Monday, January 21, 2019

வைராக்கிய சதகம்-பகுதி-3 (Vairagya Satakam-Part3)


வைராக்கிய ஶதகம்-பகுதி-3
பர்த்ருஹரி
ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்
வைராக்கிய புகழ்ச்சி
ஸ்லோகம்-10
ஆஶா நாம நதீ3 மனோரத2ஜலா த்ருஷ்ணாதரங்கா3குலா
   ராகா3த்3ராவதீ விதர்கவிஹகா3 தை4ர்யத்3ருமத்4வம்ஸினீ |
மோஹாவர்தஸுது3ஸ்தராதிக3ஹனா ப்ரோக்துங்க3சிந்தாததீ
   தஸ்யா: பாரக3தா விஶுத்34மனஸோ நந்த3ந்தி யோகீ3ஶ்வரா: | 10 ||

அனைத்து மனிதர்களும் சம்சார காட்டாற்றில் விழுந்து துன்பத்தை அடைகிறார்கள், கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
ஆஶா நாம நதீ3 - ஆசை என்கின்ற நதியில்
மனோரத2ஜலா - நீர் என்பது விதவிதமான பொய்யாக காட்சியளிக்கின்ற போகப் பொருட்கள், விஷயங்கள், உறவுகள்
த்ருஷ்ணா - தீவிரமான ஆசை, அடையவேண்டுமென்ற தீராத அவா
தரங்க3 ஆகுலா  அலைகள் போல மனதை அலைய வைத்துக்கொண்டிருக்கிறது
ராகா3 க்3ராவதீ - பற்று என்கின்ற சுறாமீன்களின் பிடியில் மாட்டிக் கொள்கிறோம்
விதர்க விஹகா3 - பறவைகள் நதியைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து கொண்டு இருப்பதைப் போல மனமானது இதை அடையலாமா அல்லது அதை அடையலாமா என்ற முடிவெடுக்க முடியாமல் சந்தேகத்துடன் தவிக்கிறது.
விதர்கஹ என்றால் சந்தேகம், இந்த ஆசையை அடையலாமா அல்லது அந்த ஆசையை அடையலாமா என்கின்ற மனக்குழப்பம்.
தை4ர்ய த்3ரும - மனதைரியத்தையும், மனவுறுதியையும்,
த்4வம்ஸினீ - அழித்து விடுகிறது.
மோஹ் ஆவர்த ஸுது3ஸ்தராதிக3ஹனா - பெரும் நீர்ச்சுழல்களே மதிமயக்கம், மனமயக்கம்
ப்ரோக்துங்க3சிந்தாததீ நதியிருபுறமும் இருக்கும் உயரமான இருக்கரைகளனது மனதில் இருக்கும் கவலைகளைக் குறிக்கிறது.
தஸ்யா: இந்த நதியை
விஶுத்34மனஸோ  - ஆத்ம ஞானத்தை அடைந்திருக்கும் மனதை உடைய ஞானிகள்தான்
பாரக3தா - கடக்கிறார்கள். தன்னிடத்தில் இருக்கும் பூரணத்வத்தை உணர்ந்து கொண்டு சம்சார நதியை கடந்துவிடுகிறார்கள்.
நந்த3ந்தி - தன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
யோகீ3ஶ்வரா் – வைராக்கியத்தை முழுமையாக அடைந்திருக்கும் யோகிகள்
.
வைராக்கியம் என்பது விருப்பு-வெறுப்புக்களிலிருந்து விடுதலை அடைந்த மனநிலையாகும். இந்த மனநிலையை அடைந்திட வேண்டும். ஆசை வேறு, பற்று வேறாகும். ஒரு பொருளை அடைவதற்கு முன் அதை அடைய வேண்டும் என்ற எண்ணமே ஆசையாகும். அதை அடைந்த பின்னர் ஆசை நிறைவேறிவிட்டது. பிறகு அதன் மீது இருப்பது பற்றாகும். ஆசைப்பட்டு அடைந்தது தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என்ற பயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பறவைகள் ஆற்றின் மீது பறந்து கொண்டே நீருக்கு மேலே வருகின்ற மீன்களை பிடித்து தின்கின்றது. அதுபோல் முடியுமா, முடியாதா என்கின்ற சந்தேகப்பறவை ஒரு செயலை செய்வதற்கு முன் நம் மனதில் பறந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் சந்திக்க நேரிடும். அதனால தன்னம்பிக்கை குன்றி மனவலிமை இழந்து விடுவோம். இளமையில் இருக்கின்ற உற்சாகமும், மனதைரியமும் வயோதிகத்தில் மிகவும் குறைந்து காணப்படும். ஆசையே எல்லாவிதமான மனதுயரங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. இது மனவுறுதியையும், உற்சாகத்தையும் குலைத்து விடுகிறது. ஆற்றில் இருக்கும் !நீர்ச்சுழிகளே மோகமாகும், மதிமயக்கமாகும். ஆசைகள் அதிகமாக அதிகமாக நல்லது, கெட்டதை பகுத்தறியும் அறிவு குறைந்துவிடும். எப்படி இந்த நீர்சுழலில் சிக்கிக் கொண்டால் நதியை கடக்க முடியாதோ அதுபோல ஆசை என்கின்ற சுழலில் சிக்கிக் கொண்டால் வைராக்கியத்தை அடையவே முடியாது, சம்சாரக் கடலை கடக்கவே முடியாது. சம்சார ஆற்றின் மனத்துயரங்கள் என்கின்ற இருகரைகள் உயர்ந்து காணப்படுகிறது.

ஸ்லோகம்-12
அவஶ்யம் யாதாரஶ்சிரதரமுஷித்வாபி விஷயா
   வியோகோ3 கோ பே4த3ஸ்த்யஜதி ந ஜனோ யத்ஸ்வயமமூன் |
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ர்யாத3துலபரிதாபாய மனஸ:
   ஸ்வயம் த்யக்த்தா ஹ்யேதே ஶமஸுக2மனந்தம் வித3த4தி || 12 ||

இதில் ஒருபொருளை தொலைத்து விடுவதற்கும், விரும்பி துறப்பதற்கும் உள்ள வேற்றுமையை கூறியிருக்கிறார். அடைந்த எந்தப்பொருளும் ஒருநாள் நம்மைவிட்டு சென்றுவிடும். இது இயற்கை விதி. தோன்றியது மறைதலும், உயர்வு-தாழ்வும் இதற்கு சான்றாகும். எனவே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை விட்டுபோவது என்பது  தவிர்க்க முடியாதது. அதேபோல விரும்பி துறந்து விடுவதிலும் நம்மை விட்டுபோவது என்பது நடக்கிறது. இரண்டிலும் நம்மை விட்டு சென்றுவிடுதல் பொதுவாக இருந்த போதிலும் துறத்தலை ஏன் மனிதர்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்று வியக்கிறார் ஆசிரியர். விட்டுப்போவது இரண்டிலும் இருந்தபோதிலும் அதன் விளைவுகளில்தான் வேற்றுமை இருக்கிறது.

ஒருபொருளை இழக்கும்போது அது போய்விட்டதே என்கின்ற மனவருத்தமும், கோபமும் ஏற்படுகின்றது. அந்த பொருள் என்னிடத்தில் இருக்கவேண்டும் என்கின்ற என் ஆசையை மீறி அது என்னிடமிருந்து சென்றுவிட்டதே என்ற மனவருத்தம் ஏற்படுகிறது. ஆனால் விரும்பி அடைந்திருக்கும் ஒன்றை நாமே துறந்துவிட்டால், தானம் செய்துவிட்டால் என் மனம் மகிழ்ச்சி அடையுமே தவிர வருத்தமடையாது. என்னை விட்டு சென்றுவிட்ட அந்தப்பொருளை நினைத்து வாடிக் கொண்டிருக்காது.

தொலைந்தப் பொருள்தான் நமக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்ககூடியதாக இருக்கிறது. மனவமைதியைக் குலைக்கிறது.  இது நம்முடைய இயலாமையைக் காட்டிக் கொடுக்கிறது. ஆனால் நாமே துறந்தப் பொருளுக்கு அந்தமாதிரியான சக்தி கிடையாது. அது நமக்கு மகிழ்ச்சியைதான் கொடுக்குமே தவிர மனதை வருத்தாது. ஆகவே துறத்தல், இழத்தல் இரண்டிலுமே பிரிவு என்பது இருந்தாலும், அதனால் அனுபவிக்கும் விளைவுகள் வெவ்வேறானவை என்று உணர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு பெண் கோவிலில் மூலவரை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவரும் போது தன்னுடைய தங்கசங்கிலி தொலைந்து போய்விட்டதை உணர்கிறாள். இப்போது அவள் மனம் கடவுளை நினைப்பதை விட்டுவிட்டு தொலைந்து போல அந்த நகையை நினைத்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் கடவுளை நினைத்து இவ்வாறு வேண்டிக் கொண்டாள். இறைவா தொலைந்து போன அந்த நகை கிடைத்துவிட்டால், அதை உனக்கே காணிக்கையாக கொடுத்துவிடுகிறேன் என்று உளமுருக வேண்டி கொண்டாள். சிறிதுநேரம் கழித்து அந்த நகையானது கோவில் காப்பாளர் மூலம் திரும்ப கிடைத்துவிட்டது.. அவளும் வேண்டிக்கொண்ட மாதிரி அந்த நகையை கோவிலுக்கே காணிக்கையாக கொடுத்துவிட்டாள். இந்த சம்பவத்தில், நகையை இழந்தபோது மனம்வருந்திக் கொண்டிருந்த அந்தப்பெண் அதே நகையை காணிக்கையாக கொடுத்தப்பின்னர் மனமகிழ்ச்சியுடன், மனநிம்மதியுடன் வீட்டிற்கு சென்றாள். இரண்டு நிலையிலுமே நகை அவளிடம் இருந்து சென்றுவிட்டது ஆனால் சென்ற விதமே அவளது இரண்டுவிதமான மனநிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது. தொலைந்த போது வருந்திய மனம், காணிக்கையாக கொடுத்தபோது மகிழ்ச்சியடைந்துவிட்டது. இதுதான் தொலைத்தலுக்கும், துறத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடு.

