வைராக்கிய ஶதகம்-பகுதி-2
பர்த்ருஹரி
ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்
மூன்றாவது குறை – பயம்
சம்சாரத்தை பேசும்போது மனதில் இருக்கும் அதிருப்தி, நிறைவின்மை இவைகளைப் பற்றி விளக்கினார்.
மேலும் உலகம் கொடுக்கும் போகப்பொருட்களின் நிலையற்ற தன்மையை எடுத்துரைத்தார். இனி
பயம் என்கின்ற குறையை விளக்குகிறார். இதுவரை விளக்கிய கருத்துக்களை தவறாக
பொருட்கொள்ளப்படலாம். அதனால் இந்த உலகத்தை வெறுப்போடு பார்க்கலாம் அல்லது அனைது
உலகப்பொருட்களையும் வெறுத்து ஒதுக்கி மன அதிருப்தியை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்.
அதனால் மிகவும் எச்சரிக்கையோடு ஒரு குருவின் துணைக் கொண்டு கற்க வேண்டும்.
பற்றானது எப்படி மோட்சத்தை அடைவதற்கு தடையாக இருக்குமோ
அதுபோலவே இந்த வெறுப்புணர்ச்சியும் தடையாக இருக்கும். எனவே உலகத்தின் மீது ஆசை வரும்போது
அதிலிருக்கும் குறைகளை நினைத்துப் பார்த்து வந்த ஆசையை விட்டுவிட வேண்டும்.
உலகத்தை வெறுக்காதே, உன் உடலை வெறுக்காதே, எனெனில் தோன்றி கொண்டிருக்கும் அனைத்தும் இறைவனின் படைப்புக்கள் எனவே
அவைகளை வெறுக்காதே என்று சாஸ்திரம் கூறுகிறது. கடைசியாக புரிந்து கொள்ள வேண்டியது,
ஆசையும் இருக்கக்கூடாது, வெறுப்பும்
இருக்கக்கூடாது.
நாம் எல்லாகாலத்திலும் ஈஸ்வர ஸ்ருஷ்டியில் வாழ்ந்து
கொண்டிருக்கவில்லை. ஜீவ ஸ்ருஷ்டியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுதான்
சம்சாரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஜீவ ஸ்ருஷ்டியை விட்டுவிட்டு ஈஸ்வர
ஸ்ருஷ்டியோடு வாழ கற்றுக் கொண்டுவிட்டால், சம்சாரத்தை அனுபவிக்க மாட்டோம்.
ராக-துவேஷத்தில் உள்ள இரண்டு வகையான குறைபாடுகள் உண்டு.
முதல்குறை சம்சாரத்தில் இருக்க வைக்கும். இரண்டாவது குறை ஈஸ்வர ஸ்ருஷ்டியின் அழகை
அனுபவிக்கவிடாது.. வைராக்கிய சதகத்தின் முதல்
பயன் ராக-துவேஷத்தை மனதில் இருந்து நீக்கிவிடுதலாகும். இரண்டாவது
மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மாறாத இருக்கும் ஒன்றின் துணைக் கொண்டு
உலகத்தை நன்றாக அனுபவிக்க வைக்கும். சுற்றுலா சென்றிருக்கும்போது நாம் தங்குவதற்கு
இடம் பார்த்துவிட்டுத்தான் மற்ற இடங்களை சுற்றிப் பார்த்து ரசிக்கின்றோம்.
ஆயுர்நஶ்ய்தி பஶ்யதாம் ப்ரதிதி3னம் யாதி க்ஷய்ம் யௌவனம்
ப்ரத்யாயாந்தி க3தா புனர்ன தி3வஸா:
காலோ ஜக3த்3ப4க்ஷக: |
லக்ஷ்மீஸ்தோயதரங்க3ப்4ங்க3சபலா வித்3யுச்சலம் ஜீவிதம்
தஸ்மாத்தவாம் ஶரணாக3தம் ஶரணத3 த்வம்
ரக்ஷ
ஆதிசங்கரர் சொல்கிறார், "பகவானே! நீ மட்டும்தான் காலத்தால்
அடித்துச் செல்லாது இருப்பவ்ர் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். எனவே உன்னை நான்
நன்றாக உறுதியுடன் பிடித்துக் கொள்ள விரும்புகிறேன். கடவுளைப் பற்றுதலே பக்தி, வேதாந்த மொழியில் சொன்னால் ஆத்மாவை இறுக பற்றிக் கொள்ளுதலாகும். இரண்டுமே
திருப்தியான வாழ்க்கையை கொடுக்கும். இறைவனையோ அல்லது ஈஸ்வரனையோ
இறுக பற்றிக் கொண்டு உலக சுகங்களை அனுபவிக்கலாம் என்று ஆசிரியர் கூறுகிறார்.
ஈஸ்வரனை பற்றிக் கொள்வதால் பயம் என்பது ஏற்படாது. ஹ்ரித்வாரில் உள்ள கங்கை நதியில்
குளிக்கும் போது நதியோரம் இருக்கின்ற சங்கிலியை பிடித்துக் கொண்டால் பயம் இல்லாமல்
குளிப்பதைப் போன்று ஈஸ்வரனைப் பற்றிக் கொண்டால் வாழ்க்கையெனும் நதியில்
பயமில்லாமல் நீந்தலாம்.
ஸ்லோகம்-11
ந ஸம்ஸாரோத்பன்னம் சரிதமனுபஶ்யமி குஶலம்
விபாக: புண்யானாம் ஜனயதி ப4யம் மே விம்ருஶத: |
மஹத்4பி4: புண்யௌகௌ4ஶ்சிர்ப்ரிக்3ருஹீதாஶ்ச விஷயா
மஹாந்தோ ஜாயந்தே வ்யஸனமிவ தா3தும் விஷயிணாம் ||
ஸம்ஸரோத்பன்னம் சரிதம் - கஷ்டப்பட்டு சம்பாதித்து அடைந்த வாழ்க்கை சுகங்கள், வசதியான சூழ்நிலைகள் யாவும் மேலோட்டமாக பார்த்தால்
நன்றாகவே இருக்கும்.
ந அனுபஶ்யாமி குஶலம் ஆனால் ஆராய்ந்து பார்த்தோமானால அவைகள் நமக்கு சாதகமாகவோ
பாதுகாப்பாகவோ இருக்காது.
