நைஷ்கர்ம்ய சித்திஅத்தியாயம்-3-பகுதி-2Edited on 24-08-2024
நான் என்ற சொல்லின் பொருள் சத்தியமான சாட்சியின் ஒரு பகுதியாகும். இந்த பகுதியை அகங்காரத்தை அறிந்து கொள்வதற்கும், வேதாந்தத்தை படிப்பதற்கும் இந்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அகங்காரம் மித்யாவாக இருந்தாலும் வாழ்க்கை என்ற நாடகத்தில் நடிப்பதற்கு இந்த வேஷத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
மகாவாக்கியம் நான் ஆச்சரியமானவன் என்று சொல்கிறது. ஆனால் நம்மால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நாம் அனுபவிக்கின்ற அனைத்தும் துயரமாகத்தான் இருக்கிறது. எனவே இந்த ஸ்ருதி பிரமாணம் அனுபவத்திற்கு எதிராக இருக்கிறது. ஸ்ருதியை மதித்தாலும், அதனுடைய இந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் சரியாக சிந்தித்துப் பார்த்தோமானால் நமது பயங்கரமான அனுபவங்கள் அனைத்தும் அனாத்மா என்று புரிந்து கொள்வோம். பிரமாணத்தின் மூலமாக அடையப்படும் அனுபவங்கள் அனைத்தும் அனாத்மாவுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எந்த பிரமாணமும் அனுபவிப்பவனை (ஆத்மாவை) காட்டிக் கொடுக்காது. வேதாந்தம் ஆத்மாவைத்தான் ஆனந்தம் என்று உபதேசிக்கிறது.
அனாத்மா இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று எங்கேயோ வெகு தொலைவில் இருப்பது. இன்னொன்று அருகில் இருப்பது. பதவி, உடைமைகள், குடும்பம் ஆகியவைகள் வெளியில் இருக்கின்ற அனாத்மாக்கள். உடலும், மனமும் உள்ளே இருக்கின்ற அனாத்மாக்கள் ஆகும். எல்லா பயங்கரமான அனுபவங்களும் இந்த இருவகை அனாத்மாக்களோடு தொடர்புடையது. இந்த அனுபவங்கள் ஐந்து பிரமாணங்களின் மூலமாகத்தான் அடையப்படுகிறது, ஸ்ருதி பிரமாணத்தின் மூலமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். ஐந்து அனாத்ம பிரமாணங்களாவது பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி மற்றும் அனுபலப்தி ஆகும். மகாவாக்கியம் அனாத்மாவைப் பற்றி பேசவில்லை. அது அனாத்மாவைப் பார்க்கப்படுகின்ற பொருளாக மாற்றுகின்ற உன்னைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது. ஐந்துப் பிரமாணங்களாலும் உன்னைக் காட்டிக் கொடுக்க முடியாது. மகாவாக்கியம் ஆத்மாவான உன்னைத்தான் ஆச்சரியமானவன் என்று சொல்கிறது என்பதில் என்ன முரண்பாடிருக்கிறது.
ஆதலால் நீங்கள் ஏதாவது முரண்பாடு கண்டால் அதற்கு காரணம் நீங்கள் பிரமாணத்தையும், பிரமேயத்தையும் மாற்றி பயன்படுத்தி குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனாத்ம பிரமாணங்களையும், அனாத்மா பிரமேயங்களையும் ஆத்மா பிரமாணம், ஆத்ம பிரமேயம் இவைகளோடு கலந்து விட்டீர்கள். பிரத்யக்ஷம் போன்ற பிரமாணங்கள் அனாத்மா பிரமாணங்களாகும். உங்களுடைய பயங்கரமான அனுபவங்கள் அனைத்தும் அனாத்ம பிரமேயமாகும். மகாவாக்கியம் ஆத்ம-பிரமாணம், ஆத்மா(நான்) ஆத்ம-பிரமேயம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவிப்பவனாக இருக்கின்ற நான். ஸத்-சித், ஆனந்தமாக இருக்கிறேன். உலகத்தில் துளிக்கூட ஆனந்தம் கிடையாது. சாதகன் இதை தியானிக்க வேண்டும். ஐந்த அனாத்மாக்களாலும் ஆனந்தத்தை கொடுக்க முடியாது. மனம் கூட ஆனந்தத்தை கொடுக்க முடியாது. புண்ணியம் அதிகமாக இருக்கும்போது மனமானது மூன்று வகையான எண்ணங்களை உற்பத்தி செய்கின்றது. அவைகள் பிரியம், மோதம், பிரமோதம் என்பதாகும். இந்த நேரத்தில் ஆத்மாவானது மனதில் தோன்றிய இந்த எண்ணங்களில் தற்காலிகமாக பிரதிபலிக்கின்றது. அதனால் தற்காலிக ஆனந்தம் மனதில் தோன்றுகிறது. இந்த எண்ணங்கள் மறைந்ததும் ஆனந்தமும் சென்றுவிடும். ஆனந்த ஸ்வரூப ஆத்மா மட்டும் இருந்து கொண்டு இருக்கும்.
இந்த பிரிய, மோத, பிரமோத எண்ணங்கள் ஆத்மானந்தத்தின் வெளிப்பாடாகும். சாதகன் இந்த கருத்தை மகாவாக்கியத்தின் மூலமாக தொடர்ந்து நினைவுக்கு கொண்டுவர வேண்டும். எப்போதாவது முரண்பாடு மனதில் வரும்போது என்னுடைய பயங்கரமான அனுபவங்கள் அனைத்தும் அனாத்மாவை சேர்ந்தது, நான் ஆனந்த ஸ்வரூபமானவன் என்று தியானிக்க வேண்டும்.
மகாவாக்கிய விசாரத்தின் போது நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து இதுவாகும். சாதகன் பஞ்ச அனாத்மாக்களால் தீவிரமாக ஆட்கொள்ளப்படும்போது அவனால் நான் அற்புதமானவன் என்று சொல்ல முடியாது. அவனுடைய மனமானது அனாத்மாவையே சுற்றிவரும்போதோ, தன்னை அகங்காரத்தோடோ, மமகாரத்தோடோ அனாத்மாவாக அடையாளப்படுத்திக் கொள்ளும் போது சில அனுபவங்கள் அற்புதமாகவும், பல அனுபவங்கள் பயங்கரமாகவும் இருந்தன என்று சொல்வான். அந்த அற்புத அனுபவங்களும் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது, ஏனென்றால் அந்த மகிழ்ச்சியும் சென்றுவிடக் கூடியது, எவ்வளவு நாட்கள் இது இருக்குமோ என்ற எண்ணமும் கூடவே இருக்கும்..
என்னுடைய அனுபவங்களுக்கும், மகாவாக்கியத்துக்குமிடையே எந்த முரண்பாடும் கிடையாது. அனுபவங்கள் பயங்கரமாக இருந்தாலும் அவைகளால் நான் அற்புதமானவன் என்ற அறிவை மாற்ற முடியாது. சரியான பிரமாணத்தின் மூலம் அடையப்படும் சரியான அறிவை, அதற்கு எதிரான எந்த அனுபவங்களாலும் மாற்ற முடியாது. கீழ்கண்ட உதாரணத்தை ஒப்பிட்டு இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.
1. அனைத்து நட்சத்திரங்களும் பூமியை விடவும், சூரியனை விடவும் மிகப்பெரியவை என்பதை வானியல் அறிவியல் ஆய்வு மூலம் நாம் அறிவோம். ஆனால் இரவில் வானத்தில் நட்சத்திரங்களை பிரத்யக்ஷ பிரமானாமான கண்களால் பார்க்கும்போது அவைகள் மிகவும் சிறியதாக தோன்றுகிறது. இந்த அனுபவமானது நாம் சரியான பிரமானம் மூலம் அடைந்த அறிவை மாற்றாது.2. அதேபோல நம்முடைய சூரியோதயம், சூரிய அஸ்தமனம் ஆகிய அனுபவங்களும் வானியல் அறிவியல் மூலம் நாம் ஏற்கனவே அடைந்திருக்கும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற அறிவை மாற்றாது.
அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியத்தில் உள்ள அஹம் என்ற சொல் சாட்சி சைத்னயத்தைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பிரமாதா, பிரமாணம், பிரமேயம் ஆகியவற்றிற்கும் வேறாக புரிந்து கொள்ள வேண்டும். பிரமாதா அகங்காரத்தை, மனதை குறிக்கிறது. மனம் உணர்ச்சிகளால் அலைகழிக்கபட்டுக் கொண்டிருக்கும். மகாவாக்கியம் பிரமாதாவை பற்றி பேசவில்லை, பிரமாத்ருவை பற்றித்தான் பேசுகிறது, இதுவே நித்திய முக்தன். ஆகவே மனதில் இருக்கும் சாட்சி சைதன்யத்தை அதில் இருக்கும் உணர்ச்சிகளில் இருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
மனதில் இன்பமும், துன்பமும் மாறிமாறி வந்துக் கொண்டேயிருக்கும். நான் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சில நேரங்களில் துயரத்துடன் இருக்கிறேன் என்று மாறிக் கொண்டிருக்கும் நான் என்ற சொல்லின் மூலம் உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றோம். இந்த நான் என்ற சொல் மனதைத்தான் குறிக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும், துயரத்துடன் இருக்கிறேன் என்று மனதை பொருட்படுத்தும் வேறொரு மாறாத, நிலையான நான் இருக்க வேண்டும். அதுவே சாட்சி சைதன்யமாகும். இந்த சாட்சி சைதன்யம் அனுபவிக்கப்படுகின்ற ஆனந்தமல்ல, ஆனந்தமயமாகவே இருப்பதாகும். இதையே மகாவாக்கியத்தில் உள்ள அஹம் என்ற சொல்லின் பொருளாகும். ஆனந்தத்தின் இயல்பை ஐந்தவகையான அம்சங்களினால் அறிந்து கொள்ளலாம்.
1. ஆனந்தம் மனதின் குணமோ, காரியமோ அல்ல.
2. ஆனந்தம் தனித்துவ வஸ்து, அதுதான் மனதை வியாபித்து ஆனந்தத்தை அளிக்கிறது 3. ஆனந்தம் மனதால் வரையறுக்கப்படாதது.
4. மனம் ஒடுங்கிய நிலையிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது.
5. ஆனந்தத்தை எதனுதவியாலும் அனுபவிக்க முடியாது. சாந்தோக்ய உபநிஷத், நீயே சுகஸ்வரூபம் என்று உபதேசிக்கிறது
ஒரு கற்பனையான சூழ்நிலையை நினைத்துப் பார்ப்போம். மனம் தொந்தரவாக இருப்பதால் அதை ஏதொவொரு வழியில் நீக்க முடிவு செய்வோம். இதனால் மனம் சென்று விடுகிறது, அதனால் தொந்தரவும் சென்றுவிடுகிறது. இதனால் மிகப்பெரிய தீமையுள்ளது. மனமும், அதனுடைய தொந்தரவும் நீங்கிவிடுகிறது. ஆனால் ஆனந்த ஸ்வரூபமான நான் இருக்கிறேன். மனமில்லாமல் நான் ஆனந்த ஸ்வரூபன் என்பதை கோரமுடியாது. மனமில்லாததால் துக்கம் சென்றுவிட்டது. ஆனால் கூடவே சுகமும் சென்றுவிடுகிறது. ஏனென்றால் நம்மால் ஆனந்தத்தை கோரமுடியாது. அப்படி கோர முடியவில்லையென்றால், ஆனந்தம் நிலையாக இருப்பதனால் என்ன பயன். நான் ஸத்-சித்-ஆனந்தம் என்றும் கோரமுடியாது. எனவே நான் ஆனந்த ஸ்வரூபன் என்று கூறுவதற்கு மனம் இருக்கவேண்டும்.
வேதாந்தம் மனதின் பயன்பாட்டை நன்கு புரிந்து கொண்டிக்கிறது. ஆதலால் மனதைப் பற்றி குறை சொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. உடலுக்கு வரும் வலியையும் மனம்தான் உணர்கிறது. இருந்தாலும் மனம் நம்மிடத்தில் இருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றும் வேதாந்தம் கூறுகிறது. இதன் உதவியால்தான் நாம் ஆத்மாவை உணரமுடியும், நான்தான் பிரம்மன் என்று சொல்ல முடியும். மனது என்னிடத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதால் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. மனமொரு மித்யா என்றும் எனக்கு தெரியும். இந்த மித்யா மனதைக் கொண்டு நான் சச்சிதானந்த ஸ்வரூபம் என்று உறுதியாக கூறமுடியும். ஞானி அதனால்தான் மனதிற்கு எதிராக எந்த குறையும் சொல்வதில்லை, அதை நீக்கவும் விரும்புவதில்லை. எப்படி ஒருவன் தன் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை விட்டுவிலக விரும்புவதில்லையோ அதுபோல ஞானி மனதினால் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை நீக்காமல் இருக்கிறான்.
உலகத்திலிருந்து தப்பித்து செல்ல முயற்சிப்பது தவறான வழியாகும். மனம் இருக்கட்டும். மனதினால் நான் பிரம்மன் என்று நினைத்துப் பார்க்கமுடியும்.
கனவிலிருந்து விழித்தவுடன் கனவில் கண்டவைகள் யாவும் ஒன்றாக மறைந்து விடுவது போல மகாவாக்கிய விசாரத்தினால் அறிவை அடைந்தவுடன் சம்சாரம் மறைந்து தன்னுடைய உண்மை ஸ்வரூபமான ஆத்மாவாக தன்னை உணர்ந்து கொள்வான். இந்த நிலையில் உலகத்திலிருந்து வரும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கமாட்டான். அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டான். அவைகளை ஒரு பொருட்டாக கருதமாட்டான். ஏனென்றால் அவைகள் மித்யா என்ற அறிவோடு இருக்கிறான். எனவே மகாவாக்கியம் உலகத்தையொரு மித்யா வஸ்துவாக பார்க்கின்ற அறிவையும், நான், பிரம்மன் என்ற உணர்வையும் கொடுக்கின்றது. எப்படி துக்கமான திரைப்படத்தையும் பொழுதுபோக்காக பார்க்கின்றோமோ அதேபோல துயரத்தைக் கொடுக்கின்ற இந்த உலகத்தை பொழுதுபோக்காக பார்க்கின்ற நிலையை மகாவாக்கியம் கொடுக்கின்றது. இந்த அறிவானது சந்தேகத்தையும், மித்யா ஞானத்தையும், அக்ஞானத்தையும் நீக்கி விடுகின்றது.
நான் பரிதாபத்திற்குரியவன் என்று சொல்லும் போதும், துயரப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதும், இந்த நான் என்ற சொல் மனதைக் குறிக்கின்றது. மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மனதில் மகிழ்ச்சியான அனுபவங்களும், துக்கமான அனுபவங்களும் வந்து போகின்றது. இந்த மனமானது உலகத்தின் ஒரு பகுதியாகும். மனமும் ஒரு பொருளாகும். அதற்கு பார்க்கப்படுவது, பௌதிகத்துவம், சகுணத்துவம், மாற்றமடையக்கூடிய தன்மை, வந்து-போகின்ற நிலையாமை தன்மை ஆகிய ஒரு பொருளுக்கு இருக்கவேண்டிய ஐந்து குணங்களும் இருக்கின்றது. பிராரப்த கர்மபலனால் இது சஞ்சலபட்டுக் கொண்டேயிருக்கிறது. பழைய வாசனைகளின் பலத்தால் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. வாசனை பலத்தினால் நான் என்றும் ஆனந்தஸ்வரூபன் என்ற உண்மை மனதில் தோன்றவில்லை. எனவே மனம் நான் என்றும் துக்கத்திலிருப்பவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மனதை ஆத்மாவானது ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் துன்பங்கள் இருந்தால்தான் இன்பமான தருணங்களை அனுபவிக்க முடியும். மனச்சோர்வு, எதிர்மறையான எண்ணங்கள் எழும்போது, வயதான காலத்தில் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சங்கள் மனதில் எழும். அந்த நேரத்தில் கீழே கூறப்பட்ட கருத்துக்களை தியானிக்க வேண்டும்.
நான் துக்கமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லும் போது இந்த இரண்டு அனுபவங்களிலும் இருக்கின்ற நான் என்ற சொல்லானது மாறிக்கொண்டிருக்கின்ற மனதைக் குறிக்கின்றது. இந்த அனுபவங்களையும் ஏதோ வேறொன்றினால்தான் குறிக்கப்பட வேண்டும். அந்தவொன்று சாட்சி சைதன்யம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சாட்சி சைதன்யம் துக்கமுமல்ல, சுகமும் அல்ல. சுக-ஸ்வரூபமாகவே என்றும் இருப்பதாகும்.
மகாவாக்கிய விசாரம் நன்கு மனதினால் செய்துவிட்டால் பிரமாத்ரு-பிரமாண-பிரமேய திரிபுடி பொய்யாகிவிடும். இந்த சாதகன் அபிரமாதா சாட்சியாக, சுகமான ஆத்ம-அனாத்ம இரட்டைத்தொகுப்பிற்கு வெற்றிகரமாக சென்றுவிடுவான்.
நான் ஞானியாக வேண்டும், முக்தனாக வேண்டும் என்று வேதாந்த சாதகன் நினைக்கக்கூடாது. மகாவாக்கியத்தை புரிந்து கொண்டபின், நானே ஞானி, முக்தன் என்று உணர்ந்து கொள்ளவோம். ஞானமும், முக்தியும் அடையக் கூடியது அல்ல. ஆத்மாவாக இருப்பதை உணர்ந்து கொள்வதுதான் மகாவாக்கியத்தின் உபதேசமாகும். மீமாம்ஸகர்கள் மகாவாக்கியம் என்பது தியானத்தின் போது தியானித்து அதன் பலனாக மோட்சத்தை அடைவதுதான் என்று கூறுகிறார்கள். உபாஸனையினால் அடையப்படும் எதுவும் அநித்தியமாகும். ஆனால் ஆத்மஞானத்தால் அடைகின்ற மோட்சமானது நித்தியமாகும்.
கேள்வி: சித்தபோதவாக்கியம் அபிரமாணமாகும். ஏனென்றால் இந்த வாக்கியம் ஏற்கனவே வேறொரு பிரமாணம் மூலம் தெரிந்த உண்மையை இது சொல்வதாக இருக்கின்றது.பதில்: சித்தபோதவாக்கியம் மனிதனால் சொல்லப்பட்டிருந்தால் அது அபிரமாணம். உதாரணமாக பத்திரிகையில் படிக்கின்ற சில விஷயங்கள் சித்தபோத பிரமாணமாகும். ஆனால் இந்த நியதி மற்றும் அபௌருஷ வேத வாக்கியத்திற்கு பொருந்தாது. ஏனெனில் வேதாந்த சித்தபோத வாக்கியம் குறிப்பதை வேறொரு பிரமாணத்தால் அறியமுடியாது.
மகாவாக்கியம் என்பது தூங்குகின்றவனை எழுப்புகின்ற சப்த வாக்கியம் போன்றது. இது நம்முள் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கின்ற சப்தவாக்கியமாகும்.
ஏன் ஆத்மா அனுபவிக்கப்படும் பொருளாக கிடைப்பதில்லை. இதை ஆசாரியார் விளக்குகிறார். முதல் காரணம் எல்லா பிரமாணங்களும் ஜட பதார்த்தங்களையே கையாளுகின்றன. நமது ஐந்து புலன்களும் சப்தம், தொடுதல், உருவம், சுவை, மணம் ஆகியவற்றை உணர்த்ததான் பயன்படுகின்றன. பௌதீக உடல் தொடு உணர்ச்சியையும, மனம் பிரத்யக்ஷ அனுபவத்தை கொடுக்கவும் பயன்படுகின்றன. மனமும் சூட்சும பூதங்களினால் உருவாக்கப்பட்டவைதான் என்று சாஸ்திரம் கூறுகின்றன. அறிவைக் கொடுக்கின்ற கருவிகள் அனைத்தும் பொருளை பகுத்தறியத்தான் உதவுகின்றன. விக்ஞானமும் பொருளைப் பற்றித்தான் பேசுகின்றது. இந்தப் பொருளே அனாத்மாவாகும். மாறாக ஆத்மா பொருள் கிடையாது, அது உணர்வு தத்துவமாகும். இப்படியிருக்கின்ற ஆத்மா எப்படி எந்த பிரமாணத்துக்கும் விஷயமாக இருக்க முடியும்.
தனியொரு மனிதன் புதிய அனுபவத்தை அடைய முயற்சி செய்து அடைந்தும் விட்டால் அது புலன்களின் பொருளாக மட்டுமே வருகிறது. தியானத்தின் போது மனம் ஒரு கருவியாக இருப்பதால் பிரம்ம அனுபவமே பெற்றாலும் அதுவும் ஒரு பொருளாக கருதப்படுவதால் அந்த அனுபவமே பிரம்மனாக முடியாது. பிரம்ம அனுபவம் ஒரு சம்பவமாக இருக்க முடியாது, அதுவொரு உணர்வு மயமாகும். இதுதான் அடிப்படையான உண்மையாகும். இது தெளிவாக புரியாவிட்டால் பிரம்மத்தை நாடிக் கொண்டிருக்கின்ற சாதகன், நான் பிரம்மத்தை புரிந்து கொண்டு விட்டேன், ஆனால் அதன் அனுபவத்திற்காக காத்திருக்கிறேன் என்று சொல்வான். ஆகவே ஆசாரியார் உறுதியாக சொல்வது, ஆத்மாவொரு பொருளாக இல்லாததால் அதை எந்தக் கருவிக் கொண்டும் அறிந்து கொள்ளமுடியாது என்பதாகும்.
உணர்வை எந்த அறிவைக் கொடுக்கும் கருவியாலும் அறிந்து கொள்ள முடியாது. அதேப்போன்று உணர்வுமயத்தை வெளிப்படுத்த எந்த பிரமாணமும் தேவையில்லை என்பது இரண்டாவது கருத்தாகும். ஏனென்றால் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நான், நான் என்று வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விழிப்பு நிலையில் நான் உணர்வுமயமாக இருக்கிறேன். அதனால் என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதேபோல கனவிலும் உணர்வுமயமாக இருக்கிறேன். அதனால் என்னால் கனவை அறிந்துகொள்ள முடிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கியிருந்தாலும் உடலும் அசைவற்று இருந்தாலும் உணர்வுமயமாக இருக்கிறேன். அதனால் இந்த நிலையில் ஒன்றும் அறியவில்லை என்று நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆதலால் நான் எப்போதும் உணர்வுமயமாகவே இருக்கிறேன்.
மூன்றாவது கருத்து எல்லா பொருளுக்கும் குணங்கள் உண்டு. எந்த விக்ஞானியும் ஆத்மாவை கண்டுபிடிக்கவில்லை. உணர்வுமயம் என்பது புதிய வஸ்துவாகும். ஏனென்றால் அதற்கென்று எந்தவிதமான பௌதிக குணங்களும் , ரசாயண குணங்களும் இல்லை. இதனை எந்த பிரமாணத்தை பயன்படுத்தியும் அறிந்து கொள்ள முடியாது. உணர்வுமயத்தை புரிந்து கொள்ள தேவையில்லை. ஏனென்றால் அது தானே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆத்மாதான் உதவிசெய்கிறது.
நான்காவது கருத்து: ஆத்மாவின் இருப்பைப் பற்றி எந்தவிதமான சந்தேகமும் இருக்கக்கூடாது. நாம் உணர்வுமயமாக இருப்பதே அதன் இருப்பினால்தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். வேதாந்த வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கும் வேறு யாராவது ஒருவரை இன்றைக்கு வந்திருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வரலாம். ஆனால் நான் வந்திருக்கிறேனா இல்லையா என்ற சந்தேகம் வரவே வராது. எங்கு சந்தேகம் வருகிறதோ அங்குதான் விசாரம் செய்வோம்.
நான் இருக்கிறேன், நான் உணர்வுமயமானவன் என்பதில் நமக்கு சந்தேகம் வராது. உணர்வுமயம் எந்த வகையானது, என்ற சந்தேகம் வரலாம். அதாவது வரையறுக்கப்பட்டதா, வரையறுக்கப்படாததா என்ற சந்தேகம் வரலாம். ஏனென்றால்; உடல்-மனத் தொகுப்பு நம்மோடு சேர்ந்திருப்பதால் நமக்கு இந்த சந்தேகம் வரும். உணர்வு அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அதன் இயல்பானது தெளிவாக தெரிவதில்லை. உபநிஶத்தின் மூலமாகத்தான் அதை புரிந்து கொள்ள முடியும்.
சாஸ்திரம் இந்த உணர்வுமயத்தின் ஐந்து அம்சங்களை வெளிக்காட்டுகிறது. அவைகள்:1. இது உடலின் ஒரு பகுதியோ அல்லது உடலினால் உருவாக்கப்பட்டதோ அல்ல.2. இது தனித்துவமான ஒன்று. உடல் முழுவதும் வியாபித்து அதனை உயிர்ப்பிக்கிறது.3. இது உடலால் வரையறுக்கப்படாதது4. இது உடலழிந்தாலும் இருந்துகொண்டிருப்பது.5. உடல் அழிந்துவிட்டால் இதனை நெருங்கமுடியாது, உணர முடியாது.
சாஸ்திரத்தை தவிர வேறெந்த பிரமாணத்தாலும் இந்த கருத்தை அறிந்து கொள்ள முடியாது
அனைத்து பிரமாணங்களும் எண்ணங்களை தோற்றுவித்து அதன் மூலம் பொருளை வெளிப்படுத்துகிறது. ஆனால் எண்ணங்களால் சாட்சி சைதன்யத்தை வெளிக்காட்டமுடியாது. ஏனென்றால் அந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதே சாட்சி சைதன்யம்தான். சாட்சியை அறிய வேண்டுமானால் மகாவாக்கிய பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும். மற்ற பிரமாணங்களால் இதை காட்டிக்கொடுக்க முடியாது. ஆதலால் சாதகன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவன் சாட்சியின் இயல்பை அறிய விரும்பினால் மற்ற பிரமாணங்களையோ, மனதையோ பயன்படுத்த முடியாது என்றும், மகாவாக்கிய பிரமாணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதாகும். மனதை பிரகாசிப்பதும் சாட்சி சைதன்யம்தான்.
மனதில் உள்ள சிதாபாஸம் உலகத்தை அறிய வைக்கிறது. ஆனால் மனதை அறிய வைப்பது சாட்சி சைதன்யமான ஆத்மாதான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இரவு நேரத்தில் பூமியில் தோன்றும் வெளிச்சம் நிலாவின் வெளிச்சம் என்று கூறுகிறோம். ஆனால் நிலாவின் வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சம் என்று அறிந்து கொண்டிருப்பது போல உலகத்தை பிரகாசிப்பது மனதிலுள்ள சிதாபாசம், ஆனால் மனதை பிரகாசிப்பது சாட்சி சைதன்யமாகும்.