வ்ரஜந்த: ஸ்வாதந்த்ர்யாத்3 - தன்னுடைய விருப்பமில்லாமல் எதாவது ஒருபொருள் நம்மை விட்டு சென்று விடும்போது
அதுலபரிதாபாய மனஸ: - மனம் வருத்தமடைகிறது
ஸ்வயம் த்யக்த்தா ஹ்யேதே - அதேப்பொருள் தன்னாலே விரும்பி துறக்கும் போது
ஶமஸுக2மனந்தம் வித3த4தி - எல்லையற்ற ஆனந்தம், திருப்தியை கொடுக்கிறது.

பொருள் தொலைத்தல் என்பதை தவிர்க்க முடியாது. எனவே துறத்தலை ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமானது. துறத்தல் என்பது மனதளவில் இருந்தாலும் சரிதான். பொருட்கள் நம்மிடமிருந்தாலும், அதை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அவைகள் நம்முடையதல்ல என்ற வைராக்கியத்துடன், பற்றற்ற மனநிலையோடு  இருந்துவிட்டாலே போதும் துறத்தலுக்கு சமமாகின்றது, அவைகள் சென்றுவிட்டாலும் அதனால மனம் பாதிப்பு அடையாது. நாம் பயன்படுத்துகின்ற போகப்பொருட்கள் எல்லாமே என்னுடையதல்ல என்ற மனவுறுதியுடன் அவைகளை பயன்படுத்திக் கொண்டிருத்தலே பற்றற்ற நிலை அல்லது துறந்துவிட்ட நிலையாகும். பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போது வகுப்பறைகளை, விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். படிப்பு முடிந்ததும் அவைகளை விட்டுவிடுகிறோம், அதனால் மனவருத்தமடைவதில்லை, ஏனென்றால் அவைகள் நமக்கு சொந்தமானவைகள் அல்ல என்ற புத்தியோடு பயன்படுத்துகிறோம். அனைத்தும் இறைவனுடைய சொத்து என்றும், நாம் அனுபவிப்பதற்காக கொடுத்திருக்கிறார். அவைகளை திருப்பி எடுத்துக் கொள்ளவும் செய்வார். எனவே நம்மிடத்திலுள்ள பொருட்கள், உறவுகள், வசதியான வாழ்க்கை சென்றுவிட்டால், அவைகள் இறைவன் நமக்கு தற்காலிகமாக கொடுத்திருக்கிறார். அவரே திருப்பி எடுத்துக் கொண்டார் என்று நினைக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-13
ப்3ரஹ்மஞானவிவேகநிர்மலதி4: குர்வந்த்யஹோ து3ஷ்கரம்
   யன்முஞ்சந்த்யுபபோ44பா4ஞ்ஜ்யபி த4னான்யேகாந்ததோ நி:ஸ்ப்ருஹா: |
சம்ப்ராப்தான்ன புரா ந சம்ப்ரதி ந ச ப்ராப்தௌ த்3ருட4ப்ரத்யயான்
   வாஞ்சா4மாத்ரபரிக்3ரஹானபி பரம் த்யக்தும் ந ஶக்தா வயம் ||

துறத்தல் என்பதை கடைபிடிப்பது மிகவும் கடினமானது. ஆகவே படிப்படியாக இந்த துறத்தலை மனதில் கொண்டு வருவதற்காக துறத்தலை 1. தம் வசமுள்ளதை உண்மையாக துறத்தல், 2.அவைகளை கற்பனையாக துறத்தல், 3. தம்வசம் இல்லாததை துறப்பதாக கற்பனை செய்தல் என்ற மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது.. இந்த மூன்றாவது நிலையில் உள்ள துறத்தலையே கடைப்பிடிப்பது கடினமாக இருக்கின்றது.

உதாரணமாக ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் தருவதாக வாக்களித்தார். எனவே நாமும் இதையே வரவாக வைத்துக்கொள்வோம். பிறகு அவரே தன்னால் தரமுடியாது என்று கூறிவிட்டால், நம் மனம் ஒரு லட்சம் ரூபாயை இழந்துவிட்டதைப் போல கவலை கொள்ளும். லாட்டரி சீட்டில் இரண்டாம் பரிசான காமிரவை வென்றாலும், முதல் பரிசான மொபைலை வெல்லவில்லையே என்ற கவலைப்படுவோம். இந்த இரு உதாரணத்திலும் இல்லாததை இழந்துவிட்டதாக எண்ணி வருத்தப்படுதல். முதலில் இந்த மனநிலையை மாற்ற வேண்டும்.

ப்3ரஹ்மஞானவிவேகநிர்மலதி4: - பிரம்ம ஞானத்தை அடைந்திருக்கும் ஞானிகளின் மனம் பற்றற்றதாகவும், தூய்மையாகவும் இருக்கும்.
குர்வந்த்யஹோ து3ஷ்கரம் – இவர்கள் அடைவதற்கு அரிதான பிரம்ம ஞானத்தை அடைந்து இருக்கிறார்கள்.
உபபோ44 பா4ஞ்ஜி - இவர்களே பயனுள்ளதாக நாம் நினக்கின்ற எல்லாவற்றையும்
ஏகாந்ததஹ முழுவதுமாக துறந்தவர்கள்
4னானி அபி முஞ்சந்தி - உலகத்திலுள்ள தனக்கு சொந்தமான அனைத்து செல்வங்களையும் துறந்தவர்கள்
நி:ச்ப்ருஹா: - ஏற்கனவே அவைகள் மீதுள்ள பற்றை முழுவதுமாக நீக்கிவிட்டவர்கள்.

அதனால்தான் அவர்களால் இவ்வாறு தன்னுடைய உரிமையையும் துறக்க முடிகிறது
வாழைப்பழம் காயாக இருக்கும்போது அதனுடைய தோலை நீக்க முடியாது. ஆனால பழுத்த பின் மிகவும் சுலபமாக அதன் தோலை நீக்கி விடலாம். மனதில் பற்றற்ற நிலை வந்துவிட்டால் தன்னுடைய உடைமைகளை துறப்பது மிகவும் எளிதாகி விடும். சாதாரண மனிதர்களால இந்த முதல்நிலை துறத்தலை கடைப்பிடிப்பது என்பது மிகவும் கடினமாகும். எனவே மூன்றாவது நிலையான கற்பனையான உடைமைகளை கற்பனையாக துறத்தலில் ஆரம்பிக்க வேண்டும்.

சம்ப்ராப்தான் ந புரா - இவைகள் முன்பு எப்போதும் என்னுடையதாக இல்லை
ந சம்ப்ரதி - இப்பொழுதும் என்னுடையதாக இல்லை
ந ச ப்ராப்தௌ த்3ருட4ப்ரத்யயான்- எதிர்காலத்திலும் உண்மையில் என்னுடையதாகவும் ஆகப்போவதில்லை
வாஞ்சா4மாத்ர பரிக்3ரஹான் அபி - இத்தகைய கற்பனையான உடைமைகளை கூட
பரம் த்யக்தும் ந ஷக்தா வயம் - சாதாரண மனிதர்களால துறக்க முடிவதில்லை
எனவே இந்த நிலையிலிருந்து முன்னேறி இரண்டாவது நிலைக்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இரண்டாவது நிலையான சொந்த உடைமைகளை கற்பனையாக துறத்தலை முயற்சி செய்து அடைவது எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக பகவத் கீதையில் அர்ஜுனன் போர்புரிவதற்கு முன்பே பீஷ்மர், துரோணர் இவர்களின் இறப்பை எண்ணி மனம் கலங்கிய நிலைதான இந்த இரண்டாம் நிலை. சொந்தங்களின் கற்பனையான இல்லாமையை நினைத்து வருத்தப்படுதல், இழப்பை விரும்பாதிருத்தல்.

