்திக்கும் வாய்ப்பையும் இழந்து நிற்கவேண்டியாதாக இருக்கின்றது. இவையனைத்தும் பொறுத்துக் கொண்டு, சமாளித்துக் கொண்டு பணத்தை அடைந்ததும் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை.
த்வமாஶே மோகா4ஶே - ஆசையே! உன்னுடைய எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை, சுகத்தை அனுபவிக்கவும் இயலவில்லை. அதாவது ஆசை பூர்த்தி அடைந்தாலும், மனமானது முழுமையான திருப்தியுடன் இருப்பதில்லை. மனதிருப்தி, மனவமைதி என்றுமே அடைய முடிவதில்லை.
கிம் அபர அதோ நர்தயஸிமாம் - யாருடைய இசைக்கு நடனமாடுவேன், யாருடைய பாட்டுக்கு தாளம் போடுவேன், யாருக்காக ஜால்ரா அடிப்பேன்.

ஸ்லோகம் 6
க்ஷாந்தம் க்ஷமயா க்3ருஹோசிதஸுக2ம் த்யக்தம் ந ஸந்தோஷத:
   ஸோடா4து3:ஸஹஶீதவாததப ந க்லேஶா ந தப்தம் தப: |
த்4யாதம் வித்தமஹர்னிஶம் நியமிதப்ராணைர் ந ஶம்போ4: பத3ம்
   தத்தத்கர்ம க்ருதம் யதே3வ முனிபி4ஸ்தைஸ்தை ப2லைர்வஞ்சிதா ||

இதில் ஆசிரியர் எடுத்துக் காட்டுவது, உலக இன்பங்களை அடைய துடிக்கின்ற மக்கள் அதை அடைவதற்கு அதிகமான உழைப்பை போட வேண்டும். அது மட்டுமல்லாமல் அதிகமான தடைகளையும், மனவருத்தத்தையும், உடல்வலியியும், மனோவலியையும் அனுபவிக்க வேண்டும்அதனால் உழைப்பு என்பது கட்டாயமாக உலக இன்பங்களை அடைவதற்கு தேவைப்படுகிறது.

ஆனால் ஆன்மீகப்பாதையில் செல்கின்ற மனிதர்கள், சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்து, ஆத்மஞானத்தை அடைய விரும்புபவர்கள். இதை அடைவதற்கும் செயல்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இதில் உலக இன்பங்களை எதுவும் எதிர்ப்பார்க்காது செயல்களை செய்கின்றோம். இதனால் அடைகின்ற பலன் மனத்தூய்மையாகும். இந்த வகையான செயல்களை செய்யும் போதும் பல தடைகள், கஷ்டங்கள் வரும்.

இந்த இரண்டு வகையான செயல்களை செய்பவர்களுக்கு தடைகளும், கஷ்டங்களும் வருகின்றது. இதில் எது சிறந்தது என்று ஆராயும் போது, உலக இன்பங்களை அடைய விரும்புபவர்கள் எவ்வளவு உழைத்தாலும், கஷ்டப்பட்டாலும், தடைகள் பல தாண்டி அவைகளை அடைந்தாலும், அவர்களுடைய மனநிலையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. அதே மனக்குறை, மன நிறைவின்மை இருந்துகொண்டுதான் இருக்கும்.

ஏனென்றால், நம்முடைய ஆசைகளானது வளர்ந்து கொண்டேதான் இருக்கும் தன்மை உடையது. முதலில் நமக்காக மட்டும் சில ஆசைகளை வைத்திருப்போம். அதை அடைவதற்கு உழைத்துக் கொண்டிருப்போம். பிறகு மனைவி, மக்கள், நண்பர்கள் போன்ற மற்றவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காகவும் உழைப்பை அதிகரித்துக் கொள்வோம். வாழ்க்கை முழுவதும் ஆசைகளை பூர்த்தி செய்வதிலேயே கழித்து விடுவோம். இந்த வகையான வாழ்க்கை முறையில் ஆசைகளை பெருக்கிக்கொண்டே செல்வோம். அதனால் மனதில் நிறைவின்மையையும், அதிருப்தியையும், அதிகரித்துக் கொள்வோம். வயதான காலத்தில் ஆசைகளை பூர்த்தி செய்ய உழைப்பதற்கு தேவையான சக்தியில்லாத போது அந்த நிறைவேறாத ஆசைகளே துயரத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும்.