மகாவாக்கியத்தில் உள்ள த்வம் பத சாமான்ய அர்த்தத்தை தெரிந்து கொள்ள யோக சாஸ்திரம் பயனுள்ளதாக இருக்கும் என்று அத்வைத தத்துவம் அங்கீகரிக்கிறது. யோக சாஸ்திரத்தால் த்வம்-பத, தத்-பத, ஐக்கிய ஞானத்தைக் கொடுக்க முடியாது.
சாதகன் சாட்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் போது மகாவாக்கியம் சாட்சியான நான் பிரம்மனாக இருக்கிறேன் என்ற விசேஷ ஞானத்தைக் கொடுக்கும். சாட்சியாக இருக்கும் நிலையை அடைந்த சாதகன் அத்தோடு நின்று விடாமல் இந்த சாட்சி சகுணமா, நிர்குணமா வரையறுக்கப்பட்டதா, வரையறுக்கப்படாததா என்றும் அறிந்து கொள்ள ஆவல் கொள்கிறான். சாட்சியின் இயல்பான தன்மைதான் என்ன என்றும் சிந்திக்கிறான். இது அறியப்படுகின்ற பொருளாக இல்லாததால் இதனையெப்படி அறிந்து கொள்ளமுடியும் என்ற கேள்வியெழுகிறது. எனவே விசேஷ ஞானத்தை அடைய பேராவல் கொள்வான்.
சாட்சி வரையறுக்கப்பட்ட உணர்வாக மனதில் இல்லை. அது எல்லையற்ற உணர்வாக இருக்கிறது. அதனுள்ளே காலமும், தேசமும் இருக்கிறது. இதை இந்த சாதகன் உடனடியாக கிரகித்துக் கொள்வான். மேலும் தைத்திரிய உபநிஷத் கூற்றுப்படி ஆனந்தமே பிரம்மன் என்று அறிந்துகொள்வாயாக என்பதையும் நன்கு புரிந்து கொண்டு ஆனந்தத்தை அனாத்மா விஷயத்தில் தேடமாட்டான். அதன்பிறகு அகங்காரம் ஆனந்தத்தை அனுபவிக்கும் போது, இது ஆனந்த மயமான என்னுடைய பிரதிபிம்பம்தான் இது என்று கூறுவான். இவ்வாறு விடுதலையானது உடனடியாக இந்த வகையான சாதகனுக்கு கிடைத்துவிடுகிறது.
ஆசாரியாக சொல்ல விரும்புவது, த்வம்-பத விசாரத்தை அன்வய-வியதிரேக முறையை பயன்படுத்தி வெற்றிகரமாக முடித்த சாதகனுக்கு மகாவாக்கியம் சிரவணத்தின் போதே விடுதலையைக் கொடுத்துவிடுகிறது.
அன்வய-வியதிரேக முறையை த்வம்பத விசாரத்தின் போதுதான் பயன்படுத்தி சாமான்ய அறிவை அடைய வேண்டும். மகாவாக்கிய விசாரத்தின்போது பயன்படுத்தக்கூடாது. ஆனால் சாமான்ய ஞானத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. இந்த அறிவு இல்லாமல் வேதாந்தத்தை புரிந்து கொள்ளமுடியாது என்று ஆசாரியார் வலியுறுத்துகிறார். சாமான்ய ஞானத்தின் விளைவு விசேஷ ஞானத்தை விரைவில் அடைதலாகும். சாமான்ய ஞானம் ஒருவனை சாட்சியாக நிலைத்திருக்க வைத்திருக்கிறது.
வேதாந்தத்தில் கூறப்படுகின்ற உதாரணம்: குருவும், பத்து சீடர்களும் ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தனர். ஒரு மாணவனை அழைத்து பத்துபேரும் கரை சேர்ந்தனரா என்று அறிய மாணவர்களை எண்ணச் சொன்னார். அவன் தன்னைவிட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணினான். குரு மீண்டும் எண்ணச் சொன்னார். அந்த ஒன்பது பேர்களும் தனக்கு வேறானவர்கள் என்ற அறிவை அவன் அடைய வேண்டும் என்பதே அவர் எண்ணமாகும். ஓன்பது பேர்களை எண்ணுவது முக்கியம். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் நானல்ல என்று ஒதுக்கமுடியும். அதுபோல மகாவாக்கிய விசாரத்தின் போது ஸ்தூல உடல், சூட்சும உடல் ஆகியவைகள் அனாத்மா என்று நீக்கவேண்டும். காரண, காரியத்தையும் நீக்கிவிட வேண்டும். உதாரணத்தில் ஒன்பது பேர்களை நீக்கிவிட்ட எண்ணியவனைப் பார்த்து, இப்போது நீ யார் என்று கேட்கும்போது, சாமான்ய ஞானத்தை அடைந்திருந்த அந்த சீடன் நான்தான் அந்த பத்தாவது மனிதன் என்று உடனடியாக கூறிவிடுவான். அதேபோல சாமான்ய ஞானத்தை அடைந்திருக்கும் சாதகனால் விசேஷ ஞானத்தை மகாவாக்கிய விசாரத்தின் முடிவில் அப்போதே அடைந்திடுவான்.
பல வேதாந்த சாதகர்கள் நான் சாட்சியென்று என்னால் கிரகிக்க முடிகிறது. ஆனால் நான்தான் இந்த ஜகத்துக்கு ஆதாரமென்று என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. ஆனால் இதுதான் விசேஷ ஞானம். மோட்சத்தை அடைவதற்கு இந்த விசேஷஞானம்தான் அவசியமாகிறது.
ஆசாரியார் சொல்கிறார், சாதகன் அன்வயவியதிரேக முறைப்படி விசாரம் செய்து சாமான்ய ஞானமான, நான் சாட்சியாக இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைகிறான். அதாவது நான் பிரமாதாவல்ல, நான் சாட்சியென்றும், நான் சிதாபாசனுமல்ல, நான் சித்தென்றும் என்றும் புரிந்து கொள்கிறான்., சிதாபாசன் மனம் செயல்படும் போதுதான் வரும், மனம் செயல்படாத போது அதுவும் சென்றுவிடும். என்வே மனமும், சிதாபாஸனும் வந்து செல்கின்ற இயல்பை உடையது. நான் என்றென்றும் சித் சாட்சியாக இருக்கிறேன் என்பது தெளிவாகின்றது.
நாம் இதுவரை கற்றதை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நம்முடைய குறிக்கோள் சாமான்ய ஞானத்தை அடைவதாகும். இதை மனதில் கொண்டு அன்வய-வியதிரேக முறைப்படி விசாரத்தை நாம் செய்ய வேண்டும். இந்த விசாரத்தின் ஒரு பகுதியான த்ருக்-த்ருஷ்ய விசாரத்தை செய்தோம். அதன்பிறகு இரணடாவதாக அவஸ்தாத்ரய விசாரத்தை செய்ய வேண்டும். இதற்கு மற்ற பெயர்கள் சாட்சிய-சாட்கி-விவேகம் மற்றும் ஆகமபாயி-சாட்சி விவேகமாகும்.
அனுபவத்தின் மூன்று நிலைகளைப் படிக்கும் போது நாம் அருமையான உண்மைகளைக் கண்டுபிடிப்போம். அவைகள் படைக்கப்பட்ட அனைத்தும் வந்து போகக்கூடிய தன்மையை உடையது. அதேசமயம் நான் மட்டும் நிலையான காரணியாகவும், வந்து-போவதை பார்க்கும் சாட்சி காரணியாகவும் தொடர்ந்து இருக்கிறேன். ஜாக்ரத் அவஸ்தையில் மூன்று சரீரங்களும் உலகத்தோடு சேர்ந்து வருகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் மூன்று சரீரங்களும், உலகமும் ஒடுங்கி விடுகின்றது.
ஜகத் காரியமாக இருப்பதால் ஈஸ்வரனை காரணம் என்று ஏற்றுக் கொள்கிறோம். காரியத்தை நீக்கிவிட்டால் காரணமும் சேர்ந்து நீக்கப்படும். விழிப்புநிலையில் மூன்று சரீரங்களும், உலகமும் வருகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் இவைகள் இல்லை. அதனால் படைக்கின்ற ஈஸ்வரனும் இல்லை. ஆதலால் ஆழ்ந்த உறக்கத்தில் பக்தனும் இல்லை, அபக்தனும் இல்லை. சாட்சியான நான் மட்டும் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருக்கிறேன். சாட்சியாக இருக்கும் போது எந்த பிரச்சனைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்போம். இந்த காரணத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் சுகமாக இருக்கிறோம். அதனால்தான் எல்லோரும் நிம்மதியாக இருக்க, துக்கத்தை மறக்க தூக்கத்தை நாடுகிறோம். அதனால் சாட்சியான என்னுடைய இயல்பு ஆனந்தமாக இருப்பது என்பதும் அனாத்மாவான காரிய-காரண பிரபஞ்சம் தொடர்ந்து துயரத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
உபநிஷத் சாட்சியை பிரம்மத்துடன் சமப்படுத்தும்போது சாட்சியைப் பற்றி ஏற்கனவே மாணவன் நன்கு அறிந்திருப்பான் என்று கருதப்படுகிறது. ஆதலால் மகாவாக்கிய விசாரத்திற்கு முன்பு த்வம் அம்சமான சாட்சியை ஏற்கனவே விசாரம் செய்து அறிந்திருக்க வேண்டும்.
அன்வய-வியதிரேக விசாரத்தின் மூலமாக சாட்சியை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விசாரம் இரண்டு பகுதிகளை உடையது. ஒன்று த்ருக்-த்ருஷ்ய-விவேகம் இன்னொன்று அவஸ்தாத்ரய விவேகமாகும். ஆசாரியார் முதலில் த்ருக்-த்ருஷ்ய விசாரத்தைப் பற்றி பேசுகிறார். இதன் மூலம் மாணவன் இந்த முழு பிரமேய பிரபஞ்சம் அனாத்மாதான் என்றும், வந்து-போகக்கூடியது என்றும் அறிந்து கொள்வான். இதற்கு பிறகு இரண்டாவது பகுதியான அவஸ்தாத்ரய விவேகத்தை விளக்குகிறார்.
முதல் நிலையான அன்வயவியதிரேக விசாரத்தின் மூலம் இந்த அனைத்து வெளியலகமும் நீக்கப்படுகிறது. அனாத்மாவான குடும்பமும் நீக்கப்படுகிறது. ஆனால் இது முழமையான அனாத்மாவை நீக்குவதில்லை. பிரமாதா நிலையும் வந்து போகக்கூடியது என்பதை உணர்வதற்கு சாதகன் அவஸ்தாத்ரய விசாரத்தை செய்யவேண்டும். இதன்மூலம்தான் ஆழ்ந்த உறக்கத்தில் பிரமாதா தகுதியும் போய் விடுகிறது. மேலும் சாட்சி மட்டும் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். ஆதலால் அன்வயவியதிரேக முறையின் முதல் பகுதியான த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் மூலம் வெறும் உணர்வால் பானைப் போன்ற வெளிப்புறமாக உணரப்பட்ட பொருட்களின் அனாத்மநிலையானது தெளிவாக உணரலாம்..
இந்த முழு உலகமும் பார்க்கக்கூடியது (த்ருஷ்யம்), நான் பார்ப்பவன்(த்ருக்). இங்கே பார்ப்பவன் என்பது பிரமாதாவை மட்டும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் பிரமாதா நீக்கப்படவில்லை. பார்ப்பவைகளெல்லாம் நானல்ல என்றும், உடல் நானல்ல என்றும் கூறமுடிகிறது. ஆனால் மனதை நான் என்று கூறமுடியாது. பிரமாதாவாக இருக்கின்ற மனதை கிரகிக்க முடியாது. உதாரணமாக கண்கள் மனிதர்களையோ, பொருட்களையோ கிரகிக்கும் போது பார்ப்பவனுக்கு தனக்கு இரண்டு கண்கள் இருக்கின்றது என்பது தெரிந்தாலும், அந்த கண்களை பார்க்க முடியாததாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறான். அதேபோல மனதை பார்க்க முடியாவிட்டாலும் அது என்னிடத்தில் இருப்பது உணர்ந்து கொள்கிறான். பிரமேயத்தை அறிந்து கொள்வதற்கு பிரமாதா கட்டாயம் தேவைப்படுகிறது. பிரமாதா பார்க்கப்படுகின்ற பொருளாக இல்லாவிட்டாலும் குறிப்பால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அனாத்மாவான பிரமேயத்தின் தனித்துவமான அம்சங்களை கவனிக்க வேண்டும். பின்னால் இதை சாட்சிய பிரபஞ்சம் வரை நீட்டிக்க வேண்டும். அனாத்மாவான பிரமேயத்திற்கு ஐந்து வகையான அம்சங்கள் உண்டு. அவைகள்,1. த்ருஷ்யத்வம் - அறியப்படுகின்ற பொருள்2. பௌதிகத்வம் - பொருளின் உருவமைப்பு, தன்மைகள்3. சகுணத்வம் - குணங்கள்4. சவிகாரம் - மாற்றத்திற்குட்பட்டது5. அனாகமாபாயித்வம் - வந்து-போகக்கூடியது. முதலில் இவைகளை பானைக்கு பொருத்தி பார்ப்போம். பிறகு மனதிற்கு பொருத்தி பார்த்து அறிவை அடைவோம். இந்த அம்சங்களை அனாத்ம பொருட்களுடன் பொருத்திப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு உடல், புலன்கள். மனம், புத்தி இவைகளோடு பொருத்திப் பார்த்து இவைகளும் அனாத்மா என்ற அறிவை அடைய வேண்டும். நான் எப்படி பானை இல்லையோ அதுபோல இந்த உடலும் அல்ல என்ற முடிவிற்கு வரவேண்டும். பிறகு மனோமயகோசமான மனமும் நானல்ல என்ற முடிவிற்கும், விக்ஞானமய கோசமான புத்தியும் நானல்ல என்ற முடிவிற்கும் வரவேண்டும்.
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம் என்கின்ற நான்கு கோசங்களும் அனாத்மா என்று நீக்கிய பின்னர் சாதகன் முக்கியமான யுக்தியை கையாள வேண்டும். மனதை பயன்படுத்தும்போதுதான் நான் பிரமாதா என்ற தகுதியை அடைகிறேன். ஆழ்ந்த உறக்கத்திலோ, சமாதி நிலையிலோ மனமானது பயன்படுத்தபடவில்லை. அதனால் மனதிற்கு பிரமாதா என்ற தகுதியும் சென்று விடுகிறது. இதிலிருந்து மனதிற்கு பிரமாதா என்ற தகுதியானது இயல்பானதல்ல என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது என் இருத்தலை சந்தேகமின்றி உணர்கிறேன். ஆதலால் சாட்சிதான் என்னுடைய இயல்பு என்று உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
பிரமாதா, அகங்கார தகுதி கூட தற்காலிகமாகதான் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் ஒடுங்கியிருக்கும் இவைகள் விழிப்பு நிலையில் வந்துவிடுகிறது. ஆழ்ந்த உறக்கத்திலும் இவைகள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை. அப்படியிருந்தால் நம்மால் விழித்துயெழுந்து கொள்ளமுடியாது. எனவே ஆழ்உறக்கத்தில் செயல்படாமல் ஒடுங்கியிருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் அதை பிரகாசப்படுத்துவது சாட்சி மட்டும்தான் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வந்து செல்கின்ற அகங்காரத்தை காட்டிக் கொடுக்க நிலையானவொன்று இருந்தாக வேண்டும். அதுவே சாட்சியாகும். ஆதலால் சாட்சி தன் இருப்பால் செயலுக்கு வந்துள்ள அகங்காரம், செயலற்றிருக்கின்ற அகங்காரம் ஆகிய இரண்டையும் பிரகாசிக்கின்றது.
வேதாந்தம் தத்-த்வம்-அஸி என்று சொல்லும்போது அது பிரமாதா பிரம்மன் என்றும், உடல் பிரம்மன் என்றோ, மனம் பிரம்மன் என்றோ, சிதாபாசன் பிரம்மன் என்றோ சொல்லவில்லை. சிதாபாசனும் தற்காலிகமானதுதான். மனம் இருக்கும்போது அதுவும் இருக்கும். மனம் அழிந்துவிட்டால் அதுவும் மறைந்துவிடும். வேதாந்தம் சித் ஸ்வரூபத்தைத்தான் பேசுகிறது. இந்த சித்தின் இருப்பினால்தான் சிதாபாசனும் தற்காலிகமாக உருவாகிறது. சிதாபாசனின் இருப்பே சித்தின் இருப்பை நிரூபிக்கிறது. உதாரணமாக நிலைகண்ணாடியில் தெரிகின்ற நம் பிரதிபிம்ப முகம் நம்முடைய உண்மை முகத்தை நிரூபிப்பதாக இருக்கிறது. இந்த சித்துதான் பிரம்மனாக சமப்படுத்தப்படுகிறது.
அன்வயவியதிரேக முறையின் முதல்படியான த்ருக்-த்ருஷ்ய விசாரத்தில் கீழ்கண்ட நான்கு விஷயங்கள் அறியப்படுகிறது.1.சாதகன் முதலில் உடல்ரீதியாக பானை போன்ற வெளிப்புறப் பொருள்களை உணர்ந்து அவற்றின் அனாத்மா நிலையை உணர்கிறான்.2.இந்த அனுமானத்தின் விளைவாக பிரமாதாவின் முன்னிருப்பை கண்டறிய வேண்டும்.3.உணரப்பட்ட அனாத்ம பொருட்களின் தனித்துவமான ஐந்து அம்சங்களை கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து அம்சங்களாவது த்ருஷ்யத்துவம், பௌதிகத்வம், சகுணத்வம், சவிகாரத்வம், அனாகமாபாயித்வம் ஆகும்.4.இறுதியாக இந்த ஐந்து அம்சங்களும் நம் உடலிலும், புலன்களிலும், மனதிலும், புத்தியிலும் இருப்பதை உணர்ந்து அவைகளும் அனாத்மா என்று நீக்க வேண்டும்.
அன்வயவியதிரேக இரண்டாவது படியான அவஸ்தா-த்ரய விசாரத்தின்போது பிரமாதாவும் வந்து-போகின்ற, நிலையற்ற அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் இதன் விளைவாக என்றும் இருக்கின்ற சாட்சி சைதன்யம் செயலுக்கு வந்துள்ள அகங்காரத்தையும், செயலற்று இருக்கின்ற அகங்காரத்தையும் காட்டிக் கொடுக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மனம் பொருளாகவும், கருவியாகவும் பயன்படுகிறது. விழிப்புநிலையில் மனம் கருவியாகவும், உலகம் அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறது. இதனால் மனதை நான் என்ற சொல்லோடு சேர்த்துக் கொள்கிறோம். எனவே இதை பிரமாதா என்று கருதுகிறோம். இதனால் உலகம் முதலில் நீக்கப்படுகிறது. குருவும் இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறார்.
பிறகு குரு சீடனிடம் கூறுகிறார். இப்போது நீ உலகத்தை பொருளாகவும். மனதை நீயாகவும் பார்க்கின்றாய். எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும், கவலையுடன் இருக்கின்றேன் என்று மனதை உன்னோடு சேர்த்துக் கொள்கிறாய். இப்போது நீ. மனம் பார்ப்பவனாக இருக்கிறதா அல்லது பார்க்கப்படும் பொருளாக இருக்கின்றதா என்று விசாரம் செய்ய வேண்டும். இதற்காக அவஸ்தா-த்ரய விசாரம் செய்ய வேண்டும். இதன்மூலம் மனமொரு பொருளாக புரிந்து கொள்ள வேண்டும். கனவு நிலையில் அனுபவிக்கின்ற உலகமே மனம்தான். . நான் கனவை அனுபவித்தேன் என்று சொல்லும்போது எண்ணங்களைத்தான் அனுபவித்தோம். இதிலிருந்து மனதை நான் ஒரு பொருளாக அனுபவிக்கின்றேன் என்று தெளிவாக புரிகிறது. இவ்வாறு மனதை என்னிடத்திலிருந்து ஒரு பொருளாக தள்ளிவிடும்போது, நான் அனுபவிப்பனாக இருந்துகொண்டு மனதை நீக்குகிறேன். இதனால் நான் இனி பிரமாதா என்று அழைக்கப்படமாட்டேன். மனம் என்னோடு இருக்கும்போது பிரமாதா என்றும், அதை நீக்கிவிடும்போது சாட்சியாக அழைக்கப்படுகிறேன்.
ஒரு சிறிய உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ளலாம். கண்ணாடி அணிபவர், தன் கண்ணாடியை உறையிலிருந்து எடுக்கும்போது அதுவொரு பொருளாக பார்க்கிறார். ஆனால் அதையே அணிந்து கொள்ளும்போது பார்ப்பவனாக மாறிவிடுகிறது. கண்ணாடி வழியாக பார்க்கப்படுகின்ற அனைத்தும் பார்க்கப்படுகின்ற பொருளாக இருக்கிறது. மூக்குகண்ணாடி இவ்விதமாக கருவியாகவும், பொருளாகவும் என்று இரண்டுவிதமாக பார்க்கப்படுகிறது. மனம் கருவியாக செயல்படும்போது நான் பிரமாதாவாகவும், பொருளாக பார்க்கப்படும் போது நான் சாட்சியாகவும் இருக்கிறேன். அகங்காரம் பொருளாக மாறும்போது. அதுவே அகங்காரத்தை பிரகாசிக்கின்ற சாட்சி சைதன்யத்தின் இருப்பைக் காட்டிக்கொடுக்கின்றது.
கேள்வி: சாட்சி திரிபுடிகளிலிருந்து வேறுபட்டது. திரிபுடி நிலையற்றது. ஆத்மா நிலையானது. சாட்சி உணர்வுபூர்வமானது, அதுவே ஆத்மாவாகும். இந்த அறிவினால் ஆத்மஞானத்தை அடைந்துவிட்டேன் என்று தெரிகிறது. இதற்கு அப்புறம் மகாவாக்கிய விசாரம் தேவைதானா? பதில்: அன்வயவியதிரோ விசாரம் மூலம் அடைந்த ஞானம் சாமான்ய ஆத்மஞானம் என்று அழைக்கப்படும். விசேஷ ஞானமே அத்வைத ஞானம் என்று அழைக்கப்படும். இந்த விசேஷ ஞானமானது மகாவாக்கிய விசாரத்தின் மூலம்தான் அடையப்படும். சாமான்ய ஆத்மஞானத்தை அடைந்திருந்தாலும் அக்ஞான நிலையில்தான் இருக்கிறோம் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: ஏன் மகாவாக்கியம் விசாரம் செய்ய வேண்டும்? அவஸ்தா-த்ரய விசாரம் மூலம் மனம்(பிரமாதா), பிரமாணம்(எண்ணங்கள்), பிரமேயம் (பொருட்கள்) என்கின்ற திரிபுடி நிலையற்றது என்ற முதல் அறிவைப் பெற்றேன். இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது சாட்சி என்கின்ற இரண்டாவது அறிவையும் பெற்றிருக்கிறேன். இந்த சாட்சி சைதன்யமே ஆத்மா என்கின்ற மூன்றாவது அறிவையும் அடைந்துவிட்டேன். இப்படி பார்க்கும்போது நான் ஆத்மஞானத்தை அடைந்துவிட்டதாக தெரிகிறது. எனவே ஆத்மஞான விசாரம் முடிவடைந்து விட்டதாக நினைக்கிறேன். நான்காவது அறிவாக ஆத்மா நிலையானது, உணர்வுமயமானது, அறிவுமயமானது என்பதை உணர்ந்துவிட்டேன். இவ்வளவு அறிவை அடைந்து விட்டேன். எனவே இது ஆத்மஞானமாகாதா? பதில்: அரைகுறையாகத்தான் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியும். அதாவது ஆத்மா நிலையானது, சைதன்ய ஸ்வரூபமானது என்ற அறிவை மட்டும்தான் அடைந்திட முடியும். ஆனால் அத்வைத ஆத்மாவை இதன் மூலம் அறிய முடியாது. இந்த அறிவு மகாவாக்கிய விசாரத்தின் மூலமாகத்தான் அடைந்திட முடியும். இன்னொரு தவறான அறிவும் வேதாந்த சாதகர்களிடத்தே இருக்கிறது. அதாவது வேதாந்தத்தை படித்துணர்ந்தாலும் சமாதியின் மூலமாகத்தான் ஆத்ம அனுபவம் கிடைக்கும் என்ற அறிவுடன் இருக்கிறார்கள்.
உதாரணமாக மலையில் தெரிகின்ற புகையை வைத்து அந்த இடத்தில் நெருப்பு இருக்கிறது என்ற அறிவு சாமான்ய அறிவாகும். நேரிடையாக நெருப்பை பார்த்து அடையும் அறிவே விசேஷ ஞானமாகும். இந்த அறிவினால் நெருப்பின் உண்மைத் தன்மைகளையும், அதன் காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல அன்வயவியதிரேக விசாரத்தின் மூலம் அடைகின்ற அறிவு மலையின் மீது தெரிகின்ற புகையை வைத்து அங்கே நெருப்பு இருக்கின்றது என்ற அறிவுக்கு சமமாகும். இது த்வைத ஆத்மஞானமாகும். நெருப்பு இருக்கின்ற இடத்தை அடைந்து நேரில் நெருப்பை பார்ப்பது மகாவாக்கியத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.
மகாவாக்கிய விசாரம் இல்லாமல் நான் ஜகத்திற்கு அதிஷ்டானம் என்றும் என்னிடத்தில்தான் உலகம் தோன்றி மறைகிறது என்று எப்படி சொல்ல முடியும்? இந்த உலகம் என்னை கட்டுப்படுத்த முடியாது. உலகத்திலிருந்து தப்பித்து செல்வது மோட்சம் என்பதல்ல. விதேகமுக்தி என்பது உலகத்திலிருந்து விடுபடுவதல்ல. மோட்சம் என்பது வாழும்போதே உலகத்தை விளையாட்டு பொருளாக பாவிப்பதாகும். இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எல்லாம் எப்படி அடைவது? இவைகளே சம்சார விடுதலைக்கு அவசியமானதாகும். இவைகளை மகாவாக்கியமில்லாமல் அடையவே முடியாது.
ஆதி சங்கரர் உபதேச பஞ்சகத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். தனிமையான, அமைதியான இடத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு தியானிக்க வேண்டும். மனதை ஆத்மாவிடத்தில் பொருத்த வேண்டும். எங்கும் வியாபத்திருக்கின்ற ஆத்மாவை தன்னுள்ளே பார்க்க வேண்டும். உலகத்தை மித்யாவாக பார்த்து பழக வேண்டும். இதையேதான் ஆசாரியாரும் பூர்வபட்சியிடம் கூறுகிறார்.;
ஆகையால் ஆசாரியார் மகாவாக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இதை மனதில் கொண்டால் அதுவே சாதகனை பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தி விடும். பாரமார்த்திக ஆத்மா அனுபவ இருப்பை கடந்துவிடுகிறது. இந்த அறிவு மகாவாக்கிய விசாரத்தின் மூலம்தான் அடையப்படும்.