இரண்டாவது நிலையான சொந்த உடைமைகளை கற்பனையாக துறத்தலை முயற்சி செய்து அடைவது எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக பகவத் கீதையில் அர்ஜுனன் போர்புரிவதற்கு முன்பே பீஷ்மர், துரோணர் இவர்களின் இறப்பை எண்ணி மனம் கலங்கிய நிலைதான இந்த இரண்டாம் நிலை. சொந்தங்களின் கற்பனையான இல்லாமையை நினைத்து வருத்தப்படுதல், இழப்பை தாங்கும் சக்தியில்லாத நிலையே இரண்டாம் நிலை.

வாழ்க்கையில் எவ்வளவோ அடிப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக குரங்கு குறுகிய வாயுடைய பாத்திரத்திலுள்ள வேர்க்கடலையை சாப்பிட விரும்பி அதனுள் கையை விட்டு அள்ளிக் கொண்டது. மூடிய கைகளுடன் அதனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. அதைப்பார்த்த மக்கள் அந்த குரங்கை விரட்டுவதற்கு கம்பு கொண்டு அடியடியென்று அடித்தார்கள். குரங்குக்கு தப்பிக்க வேண்டுமென்றால், எடுத்த கடலையை போட்டுவிட்டால் கை வெளியே வந்துவிடும் அடிவாங்காமல் தப்பித்திருக்கலாம். ஆனால் அந்தகடலையின் மீதுள்ள ஆசையினால் அவ்வாறு செய்யாமல் அடியை வாங்கிக்கொண்டிருந்தது. அதுபோல மனிதர்களும் தம்முடைய உடைமைகளாலும், சொந்தங்களாலும் எவ்வளவோ கஷ்டங்கள் அடைந்தாலும் அவைகளை, அவர்களை விட்டு பிரிவதில்லை.

ஸ்லோகம்-52
அர்தா2னாமீஶிஷே த்வம் வயமபி ச கி3ராமீஶ்மஹே யாவத3ர்த2ம்
   ஶூரஸ்த்வம் வாதி33ர்பவ்யுபஶமனவிதா4வக்ஷயம் பாடவம் ந: |
ஸேவந்தே த்வாம் த4னாட்4யா மதிமலஹதயே மாமபி ஶ்ரோதுகாமா
   மய்யப்யாஸ்தா2 ந தே சேத்த்வயி மம நிதராமேவ ராஜன்ன நாஸ்தா2 || 52 ||

இந்த ஸ்லோகத்தில் சந்நியாசியானவன் எதையும் இழக்கவில்லை என்பதை எடுத்துரைக்கிறது. வெளிப் பார்வைக்கு ஒன்றுமே இல்லாதவனாகவும், பரிதாபத்திற்குரியவனாகவும் காணப்படுகின்ற சந்நியாசி உண்மையில் அவ்விதமில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது இந்த ஸ்லோகம்.

சந்நியாசிக்கு மனைவி, மகன், உறவுகள் யாருமில்லை, கடைசி காலத்தில் அவனை காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லாதவனாக மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, மனதளவில் அவன் ராஜாவைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதை ஒரு உரையாடல் மூலம் விளக்கப்படுகிறது.

சந்நியாசிக்கும், ஒரு அரசனுக்குமிடையே நடக்கின்ற கற்பனை உரையாடலாக இருக்கிறது.  ஓ அரசனே! நீயும் அளவற்ற செல்வங்களை உடையவனாக இருக்கின்றாய், நானும் அப்படியே வேதாந்த சாஸ்திர செல்வங்களை உடையவனாக இருக்கின்றேன் என்று சந்நியாசி அரசனைப் பார்த்து சொல்கின்றான்.

அர்தா2னாமீஷிஷே த்வம் - நீ செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கின்றாய்
வயமபி ச கி3ராம் - நான் கூட சாஸ்திர
மீஷ்மஹே யாவத3ர்த2ம் - உபதேசிக்கின்ற அனைத்து வாக்கியங்களுக்கும் அதிபதியாக இருக்கின்றேன்.
ஷூரஸ்த்வம் - நீயோ படைபலம், பணபலம், வீரமும், தீரமும் உடையவனாகவும், எதிரிகளை வீழ்த்துகின்ற சக்தி உடையவனாக  இருக்கின்றாய்.
வாதி3 - அத்வைத கொள்கையை எதிர்க்கின்ற வேறுமத கொள்கை உடையவர்களின்
3ர்ப விதா4வ வ்யுபஷமனம் - வாதங்களை, எதிர்ப்புகளை சந்தித்து தோற்கடிக்கின்ற
அக்ஷயம் பாடவம் ந: எல்லையற்ற வாதத்திறமையும், நிபுணத்துவமும் உடையவன் நான்.
ஸேவந்தே த்வாம்  உனக்கு சேவை செய்வதற்காக
4னாட்4யா - செல்வந்தர்கள் போன்ற பெரியமனிதர்கள் தயாராக இருக்கின்றனர்
உன்னைச் சுற்றி பலர் இருக்கின்றனர், உன்னை பலர் பின் தொடர்ந்து வருகின்ற அளவுக்கு புகழ் பெற்ற, பெருமைமிக்க மனிதனாக இருக்கிறாய்
மாமபி - என்னைக்கூட
மதிமலஹதயே - தன்னிடத்தில் இருக்கின்ற அறியாமையை போக்கி கொள்வதற்காக, வேதாந்த உபதேசத்தில் எழுகின்ற சந்தேகங்களை போக்கி கொள்வதற்காகவும்
ஷ்ரோதுகாமா - வேதாந்த சிரவணம் செய்வதற்காகவும்
பலர் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள், சுற்றி வருகிறார்கள்.
த்வயி மம நிதராமேவ ராஜன்ன நாஸ்தா2  அரசனான உனக்கு என்னிடமிருந்து எதுவும் தேவையில்லை என்று அலட்சியப்படுத்தினால்,
மய்யப்யி ந அஸ்தா2 சேத் - அதேபோன்று நானும் உன்னை அலட்சியப்படுத்தி விடுவேன்.

ஸ்லோகம்-53
வயமிஹ பரிதுஷ்டா வல்கலைஸ்த்வம் து3கூலை:
   ஸம இவ பரிதோஷோ நிர்விஶேஷோ விஶேஷ: |
ஸ து ப4வது த3ரித்3ரோ யஸ்ய த்ருஷ்ணா விஶாலா
   மனஸி ச பரிதுஷ்டே கோSர்த2வான்கோத3ரித்3: || 53||

இந்த ஸ்லோகத்தில் வறுமை, செழிப்பு ஆகிய இரண்டு சொற்களுக்கும் புதுவிதமான அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. சாதாரணமாக செழிப்பு என்பது அளவுக்கு அதிகமான செல்வமும், சொத்தும் உடைய நிலை என்று கூறுவர். இதற்கு எதிராக உள்ள நிலையே வறுமை என்று கூறப்படுகிறது. ஆனால் சாஸ்திரத்தில் செழிப்பு என்பது மனநிறைவை குறிக்கிறது. போதும் என்கின்ற மனதிருப்தியும், மகிழ்ச்சியும், தீய உணர்ச்சிகளற்ற, ஆசைகளற்ற நிலையே செழிப்பானதாகும். வறுமையென்பது மனதில் இருக்கும் நிறைவின்மையே ஆகும்.

மனதுக்கு வெளியே எவ்வளவு செல்வமும், வசதியும், சொத்தும் இருந்தாலும் மனதில் திருப்தியும், அமைதியும் இல்லாதவன் ஏழையாக கருதப்படுவான்.  ஆனால் எந்த வசதியும், செல்வமும் இல்லாதிருப்பவன் மனதிருப்தியோடு இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இதிலிருந்து வெளியில் இருக்கும் எந்த பொருளும் மனவமைதியை கொடுக்காது என்பது தெளிவாக தெரிகிறது. மனதிலிருக்கும் நல்லெண்ணங்களும், போதுமென்ற குணமும், நற்குணங்களும்தான் செழிப்பைக் குறிக்கிறது. எனவே மனதுக்கு வெளியேயுள்ள செல்வத்தையோ, சொத்தையோ, வசதியான வாழ்க்கியை வைத்தோ ஏழை, பணக்காரன் என்பதை தீர்மானிக்காதே. ஏழையாகவோ, பணக்காரனாகவோ நாம் இருப்பதற்கு நம்முடைய பிராரப்த கர்மபலனும் காரணமாக இருக்கின்றது. எனவே நாம மனதுக்குள்ளே செழிப்பாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அரசனையும், சந்நியாசியையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு இந்தக் கருத்தானது விளக்கப்படுகிறது. அரசன் ,மாடமாளிகைகள், ஏராளமான ஆபரணங்கள், பொன் பொருட்கள் இவைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் செழிப்பான மனிதன். அதேசமயம் மனதுக்குள்ளும் நிறைவானவராக இருக்கிறார். அவருக்கு எதிரேயிருக்கும் சந்நியாசியோ இவைகளெதுவும் இல்லாதவன். ஆனால் மனதுக்குள்ளே செழிப்பானவாக இருக்கிறார். மனதுக்குள்ளே செழிப்பாக இருக்கும் நிலையில் இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இருவரும் வெளித்தோற்ற செழிப்பை பார்க்கும் போது வேறுபட்டிருந்தாலும், மனநிறைவு என்கின்ற நிலையில் ஒரேமாதிரி இருக்கிறார்கள். இதிலிருந்து மனநிறைவுக்கு வெளியே உள்ள பொருட்கள் காரணமாக இருக்க முடியாது என்று அறிந்து கொள்ள முடிகிறது.