ஸ்வாமி சின்மயானந்தா கூறுவது ஒருவனுடைய மகிழ்ச்சியின் அளவை இவ்வாறு கணக்கிட்டுக் கொள்ளலாம். அதாவது நிறைவேறிய ஆசைகளை நம்மிடத்தில் இருக்கின்ற் மொத்த ஆசைகளால வகுத்தால் கிடைக்கின்ற அளவே அனுபவிக்கின்ற மகிழ்ச்சியின் அளவாக இருக்கலாம். அதுவும் நிலையற்றது. மனம் எப்பொழுதும் நிறைவேறாக ஆசைகளையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும். நிறைவேறிய ஆசைகளின் மீதிருந்த பற்றும், மகிழ்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இறுதியில் இல்லாமல் போய்விடும். மேலும் காலம் செல்ல செல்ல ஆசைகளும் வளர்ந்து கொண்டே செல்லும், நிறைவேறாத ஆசைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதாவது மனதில் என்றென்றும் அதிருப்தி இருந்து கொண்டேதான் இருக்கும். அதனுடைய அளவும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொண்டே இருக்கும் போது பல ஆசைகளானது சேர்ந்துவிடும். எனவே ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. இந்த உண்மையை உணராமல், புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமேயானல், வாழ்நாள் முழுவதும் அதிருப்யுடனே இருந்து பிறகு மறைந்து விடுவோம்.
ஆனால் ஆன்மீக சாதகனின் செயல்களானது அதிருப்தியிலிருந்து திருப்தியான மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. இவனே புத்திசாலியானவன். மற்றவர்கள் அனைவரும் முட்டாள்களே.
க்ஷாந்தம் அமைதியாக இருத்தல்
எல்லா மனிதர்களும் செயல்களை செய்யும் போது கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். கர்மயோகியானவன் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வான், மேலும் அவன் தன்னுடைய செயல்களை தவமாக செய்துக் கொண்டிருப்பான். இதனால் கஷ்டங்கள் இவனுக்கு துயரத்தைக் கொடுக்காது, அதேசமயம் நிச்சயமான பலனை கொடுக்கும். பட்டினியாக இருப்பவனுக்கும், விரதம் இருப்பவனுக்கும் சாப்பிடாத நிலை ஒன்றாகத்தான் இருக்கிறது ஆனால் மனநிலையில் வேற்றுமையிருக்கிறது. எனவே விரதமிருப்பவனுக்கு சாப்பிடாமல் இருக்கும் நிலை துயரத்தை தராது, ஆனால் அடைய  வேண்டிய லட்சியத்தை அடைய வைத்துவிடும். வறுமையால் பட்டினியால் வாடிக் கொண்டு இருப்பவனுக்கு அதனாலே துன்பப்பட்டு கொண்டிருப்பான்.
க்ஷமயா  - கஷ்டத்தை தவமாக மாற்றிக்கொள்கின்ற மனநிலை, பொறுத்துக் கொள்கின்ற மனநிலை, ஏற்றுக் கொள்கின்ற மனநிலை ஆசைகளுடன் செயல்களை செய்து கொண்டிருப்பவன் இடத்தில் இருக்காது.
க்3ருஹ உசித ஸுக2ம் த்யக்தம் - அதுபோல இல்லற வாழ்க்கையில் உலக இன்பங்களை நாடாமல் துறந்துவிட வேண்டும். எந்த நிலையிலும், எந்த இடத்திலும் சுகத்தை நாடி மனம் செல்லாமல் இருக்கும்படி பழக்கிட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
ந ஸந்தோஷத: இந்த தியாகத்தை மனம் விரும்பி செய்ய வேண்டும். வேறு வழியில்லையே என்ற மன எரிச்சலுடனோ, கோபத்துடனோ, சுகமற்ற சூழ்நிலையை வெறுப்புடன்  ஏற்றுக் கொள்வது, பிடிக்காத உணவையோ ஏற்றுக் கொள்வது தியாகமாகாது. இதனால மனவமைதி கிடைக்காது. இன்னும் மனம் அதிக அதிருப்தியுடன்தான் இருந்து கொண்டு தீய உணர்ச்சிகளை கிளப்பி கொண்டிருக்கும். எந்தப் பலனையும் அடைய மாட்டோம்.
ஸோட4: து3:ஸஹ - துயரத்தை தரக்கூடியதும், பொறுக்க முடியாததுமான இருமைகளான
ஶீதவாத தபஹ - மிக அதிகான குளிர்காற்றையும், மிக அதிகமான வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
ந க்லேஶா ந தப்தம் தப: இத்தகைய கஷ்டத்தையும், துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய நிலையை அடைவதற்கு மனதை பயிற்சி செய்து வைத்திருக்க வேண்டும். கர்மயோக சாதனத்தின் மூலம் மனதை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
மிக சுலபமான வழியை சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதாவது எந்த சூழ்நிலையிலும், அதிருப்தியை வெளிபடுத்தக்கூடாது. எதனாலும் மனம் வருத்தமடையுமாறு வைத்திருக்க கூடாது. எப்பொழுதும் புலம்பிக் கொண்டேயிருந்தாலும் துயரமும் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.  கர்மயோகிக்கோ இந்த துன்பதரும் சூழ்நிலைக்கு  மனதிற்கு துயரத்தைக் கொடுக்கும் சக்தியிருக்காது.
த்4யாதம் வித்தமஹர்னிஶம் - எல்லா காலத்திலும் பணத்தை பற்றியே சம்சாரியானவன் தியானம் செய்கின்றான். பணத்தை எப்படி ஈட்டுவது, ஈட்டிய பணத்தை எப்படி சேமிப்பது, எதில் முதலீடு செய்தால் அதை பலமடங்கு பெருக்கலாம் ஆகியவற்றைப் பற்றியே தியானம் செய்து கொண்டிருப்பான்.  பணம் சம்பாதிக்கக் கூடாது என்பது கிடையாது. தேவைக்கேற்பவும் சம்பாதிக்க வேண்டும். அதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடக் கூடாது என்றே ஆசிரியர் கூறுகிறார்.