சங்சராச்சாரியார் சுட்டிக்காட்டுவது, வேதாந்தம் முழுவதும், குறிப்பாக மகாவாக்கியம் ஒரு அறிவைப் பற்றித்தான் உபதேசிக்கிறது. அதாவது சம்சார விடுதலையறிவைப் பற்றித்தான் பேசுகிறது. இந்த முக்கிய செய்தியை தெரிவிப்பதற்காக அவர் ஆத்மா ஏகத்வம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். மேலும் அனைத்து வேதாந்த பகுதிகளும் ஆத்மா ஏகத்வம் என்ற அறிவை வழங்குவதற்காகவே இருக்கிறது.
அனைத்து உபநிஷத்துக்களும் சாதகனை ஜீவ-ஜகத்-ஈஸ்வரன் என்கின்ற முக்கோண வடிவத்திலிருந்து ஆத்ம-அனாத்மா என்கின்ற இரட்டை தொகுப்பிற்கு உயர்த்த வேண்டும் என்று முயற்சிக்கிறது. உபநிஷத்துக்கள் மகாவாக்கியத்தை பயன்படுத்தி இந்த அறிவை கொடுக்க முயற்சி செய்கிறது. இதை உணர்ந்து சாதகன் அதன் உபதேசத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னை பாரமார்த்திக நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். பிரம்ம அனுபவத்தை அடையாத வரைக்கும் வேதாந்தத்தை படித்துக் கொண்டிருப்பது பயனற்றது.
கேள்வி: ஆழ்ந்த உறக்கத்திலும், நிர்விகல்ப சமாதியிலும் ஆத்ம வஸ்து அனுபவிக்கப்படுகிறது. ஆதலால் மகாவாக்கிய சிரவணத்தின் மூலம் எந்தவித பயனும் பெறமுடியாது. பதில்: உண்மைதான். ஆனால் அந்த நிலையில் ஆத்ம அக்ஞானம் இருக்கிறது. இந்த நிலையில் அனுபவிக்கப்படும் சுகம் விழித்தவுடன் சென்றுவிடுகிறது. த்வைதம், சம்சாரம் வந்துவிடுகிறது.
ஆசாரியாரின் வாதமானது, ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மாவோடு ஐக்கியமாகி இருக்கிறோம், அக்ஞானமும் சென்றுவிடுகிறது, அஹம் பிரம்மாஸ்மி என்ற ஆத்ம ஞானம் அடையப்படுகிறது. ஆதலால் சம்சாரத்தின் அழிவு எல்லோருக்கும் முயற்சியில்லாமல் ஏற்பட்டுவிடுகிறது. தூங்கும்போது மோட்சம், விழித்தவுடன் சம்சாரம் என்பது யுக்திக்கு பொருந்தாது. இதனால் மோட்சம் என்பது தற்காலிகமானது என்றாகிவிடுவதால் அது மோட்சமல்ல என்று உறுதியாகிறது. எனவே ஆத்மஞானத்திற்கு மகாவாக்கியம் அவசியமாகின்றது.
கேள்வி:: ஆத்ம அக்ஞானம் ஆழ்ந்த உறக்கத்தில் ஏன் சாட்சி பிரத்யக்ஷயமாக இல்லை? அதாவது இந்த நிலையில் ஆத்மா எனக்கு தெரியவில்லை என்று ஏன் என்னால் சொல்ல முடியவில்லை? எதனால் இந்த நிலையில் அறியாமை எந்த காரணத்தால் தெரியவில்லை? பதில்: படைப்பில் சில விஷயங்கள் நேரடியாக இருப்பதால் அவற்றை அனுபவிக்க முடிகிறது. ஆனால் வேறு சில விஷயங்கள் நுட்பமாக இருப்பதால் அவற்றை நேரடியாக அனுபவிக்க முடியாது. இந்த நுட்பமான விஷயங்களை அனுபவிப்பதற்கு அதை வெளிப்படுத்தக்கூடிய ஊடகம் தேவை. உதாரணமாக சூரிய வெளிச்சமானது ஒரு அறையில் பரவியிருக்கிறது. வெளிச்சம் இருந்தாலும் அதை நம்மால் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு பொருளின் மீதுபடும் போதுதான் அதை உணரமுடியும். நமது கையை நீட்டி உள்ளங்கையை பார்க்கும்போது அதில் வெளிச்சம் தெரிகிறது. கையை எடுத்துவிட்டால் வெளிச்சத்தை பார்க்க முடியாது. சூரிய வெளிச்சமானது நமது நீட்டிய கையை ஒளிரும் கருவியாக இருந்து கொண்டு பிரகாசிக்கிறது. ஆனால் நீட்டிய கையானது சூரிய வெளிச்சத்தை காட்டிக்கொடுக்கின்ற ஊடகமாக இருக்கிறது. இதேமாதிரிதான் உணர்வுமயமும், பொருட்களும் ஒன்றையொன்று சார்ந்திருந்து அவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறது. பொருட்களை அறிவுமயமான ஆத்மா பிரகாசிக்கும் கருவியாக இருந்து கொண்டு அவைகளை காட்டிக் கொடுக்கிறது. அதேபோல பொருட்களும் அறிவுமயம் வெளிப்படுவதற்கு அதைக் காட்டிக்கொடுக்கின்ற ஊடகமாக இருக்கிறது. அறிவுமயமான சைதன்யம் இருந்தாலும் அதனை காட்டிக் கொடுக்கின்ற உடலும், மனமும் இல்லையென்றால் அதனை உணர்ந்து கொள்ள முடியாது.
கேள்வி: ஜாக்ரத் அவஸ்தையில் பானையில்லாமையை நேரிடையாக அறிந்து கொள்வது போல ஆழ்ந்த உறக்கத்தில் ஏன் என்னால் அக்ஞானத்தை நேரிடையாக அறிந்து கொள்வதில்லை. எனவே அக்ஞானம் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.
பதில்: அக்ஞானம் ஆழ்உறக்கத்தில் இருந்தாலும் அதை வெளிப்படுவதற்கு ஊடகம் இல்லாததால் நேரிடையாக அறியமுடியவில்லை. சாட்சியை தவிர வேறெந்த ஊடகமும் அதை அறிவதற்கு தேவையில்லை. ஆனால் அந்த அக்ஞானத்தை நேரிடையாக அறிந்து கொள்வதற்கு சாட்சி மட்டும் போதாது. அதனோடுகூட வேறொரு ஊடகம் வெளிப்படுவதற்கு தேவைப்படுகிறது. மனம் என்கின்ற ஊடகம் இந்த அறியாமை வெளிப்படுவதற்கு இருக்கிறது.
அகங்காரம் மூன்று அவஸ்தைகளிலும் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் எப்படி இருக்க முடியும் என்று சந்தேகம் வரலாம். இந்த நிலையில் அகங்காரம் அழிந்துவிட்டாலோ அல்லது போய்விட்டாலோ தூங்குபவனால் எழுந்திருக்க முடியாது. தூங்குபவன் விழித்தெழுந்து விடுவதால் அகங்காரம் ஜாக்ரத் அவஸ்தைக்கு வந்துவிடுவது ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் நேரிடையாக உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் அதை வெளிப்படுத்தக் கூடிய மனம் செயல்படாமல் ஒடுங்கி இருக்கின்றது. இதேபோல அக்ஞானமும் மனதின் ஒடுக்கத்தால் நேரிடையாக உணரமுடியாமல் இருக்கிறது. இந்த அக்ஞானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமானால் மகாவாக்கிய விசாரத்திற்கு வரவேண்டும். பூர்வபட்சி கேள்வி:மனம் இருக்கும்போது அஹம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். எனவே மனம் அகங்காரத்தோடு சமப்படுத்தப்படுகிறது. அதனால் மனதையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. அஹம், அகங்காரம், மனம் என்கின்ற மூன்று சொற்களும் ஒரேப் பொருளைத்தான் குறிக்கின்றது. நீங்கள் சொல்லியபடி அகங்காரமும் அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கின்றது என்பது சாட்சியை பார்ப்பதற்கான அனுமானமாக மாறுகிறது. இது யுக்திக்கு பொருந்தாததாக இருக்கிறது. ஏனென்றால் அகங்காரத்திற்கும், சாட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாக புரிந்துக் கொள்ளக்கூடிய உண்மையல்ல.
மனம், சாட்சி இரண்டையும் எப்போதும் இரண்டு வஸ்துவாக என்னால் பார்க்க முடியவில்லை என்பதாகும். பானை உதாரணத்தில் பானை பார்க்கப்படுகின்ற பொருள் என்றும், நான் பார்ப்பவன் என்றும் தெளிவாக தெரிகிறது. நான் மனதை பார்க்கப்படும் பொருளாக தெளிவாக அனுபவிப்பதில்லை. அதேபோல சைதன்யத்தையும் பார்ப்பவனாக அனுபவிப்பதில்லை. ஆதலால் என்னுடைய சாட்சி, அகங்காரம் என்ற வேறுபாடு தேவையில்லாமல் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் நான் தியானத்தில் அமர்ந்து சாட்சியாக இருந்து கொண்டு மனதை பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மனதிற்கும், சாட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாக தெரியவில்லை என்பதால் உங்கள் கூற்று நியாயமற்றது. சாட்சியை அடைந்தால்தான் மகாவாக்கிய விசாரம் செய்ய வேண்டும் என்ற கூற்றும் தோற்றுவிடுகிறது.
பதில்: எரிகின்ற பொருளிலும், எரிக்க உதவும் எரிபொருளிலும் நெருப்பு இருக்கின்றது. இதேபோல பார்ப்பவன் என்ற குணமும் பார்க்கப்படுகின்ற பொருள் என்ற குணமும் பார்ப்பவன், அகங்காரம் ஆகிய இரண்டிலும் இணைந்து இருக்கின்றன. இந்த உலகத்தில் பல எழுவாய்-செயப்படும்பொருள் இணைகள் உள்ளன. இவைகள் இரண்டு வகையாக உள்ளன. ஒரு வகையில் இவையிரண்டும் தெளிவாக வேறுபாடுடன் தெரியும். இரண்டாவது வகையானது வேறுபாடிருந்தாலும் பார்வைக்கு தெளிவாக தெரியாது. அதனால் எது எழுவாய், எது செயப்படுபொருள் என்று தெளிவாக தெரியாது. இதனால் இரண்டும் சேர்ந்திருப்பதை ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணமாக எரிகின்ற விறகை பார்க்கும் போது ஒரு பொருளாகத்தான் தெரிகிறது. ஆனால் அதில் நெருப்பு என்றவொன்றும், விறகு என்றவொன்றும் இருக்கிறது என்பதை விசாரம் செய்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். இதில் நெருப்பின் எரிக்கும் தன்மை விறகுக்கு கிடையாது என்பதை கருத்தில் கொண்டால் இந்த வேறுபாட்டை உணரலாம். வேறொரு உதாரணம், சூடானநீரை எடுத்துக் கொள்ளலாம். அதை கையில் கொட்டிக் கொண்டால் சுடுநீர் கையை சுட்டுவிட்டது என்று கூறுகிறோம். இந்த சுடுநீரில் நீரும்,நெருப்பு தத்துவமும் கலந்திருக்கிறது. சுடுநீர் சுட்டுவிட்டது என்று சொல்லும்போது நீரில் உள்ள நெருப்பு தத்துவத்தைத்தான் நம் கையை சுடும்போது நாம் குறிப்பிடுகிறோம். சாட்சி-அகங்காரம் என்கின்ற இணையும் இந்த வகையைச் சார்ந்ததுதான். இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும் நம் அறிவைக்கொண்டு இதைப்பிரித்துப் பார்த்து புரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசாரியார் சுட்டிக் காட்டுகிறார். சாட்சி நெருப்பு போன்றது மனம் எரிபொருள் போன்றது. இவையிரண்டும் ஒரேயிடத்தில் இணைந்திருக்கின்றது. இவையிரண்டையும் தனித்தனியாக பிரிக்கமுடியாது. சைதன்யத்தை மட்டும் தனியாக அனுபவிக்க முடியாது. அதேபோல மனதையும் தனியாக அனுபவிக்க முடியாது.
நிலா வெளிச்சத்தை நாம் அது கொடுக்கின்ற வெளிச்சமாகத்தான் நினைப்போம். ஆனால் விசாரம் செய்து பார்க்கும்போது அது சூரியனின் வெளிச்சம்தான் நிலவில் பிரதிபலித்து உலகத்துக்கு இரவில் கிடைக்கிறது. இங்கே சூரிய வெளிச்சம் ஒளிர்விப்பவனாகவும் நிலவு ஒளிர்விக்கப்பட்ட தத்துவமாகவும் இருக்கிறது. ஆனால் இவையிரண்டும் இணைந்து ஒன்று போல் காட்சியளிக்கிறது. இந்த உறவிற்கு அவபாஸ்ய-அவபாஸக சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய வெளிச்சம் அவபாஸகம் என்றும் நிலவு அவபாஸ்யம் அல்லது ஒளிர்வது என்று புரிந்து கொள்ள முடிகிறது. சுயமாக ஒளிரும் சூரியவெளிச்சம் சுயமாக ஒளிரும் சக்தியற்ற நிலவை ஒளிரச் செய்கிறது. எதனுடைய வெளிச்சத்தை நீ அனுபவிக்கிறாய் என்று கேட்டால் நாம் சூரிய வெளிச்சத்தையும், நிலா வெளிச்சத்தையும் அனுபவிக்கிறேன் என்பது பொருத்தமான பதிலாக இருக்கும். சூரிய வெளிச்சத்தைத்தான் அனுபவிக்கிறேன் என்று சொல்லும்போது நிலவை கற்பனையாகத்தான் நீக்க வேண்டும். உண்மையில் சுயபிரகாசமான சூரிய வெளிச்சம் இரவில் வெளிப்படமுடியாது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சுயபிரகாசமான சூரியவொளி வெளிப்படுவதற்கு ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. மேலும் சூரியவொளி வெளிப்படுவதற்கு நிலவு தேவைப்படுகிறது என்பதையும், நிலவு ஒளிர்வதற்கு சூரியவெளிச்சம் தேவைப்படுகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் விசாரம் செய்யும் போது இவையிரண்டும் வெளிப்படுவதற்கு ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்பதை உணர்வோம். ஆனால் சார்ந்திருக்கும் தன்மை வேறுபடுகின்றது. நிலவு ஒளிர்வதற்கு சூரிய வெளிச்சத்தை சார்ந்திருக்கிறது. நிலவு இல்லையென்றால் சூரியவெளிச்சம் இரவில் வெளிப்படாது.
இப்போது சூரியவொளி-சந்திரன் இணையை சாட்சி-மனம் இணையோடு ஒப்பிட்டு பார்ப்போம். மனம் என்பது நிலவைப் போலவாகும். சாட்சி சூரியவொளியைப் போலவாகும். வேதாந்தம் சொல்கிறது இரண்டும் வெளிப்படுவதற்கு ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இரண்டில் எந்தவொன்றை நீக்கினாலும் இரண்டும் வெளிப்படாது. இவையிரண்டும் தன்னிருப்புக்கு ஒன்றையொன்று சார்ந்தில்லை, ஆனால் வெளிப்படுவதற்கு அவ்வாறு சார்ந்திருக்கிறது. மனம் ஜடமாக இருப்பதால் அது வெளிப்படுவதற்கு சாட்சியை சார்ந்திருக்கிறது. இதனால் மனமும்-சாட்சியும் அவபாஸ்ய-அவபாஸக சம்பந்தம் என்ற உறவுடன் கூடியிருக்கிறது. இதில் சாட்சி அவபாஸகம்(ஒளிர்விப்பவன்), மனம் அவபாஸ்யம்(ஒளிர்பவன்) ஆகும். மனமானது சாட்சி வெளிப்படுவதற்கேற்ற ஊடகமாக இருக்கிறது. சாட்சி சுயபிரகாசமாக இருக்கிறது. எனவே இந்த கோணத்தில் பார்க்கும் போது இவையிரண்டிற்கும் இடையே அபிவ்யஞ்ஜ்ய-யபபையஞ்ஜய சம்பந்தம் என்ற உறவும் இருக்கிறது.
ஆசாரியார் தனது உபதேசத்தின் போது ஆத்மா அறிவு ஸ்வரூபமானது என்றும், எப்போதும் அனுபவத்திற்கு இருக்கிறது என்று சொல்கிறார். எனவே ஆத்ம அனுபவத்திற்கு நாம் முயற்சி செய்யக்கூடாது. சில சாதகர்கள் எப்போதும் அனுபவத்தில் இருப்பது சிதாபாசம்தான். ஆனால் நான் சித் அனுபவத்தை அடைய விரும்புகிறேன் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
சிதாபாசம் மனம் இருக்கும் வரையில் இருந்து கொண்டிருக்கும். எனவே மனதை அழித்துவிட்டால் சிதாபாசமும் சென்றுவிடும் அதனால் சுத்த-சித்தை அனுபவிக்கலாம் என்று தவறாக சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணங்களை முற்றிலுமாக நீக்கினால்தான் மனமும் நீங்கிவிடும். எனவே தியானத்தில் அமர்ந்து எணணங்களை நீக்கி அதன்மூலம் மனதை நீக்க முயற்சி செய்கிறார்கள். மனதையும், சிதாபாசத்தையும் நீக்கிவிட்டால் அவன் இறந்து விடுவான். சாட்சி அனுபவத்தை பெறமாட்டான். எனவே இந்த முயற்சியினால் சுத்த சைதன்யத்தை அனுபவிக்க முடியாது. சுத்த சைதன்யத்தை மனதைக் கொண்டுதான் கொண்டுதான் அறிந்து கொள்ள முடியும்.
நான் எப்போதும், எல்லா நேரங்களிலும் அனுபவித்துக் கொண்டிருப்பது மனம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சைதன்யத்தைத்தானேயொழிய மனதினுடைய சைதன்யத்தை அல்ல. இந்த அறிவு சிதாபாசத்திலிருந்து சித்தை உணர்வதற்கு உதவி செய்யும். மனதை அறிவுமயமாக நோக்கும் போது சிதாபாசத்தை நோக்குகின்றோம். அதேசமயம் மனதை சைதன்யத்தை வெளிப்படுத்துகின்ற ஊடகமாக பார்க்கும்போது நாம் சித்தை அனுபவிக்கின்றோம். எனவே சிதாபாச அனுபவம், சித் அனுபவம் என்பது இரண்டு வெவ்வேறான அனுபவங்கள் அல்ல என்று புரிந்து கொள்ளலாம். எப்படி நிலாவெளிச்ச அனுபவமும், சூரியவெளிச்ச அனுபவமும் வேறாக இல்லையோ அதுபோல இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் மனதைக் கொண்டுதான் உணர்வுமயத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இது மனதால் வரையறுக்கப்படாதது. நிலவில் பிரதிபலிக்கும் சூரியவொளிக்கு இருப்பிடம் எதுவும் இல்லை. ஆனால் நிலா எங்கும் நிறைந்திருக்கும் சூரிய வெளிச்சத்தில் இருக்கிறது. அதுபோல மனம் என்னிடத்தில் இருக்கிறது. எங்கும் வியாபித்திருக்கும் என்னிடத்தில் மனம் இருந்தாலும் அதன் மூலம்தான் நான் சாட்சி என்று என்னை உணர முடியும். சாட்சியாக இருப்பதற்கு மனதின் உதவி தேவையில்லை, ஆனால் சாட்சி நானென்று உணர்வதற்கு மனம் தேவைப்படுகிறது. ஆதலால் சாட்சி அனுபவத்திற்கு நிர்விகல்ப சமாதிக்கு போகத் தேவையில்லை. மனதையும் நாசம் செய்யத் தேவையில்லை.
அஹம் பிரம்மாஸ்மி என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையினால்தான் சம்சார விடுதலை அடையமுடியும். அதே சமயம் ஜகத் மித்யா என்ற அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்.
அத்வைத மாணவன் செல்ல வேண்டிய பாதையின் வரைபடம் இதுதான்.1. சாட்சி-சாட்சிய விவேகம் அன்வய-வியதிரேக விசாரத்தின் மூலம் அடையவேண்டும்.2. மகாவாக்கிய விசாரத்தின் மூலம் சாட்சி-பிரம்ம ஐக்கிய அறிவை அடையவேண்டும்.
உலகமும், மனதும் அனாத்மாவாக இருந்தாலும் அவைகளை பிரகாசப்படுத்துவது சைதன்யமாகும். இதில் சில வேறுபாடுகள் உள்ளன. நாம் இந்த வேறுபாடுகளையும், அதிலிருந்து பெறப்பட்ட விளைவுகளையும் கவனிக்க வேண்டும். ஆசாரியார் ஐந்து கருத்துக்கள் மூலம் இதை தெளிவுபடுத்துகிறார்.
கருத்து-1: சாட்சி மனதை பிரகாசிக்கிறது. பிறகு மனதோடு சேர்ந்து சிதாபாசனாக இருந்து கொண்டு உலகத்தை பிரகாசிக்கிறது. ஆதலால் சாட்சிதான் மனதை வெளிக்காட்டுகிறது, உலகத்தையும் வெளிக் காட்டுகிறது. உலகத்தை காட்டிக் கொடுக்கும் போது மனதோடு சேர்ந்து சிதாபாசன் என்ற பெயருடன் செயல்படுகிறது. இதனால் சாட்சி என்று ஒன்றும், சிதாபாசன் என்று வேறொன்றும் இருப்பது போல் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சூரியவொளி நிலவில் பட்டு பூமியில் பிரகாசிப்பது போல இதை புரிந்து கொள்ளவேண்டும். நிலவில் பிரதிபலித்து பூமியில் பிரகாசிப்பது போல சைதன்யம் மனதில் பிரதிபலித்து உலகத்தை பிரகாசிக்கிறது.
கருத்து-2 சாட்சி நேரிடையாக மனதை அக்ஞானம் என்கின்ற ஊடகம் மூலமாக பிரகாசிக்கிறது. ஆசாரியார் த்வைதங்கள் அனைத்தும் மித்யா என்று காட்டுவதற்கு இங்கே அக்ஞானத்தை ஊடகமாக அறிமுகம் செய்திருக்கிறார். மனமானது கீழான சத்யநிலையையும், சாட்சி மேலான சத்யநிலையையும் உடையது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசாரியார் எச்சரிக்கிறார். அதாவது மனமும் மித்யா, சாட்சி நிலையும் மித்யா. ஆனால் சாட்சி சைதன்யம் மித்யாவல்ல, சாட்சியாக இருக்கும் நிலையும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். அக்ஞான ஊடகத்தின் மூலமாக சைதன்யம் சாட்சியாக இருக்கும் நிலையை அடைகிறது. மனதையும் காட்டிக் கொடுக்கிறது. மாறாக மனதோடு சேரும்போது சிதாபாசனாக இருந்துகொண்டு விழிப்பு நிiலையில் வெளியுலகைக் காட்டிக் கொடுக்கிறது.
கருத்து-3: இந்த அக்ஞான ஊடகத்தில் சாட்சி, மனதை நேரிடையாக பிரகாசிக்கும் போது அது தன்னளவில் எந்த மாற்றமும் அடையாது அதன் இருப்பாலே இந்த செயல் நடக்கிறது. மனதை பிரகாசிப்பதற்கு அதற்கு வெறும் அக்ஞான ஊடகம் மட்டும் தேவைப்படுகிறது. மாறாக சாட்சி மனதோடு சேர்ந்து சிதாபாசனாக மாறும் போது அகங்காரம் என்ற தகுதியை அடைகிறது. எண்ணங்களின் மாற்றங்களினால் வெளியுலகம் பிரகாசிக்கப்படுகிறது. எண்ணங்களின் மாற்றங்கள் இல்லாமல் வெளியுலகம் பிரகாசிப்பதில்லை. அதனால் ஒருவனுடைய வார்த்தைகள் சாட்சியை காட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் சாட்சி மனதோடு சேர வேண்டும். பிறகு அகங்காரம் என்கின்ற தகுதியை அடைய வேண்டும். மனதில் தோன்றுகின்ற எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கருத்து-4: சாட்சியானது அக்ஞான ஊடகம் வழியாக மனதை பிரகாசிக்கும் போது இரண்டிற்குமிடையே ஒரு உறவு ஏற்படுகிறது. அதனை பிரகாசிப்பவர்-பிரகாசிக்கப்படுவது-சம்பந்தம் அல்லது அவபாஸக-அவபாஸ்ய-சம்பந்தம் என்று அழைக்கப்படுகிற்து. இங்கே சாட்சி பிரகாசிப்பவர் என்றும், மனம் பிரகாசிக்கப்படுவது என்று புரிந்து கொள்ளலாம். இந்த உறவோடு இருக்கும் போது இரண்டும் மற்றொன்றின் இயல்பான தன்மைகளை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
அகங்காரத்தை குறிப்பதற்கு ஆசாரியார் மேலாடை(கோட்) என்ற சொல்லை பயன்படுத்துகிறார். சாட்சிக்கும், மனதிற்கும் இடையே வேறொரு சம்பந்தமும் இருப்பதாக கூறப்படுகிறது. அகங்காரம் உலகத்தோடு தொடர்பு கொள்ளும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கின்றன. அகங்காரம் உலகத்தை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ, நல்லதை செய்தோ அல்லது கெட்டதை செய்தோ பாதிக்கின்றது. அதேமாதிரி உலகமும் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக அகங்காரத்தை பாதிக்கின்றது.
உதாரணமாக வகுப்பில் கற்பிக்கப்படுகின்ற உபநிஷத் அகங்காரத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை மற்றொரு உபகாரமும் செய்கிறது. உபநிஷத் கருத்துக்கள் நன்கு புரிந்துவிட்டால் நமக்கு உதவிகரமாக இருக்கின்றது. மோட்சத்தையே கொடுக்கின்ற மிகப்பெரிய உதவியை செய்கிறது. மாறாக உபநிஷத் உபதேசங்கள் புரியாவிட்டால் நமக்கு கவலை ஏற்படும். இந்த விஷயத்தில் இது அபகாரமாக இருக்கிறது. எனவே இரண்டாவது சம்பந்தம் என்பது உபகார்ய-உபகாரக-சம்பந்தம் அல்லது அபகார்ய-அபகாரக சம்பந்தம் ஆகும். உபகார்ய-உபகாரக-சம்பந்தம் நேர்மறையாக பாதிக்கப்பட்டதால் அடைகின்ற விளைவுகள், அபகார்ய-அபகாரக சம்பந்தத்தினால் எதிர்மறையான பாதிப்பால் ஏற்படும் சம்சார விளைவுகள் ஆகியவற்றை அனுபவிப்போம். இந்த கவலைகள், துன்பங்கள் அகங்கார நிலையில் ஏற்படுபவைகளாகும். சாட்சி நிலைக்கு வராது.