விபாக: புண்யானாம் ஜனயதி ப4யம் - புண்ணியபல கர்ம பலனால் இன்பமும், சுகமும்
இருப்பதாக நினைக்கலாம், ஆனால்
மே விம்ருஶத: ஆராய்ந்து பார்க்கும் போது பயத்தை மனதில் ஏற்படுத்தும்.
சுகத்தை கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றதை ஆராய்ந்து பார்க்கும் போது ஏன்
பயத்தை உண்டுபண்ணுகிறது.
சிரபரிக்3ருஹீதாஶ்ச விஷயா - புண்ணியபலத்தால் கிடைத்த இன்பகரமான சூழ்நிலையானது
மஹத்3பி4: புண்யௌகௌ4ஶ் - எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீண்டகாலம் அனுபவிக்கக்கூடியதாக
இருந்தாலும், ஏன் அவைகள் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று சிந்திக்க
வேண்டும்.
மஹாந்தோ ஜாயந்தே - ஒவ்வொரு புலனுகர் போகப்பொருளும் கொஞ்சம் கொஞ்சமாக சக்தியை
வளர்த்துக் கொண்டு நம்மையே அவைகளுக்கு அடிமையாக்கிவிடும்.
வ்யஸனமிவ தா3தும் விஷயிணாம் - புலனுகர் பொருட்களுக்கு அடிமையாகுதல்
என்பது புலன்களுக்கு அடிமையாகிவிடுதலாகும். அவைகள்
கிடைக்காவிட்டால மனதில் சொல்லொனா துயரத்தை அடைகிறோம். இந்த
பொருட்களின் நிலையாமையை அறிந்து இந்த கருத்தையே பகவான் கிருஷ்ணன பகவத்கீதையின் 5வது
அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகிறார். இன்பத்தை கொடுப்பது போல இருக்கின்ற நிலையற்ற போகப்பொருட்களை அறிந்து
எச்சரிக்கையாக இருக்காவிட்டால் அவைகளே துயரத்தை கொடுக்கின்றவைகளாக மாறிவிடும்.
ஸ்லோகம்-31
போ4கே3 ரோக3ப4யம் குலே ச்யுதிப4யம்
ந்ருபாலாட்3ப4யம்
மானே தைன்யப4யம் ப3லே ரிபுப4ய்ம் ரூபே ஜராயா ப4யம் |
ஶாஸ்த்ரே வாதி3ப4யம் கு3ணே க2லப4யம் காயே க்ருதாந்தாத்3ப4யம்
ஸர்வம் வஸ்து ப4யான்விதம் பு4வி ந்ருணாம் வைராக்3யமேவாப4யம் ||
இதில் பர்த்ருஹரி எவ்விதம் ஒருவன் ராக-துவேஷம் என்கின்ற
உலகத்தில் வாழ்ந்து கொண்டு உலகத்திலிருக்கும் அனைத்திலும் பயத்தை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறான் என்பதை கூறுகிறார்.
போ4கே ரோக3ப4யம் - புலனின்பத்தில் மூழ்கி இருப்பவனுக்கு எப்பொழுதும் எதைக் கண்டாலும் பயப்படுவான். எதையும் அளவுக்கு மீறி அனுபவித்தோமானால் அதுவே துன்பத்தைக்
கொடுக்கும்.
குலே ச்யுதிப4யம் வித்தே ந்ருபாலாத்3ப4யம் - அளவுக்கு மீறிய செல்வம் வந்து விட்டால் வருமானவரித்துறையை
நினைத்து பயப்படுவோம். திருட்டு போய்விடுமோ என்றும் பயப்படுவோம்.
எனவே பாதுகாப்பதற்காக அதிக முயற்சிகளை எடுக்க ஆரம்பிப்போம். அதனால் நிலையான பயமும், வருத்தமும் இருந்து
கொண்டிருக்கும்.
மானே தை3ன்யப4யம் - தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு எப்பொதும் தன்னை
எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பதால், யாராவது அவமரியாதையுடன் தன்னிடம் நடந்து கொள்வார்களோ என்ற
பயம் இருந்து கொண்டிருக்கும்.
ப3லே ரிபுப4யம் - பலமும், வளமும் பொருந்தி அரசனுக்கு எப்பொழுதும், அண்டை நாடுகள் பலம் பொருந்தியதாக வளர்ந்துவிடுமோ என்ற பயம் இருந்து
கொண்டிருக்கும். அதனால் அண்டை நாடுகளை பலம் பொருந்தியதாக வளர விடாமல் ஏதாவது
செய்து கொண்டிருப்பான்.
ரூபே ஜராயா ப4யம் - தன்னுருவத்தின் மீது
கொண்டிருக்கும் அபிமானத்தினால், வயதாகி விட்டால் இந்த
அழகு சென்றுவிடுமோ என்ற பயத்துடன் இருப்பான்.
ஶாஸ்த்ரே வாதி3ப4யம் - அறிவும் திறமையும் உடையவன் வேறொரு அறிவாளியைக் கண்டு பயந்து கொண்டிருப்பான்.
தன்னைவிட அறிவும், திறமையும் கொண்டவனாக இருப்பானோ என்ற
உள்ளுக்குள் பயந்து கொண்டிருப்பான். அறிவற்றவனிடம் இந்த பயம்
இருக்காது. எல்லோருக்கும் நல்லது எது, கெட்டது எது என்று
நன்றாக தெரியும். அதனால்தான் நற்குணங்களை உடையவனைக் கண்டாலும் பொறாமையும், எரிச்சலும் வருகின்றது.
கு3ணே க2லப4யம் - நற்குணங்களை உடையவனுக்கோ அதைக் கண்டு பொறுக்காத மற்றவர்களின் இழிசொற்களைக் நினைத்தும், அவமரியாதை செய்வார்களோ என்று நினைத்தும் பயந்து கொண்டு இருப்பான்.
காயே க்ருதாந்தாத்3ப4யம் - உடலழகுடன் இருப்பவனுக்கு இந்த அழகு போய்விடுமோ, அழகுடன் இருக்கும் நான் இறந்து விடுவேனோ என்ற பயம்
ஸர்வம் வஸ்து ப4யான்விதம் - இவ்வாறு பார்க்கும்போது அனைத்தும் பயத்தைக் கொடுக்கின்ற வஸ்துவாக
இருக்கின்றதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே
உலகத்தில் இருக்கும் எதைக் கண்டும் பயமோ வருத்தமொ அடையக் கூடாது. ஏனென்றால் அவைகளின் இயல்புத் தன்மையே அதுதான். பற்றுடையவனிடத்தில்தான்
பயமும் சேர்ந்திருக்கும். எந்தப் பொருட்களின் மீதுள்ள பற்றை
எடுத்து விடுகின்றோமோ அதிலிருந்து வருகின்ற பயமும் சென்று விடும்.