பொருள் சம்பாதிப்பதும், சுகத்தை அடைவதும் மட்டுமே நம் வாழ்வின் முக்கிய குறிக்கோள் அல்ல. தர்மமும், மோட்சமும்தான் நமக்கு முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். பொருட்களையும், சுகத்தையும் தர்மத்திற்குட்பட்ட வகையில் அனுபவித்து கொண்டிருக்க வேண்டும். இது மோட்சத்தை அடைய எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

காலத்தை செல்வத்தை ஈட்டுவதற்கும் , சுகத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே செலவழிக்கின்றவர்களை ஆசிரியர் கண்டிக்கிறார். தர்மத்திற்குட்பட்ட நல்ல விஷயங்களை கேட்பதற்கோ, செய்வதற்கோ நிச்சயமாக ஒருவனுடைய எல்லா இந்திரியங்களும் ஒத்துழைப்புக் கொடுக்கும் என்றும் கூறுகிறார்.

நியமித ப்ராணை: -  மன இறுக்கத்துடனும், உளைச்சலுடனும்தான் செல்வத்தை ஈட்ட வேண்டியதாக இருக்கும்.
ந ஶம்போ4: பத3ம் -  இந்த நிலையில் இறைவனைப் பற்றி நினைக்கவோ, வணங்கவோ, பஜனை செய்ய.வோ முடியாது. மோட்சத்தைப் பற்றி துளிக்கூட நினைவிருக்காது
தத்தத்கர்ம க்ருதம் -  மோட்சத்தை நாடுபவன் என்னென்ன செய்கின்றானோ அதையேதான் சம்சாரியாக இருப்பவனும் செய்கின்றான். இருவரும் ஒரேவிதமான துயரத்தை, மனவலியை அனுபவிக்கிறார்கள். ஒரேயளவு முழுகவனத்துடன் செயல்களை செய்வார்கள். ஒரேயளவு தடைகளையும், எதிர்ப்புக்களையும் எதிர்நோக்குவார்கள், சந்திப்பார்கள். ஆனால் இருவருடைய செயல்களின் விளைவுகள்தான் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம். சம்சாரியானவன்
ஏமாற்றப்படுகிறான், ஏனெனில் அவன் அடைய நினைப்பதை அடைவதே இல்லை.

தைஹி தைஹி ப2லைஹி வஞ்சிதா - சம்சாரி மனதிருப்தியைத்தான் அடைய நினைக்கிறான் ஆனால் எல்லா செயல்களின் முடிவில் அதிருப்தியைத்தான் அடைகிறான். திருப்தியை அடையவிடாமல் வஞ்சிக்கப்படுகிறான்

எனவே செய்கின்ற செயல்களை அதற்குரிய பலனைத்தான் அடைய வேண்டும் என்று நினைக்காமல் செய்தால் மனத்தூய்மை அடைந்து ஞானயோகத்திற்கு செல்வதற்கு தகுந்த குருவையும் அடையப்பெற்று ஆத்ம ஞானத்தை அடைந்து மோட்சத்தையும் அடைந்து விடுவான்.

உலக இன்பங்களை நாடி அடைவதில் எல்லை இருக்கிறது. சாஸ்திரம் காம்யமான செயல்களைத்தான் குறை கூறுகிறது. நிஶ்காம்ய கர்மங்களை செய்ய வேண்டாம் என்று தடுப்பதில்லை. ஏனென்றால் அதுதான் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவி புரியும். இந்த கருத்தைத்தான் பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் உபதேசித்திருக்கிறார். இதில் செயல்களில் உள்ள குறைகளை உபதேசித்துவிட்டு உடனேயே செயல்களை செய்வாயாக என்று கூறியிருக்கிறார்.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபஶ்சித: |
வேத3வாத3ரதா: பார்த2 நான்யத3ஸ்தீதி வாதி3ன: || 2-42
காமாத்மான: ஸ்வர்க3பரா ஜன்மகர்மப2லப்ரதா3ம் |
க்ரியாவிஶேஷப3ஹுலாம் போ4கை3ஶ்சர்யக3திம் ப்ரதி || 2-43
போ4கைஶ்வர்யப்ரஸக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம் |
வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4: ஸமாதௌ4 ந விதீ4யதே || 2-44
நியதம் குரு கர்ம த்வம் கர்ம த்யாயோ த்யகர்மண: |
ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்3த்4யேத3கர்மன: || 3-8

மேலேயுள்ள நான்கு ஸ்லோகத்தில் செயல்களிலுள்ள குறைகளை கூறியிருக்கிறார். வேதத்தின் கர்ம காண்டத்தில் கூறியுள்ள செயல்களை செய்வதால் அதற்குரிய பலன்களை அடையலாம். ஆனால் பிறப்பற்ற நிலையை அடைய முடியாது, மீண்டும் சம்சார சக்கரத்திலேதான் சுழன்று கொண்டிருக்க வேண்டியிருக்கும். என்று கூறியிருக்கிறார். இவர் குறை கூறியிருக்கும் கர்மங்கள் அனைத்தும் காம்யமான கர்மங்கள்தான். நிஷ்காம்யமான கர்மங்களை செய்வாயாக என்று அர்ச்சுனனுக்கு கட்டளையிட்டிருக்கிறார். கிருஷ்ண பகவான் ரஜோ குண, தமோ குண கர்மங்களைத் தான் குறை கூறியிருக்கிறார். சாத்விகமான செயல்களை பாராட்டியிருக்கிறார். பர்த்ருஹரியும் மனத்தூய்மைத் தருகின்ற செயலகளை செய்யாதே என்று கூறவில்லை, உலக இன்பங்களை அடைய விரும்பி செய்கின்ற செயல்களில்தான் கட்டுபாடுகளை கூறியிருக்கிறார்.