வயமிஹ பரிதுஷ்டா வல்கலை - எங்களிடம் செல்வமும், சொத்தும் போன்ற செழிப்பான வெளிப்பொருட்கள் இல்லையென்றாலும், நாங்கள் முழுமனநிறைவை அடைந்திருப்பதால் உள்ளேயும், வெளியேயும் மகிழ்ச்சியாக காணப்படுகிறோம்.
த்வம் து3கூலைப் - உன்னிடத்தில் ஏராளமான விலை உயர்ந்த ஆடைகள், பொன்னாலான ஆபரணங்கள், செல்வங்கள் இருந்தாலும், நீயும் உனதுள்ளே இருக்கின்ற மனசெழிப்பால் மனநிறைவுடன் இருக்கின்றாய், மகிழ்ச்சியாக இருக்கின்றாய்.

அரசன் உள்ளேயும், வெளியேயும் செழிப்பாக இருந்து கொண்டு, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரிடம் இரண்டும் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது இவை இரண்டில் ஏதோ ஒன்றினால் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்ற சந்தேகம் வரும்போது நாம சந்நியாசியின் நிலையைப் பார்த்து தெளிவடைய வேண்டும். சந்நியாசி வெளியே எந்தவிதமான செழிப்பான உடைமைகளை இல்லாமல் இருந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவேளை வெளிப்பொருட்கள்தான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால் அவர் மகிழ்ச்சியாக இருக்க முடியாது . எனவே மனநிறைவுதான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பது உறுதியாகிறது.

சம இவ பரிதோஷோ - உள்ளேயிருக்கும் மனநிறைவு ஒன்றாக இருப்பதால்
நிர்விஷேஷோ விஷேஷ: - நம்மிடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையும் ஒன்றாக இருக்கிறது.
மனதுக்குள்| வறுமையாக இருத்தல் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். இந்த நிலையே வருத்தத்திற்கு காரணமாக இருக்கும்.
ஸ து ப4வது த3ரித்3ரோ - உள்ளே வறுமையுடன் இருப்பவன் என்பது
யஸ்ய த்ருஷ்ணா விஷாலா - மனதில் அதிகமான பேராசையுடன் இருத்தல் ஆகும்.
நம்முடைய மனம் எவ்வளவு செல்வத்தை, சுகத்தை அடைந்தாலும் நிறைவை அடையாது.
மனஸி ச பரிதுஷ்டே - மனதுக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களில்
கஹ அர்த2வான் - யார் செல்வந்தன்?
கஹ த3ரித்3: - யார் ஏழை, தரித்திரமானவன்.
வெளிப்புற வாழ்க்கையில் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் மனதுக்குள் செல்வந்தனாக இருந்துவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஞானி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிக்கூட கவலைப்பட மாட்டான். கிடைத்தால் சந்தோஷப்பட மாட்டான், கிடைக்கவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டான். வைராக்கியத்தை அடைந்தவன் வெளிப்புற வாழ்க்கையில் எப்படிபட்டவனாக இருந்தாலும் மனதளவில் செல்வந்தனாக இருப்பான்.

சம்பாதித்த செல்வத்தையோ, சொத்தையோ தன்னுடையது என்று எண்ணுகின்ற விஷயத்தில் போதும் என்ற மனநிலையோடு இருக்கவேண்டும். இது அதிகமாக சம்பாதிப்பதிலோ, நிறைய செல்வத்தை ஈட்டும் விஷயத்திலோ இருக்கத் தேவை இல்லை, அவைகளில் உரிமை கொண்டாடுவதில்தான் போதும் என்ற மனநிலை இருக்க வேண்டும். கர்மயோகி இந்த மனநிலையோடுதான் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான்.


ஸ்லோகம்-68
4க்திர்ப4வே மரணஜன்மப4யம் ஹ்ருதி3ஸ்த2ம்
   ஸ்னேஹோ ந ப3ந்து4ஷு ந மன்மத2ஜா விகாரா: |
ஸம்ஸர்க3தோ3ஷரஹிதா விஜனா வனாந்தா
   வைராக்3யமஸ்தி கிமித: பரமர்த2னீயம் || 68 ||

இதில் பர்த்ருஹரி மகிழ்ச்சியுடன் இருப்பவர்களிடத்தில் இருக்கின்ற ஆறு முக்கியமான குணங்களைக் கூறியிருக்கிறார்.
1.   4க்திர்ப4வே - இறைவன் மீது பக்தியுடன் இருப்பது. ப4வே என்பது சிவனையும் குறிக்கிறது, சம்சாரத்தையும் குறிக்கிறது .
2.   மரணஜன்மப4யம் ஹ்ருதி3ச்த2ம்  - இறைவனைத் தவிர உலகத்திலுள்ள அனைத்தும் தோன்றி மறையக் கூடியது என்ற நிலையான எண்ணத்துடன் இருத்தல், எனவே உலகத்தை சார்ந்து வாழக் கூடாது என்ற மனநிலையுடன் வாழ வேண்டும்.
3.   ஸ்னேஹோ ந ப3ந்து4ஷு - போகப்பொருட்களிடத்திலும், உறவுகளிடத்திலும் பற்றற்று இருக்க வேண்டும்.
நெருங்கிய உறவினர்களிடத்தில் அன்புடன் இருக்கலாம், தன்னிடத்தில் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்விக்கலாம். தன்னுடைய நேரத்தையும், பணத்தையும் அவர்களிடத்திலே பகிர்ந்து கொண்டு வாழலாம். அவர்களுடைய பாதுகாப்பிற்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கலாம். இவைகளை வேத சாஸ்திரமோ, நூலின் ஆசிரியரோ செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. இவர்களிடத்தில் பற்றற்று இருக்க வேண்டும் என்பது இவர்களை சார்ந்து வாழக்கூடாது. அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றிருக்க கூடாது.. அவர்களின் துயரமோ, உயர்வோ, தாழ்வோ நம்மை பாதிக்கக்கூடாத மனநிலையில் இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளைச் சார்ந்துதான் வாழவேண்டும். அவரை நம்பிதான் நம் வாழ்க்கையை நடத்தவேண்டும். நல்லதோ, கெட்டதோ எது வந்தாலும், அவைகளை அவருடைய பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.   ந மன்மத2ஜா விகாரா: - பேராசை, கோபம் போன்ற தீயஎண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் இருக்க வேண்டும். அதனால் விளைகின்ற விளைவுகளை வெளிப்படாமல் நிறுத்திவிடலாம். மனதானது தீயஎண்ணங்களால் பாதிக்கப்படும்போது வெளிப்படும் உணர்ச்சிகள் சொல்லாகவோ, செயலாகவோ இருக்கலாம். இந்த தீய உணர்ச்சிகள் மனதில் எழுவது பூர்வஜன்ம கர்மபலனாகவோ, அப்போது செயலுக்கு வந்த கர்மவாசனையாலோ எழலாம். ஆனால அதன் விளைவுகளை சரியாக கையாள வேண்டும், இதையே விருப்பு, வெறுப்பை நன்றாக, சரியாக கையாளுதல் என்பர். அவைகளுக்கு அடிமையாகி விடக் கூடாது.
5.   ஸம்ஸர்க3 தோ3ஷரஹிதா - கூட்டத்தோடு இருத்தல என்ற குறை நீங்கியிருத்தல். கூட்டத்திலிருந்து, உறவுகள், நண்பர்கள் இவர்களிடமிருந்து விலகி தனிமையில் வாழ பழகிக்கொள்ள வேண்டும்
நட்புடன் கூட்டமாக வாழ்வது குறையாக ஏன் சொல்ல வேண்டும்? இப்படி இருக்கும் சூழ்நிலையில் பிரச்சனையை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது. நாம் தனியாக முடிவெடுக்க முடியாது, சுயமாக சிந்தித்து செயல்முடியாது. இதுதான இந்த நிலையில் இருக்கின்ற குறைகள். இவைகளை விலக்க தேவையில்லை, ஆனால இந்த சூழ்நிலைக்கு அடிமையாகி விடக்கூடாது. நெருங்கிய நண்பர்களோ, மனைவியோ, மகனோ, மகளோ இல்லாமல் என்னால் பாதுகாப்பாக, நன்றாக வாழ முடியாது.
      விஜனா வனாந்தா தனிமையான இடமான கிராமத்திற்கு வெளியே உள்ள இடம்
6.   வைராக்3யமஸ்தி - வைராக்கியத்துடன் இருத்தல்.
கிமித: பரம் அர்த2னீயம் - இவைகளைத் தவிர வேறெதுவும் நமக்கு தேவையில்லை. மற்றவைகளை அடைந்திருந்தால் அவைகளை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு அனுபவிக்க வேண்டும். அவைகள் நிரந்தரமில்லை, என்றாவது ஒருநாள் என்னை விட்டு சென்றுவிடலாம் என்ற புத்தியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