பு4வி ந்ருணாம் வைராக்3யமேவாப4யம் - இந்த உலகத்தில் ஆத்மாவை அடைதலே
அபயத்தை அடைதலாகும். இறைவனைப் பற்றிக் கொள்ளுதலே அபயத்தை கொடுக்கும். உலகத்திலுள்ள
புலனுகர் பொருட்களின் மீது வைராக்கியம்தான் அபயத்தைக் கொடுக்கும்.
ஸ்லோகம்-32
ஆக்ராந்தம் மரணேன ஜன்ம ஜரஸா சாத்யுஜ்வலம் யௌவனம்
ஸந்தோஷோ த4னலிப்ஸயா ஶமஸுக2ம் ப்ரௌதா4ங்க3னாவிப்4ரம: |
லோகைர்மத்ஸ்ரிபி4ர்கு3ணா வனபு4வோ வ்யாலைர்ந்ருபா து3ர்ஜனை:
அஸ்தை2ர்யேண விபூ4தயோSப்யுபஹதா
க்3ரஸ்தம் ந கிம் கேன வா || 32 ||
தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் ஏதாவதொன்றால் அதனுடைய
இருத்தலுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து
கொண்டு இருக்கிறது. உண்மையில் காலம்தான் அந்த் உயிர்களினுடைய இருத்தலுக்கு
மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மற்றவை அனைத்துமே இரண்டாவது நிலையிலேயே
இருக்கிறது.
ஆக்ராந்தம் மரணேன ஜன்ம - படைப்புக்கள் அனைத்தும் அழகானவைதான், ஆனால்
இறப்பு என்ற மறுபக்கத்தை உடையதாக இருக்கிறது.
ஜரஸா சாத்யுஜ்வலம் யௌவனம் - இளமையின் அழகும், சக்தியும் வயோதிகத்தால் தாக்கப்படுகிறது.
ஸந்தோஷோ த4னலிப்ஸயா - மனதிருப்தி, மனவமைதி எப்பொழுதும் இன்பத்தை தரும்
பொருட்கள் மீது ஏற்படுகின்ற பேராசையால் தாக்கப்படுகிறது. பெரும்
செல்வத்தை ஈட்ட வேண்டும் என்ற பேராசையும், உடல் சுகத்தை
தருகின்ற பொருட்களை அடைய வேண்டும் என்ற பேராசையும், வசதியுடன்
வாழ்வதற்கான பொருட்களை அடைய வேண்டும் என்ற பேராசையாலும் மனமானது தாக்கப்பட்டு,
பயமுறுத்தப்பட்டு அமைதியை இழக்கிறது..
ஶமஸுக2ம் ப்ரௌதா4ங்க3னாவிப்4ரம: மன அமைதியானது அழகான இளம்பெண்கள கண்டவுடன் சென்றுவிடுகிறது. பெண்சுகத்தை
அனுபவிக்க வேண்டும் என்ற தீராத ஆசை மனதை
சஞ்சலபடுத்தி அமைதியை குலைத்துவிடுகிறது.
லோகைர்மத்ஸரிபி4ஹி கு3ணா - நற்குணங்களை உடையவனை கண்டு பொறாமை கொள்ளும் தீயகுணம் படைத்த மனிதர்களால், அவனுக்கு தொல்லைகளைக் கொடுத்து அவனுடைய மனவமைதியை குலைக்க
முயற்சிப்பார்கள். எனவே நல்ல குணங்களும் அதனுடைய இருப்புக்கு அச்சுறுத்தலை
கொண்டிருப்பதாக இருக்கிறது.
வனபு4வோ வ்யாலைர் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனிமையை இயற்கையழகு கொஞ்சும், அமைதியான சூழ்நிலையை உடையதாக இருக்கின்ற காட்டிற்கு
சென்றாலும் அங்கேயும் புலி, சிங்கம் போன்ற காட்டு
விலங்குகளால் அந்த அழகையும், அமைதியையும் அனுபவிப்பதற்கு
அச்சுறுத்தலாக இருக்கின்றது.
ந்ருபா து3ர்ஜனை: போகத்தையும், புகழையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டு
அரசனுக்கும் பக்கத்து நாட்டு தீய அரசர்களுளால் பயமுறுத்தலுக்கு ஆளாகி கொண்டு
இருக்கிறார்கள்
அஸ்தை2ர்யேண விபூ4தயஹ - செல்வ செழிப்புடன் இருந்தாலும், அதனுடைய
இயல்பான உயர்வு, தாழ்வு என்ற நிலையாமையை உணர்ந்து
இருப்பதாலும், செழிப்புடன் இருந்தாலும் மனவமைதிக்கு அதுவே
அச்சுறுத்தலாக இருக்கிறது.
மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு இந்த உலகில் இருக்கும் எதுவுமே நிலையான
இன்பத்தை, மனவமைதியை கொடுக்காது என்று தெரிந்து கொள்ள
முடிகிறது. எனவே அந்த இறைவனையே புகலிடமாக கொண்டு, அவர் மீது
நம்பிக்கை வைத்து, நாம் அனுபவிக்கின்ற இன்பத்தை அவர்
பிரசாதமாக எடுத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். இதனால் அது சென்று விட்டாலும்
மனகஷ்டம் அடையமாட்டோம்.