மனதிருப்திக்காக உலக இன்பங்களை அடைய வேண்டும் என்று எண்ணி செயல்படுவது வீணான செயல் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் எதுவும் மனதை திருப்தி செய்ய முடியாது. இதே கருத்தானது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் அழகாக கூறப்பட்டு இருக்கிறது.

யாக்ஞவல்கியர் தனது செல்வங்களையெல்லாம் சமமாக இரண்டாக பிரித்து தனது இரண்டு மனைவிகளான மைத்ரேயி, காத்யாயினி கொடுக்கும் போது, இரண்டாவது மனைவி மிகவும் சந்தோஷத்தோடு தனது பங்கை பெற்றுக் கொண்டு சென்று விட்டாள். ஆனால் முதல் மனைவியான மைத்ரேயி அதை வாங்குவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டாள்.
மைத்ரேயி:       இந்த செல்வம் எனக்கு முழுமனதிருப்தியை கொடுக்குமா?
யாக்ஞவல்கியர்:   கொடுக்காது. மேலும் உலகத்திலுள்ள அனைத்தும் உடலுக்குத்தான் சுகத்தைக் கொடுக்கும், மனதுக்கு சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. மனதை நிறைக்கும் சக்தி அவைகளுக்கு கிடையாது என்றும் கூறினார்.
மைத்ரேயி       மனநிறைவை கொடுக்கும் சக்தியற்ற இந்த செல்வங்களை யார் நாடுவார். எனக்கு மனநிறைவை கொடுக்கின்ற செல்வம்தான் வேண்டும். எனவே நீங்கள் குருவாக இருந்து மனநிறைவை கொடுக்கவல்ல உபாயத்தை உபதேசிக்க வேண்டும்.

யாக்ஞவல்கியர மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு ஒரு தகுதியான சீடன் கிடைத்து விட்டானே என்று மகிழ்ந்தார். மனநிறைவானது வெளியிலுள்ள எதைக் கொண்டும் அடைய முடியாது. ஜீவனுடைய இயல்பே எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பதாகும் என்று எடுத்து உரைத்தார். பர்த்ருஹரியும் புலனுகர் போகப்பொருட்களை அடைய செய்கின்ற செயல்களைத்தான் கண்டிக்கிறார். மனத்தூய்மையை கொடுக்கக்கூடிய செயல்களை செய்யுமாறு வற்புறுத்துகிறார்.
ஸ்லோகம்-7
போ4கா3 ந பு4க்தா - புலன்களால் அடையப்படுகின்ற இன்பங்கள் அனைத்தையும் நாம் உண்மையில் அனுபவிப்பதில்லை,
வயமேவ பு4க்தா:  - புலனுகர் போகங்கள்தான் நம்மை அனுபவிக்கின்றன, நம்மை பயன்படுத்திக் கொள்கிறது. புலனின்பங்களால் நாம்தான் பாதிக்கப்படுகிறோம், அவைகள் துயரத்தில்தான் நம்மை தள்ளிவிடுகின்றது.
தபோ ந தப்தம் வயமேவ தப்தா: - சாஸ்திரம் உரைக்கின்ற புனிதமான செயல்களை செய்தாலும் உண்மையில் அவைகள் நம்மால் செய்யப்படவில்லை. அந்தச் செயல்கள்தான் நம்மை பயன்படுத்திக் கொள்கிறது. அந்த செயல்களினால் நாம் துயரத்தைத்தான் அனுபவிக்க நேரிடூம்.
காலே ந யாதோ வயமேவ யாதா: காலமானது நம்மை விட்டு செல்லவில்லை. நாம்தான் காலத்தை விட்டு செல்கின்றோம்.
த்ருஷ்ணா நா ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: - ஆசைகள் வலுவிழப்பதில்லை, ஆசைகள் அடங்கி விடுவதில்லை. நாம்தான் ஆசைகளால் சக்தியை இழக்கின்றோம்.
ஆசைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. ஆனால் அவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சக்தியும், காலமும் குறைந்து கொண்டே செல்கின்றது. எனவே நிறைவேறாத ஆசைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. வயதான காலத்தில் இந்த ஆசைகளின் பிடியிலிருந்து நம்மால் மீள முடியாது. நம் கவனத்தை வேறு வழியில் செலுத்துவதற்கு தேவையான சக்தியும் நம்மிடம் இருக்காது. நமக்கு உறுதுணையாகவும் யாருமே இருக்க மாட்டார்கள். ஆறுதலாகவும் யாரும் இருக்கமாட்டார்கள்.
ஸ்லோகம்-8
வலீபி4ர்முக2மாக்ராந்தம் பலீதேனாங்கிதம் ஶிர: |
கா3த்ராணி ஶிதி2லாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே || 8 ||
பர்த்ருஹரி மீண்டும் சொல்கிறார், "ஒன்றே ஒன்றுதான் நம்மிடத்தில் தானாக வளர்ந்து கொண்டிருக்கிறது, அதுதான் ஆசை, மற்றதெல்லாம் சக்தியிழந்து கொண்டேயிருக்கும். முகம், உடல் இவைகளில் தோல் சுருக்கம் வரும், தலைமுடி நரைக்கத் தொடங்கும்.
வயதான காலத்தில் இந்த அறிவுடன் இருந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கலாம்  இந்தக்காலத்தில்தான் நிதித்யாஸன தியானத்தை யாருடைய தொந்தரவு இல்லாமல் நன்றாக செய்யமுடியும். ஆனால் அறிவில்லாதவர்கள், மற்றவர்கள் தன்னுடன் பேசாமல் இருந்துவிட்டால் தன்னை ஒதுக்கிறார்கள், அவமதிக்கிறார்கள் என்ற வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஸ்லோகம்-29
யே ஸந்தோஷநிரந்தரப்ரமுதி3தஸ்தேஷாம் ந பி4ன்னா முதோ3
   யே த்வன்யே த4னலுப்44ஸம்குலதி4யஸ்தேஷாம் ந த்ருஷ்ணா ஹதா |
இத்த2ம் கஸ்ய க்ருதே க்ருதே க்ருத: ஸ விதி4னா கீத்ருக்பத3ம் ஸம்பதா3ம்
   ஸ்வாத்மன்யேவ ஸமாப்தஹேமமஹிமா மேருர்ன மே ஓசதே || 29 ||