ஸ்லோகம்-93
மாதர்லக்ஷ்மி ப4ஜஸ்வ கஞ்சித3பரம் மத்காங்க்ஷிணீ மா ஸ்ம பூ4:
   போ4கோ3ஷு ஸ்ப்ருஹயாலவஸ்தவ வஶே கா நி:ஸ்ப்ருஹாணாமஸி |
ஸத்3: ஸ்யூதபலாஶபத்ரபுடிகாபாத்ரே பவித்ரீக்ருதைபி4ர்க்ஷாவஸ்துபி4ரேவ
   ஸம்ப்ரதி வயம் வ்ருத்திம் ஸமீஹாமஹே || 93 ||

இதில் வைராக்கியத்தை அடைந்தவன் லட்சுமிதேவியைப் பார்த்து கூறுகிறான். ஓ லட்சுமிதாயே! இந்த நிலையை அடைவதற்கு முன்பு செல்வத்தை நாடி சென்று கொண்டு இருந்தேன். செல்வமானது நிலையாக ஒரே இடத்தில் அதிக காலம் தங்கி இருக்காது என்றறியாமல்ணத்தை தேடி அலைந்து கொண்டிருந்தேன். இப்பொழுது செல்வத்தின் மீது வைராக்கியம் வந்து விட்டதால் அதை தேடி அலையும் நிலையிலிருந்து மாறிவிட்டேன். எனவே எனக்கு அருள் புரிய என்னிடம் வராதீர்கள் என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வேன், உன்னை நாடிக் கொண்டிருப்பவர்களிடம் செல்வாயாக என்று கூறுவேன்.

லட்சுமி என்பது ப்ரவ்ருத்தி மார்க்கமான தர்ம, அர்த்த, காமம் என்கின்ற புருஷார்த்தங்களை குறிக்கிறது. சரஸ்வதி என்பது நிவிருத்தி மார்க்கமானது ஞான மார்க்கத்தை குறிக்கிறது. செல்வமானது மற்ற மூன்று புருஷார்த்தங்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. பணம் அர்த்த, காம புருஷார்த்தங்களுக்கு தேவையாக இருக்கலாம். எப்படி தேவையாக இருக்க முடியும் என்று ஆராய்ந்து பார்க்கும் போது, தர்ம, மோட்ச மார்க்கத்திற்கு செல்வதற்கான புண்ணியத்தை அடைவதற்கு தானங்கள், யாகங்கள், பொதுநல நற்காரியங்கள் செய்வதற்கு பணம் அவசியமாக இருக்கின்றது. நிவிருத்தி மார்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால் பிரவிருத்தி மார்க்கம் வழியே தான் செல்ல வேண்டும். சந்நியாசிகள் நேரடியாக நிவிருத்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுவதன் காரணம் அவர்கள் முற்பிறவியில் பிரவிருத்தி மார்க்கத்தின் வழியே சென்று இருந்து இருப்பார்கள்.

மாதர்லக்ஷ்மி - மகாலட்சுமி தாயே!
கஞ்சித்3 அபரம் ப்4ஜஸ்வ - தாங்கள் செல்வத்தை விரும்புவர்களிடத்தே செல்வீர்களாக!
மத்காங்க்ஷிணீ மா ச்ம பூஹு - என்னிடத்திலே வர வேண்டும் என்கின்ற விருப்பத்தை விட்டுவிடுங்கள்
போ4கோ3ஷு - செல்வத்தில்
ஸ்ப்ருஹயாலவஹ - இச்சை உள்ளவர்கள் எல்லாம்
தவ வஷே - தங்களது வசத்தில் உள்ளவர்கள்
கா நி:ஸ்ப்ருஹாணாம் அஸி ஆனால் வைராக்கியத்தை அடைந்திருப்பவர்கள் அப்படியல்ல
பி4க்ஷா வஸ்துபி4ஹி ஏவ ஸம்ப்ரதி - சந்நியாச வாழ்க்கைமுறையை எடுத்துக் கொண்ட பிறகு
வயம் வ்ருத்தி என் போன்ற சந்நியாசிகள் பிக்ஷையை
ஸமீஹாமஹே - உயிர்வாழ்வதற்காக கடைப்பிடிப்பார்கள்
பலாஷபத்ர புடிகாபாத்ரே - பலாஷ என்ற இலைகள் மூலம் பிச்சை பாத்திரத்தை
ஸத்3: ஸ்யூத - புதியதாக செய்து கொள்வேன்
பவித்ரீ க்ருதை: - பிக்ஷை என்கின்ற புனிதமான செயலை செய்து என் வாழ்க்கையை நடத்திக் கொள்வேன்.

என்னுடைய உணவுக்காக பிக்ஷை எடுப்பேன், அதற்காக பணத்தை நாட மாட்டேன். பிக்ஷை எடுப்பதற்கு தேவையான பாத்திரத்தை பலாஷ என்கின்ற இலைகள் மூலம் புதிதாக தயார் செய்து கொள்வேன். அந்தப்பாத்திரத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாப்பிட்டு முடித்ததும் அந்த இலைப்பாத்திரத்தை தூக்கியெறிந்து விடுவேன். வேண்டும் போது புதிதாக இலைகளைக் கொண்டு தயார் செய்துகொள்வேன். எங்களுடைய வாழ்வாதாரத்திற்காக புனிதமான பிக்ஷையை மேற்கொள்கிறோம்.

ஸ்லோகம்-94
மஹாஶய்யா ப்ருத்2வீ விபுலமுபதா4னம் பு4ஜலதா
   விதானம் சாகாஶம் வ்யஜனமனுகூலோSயமனில: |
ஶரச்சந்த்3ரோ தீ3போ விரதிவனிதாஸங்க3முதி3:
   ஸுகி2 ஶாந்த: ஶேதே முனிரதனுபூ4திந்ருப இவ || 94 ||
இதில் வசிப்பதற்கு வீட்டிற்கு என்ன செய்வாய என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. இந்த உலகமே சந்நியாசி வசிக்கும் இருப்பிடமாகும்.

மஹாஷய்யா ப்ருத்2வீ - பூமியே படுக்கையாகும்.
விபுலமுபதா4னம் பு4ஜலதா  - கைகளே பெரிய தலையணையாகும்.
விதானம் ச ஆகாஷம் - வானமே கூரையாகும்
வ்யஜனம் அனுகூல அயம் அனில: - சுகமான இயற்கை தென்றல் காற்றே
ஷரச்சந்த்3ரோ தீ3பஹ - குளிர்ந்த முழுநிலவு ஒளி தந்து கொண்டிருக்கும்
விரதிவனிதா ஸங்க3 முதி3: - வைராக்கியமே எனது துணைவியாக இருக்கிறது. இது என்னை எங்கும், எப்போதும், எல்லாவிடத்திலும் தொடர்ந்து கொண்டே இருப்பது மட்டுமல்லாமல், சுகத்தையும், வசதியையும், மகிழ்ச்சியையும் தந்துகொண்டிருக்கிறது.
ஸகி2 ஷாந்த: ஷேதே முனிஹி - இத்தகைய துணையையும், இல்லத்தையும் கொண்டிருக்கும் சாது சுகமான மனவமைதியோடு இருக்கிறான்.
மனிதனுக்கு சத்யமே தாய், அறிவே தந்தை, தர்மம் சகோதரன், கருணை நண்பன், மனவமைதியே மனைவி, பொறுமை மகன்,மகள் ஆகிய ஆறு உறவுகள் என்றென்றும் ஒருவனிடத்தில் இருந்துவிட்டால் அவன் வாழ்வே சுகமாக இருக்கும், தனியாக இருக்கிறேன் என்ற மனநிலையே இருக்காது.
அதனு பூ4தி ந்ருப இவ அரசனைப்போல அளவற்ற செல்வத்தையும், சொத்து சுகத்தையும் கொண்டவனாக இருக்கிறான். யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கிறான்.

இதுவரையில் வைராக்கியத்தைப் பற்றிய பெருமைகள் முடிவடைகிறது. இனி இதை அடைய விரும்பும் சாதகர்களுக்கு சில அறிவுரைகள் கூறப்படுகிறது.

வைராக்கியத்தை அடைய உதவும் அறிவுரை
ஸ்லோகம்-75
யாவத்ஸ்வத2மித3ம் ஶரீரமருஜம் யாவஜ்ஜரா தூ3ரதோ
   யாவச்சேந்த்3ரியஶக்திரப்ரதிஹதா யாவத்க்ஷயோ நாயுஷ: |
ஆத்மஸ்ரேயஸி தாவதே3வ விது3ஷா கார்ய: ப்ரயத்னோ மஹான்
   ஸந்தீப்தே ப4வனே து கூபக2னனம் ப்ரத்யுத்3யம: கீத்3ருஷ: || 75 ||

ஆன்மீகத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான முயற்சியை உடனே தொடங்குங்கள். இல்லற செயல்களையும் செய்தாக வேண்டும். அதை விட்டுவிடக்கூடாது. வேத சாஸ்திரமானது இல்லற விவகாரங்களை விட்டுவிடு என்று கூறவில்லை. இல்லறத்தில் இருக்கும்போதே செல்வத்தையும் சேர்க்க வேண்டும், உறவுகளை கவனிக்க வேண்டும், தர்மகாரியங்களையும் செய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் ஆன்மீகவாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்வதிலும் ஈடுபடவேண்டும். இந்த இரண்டையும் சமமாக செய்து கொண்டு வர வேண்டும்.