சாட்சி-நான் அகங்காரம் என்கின்ற மேலாடையை(கோட்டை) போட்டுக் கொண்டு உலகத்தோடு விவகாரம் செய்யும்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், கவலையாக இருக்கிறேன் என்று சொல்கிறோம். இந்த உலகமே நமக்கு பாரமாக இருப்பதுபோலவோ அல்லது நந்தவனமாக இருப்பது போலவோ உணர்கிறோம். சாட்சி-நான், உலகத்தோடு உபகார்ய-உபகாரக-சம்பந்தம் வைக்கும் போது நமக்கு உலகம் நந்தவனம் போலவிருக்கும். சாட்சி-நான் அகங்காரமாக செயல்பட்டு உலகத்தோடு அபகார்ய-அபகாரக சம்பந்தம் வைக்கும்போது உலகமே பாரமாக இருக்கிறது என்று சொல்கிறோம்.
சாட்சி சாட்சியாக மனதை பிரகாசிக்கும்போது ஒரேயொரு சம்பந்தம்தான் இருக்கிறது. அது பிரகாசிப்பவர்-பிரகாசிக்கப்படுவது என்பதாகும். மாறாக சாட்சி அகங்காரமாக மாறி உலகத்தை பிரகாசிக்கும்போது இரண்டு சம்பந்தங்கள் ஏற்படுகிறது. அவைகள் 1.அவபாஸ்ய-அவபாஸக-சம்பந்தம், 2. உபகார்ய்-உபகாரக-சம்பந்தம் அல்லது அபகார்ய-அபகாரக-சம்பந்தம் என்பதாகும்.
கருத்து-5: சாட்சி சாட்சியாக அக்ஞான ஊடகத்தின் மூலமாக மனதை பிரகாசிக்கும் போது மனதை பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்படுகிறது. மனம் ஜடமாக இருப்பதால் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஆசாரியார் இந்த விழிப்புணர்வை இதம்-ஞானம் என்று குறிப்பிடுகிறார். இந்த நிலைவரைக்கும் சாட்சியின் மேலாடை அப்படியே இருக்கின்றது. அதை கழட்டியெறியும்போது இந்த உலகமும், மனதும் நீக்கப்படுகிறது. சாட்சி மட்டும் அப்படியே இருக்கிறது. மனதிலிருந்து பார்க்கும்போது சைதன்யமானது சாட்சியாக இருக்கிறது. மனதை நீக்கும் போது சைதன்யத்திலிருந்து சாட்சி என்கின்ற நிலையும் நீக்கப்படுகிறது.
மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் இணைத்துப் பார்த்து பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா என்றும் ஜீவனும்-பிரம்மனும் ஒன்றே என்ற ஐக்கிய அறிவையும் அடையலாம். எனவே இந்தக் கருத்துக்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
மனம் உடலுடன் இருந்தாலும் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஐந்து புலன்களின் வழியே உடலுக்கு வெளியே பயணிக்க முடியும். இவ்வாறு வெளியே செல்கின்ற எண்ணங்களை பிரமாண எண்ணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்ணங்கள் பொருளை வியாபிக்கும்போது அதனையே விஷயாகார எண்ணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக பிரமாண விருத்தி வெளியேயுள்ள பானையை நோக்கி செல்கிறது. அது பானையை அடைகின்ற வரையில்தான் அதனை பிரமாண விருத்தி என்று கூறமுடியும். அது பானையை அடைந்து அதனை வியாபித்துவிட்டால் அதுவே பானை ஆகார விருத்தி என்று மாறிவிடுகிறது.
அஹம் விருத்தி பிரமாண விருத்தியாகும். இது மனதைச் சார்ந்தது. இதற்கு அந்தக்கரண விருத்தி, பிரமாண விருத்தி என்ற பெயர்களும் உண்டு. இது உடலிலிருந்து வெளியே செல்லக்கூடியது. டார்ச்சிலிருந்த வரும் வெளிச்சம் நீண்ட தூரம் சென்றிடும். ஆனால் டார்ச் அதே இடத்தில்தான் இருக்கும். இதுபோல அந்தக்கரணம் உடலிலிலேதான் இருக்கும் ஆனால் அதனுடைய விருத்தி வெளியே செல்லும்.
மனமொரு பொருள் (மேட்டர்), அதிலிருந்து வருகின்ற எண்ணங்களும் பொருட்களே(மேட்டர்). இவைகள் மிகவும் சூட்சுமமான வஸ்துக்கள். ஜடமான எண்ணங்கள் வெளியே சென்று ஜடமான பொருளை வியாபிக்கிறது. ஜடமான எண்ணமும், ஜடமான பொருளும் இணைந்து விஷயாகார விருத்தியை உருவாக்குகிறது. இவைகள் ஜடமாக இருப்பதால் அறிவெதுவும் ஏற்படாது. சாட்சி வந்துதான் இவைகளை அறிவாக மாற்ற வேண்டும். வெளிச்சம் எப்படி பொருட்களை காட்டிக் கொடுக்கிறதோ அதேபோல சாட்சி சைதன்யம் பொருட்களை அறியப்படுவதாக மாற்றுகிறது. விஷயாகார விருத்தியோடு கூடிய மனதை சாட்சி சைதன்யம் வியாபிக்கும் போது மனம் பார்க்கப்படும் பொருளாகிறது.
இப்போது நமக்கு மனம், அதை வியாபித்திருக்கும் சாட்சி சைதன்யம் என்பவைகள் கிடைத்திருக்கிறது. மனதை வியாபித்திருக்கும் சாட்சி சைதன்யத்தை சிதாபாசம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே கவனிக்க வேண்டியது சிதாபாசம் என்பது சித்திலிருந்து வேறொரு பொருளாக கருதக்கூடாது. இவ்வாறு இரண்டும் ஒரே இடத்தில் இருக்கும் போது அவபாஸக-அவபாஸ்ய சம்பந்தம் (பார்ப்பவன்-பார்க்கப்படும் பொருள்) என்ற ஏற்படுகிறது. மனதிற்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை குணா-குணி-சம்பந்தம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் மனதிற்கும் சிதாபாசத்திற்கும் இடையே இந்த சம்பந்தம் கிடையாது.
சிதாபாசத்தின் உதவியோடு மனம் வெளியுலகத்தை அனுபவிக்கிறது. உண்மையில் அனுபவிப்பவன் யார் என்ற சந்தேகம் வரலாம். சாட்சி மனதை அனுபவிக்கிறது, மனதை வியாபித்திருக்கின்ற சிதாபாஸன் உலகத்தை அனுபவிக்கிறது.
ஆசாரியார் சொல்ல விரும்புவது, சாட்சி போர்வையை அணிந்து கொண்டிருக்கும்போது அதையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது, சாட்சி சிதாபாசன் அல்லது அகங்காரம் என்ற நிலையை எந்தவித மாற்றத்தையும் அடையாமல் எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக சூரியவெளிச்சம் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலவொளியாக இருப்பது போல இதை புரிந்துக் கொள்ள வேண்டும். வேறொரு உதாரணமாக போக்குவரத்து காவலரை எடுத்துக் கொள்வோம். சீருடையை உடுத்திக் கொண்டால் அவருக்கு போக்குவரத்தை கட்டுபடுத்தும் அதிகாரம் கிடைக்கிறது. சீருடையை அவிழ்த்துவிட்டு சாதாரண உடையை உடுத்திக் கொண்டால் அவருக்கு எந்த அதிகாரமும் இருக்காது. அதுபோல சாட்சி சைதன்யம் அகங்காரம் என்கின்ற உடையை அணிந்துக் கொண்டிருக்கும் போது உலகத்தை அனுபவிக்கும் தகுதியை அடைகிறது. அகங்கார உடையை அணியாதிருக்கும் போது அது எதையும் அனுபவிக்க முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மனம் ஒடுங்கி இருக்கும் போது சாட்சி சிதாபாஸன் என்ற தகுதியில்லாமல் இருக்கிறது. ஆதலால் அதனால் உலகத்தை அனுபவிப்பதில்லை. ஜாக்ரத் அவஸ்தையில் சாட்சி சிதாபாச நிலையை அடைவதால் உலகத்தை அனுபவிக்கிறது.
சாட்சி சிதாபாசன் என்கின்ற நிலையை அடைந்தவுடன் உலகத்தை அனுபவிக்க அகங்காரம் என்ற பெயருடன் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மனதோடு சேர்ந்து கொண்டு உலகத்தை அனுபவிக்கிறது. சாதகமான, அற்புதமான விஷயங்கள் நடக்கும்போது சாட்சி அனுபவிப்பனாக மாறுகிறது. சாட்சி மனம்,உடல் இவைகளோடு சேர்ந்து சில செயல்களை செய்கிறது. சாட்சி செயல் செய்பவனாக மாறி உடலோடு சேர்ந்து சில செயல்களைச் செய்யும்போது அதுவே உலகத்தின் பயனாளியாக மாறுகிறது. சாட்சி பார்ப்பதற்குத்தான் பயனாளியாக இருக்கிறது.
இந்த கருத்தையே சங்கரர், தனது தட்சிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். சாட்சியாக இருக்கின்ற ஆத்மா மாயையின் கீழ் தன்னைத்தானே காரண-காரியம், உலகம், உரிமையாளர் மற்றும் உடைமை என பலவிதமாக தொடர்புடையவர் என்றும் விழித்திருக்கும் மற்றும் கனவு காணும் நிலையில் ஆசிரியராகவும் கற்பிக்கப்பட்டவராகவும் அல்லது தந்தை மற்றும் மகனாகவும் பார்க்கிறார். இந்த உறவுகள் அனைத்தும் பொய்யானவைகளாகும்.
உதாரணமாக ஒரு தந்தைக்கு மகனே மகிழ்ச்சிக்கும் அல்லது துயரத்துக்கும் காரணமாகவும் இருக்கிறார். மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும்போது உபகாரி என்றும் துயரத்திற்கு காரணமாக இருக்கும் போது அபகாரி என்றும் அழைக்கப்படுகிறார். சாட்சி அகங்காரம் என்ற நிலையை அடைந்து சிதாபாசன் என்ற பெயருடன் இருக்கும்போது பார்வைக்கு வெளிவிஷயங்களோடு சம்பந்தம் உடையதாக இருக்கிறது. இந்த உறவுக்கு ஆத்ம-ஆத்மீய-சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆத்மாவை நான் எனறும் ஆத்மீயம் என்பதை என்னுடையது என்றும் பொருட்படுத்தப்படும். இது மாயா சம்பந்தமாக இருந்தாலும் துரதிருஷ்ட வசமாக மனிதர்கள் நான் ஆத்மா என்ற உண்மையை மறந்து விடுகிறார்கள். இந்த ஆத்மாதான் தாய், தந்தை, மகன், மகள் என்ற வேஷமிட்டுக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
சாட்சிக்கும் மனதுக்கும் இடையே ஒரேயொரு சம்பந்தமான அவபாஸக-அவபாஸ்ய சம்பந்தம்தான் உண்டு. ஆனால் அகங்காரம்-உலகத்திற்குமிடையே இரண்டுவகை சம்பந்தம் உ;ண்டு. அவைகள் அவபாஸக-அவபாஸ்ய சம்பந்தம், உபகார்ய-உபகாரக சம்பந்தம் அல்லது ஆத்ம-ஆத்மீய சம்பந்தமாகும்.
இங்கே ஆசாரியார் இரண்டு வகையான அறிவை குறிப்பிடுகிறார். முதலறிவு நம்முடைய மனதைப்பற்றிய நேரிடையான அறிவு. அதாவது சாட்சியே நேரிடையான மனதினுடைய விழிப்புணர்வு என்பதாகும். மனவிழிப்புணர்வு என்று கூறுவதற்கு காரணம் சாட்சி மனதை நேரிடையாக காட்டிக் கொடுக்கிறது. இந்த மனவிழிப்புணர்வை இதம் ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. நம்மால் மனதிலுள்ள உணர்ச்சிகளை தெளிவாக சொல்ல முடிகின்றது. இதையே மனவிழிப்புணர்வு என்று கூறப்படுகிறது. மனவிழிப்புணர்வை இதம்-ஞானம் என்றும் உலக விழிப்புணர்வை மம-ஞானம் என்றும் கூறப்படுகிறது. சாட்சி அக்ஞானத்தை ஊடகமாக கொண்டு மனதை வெளிப்படுத்துகிறது. மேலும் மனதை ஊடகமாக பயன்படுத்தி உலகத்தை வெளிப்படுத்துகிறது. சாட்சி மனம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டுள்ள நிலையை அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் போர்வையில்லாமல் இருப்பதால் மனம் ஒடுங்கியிருப்பதால் அகங்காரம் வெளிப்படுவதில்லை.
ஆதலால் இதம்-ஞானம் என்பது முதல்நிலையாகும். மனம் என்ற போர்வை போட்டுக் கொண்ட பிறகு இதற்கு அஹம்-ஞானம் என்ற பெயரை அடைகிறது. இந்த நிலையில்தான் உலகம் நமக்கு வெளிப்படுகிறது. இந்த உலக விழிப்புணர்வு என்பது இது என்னுடைய மகன், என்னுடைய மனைவி, என்னுடைய கார் என்று கூறுகிறோம். ஆசாரியார் இந்த கருத்தை ஜாக்ரத் அவஸ்தையை எடுத்துக் கொண்டு நிரூபிக்கிறார். இந்த நிலையில் அக்ஞான ஊடகமும், மன ஊடகமும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதனால் இதம்-ஞானம் அக்ஞானம் என்ற ஊடகத்தின் மூலமாகவும், மம-ஞானம் மனம் என்று ஊடகத்தின் வழியாகவும் செயல்படுகிறது.
அக்ஞான ஊடகம் செயலபடுகிறது என்று எப்படி சொல்ல முடியும்? நாம் விழிப்பு நிலையில் நான் சாட்சியென்று சொல்வதில்லை. ஆத்ம அக்ஞானம் வெளிப்படையாக தெரிகிறது. ஆதலால் செயல்படுகின்ற அக்ஞானம் விழிப்பு நிலையில் இருக்கிறது என்பது உறுதியாகிறது. ஆனால் இந்த செயல்பாட்டில் இருக்கின்ற அக்ஞானம் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை.
மனம் சாட்சிக்கு மகிழ்ச்சியையும் கொடுப்பதில்லை, துன்பத்தையும் கொடுப்பதில்லை. எனவே இவையிரண்டிற்கும் இடையை உபகார்ய-உபகாரக சம்பந்தம் அல்லது அபகார்ய-அபகாரக சம்பந்தம் இல்லையென்று தெரிகிறது. ஒரேயொரு சம்பந்தமான அவபாஸ்ய-அவபாஸக என்கின்ற சம்பந்தம்தான் இருக்கிறது. இதை நம்முடைய சொந்த அனுபவம் மூலமாகவே அறியப்படுகிறது. எனவே மனவிழிப்புணர்வு மம-ஞானம் என்கின்ற பிரிவின் கீழ் வருவதில்லை. இதனால்தான் மனதை தவறாக நான் என்று குறிப்பிடுகிறோம். மனம் துயரத்தில் இருக்கும்போது நான் துயரத்தில் இருக்கிறேன் என்றுதான் கூறுவோம்.
இதிலிருந்து ஆசாரியார், அன்வய-வியதிரேக முறையில் விழிப்பு நிலையில் நம்மிடத்தில் ஒரேயொரு சம்பந்தம் கொண்ட மன-விழிப்புணர்வு(மைன்ட்-அவேர்னஸ்), இரண்டு சம்பந்தம் கொண்ட உலக-விழிப்புணர்வு (வேர்ல்ட் அவேர்னஸ்) என்பது இருக்கிறது என்ற கருத்தை சுட்டிக்காட்டுகிறார். இரண்டு சம்பந்தங்கள் இருக்கும்போது இரண்டு ஞானம் இருக்கிறது என்பது அன்வய வாதம். இரண்டு சம்பந்தங்கள் இல்லாத போது இரண்டு சம்பந்தங்களும் இல்லை என்பது வியதிரேக வாதம்.
ஆழ்ந்த உறக்கத்தில் சாட்சிக்கும், மனதிற்கும் இடையே அவபாஸ்ய-அவபாஸக சம்பந்தம் இல்லை. ஏனென்றால் இந்த நிலையில் மனமானது ஒடுங்கியிருக்கிறது. இந்த நிலையில் இது இல்லாதது போல் இருக்கும். எனவே இரண்டிற்கும் இடையே எந்த சம்பந்தமும் இருக்காது. உதாரணமாக ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவன் உடலிருந்தாலும் அந்த மனிதன் இருக்கிறான் என்று சொல்ல மாட்டோம். அக்ஞானம் செயலற்று இருப்பதால் அக்ஞான காரண சரீரமும் செயலற்றிருக்கிறது. அதனால் மனதை பயன்படுத்தமுடியாமல் இருக்கிறது.
ஆதலால் அக்ஞானமும் இல்லாததுபோல் இருக்கிறது. செயலற்ற அக்ஞானம் அதன் இல்லாமைக்கு சமமாகும். உதாரணமாக வங்கியில் பணத்தை பிக்ஸட் டெபாஸிட்டில் முதலீடு செய்துவிட்டால் அந்த பணத்தை நம்முடைய செலவுக்கு எப்போது வேண்டுமானாலும் எடுக்க முடியாது. முதலீடு செய்த காலம் முதிர்வடையம்போதுதான் அது நம் கைக்குவரும். அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானம் இருந்தாலும் அது செயலற்று இருப்பதால் இல்லாததுக்கு சமமாக இருக்கிறது.
நான் ஆனந்தமாக இருக்கிறேன் என்று சொல்லும்போது சாட்சியானது அகங்காரம் என்ற உருவெடுத்து மனம் என்கின்ற போர்வையை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனந்தம் என்பது விழிப்புணர்வு இதம் ஞானமாகும்.
மனம் அறியப்படும் பொருளாக இருக்கும்போது அவபாஸ்ய-அவபாஸக சம்பந்தம் மட்டும் இருக்கிறது.. நான் சாட்சி சைதன்யமாக, அசங்கமாக இருக்கிறேன். சாட்சி மனதோடு சேரும்போது, அதாவது அத்யாஸ சம்பந்தம் ஏற்படும்போது சாட்சி அகங்காரம் என்ற கீழான தகுதியை அடைகிறது. உண்மையில் சாட்சி மனதோடு சேரமுடியாது. ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு உண்மைநிலையை உடையது. ஆதலால் சாட்சி மனதோடு சத்ய-அநிருத-மிதுனி காரண சம்பந்தம் அல்லது அத்யாஸ-அதிஷ்டான-சம்பந்தம் என்ற சம்பந்தத்தோடு இணைகிறது. எப்படி விழிப்பு நிலையில் இருப்பவனின் உடலோடு கனவுலகில் உள்ள உடலோடு சேர்ந்திருக்கிறதோ அதுபோல சத்யமான சாட்சி மித்யாவான மனதோடு இணைந்திருப்பது போல காணப்படுகிறது. இந்த நிலையில் சாட்சி அகங்காரம் என்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறது. அதாவது பாரமார்த்திக சத்யத்திலிருந்து வியவகார சத்யத்திற்கு இறங்கி வந்து உலகத்தை வெளிப்படுத்துகிறது. இப்போது உபகார்ய-உபகார சம்பந்தமும் வந்து விடுவதால் மமஞானம் வந்து விடுகிறது. இந்த அறிவு வந்ததும் இது உலகம், என் குடும்பம், என் மனைவி, என் மகன் போன்ற வடிவில் மமகாரம் ஏற்படுகிறது.
மூலாவித்யாவை மகாவாக்கிய விசாரத்தின் மூலமாகத்தான் நீக்கமுடியும். இதை பத்தாவது மனிதன் உதாரணத்தின் மூலமாக ஆசாரியார் விளக்குகிறார். இந்த உதாரணத்தில் தன்னுடன் வந்தவர்களை ஒருவன் எண்ணும்போது தன்னை விட்டுவிட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணிவிட்டு பத்தாவது ஆள் தொலைந்து விட்டான் என்று எண்ணி புலம்பும்போது நீதான் அந்த பத்தாவது ஆள் என்று ஒருவர் சொல்லும்போது எப்படி தன்னை அடையாளம் கண்டு கொள்வானோ அதுபோல வேதாந்த மாணவர்கள் பஞ்சபூதங்களாலான பதவி, உடைமைகள், குடும்பம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியம் வெறும் வார்த்தைகளாகத்தான் தோன்றும். இதுதான் வேதாந்த மாணவனின் முதல் பிரச்சனையாகும்.
இரண்டாவது பிரச்சனை மகாவாக்கியத்தின் மீது கொண்டுள்ள அசிரத்தையாகும். மகாவாக்கியம்தான் நான் பிரம்மன் என்ற அறிவைக் கொடுக்கின்ற கருவியாக இருக்கிறது. இந்த வாக்கியம் நீதான் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரம் என்று கூறும் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை நிரூபிப்பதற்கு வேறெந்த பிரமாணத்தையும் நாடக்கூடாது. சிலர் தவம் செய்துதான் இந்த அனுபவத்தை அடையமுடியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். துரதிர்ஷ்டாவசமாக இ;த்தகைய சாதகன் போதுமான சிரத்தை மகாவாக்கியத்தின் மீது வைக்காததால் மகாவாக்கியத்தின் மூலம் நான் முக்தன் என்ற நிலையை அடைய முடியாது. இறைவன் இருக்கின்றான், அவர் நம்மை காப்பாற்றுவார் என்பதை எப்படி முழுநம்பிக்கையோடு ஏற்றுக்கொள்கிறோமோ அதேபோன்று வேதாந்த மகாவாக்கியம் கூறுவதையும் முழு நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்வதில்லை.
மகாவாக்கியத்தின் துணையில்லாமல் எந்த சாதகனும் ஆத்மஞானத்தை அடையமுடியாது. நானொருவன்தான் இருக்கிறேன், யதார்த்தத்தின் உயர்ந்த வரிசையில் இருக்கிறேன், மற்றும் உடலும், மனமும் சேர்த்து இந்த அனைத்து உலகமும் அனாத்மாவாக, மித்யாவாக இருக்கிறது என்ற அறிவை அடைய முடியாது. மேலும் சாட்சி-ஏகத்வம், சாட்சி பாரமார்த்திக சத்யத்வம், அனாத்மா மித்யாத்வம் என்ற மூன்று முக்கியமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு காரணம் நம்மிடத்தே உள்ள மூலாவித்யாதான் காரணம்.
மூலாவித்யாவில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று சாட்சியின் உண்மைத் தன்மையை மறைப்பது. இதையே ஆவரண சக்தி என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று அனாத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திசை திருப்புவதாகும். இதற்கு விக்ஷேப சக்தி என்று பெயர். இது சக்தியானது நம்மை பஞ்ச அனாத்மாக்களான பதவி, சொத்து, குடும்பம், உடல் மற்றும் மனம் இவைகளால் ஆட்கொள்ள வைத்திருக்கும். இந்த இரண்டு சக்திகளில் எது காரணம், எது காரியம் என்று கூறமுடியாது. அதாவது அனாத்மாக்களால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதால் சாட்சி மறைக்கப்படுகிறதா அல்லது சாட்சியை மறந்து விடுவதால் அனாத்மாக்களால் ஆட்கொள்ளப்படுகிறோமா என்று கூறமுடியாது.
ஆதி சங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்திரத்தில் இந்த கருத்தை மிகத்தெளிவாக கூறியிருக்கிறார். குழந்தைப்பருவம் விளையாட்டில் சென்றுவிடுகிறது. இளமைப்பருவம் காதலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதிலும், கல்வி கற்பதிலும் சென்று விடுகிறது. முதுமைப்பருவம் கவலைகளால் கழிகின்றது. எந்தப் பருவத்திலும் மனிதன் முழுமனதுடன் கடவுளை நோக்கி செல்வதில்லை.
அமைதியின் ஸ்வரூபமாகவேயிருக்கும் மனிதன் அதை தேடிக் கொண்டு இருக்கின்றான். அனாத்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் அவனுக்கு தன் அமைதி ஸ்வரூபத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை. இது மூலாவித்யாவின் வெற்றியாகும். நாம் துயரத்தால் தவித்துக்கொண்டிருக்கும் போது மூலாவித்யா நம்மைப்பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும். நான் ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருப்பதால் அதை எடுத்துச் சொல்லக்கூடிய குரு தேவைப்படுகிறார். பத்தாவது மனிதன் தன்னை மறந்துவிட்டு மற்றவர்களை எண்ணிப்பார்த்து பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது வழிப்போக்கன் நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று சொன்னவுடன் கவலையை விட்டுவிடுவதைப்போல நம்மைப் பார்த்து குருவானவர் நீதான் ஆனந்த ஸ்வரூபமான பிரம்மன் என்று உபதேசிப்பதன் மூலம் ஆத்மஞானத்தை அடைந்து கவலைகள் அனைத்தும் நீங்கப் பெற்ற தன் ஸ்வரூபமாகவே இருப்பான். ஆனால் சீடன் பஞ்ச அனாத்மாக்களோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தால் அவனுக்கு குருவின் உபதேசம் பலனைக் கொடுக்காது. அவன் வாழ்நாள் முழுவதும் சம்சார சக்கரத்திலே சுழன்று கொண்டு இருக்க வேண்டியதுதான்.
பத்தாவது மனிதன் உதாரண்த்தில் இரண்டு வகையான சிக்கல்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். ஓன்று ஒன்பது பேர்களை மட்டும் எண்ணிக் கொண்டிருப்பது, மற்றொன்று பத்தாவது மனிதனான தன்னை மறந்து விடுவதாகும். இதில் முதல் சிக்கல் விக்ஷேப சக்தியையும், இரண்டாவது ஆவரண சக்தியையும் குறிக்கின்றது. ஆசாரியார் இந்த இரண்டு மாபெரும் சக்திகள் எப்படி சாதகனை நான் பிரம்மன் என்று உணரவிடாமல் தடுக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறார். பிரம்மத்தை உணராமல் இருப்பது அமைதியை இழப்பது, ஆனந்தத்தை இழப்பது போன்ற விளைவுகளை அனுபவிக்க நேரிடும். மகாவாக்கிய விசாரம்தான் பிரம்மத்தை உணர வைக்கின்ற ஓரேயொரு சக்தியாகும்.
ஆத்மா பிரமாணம் அல்ல. இது எந்த அறிவையும் கொடுக்காது என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தினந்தோறும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மாவை அனுபவிக்கிறோம். ஆத்மா தானே விளங்கிக் கொண்டிருந்தாலும் அது எந்த அறிவையும் கொடுக்காது. சிலர் கேட்கலாம். புத்தர் மகாவாக்கியம் இல்லாமல் எப்படி ஞானத்தை அடைந்தார். புத்தர் அடைந்தது அத்வைத ஞானமா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவரை பின்பற்றியவர்கள் யாரும் ஞானத்தை அடையவும் இல்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. புத்த மதத்தில் நான்கு பிரிவுகள் இருக்கிறது. அவைகள் சௌவாராந்திகா, வைபாஷிகா, யோகாசாரா, மாத்யமிகா ஆகியவைகளாகும். இவைகள் எதுவும் மகாவாக்கியத்தை போதிக்கவில்லை. மரத்தடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து அடைவது ஞானம் அல்ல.. மகாவாக்கியத்தை விசாரம் செய்யாமல் அடைகின்ற எந்த ஞானமும் ஆத்ம ஞானமல்ல என்பதை ஆசாரியார் கூறுகிறார்.