இதில் இரண்டு வகையான மனிதர்களை இதில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஒருவகை மனிதன் போதுமென்ற மனதுடன் தன்னிடத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவன்,. இன்னொரு வகையான மனிதன் தன்னிடத்திலே மகிழ்ந்திருக்காதவன்.. இந்த இருவகையான மனிதரிடத்திலும் வெளியேயுள்ள செல்வத்தால் எந்தவகையான பயனும் கிடையாது. கடலில் கலக்கின்ற நதியால் கடலுக்கு ஒரு பயனும் இல்லையோ அது போல வெளியேயுள்ள செல்வத்தால் முதல்வகை மனிதனுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இரண்டாவது வகையான மனிதனின் மனதை இதே செல்வமானது நிறைக்க முடியாது. அவன் மன அதிருப்தியுடன்தான் இருந்து கொண்டிருப்பான். செல்வத்தால் எனக்கு மனநிறைவை கொடுக்க முடியாது. பிறகு பகவான் எதற்கு இந்த செல்வத்தை படைத்தார்இந்த இரண்டுவகையான மனிதர்களை தவிர மூன்றாவது வகையான மனிதர்களும் உண்டு. அவர்கள் இந்த இரண்டு நிலைகளுக்கு இடையே உள்ள மனநிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கு செல்வம் தேவை அதனால்தான் அவைகள் பகவானால் படைக்கப்பட்டது.

ஸ்லோகம்-67
ப்ராப்தா: ஶ்ரிய: ஸகலகாமது3தா4ஸ்தத: கிம்
   ந்யஸ்தம் பத3ம் ஶிரஸி வித்3விஷதாம் தத: கிம் |
ஸம்பாதி3தா: ப்ரணயினோ விப4வைஸ்தத: கிம்
   கல்பாஸ்தி2தாஸ்தனுப்4ருதாம் தனவஸ்தத: கிம் ||  67 ||

ந்யஸ்தம் என்னுள்ளேயே மனநிறைவை அடையவில்லையென்றால் வாழ்க்கையில் எதை அடைந்தாலும் இன்னும் அடையவேண்டும் என்ற ஆசைதான் இருந்து கொண்டேயிருக்கும். எனவே ஆசைகளை விட்டுவிடுவதனால் மனநிறைவும், அமைதியும் கிடைக்கும். வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருந்து விட்டோமானால் அதுவே உயர்ந்த நிலை. எனவே வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம், ஆனால் எல்லா நிலைகளிலும் நான் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற எண்ணமும், உலகவிஷயங்களால் இந்த மனநிறைவை அடையமுடியாது என்ற உறுதியான எண்ணமும்தான் நம்முடைய் வெற்றியாகும்.

இதையே சங்கரர் தன்னுடைய அனாத்மா ஶ்ரி விக்3ர்ஹனம் என்ற நூலில் விளக்கமாக கூறியிருக்கிறார். மலையை தூக்குகின்ற சக்தி, நெருப்பை விழுங்குகின்ற, சக்தி, கடல்மீது நடக்கின்ற சக்தி ஆகிய சித்திகளை அடைந்தாலும் அவைகளால் மனநிறைவை அடைய முடியவில்லையென்றால் அவைகளை அடைந்து ஒருபயனும் இல்லை. மேலும் பிரம்மலோகத்திற்கோ, விஷ்ணுலோகத்திற்கோ சென்று திரும்பி வந்தாலும், சிவலோகத்தில் சில யுகங்கள் ஆட்சி செய்துவிட்டு வந்திருந்தாலும் மீண்டும் மனக்குறையுடன்தான், மன அதிருப்தியுடன் இருப்போம். நான் இயல்பாகவே மனநிறைவுடன் இருக்கின்ற தன்மையை உடையவன் என்ற அறிவை அடைந்தால் மட்டுமே இந்த மனநிறைவின்மையை போக்கிக் கொள்ள முடியும். இதைத் தவிர்த்து வேறெதையும் அடைந்து மனநிறைவுடன் இருக்க முடியாது.