இளமைக் காலத்தில் இல்லற கடமைகளை சாஸ்திரம் காட்டிய தர்மப்படி செய்வதில் அதிக காலம் செலவழிக்க வேண்டும். இளமைக்காலத்தில் எல்லா ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் சக்தியுடன் இருக்கும். எனவே இந்தக் காலத்தில் முதுமையில் கடைபிடிக்க வேண்டிய செயல்களுக்கு தேவையான மனநிலையை அடைந்து விட வேண்டும். அதாவது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தவம் செய்வதற்கேற்ற உடல்நிலையை பயிற்சியின் மூலம் அடைந்துவிட வேண்டும்.,  வயதான காலத்தில் தவம், தியானம், ஜபம் இந்த மாதிரியான  ஆன்மீக முன்னேற்றத்தை கொடுக்க கூடிய செயல்களை கடைப்பிடிக்க வேண்டும்.

நமது ஆயுட்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்ல முடியாது. எனவே வாழும்போதே மனதை செம்மைப்படுத்தி, ஞான சாதனங்களை செய்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு தூய்மைப்படுத்தி விடவேண்டும். ஆன்மீக நாட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான சிரவண, மனனத்தை முடித்து விட வேண்டும். நிதித்யாஸன சாதனத்தையும் கடைப்பிடிக்க தொடங்கிட வேண்டும். தனிமையில் அதிகநேரம் இருந்து பழக வேண்டும். மனதை தியானத்தில் நிலை நிறுத்தும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும்.
இதனால் வயதான காலத்தில் உடலுறுப்புக்கள் சக்தி குறைந்து செயல்பட்டாலும், மனம் சக்தியுடன் இருக்கும். எனவே நிதித்யாஸனத்தை செய்வதற்கு தடைஇருக்காது. விரைவில் அடைந்த பரோக்ஷ ஞானத்தை அபரோக்ஷ ஞானமாக மாற்றிட வேண்டும்.

யாவத்ஸ்வத2மித3ம் ஷரீரம்- இந்த ஸ்தூல உடல் ஆரோக்கியமாக இருக்குபோதே
அருஜம் - கடும்நோயால் பாதிக்கப்படாமல் இருக்கும்போதே
யாவஜ்ஜரா தூ3ரதஹ - வயதான காலத்தில் வரும் உடல், மனம் சம்பந்தமான குறைபாடுகள் இல்லாதபோதே
யாவத் ச இந்த்3ரிய ஷக்தி அப்ரதிஹதா - ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகிய இவைகளின் சக்தியுடன் செயல்பட்டு கொண்டு இருக்கும்போது,
அப்ரதிஹதா - தடையெதுவும் இல்லாமல்
யாவத் க்ஷயோ ந ஆயுஷ: - ஆயுட்காலம் முடியாதிருக்கும் போதே
ஆத்மஸ்ரேயஸி - ஆத்ம ஞானத்தை அடையும் விஷயத்தில்
தாவதே3வ விது3ஷா - இவ்வாறு காலம் நமக்கு சாதகமாக இருக்கும்போதே அறிவாளிகள்
கார்ய: ப்ரயத்னோ மஹான் - அதிகமான உடலுழைப்பையும், நாட்டத்துடனும், முழுவிருப்பத்துடனும், ஆர்வத்துடனும்,முழுமையாக மனதை ஈடுபடுத்த வேண்டும்.
பல வேலைகளை செய்து முடிப்பதற்கு பிறருடைய உதவியை எடுத்துக் கொள்ளலாம், பிறருடைய உதவியை நாடலாம். ஆனால் சில செயல்களை நாமேதான் செய்ய வேண்டும். உதாரணமாக பசியெடுத்தால் நாம்தான் சாப்பிட்டு பசியை அடக்கிக்கொள்ள வேண்டும். அதேபோல மோட்சத்தை அடைவதற்கு நாம்தான் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான செயல்களை செய்ய வேண்டும். எப்படி செல்வத்தை, சொத்து சுகத்தை அடைவதற்கு திட்டமிடுகின்றோமோ, அதேபோல மோட்சத்தை அடைவதற்கு திட்டமிட்டு படிப்படியாக செயல்படுத்த வேண்டும்.
ஸந்தீப்தே ப்ஹ4வனே - வீடு தீப்பற்றி எரியும்போது
து கூபக2னனம்ப்ரதி - ஒருவன் கிணறு தோண்டுகின்ற
உத்3யம: கீத்3ருஷ: - முட்டாள்தனமான முயற்சியை மேற்கொள்வது போல
வயதான காலத்தில் ஆன்மீக முன்னேற்றத்திற்கான செயல்களை செய்யலாம என்று நினைப்பதாகும். எனவே உடலில், மனதில் சக்தியிருக்கும்போதே ஆன்மீக முன்னேற்றத்திற்கான செயல்களை செய்ய ஆரம்பித்து விட வேண்டும்.

ஸ்லோகம்-61
பரேஷாம் சேதாம்ஸி ப்ரதிதி3வஸமாராத்4ய ப3ஹுதா4
   ப்ரஸாத3ம் கிம் நேதும் விஶஸி ஹ்ருத3ய க்லேஶகலிதம் |
ப்ரஸன்னே த்வய்யந்த: ஸ்வயமுதி3தசிந்தாமணிக3ணோ
   விவிக்த: ஸங்கல்ப: கிமபி4லஷிதம் புஷ்யதி ந தே || 61 ||

இந்த உலகத்தில் மற்றவர்களை திருப்திபடுத்துவது, மகிழ்ச்சியடைய செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனென்றால் எப்படி மற்றவர்களை மகிழ்வடைய செய்ய முடியும் என்று ஊகிப்பது மிகக்கடினம், எந்தவிதமான மனநிலையில் இருக்கிறார்களா என்பதையும் அறிய முடியாது. ஒரு காலத்தில் மகிழ்ச்சியைக் கொடுத்ததே இன்னொரு காலத்தில் வெறுப்பை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து எது, எப்பொழுது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. மேலும் நல்லதை செய்கின்றோம் என்று நினைத்து ஒன்றை செய்தால் அதுவே வெறுப்பையோ, அதிருப்தியையோ கொடுத்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் அதையே குற்றமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள்..

முதல் பிரச்சனையானது எது, எப்பொழுது மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று தீர்மானிக்க முடியாததாகும். இரண்டாவது பிரச்சனையானது எதை செய்தாலும் மற்றவர்களுக்கு திருப்தியை கொடுப்பதில்லை என்பதாகும். இறைவனாலும் இவர்களுக்கு மனநிறைவை கொடுக்க முடியாது. இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு தாகம் எடுத்தது, தண்ணீர் பாட்டிலை கொண்டுவர மறந்துவிட்டதால் தவித்துக் கொண்டிருந்தார். அடுத்த ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும், தண்ணீர்பாட்டிலை வாங்கி தாகத்தை தீர்த்துக் கொண்டார். ஆனாலும் நான் தாகத்துடன் தவித்துக் கொண்டிருந்தேன் என்று புலம்பிக் கொண்டு இருந்தார்.

மூன்றாவது பிரச்சனை இதைவிட கடினமானது. ஒரு செயல் ஒருத்தரை மகிழ்விக்கிறது ஆனால் அதே செயல் மற்றொருவருக்கு வருத்தத்தை கொடுக்கிறது. ஒருவருக்கு தான் மனைவிக்கு பிடித்தமான ஒன்றை செய்தால், தாய்க்கு பிடிக்கவில்லை, தாய்க்கு பிடித்தமானதை செய்தால் மனைவிக்கு பிடிக்கவில்லை. கடைசியில் மனைவி அவரிடம் உன் அம்மா இருக்குமிடத்தில் நான் இருக்க விரும்பவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டார்.

மேற்கூறியதை கவனத்தில்  கொண்டு மற்றவர்களை திருப்தி செய்யும் முயற்சியை மேற்கொள்ளாமல் நம் கடமையை செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதை மிகவும் கவனமாக செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் சுயநலம் போலாகி மற்றவர்களுக்கு அதிருப்தியை கொடுத்துவிடும். மற்றவர்களிடத்தில் பரிவோடு, அன்போடு, இனிமையாக இருக்கவேண்டும். ஆனால் நாம் செய்கின்ற செயல்களனைத்து அவர்களை மகிழ்விக்கும் என்று எண்ணத்துடன் செய்யக்கூடாது,. மற்றவர்களை மகிழ்விக்கவேண்டும் என்று செயல்படுவது நம் கையில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது நம் கையில் கிடையாது. ஒருவேளை மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும்போது அவர்களை திருப்தியடையும் வகையில் செயல்பட வேண்டியிருக்கிறதே என்று நிலை வரும் போது, எதற்காக நாம இவ்வாறு செயல்படுகிறோம் என்றுப்பார்த்தால் நம்முடைய திருப்திக்காக அல்லது மகிழ்ச்சிக்காகத்தான் இருக்கும். மகிழ்ச்சியை எதற்காக சுற்றி வளைத்து அடைய முயற்சி செய்யவேண்டும்.. நம்மிடத்திலே வழியிருக்கும்போது மற்றவர்களை திருப்திபடுத்தி எதற்கு அடைய முயற்சிக்க வேண்டும். இந்த கடினமான முயற்சியை கைவிட்டுவிட்டு, உன்னுடைய மனதை சாஸ்திரம் உரைக்கும் உபதேசப்படி கையாண்டு திருப்தியை அடைவாயாக.