பொதுவாக பேசப்படுகின்ற சில விஷயங்களை ஆராயாமல் விட்டுவிட வேண்டும். அதை ஆராயச் சென்றால் சிக்கல்கள்தான் வரும். உதாரணமாக இருட்டை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதை விளக்கமுடியாது. இருள் என்பது எது? என்ற கேள்வி கேட்டால் அதை விளக்க முடியாது. நமது கண்கள் இருட்டில் வேலை செய்யாது. இருள் என்பது ஒரு மர்மமான விஷயம். இதை வெளிச்சம் கொண்டும் பார்க்க முடியாது. வெளிச்சமில்லாமலும் பார்க்கமுடியாது. அதேபோல அறியாமையும் ஒரு மர்மமான விஷயம் இருட்டைப் போல அறியாமையையும் ஆராய்ந்துப்பார்த்து புரிந்து கொள்ள முடியாது. எந்த பிரமாணம் கொண்டும் இதை பார்க்கமுடியாது. இதனால் இதை இல்லையென்றும் சொல்ல முடியாது. வெளிச்சம் வந்தால் இருள் நீங்கிவிடுகிறதோ அதேபோல ஆத்மாவை உணர்ந்தால் இது தானாகவே சென்றுவிடும். எனவே மூலாவித்யாவைப் பற்றி விசாரம் செய்யக் கூடாது. அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். தத்-த்வம்-அஸி என்ற பிரமாணத்தின் மூலமாக இதை நீக்கிவிடலாம்.
மூலாவித்யாவுக்கென்று எந்த தெளிவான அம்சங்களும் இல்லை. அது இருக்கின்றது என்று சொல்வதற்கான எந்த அம்சங்களும் இல்லை. அது எதைச் சார்ந்து இருக்கிறது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அது பிரம்மத்தை இருப்பிடமாக கொண்டிருக்கிறதா அல்லது பிரம்மத்திற்கு வெளியே இருக்கிறதா என்று விவரிக்க முடியாது. மொத்தத்தில் அதை இப்படியென்று புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆதலால் ஆசாரியார் இதை விளக்க முடியாது என்று கூறுகிறார். இது இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் அதன் இருப்பினால்தான் நம்மால் ஆத்மாவை உணர்ந்து கொள்ள முடியவில்லை. இருள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அது அதை விளக்கமுடியாது. எப்படி சூரியன் வந்தால் இருள் மறைந்து விடுகிறதோ அதுபோல மூலாவித்யாவை விசாரம் செய்தால் அது மறைந்து விடும்.
இருளானது வெளிச்சத்தின் இல்லாமையில் அனுபவிக்கப்படுகிறது. வெளிச்சம் வந்தால் சென்று விடக்கூடியது. ஆனால் அதை வெளிச்சம் உள்ளபோதோ அல்லது இல்லாத போது ஆராய முடியாது. மூலாவித்யா எப்படி அனிர்வசனமோ அதேபோல இருளும் அனிர்வசனமாகும். நம்மால் அதை இருப்பையோ அல்லது இல்லாமையையோ சொல்ல முடியாது. தர்க்கவாதிகள் இருளை வெளிச்சம் இல்லாத நிலையென்று சொல்வார்கள். வேதாந்திகள் அதை ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் அதை அபாவ ரூபம் என்று வகைப்படுத்தமுடியாது என்றும் சொல்வர். ஏனென்றால் அது பொருட்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இல்லாத ஒன்று பொருட்களை மறைக்கமுடியாது என்பதால் இருள் இருக்கின்றது என்று உறுதியாகிறது. மேலும் இருளானது கண்களால் பொருட்களை உணரமுடியாமல் தடுக்கிறது. இந்த தன்மையும் இல்லாதவொன்றிற்கு இருக்க முடியாது. இவையிரண்டைத் தவிர மூன்றாவதாக இருள் வெளிச்சம் வந்ததும் சென்றுவிடுகின்ற தன்மையுள்ளது. இது இல்லாதவொன்று இருக்க முடியாது. இந்த மூன்று காரணங்களினால் இருள் என்பது இல்லாதவொன்று என்று கூறமுடியாது. இந்த இருளை பாவரூபம் என்றும் கூறமுடியாது. அப்படியிருந்தால் வெளிச்சம் வந்ததும் அது சென்று வருவது நமக்கு தெரியவரும். ஆதலால் இருளை இருக்கின்றதாகவோ, இல்லாததாகவோ விளக்கமுடியாது.
இதேபோல மூலாவித்யாவும் அனிர்வசனமாகும். எப்படி இருள் வெளிச்சம் வந்தால் சென்றுவிடுகிறதோ அதேபோல மூலாவித்யாவை பிரமாணத்தின் மூலம் விசாரம் செய்தால் அது சென்றுவிடும். இது எல்லாவிதமான அறியாமைக்கும் பொருந்தும். உதாரணமாக பௌதிகம் பற்றிய அறியாமையானது அதைப் படித்துவிட்டால் சென்றுவிடும்.
மூலாவித்யாவை விசாரம் செய்யமுடியாது. அதை நீக்குவதற்காக முயற்சி செய்யலாம். இதுவே சம்சாரத்திற்கு காரணமாக இருப்பதால் அதை நீக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்தேயாக வேண்டும். இந்த நீக்குதல் என்பது சரியான அறிவைஅடைவதால் நடைபெறுகிறது. எனவே மகாவாக்கியத்தை தவிர்க்கக்கூடாது.
பிரம்ம விசாரம்:யாராவது பிரம்மன் காரணமா அல்லது அகாரணமா என்று கேட்கும்போது அதற்கு இரண்டு வகையான பதில்கள் இருக்கின்றது. அத்வைத சாதகனுக்கு பிரம்மம் காரணம் அல்ல என்றும் மற்ற தத்துவத்தை படித்தவர்களுக்கு பிரம்மம் காரணம் என்று கூறுவோம். பிறகு இந்த உலகம் எப்படி வந்தது என்ற கேள்வியெழும்போது மித்யா என்று கூறப்படுகிறது. அதாவது இந்த உலகம் பார்ப்பதற்குத்தான் இருக்கின்றது ஆனால் உண்மையில் அது இல்லை. ஆதலால் அதற்கு எந்த காரணமும் தேவையில்லை.
இதேபோல் யாராவது மோட்சம் என்றால் என்ன கேட்டாலும் அதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றது. முதல் பதில் மறுபிறப்பிலிருந்து விடுதலையாகும். இரண்டாவது பதில் பிரம்மத்திற்கு பிறப்பே கிடையாது என்பதால் மறுபிறப்பு என்கின்ற பேச்சுக்கு இடமில்லை என்பதாகும். இந்த புரிதலே மோட்சமாகும். மோட்சம் என்பது புனர்ஜென்ம நிவிருத்தி என்பது முதல் பதிலாகும். மோட்சம் என்பது ஸ்வரூப அவஸ்தானம் என்பது இரண்டாவது பதிலாகும்.
தத்துவமஸி போன்ற மகாவாக்கியத்தின் விசாரத்தின் மூலம் அடையப்படுகின்ற \அறிவே இறுதியாகும். இதுவே ஆத்ம சாக்ஷாத்காரத்தை கொடுத்துவிடும். வேதாந்த மாணவனுக்கு நிதித்யாசனம் எதற்கு என்ற கேள்வி மனதிலெழும். இது எந்த அறிவையும் அடைவதற்கான சாதனம் கிடையாது. இது அடைந்த அறிவில் இருக்கின்ற சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்கும், அடைந்த அறிவில் நிலை பெறுவதற்கும் உதவி செய்யக்கூடியதாகும். நம் மனதிலுள்ள முக்கோண-வடிவ (ஜீவ-ஈஸ்வர-ஜகத்) மனநிலைப்பாடானது அவ்வளவு சுலபமாக மனதிலிருந்து சென்றுவிடாது. எனவே இதை முழுவதுமாக நீக்கிக்கொள்வதற்கு நிதித்யாசன சாதனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வுலக விஷயங்களினால் எப்பொழுதாவது பிரச்சனைகள் எழும்போது நம்மால் உடனடியாக நான் பிரம்மன் என்ற அறிவைக் கொண்டு நீக்கிக் கொள்ளக் சக்தியில்லாமல் இறைவனின் துணையை நாடிவிடுவோம். இவ்வாறு இறைவனை நாடுகின்ற நிலையானது நாம் இன்னும் முக்கோண-வடிவ பரிமாணத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது. இந்த நிலையை அடையாமல் இருப்பதற்கான சக்தியை அடைவதற்காக பயன்படுத்துகின்ற சாதனம்தான் நிதித்யாசனமாகும். எனவே ஆசாரியார் வலியுறுத்தி சொல்வது மகாவாக்கியத்தின் மூலமாக அடைகின்ற அறிவே இறுதியானதாகும் என்பதுதான். சங்கரர், மோட்சமானது சந்நியாசத்தோடு கூடிய ஆத்மஞானத்தை அடைவதால்தான் உணரப்படும் என்று எச்சரிக்கிறார். சந்நியாசம் என்பது மனதளவில் என்னுடையது என்ற புத்தியையும், நான் என்ற புத்தியையும் விட்டுவிடுதல் என்பதாகும்.
எது நேரிடையான அறிவு, எது மறைமுகமான அறிவு என்பது ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. அறிமுகப்படுத்துகின்ற சொற்கள் நேரிடையான அறிவை கொடுக்கின்றது. விவரிக்கின்ற சொற்கள் மறைமுகமான அறிவை கொடுக்கின்றது. உதாரணமாக வெளிநாட்டில் இருக்கின்ற நண்பரை பற்றி சொல்லும்போது அவரைப் பற்றிய மறைமகமான அறிவைத்தான் அடைவோம். எதிரில் இருக்கின்ற நண்பரை அறிமுகப்படுத்தும்போது அவரைப்பற்றி நேரிடையாக அறிகின்றோம். பிரம்மம் என்பது ஏற்கனவே நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற தத்துவமாகும். குரு நீதான் அந்த பிரம்மன் என்று உபதேசிக்கும் போது அடையப்படுகின்ற அறிவையே அபரோக்ஷ ஞானம் என்று கூறுகிறோம்.
சில சீடர்கள்;, உடல்-மன தொகுப்பு இருக்கும் வரையில் எனக்கு சிதாபாசன் அனுபவம்தான் இருக்கிறது, சித் அனுபவம் ஏற்படவில்லையே என்று கேட்கிறார்கள். சிதாபாசன் இருக்கும் வரையில் சித் அனுபவத்தை பெற முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதனால் மனம் இருக்கும் வரையில்தான் சிதாபாசன் இருக்க முடியும் எனவே மனதை நீக்குவதற்கு நிர்விகல்ப சமாதியை நாடுகிறார்கள். உண்மையில் சிதாபாசன் இருக்கும் வரையில் உடலில் உயிர் இருக்கும். அது சென்றுவிட்டால் உடலும் இறந்துவிடும். உதாரணமாக மேசையில் சிதாபாசன் இல்லை. எனவே அது ஜடமாக இருக்கிறது. ஆனால் சித் அதில் இருக்கிறது. ஏனென்றால் சித் எங்கும் வியாபிக்கின்ற தன்னையுடையது.
ஆதலால் தியானத்தின் மூலமாக மனதை நீக்குவதன் மூலம் சிதாபாசனை நீக்கிவிட்டு சாட்சி சைதன்ய அனுபவத்தை பெற முயற்சி செய்யும்போது இந்த உடல் சவத்தைப்போல ஆகிவிடுமே தவிர எந்த அனுபவமும் பெற முடியாது. எனவே சித் அனுபவம், சிதாபாச அனுபவம் என்று தனித்தனியே கிடையாது என்பதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிதாபாசம் நீங்கி விட்டால் உடல் ஜடமாகி விடும். பிறகு எந்த அனுபவத்தையும் உணர முடியாது. தியானத்தின் மூலமாக சில விசித்திரமான அனுபவங்களை அடைந்து விட்டாலும் அவைகள் சாட்சி அனுபவமாகிவிடாது.
எனவே எப்போதும் எனக்கு சிதாபாச அனுபவம் இருக்கிறது, ஆனால் சித் அனுபவம் ஏற்படவில்லை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் ஒரேயொரு சைதன்ய அனுபவம்தான் எல்லா நேரத்திலும் அனுபவிக்கபபடுகிறது. அது சித் அனுபவமாக இருக்கலாம் அல்லது சிதாபாச அனுபவமாக இருக்கலாம். இது எப்படி அனுபவத்தை புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்திருக்கிறது.
பிம்ப-சைதன்ய அனுபவம் என்றும், பிரதிபிம்ப சைதன்ய அனுபவம் என்றும் தனித்தனியே எங்கும் இல்லை. அன்வய வியதிரேக விசாரம், த்வம்பத விசாரம் ஆகியவற்றை உபயோகித்தோமானால் அறிகின்ற சைதன்ய அனுபவத்தை பிம்ப சைதன்ய அனுபவம் என்று புரிந்து கொள்ளலாம். சாஸ்திரம் பிரதிபிம்பவாத பிரக்ரியய என்ற ஆய்வின் மூலம் இந்த உண்மையை புரிய வைக்கிறது. இந்த வாதமானது உயர்நிலை சீடனின் எப்படி சித் அனுபவம் பெறுவது என்ற சந்தேகத்தை தீர்த்து வைக்கிறது.
பிரதிபிம்ப வாத பிரக்ரியா என்றால் என்ன? ஒரு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்துகொள்ளலாம். நிலைக்கண்ணாடி முன் நின்று கொண்டு ஒருவன் தன் முகத்தில் உள்ள தாடியை மழித்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கண்ணாடியில் அவனது முகம் தெரிகிறது. இதை முக அனுபவம் என்று எடுத்துக் கொள்ளலாம். இது அவனது பிரதிபிம்ப முக அனுபவமாகும். உண்மையில் பிம்பமுகத்திற்குதான் அவன் ஷேவ் செய்ய விரும்புகிறான். பிரதிபிம்பமுக அனுபவத்தை கொண்டு பிம்பமுகத்திற்கு ஷேவ் செய்கிறான். தன் கண்ணாடியில் பார்க்கின்ற முகம் தனது உண்மையான முகமல்ல என்பதை அவன் நன்கு உணர்கிறான். அதாவது பிரதிபிம்ப முகத்தின் இருப்பிடம் கண்ணாடியாக இருக்கிறது, ஆனால் தன்னுடைய முகம் தலையில்தான் இருக்கிறது, பிரதிபிம்ப முகம் வந்து-செல்லக் , கூடியதாக இருக்கிற அம்சத்தைக் கொண்டு அந்த பிரதிபிம்ப முகத்தை நீக்கி விடுகிறான். இதன்மூலம் அவன் பிம்ப அனுபவத்தை அடைகிறான் என்பது தெளிவாகிறது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லோரும் கண்ணாடியை நோக்கி செல்லக் காரணம் பிம்பமுக அனுபவத்தை பெறுவதற்குத்தான் என்பதும் தெளிவாகிறது. இதில் கண்ணாடி உபாதியென்று சொல்லப்படுகிறது.
கண்ணாடியை விசேஷணமாக பயன்படுத்தும்போது பிரதிபிம்பமுக அனுபவத்தை அடைகிறோம். அதையே உபாதியாக பயன்படுத்தும்போது பிம்பமுக அனுபவத்தை அடைகிறோம். பிரதிபிம்ப முகத்தை விசிஷ்ட முகம் என்றும், பிம்பமுகத்தை உபாதிமுகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கண்ணாடியைக் கொண்டே பிம்பமுக அனுபவம், பிரதிபிம்பமுக அனுபவம் என்ற இரண்டு அனுபவங்கள் அடையப்படுகிறது. இதுவே பிரதிபிம்பவாத பிரக்ரியய என்று அழைக்கப்படுகிறது. இந்த வாதத்தை தெளிவாக விளக்கியிருக்கிறார் சங்கரரின் முதன்மையான சீடர்களில் ஒருவரான பத்மபாதாச்சாரியார்.
கண்ணாடியில்லாமல் எந்த பிம்பமுக அனுபவத்தை பெறமுடியாது. அதேசமயம் அதன்மூலம் இரண்டுவகையான அனுபவங்களை அடைந்தாலும் பிரதிபிம்ப முகத்தை அதனுடைய நிலையற்ற அனாத்ம அம்சங்களை கருத்தில் கொண்டு நீக்கிவிட்டு பிம்பமுக அனுபவத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உதாரணத்தில் குறிபிடப்பட்டுள்ள கண்ணாடியே மனமாகும். சாட்சி சைதன்யம் முகமாகும். மனதை நீக்கிவிட்டால் சைதன்ய அனுபவத்தை பெறவே முடியாது. மனதை அழித்துவிட்டால் சவத்திற்கு சமமாகிவிடுவோம். எந்த அனுபவத்தையும் அடைய முடியாது. மனோநாசம் என்று வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டதை மனோ-மித்யாத்வ ஞானம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
துரதிருஷ்டவசமாக சில உயர்நிலை வேதாந்த மாணவர்கள் மனோநாசம் என்பதை தவறாக பொருட்கொண்டு நிர்விகல்ப சமாதியின் மூலமாக தற்காலிகமாக மனதை ஒடுக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டு ஆத்ம அனுபவத்தை பெற முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் தற்காலிகமாகத்தான் ஆத்ம அனுபவத்தை பெறமுடியும். சமாதியில் இருந்து வெளியே வந்ததும் அந்த அனுபவமும் சென்று விடுகிறது. ஆத்மா ஒரு பொருளாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால் ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை, எனவே அதை அனுபவிக்க முடியாது. நாமே ஆத்மாவாக எல்லா நேரங்களிலும் இருக்கின்றோம். இந்த அறிவை அடைவது மோட்ச நிலையாகும். ஆதலால் பத்மாச்சாரியார் கூறுகிறார், மனதை வைத்துக் கொண்டிருந்தால்தான் அதன்மூலமாக சைதன்யம் வெளிப்படும், சைதன்ய அனுபவம் சாத்தியமாகும்.
எனவே இரண்டு பாடங்களை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவைகள் மனதை வைத்துக் கொள்ள வேண்டும், மனதின் இருப்பால்தான் நாமெல்லோரும் சாட்சி சைதன்ய அனுபவத்தை பெறமுடியும். இதையே அஹம் பிரம்மாஸ்மி என்று அழைக்கப்படுகிறது. இந்த சைதன்ய அனுபவத்தை நாம் அதை எடுத்துக் கொள்கின்ற விதத்தில் பிரதிபிம்ப சைதன்ய அனுபவம் அல்லது பிம்பசைதன்ய அனுபவம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட உதாரணத்தில் பிரதிபிம்ப முகத்தை பார்க்கிறோம், அந்த பிம்பமுகத்திற்கு ஷேவ் செய்ய முயற்சிப்பது அதை தவறாக பிம்பமுகமாக பார்ப்பதனால்தான். ஆனால் உண்மையில் யாரும் அவ்விதம் செய்வதில்லை. கண்ணாடியில் தெரிகின்றது பிரதிபிம்பமென்ற நன்கு தெரிந்து கொண்டு பிம்பமுகத்திற்குத்தான் ஷேவ் செய்கிறோம். அதேபோல மனதால் ஏற்படுத்தப்படுகின்ற ஆத்மாவின் தற்செயலான அம்சங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
மனம் என்ற கண்ணாடி மூலம் ஆத்மாவுக்கு ஏற்படுகின்ற தற்செயலான அம்சங்கள் நான்காக இருக்கின்றது. அவைகள் ஆத்மாவின் இருப்பிடமாக மனம் தோன்றுகிறது, ஆத்மாவுக்கு மனம் ஆதாரமாக இருப்பது போல தோன்றுதல், மனம் வந்தவுடன் ஆத்மாவும் வருவது போல தோன்றதல், மனம் சென்றவுடன் ஆத்மாவும செல்வது போல தோன்றுதல் ஆகிய நான்கு அம்சங்களாகும்.
சைதன்யம் மனதை இருப்பிடமாக கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டால் மனதில் உள்ள சைதன்யம் பிரதிபிம்ப சைதன்யமாகிவிடும். மனம் சைதன்யத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் சைதன்யம் மனதின் பண்புக்கூறாகிவிடும். அதேபோல சைதன்யம் வந்து, போகின்ற தன்மை உடையதாக வைத்துக்கொண்டாலும் சைதன்யம் பிரதிபிம்ப சைதன்யமாகிவிடும்.
இதற்கு மாறாக இந்த அம்சங்கள் அனைத்தும் மனதினுடையது என்று புரிந்து கொண்டு இவைகள் சைதன்யத்தை சேர்ந்தது அல்ல புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புரிந்துகொள்ளும்போது சைதன்யம் நான்தான் என்ற அனுபவம் கிடைக்கும். உடலுக்கு என்ன வந்தாலும் அது சைதன்யத்தை பாதிப்பதில்லை என்றும், நான்தான் சைதன்யம் என்ற அனுபவத்தை அடைந்தாலும் நாம் பிம்ப சைதன்யத்தை அனுபவிக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம். நாம் எப்போதும் சைதன்யத்தைதான் அனுபவிக்கிறோம்;, ஆனால் அது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. தற்செயல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது பிரதிபிம்ப சைதன்ய அனுபவமும், அந்த அம்சங்களை நீக்கிவிட்டு பார்க்கும்போது பிம்ப சைதன்ய அனுபவமும் கிடைக்கிறது.
விசிஷ்ட சைதன்யம் பிரதிபிம்ப சைதன்யமாகவும், உபஹித சைதன்யம் பிம்ப சைதன்யமாக இருக்கிறது. விசிஷ்ட சைதன்யம் பிரமாதாவாகவும், உபஹித சைதன்யம் சாட்சியாகவும் இருக்கிறது. மனம் என்னைவிட்டு போகும்போது எந்த அனுபவமும் ஏற்படுவதில்லை. மனம் நம்முடன் இருக்கும் போது சாட்சியை எல்லா நேரத்திலும் ஜாக்ரத், கனவு நிலைகளில் செயல் வடிவத்திலும், ஆழ்ந்த உறக்கத்தில் செயலற்ற வடிவத்திலும் உணர்கிறோம். மகாவாக்கியம் இந்த சைதன்யத்தைத்தான் பிரம்மம் என்று சொல்கிறது.
ஆதலால் குரு தத்-த்வம்-அஸி என்று உபதேசிக்கும் போது; சீடன் மனதை உபாதியாக பயன்படுத்த வேண்டும். சைதன்ய அனுபவத்தை வைத்துக் கொண்டு அதன் இருப்பிடத்தையும், பயணம் செய்வதையும் நீக்கிவிட்டு நான் எங்கும் வியாபிப்பவன், மாற்றமடையாத பிம்ப சாட்சி சைதன்யம் என்று உணர வேண்டும்.
எவனொருவன் அன்வய வியதிரேக விசாரத்தை சரியாக செய்து முடித்து விட்டு நான் இருப்பிடமற்ற ஆத்மாவென்றும், சிதாபாசன் அல்ல என்றும் புரிந்து கொண்டிருப்பானோ அவன் மகாவாக்கியத்தை கேட்கும் போது அவனுக்கு நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்ற அறிவு உடனடியாக வந்துவிடும் என்று ஆசாரியர் உறுதியுடன் கூறுகிறார். எல்லா இருமைகளும் பொய்யாகிவிடும். எப்படி கனவிலிருந்து விழித்தவுடன் கண்ட கனவுலகம் பொய்யாகி மறைந்து விடுகிறதோ அதுபோல ஞானம் வந்ததும் இந்த உலகம் பொய்யாகி விடும் ஆனால் மறைந்துவிடாது. இந்த உலகத்தில் நடப்பவைகளை கனவாக பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையை அடைந்தவிட்டிருப்போம்.
மகாவாக்கிய பிரமாணத்திற்கும் மற்ற பிரமாணத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று சீடன் கேட்கிறான். மிகப்பெரிய வேறுபாடிருக்கிறது என்று ஆசாரியார் கூறுகிறார்.
கனவில் நிறைய பொருட்களை பார்க்கிறோம். ஒரு சமயத்தில் கனவில் புலி வருகிறது. அது நம்மை துரத்தியடித்து, நம் மீது பாய்ந்து கீழே தள்ளி விடுகிறது. அந்த நேரத்தில் பயத்தினால் விழித்து கொள்கிறோம். இந்த கனவு தனித்தன்மை உடையது. ஏனென்றால் அது நம்மை எழுப்பிவிடுகிறது. அதேசமயம் கனவும் கலைந்துவிடுகிறது, புலியும் மறைந்து விடுகிறது. கனவில் வந்த புலி பொய்யானாலும் அது நம்மை பயமுறுத்தியிருக்கிறது. அந்த பயமே நம்மை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது.
கேள்வி எப்படி மித்யாவான குரு, சாஸ்திரம் சத்யத்தை காட்டிக் கொடுக்கிறது? பதில்: இதற்கு இந்த உதாரணம் விடைகூறுகிறது. மித்யாவான புலி பயத்தைக் கொடுத்து தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுவது போல மித்யாவான குரு சத்யமான ஆத்ம ஞானத்தை கொடுக்கிறார். ஞானம் வந்தவுடன் மகாவாக்கியம் பிரமாணமாக இருக்காது. மகாவாக்கிய பிரமாணம் இருமையை நீக்கிவிட்டு தானும் நீங்கி போய்விடும். மற்ற பிரமாணங்கள் அறிவைக் கொடுத்தாலும் திரிபுடியை நீக்காது. இதுதான் மகாவாக்கிய பிரமாணத்திற்கும் மற்ற பிரமாணத்திற்கும் இடையேயான வேறுபாடாகும். மகாவாக்கிய சிரவணம் நான் ஜீவனல்ல, பிரம்மன் என்ற அறிவை உடனடியாக கொடுத்துவிடும்.
பிரம்ம ஞானம் திரிபுடியின் அனுபவத்தை நீக்காது, அதன் உண்மைத் தன்மையைதான் நீக்கிவிடும். இது வானத்தின் நீலவர்ணம் பொய்யானதாக இருந்தாலும் அனுபவத்திற்கு இருப்பது போல இந்த அறிவு வந்தவுடன் உலகம் அனுபவத்திற்கு இருந்தாலும் பொய்யான தோற்றம் என்ற அறிவுடன் இருப்போம்.
பிருஹதாரண்ய உபநிஷத்தில். யாக்ஞவல்கியர் தனது சீடனான மனைவிக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறார். இந்த உலகங்கள், கடவுள்கள், ஜீவராசிகள் அனைத்தும் பிரம்மம்தான். ஆதலால் நான் மட்டும்தான் இருக்கிறேன். ஆனால் மாயையின் சக்தியால் பலவாக தோன்றிக் கொண்டிருக்கிறேன். மாயை இல்லையென்றால் படைப்பே நடக்காது. மாயை இல்லாமல் என்னால் நான் பிரம்மன் என்று கூறமுடியாது. அதனால் மாயை தொடர்ந்து இருக்கட்டும். மாயையின் படைப்பை ரசித்துக் கொண்டிருக்கலாம். இந்த உண்மையை உணராவிட்டால் வாழ்க்கை பாரமாக, துயரமாக இருக்கும். இந்த அறிவின் பலன் மித்யாத்வத்தை உறுதி செய்வதுதான்.