இரண்டாவது குறை நிலையற்ற தன்மை
இனி இரண்டாவது குறையைப் பற்றி பார்க்கலாம். அதாவது வாழ்க்கையின் நிலையற்ற தன்மை, குறைந்த காலம் மட்டுமே இருந்துவிட்டு அழியக்கூடிய தன்மையுடையது உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களாகும், தற்காலிகமாக தோன்றி பின் மறைந்துவிடக்கூடிய தன்மையுடைய உலகவாழ்க்கையை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஸ்லோகம்-50
க்ஷணம் பா4லோ பூ4த்வா க்ஷணமபி யுவா காமரஸிக:
   க்ஷணம் வித்தைர்ஹீன: க்ஷணமபி ச ஸம்பூர்ணாவிப4: |
ஜராஜீர்ணைரங்கை3ர்னட இவ வலீமண்டி3ததனு:
   நர: ஸம்ஸாராந்தே விஶதி யமதா4னீயவனிகாம் || 50 ||

உலகவாழ்க்கையை மேடையில் நடத்தப்படுகின்ற சிறிய நாடகமாக ஆசிரியர் வர்ணிக்கிறார். நாடகத்தில் விதவிதமான வேடங்களில் நாம் நடிப்பது போல உலகமேடையில் நாம் நடித்துக் கொண்டிருக்கின்றோம். நாடகம் முடிந்ததும் வேஷம் கலைந்து இயல்பு வாழ்க்கைக்கு வருவது போல உலகமேடை நாடகம் முடிந்ததும் எமதர்ம ராஜாவிடம் சென்றுவிட வேண்டும். மீண்டும் பிறந்து உலகமேடை நாடகம் முடிந்ததும், இறந்து எமதர்ம ராஜாவிடமே சென்றுவிட வேண்டும். இதை நன்கு மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய இளமைக்காலத்தில் அனுபவிக்கின்ற இன்பங்கள் தற்காலிகமானதுதான் என்று புரிந்து கொள்ள முடியும்.

சில காலங்கள் பாலகனாக இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். அந்தக் காலங்களும் விரைவிலேயே சென்றுவிடும், பிறகு இளைஞனாக இருக்கும் போது சிலநேரத்தில் இன்பங்களையும், சில நேரங்களில் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். அதுவும் சென்றுவிடும். விரைவாக முதுமையை அடைந்துவிடுவோம். பாலகனாக அனுபவித்த அனைத்தும், இளைஞனாக அனுபவித்தவைகள் அனைத்தும் நினைவாகத்தான் இருக்கும். இளமைக்காலத்தில் சேர்ந்த செல்வத்தையோ, உயர்பதவியின் சுகத்தையோ அனுபவிக்காமல், மென்மேலும் செல்வத்தையும், உயர்பதவியை அடைவதிலேதான் காலத்தை செலவழித்துக் கொண்டிருப்போம்.

மனிதப்பிறவி மட்டும்தான் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு வாழக்கூடிய மனதைக் கொண்டதாக இருக்கிறது. மனிதர்கள் நிகழ்கால இன்பத்தையோ, வெற்றியையோ, நல்ல சூழ்நிலைகளையோ அனுபவிக்காமல் எதிர்கால இன்பத்திற்காக தன்னை மறந்து எல்லாவிதமான கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் அடைய முயற்சித்த செல்வங்களை அடைந்திருக்கும் போது அவைகளை அனுபவிக்கின்ற சக்தியை இழந்திருப்பார்கள். ஏனென்றால் செல்வத்தை சம்பாதிப்பதிலேயே தன்னுடைய எல்லா சக்திகளையும், உடலாரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இழந்து விட்டிருப்பார்கள்.

இளமைக்காலத்தில் செல்வத்தை சம்பாதிக்கும் முயற்சியிலே ஆரோக்கியத்தை இழந்திடுவார்கள். வயதான காலத்தில் உடலாரோக்கியத்தை பெறும் முயற்சியிலே சம்பாதித்தை செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.

ஜராஜீர்ணைரங்கை3ர்னட இவ வலீமண்டி3ததனு:
நாடக நடிகன் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதை போல மனிதர்களும் சம்சார என்ற வாழ்க்கை நாடகத்தில் பாலகனாகவும், இளைஞனாகவும், வயதானவனாகவும் நடிப்பவராகவும் இருக்கிறார்கள்.
நர: ஸம்ஸாராந்தே விஷதி யமதா4னீயவனிகாம் - நாடகம் முடிந்ததும் வீடு திரும்பி விடுவது போல வாழ்க்கையின் முடிவில் இறுதியில் யமதர்ம ராஜவின் இருப்பிடத்திற்கு சென்றுவிட
வேண்டும்.