ப்ரதிதி3வஸம் - ஒவ்வொரு நாளும்
பரேஷாம் சேதாம்ஸி  மற்றவர்களின் மனதை
ப3ஹுதா4 - பலவிதத்தில்
ஆராத்4ய  - மகிழ்விக்க, திருப்திபடுத்தவும்
ப்ரஸாத3ம் கிம் நேதும் - அவர்களிடத்திலிருந்து தேவையானவற்றை பெறுவதற்காகவும்
விஶதி ஹ்ருத3ய க்லேஶக்லிதம் - மானம், மரியாதையை இழந்தும், தீயவழியில், குறுக்குவழியில், குடும்ப கவுரவத்தை விட்டுக்கொடுத்தும் செயல்படுகிறோம்.
சிந்தாமணிகு3ணஹ -- சிந்தாமணி என்கின்ற மந்திரகல் வைத்திருப்பவன் எதை நினைத்தாலும் அதை அடைந்து விடுவான். அதுபோல
ப்ரஸன்னே த்வய்யம்: - ஓ மனமே! பேராசை போன்ற தீயக்குணங்களிலிருந்து விடுபட்ட பிறகு
விவிக்த: ஸங்கல்ப: - தெளிவான, தங்கு தடையற்ற சிந்தனைகளை உடைய
அந்தஹ ஸ்வயம் உதி3த - உன்னுடைய மனதை சார்ந்து செயல்படு. அதனால் மனம் அமைதியுடன், சஞ்சலமற்ற நிலையில் இருக்கும். இந்த மனநிலையில் நாம் நினைப்பதெல்லாம் செயல்படுத்திவிடலாம்.
கிமபி4லஷிதம் புஷ்யதி ந தே - இந்த மனநிலையில் எதைத்தான அடைய முடியாது.
ஏ மனமே! உன்னை சார்ந்து இருப்பதனால் எந்த ஆசைதான் நிறைவேறாமல் போகும். எனவே நம் மனதை திறமையுடன், சாஸ்திரம் கூறும்வழியில் நெறிப்படுத்தி அதை சார்ந்து செயல்பட்டோமானால் எதை வேண்டுமானாலும் அடையலாம்.
ஸ்லோகம்-62
பரிப்4ரமஸி கிம் முதா4 க்வசன சித்த விஶ்ராம்யதாம்
   ஸ்வயம் ப4வதி யத்3யதா2 4வதி தத்ததா2 நான்யதா2 |
அதீதமனனுஸ்மரன்னபி ச பா4வ்யசங்கல்ப்யன்
   நதர்கிதசமாக3மானனுப4வாமி போ4கா3னஹம் ||

இப்போது மூன்றாவது அறிவுரை கூறப்படுகிறது. பர்த்ருஹரி கடந்தகால அனுபவங்களும், எதிர்கால லட்சியங்களும் அவைகளை பொருட்படுத்தும் முறையினால் நிகழ்காலம் நமக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ இருக்கும். அந்த இரண்டு காலங்களையும் சரியாக கையாண்டால் நிகழ்கால செயல்கள் அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருக்கும்.

இந்த இரண்டு காலங்களையும் எப்படி முறையாக கையாள வேண்டும் என்று பார்க்கலாம். கடந்தகால அனுபவங்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாலும், வெறுப்புணர்ச்சியை இன்னும் வைத்துக் கொண்டிருந்தாலும், நமக்கு மற்றவர்களால் கொடுக்கப்பட்ட துன்பத்தை, தோல்வியை, அவமானத்தை நினைத்துக் கொண்டிருந்தாலும், நாமே அறியாமையால், உணர்ச்சிவசத்தால் செய்த தவற்றையும், அதன் விளைவுகளையும் அவ்வப்போது நினைவுக்கு கொண்டுவந்து வருந்தி கொண்டிருந்தாலும், கோபம் கொண்டாலும், நம்முடைய நிகழ்கால செயல்களில் போதிய கவனம் செலுத்தவும் முடியாது, அதனால் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்பட முடியாது. நிகழ்காலமும் நமக்கு நிம்மதியை கொடுக்காது. நிகழ்காலத்தில் கிடைக்கின்ற நல்ல இனிமையான, இன்பகரமான அனுபவங்களை நன்கு அனுபவிக்க முடியாது.

கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம பாடத்தை கற்றுக்கொண்டு அதனால் நல்ல மனப்பக்குவத்தை அடைந்து, அறிவு முதிர்ச்சியை அடைந்து விடவேண்டும். பாலுக்குள் நெய்யும், கரும்புக்குள் இனிப்பு மறைந்திருப்பது போல கடந்தகால கசப்பான அனுபவங்களுக்குள் நல்ல பாடமும் மறைந்திருக்கலாம். எனவே அவைகள் கொடுக்கும் பாடத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு மற்றவற்றையெல்லாம் மனதிலிருந்து தூக்கியெறிந்துவிட வேண்டும். இதனால் நாம் அறிவு முதிர்ச்சியுடன், நல்லனுபவத்துடன் நிகழ்கால செயல்களை செய்ய முடியும்.

அதேபோல எதிர்காலத்தையும் நாம் கையாள வேண்டும். நிகழ்காலத்து நம் செயல்பாட்டையும், சூழ்நிலையையும் வைத்து நம்முடைய எதிர்கால வாழ்க்கை நிலையைப் பற்றிக்கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை நோக்கி நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன், சரியான செயல் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்க வேண்டுமே தவிர எதிர்காலத்தில் இப்படி இருப்போமா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. மரணத்தைக் கண்டும் பயந்து கொண்டிருக்கக்கூடாது. அதை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தை வளர்த்து கொண்டுவர வேண்டும். அதேபோல வயோதிகத்தைக் கண்டும் பயந்து கொண்டிருக்கக்கூடாது. அந்த காலத்தில் வாழ்வதற்கு தேவையான மனோதிடத்தையும், மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்வதற்கான செயல்களை செய்து கொண்டுவர வேண்டும். இதனால் எதிர்காலமும் நமக்கு வசப்படும், மனவமைதியுடன் வாழ முடியும்.

ஆகவே இறந்தகாலத்திலிருந்து வாழ்க்கைப்பாடத்தையும், எதிர்காலத்தில் நன்றாக வாழ்வதற்கான செயல்திட்டத்தையும் மனதில் கொண்டு நிகழ்காலத்தில் வாழ்வதே புத்திசாலித்தனமாகும்.

சித்த  - ஏ மனமே!
முதா4 - தேவையில்லாமல், வீணாக
பரிப்4ரமஸி கிம் - ஏன் அமைதியற்று, உறுதியற்று, தளர்ந்து போகின்ற நிலைக்கு செல்கின்றாய்.
க்வசன - கொஞ்ச காலமாவது
விஷ்ராம்யதாம் - ஓய்வாக இருக்க கற்றுக் கொள், தளர்ச்சி அடையாமல் இருக்க பழகு
ஸ்வயம் - உன்னுடையக் கர்மபலன் படி
4வதி யத்3யதா2 - எவையெல்லாம் அடைய வேண்டுமோ
4வதி தத்ததா2 - அவையெல்லாம அடையப் போகிறாய்
நான்யதா2 - அவைகளைத் தவிர வேறெதையும் அடையப்போவதில்லை.
அதிதமனனுச்மரன் - எனவே கடந்தகால அனுபவங்களையே நினைத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அவைகளிலிருந்துப் பெற்ற பாடத்தை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
கடந்தகால அனுபவங்கள் இரண்டு வகையாக இருக்கலாம. நாம் மற்றவர்களுக்கு செய்த நன்மை, தீமைகளையோ அல்லது மற்றவர்கள் நமக்கு செய்த நன்மை, தீமைகளையோ இருக்கலாம். நாம் செய்த தீய செயல்களினால் குற்றவுணர்ச்சியுடன் இருப்போம், அல்லது மற்றவர்கள் நமக்கு செய்த தீய செயல்களினால் மனக்காயங்களுடன் இருப்போம்.
அபி ச பா4வ்யசங்கல்பயன் - எதிர்காலத்தை பற்றிக்கூட வருத்தப்படாதே. திட்டமிடுதல் அதன்படி செயல்படுதல் எதிர்கால நல்வாழ்க்கைக்கு, வெற்றிக்கு வித்திடும். கவலைப்படுவதால் நிகழ்கால செயல்பாட்டில் திறமை குறைந்து போய்விடும்.
ந அதர்கித சமாக3மான் அனுப4வமி  - உன்னை அறியாமலே, எதிர்பாராமல் வந்தடைகின்ற அனுபவங்களை
போ4கா3ன் அஹம் - நிகழ்கால அனுபவங்களை திறமையுடன் எதிர்கொள்வாயாக.

ஸ்லோகம்-63
ஏதஸ்மாத்3விரமேந்த்3ரியார்த23ஹனாதா3யாஸகாதா3ஶ்ரய
   ஶ்ரேயோமார்க3மஶேஷ து3:2ஶமனவ்யாபாரத3க்ஷம் க்ஷணாத் |
ஸ்வாத்மீபா4வமுபைஹி ஸந்த்யஜ நிஜாம் கல்லோலலோலாம் க3திம்
   மா பூ4யோ ப4ஜ ப4ங்கு3ராம் ப4வரதிம் சேத: பரஸீதா3து4னா ||
இதில் நான்காவது அறிவுரையானது சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீக வழியில் சென்றால் மனநிறைவுடனும், அமைதியுடனும் வாழலாம். மனிதன் இயற்கையிலே இன்பவடிவமானவன். அந்த நிலையிலே இருக்கலாம், அந்த நிலையை அனுபவிக்கலாம். எப்படி விழித்தவுடன் கனவு அனுபவங்கள் சென்று விடுகின்றனவோ அதேமாதிரி விழிப்பு நிலையிலும் நம்முடைய உயர்ந்த நிலையான இன்பநிலையை இயல்பாக்கி மகிழலாம். எப்படி இதை அடையமுடியும் என்ற கேள்விக்கு பதில் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
ஏதஸ்மாத்3விரம - இதனால் மற்ற உலக விவகாரங்களிலிருந்து
3யாஸகாத் - மன இறுக்கத்தைக் கொடுக்கக்கூடிய
இந்த்3ரியார்த2 3ஹனாத்- அடர்ந்த காட்டை போலுள்ள புலனுகர் போகப்பொருட்களை நாடிக் கொண்டிருக்கின்ற மனநிலையை விட்டுவிட்டு
ஶ்ரேயோமார்க3மாஶ்ரய - ஆன்மீகப் பாதையை பின்பற்றினால், ஞானயோக மார்க்கத்தை கடைப்பிடித்தால்,
அஶேஷ து3:2 ஶமனம் க்ஷனாத் - அனைத்து துயரங்களும் முழுமையாக, உடனடியாக நீக்கிவிடக்கூடிய
அவ்யாபாரத3க்ஷம் - சக்தியை அடைந்துவிடலாம்.
ஸ்வாத்மீபா4வமுபைஹி - உன்னுடைய உண்மை ஸ்வரூபமான ஆனந்த ஸ்வரூபத்தை அடையலாம்.
கல்லோலலோலாம் க3திம் - மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மற்ற எண்ணங்களை ஸந்த்யஜ நிஜாம் - உறுதியாக நீக்கிவிடலாம்.
மா பூ4யோ - மீண்டும்
4ஜ ப4ங்கு3ராம் ப4வரதிம்  - புலனின்பத்தை அனுபவிக்க துடிக்கும் பழைய மனநிலைக்கு செல்லமாட்டோம்
சேத: பரஸீதா3து4னா  - மனமானது சஞ்சலமற்று, அமைதியாக இருக்கும்.

ஸ்லோகம்-69
தஸ்மாத3னந்தமஜரம் பரமம் விகாஸி
   தத்3ப்3ரஹ்ம சிந்தய கிமேபி4ரஸத்3விகல்பை: |
யஸ்யானுஶங்கி3ண இமே பு4வனாதி4பத்யபோ4கா3த3ய:
   க்ருபணலோகமதா ப4வந்தி ||
எந்தவிதமான விசாரம் செய்ய வேண்டும் என்பதற்கு ஶ்ரேயஸ் மார்க்கத்தையொட்டி விசாரம் இருக்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் கூறப்பட்டது.
தஸ்மாத்3 - அடைய வேண்டிய இறுதி லட்சியத்தை முடிவு செய்தபிறகு
அனந்தம் - எல்லையற்றதும், என்றுமிருப்பதும்
அஜரம் - அழிவற்றதும்,
பரமம் - மேலாதுமானதும், பூரணமானதும்
விகாஸி  - எங்கும் வியாபித்திருப்பதுமான
தத்3ப்3ரஹ்ம சிந்தய - அந்த பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன்
கிம் அபி4 அஸத்3 விகல்பை: - அதிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் அனாத்மாக்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் கொடுக்கும் இன்பங்கள்,
மே பு4வனாதி4பத்ய போ4கா3த3ய: - நாட்டிற்கு அரசனாக இருத்தல் போன்ற உலகத்திலுள்ள போகங்கள்
யஸ்ய அனுஶங்கி3ணஹ - ஆகிய அனைத்து உலக இன்பங்களும் பிரம்மத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. அதாவது பிரம்மானந்தத்தின் சிறுதுளியை பிரதிபலிக்கும் பொருட்களாக இருக்கிறது.
க்ருபண லோக - அறியாமையிலுள்ள மனிதர்களால்
மதா ப4வந்தி - அவைகள் இன்பம் கொடுப்பவைகளாக மதிக்கப்படுகிறது.

இதிலிருந்து அறிய வேண்டியது, உலகமே இந்த பொய்யான உலக இன்பத்தை அடைய வேண்டி எல்லா செயல்களும் செய்யப்படுகிறது.

முடிவுரை
ஸ்லோகம்-100
மாதர்மேதினி தாத மாருத ஸகே2 தேஜ: ஸுப3ந்தோ4 ஜல
   ப்4ராதர்வ்யோம நிப3த்34 ஏவ ப4வதாமந்த்ய: ப்ரணாமாஞ்ஜலி: |
யுஷ்மத்ஸங்க3வஶோபஜாதஸுக்ருதஸ்பா2ரஸ்ப்2ருரன்னிர்மல-
   ஞானாபாஸ்தஸமஸ்தமோஹமஹிமா லீயே பரப்3ரஹ்மணி ||

இந்த முடிவுரையில் அறிவை அடைந்தவன் மரணபடுக்கையில் இருக்கும்போது பேசுவதாக இருக்கிறது. எல்லோருக்குமே மரணம் என்பதை நினைக்கவே பயப்படுகிறோம். ஆனால் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியோடு இந்த நிலையை எடுத்துக் கொள்கிறார். ஆத்ம ஞானத்தை அடைந்தவன் பஞ்சபூதங்கள் அனைத்தும் தனது உறவினர்களாக கருதுகிறான். அவைகள் இந்த ஸ்தூல உடலை தனக்கு தானமாக கொடுத்திருக்கிறார்கள் என்று கருதிக் கொள்கிறான்.

ஆதலால் பஞ்சபூதங்களே உங்களை எனக்கு உறவினர்களாக கருதுகிறேன். நான் இந்த உடலை நல்லதுக்காகவே பயன்படுத்துகிறேன். என்னைப்பற்றிய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்துகொள்கின்ற முயற்சியில் ஈடுபடுத்துகிறேன். என் முயற்சியில் வெற்றி பெற்றதும், நீங்கள் தானமாக கொடுத்த இந்த ஸ்தூல உடலை உங்களிடமே !நன்றியுடனும், எந்தவிதமான குறையையும் சொல்லாமலும் திருப்பி கொடுத்து விடுகிறேன்.

என்னிடமிருந்த மாயை விலகிவிட்டது. பிரம்மத்தில் ஐக்கியமாகி பரமானந்த ஸ்வரூபமாகி விட்டேன். மரணத்தறுவாயில் நம் மனம் மட்டும்தான் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த நிலையில் இயற்கைக்கு நன்றியை சொல்லி பிரம்மத்துடன் ஐக்கியமடைந்திடலாம்.

மாதர்மேதினி - பூமித்தாயே!
தாத மாருத - வாயுத்தந்தையே!
ஸகே2 தேஜ: - அக்னி நண்பனே!
ஸுப3ந்தோ4 ஜல - நீர் உறவினனே!
ப்4ராதர் வ்யோம - ஆகாச சகோதரா!
அந்த்ய: ப்ரணாமாஞ்ஜலி: - என்னுடைய இறுதி அஞ்சலியை
நிப3த்34 ஏவ ப4வதாம்  - தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்
யுஷ்மத் ஸங்க3 வஶ - உங்களுடைய சேர்க்கையின்
உபஜாத - வெளிப்பாடாக
ஸுக்ருத - புண்ணியத்தின் பலனாக
ஸ்பா2ர ஸ்ப்2ருரஹ - பேரொளியுடன் பிரகாசித்துக் கொண்டிருப்பதும்
நிர்மஹ - தூய்மையானதும்,
ஞான - ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டதனால்
ஸமஸ்த மோஹமஹிமா - எல்லாவகையாய மோகத்தின் பிடியிலிருந்து
அபாஸ்த - விடுபட்டுவிட்டேன்.
லீயே பரப்3ரஹ்மணி  - மேலான பிரம்மத்துடன் லயம் அடைந்துவிட்டேன்.

வைராக்கிய உபதேசம் இத்துடன் முடிவடைகிறது.


No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...