ஏனென்றால் நிலையான இன்பத்தை கொடுக்கின்ற இறைவனுடைய திருவடியை நாம் பற்றிக்
கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, ஞானியானவன் தன்னிடத்திலே என்றென்றும் மகிழ்ச்சியுடன்
இருப்பதால் அவனுக்கு உலகத்திலிருந்து கிடைக்கின்ற இன்பத்தை நாடி செல்வதில்லை,
அதுவாக வந்தால் அனுபவிக்க மறுப்பதுமில்லை
யோSப்யுபஹதா க்3ரஸ்தம் ந கிம் கேன வா - இந்த கருத்துக்கள் மூலம்
உலகத்திலுள்ள அனைத்திலும் குறைகள் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்-33
ஆதி4வ்யாதி4ஷதைர்ஜனஸ்ய விவிதை4ராரோக்3யமுன்மூல்யதே
லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ருதத்3வாரா இவ வ்யாபத3:
|
ஜாதம் ஜாதமவஶ்யமாஶு விவஶம் ம்ருத்யு: கரோத்யாத்மஸாத்
தத்கிம் தேன நிரங்குஶேன விதி4னா யான்னிர்மிதம்
ஸுஸ்தி2ரம் || 33 ||
இந்த உலகத்திலுள்ள எல்லா விஷயங்களிலும், பொருட்களிலும்
நல்லது, கெட்டது கலந்தே இருக்கிறது. நல்லதை ஏற்றுக் கொண்டு
அனுபவிக்கலாம் அதே சமயம் அதனுடைய நிலையாமையையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
கெட்டது வரும்போது அதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தையும் அடைந்திருக்க
வேண்டும்.
ஆதி4வ்யாதி4ஷதைர்ஜனஸ்ய - மனிதர்களுக்கு வருகின்ற மனவருத்தங்களும், உடலுக்கு வருகின்ற நோய்களும் மனித வாழ்வின்
கெட்ட விஷயங்களாகும்
விவிதஹ -
இவையிரண்டும் திரும்ப திரும்ப வந்து
ஆரோக்3யம் - மனநலத்தையும், உடல்நலத்தையும்
உன்மூல்யதே - பாதிக்கிறது
லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ருதத்3வாரா எங்கேயெல்லாம் அதிகமான செல்வங்கள் இருக்கின்றதோ
அங்கேயெல்லாம் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டு
இருக்கும். பணம் சகோதர, சகோதரிகளுக்குள்ளும் சண்டையை
மூட்டிவிடும். தந்தை மகனுக்கும் இடையேயும் கோர்ட்டு வரைக்கும் செல்கின்ற அளவில்
பகையை வளர்த்து விடும்.
இவ வ்யாபத3: - நற்குணங்களை மதிக்காமல் பணத்திற்கு மதிப்பு
கொடுத்துவிட்டால், பணமே அவரவர்களுக்கு தீமையை
கொடுத்து விடும்.
நாம் கொஞசம் கொஞ்சமாக உலகத்தைச் சார்ந்திருக்காமல்
நீங்கி கடவுளை சார்ந்திருக்குமாறு மாற்றிக் கொள்ள வேண்டும். உலகத்தைச்
சார்ந்திருப்பது முதலில் இயல்பானதானதுதான். கடவுளைப் பற்றி
அறிந்து கொண்ட பிறகு அவரைச் சார்ந்திருக்கும் நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள
வேண்டும். நம்முடைய மனதை அவ்வாறு பழக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையும் ஒரு தற்காலிகமானதாகும். இறுதியில்
பிரம்மத்தை அடைவதே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். நானே
பிரம்மன் எதையும் சார்ந்திருக்காதவன் என்ற நிலை வரும்போது கடவுளை சார்ந்து இருக்கும்
நிலையில் இருந்தும் கடந்து சென்றுவிட வேண்டும். பக்தி
செலுத்துவதும், பிரம்மத்தை அறிந்துகொள்வதும் வெவ்வேறல்ல
என்று புரிந்து கொள்ளலாம்..
சங்கராச்சாரியாரும் அவருடைய பிரம்ம சூத்திர, உபநிஷத் விளக்கத்தில் பக்தியைப் பற்றி
கூறியிருக்கிறார். அவர் கடவுளை வெவ்வேறு உருவத்தில்
புகழ்ந்து எழுதியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய சிவானந்த
லஹரி என்னும் நூலில் அவருடைய இஷ்ட தேவதை பக்தியை பற்றி மிகவும் அழகாக
எழுதியிருக்கிறார். கடவுளே! ஏன் கடினமான
மலைக்குகையில் வசிக்கின்றீர்கள், கடினமான பாறைகள் மீது
நடனமாடுகிறீர்கள். உங்கள் மிருதுவான உடலும், மென்மையான பாதங்களும் வலிக்காதா? தங்களுக்கு கீழ்
பணி புரியும் குபேரன் இருக்கும் போதும், வளமான மேரு மலை
இருக்கும் போதும் தாங்கள் பாதமும், உடலும் நோகாமல்
நடனமாடுவதற்கு நல்ல அரங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே! எதற்காக
இந்த கடின பாறையின் மீது நடனமாடுகிறீர்கள்? இந்த கேள்விக்கு
நானே பதில் கண்டுபிடித்து விட்டேன். உலகத்தில் பிறக்கும்
மனிதர்களின் இதயம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். உலக சுகத்தை தேடுவதிலும்,
கொடிய செயல்களை செய்கின்ற மனித இதயம பாறையைப் போன்று கடினமானதாகவே
இருக்கும். கடவுள் மீது பக்தி செய்யாத கடினமான மனதை உடையவனாக
இருக்கிறேன். தங்களுடைய அருளையும் எதிர்பார்க்காத முட்டாளாக
இருக்கிறேன். நான் பக்தி செலுத்தாவிட்டாலும், என்மீது அன்பு கொண்டு என் மனதில் நர்த்தனம் புரிய வந்துள்ளீர்கள். கடினமான என் மனதில் நடனமாடுவதற்காக அந்த கடினமான மலையில் நடனமாடி பழகிக்
கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த உலகம் கொடுக்கும் சுகத்தை அனுபவிக்கலாம். அதே சமயம் இறைவனை நன்றாக பற்றிக் கொள்ள
வேண்டும். உலக சுகங்கள் நிலையற்றவையானதாக இருப்பதால் அவை
நம்மை சென்றுவிட்டாலும், அல்லது துயரத்தை கொடுக்கும்
நிலைக்கு சென்று விட்டாலும் அவைகளை விட்டுவிட்டு என்றென்றும் சுகத்தையே
கொடுக்ககூடிய இறைவனின் கால்களை பிடித்து கொள்ளலாம்.