ஒருவன் செயல்படுதல், செயல்பட உதவும் கருவிகள், செயல்விளைவு ஆகிய மூன்றிலிருந்தும் விடுபட்டிருந்தால் அவன் எப்போதும் பிரம்மனாகவே இருப்பான் என்று ஆசாரியார் சொல்கிறார்.
பிரம்மன் இரண்டற்றதென்றால் உலகத்தை தனியாக இருப்பதாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் இருமை வந்துவிடும். உலகத்தை பிரம்மத்தின் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ளலாமா என்றால் பிரம்மன் உறுப்புக்களற்றதாக இருப்பதால் இதுவும் முடியாததாகி விடுகின்றது. தோன்றிக் கொண்டிருக்கும் உலகம் அனுபவத்திற்கு இருந்தாலும் அது பொய்யான தோற்றமாகும். கண்ணாடியில் தெரிகின்ற பிரதிபிம்பம் எப்படி அனுபவத்திற்கு இருந்தாலும் பொய்யானதாக இருக்கின்றதோ அதுபோலதான உலகத்தின் நிலையும் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மித்யாவை நிச்சயம் செய்யாவிட்டால் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
மனதின் இருத்தலினால்தான் சைதன்யத்தை நான் என்று அனுபவிக்க முடியும். சைதன்யம் மனதை இருப்பிடமாக கொண்டிருப்பதை புரிந்து கொண்டிருந்தால் அதுவே சிதாபாஸமாகும். இந்த இருப்பிடம் மித்யா என்று புரிந்து கொண்டிருந்தால் சித் அனுபவத்துடன் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். விவேகமுள்ள சாதகன் சைதன்ய அனுபவத்திற்காக மனதை பயன்படுத்திகிறான். மேலும் சைதன்யத்தை ஒரு பொருளாக அனுபவிக்காமல் நானே சைதன்யம் என்று அனுபவிக்கிறான். நான் சைதன்யம் என்று சொல்லும்போது அதனுடைய பொய்யான இருப்பிடத்தை அனுபவித்தாலும் அது மித்யா என்ற அறிவோடு அனுபவிக்கிறான். எப்படி கடலின் நீல நிறத்தை அனுபவிக்கும் போது அது தோற்றத்திற்குத்தான் அப்படி இருக்கிறது என்ற அறிவோடு அனுபவிக்கிறோமோ அதேபோலத்தான் சைதன்யத்தின் இருப்பிடம் மனம் மித்யாதான் என்ற அறிவுடனே அதை அனுபவிக்கிறோம்.
ஆசாரியார் கூறுகிறார், விவேகமுள்ள சீடன் அன்வயவியதிரேக விசாரத்தை முடித்த பிறகு நான் இருப்பிடம் எதுவுமில்லாத சித் என்று கூறுவான். இத்தகைய அறிவுள்ள சீடன் மகாவாக்கிய விசாரம் செய்து முடித்தபின் நான் சித்தாகவே இருக்கிறேன், நான் பிரம்மனாகவே இருக்கிறேன் என்ற அறிவை உடனடியாக அடைந்துவிடுவான்.
கேள்வி:1.வேதம் சிலவிடத்தில் ஜீவ-ஈஸ்வர வேற்றுமையைப் பேசுகிறது. சிலவிடத்தில் ஒற்றுமையைப் பேசுகிறது. எனவே வேதப்பிரமாணம் நம்பத்தகுந்ததாக இல்லையென்று தோன்றுகிறது.2.வேதம் நீ பிரம்மனுக்கும் வேறானவன், சம்சாரி என்று சொல்கிறது. என்னுடைய அனுபவமும் அதேமாதிரித்தான் இருக்கிறது. அதனால் இந்த இந்த வேறுபாட்டை விளக்குவதற்கு இரண்டு பிரமாணங்கள் உண்டு. அவைகள் சாஸ்திர பிரமாணம், பிரத்யக்ஷ பிரமாணமாகும். ஆனால் ஐக்கியத்தை விளக்க ஒரேயொரு பிரமாணம்தான் இருக்கிறது. அது மகாவாக்கியமாகும். இது வேதத்தின் எங்கேயொரு மூலையில் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக அதைத்தான் நீங்கள் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பதில்:- சம்சாரம், வேறுபாடு இவைகள் பிரத்யக்ஷ பிரமாணத்தால் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவை மீண்டும் வேதம் விளக்கத் தேவையில்லை. வேதம் பிரமாணமாக இந்த எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பிரத்யக்ஷ பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவை வேறெந்த பிரமாணமும் நீக்க முடியாது. அதனால் வேதத்தை வேறொரு பிரமாணமாக கருதக்கூடாது. ஆனால் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ளமுடியாது.
- நான் பிரம்மத்திற்கும் வேறானவன், நான் சம்சாரி என்ற அறிவானது பிரத்யக்ஷ பிரமாணமும், சாஸ்திரமும் கூறுவதால் அதுவொரு உண்மையாக இருக்கிறது. சத்யமான ஒன்றை நீக்கமுடியாது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், எந்த சாதனத்தை பயன்படுத்தினாலும் உண்மையை மாற்றவோ, நீக்கவோ முடியாது. வேற்றுமை உண்மையானால். நான் பிரம்மத்தின் சேவகன் என்பதும் உண்மையாகிவிடும்.
- ஏதாவதொரு கர்மத்தையோ, உபாஸனையையோ செய்து மோட்சத்தை அடைந்து விட்டேன் என்று சொன்னால் அந்த மோட்சம் வரம்பிற்கு உட்பட்டதாகிவிடும். கர்மம் செய்து சொர்க்கத்தை அடைவது போன்றதாகி விடும். புண்ணியம் தீர்ந்துபோனால் திரும்பவும் பிறவியெடுக்க வேண்டும் என்ற நியதிப்படி சொர்க்கத்திலிருந்து விடுபட்டு வேறொரு பிறவியெடுக்க வேண்டும். சாதனை செய்து அடைகின்ற மோட்சமும் தற்காலிகமானதாகி விடுகின்றது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, வேற்றுமையும், சம்சாரமும் பிரத்யக்ஷ சித்தம் அல்லவென்றும், அவைகள் பிரத்யக்ஷ பிரமாணத்தால் நிலைநாட்டபடவில்லையென்றும் பிரத்யக்ஸ ஆபாஸத்தினால் அவ்வாறு தோன்றுகிறது. அதனால் அது குறையுள்ள பிரத்யக்ஷமாக இருக்கிறது. ஆதலால் வேற்றுமையென்பது பிராந்தி (தவறான நம்பிக்கை). வேதாந்தம் முதலில் இந்த தவறான நம்பிக்கையைப் பற்றி பேசுகிறது. அதாவது நீ பிரம்மத்திற்கும் வேறானவன், சம்சாரி என்று சொல்லி பிறகு நீ உண்மையில் அவ்வாறில்லை என்று அறிவுறுத்துகிறது. எனவே பேதத்தையும், சம்சாரத்தையும் வேதாந்தம் சுட்டிக்காட்டி இவைகள் குறையுள்ள பிரத்யக்ஷமாகும் என்று தெளிவுப்படுத்துகிறது.
இந்தக்கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். வானத்தில் தெரிகின்ற நட்சத்திரத்தை சிறிய நட்சத்திரம் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் நட்சத்திரம் மிகவும் பெரியது. தோற்றத்திற்கு சிறியதாக தெரிகின்ற நட்சத்திரம் குறையுள்ள பிரத்யக்ஷத்தினால் அவ்வாறு தோன்றுகிறது. மேலும் நாம் சிறிய என்ற சொல்லை நம்முடைய குறைபாடுள்ள பிரத்யக்ஷ பிரமாணத்தினால் தோன்றுகின்ற அளவைத்தான் குறிப்பிடுகிறோம். அதன் உண்மையான வடிவமைப்பைக் குறிக்கவில்லை. அதேமாதிரி வேதாந்தம் சம்சாரி, என்று சொல்லும் போது நம்முடைய பிரத்யக்ஷ ஆபாஸத்தினால் தோன்றுகின்ற நிலையைத்தான் சுட்டிக்காட்டுகிறதே தவிர உண்மையில் இதுதான் என்று உபதேசிக்கவில்லை. நீதான் பிரம்மன் என்பதுதான் அதனுடைய உபதேசமாகும்.
அதேபோல த்வம் என்ற சொல் வரம்பை வெளிப்படுத்துகிறது. நீ என்ற சொல் அவன், அவள், அது ஆகியவற்றை நீக்கிவிடுகிறது. பார்வைக்கு நீ என்ற சொல் சம்சாரி ஜீவனாக இருந்தாலும் அது பிரம்மனை குறிக்கிறது. ஸ்ருதியும் பேத தரிசனத்தை கண்டிக்கிறது. பேத தரிசனம் சம்சாரத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது.
வேதாந்தத்தில் பேதத்தைப் பற்றி பேசியிருந்தால் அது இருப்பதுபோல் தோன்றுவதைத்தான் அது குறிப்பிடுகிறதே தவிர அதை உபதேசமாக போதிக்கவில்லை. ஏற்கனவே தெரிந்த ஒன்றை குறிப்பிட்டிருந்தால், அதை அனுவாத வாக்கியமாக கருதவேண்டும். எனவே அனைத்து பேத வாக்கியங்களும் அனுவாத வாக்கியங்களே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவைகள் உபதேச வாக்கியங்களாக் கருதக்கூடாது. அபேத வாக்கியங்கள்தான் உபதேசமாக ஸ்ருதி கொடுக்கிறது.
ஏன் வேதம் பேதத்தைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டால், சாதகர்கள் வேதத்தினுடைய உபதேசத்தை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லாததால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பேதத்தை முதலில் பேசுகிறது. இது அவர்களை அபேத அனுபவத்தை அடையக்கூடிய தகுதிக்கு தயார்படுத்துவதற்காக அபேதத்தைப் பற்றி பேசுகிறது.. எனவே வேதத்தின் முக்கிய குறிக்கோள் அபேத அறிவை புகட்டுவதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அபேதத்ததை நீக்குவதற்கு முதலில் அதைப்பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நியதிப்படி அபேதத்தை அறிமுகப்படுத்துகிறது.
எந்த குழந்தையும் வானில் தெரிகின்ற நட்சத்திரம் சிறிய அளவாகத்தான் புரிந்து கொண்டிருக்கும். பிரத்யக்ஷ பிரமாணமும், சப்த பிரமாணமும் இதைத்தான் புரிய வைத்திருக்கிறது. இதை தவறான புரிதலை எப்படி சரி செய்ய முடியும்? உனக்கு சிறியதாக தெரிகின்ற நட்சத்திரம் உண்மையில் மிகப்பெரியது என்று சொல்லி புரிய வைக்கலாம். இப்படி சொல்லும் பொய்யான சிறிய அளவை முதலில் கூறித்தான் பிறகு உண்மையான அதன் அளவை சொல்லித் தரவேண்டும். இங்கு சிறியது என்பது நட்சத்திரத்தின் அடைமொழியாகத்தான் குறிப்பிடப்படுகிறது.
மகாவாக்கியமும் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது. தத்-த்வம்-அஸி என்ற வாக்கியத்தில் த்வம் என்ற சொல் ஜீவாத்மாவையும், தத் என்ற சொல் பரமாத்வையும் குறிக்கிறது. ஜீவாத்மாதான் பரமாத்மாவாக இருக்கிறது. இந்த வாக்கியத்தில் ஜீவனும், பரமாத்மாவும் அடைமொழிகள். இதில் ஜீவாத்மா என்பது அனுவாதம், பரமாத்மா என்பது உபதேசம் (போதகம்). அனுவாதம் நீக்கப்பட வேண்டியது, போதகம் என்பது வைத்துக்கொள்ள வேண்டியது. நான் ஜீவனல்ல. மகாவாக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஜீவாத்மா என்பது அனுவாதம். செயல்படுதல் அனுவாதம், அனுபவித்தல் அனுவாதம், சம்சாரித்வம் அனுவாதமாகும். செயல்படாத, அனுபவிக்காத, அசம்சாரியாக இருக்கின்ற பரமாத்மாவை என்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த தவறான கருத்தை நீக்க வேண்டுமோ முதலில் அதைப் பற்றி சொல்லி விட்டு, பிறகுதான் அதை நீக்கி உண்மையான கருத்தை சொல்ல வேண்டும். இந்த பொதுவான நியதியை பயன்படுத்தி ஜீவ-ஈஸ்வர பேதத்தை நீக்க முதலில் அதைப் பற்றி வேதம் பேசியிருக்கிறது. உதாரணமாக மங்கலான வெளிச்சத்தில் திருடனைப் போல் தெரிகின்ற மரத்தூணை புரிய வைப்பதற்கு, முதலில் அந்த திருடனை சுட்டிக்காட்டி அது திருடனல்ல மரத்தூண் என்று சொல்லி புரிய வைக்கவேண்டும். இவ்வாறு சொல்லும்போது சொல்பவனுக்கு அங்கே திருடன் இல்லையென்று நன்கு தெரிந்தாலும் அந்தத்திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்தித்தான் மரத்தூணை புரியவைக்க முடியும். இப்படி செய்யாவிட்டால் திருடனாக எண்ணி பயந்து கொண்டிருப்பவனுக்கு அந்த பிரமை நீங்காது. ஏனெனில் அவன் எதை திருடனாக எண்ணி பயந்து கொண்டிருக்கிறானோ அதைப் பற்றி பேசவில்லை, வெறும் மரத்தூணைப்பற்றி பேசினால் இரண்டும் இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்வான். அதனால் அவன் பயம் நீங்காது. எனவே அவன் பார்த்துக் கொண்டிருக்கின்ற திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்திதான் அது திருடனல்ல வெறும் மரத்தூண் என்று சொல்லி பயத்தை நீக்க முடியும்.
இதே முறையில்தான் வேதாந்தத்தை கேட்கின்ற, படிக்கின்ற அனேக மக்கள் பரமாத்மா என்னுள்ளே இருக்கிறார் என்று தவறாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய தவறான மகாவாக்கிய அறிவாகும். இன்னும் நான் ஜீவாத்மா என்ற புத்தியுடன்தான் இருக்கிறார்கள். நான் ஜீவாத்மா, சம்சாரி என்னுள்ளே இருக்கின்ற பரமாத்மா அசம்சாரி என்ற அறிவுடன் இருக்கிறார்கள். இதனால் எந்தவிதமான பயனும் கிடையாது.
ஜீவாத்மா பரமாத்மாவின் விசேஷணமாக இருக்க முடியாது. ஏனென்றால் பிரம்மன் நிர்குணமானது, நிர்விசேஷமானது என்று ஸ்ருதி கூறுகிறது. பிரம்மத்திற்கு எந்த விசேஷணமும் இல்லாதபோது ஜீவாத்மா அதனுடைய ஒரு பகுதியாக, உறுப்பாக கருதமுடியாது. அதேமாதிரி பரமாத்மாவும் ஜீவாத்மாவின் விசேஷணமாக இருக்கமுடியாது. ஏனென்றால் எது ஒருபொருளின் அம்சமாக இருக்கிறதோ அது அந்தப் பொருளுக்கும் வேறாக இருக்கவேண்டும். ஆனால் பரமாத்மாவைத் தவிர வேறொன்றும் கிடையாது என்பது ஸ்ருதி கருத்தாகும்.
ஆதலால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே விசேஷண-விசேஷ்ய-பாவ சம்பந்தம் கிடையாது. இது யுக்தியைக் கொண்டும், ஸ்ருதி பிரமாணத்தைக் கொண்டும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இவையிரண்டிற்கும் இடையே அபேத சம்பந்தம்தான் இருக்க முடியும். அதாவது இரண்டும் ஒன்றேதான் என்று இந்த சம்பந்தம் தெரியப்படுத்துகிறது. இதிலிருந்து த்வைதமும், விசிஷ்டாத்வைதமும் நீக்கப்பட்டு நிர்விசேஷ அத்வைதம் நிலைநாட்டப்படுகிறது.
ஆதலால் நான் பரமாத்மாவிடமிருந்து வேறுபட்டவன் அல்ல என்றும் பரமாத்மாவுக்கு அடைமொழியாக குறிப்பிடப்படுவனும் இல்லையென்று தெரிகிறது. நானே பிரம்மனாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள முடியும். மகாவாக்கியத்திலுள்ள தத், த்வம் என்கின்ற சொற்கள் இரண்டும் ஒன்றிணைந்து ஆத்மாவெனப்படுகிறது.
பிறகு ஜீவாத்மாவை பரமாத்வின் பண்பாகவோ அல்லது விசேஷணமாகவோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் அது இரண்டு காரணங்களால் முடியாது என்று பதில் சொல்லலாம். முதல் காரணம் பரமாத்மாவின் பண்பாக எடுத்துக் கொண்டால் ஜீவாத்மா அனுபவிக்கின்ற சம்சாரம் மறைமுகமாக பரமாத்மாவாலும் அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்க வேண்டும். எனவே பகவானும் துன்பத்தை அனுபவிப்பராக இருக்க வேண்டும். பகவானுக்கு இந்த நிலைமை கிடையாது. எனவே ஜீவாத்மா பரமாத்மாவின் பண்பாக இருக்க முடியாது. இரண்டாவது காரணம் உபநிஷத் பரமாத்மா எந்த அவயவங்களும் அற்றவர் என்று தெரிவிக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ஜீவாத்மா பரமாத்மாவின் விசேஷணமாக இருக்க முடியும். ஆதலால் மகாவாக்கியம் சம்சர்க அர்த்த போதக வாக்கியமும் அல்ல, விசிஷ்டார்த்த போதக வாக்கியமும் அல்ல என்று முடிவாகிறது. இது அபேதார்த்த போதக வாக்கியமாகும்.
அவனே இந்த தேவதத்தன் என்ற வாக்கியம் சிறுவனாக இருந்த தேவதத்தனும் இளைஞனாக இப்போது தெரிகின்ற தேவதத்தனும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வது போல் ஜீவாத்மாவிடமுள்ள கீழான பண்புகளையும், பரமாத்மாவிடமுள்ள உயர்ந்த பண்புகளையும் நீக்கிவிட்டுப் பார்க்கும்போது இரண்டும் ஸத் என்கின்ற ஒன்றுதான் என்று புரிந்துகொள்ள முடியும்.
பிரம்மனாகவிருக்கின்ற நானே வியாவஹாரிக ஜீவனாகவும், வியாவஹாரிக ஈஸ்வரனாகவும் தோன்றுகிறேன். இந்த கருத்தைத்தான் வேதாந்தமும் வெளிப்படுத்துகிறது. குணங்களற்ற பிரம்மமாக இருக்கின்ற நானே குணங்களுடைய ஜீவனாகவும், நிர்விசேஷ பிரம்மனான நானே சவிசேஷ ஈஸ்வரனாக தோன்றுகிறேன்.
ஆசாரியார் மகாவாக்கியம் எப்படி அபேதார்த்த போதக வாக்கியமாக பயன்படுத்த வேண்டும் என்பது விளக்குகிறார். அவனே இந்த தேவதத்தன் என்ற வாக்கியத்தில் சிறுவயது தேவதத்தனிடத்தில் இருந்த அம்சங்களையும், இளைஞனாக இப்போது நிற்கின்ற தேவதத்தனிடத்திலும் உள்ள அம்சங்களையும் மனதளவில் நீக்கி அவனை அறிந்து கொள்கிறோம். இவ்வாறு அம்சங்களை அறிவால் நீக்குவதை பாகதியாக லட்சணை என்று கூறப்படுகிறது. இந்த லட்சணையை மகாவாக்கியத்திலும் உபயோகபடுத்த வேண்டும் என்று ஆசாரியார் கூறுகிறார். ஜீவனையும், ஈஸ்வரனையும் ஐக்கியப்படுத்தும் விஷயத்தில் முதலில் ஜீவனிடத்தில் உள்ள மித்யா அம்சங்களை நீக்கிவிட வேண்டும். அதாவது ஈஸ்வரனோடு ஐக்கியப்படுத்தும் போது ஜீவனிடத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் பிரித்து நீக்கிவிட வேண்டும்.
இந்த அனைத்து அகங்காரமும் மூன்று உண்மைகளை அறியாததால் பிறந்து நீடித்து கொண்டிருக்கிறது. அவைகள் 1. இது மித்யா, 2.அதற்கென்ற தனியிருப்பு கிடையாது, 3.இது வெறும் நாம-ரூபம் மட்டுமே ஆகியவைகளாகும்.
எனவே அகங்காரத்திற்கென்ற தனியிருப்பு இல்லாததால் அதை நன்றாக விசாரம் செய்யும்போது தானாகவே சென்றுவிடும். அகங்காரத்தை ஒருபோதும் நான் அல்லது என்னுடையது என்று கூறக்கூடாது என்பது அறிவுரையாகும். வேதாந்தத்தில் சரணாகதி என்பது அகங்காரத்தை விஸ்வரூப ஈஸ்வரனிடம் கொடுத்துவிடுவதாகும். எனவே அகங்காரம் எதுவாக இருந்தாலும் பிரபஞ்சத்தில் நடக்கின்ற நாடகத்தின்படிதான் நடக்க வேண்டும். எனவே அப்படியே நடக்கட்டும். இந்த அகங்காரத்தை பகவானே தங்களிடம் ஒப்படைத்துவிட்டு பிரம்மமாகவே இருக்க விரும்புகிறேன். தர்மமும், அதர்மமும் அகங்காரத்தை சேர்ந்தவைதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
அகங்காரத்தை நீக்குவது எளிதான வேலை கிடையாது. அதனால் வரக்கூடிய தீவிர விளைகளை அறிந்திருக்க வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலமாக புரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நாளில் வெவ்வேறு நகரங்களின் வெப்பநிலையைக் குறிக்கின்ற அட்டவனையில் நகரம், வெப்ப அளவு என்ற இரண்டு தலைப்புக்களின் கீழே நகரத்தின் பெயரும், வெப்ப அளவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏதாவது ஒரு நகரத்தின் வெப்பளவை மாற்றினால் வெப்பளவு அட்டவனையில் பெரிய மாறுதல் ஒன்றும் இருக்காது. ஆனால் வெப்பளவு தலைப்பை சென்டிகிரேடுக்கு பதிலாக பாரன்ஹீட் என்று மாற்றினால் முழு அட்டவனையும் மாறிவிடும். இதனால் அந்த தலைப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளையும் மாற்றப்பட்ட அளவீட்டு அலகுக்கேற்ப மாற்றவேண்டும்.
இதேபோல மகாவாக்கியத்தில் பாக-தியாக லட்சணையை பயன்படுத்தி அகங்காரத்தை நீக்கிவிடுவது தீவிர விளைவுகளைக் கொடுத்துவிடும். இது ஏனென்றால் சம்சார வரையறை, மோட்ச வரையறை ஆகிய இரண்டும் நான் என்ற வரையறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.. ஆதலால் அகங்காரத்தை விடும்போது மோட்சத்தின் வரையறையும் மாறிவிடுகிறது. வேதாந்த உபதேசத்தின் தொடக்கத்தில் அகங்காரமானது தற்காலிகமாக நான் என்ற சொல்லின் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் மோட்சத்தின் வரையறை நான் என்கின்ற அகங்காரத்தின் அடிப்படையில் இருக்கும். மகாவாக்கிய விசாரத்தின் போது நான் என்கின்ற ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கின்ற அகங்காரம் கொஞ்ச, கொஞ்சமாக நீங்கிவிட வேண்டும். இதையே அபவாதம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மோட்சம் என்பதன் விளக்கம் நித்யமுக்தன் அல்லது ஸ்வரூப முக்தி என்பதாக இருக்கும். அதாவது நான் மோட்ச ஸ்வரூபமானவன் என்ற புதிய மோட்ச வரையறையை அடைய வேண்டும். மோட்சம் என்பது சாத்தியமல்ல. அதுவே என்னுடைய ஸ்வரூபம் என்று உணர்ந்திட வேண்டும்.
ஒருவன் நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; அதையே தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டும் இருக்கிறேன் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் செயல்படும்போது வருகின்ற துயரத்தை தவிர்க்க முடியவில்லை. இவ்வாறு துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற என்னால் எவ்வாறு உறுதியாக நான் ஆனந்த ஸ்வரூபம் என்று கூறிக் கொள்ள முடியும். துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே நான் என்று ஆனந்தமாக இருப்பவன் என்று எப்படி கூறமுடியும்? என்று இந்த உபதேசத்தைக் கேட்ட பின்பும் கேள்வி கேட்கக்கூடாது.
நான் வருத்தமாக இருக்கிறேன் என்ற வாக்கியமும், நானே வருத்தம் என்ற வாக்கியமும் ஓரே பொருளைக் குறிக்காது. சாதகனுக்கு இரண்டும் ஒரே அர்த்தத்தை கொடுப்பாதாக தோன்றுவதற்கு பாகத்தியாக லட்சணையை சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் காரணமாகும். நான் துயரத்தை அனுபவிக்கிறேன் என்ற வாக்கியத்தில் நான் என்பது ஆத்மாவையும், துயரம் என்ற குணம் அனாத்மா மனதை சேர்ந்தது. மனதில் பல்வேறு உணர்ச்சிகள் வந்துபோகும். வேதாந்தம் இந்த மனசஞ்சலத்திலிருந்து விடுவிக்கிறேன் என்று உறுதியளிக்கவில்லை. வேதாந்தம் நான் அனாத்மாவை பார்ப்பவன், மனதில் வருகின்ற உணர்ச்சிமாற்றத்தை கவனித்துக் கொண்டிருப்பவன் என்று கூறுகிறது. மனம் சஞ்சலத்துடன் இருக்கும் போது ஆத்மா அதனில் பிரதிபலிக்காது. எனவே பிரதிபிம்ப ஆனந்தம் அனுபவத்திற்கு வராது. மனதில் எழுகின்ற இந்த ஆனந்தமும் ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். இதை இறைவனே நினைத்தாலும் மாற்ற முடியாது. வேதாந்தம் மனதில் எழுகின்ற பிரதிபிம்ப ஆனந்தத்தின் நிரந்தரத்தைப் பற்றி பேசவில்லை. மனதில் துயரம் இருந்தாலும் நான் ஆனந்த ஸ்வரூபமானவன்தான் ஆனால் மனதில் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மையாகும்.
மாணவர்கள் சில நுணுக்கமான கருத்துக்களை புரிந்துகொள்ள தவறி விடுகின்றனர். அவைகளாவது, 1. நானே உண்மையான ஆனந்தம், 2. நான் எப்போதும் அனுபவிக்கப்படுகின்ற ஆனந்தம், 3. அனுபவிக்கின்ற ஆனந்தம் ஏற்ற-இறக்கத்துடன் இருக்கின்றது \.
ஆகியவைகளாகும். இந்த கருத்துக்களை புரிந்து கொள்ளாதவர்கள்தான் மகாவாக்கியம் எப்படி என்னுடைய துயரத்தைப் போக்கும் என்று கேட்கிறார்கள். இவர்கள் பிம்பானந்தத்திற்கும், பிரதிபிம்பானந்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியாதவர்கள். வேதாந்தம் பிம்பானந்தத்தின் நிரந்தரத்தை பற்றி பேசும்போது அது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஆனந்தம் எப்போதும் நிலையாக தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதைத்தேடி முயற்சிப்பதனால்தான் தோல்வியை அடைகின்றான்.
சாதகனது சந்தேகம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம், மகாவாக்கிய சிரவணம் எப்படி தன்னுடைய பிரச்சனைகளை, துயரங்களை போக்கிக் கொள்ளக்கூடிய சக்தியை கொடுக்க முடியும் என்பதாகும். இதனால் இந்த சாதனங்களுடன் வேறொரு சாதனத்தையும் நான் செய்தாக வேண்டும் என்று நினைக்கிறான். சந்நியாச வாழ்க்கைமுறையை எடுத்துக் கொள்ளலாமா என்றும் நினைக்கிறான். நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளாததால்தான் இந்த மாதிரியான சிந்தனைகள் வருகின்றது.
மகாவாக்கியம் மனதில் அனுபவிக்கின்ற துயரத்தை முழவதுமாக நீக்கிவிடலாம் என்ற உறுதியை ஒருபோதும் கொடுக்கவில்லை. மனதில் துயரத்தை அனுபவிக்கும் போது நான் துயரமாக இருக்கிறேன் என்று கூறுகிறோம். இவ்வாறு கூறுவது மனதை நான் என்று அத்யாஸம் செய்வதால்தான் நடைபெறுகிறது. மனம் அகங்காரத்தின் ஒரு பகுதியாகும். ஏனென்றால் துயரம் என்பது மனதைச் சார்ந்தது ஆனால் அதைச் என்னுடையது என்று தவறாக புரிந்துக் கொள்கிறோம். மகாவாக்கியத்தின் குறிக்கோள் மனதிலிருந்து நான் வேறு என்பதை புரியவைத்து, அனுபவிக்கின்ற துயரங்கள் என்னைச் சார்ந்ததல்ல என்றும் புரியவைக்கிறது. நான் மனதைப் பார்க்கின்ற சாட்சி என்பதை உணர வைக்கிறது. மேலும் மனமும், துயரங்களும் மாயையினால் தோற்றுவிக்கப்படுகிறது. எனவே அவைகள் மித்யாவாகும். அதாவது இவைகள் வியவஹாரிக சத்யமாகும். ஆகவே மனதையும், துயரங்களையும் இருப்பதுபோல தோன்றுகின்ற பொருளாகவும், அவைகளை மித்யாவாகவும் புரிய வைக்கிறது.
மேற்சொன்ன இரண்டு பலன்களை அடைந்தாலும் மேலும் இரண்டு பலன்களை கொடுக்கிறது. அனுபவிக்கின்ற துயரங்களின் வீர்யம் குறைந்துவிடும். துயரங்களை நீக்கக்கூடிய வழிகள் மிகவும் சுலபமாக இருக்கும். உதாரணமாக பக்கத்துவீட்டில் இருப்பவனுடைய துயரங்கள் நம்மை வெகுவாக பாதிக்காது. அதை தீர்க்கக்கூடிய் வழிமுறைகள் நமக்கு தெளிவாக தெரியும். ஏனென்றால் நாம் அதை அனுபவிப்பவன் அல்ல, அதை வேடிக்ககைப் பார்ப்பவனாக இருக்கிறோம். எனவே அகங்காரத்தை வேறாக, ஒரு பொருளாக பார்க்கவில்லையென்றால் அதனால் வருகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழியெதுவும் நம்மிடம் இருக்காது.
ஜீவாத்மா பரமாத்வுடன் ஐக்கியமான பிறகு எப்படி அதனிடத்திலிருந்த துக்கமும், வரம்பிற்குட்பட்ட தன்மையும் முழவதுமாக நீக்கப்படுகிறது?வேதாந்தம் ஜீவ-ஈஸ்வர ஐக்கிய அறிவானது துயரங்களை நீக்கிவிடும் என்று சொல்லவில்லை. மகாவாக்கியம் அறிவைக்கொடுக்கும் கருவியாக இருப்பதால் அது அறிவை மட்டும்தான் கொடுக்கும். பிரமாணம் அறிவைத்தான் கொடுக்கும் எதையும் எதிலிருந்தும் நீக்காது. உதாரணமாக உடலெடையைக் குறிக்கின்ற பயிற்சியைப் பற்றி நன்கு தெரிந்தால் மட்டும் உடலெடைக் குறைந்துவிடாது. இதேபோல மகாவாக்கிய பிரமாணம் அறிவைதான் குறிக்குமே தவிர மனதிலுள்ள துயரத்தைப் போக்காது.
மனதிலுள்ள கவலைகள் நீங்குவது மனமாற்றத்தினாலோ அல்லது மனத்தூய்மை அடைவதாலோதான் நிகழ்கிறது. இவையிரண்டும் நிகழ்வது கர்மபலத்தினாலா அல்லது ஞான பலத்தினாலா என்று பார்க்கும்போது வேதாந்த உபதேசத்தின் அடிப்படையில் கர்மபலத்தினால்தான் என்று அறிந்து கொள்ளலாம். இப்படி இருக்கும் போது மகாவாக்கியத்தினால் அடைகின்ற அறிவினால் இவைகளை நீக்கமுடியாது என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்த அறிவு நம்மிடத்தில் உள்ள அறியாமையை போக்கிவிடும். இந்த அறியாமையினால் நம்மிடத்தே இருந்து கொண்டிருக்கும் மூன்று வகையான தவறான எண்ணங்களும் நீங்கிவிடும்.
முதலாவது நானே மனம் என்கின்ற தவறான எண்ணமாகும். வேதாந்தம் மனம் நீயல்ல, சாட்சி சைதன்யமே நீயாகும் என்று உபதேசிக்கிறது. இதிலிருந்து வேதாந்தம் மனதை மாற்றியமைக்கவோ, மேம்படுத்தவோ இல்லை என்பது தெளிவாகிறது. இரண்டாவது தவறான எண்ணமானது, மனம் என்னைச் சார்ந்தது என்பதாகும். பிருஹதாரண்ய உபதேசத்தின்படி ஆத்மா எதனோடும் ஒட்டாத எல்லையற்றதாக இருக்கக்கூடியதாகும். இது நற்செயல்களாலும், தீய செயல்களாலும் தீண்ட முடியாததாக இருக்கிறது இதனால் மனம் என்னைச் சார்ந்தது என்ற தவறான எண்ணமும் சென்றுவிடுகிறது. மூன்றாவது தவறான எண்ணமானது, மனம் என்னைப் போன்று சத்யமானது, உண்மையானது என்பதாகும். வேதாந்த உபதேசத்தின்படி பிரம்மம் மட்டும்தான் சத்யம், ஜகத் மித்யாவாகும்:. இதன்படி பார்த்தால் மனமும் மித்யாவாகும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டு இவ்வாறே உலகத்தை சுபாவமாகவே பார்க்கின்ற நிலையை அடைய வேண்டும். மேலும் இதிலிருந்து மனம் பொய்யானது என்பதையும் நன்கு புரிந்து கொள்ளலாம். அதனால் இந்த தவறான எண்ணமும் சென்றுவிடும்.
மகாவாக்கியத்தால் அடையப்படுகின்ற ஞானத்தால் மேற்கூறிய மூன்று வகையான தவறான எண்ணங்களும் நீக்கப்படுகின்றன. மகாவாக்கியம் மனதின் நிலைகளை, அதிலெழுகின்ற உணர்ச்சிகளை மாற்றவோ, நீக்கவோ உறுதியளிக்கவில்லை. இந்த தவறான எண்ணங்கள் நீங்கியபிறகு மனதில் எந்தவகையான உணர்ச்சிகள், எண்ணங்கள் தோன்றினாலும் அதனால் நான் பாதிக்கப்படுகிறேன் என்று ஞானம் அடைந்தவன் சொல்லமாட்டான். வேதாந்தம் மனதிலுள்ள துக்கத்தை நீக்காது. ஆனால் மனமே நான் என்கின்ற பொய்யான முடிவை நீக்கிவிடும். நானே துக்கப்படுகிறேன் என்ற பொய்யான கருத்தை நீக்கிவிடுகிறது.
ஒருவேளை சீடன் குருவிடம் மனதை மாற்றுகின்ற உபதேசம்தான் எனக்கு வேண்டும் என்றும் மனம் நானல்ல என்ற அறிவு தேவையில்லை என்று கூறினால், அதற்கு நீ கர்மகாண்டத்திற்குதான் செல்ல வேண்டும் என்றும் ஞான காண்டம் இதை செய்யாது என்றும் குரு கூறுவார்.. மாற்றுதல் என்பது ஒரு செயலாகும். அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஞானகாண்டம் உனக்கு அறிவைத்தான் கொடுக்கும், மனதை மாற்றுவது போன்ற செயலெதுவும் செய்யாது. கர்மம் நான்கு வகையான முடிவுகளைக் கொடுக்கும். அவைகள் ஆப்தி, உத்பத்தி, சம்ஸ்காரம் மற்றும் விகாரம் ஆகியவைகளாகும். மனதை நெறிபடுத்துவதற்கு, மாற்றுவதற்கு கர்மத்தை யோகமாக செய்யவேண்டும். அதாவது பலனில் பற்றில்லாமல் கர்மத்தை செய்து கொண்டுவர வேண்டும். ஆனால் கர்மத்தை செய்வதனால் மூன்று தோஷங்கள் வரும். அவைகள் துக்க மிஸ்ருத்வம், அதிருப்திகாரத்வம், பந்தகத்வம் ஆகியவைகளாகும்.
மனதை எவ்வளவுதான் மாற்றினாலும் எப்போதும் கவலைகள், சஞ்சலங்கள், பிரச்சனைகள் இருந்துகொண்டேயிருக்கும். சாதகனுக்கு மனம் மித்யா, நான் மனம் அல்ல, மனம் என்னைச் சேர்ந்ததல்ல என்று தெரிந்துகொண்டே மனதை மாற்ற முயற்சி செய்யலாம். இதனால் மனநெருக்கடி ஏற்படாது. எந்த கர்மத்தை செய்தாலும் அதன் பலன் நிலையானதல்ல என்று எண்ணத்துடன் செய்ய வேண்டும். குண மாற்றத்தினால் வருகின்றவைகளை மாற்றமுடியாது. அதை புரிந்து கொண்டால் அதன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.
ஆத்ம ஞானம் என்றால் என்ன?ஞானி எப்படி நடந்து கொள்வான் என்பதைப் பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். ஞானியின் மனதும் குணமாற்றத்தினால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும். ஆனால் அவன் அந்த நிலையில் எந்தவிதமான எதிர்ச்செயலையும் செய்ய மாட்டான். ஏனென்றால் மனதைப்; பற்றிய மூன்றுவிதமான நிலையை நன்கு புரிந்து கொண்டிருப்பவன் ஞானி. மனமொரு மித்யா, நான் மனமல்ல, மனம் என்னைச் சார்ந்ததல்ல என்ற கருத்தை இயல்பாக கொண்டிருப்பான். எனவே நாம் சமூக நல்லிணக்கத்திற்காக (லோக சங்க்ரஹம்) இவ்வாறு பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். மோட்சத்தை அடைவதற்காக அல்ல. மோட்சம் என்பது நான் துக்கபட்டு கொண்டிருப்பவன் என்ற முடிவிலிருந்து விடுதலை பெற்ற நிலையேயாகும்.
வரையறையற்ற நானே ஆத்மா என்ற உண்மையானது மகாவாக்கிய விசாரத்திற்கு பிறகுதான் அடைய முடியும். இந்த உண்மையை அறிந்தாலும் மனதின் வரம்பிற்கு உட்பட்ட தன்மையானது நீங்கிவிடாது. நான் வரையறையற்றவன் என்ற உண்மையை அறிந்தபிறகு சாதகன் மனதில் மகிழ்ச்சியை அனுபவிப்பான். வேதாந்தம் நான் வரையறைக்குட்பட்டவன் என்ற அத்யாஸத்தைத்தான் நீக்குகிறது. அனாத்மா நிலையில் மனம்,உடல் வரையறைக்குட்பட்டதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் அறியாமையை நீக்குவதன் மூலமாக அதன் காரணமாக மன வரம்பு பற்றிய தவறான கருத்தும் நீங்கிவிடும்.
அகங்காரம் இருக்கும்வரையில் உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்து தீர்க்க முடியாது என்பதையும், புத்தியினால் எல்லாவிதமான அறிவையும் அடைந்துவிட முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவைகளின் வரம்பை ஏற்றுக்கொண்டு வரம்பற்ற சாட்சி சைதன்யமாக இருப்பதே மோட்சமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அனாத்மாவை அப்படியே ஏற்றுக் கொண்டு அனுபவிக்க வேண்டும். சில சமயங்களில் இன்பத்தைக் கொடுக்கும் பல சமயங்களில் துயரத்தைக் கொடுக்கும். எந்த நிலையிலும் மனதை ஒரேநிலையில் வைத்திருந்தால் அனாத்மாவுக்கு துயரத்தைக் கொடுக்கும் சக்தியிருக்காது.
ஆதலால் சாதகன் அனாத்மாவின் தன்மையை புரிந்துக் கொண்டு வாழ வேண்டும். அதேசமயத்தில் ஆத்மாவைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா அனாத்மாவைப் போன்று இன்ப-துன்பங்களை மாறிமாறிக் கொடுக்காது. மனதை மகிழ்ச்சியூட்டும் வண்ணம் காட்சியளிக்காது. அது அசப்தம், அஸ்பர்ஸம், அரூபம், அரசம், அகண்டம் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அனாத்மா மித்யா(வியாவஹாரிக சத்யம்), ஆத்மா சத்யம் (பாரமார்த்திக சத்யம்) என்பதை நன்கு புரிந்து கொண்டு அமைதியாக இருக்கவேண்டும்..
இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது, அறியாமையின் விளைவாக மட்டுமே இருக்கின்ற ஜீவாத்மாவின் வரம்பானது மகாவாக்கியத்தினால் அடைகின்ற ஞானத்தினால் நீக்கப்படுகிறது. நீக்கப்படுதல் என்பது நான் வரம்புக்குட்பட்டவன் என்ற எண்ணம் நீக்கப்படுகிறது ஆகும். இங்கு நான் என்று குறிப்பிடுவது ஆத்மாவைதான் மனதையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் வரம்பிற்குட்பட்டது, ஆனால் ஆத்மா வரையறையற்றது.
வரம்பு என்பது ஜீவாத்மாவின் ஒரு அம்சமாக தெரிவது போல பரோக்ஷம் அல்லது தொலைவில் இருப்பது என்பது பரமாத்மாவின் தோன்றுகின்ற அம்சமாகும். நானே பரமாத்மா என்று சொல்லும் போது ஜீவாத்மாவின் வரம்பும், பரமாத்மாவின் எங்கேயோ இருப்பது என்பதும் மகாவாக்கிய விசாரத்தினால் வருகின்ற அறிவினால் நீக்கப்படுகிறது. ஆதலால் நான் பரமாத்மாவோடு ஐக்கியமாக வேண்டும் என்பதில்லை.
பொதுவாக மோட்சம் என்பதை துன்பமயமான இந்த உலகத்திலிருந்த தப்பித்து பரமாத்மாவிருக்கின்ற உலகத்திற்கு சென்றுவிட வேண்டும். இதனால் பிறவி என்பது நீங்கிவிடுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கும் ஞானசாதகன் இந்த கருத்து தொடக்க அத்யாரோப பிரகரணத்தில் சொல்லப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மோட்சம் தற்காலிகமானதுதான். வேதாந்தம் உபதேசிக்க விரும்புகின்ற மோட்சம் இது கிடையாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நான் என்றும் இந்த உலகத்துக்கு ஆதாரமாக இருப்பவன். நான் சத்யமானவன், என்றும் இருப்பவன், இரண்டற்றவன் என்ற நிலையே மோட்சமாகும். இந்த பிரபஞ்சமே என்னிடத்தில்தான் இருக்கிறது. கைவல்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டபடி எல்லாமே என்னிடத்தில் இருந்துதான் பிறக்கிறது, என்னிடத்தில்தான் லயமடைகிறது. நான் இரண்டற்ற பிரம்மன் என்பதே இயல்பாக உணர்வதே உண்மையான மோட்சமாகும். வேதாந்தத்தின் மோட்ச விளக்கமானது மறுபிறவியிலிருந்து விடுதலை அடைவதல்ல, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அதிலேயே இருக்க வேண்டும் என்பதாகும். எனவே இந்த தற்காலிக மோட்சத்தை நாடாமல் நிரந்தரமான சுயஸ்வரூபத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்திருப்பதே மோட்சமாகும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கர்ணனை பற்றிய கதையின் மூலம் இந்த மோட்சநிலை விளக்கப்படுகிறது. கர்ணன் தான் சத்திரியன் இல்லையென்ற நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் அவன் மனம் எப்போதும் கவலையுடன் இருந்துக் கொண்டிருந்தது. மக்கள் அவனைப் பார்த்து தோரோட்டி மகன் என்று சொல்லும்போதெல்லாம் அவன் மனம் வேதனைப்படும். எப்போது குந்திதேவி கர்ணன் தன்னுடைய மகன் என்று கூறினாளோ அப்போதிலிருந்து அவன் மனம் கவலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விட்டது. மற்றவர்களுக்கு அவன் தேரோட்டி மகனாக இருந்தாலும், தான சத்திரியன் என்ற மனநிலையுடன் இருக்கும்போது அவர்கள் இகழ்வான பேச்சினால் மனம் துயரடைவதில்லை.
எந்தவகையான உணர்ச்சி பிரச்சனைகள் அறியாமையால் ஏற்பட்டாலும், அவைகள் சரியான அறிவால் அகற்றிவிடலாம். ஞானம் அறியாமையை மட்டும்தான் நீக்குகிறது. அறியாமைதான் எல்லாவித பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த அறியாமை நீங்கிவிட்டால் பிரச்சனைகளும் தானாக நீங்கிவிடும். எனவே ஞானம் பிரச்சனைகளை நீக்கவில்லை, அறியாமையைத்தான் நீக்குகிறது.
மகாவாக்கியம் நான் வரையறுக்கப்படாதவன், வரம்பிற்குட்பட்ட மனம் நானல்ல, உடலால் வரையறுக்கப்பட்டவனல்ல, அறிவால் வரையறுக்கப்பட்டவனல்ல என்பதை விளங்க வைத்து நானே சாட்சி ஸ்வரூபம் என்பதை உணரவைக்கிறது. ஆகவே ஆசாரியார் சொல்கிறார், தத் என்ற சொல் குறிக்கின்ற பரமாத்மாவானது ஜீவாத்மா என்ற வார்த்தையுடன் பயன்படுத்தும்போது ஜீவாத்மாவின் வரம்பு பற்றிய தவறான சிந்தனை நீக்கப்படுகிறது. ஜீவாத்மா பலவாக இருக்கின்றது என்ற தவறான கருத்தை நீக்கிவிடுகிறது. இது ஆத்மா ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறது. தந்தை, மகன், நண்பன் என்று பலவாக தோன்றுவதெல்லாம் அனாத்மாவைக் குறிக்கிறது. இந்த அனாத்மாவை நீக்கிவிட முடியாது, தவிர்க்க முடியாது. எனவே முன்னேறிய சாதகன் நான் கர்த்தாவும் இல்லை, போக்தாவும் இல்லை என்பதை உணர்ந்திருப்பான். ஆத்மஞானத்திற்கு அப்புறம் பிராரப்தத்துடன் கூடிய நிலையே ஜீவன்முக்தியாகும். பிராரப்தம் முடிந்த பிறகு உள்ள நிலையே விதேஹ முக்தியாகும்.
நான் பரமாத்மா என்று கூறும்போது சாதகன் எந்தவித சந்தேகமுமில்லாமல் நானே ஜகத்திற்கு காரணம் என்றும், ஜகத்திற்கு ஆதாரமாக இருக்கிறேன் என்றும் உறுதியாக கூறவேண்டும். அனாத்மா நிலையில் எந்தவித மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஆசாரியார் எச்சரிக்கிறார். அனாத்மா கையாளும் முறையில் மாற்றம் இருக்கலாம். மனசஞ்சலங்கள் குறைந்து போகலாம், புத்தியில் ஏற்படுகின்ற தொந்தரவுகள் குறைந்து போகலாம். மனதைப் பாதிக்கின்ற நேரங்களில் அதிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம். ஆனால் இவையெல்லாம் அனாத்மா நிலையில்தான் நடைபெறுகின்றது. இவைகளெல்லாம் வேதாந்தத்தின் குறிக்கோள் அல்ல என்பதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சம்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட விரும்பத்தகாத நிலை அல்லது அனாத்மாவின் நிலையென்று நினைத்து இந்த நிலையை மாற்றி புதியதான, ஆச்சரியமான அனாத்மா நிலையே மோட்சமென்று நினைக்கக்கூடாது. வேதாந்தம் தெளிவாக சொல்கிறது, அனாத்மா நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஒருபோதும் ஞானத்தால் அடையமுடியாது. இவைகள் கர்மபலனால் அடையப்படுகின்றது.
பிறகு வேதாந்தம் அகற்ற முயற்சிக்கின்ற சம்சாரம் என்பது சரியாக என்ன என்ற கேள்வி மனதில் எழுகிறது. அனாத்மா, உடல்-மனம் தொகுப்பு இவைகளுக்கு சில கூறுகள் இயற்கையாகவே அனாத்மாவோடு இருக்கிறது. இவைகளை இயல்பான அனாத்மா தர்மங்கள் என்று அழைக்கப்படுகிறது. சிலவகை கூறுகள் சாதகமாக இருக்கும், மாற்றக்கூடியதாக இருக்கலாம். சிலவகைகள் பாதகமாக இருக்கலாம். மாற்றமடையாததாக இருக்கலாம். இவைகளை அனாத்மா தர்மம் என்றோ; ஸ்வாபாவிக தர்மம் என்றோ கூறப்படுகிறது என்று வேதாந்தம் சொல்கிறது
அனாத்மாவின் அருகிலே ஆத்மா இருக்கிறது. அதுவே நான், சாட்சி சைதன்யம், பார்ப்பவன், அறிபவன் ஆகியவையாக இருக்கிறேன். ஆத்மா எப்போதும் சாதகமான, பாதகமான கூறுகளை உடையதல்ல. ஆத்மாவும், அனாத்மாவும் அருகருகே இருப்பதால் ஆத்மா பார்வைக்கு அனாத்மாவின் கூறுகளை உடையது போல இருக்கிறது. உடலுக்கு, மனதுக்கு வரும் தர்மங்களை ஆத்மாவுக்கு வருவது போல நினைத்துக் கொள்கிறோம். இவ்வாறு அனாத்மா தர்மங்களை ஆத்மாவில் ஏற்றி வைப்பதற்கு ஆரோபித தர்மம் என்று அழைக்கப்படுகிறது. நான் வயோதிகன்; நான் துயரப்படுபவன்; நான் காதுகேளாதவன், நான் சீரழிந்துபோனவன் போன்ற அனைத்து உணர்ச்சி வெளிப்பாடுகளும் நான் என்ற சொல்லோடு சேர்த்து கூறப்படுகிறது. இதையே ஆரோபித தர்மம் என்று கூறப்படுகிறது.
மேற்கூறிய உணர்ச்சி வெளிப்பாடுகள் உடல்-மனம் தொகுப்பை சார்ந்தவையாகும், இதையே ஸ்வாபாவிக தர்மம் என்றும் கூறப்படுகிறது. சம்சாரம் என்பது இந்த உணர்ச்சி வெளிபாடுகளை பொய்யாக ஆத்மாவில் ஏற்றிவைத்து பார்ப்பதாகும். இதையே ஆரோபித தர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உணர்ச்சி வெளிபாடுகளை அனாத்மாவிலிருந்து நீக்குவதற்கு ஞானம் உதவி செய்யாது. கர்மத்தை செய்வதனாலும் முழுவதுமாக இவைகளை அகற்ற முடியாது. வேதாந்தம் ஸ்வாபாவிக தர்மத்தை மாற்றமுடியும் என்று உறுதி கூறவில்லை. பொய்யாக இந்த தர்மத்தை ஆத்மாவில் ஏற்றிவைத்திருப்பதை, ஆரோபித தர்மத்தை நீக்கிவிடலாம் என்று உறுதி கூறுகிறது. ஆத்மாவினிடத்தில் எந்த பண்புகளும் எந்த நேரத்திலும் இல்லை என்ற அறிவு மட்டும்தான் நமக்கு தேவைப்படுகிறது. ஆதலால் என்னிடத்தில் மூன்று காலத்திலும் எந்த பண்புகளும் கிடையாது. இவைகள் என்னிடத்தில் இருப்பது போல காட்சியளிக்கிறது என்ற அறிவோடு இருக்கவேண்டும். இந்த அறிவை அடைவதே சம்சார நிவிருத்தி என்று அழைக்கப்படுகிறது.
உதாரணமாக நிறமற்ற படிகத்தின் பக்கத்தில் வைக்கப்பட்ட சிவப்பு நிறமுள்ள நிறம் படிகத்தில் பிரதிபலித்து அதுவும் சிவப்பு நிறமாக இருப்பது போல பொய்யாக காட்சியளிக்கும். மலரிலுள்ள சிவப்பு நிறம் ஸ்வாபாவிக தர்மமாகும். மலரின் இந்த நிறத்தை மாற்றுவதற்கு அறிவை அடைய தேவையில்லை. படிகத்தில் பிரதிபலிக்கின்ற நிறம் ஆரோபித தர்மமாகும். இந்த அறிவோடு அதை நோக்கும் போது அந்த நிறத்தை மாற்ற வேண்டும் என்று செயல்படமாட்டோம். படிகத்தில் தெரிகின்ற நிறத்தை மாற்ற மலரை அகற்றவேண்டுமா என்ற கேள்வி எழும்போது அதற்கான பதிலை சொல்லும் போது எச்சரிக்கயாக இருக்கவேண்டும். படிகத்தில் தெரிகின்ற நிறம் அப்படியே இருக்கட்டும். ஆனால் படிகம் அவ்வாறு நிறமுடன் காட்சியளிப்பதற்கு காரணம் அதனருகேயுள்ள சிவப்பமலர்தான் என்ற அறிவுடன் இருந்தால் போதும். மேலும் படிகம் எப்போதும் நிறமற்றது என்ற அறிவுடனும் இருக்க வேண்டும். அதேபோல நானும் எந்தவித பண்புகளுமற்றவன் என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.