ஸ்லோகம்-49
ஆயுர்வர்ஷஶதம் ந்ருணாம் பரிமிதம் ராத்ரௌ தத3ர்த4ம் க3தம்
   தஸ்யார்த்4ரஸ்ய பரஸ்ய சார்த4மபரம் பா3லத்வவ்ருத்3த4த்வயோ: |
ஶேஷம் வ்யாதி4வியோக3து:2ஸஹிதம் ஸேவாதி3பி4ர்னீயதே
   ஜீவே வாரிதரங்க3சஞ்சலதரே ஸௌக்2யம் குத: ப்ராணினாம் || 49||
இதில் பர்த்ருஹரி நம்முடைய வாழ்க்கையானது எவ்வாறு வீணாக கழிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். ஒரு மனிதனுக்கு அதிகபட்ச வயது 100 ஆக விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு சிலரே இவ்வளவு காலம் வாழ்கிறார்கள்.  இதில் பாதியான 50 வருடங்கள் தூங்கியோ, தூக்க நிலையிலோ கழித்துவிடுகின்றனர். மேலும் 12.1/2 வருடங்கள் குழந்தைப் பருவத்திலும், 12.1/2 வருடங்கள் வயோதிகத்தில் கழிந்து விடுகின்றன. இந்த இரண்டு பருவத்திலும் நமது புலன்கள் முழு அளவு செயல்படும் சக்தியில்லாத நிலையில் இருப்பதால் இந்த பருவ நாட்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடைசியில் உள்ள 25 வருடங்களையாவது பயனுள்ள விஷயத்திற்காக செலவிடுகின்றோமா என்றால் அதுவும் கிடையாது என்கிறார். செல்வத்தையும், உலக இன்பங்களை அடைவதிலும், உடல் வியாதியினால் கஷ்டபட்டுக் கொண்டும், மன உளைச்சலினாலும் அவதிப்பட்டுக் கொண்டு அந்த வருடங்களானது செலவழிக்கப்-படுகின்றது.
ஆன்மீக பாதையில் செல்வதற்கான காலங்கள் கிடைப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில் ஆன்மீக வாழ்க்கையை சிந்தித்துக்கூட பார்ப்பது இல்லை. துயரத்தோடு இருக்கும் காலத்தில் ஆன்மீக வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க முடியாது. வாழ்க்கையில் அனுபவிக்கின்ற துயரங்களையும், மனதை அலைக்கழிக்கின்ற விஷயங்களாலும் காலம் வீண்டிக்கப்படுகின்றது, விரைவாக சென்றுவிடுகின்றது. கடலில் அலைகள் தோன்றி மறைவது போல வாழ்நாளும் தோன்றி மறைந்துவிடுகின்றது. எனவே அமைதியான, சாதகமான காலத்தை எதிர்ப்பார்க்க முடியாது.
மோட்சத்தை அடைய இந்த காலத்தில்தான முயற்சிக்க வேண்டும் என்ற வரையறையே கிடையாது. நாம்தான் அந்த பாதையில் போவதற்கான காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் மோட்சத்தை அடைய உதவும் சாதனத்தை எப்போது பயன்படுத்த ஆரம்பிக்கின்றோமோ அதுதான் நல்ல காலம். ஆனால் நாம் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு நாள், நட்சத்திரமெல்லாம் பார்த்து, பார்த்து காலத்தை வீணடித்து விடுகின்றோம்.
ஸ்லோகம்-41
ஸா ரம்யா நகரி மஹாம்ஸ ந்ருபதி: ஸாமந்தசக்ரம் ச தத்
   பார்ஸ்வே தஸ்ய ச ஸா வித3க்3த4பரிஷத்தாஶ்சந்த்3ரபி3ம்பா3னனா: |
உத்3வ்ருத்த: ஸ ச ராஜபுத்ர நிவஸ்தே பந்தி3னஸ் தா: கதா2:  
   ஸர்வம் யஸ்ய வஶாத3கா3த்ஸ்ம்ருதிபத2ம் காலாய தஸ்மை நம: || 41 ||
புகழ்பெற்ற பேரரசர்களின் வரலாற்றை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மிகவும் போற்றப்பட்டவர்களாக, புகழ்பெற்றவர்களாக, அதிகசக்தி, செல்வம்  உடையவர்களாக இருந்திருப்பார்கள் ஆனால் காலம் சென்றதும் அவர்களுடைய புகழ், பெருமை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்களாக சுருங்கிவிடுகிறது. அவர்களுடைய வாழ்ந்த காலத்தின் பெருமையானது இப்படி சுருங்கி இருக்கும்போது சாதாரண மக்களின் நிலைமையை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஸா ரம்யா நகரி - அழகான நகரத்தில் அரசாட்சி செய்து வந்த
மஹாம்ஸ ந்ருபதி: - மிகப்பெருமை வாய்ந்த பேரரசர்களை பற்றியும்
முற்காலத்தில் கோலோச்சிய மிகப்பெரிய சக்கரவர்த்திகளான விக்கிரமாதித்தன், ராஜராஜ சோழன், அசோகர் போன்றவர்களின் பெருமைகள் அனைத்தும் இன்று யாராலும் நினைத்து பார்ப்பதில்லை. அவைகள் புத்தகங்களில்தான் இருக்கிறது. 
ஸாமந்தசக்ரம் ச தத் - அதேப் போன்று புகழ்பெற்ற சிற்றரசர்களும் இருந்திருக்கிறார்கள்
பார்ஸ்வே தஸ்ய ச ஸா வித3க்3த4பரிஷத்  விதவிதமான சாஸ்திரங்களை அறிந்த வித்துவான்கள்
தாஹா சந்த்3ரபி3ம்பா3னனா: முழுநிலவைப் போன்று அறிவுப்பிரகாசத்துடன் கூடிய அறிஞர்கள்
உத்3வ்ருத்த: ஸ ச ராஜபுத்ர நிவஹ - மிகவும் கர்வத்துடனும், கோபத்துடனும், தீயகுணங்களுடனும் உள்ள பட்டத்தரசிகளும்
தே பந்தி3னஹ - கவிபாடும் திறமையுள்ள கவிகளும், ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் சக்கரவர்த்தியுடன்  இருந்திருக்கிறார்கள்
தா: கதா2:  - இவ்வாறு பல பெருமைகளனைத்தும் சக்கரவர்த்தி பெற்றிருந்தாலும், இப்போது அவைகளை யாரும் நினைப்பதுவுமில்லை, பேசுவதுமில்லை. அவைகள் புத்தகங்களில் மட்டும் சில பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
ஸர்வம் யஸ்ய வஶாத3 - ஆதலால் இந்த அனைத்து பெருமைகளும்
ஸ்ம்ருதிபத2ம் அகா3த் -  வெகு சிலரின் மனதில் மட்டும் மறக்க முடியாத எண்ணங்களாக இருந்திருக்கும்.. பேரரசர்களின் கதியே இவ்வாறென்றால், சாதாரண மக்களின் அருமை பெருமைகளை யார் நினைத்துப் பார்ப்பார்கள்.
காலாய தஸ்மை நம:  காலம்தான் இதற்கெல்லாம காரணமாக இருக்கின்றது. அத்தகைய காலத்திற்கு நமஸ்காரம்.