வேதாந்தத்தில் விஷயம், பதா3ர்த்தம் என்கின்ற இரண்டு அருமையான சொற்கள்
இருக்கிறது. விஷயம் என்பது
நம்மை பந்தப்படுத்துகின்ற பொருட்களை குறிக்கிறது. பதார்த்தம்
என்கின்ற சொல்லுக்கு இரண்டு வகையான அர்த்தங்கள் இருக்கிறது. ஒன்றின்
இருப்பே மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது ஒருவகை,
அதன் இல்லாமையே மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது இரண்டாவது வகையாகும்
சில பேர் நம்மிடத்திலே இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும், சிலர் இல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சியாக
இருக்கும். அதேபோல கடவுளை சார்ந்திருப்பது மகிழ்ச்சியை
தருகின்றது. உலகத்திலுள்ள எதனுடன் கூடிய உறவும் மனவமைதியை
கெடுக்கும். உறவுகளினால அடைகின்ற மன உளைச்சலை கடவுளிடம்
கொட்டிவிடலாம்.கடவுளை சார்ந்திருக்கும் நிலையானது ஒரு
அருமையான நிலையாகும். உலகம் கொடுக்கின்ற துயரத்தில் இருந்து
மீண்டெழுவதற்கு கடவுள் பக்திதான் உதவிகரமாக இருக்கும். எனவே
இந்த இடைபட்ட நிலை முற்றிலும் அவசியமாகின்றது. கடவுள் பக்தியில்
திளைத்து இருக்கும் மனதுதான் ஒருநிலைப் பட்டிருக்கும். ஏனெனில்
கடவுளைத் தவிர வேறெந்த சிந்தனையும் மனதில் இல்லை, அவரைத் தவிர
அடையவேண்டியது வேறெதுவுமில்லை. இந்த இடைப்பட்ட நிலையை
அடைந்து நிலைத்து விட்ட பிறகு அடுத்த என்ன செய்யலாம்.
கடவுளின் இயல்புதன்மை என்ன? அவரும் ஒரு மனிதனா? மனிதன் என்றால் என்றும்
இருப்பவரா? போன்ற கேள்விகள் மனதில் எழலாம். கடவுள் பக்தி எனக்கு ஆரோக்கியமான மனதை கொடுத்திருக்கிறது. இந்த மனநிலை ஞானயோகத்தில் முழுஈடுபாடுடன் தொடர்வதற்கு சாதகமாக இருக்கிறது.
கடவுள் பக்தி இல்லையென்றால் உலகத்தை சார்ந்துதான் வாழவேண்டும்.
அதனால் மனதை பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தான் செயல்பட்டு
கொண்டிருக்க வேண்டும். இது பிடிப்பு எதுவும் இல்லாமல் கங்கை
பிரவாகத்தில் இறங்குவதற்கு சமமாகும்.
நாம் நிலையற்ற இந்த உடலை நம்பினால் உறுதியாக தொட்ங்கப்பட்ட
செயலை முழுமையாக செய்து முடிக்க முடியாது. நம் உடலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது,. இதேபோல மனதையும் நம்பி எந்த செயலிலும் ஈடுபட முடியாது. மனம் எந்த சூழ்நிலையில் எப்படி செயல்படும், உணர்ச்சிவசப்படும்
என்று கூறமுடியாது. உணர்ச்சிகளின் தொகுதியாக இருக்கும் இந்த மனதையும்
நம்ப முடியாது.
கோபப்படுவது எதிர்செயலாகும். எதாவது ஒரு செயலின் விளைவால்தான் கோபம்
வெளிப்படும். காரணமில்லாமல் கோபம் வராது.
விவிதஹ - பலவிதமாக இருக்கின்ற
ஆதி4வ்யாதி4ஷதைர் -நூற்றுக்கணக்கான உடல் உபாதைகளும், மனதில் எழும் உணர்ச்சிகளும், பிரச்சனைகளும்
ஆரோக்3யம் - மனநலத்தையும், உடல்நலத்தையும்
உன்மூல்யதே - பாதிக்கிறது.
இந்த பாதிப்பு நிலையானதாக இருக்கலாம், அல்லது தற்காலிகமானதாகவும் இருக்கலாம்.
செல்வத்தின் நிலை என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்போது
லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ருதத்3வாரா
வறுமையில் இருக்கும்போது அதிகபணம் வந்தால் என் குறையெல்லாம்
நீங்கிவிடும் என்று நினைக்கின்றோம். பணம் வந்துவிட்டால் வறுமையால் அனுபவிக்கும் துயரங்கள் நீங்கிவிடும்.
ஆனால் பணத்தினால் வருகின்ற துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்போம்.
பணம் இல்லாது இருந்தாலே மனவமைதியோடு இருந்திருக்கலாம் என்று நினைக்க
தோன்றும். எனவே செல்வம் எங்கேயெல்லாம் இருக்கின்றதோ
அங்கேயெல்லாம அதன் இருப்பினால் வருகின்ற துயரங்களும் இருக்கும். நல்ல உறவுகள் கெடும். ஓட்டை குடிசையில் விழும்
மழைப்போல பிரச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கும்.
ஜாதம் ஜாதம் ம்ருத்யு ஆத்மஸாத் கரோதி - தோன்றியிருக்கும்
அனைத்தும், அடைந்திருக்கும் அனைத்தும்
எமன் வாய்க்குள்தான் செல்லப்போகிறது.
அவஷ்யம் - நிச்சயமாக
ஆஷு - நேரிடையாக
நிரங்குஶேன - எல்லையற்ற
சக்தியுடைய
விதினா - பிரம்மாவினால்
தத் கிம் விதி4னா ஸுஸ்தி2ரம் நிர்மிதம் - படைக்கப்பட்டதில் எந்தவொன்று நிலையானதாக இருக்கிறது என்று
பார்த்தால் எதுவும் நிலையானதல்ல என்று அறிந்து கொள்ளலாம்.
ஸ்லோகம்-73
கா3த்ரம்
ஸங்குசிதம் க3திர்விக3லிதா ப்4ரஷ்டா ச த3ந்தாவலி
த்3ருஷ்டிர்நஷ்யதி வர்த4தே ப3தி4ரதா வக்த்ரம் ச லாலாயதே |
வாக்யம் நாட்3ரியதே ச பா3ந்த3வஜனோ பா4ர்யா ந ஷுஷ்ரூஷதே
ஹா கஷ்டம் புருஷச்ய ஜீர்ணவயஸ: புத்ரோSப்யமித்ராயதே || 73 ||
இதில் வயோதிக நிலையைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் இந்த காலகட்டத்தில் வாழ்வதற்கு
எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடவுள் பக்தியுடனோ அல்லது தன்னிடத்திலேயே வாழ்வதற்கு தயாராக இருக்கின்ற
நிலையில் இந்த காலக்கட்டத்தில் நன்றாக வாழமுடியும். இல்லையெனில்
பிரச்சனைகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். மனவருத்தத்தோடோ,
மனநிலைசரியில்லாத நிலையிலோதான் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.