ஆதிசங்கரர் தனது நிர்வாண ஷட்கம் என்ற நூலில் இந்த உண்மையை கூறியிருக்கிறார். ஒருவன் வெறுப்பு, பற்று, பேராசை, மனமயக்கம், ஆணவம் மற்றும் பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபட்டவன் என்று கூறியிருக்கிறார். வேதாந்தம் சொல்கிறது நான் படிகத்தைப் போல எப்போதும் சுத்தமானவன். இந்த உண்மையை அறியாததனால் அனாத்மாவின் பண்புகளை என்மீது ஏற்றி என்னுடைதாக கருதிக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் துயரப்படுகிறேன், பிரச்சனைகளுடன் இருக்கிறேன், வயதானவன். கணவன், மனைவி போன்றவைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இவைகளெல்லாம் பார்வைக்கு அப்படி தோன்றுகிறது என்ற அறியாமையால் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வேதாந்தம் இந்த உண்மையைத்தான் புகட்டுகிறது. அதாவது உன்னிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொணடிருக்கின்ற இந்த பண்புகள் அனைத்தும் பொய்யானவையென்றும், இவைகள் அனாத்மாவைச் சார்ந்தது என்றும் போதிக்கிறது. இவைகளை நம்மிடத்திலிருந்து நீக்கிக் கொள்வதற்கு செயலெதுவும் செய்யத் தேவையில்லை. இவைகள் நம்மிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். அதாவது தெரிகின்ற பண்புக்கூறுகள் என்னுடையது என்றும், நான் சம்சாரத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்றும் இதிலிருந்து என்னைக் மீட்க ஒருவர் தேவை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். இந்த எண்ணங்களை மகாவாக்கிய விசாரத்தின் மூலம் நாமே நீக்கிக்கொள்ளலாம். நாம் எந்த பண்புக்கூறுகளுமற்ற படிகத்தைப் போன்ற ஆத்மா எனவும், சம்சாரத்தினுடைய அனைத்து பண்புக்கூறுகளுமற்ற இரண்டற்ற ஆத்மா நானேதான் எனவும் மகாவாக்கியம் உபதேசிக்கிறது.
வேதாந்தம் உடல், மனம், புலன்கள் ஆகியவற்றில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று வாக்களிக்கவில்லை. நான் சத்யம், ஜகத் மித்யா என்ற தத்துவ வார்த்தையை சாதகன் தெளிவாக புரிந்து கொண்டிருக்கவேண்டும். படிகம் நிறமற்றது என்ற அறிவினால் அதில் பிரதிபலிக்கின்ற நிறம் மறைவதில்லை. மலரின் நிறம் அப்படியேதான் இருக்கும். அது படிகத்தின் அருகே இருக்கும்வரை அதன் நிறம் படிகத்தில் பிரதிபலித்து படிகமும் சிவப்பு நிறமாக தெரிந்து கொண்டு இருக்கும். எனவே பௌதிக ரீதியாக படிகத்திலிருந்து நிறத்தை நீக்கவில்லை, அறிவுபூர்வமாக அது நிறமற்றது என்று தெரிந்து கொண்டாலே போதும்.
இதேபோல மகாவாக்கியம் பரமாத்மாவோடு என்னை ஐக்கியபடுத்தும்போது நான் நித்திய நிர்குண ஸ்வரூபத்தை உடைய ஆத்மா என்ற அறிவைக் கொடுக்கிறது. இந்த அறிவு நான் சம்சாரி என்ற தவறான எண்ணத்தை நீக்கி விடுகிறது. சம்சாரம் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தாலும் அதனால் எந்தவிதமான பாதிப்பையும் அடைய மாட்டோம்.
பரமாத்வோடு ஜீவாத்மாவை ஐக்கியப்படுத்தும்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஜீவாத்மாவோ சகுணம். வரம்பிற்குட்பட்டது, பரமாத்மாவோ நிர்குணம், வரம்பற்றது. இந்த ஐக்கியத்தின்போது யாருடைய குணம் யாருக்கு சென்றுவிடும் அல்லது இரண்டு குணங்களும் சேர்ந்தேயிருக்குமா என்பதே அந்த சந்தேகம்.
ஆசாரியார் சுட்டிக்காட்டுவது, ஒன்றாகவிருக்கும் ஆத்மாவினிடத்தில் இரண்டு குணங்களையும் வைத்திருக்கமுடியாது. ஏனென்றால் எதிரெதிரான இரண்டு குணங்களும் ஒன்று சேர்ந்திருக்க முடியாது. எனவே இரண்டிலொன்றை தள்ளிவிட வேண்டும். நிர்குணமானது ஜீவாத்மாவினிடத்திலுள்ள சகுணத்வத்தை நீக்கிவிட்டு, அதை அனாத்மாவிடமே விட்டுவிடும். எனவே ஆத்மா நிர்குணமாக இருக்கும்.
கேள்வி1: வாக்கிய பிரமாணம் நீ பிரச்சனைகளிலிருந்த விடுபட்டவன் என்று சொல்கிறது. அனுபவ பிரமாணம் தெளிவாக நாம் அனுபவிக்கின்ற பிரச்சனைகளை காட்டுகின்றது. இவையிரண்டும் எதிரெதிரான கருத்துக்களை சொல்வதால் அறிவை அடையவேண்டும் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது.
பதில்: அனுபவ பிரமாணம் காட்டுவது அனாத்மா சம்பந்தம். துரதிருஷ்டவசமாக அனாத்மாவை நான் என்று நினைப்பதால் இந்த பிரச்சனைகளை உன்னுடையது என்று எடுத்துக் கொள்கிறாய். உதாரணமாக இந்த உடலை நான் என்று கருதினால் உடலுக்கு வருகின்ற துயரங்கள் உனக்கு வருவதாக நினைத்துக் கொள்வாய். ஆனால் மகாவாக்கியம் அனாத்மாவை பற்றி பேசவில்லை, ஆத்மாவை பற்றித்தான் பேசுகிறது. இந்த ஆத்மாவே நான் என்று நீ ஏற்க மறுக்கிறாய் அதுதான் உன்னுடைய இந்த சந்தேகத்திற்கு காரணம். இதை புரிந்து கொள்ளாமல் மகாவாக்கியத்தின் மூலம் அனாத்மாவை மேம்படுத்த விரும்பினால் தவறான பலன்களையே அடைவீர்கள்.
சாதகர்கள் செய்கின்ற இரண்டு தவறுகள்;,- ஆத்ம-அனாத்மாவுக்கு இடையில் வேறுபாடு தெரியாமல் இருப்பது. அதாவது அனாத்மாவான உடல், மனம் இவைகளை நான் என்று தவறாக கருதிக் கொண்டிருப்பதாகும்.
- ஆத்மாவை மட்டும் உபதேசிக்கின்ற மகாவாக்கியமானது அனாத்மாவிலிருந்து வருகின்ற பிரச்சனைகளை தீர்த்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகும்.
இந்த இரண்டு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அனுபவம் அனாத்மாவைக் கையாளுகிறது. மகாவாக்கியம் ஆத்மாவை கையாளுகிறது. இவ்விதத்தில் இந்த இரண்டு பிரமாணங்களும் வெவ்வேறாக இருக்கும் போது எப்படி இரண்டையும் ஒப்பிட்டு பேச முடியும்.
கேள்வி-2: மகாவாக்கிய சிரவணத்தால் அடைகின்ற ஞானத்தினால் எந்த பலனும் கிடையாது.பதில்: மகாவாக்கியத்தால் அடைகின்ற அறிவினால் அனாத்மாவை மாற்றிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும். ஏனென்றால் வேதாந்தம் ஒருபோதும் அனாத்மாவில் மாற்றத்தை உறுதியளிக்கவில்லை; அனாத்மாவின் உண்மைத் தன்மையை புரியவைத்து ஆத்மாவின் சுயஸ்வரூபத்தை உணரவைப்பதுதான் அதனுடைய நோக்கம். அனாத்மாவில் மாற்றத்தையோ, மேம்படுத்தவோ விரும்பினால் செயல் செய்ய வேண்டியதாக இருக்கும். அதன் விளைவாக கர்மபலன்தான் கிடைக்கும். இதை ஞானபலனாக கருதமுடியாது. ஞானத்தின் பலனானது அறியாமையை நீக்கி அறிவை அடைவதுதான். உதாரணமாக இருட்டறையை தூய்மை செய்ய வேண்டுமானால் முதலில் வெளிச்சத்தை கொண்டு வரவேண்டும். இந்த வெளிச்சமானது அந்த இருட்டறையில் உள்ள எதையுமே மாற்றாது. மாறாக இருப்பதைக் காட்டிக் கொடுக்கும். அந்த அறையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து, கொட்டிக் கிடக்கின்ற பொருட்களை ஒழுங்காக அடுக்கிவைப்பது போன்றவைகள் செயல் செய்வதன் மூலமாகத்தான் நிறைவேறும். எனவே செயல் செய்து அடைகின்ற பலன் கர்மபலன், அறிவினால் எதை அடைய விரும்புகிறோமோ அதை அறிவின் மூலம்தான் அடையப்படும். இதுவே ஞானப்பலன்.
மேற்கண்ட உதாரணத்தில் எப்படி வெளிச்சம் இருட்டறையில் உள்ள இருளை நீக்கி பொருட்களை காட்டிக் கொடுக்கின்றதோ அதேபோல வேதாந்தம் நம்மிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி நம்முடைய ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறது. உடல், மனம் இவைகளை நான் என்று எண்ணிக் கொண்டிருப்பதும் அறியாமையாகும். இந்த அறியாமையினால் உலகத்திற்கு சத்யத்வம் கொடுத்து விடுவதால் அதிலிருந்து வருகின்ற துயரத்தால் பாதிக்கப்படுகிறோம். இந்த அறியாமையினால் அனுபவிக்கின்ற சம்சாரத்தை நீக்குவதே மகாவாக்கியத்தினால் அடையப்படுகின்ற ஞானமாகும். இந்த அறிவினால், நான் மனமும், உடலும் அல்ல என்றும், நான் நிரந்தரமானவன் என்றும், உலகமும், உடலும், மனமும் மித்யா என்றும் சத்யமான ஆத்மாவான எனக்கு உலகம், உடல், மனம் இவைகளால் எந்தவிதமான துயரத்தையும் கொடுக்கமுடியாது என்றும் தெளிவாக புரிந்துக் கொள்வோம். ஆதலால் அனாத்மாவை பொய்யாக்குவதன் மூலம் சம்சாரத்திலிருந்து விடுபடலாம் என்பதே மகாவாக்கிய சிரவணத்தின் மூலம் அடையப்படுகின்ற பலனாகும். நம்முடைய சுதந்திரம் மித்யா அனாத்மாவை துயரம் கொடுக்கின்ற நிலையை மாற்றுவதனால் அடையப்படுவதல்ல. அதன் மித்யத்வத்தை உணர்ந்து அதை எதிர்கொள்வதினால் மனதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அதற்கு துயரத்தைக் கொடுக்கும் சக்தி இருக்காது.
கேள்வி-3: மகாவாக்கிய சிரவணத்தால் பிரயோஜனம் எதுவும் இல்லை. ஆதலால் மகாவாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்ற தியானத்தை செய்ய வேண்டும். இந்த வாக்கிய அப்யாஸம் அல்லது வாக்கிய ஆவிருத்தி அல்லது ப்ரஸம்க்யானம் வேறுவகையான பலனைக் கொடுக்கும். அதுவே சாக்ஷாத்காரம், அசாதாரண அறிவாகும். இதுமட்டுமே நம்மை சம்சாரத்திலிருந்த விடுவிக்கும்.பதில்: வாக்கிய அப்யாஸம் என்பது ஒருவகையான செயலாகும். மகாவாக்கியத்தை தியானிப்பது ஒருவகை செயலாகும். இதையே மானஸ செயல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நாம் மற்ற எல்லா எண்ணங்களில் இருந்தும் வேண்டுமென்றே நம் மனதை எடுத்து விடுகிறோம், வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட சிந்தனையைத் தூண்டுகிறோம், வேண்டுமென்றே ஒரே சிந்தனையை மீண்டும் மீண்டும் சிந்திக்கிறோம். இதையே லிகித ஜபம் என்றும் கூறப்படுகிறது. இது ராமஜெயம் எழுதுவதைப் போன்றது. மனதால் ஒரே மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதையே மானஸ ஜபம். இது மனதால் செய்யப்படுகின்ற செயல். காயிக ஜபம் என்பது லிகித ஜபம் மற்றும் வாசிக ஜபம் என்பது சத்தமாக திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது. இவையிரண்டும் கர்மத்தின் கீழ் வருகிறது. இதேபோல மானஸ ஜபம், மானஸ அப்யாஸம் இவைகளும் கர்மாவாகும்.
கேள்வி-4: கர்மா செய்து ஏன் அசாதாரண அறிவை பெற முடியாது?பதில்: எந்தவகையான கர்மம் செய்தாலும் எந்தவிதமான அறிவையும் அடையமுடியாது. தியானம் என்பது ஒருவகையான செயலாகும். எனவே அது சாதாரண அறிவையே கொடுக்காது. பிறகு எப்படி அசாதாரண அறிவைக் கொடுக்க முடியும். கர்மாவை ஒரு பிரமாணமாக யாராலும் கருதப்படுபவதில்லை. எனவே வாக்கிய அப்யாஸம் தேவையில்லை, வாக்கிய சிரவணம்தான் அசாதாரண அறிவை அடைய தேவையாக இருக்கிறது. மகாவாக்கியத்தை ப்ரஸம்க்யானாம் (தியானத்தில் அமர்ந்து திரும்ப திரும்ப உச்சரித்து கொண்டிருப்பது) புண்ணியத்தைத்தான் கொடுக்கும், சித்தசுத்தியைத்தான் கொடுக்கும். பிறகு திரும்பவும் மகாவாக்கிய சிரவணத்திற்கு வரவேண்டும்.
கேள்வி-5: மகாவாக்கிய சிரவணத்தால் சம்சாரத்தை நீக்கிக்கொள்ள முடியாது.பதில்: மகாவாக்கிய அப்யாஸத்தால் சம்சார நிவிருத்தியை அடைவேன் என்பது எதிர்காலத்தில் நடக்கப்போவதை சொல்கிறாய். இந்த அப்யாஸ செயலால் அடையப்படுகின்ற உனது மோட்சமானது நிலையற்றது. எந்தவொன்று\ தோன்றியதோ அதற்கு நிச்சயம் அழிவும் உண்டு என்ற நியதிப்படி கர்மத்தினால் அடையப்பட்ட மோட்சமும் அநித்யமானது. ஆனால் நாம் எப்பொழுதும் சம்சாரத்திலிருந்து நீங்கியே இருக்கின்றோம். இந்த நிலையை புரிந்து கொண்டாலே போதும் அதுவே மோட்சம். எனவே மகாவாக்கிய சிரவணத்தால் அடையப்படுகின்ற அறிவால் சம்சாரமற்ற நிலையை உணரப்படுவதே நித்ய மோட்சமாகும்.
இறுதியாக சம்சாரத்திலிருந்து விடுதலை என்பது நான் சுதந்திரமானவன், மித்யா அனாத்மா ஒருபோதும் சுதந்திரமுடையதல்ல, சுதந்திரமற்ற மித்யா அனாத்மா என்னுடைய சுதந்திரத்தை பாதிக்காது, என்னுடைய சுதந்திரம் அனாத்மாவின் நிலையைப் பொறுத்து இருப்பதில்லை ஆகியவற்றை புரிந்து கொள்வதாகும்.
கேள்வி-6: மகாவாக்கிய சிரவணத்தின் மூலம் ஆத்மஞானத்தை அடைவதற்கு கடுமை முயற்சி செய்கிறேன். இருந்தாலும் என்னால் மகாவாக்கியத்தின் மூலம் எந்த அறிவையும் அடைய முடியவில்லை. மகாவாக்கியம் என்ன சொல்கிறது? நான் எப்போதும் பிரச்சனைகளிலிரு;நது விடுபட்டவன் என்பதுதான் அதனுடைய உபதேசமா? மகாவாக்கியத்தின் அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டால் எந்த பிரயோஜனமும் கிடையாது. அர்த்தத்தை புரிந்து கொண்ட பின்னர் அதையே திரும்ப திரும்ப மனதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். இதையே ப்ரஸம்க்யானம் என்று அழைக்கப்படுகிறது. இதன்முடிவில் வேறொரு அறிவானது அடையப்படும் அதுவே சாட்சாத்காரரூப ஞானமாகும். இந்த அறிவினால்தான் சம்சாரமான நீங்கிவிடும்.
பதில்: ப்ரஸம்க்யானாம் என்பது ஒருவகையான செயலாகும். இந்த செயல் செய்வதன் மூலம் எந்த அறிவையும் அடையமுடியாது, மோட்சத்தையும் அடையமுடியாது. தியானம் மூலம செயல் செய்வதை மானஸ ஆவிருத்தி என்றும், உடலால் செய்கின்ற செயலை பௌதிக ஆவிருத்தியென்றும் அழைக்கப்படும். மகாவாக்கியம் நாம் ஏற்கனவே அடைந்திருக்கின்ற சம்சார விடுதலையை உணர்த்துகின்ற அறிவை கொடுக்கக்கூடியதாகும். மகாவாக்கியம் உண்மைமையை வெளிப்படுத்துகின்ற வாக்கியமாகும். செய்ய வேண்டிய செயலை காட்டிக் கொடுக்கின்ற வாக்கியமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இது வஸ்து போதக வாக்கியமாகும், கார்ய போதக வாக்கியமல்ல என்பதாகும். கேள்வி-7: ப்ரஸம்க்யானாம் முறைதான் மோட்சத்தை அடைவதற்கு சரியான சாதனமாக இருக்கும். ஏனென்றால் மகாவாக்கியம் சம்சார விடுதலை ஏற்கனவே நாம் அடைந்திருக்கிறோம் என்று சொல்வதை ஏற்றுக் கொண்டால் தியானத்தை முயற்சிக்கமாட்டேன். நான் இயல்பாகவே ஆனந்த ஸ்வரூபம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் பிரத்யக்ஷ அனுபவம் அதற்கு எதிராக இருக்கிறது. துக்க ஸ்வருபமாக இருக்கிறது. எனவே நான் மகாவாக்கியத்தை தியானம் செய்கிறேன், உபாஸனை செய்கிறேன்.
பதில்: உன்னுடைய அனுபவ பிரமாணம் மனதின் நிலைமையைத்தான் சொல்கிறது. மனம் ஒரு அனாத்மா. நான் அமைதியில்லாமல் தவிக்கிறேன் என்று சொல்லும் போது மனதைத்தான் குறிப்பிடுகிறாய். ஆனால் ஸ்ருதி பிரமாணம் மனதைக் குறிக்கவில்லை. அது ஆத்மாவைத்தான் குறிக்கிறது, அதைப்பற்றித்தான் பேசுகிறது. அது மனம் ஆனந்த ஸ்வரூபம் என்று சொல்லவில்லை. மேலும் மனம் ஒரு அனாத்மா, மித்யா, பொய்யானது என்றும் நீ மனமல்ல, உன்னுடைய மனம்தான் துக்க ஸ்வரூபம் என்று கூறுகிறது. வேதாந்தம் இந்த துக்கமயமான மனதை ஆனந்த மயமாக மாற்றுவதற்கு எந்த சாதனத்தையும் கூறவில்லை. மகாவாக்கியம் உபதேசமானது துக்கமயமான மனம் மித்யா, நீ துக்கமயமான மனமல்ல, நீ மனதைப் பார்க்கின்ற சாட்சியாக இருக்கிறாய், நீ எல்லா நேரத்திலும் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றாய் என்று கூறுகிறது. பிரத்யக்ஷ பிரமாணம் அனாத்மாவைப் பற்றி பேசுகிறது. ஸ்ருதி பிரமாணம் ஆத்மாவைப் பற்றி பேசுகிறது.
செயலெதுவும் செய்யாமல் இருந்தாலும் மன சஞ்சலத்தை தவிர்க்க முடியாது. நான் எப்போதும் ஸத்-சித்-ஆனந்தமாக இருக்கிறேன். மனம் தெளிவாக இருக்கும் என்னுடைய ஆனந்தம் மனதில் பிரதிபலிக்கிறது. மனக்குழப்பத்துடன் இருக்கும் போது ஆனந்தத்தை பிரதிபலிக்க முடியாது. இயல்பாகவே மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் தன்மையுடையது. அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மனம் மித்யாவாகும். நீ மனமல்ல, அதை சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பவன், நீ எப்போதும் துயரத்திலிருந்து விடுபட்டவன். அனுபவ பிரமாணம் இந்த பரிதாபகரமான மனதைத்தான் குறிக்கிறது. சாஸ்திர பிரமாணம் இதற்கு நேரெதிரான விஷயத்தைப் பற்றி பேசுகிறது. எனவே இரண்டு பிரமாணங்களும் வெவ்வேறான விஷயத்தைப் பற்றி பேசுவதால் இவையிரண்டையும் ஒப்பிடக்கூடாது.
வேதாந்த மாணவன் அடிக்கடி சொல்வது, எனக்கு பிரம்மானுபவம் ஏற்படவில்லை. இவ்வாறு சொல்லக் காரணம், பிரம்மானுபவம் என்றவொன்று இல்லையென்ற அறியாமையினால்தான். நீயே பிரம்மனாக இருக்கும்போது எப்படி அந்த அனுபவம் ஏற்படும். அது அனுபவிக்கப்படுகின்ற பொருளல்ல என்ற உண்மையை அறியாததால் இவ்வாறு சொல்லப்படுகிறது. மனதில் ஏற்படுகின்ற சஞ்சலங்கள், மயக்கங்கள் இயல்பானது. மனம் அமைதியடைந்து விட்டால் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைந்து விடுவேன் என்று நினைப்பது முட்டாள்தனமானது. நான் நித்ய முக்தன், மனதை சாட்சியாக பார்த்து கொண்டிருப்பவன் என்ற அறிவை அடைந்திட வேண்டும். ஆதிசங்கரர் நிர்வாண சதகம் என்ற நூலில் கூறியிருப்பதாவது, விடாமுயற்சியுடைய சாதகன் எந்த நிபந்தனையுமில்லாமல் நான் நித்ய முக்தன் என்று உறுதியுடன் சொல்வான்.
கேள்வி-8: கடற்கரையில் நின்று கொண்டு கடலைப் பார்க்கும்போது கடல்நீர் நீல நிறத்தில் தெரிகிறது. அதே கடல்நீரை ஒரு கண்ணாடி குப்பியில் பார்க்கும் போது நிறமற்றதாக தெரிகிறது. இரண்டும் கண்ணால் பிரத்யகஷயமாக பார்க்கப்படுகின்றது. இதிலிருந்து ஒரே பிரமாணம் வெவ்வேறாக காட்டுவது தெரிகிறது. எனவே பிரமாணம் வேறுபட்டு நிற்காது என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது. பதில்: ஒரே கடல்நீரைப் பொறுத்து முரண்பாடுள்ள இரண்டு கருத்துக்கள் வரும்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது இவையிரண்டில் ஒன்று சரியானது, மற்றொன்று தவறானது என்று அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால் இரண்டிலொன்று பிரமாண ஆபாஸம் என்று அழைக்கப்படுகிறது. சரியான பிரமாணம் ஆபாஸ பிரமாணத்தினால் அடைகின்ற அறிவை நீக்கிவிடுகின்றது.----oo000oo----

2. ஆனந்தம் தனித்துவ வஸ்து, அதுதான் மனதை வியாபித்து
4. மனம் ஒடுங்கிய நிலையிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது.
5. ஆனந்தத்தை எதனுதவியாலும் அனுபவிக்க முடியாது. சாந்தோக்ய
ஒரு கற்பனையான சூழ்நிலையை நினைத்துப் பார்ப்போம். மனம் தொந்தரவாக இருப்பதால் அதை ஏதொவொரு வழியில் நீக்க முடிவு செய்வோம். இதனால் மனம் சென்று விடுகிறது, அதனால் தொந்தரவும் சென்றுவிடுகிறது. இதனால் மிகப்பெரிய தீமையுள்ளது. மனமும், அதனுடைய தொந்தரவும் நீங்கிவிடுகிறது. ஆனால் ஆனந்த ஸ்வரூபமான நான் இருக்கிறேன். மனமில்லாமல் நான் ஆனந்த ஸ்வரூபன் என்பதை கோரமுடியாது. மனமில்லாததால் துக்கம் சென்றுவிட்டது. ஆனால் கூடவே சுகமும் சென்றுவிடுகிறது. ஏனென்றால் நம்மால் ஆனந்தத்தை கோரமுடியாது. அப்படி கோர முடியவில்லையென்றால், ஆனந்தம் நிலையாக இருப்பதனால் என்ன பயன். நான் ஸத்-சித்-ஆனந்தம் என்றும் கோரமுடியாது. எனவே நான் ஆனந்த ஸ்வரூபன் என்று கூறுவதற்கு மனம் இருக்கவேண்டும்.
- சம்சாரம், வேறுபாடு இவைகள் பிரத்யக்ஷ பிரமாணத்தால் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவை மீண்டும் வேதம் விளக்கத் தேவையில்லை. வேதம் பிரமாணமாக இந்த எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பிரத்யக்ஷ பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவை வேறெந்த பிரமாணமும் நீக்க முடியாது. அதனால் வேதத்தை வேறொரு பிரமாணமாக கருதக்கூடாது. ஆனால் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ளமுடியாது.
- நான் பிரம்மத்திற்கும் வேறானவன், நான் சம்சாரி என்ற அறிவானது பிரத்யக்ஷ பிரமாணமும், சாஸ்திரமும் கூறுவதால் அதுவொரு உண்மையாக இருக்கிறது. சத்யமான ஒன்றை நீக்கமுடியாது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், எந்த சாதனத்தை பயன்படுத்தினாலும் உண்மையை மாற்றவோ, நீக்கவோ முடியாது. வேற்றுமை உண்மையானால். நான் பிரம்மத்தின் சேவகன் என்பதும் உண்மையாகிவிடும்.
- ஏதாவதொரு கர்மத்தையோ, உபாஸனையையோ செய்து மோட்சத்தை அடைந்து விட்டேன் என்று சொன்னால் அந்த மோட்சம் வரம்பிற்கு உட்பட்டதாகிவிடும். கர்மம் செய்து சொர்க்கத்தை அடைவது போன்றதாகி விடும். புண்ணியம் தீர்ந்துபோனால் திரும்பவும் பிறவியெடுக்க வேண்டும் என்ற நியதிப்படி சொர்க்கத்திலிருந்து விடுபட்டு வேறொரு பிறவியெடுக்க வேண்டும். சாதனை செய்து அடைகின்ற மோட்சமும் தற்காலிகமானதாகி விடுகின்றது.
- ஆத்ம-அனாத்மாவுக்கு இடையில் வேறுபாடு தெரியாமல் இருப்பது. அதாவது அனாத்மாவான உடல், மனம் இவைகளை நான் என்று தவறாக கருதிக் கொண்டிருப்பதாகும்.
- ஆத்மாவை மட்டும் உபதேசிக்கின்ற மகாவாக்கியமானது அனாத்மாவிலிருந்து வருகின்ற பிரச்சனைகளை தீர்த்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகும்.
No comments:
Post a Comment