ஸ்லோகம்-9
நிவ்ருத்தா போ4கே3ச்சா2 புருஷப3ஹுமானோSபி க3லித:
   ஸமானா; ஸ்வர்யாதா: ஸபதி3 ஸுஹ்ருதோ3 ஜீவிதஸமா: |
ஶனைர்யஷ்ட்யுத்தா2னம் க4னதிமிரருத்3தே4 ச நயனே
   அஹோ மூட4: காயஸ்தத3பி மரணாபாயசகித: || 9 ||
முதல் குறையான அதிருப்தியை, மனநிறைவின்மையை விளக்கிவிட்டு, இனி இரண்டாவது குறையான நிலையற்ற வாழ்க்கையில் அனுபவிக்கின்ற சம்சாரத்தைப் பற்றி விளக்கினார். மூன்றாவது குறையான பயம், மனிதர்களின் மனதில் என்றென்றும், எல்லா சூழ்நிலைகளிலும் நிலையாக இருந்து கொண்டிருக்கின்ற பாதுகாப்பற்ற தன்மைதான் பயமாக மனதில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஸ்தூல உடலின்மீது அபிமானம் கொண்டிருக்கின்ற வரையில் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து பயந்து கொண்டிருப்போம். அதனால் பாதுகாப்பற்ற நிலையையும், துன்பத்தால் தாக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையையும் கடக்க வேண்டும் என்றால், ஸ்தூலமான விஷயங்களிலிருந்து மனதை எடுத்துவிட வேண்டும். உன்னுடைய உண்மையான, சுபாவமான தன்மையை உணர்ந்து கொண்டு அதில் நிலைத்திருக்க வேண்டும்.  எனவே ஆன்மீக வாழ்க்கைக்கு செல்வதற்கு வரையறுக்கப்பட்ட ஸ்தூல, சூட்சும விஷயங்களில் இருந்து வெளிவந்துவிட வேண்டும்.
நிவ்ருத்தா போ4கே3ச்சா2 - புலனுகர் போகப் பொருட்களின் மீதுள்ள பற்றெல்லாம், அந்தப் போகப்பொருட்களை அனுபவிக்க உதவும் புலன்களின் சக்தி குறைந்து போய்விட்டதாலோ அல்லது இழந்து போய்விட்டதாலோ நீங்கியிருக்கலாம். வைராக்கியத்தினால் நீங்கியிருக்காது.
புருஷப3ஹுமானோSபி க3லித: - வயதாகிவிட்ட போது முன்பு மாதிரி எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டு வாழ முடியவில்லை. இவருடைய பேச்சை மனைவியும், மகனும், மகளும் போன்ற நெருங்கிய உறவினர்கள் யாரும் மதிப்பதில்லை, கேட்டு நடப்பதில்லை.
வயதானவர்களுக்கு தங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இளம்வயதினர்க்கு வயோதிகர்களின் நிலைமையை புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஸமானாஸுஹ்ருதோ3 ஜீவிதஸமா: - என்னுடைய சமவயது நண்பர்களே அன்பானவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
ஸ்வர்யாதா: ஆனால் அவர்கள் அனைவரும் இப்போது காலமாகி விட்டார்கள்
ஶனைர்யஷ்ட்யுத்தா2னம் - என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. வெளியே சென்று வருவதற்கு ஊன்றுகோல் உதவி தேவைப்படுகிறது.
க4னதிமிரருத்3தே4 ச நயனே - கண்பார்வையும் மழுங்கிவிட்டது. கண்புரையும் கண் பார்வையை மறைக்கிறது.
இவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அவைகளுடனே நூறு வயது வாழத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
அஹோ மூட4: காயஹ  - அட மூடர்களே! இந்த ஸ்தூல உடலில்
தத3பி - இந்த வயதான காலத்திலும், இவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும்
மரணாபாயசகித: - மரணம் வந்து விடுமே என்று பயப்படுகிறீர்களே!
--------------------------------------------------------------- -------------------- ----------------------- ------------------- -------------------------

1 comment:

Prabakaran said...

Thank you very much for detailed content...

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...