மேலும் மற்றவர்களுக்கும் தொல்லைக் கொடுக்கும்படியான வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருப்போம்.
த்3ருட
காத்ரம் - உறுதியான, ஆரோக்கியமான உடல்
கா3த்ரம்
சம்குசிதம் - நலிந்தும், சக்திகுறைந்தும், ஆரோக்கியம் குன்றியதுமான உடல்.
வயோதிகத்தினால் உடலுறுப்புக்களின் சக்தி குறைந்து
காணப்படும். புலன்களும் சக்தி குறைந்து
செயல்படும், தோல் சுருக்கம் அடைந்தும் கண்கள் பார்வை
குறைந்தும், கை, கால்களுக்கு சக்தி
குறைந்தும் செயல்படும்.
க3திர்விக3லிதா - தள்ளாடி நடக்கும் நிலையில்
இருப்போம்
ப்4ரஷ்டா ச த3ந்தாவலி - பற்கள்
விழுந்துவிடும். அல்லது சக்தியுடன் இருக்காது
த்3ருஷ்டிர்
நஷ்யதி - கண்புரை வந்து பார்வையை மங்கச் செய்துவிடும்.
வர்த3தே பதி3ரதா - காதுக்கும் கேட்கும் சக்தி குறைந்துவிடும்.
வக்த்ர்ம் ச லாலாயதே- வாயிலிருந்து எச்சில் தன்னையறியாமல் வெளியே வரும்.
வாக்யம் ச ந அட்3ரியதே - வயதானவனாக
இருப்பதால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதியடையவன் என்று நினைக்கக்கூடாது.
பா3ந்த3வ ஜனஹ - என்
வார்த்தைகளை மதிப்பதில்லை, என்னையும் மதிப்பதில்லை என்று
வருத்தப்படுவோம்.
பா4ர்யா ந
ஷுஷ்ரூஷதே - மனைவியும் என்னை நன்கு
கவனிப்பதில்லை.
வயதான காலத்தில் மனைவியும், மகனும் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும். என்று
எதிர்பார்க்க கூடாது. மனைவியும் வயதானவள் என்பதை
மறந்துவிடக்கூடாது.
ஹா கஷ்டம் - என்ன கஷ்டம்.
புருஷச்ய ஜீர்ண வயஸ: வயதான காலத்தில் இருக்கும் மனிதனுக்கு
புத்ரோSப்யமித்ராயதே - தன்னுடைய
மகன், மகள் இவர்களிடமிருந்து அன்பும்,
ஆதரவும் கிடைக்காமல் மனவருத்தமடைகின்றனர். இவர்களே
பகைவர்களாகவும் மாறி துன்பம் கொடுக்கிறார்கள்.
சம்சாரத்தில் உள்ள குறைகளான அதிருப்தி, நிலையாமை, பயம் ஆகிய
முக்கிய குறைகளைப் பற்றி விரிவாக பார்த்தோம். எனவே உலகத்தை
நம்பி வாழாமல் கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டு அவரை சார்ந்து வாழும் நிலைக்கு
நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இத்துடன் சம்சாரத்தில்
குறைபார்த்தல் என்ற தலைப்பு முடிவடைகிறது.
மோகம்
சம்சாரத்தில் இருக்கும் அடுத்த குறையானது மனமயக்கம், மதிமயக்கம். இதன் பொருள் இந்த உலகம்
கொடுக்கின்ற துன்பங்களையெல்லாம மறந்து மீண்டும் உலகத்தையே நாடி செல்கின்ற நிலையை
இது குறிக்கிறது. மனிதன் துயரமடைந்துக் கொண்டிருப்பதற்கு
காரணம் கடவுளைச் சார்ந்து வாழாமல் இந்த உலகத்தை சார்ந்து வாழ்ந்து
கொண்டிருப்பதனால்தான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் உலகத்திலிருந்து கஷ்டங்களை அடைந்தலும் அதிலிருந்து பாடம்
கற்றுக் கொள்வதில்லை.
ஸ்லோகம்-18
அஜானந்தா3ஹாத்ம்யம் பத்து ஶலப4ஸ்தீவ்ரத3ஹனே
ச மீனோSப்யஞானாத்3வடி3ஷயுதமஶ்னாது பிஶிதம்
|
விஜானந்தோSயேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலான்
ந முஞ்சாம:
காமானஹஹ க3ஹனோ மோஹமஹிமா || 18 ||
மோகம் என்பது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளமுடியாத மதிமயக்கம் என்று
கூறலாம். பாடம் கற்றுக் கொள்வது இரண்டு வகையாக
இருக்கிறது. ஒன்று தன்னுடைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்
கொள்வது, மற்றொன்று மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து பாடம்
கற்றுக் கொள்வதாகும்.
மற்ற ஜீவராசிகளுக்கு தன் சொந்த அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்
அறிவு இல்லை. விட்டில்பூச்சி நெருப்பை நாடி அதிலேயே
விழுந்து இறந்து விடுகிறது. மற்ற பூச்சிகள் இறந்து கிடப்பதை
பார்த்தும் அதனால் அறிவை அடைய முடியாமல் தானும் அதே தவறை செய்து உயிரிழக்கிறது.
மீன் தூண்டில் இருக்கும் புழுவை சாப்பிடும் ஆசையோடு சென்று அதில்
மாட்டிக் கொள்கிறது. மற்ற மீன்களும் இதேமாதிரி மாட்டிக்
கொண்டிருப்பதை பார்த்தாலும் அதனால் அந்த அபாயத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.
குரங்கானது குறுகிய வாயுள்ள பாத்திரத்தில் உள்ள தின்பண்டத்தை கையை உள்ளேவிட்டு
அள்ளிக்கொண்ட பிறகு மூடிய கையை வெளியே எடுக்க முடியாமல் தவிக்கிறது. மனிதர்கள் தன்னை அடிக்கும்போதும் தப்பித்துக் கொள்ள தின்பண்டத்தை
போட்டுவிட்டால் கையை வெளியே எடுத்து கொண்டு ஒடிவிடலாம். ஆனால்
அவ்வாறு செய்வதற்கு அதனுடைய புத்தி வேலை செய்வதில்லை. அதேபோல
மனிதர்கள் துன்பம் தரக்கூடிய உலக விஷயங்களை விடாமல் பிடித்துக் கொண்டு
இருக்கிறார்கள்.
இறைவன் மோகத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை கண்டுபிடிக்கும்
அறிவை கொடுத்தாலும், வாழ்க்கையில் நாம அடைகின்ற
அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய அறிவைக் கடவுள் கொடுத்திருந்தாலும்,
நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மீண்டும்,
மீண்டும் அதே தவறையே செய்து கொண்டு துன்பத்தில் இருக்கின்றோம்.
பரீக்ஷ்யலோகான கர்மசிதான் ப்ராஹ்மனஹ நிர்வேதமாயாத் என்ற உபநிஷத்
வாக்கியம் சிலமனிதர்கள் உலகானுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்று
சொல்வதை பார்க்கிறோம். இதில் பிராஹ்மனஹ
என்ற சொல் சாத்விக மனிதனை குறிக்கிறது. அனுபவங்களே நமக்கு
பாடத்தை கொடுக்காது. அனுபவங்களை ஆராய்ந்து பார்த்துதான்
அறிவை அடைய முடியும். இளமைக் காலத்திலேயே தொலைநோக்கு
பார்வையுடன் நம்முடைய வயதான காலத்தில் நன்றாக, நிம்மதியாக
வாழ்வதற்கான மனநிலையை அடைந்திடும் வகையில் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ள
வேண்டும்.
அஜானந்தா3ஹாத்ம்யம் பத்து ஶலப4ஸ்தீவ்ரத3ஹனே
விட்டில் பூச்சியானது நெருப்பிலும், எண்ணெயிலும்
மற்ற பூச்சிகள் இறந்து கிடப்பதை பார்த்தும் அபாயத்தை அறிந்து கொள்ளாமல் தானும் விழுந்து
மடிகின்றன.
ச மீனோSப்யஞானாத்3வடி3ஷயுதமஶ்னாது பிஶிதம் |
அதேபோல மீனும் தூண்டிலில் இருக்கும் புழுவை உண்ணவிரும்பி அந்த தூண்டிலிலே
மாட்டிக் கொள்கின்றது. இதேமாதி மற்ற மீன்களும் மாட்டிக் கொண்டு
துடிப்பதைக் கண்டும் இந்த தவறை செய்கிறது.
யேதே வயமிஹ - அறிவுடைய நாம் மதிமயக்கத்தினால், மோகத்தினால்
விபஜ்ஜால ஜடிலான் - சம்சாரத்தில் இருக்கின்ற குறைகளான, அதிருப்தி,
பயம், நிலையாமை என்கின்ற வலைகளில்
விஜானந்தோ - சிக்கிக் கொள்கிறோம் என்று நன்றாக
தெரிந்து கொண்டும் அதில் மாட்டிக் கொள்கிறோம்
காமான ந முஞ்சாம: நாம் உலகத்தை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மீள்வதில்லை. நம்முடைய மகிழ்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும்
முழுவதுமாக பாதுகாப்பற்ற, துயரத்தையே கொடுக்கின்ற உலகத்தைத்தான்
சார்ந்து இருக்கின்றோம்.
ஆனால் கடவுள் பக்தியிருந்தால் உலக இன்பங்களை, விஷயங்களை
அனுபவிக்கலாம்.
க3ஹனோ மோஹமஹிமா - இவைகளே மோகத்தின் சக்திகளாகும்
இந்த கருத்தையே பகவத்கீதையில் அர்ஜுனனின் கேள்விக்கு பதிலாக பகவான் கிருஷ்ணர்
உபதேசித்து இருக்கிறார்.
அத கேன ப்ரயுக்தோSயம் பாபம் சரதி புருஷஹ |
அனிச்சன்னபி வார்ஷ்னேவ ப3லாதி3வ நியோஜிதஹ ||
3.36||
இந்த மோகத்தையே மாயையின் தமோ குணத்தின் வெளிப்பாடாக கூறப்படுகிறது. சத்துவ குண பிரதானமாக இருப்பவன் பிராமணன் என்றும், ரஜோ குண பிரதானமாக இருப்பவனை க்ஷத்திரியன், வைசியன்
என்றும், தமோகுண பிரதானமாக இருப்பவனை சூத்திரன் என்றும்
அழைக்கப்படுகிறது.
ஸ்லோகம்-38
வ்யாக்4ரீவ திஷ்டதி ஜரா ப்ரிதர்ஜயந்தி
ரோகா3ஶ்ச ஶத்ரவ இவ ப்ரஹரந்தி தே3ஹம் |
ஆயு: ப்ரிஸ்ரவதி பி4ன்னக4டாதி3வாம்போ4
லோகஸ்ததா2ப்யஹிதமாசரதீதி சித்ரம் || 38 ||
வ்யாக்4ரீவ திஷ்டதி ஜரா - இளமைக்
காலத்தில் இருக்கும் போது வயதான காலமானது பெண்புலியைப் போன்று
காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்புலியை விட பெண்புலி மிகவும் மூர்க்கமானது.
ப்ரிதர்ஜயந்தி - பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
இளமையில் நம் உடலிலுள்ள உறுப்புக்கள் சக்தியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். உடலின் நோய்
எதிர்ப்பு சக்தி முழுசக்தியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும். எனவே உடலை தாக்கும்
கிருமிகள் வயதான காலத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும்.
ரோகா3ஶ் - வியாதிகள்,
இவைகள் உடலை தாக்குவதற்கு எப்பொழுதும் தயாராகவே
இருக்கின்றன.
ச ஶத்ரவ இவ ப்ரஹரந்தி தே3ஹம் - உடலை தாக்கும் வியாதிகள் இருட்டறையில் தாக்குகின்ற எதிரிகள்
போன்றவைகளாகும்.
இருட்டறையில் தாக்கும் எதிரிகளை எப்படி நம்மால் விரட்ட
முடியாதோ அதுபோல வயதான காலத்தில் தாக்கும் இந்த வியாதிகளை நம்மால் விரட்ட
முடியாது. ஒரு நோயை குணப்படுத்தினால், வேறொன்று வந்து நம் உடலை தாக்கும். தொடர்ந்து தாக்குதல்
நடைபெற்றுக்கொண்டிருக்கும். எனவே நம் வாழ்நாள் முழுவதும் நம் உடல்
ஆரோக்கியத்திற்காக, மனவமைதிக்காக செலவிட்டுக்
கொண்டிருப்போம். இந்த நிலையில் எப்படி வேதாந்த சிரவணம் செய்ய முடியும், சாதனசதுஷ்டய சம்பத்தியை அடைய முடியும். எனவே இளமைக் காலத்திலேயே வேதாந்த
சிரவணத்தை தொடங்கிட வேண்டும். சாதன சதுஷ்டயத்தை அடைவதற்கான முயற்சியை
ஆரம்பித்துவிட வேண்டும்.
பி4ன்ன க4டாதி3 இவ அம்போ4 - வெடிப்பு உள்ள பானையில் இருந்து நீரானது விரைவாக வெளியேறிக்
கொண்டிருக்கிருப்பது போல.
ஆயு: ப்ரிஸ்ரவதி - நம்
வாழ்நாள் மிகவிரைவாக கழிந்து கொண்டிருக்கிறது. நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள்
வழியாக பிராணனானது கொஞ்ச கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. புலன்களையும்
துவாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ததா2பி - இப்படிபட்ட நிலையில் நாம் இருந்தாலும்
லோகஸ் அஹிதம் ஆசரதீ - தமக்கு எது நன்மையை தரக்கூடியது என்பதை நாம் அறிந்து
கொள்வதில்லை. தனக்கு எது வேண்டும், எது தேவையையில்லை என்பதை யாரும் தெளிவாக முடிவு செய்வதில்லை. அதை முடிவு
செய்யும்போது வாழ்க்கையில் முக்கால் பாகம் சென்றுவிட்டிருக்கும்.
அஹோ சித்ரம் -
என்ன விந்தை!
ஸ்லோகம்-43
ஆதி3த்யஸ்ய க3தாக3தைர்ஹரஹ: ஸம்க்ஷீயதே ஜீவிதம்
வ்யாபாரைர்ப3ஹுகார்யபா4ரகு3ருபி4: காலேSபி ந ஞாயதே |
த்3ருஷ்ட்வா ஜன்மஜராவிபத்திமரணம் த்ராஸஶ்ச
நோத்பத்3யதே
பீத்வா
மோஹமயீம் ப்ரமாத3மதி3ராமுன்மத்தபூ4தம் ஜக3த் || 43 ||
அனைத்து மனிதர்களும் செயல்-விளைவு என்கின்ற
பொறியில் மாட்டிக்கொண்டு துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேத சாஸ்திரம் அழகான வாழ்க்கை முறையை மனித
இனத்துக்கு கொடுத்திருக்கிறது. இந்த முறையில் மனிதன் செயலில் ஈடுபட்டு அறிவை
அடைந்து அதன் வலையில் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்.
நாம் சாஸ்திரம் செய்யக் கூடாது என்கின்ற
செயல்களையும் சேர்த்துதான் செய்து கொண்டிருக்கின்றோம். நம்மிடத்தில் இருக்கும் ராக-துவேஷம்தான்
இத்தகைய செயல்களை செய்யும்படி தூண்டிக் கொண்டிருக்கும். இதையே பகவான் கிருஷ்ணர்
இவ்வாறு கூறியிருக்கிறார். நாம் எல்லோரும் அறிவை அடைவதற்கு முன்னால் செய்யக்கூடாத, விரும்புகின்ற செயல்கள் பிரதானமாக
இருக்கும். பிறகு செய்யக்கூடாத செயல்களை உடனே விட்டுவிட வேண்டும். ஆசைவயப்பட்டு
செய்கின்ற செயல்களை கொஞ்ச கொஞ்சமாக விட்டுவிட வேண்டும். நித்திய, நைமித்திக கர்மங்களை செய்து கொண்டுவர வேண்டும். இறைவனின்
நாம ஜபத்தையாவது விடாமல் செய்து கொண்டுவர வேண்டும். இல்லறத்தில்
இருக்கும் போது காம்ய பிரதான செயல்களை முதலில் செய்து கொண்டு வரலாம். பிறகு நித்திய பிரதான அதாவது பஞ்சமஹா யக்ஞ பிரதான செயல்களை செய்து கொண்டு
வரவேண்டும்.
வானப்ரஸ்தாஶ்ரமத்தில் உபாஸன பிரதான செயல்களை
செய்து கொண்டு வரவேண்டும். இது உபாஸன பிரதானமாக
கூறப்படுகிறது. பிரம்மசர்ய ஆஶ்ரமத்தில் அத்யயன பிரதானமான
செயல்களை செய்து கொண்டு வரவேண்டும். சன்னியாஸ ஆஶ்ரமத்தில்
ஞான பிரதானமான செயல்களை செய்ய வேண்டும். இல்லறத்தில் இருந்து
கொண்டும் செயல் பிரதானங்களை மாற்றிக் கொண்டும் செயல்படலாம்.
ஆதி3த்யஸ்ய க3தாக3தைர்ஹரஹ: சூரியன்
உதிப்பதும், மறைவதும்
ஸம்க்ஷீயதே ஜீவிதம் - வாழ்நாள் ஒன்று குறைந்து விடுகிறது.
வ்யாபாரைர் - நாம் அன்றாட
கடமைகளும், செயல்களும் செய்து
கொண்டிருப்பதால் நமக்கு வாழ்க்கையை திரும்பி பார்க்க நேரம் இருப்பதில்லை
ப3ஹு கார்யபா4ர கு3ருபி4:
- பலவகையான பொறுப்புக்கள் பல
செயல்களை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.
காலேSபி ந ஞாயதே - காலம்
நம்மை விட்டு செல்வதை அறியாமலே இருக்கின்றோம்.
ஜன்ம ஜரா விபத்திமரணம் - பிறப்பு, வயோதிகம்,
ஆபத்துக்கள், மரணம்
த்3ருஷ்ட்வா – இவைகளை பார்த்து கொண்டிருந்தாலும்
த்ராஸஹ பீத்வா மோஹமயீம் – மனிதர்கள் மோகத்தின்
வசத்தில் மாட்டிக்கொண்டு
மதி3ரா - மது அருந்தியிருப்பவனைப் போல
ச ந உத்பத்3யதே - அவைகளை கண்டு
கொள்வதில்லை.
ப்ரமாத3 -கவனக்குறைவுடனும், கண்டுகொள்ளாமலும் இருந்து கொண்டு
உன்மத்தபூ4தம்
ஜக3த் - இந்த சாரமற்ற உலகத்தில், பைத்தியக்கரத்தனமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment