Friday, March 26, 2021

Naishkarmya Siddhi - Chapter2-- பகுதி-3

நைஷ்கர்ம்ய சித்தி
அத்தியாயம்-2.3

Edited on 17-08-2024

நான் மனதை பார்ப்பவனாக இருக்கிறேன், மனதிற்கும் வேறாக இருக்கிறேன். அதனால் என்னிடத்தில் பயம், கோபம், ஆசை போன்ற எந்த தீய குணங்களும் மூன்று காலத்திலும் கிடையாது, ஆதலால் இவைகளிலிருந்து விடுபட நான் எதுவும் செய்யவேண்டியதில்லை. நான் எப்போதும் சுதந்திரமாக இருக்கின்ற ஆத்மா. அதுமட்டுமல்லாமல் இந்த உடலாலும் வரையறுக்கபடாதவன், எல்லா மனங்களுக்கும் பின்னாலும் இருக்கிறேன், எங்கும் வியாபித்திருக்கிறேன். இவ்வாறு நிதித்யாசனத்தின்போது  தியானிக்க வேண்டும்.

ஆசாரியார், மனதிலிருந்து உன்னை பிரிக்க பயிற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார். இதிலிருந்து மறைமுகமாக கூறுவது, மூன்று குணங்களின் ஆதிக்கத்தினால் மனதில் ஏற்படும் உயர்வு-தாழ்வுகளை வைத்துக் கொண்டு உன்னை எடைபோடாதே. ஞானிகள் மனதிலும் உயர்வு-தாழ்வுகள் இருக்கும். ஞானி அவைகளினால் பாதிக்கப்படுவதில்லை.

வேதாந்தத்தின் குறிக்கோள் உணர்ச்சிகளை நீக்குவது அல்ல, ஆத்மாவாகிய  உன்னிடத்தில் அவைகள் இல்லை என்பதை உணர்த்துவதுதான். ஆத்ம ஞானம் என்பது குறிப்பிட்ட அனுபவத்தையடைந்து அதன் மூலமாக ஆத்மாவை அறிந்து கொள்வதல்ல.

இதுவரை சாட்சி சைதன்யம் எதனோடும் ஒட்டாதது, இந்த உலகம் பார்க்கப்படுகின்ற பொருளாக இருப்பதால் இந்த பிரபஞ்சம் என்னை சம்சாரியாக்க முடியாது. நான் சம்சாரியாக இருக்கமுடியாது என்பதால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.  என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை மறந்திருப்பதால் வாழ்க்கையை போராட்டமாக அனுபவிக்கிறேன். உண்மை ஸ்வரூபத்தின் நினைவுடனே இருந்தால் வாழ்க்கை பொழுது போக்காக, விளையாட்டாக மாறிவிடும் என்கின்ற கருத்துக்கள் கூறப்பட்டது.

மோட்சத்தை அடைவது என்பது துயரத்தைக் கொடுக்கின்ற இந்த உலகத்திலிருந்து தப்பித்து சென்றுவிட வேண்டும் என்ற தவறான கருத்து சாதகர்களிடையே இருக்கிறது. ஈஸ்வரன் வைகுண்டத்திலோ, கைலாயத்திலோ இருக்கிறார் எனவே அங்கே சென்று விடுவதுதான் மோட்சம் என்ற கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள். வேதாந்த சாதகர்கள் இந்த கருத்துக்களை நீக்கிக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைப்படி இந்த நீக்கத்தை செய்து கொள்ளலாம்.
  1. இந்த உலகமானது விஸ்வரூப ஈஸ்வரனாக இருப்பதால், உலகத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கிவிட வேண்டும்.
  2. இந்த உலகம் வெறும் நாம-ரூபங்கள்தான், மித்யாவான இந்த உலகத்தால் எந்த வகையிலும் நான் பாதிக்கப்படமாட்டேன். எனவே இந்த உலகத்தை விட்டு ஓடவேண்டிய அவசியமில்லை.
  3. நானே பிரம்மனாக இருப்பதால், இந்த உலகத்திற்க அதிஷ்டானமாக இருக்கிறேன். எனவே உலகத்தைவிட்டு ஒடக்கூடிய வாய்ப்புமில்லை.
இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையேயுள்ள உறவு கயிறு-பாம்பு உதாரணத்தில் குறிப்பிடப்படும் பாம்பு-கயிறு உறவைப் போன்றது.  நான் கயிறு, உலகம் முழுவதும் பாம்பாக ஒப்பிட்டுப் பார்க்கும் போது உலகம் என்னைத் தொடமுடியாது, பாதிக்கவும் முடியாது, பயமுறுத்தவும் முடியாது என்று தெளிவாக தெரிகிறது.

கயிற்றில் பாம்பு தெரியக்கூடிய அனுபவம் ஏற்படுவதற்கு சில நிபந்தனைகள் இருக்க வேண்டும். கயிறு இருக்க வேண்டும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் கயிற்றை பார்த்துக் கொண்டிருந்தாலும், அதுவே பாம்பாக தெரிகிறது. இதில் பாதி அறிவும், பாதி அறியாமையும் கலந்து இருக்கிறது. ஏதோ இருக்கிறது என்ற அறிவும், பாம்பு போல் தெரிகின்ற அறியாமையும் இருக்கிறது. ஏதோ இருக்கிறது என்பது சாமான்ய ஞானம்; அது கயிறுதான் என்ற உண்மையான தோற்றத்தை பற்றிய அறியாமையையே விசேஷ அக்ஞானம் எனப்படுகிறது.

இந்த அறியாமை பகுதிதான் கயிற்றை மறைக்கிறது. கயிற்றின் உண்மை தன்மை மறைக்கப்படும்போது தவறான கருத்து உருவாகின்றது. இதுவே கயிற்றை பாம்பாக நினைக்க வைக்கிறது. எனவே அக்ஞானம் காரணம், தவறான எண்ணம் (பாம்பு) காரியம் என்று நாம் சொல்லலாம். தவறுக்கும், அறியாமைக்கும் இடையே உள்ள உறவு காரிய-காரண சம்பந்தமாகும். இந்த உதாரணத்தை வேதாந்தம் ஆத்மாவை காட்டிக் கொடுக்க எடுத்துக் கொள்கிறது. ஆத்மாவின ஒருபகுதி அறியப்படுகிறது. ஒருபகுதி அறியாததாக இருக்கிறது.. ஆத்மாவின் அறியப்படுகின்ற பகுதியானது நான். அனைவருக்கும் தன்னைப்பற்றி நன்றாக தெரியும். இந்த நான் என்பது சுய-உணர்வு தத்துவமாகும். இதுவே சாமான்ய ஞானமாகும். இதை அறியாமை மறைக்கவில்லை. ஆனால் ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை மறைக்கிறது. நான் அத்வைத ஸ்வரூபம், அதுவே என்னுடைய விசேஷம் என்கின்ற  இந்த விசேஷ ஞானத்தை அறியாமை மறைக்கிறது. இந்த அக்ஞானம் அனாதி காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த அறியாமையினால் கயிற்றை பாம்பு மறைப்பது போல அத்வைதமானது த்வைத பிரபஞ்சத்தினால் மறைக்கப்படுகிறது. இந்த முழு த்வைத பிரபஞ்சமே என்னிடத்தில் பொய்யாக காட்சியளிக்கிறது.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதல் கருத்தானது, புருஷனைப் பற்றிய அறியாமையினால் பிரகிருதி பொய்யாக காட்டப்படுகிறது. வேதாந்தம் அனைத்தும் என்னிடமிருந்து தோன்றுகிறது; என்னிடத்திலே இருக்கிறது; என்னிடத்திலே லயமடைகிறது என்று சொல்கிறது.

இரண்டாவது கருத்து: இந்த உலகம் ஸத்தாகவும் இல்லை, அஸத்தாகவும் இல்லை. அதனுடைய இருப்பை என்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறது. கயிற்றில் தோன்றும் பாம்பு இருத்தல் வகையை சேர்ந்ததல்ல. ஏனென்றால் அது பாம்பல்ல என்ற அறிவு வந்தவுடன் மறைந்து விடுகிறது. அதேசமயத்தில் இல்லாதது என்று கூறமுடியாது. ஏனென்றால் அறியாமையின்போது தெரிந்து கொண்டிருக்கிறது.. எனவே இருப்பதுபோல் காட்சியளிக்கின்ற வகையைச் (ஸத்-அஸத்-விலக்ஷணா) சார்ந்தது என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையையே மித்யா என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அதன் இருப்புக்கு அதன் அதிஷ்டானத்தின் இருப்பு காரணமாக இருக்கிறது. கயிறு-பாம்பு உதாரணத்தில் பாம்புக்கு தனக்கென்று எந்த இருப்பும் இல்லை. ஆனால் கயிற்றின் இருப்பை தற்காலிகமாக தன் இருப்பாக கொண்டு இருக்கிறது. கயிற்றை எடுத்துவிட்டால் அங்கே பாம்பு இருக்காது. கனவுலகமும் மித்யா. ஏனென்றால் விழித்தவுடன் கனவுலகமும் மறைந்து விடுகிறது. அதேபோல இந்த விழிப்புலகமும் ஆத்மாவின் இருப்பின் காரணமாக தெரிந்து கொண்டிருக்கிறது. ஆத்மாவே உலகமாக காட்சியளிக்கிறது. மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ் இவைகளினாலான அவித்யாவின் காரணமாக என்னால்தான் இந்த உலகம் வெளிக் கொண்டுவரப்பட்டது

மூன்றாவது கருத்து: நான் மித்யா உலகம் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறேன். நான் இந்த உலகத்தை சார்ந்தில்லை. இந்த உலகம் என்னைச் சார்ந்து இருக்கிறது.   ஸ்ருஷ்டி-ஸ்திதி-லயம் என்ற நித்திய செயல்முறை என்னிடத்தில் தொடரட்டும். இந்த கருத்துதான் சாதகனுடைய உறுதியான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

மோட்சம் என்பது விதேக முக்தி அடைவது என்ற பொருளல்ல. இந்த உலகம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கட்டும், பிறப்பு-இறப்பு என்ற சுழற்சி இருந்து கொண்டு இருக்கட்டும். இவைகளால் நான் பாதிக்கப்படுவதில்லை. இந்தவகையான அணுகுமுறைதான் மோட்சமாகும். கயிறில்லாமல் பாம்பு தோன்றாததை போல நான் இல்லாமல் இந்த உலகமில்லை, அதேசமயம் உலகமில்லையென்றாலும் நான் இருந்து கொண்டிருப்பேன். இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையே உள்ள உறவுமுறை சத்ய-மித்யா-உறவு என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் மித்யா உலகம், என்னைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லும்போது, நான் என்று குறிப்பிடுவது ஆத்மாவைதான் உடல்-மனத்தொகுப்பை அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். உடலும், மனமும் மித்யா அவைகளும் என்னைச் சார்ந்துதான் இருக்கிறது.

இது முக்கியமான கருத்தாகும், தொடக்கத்தில் சாதகர்கள் மோட்மென்பது மனவமைதி என்று புரிந்து கொண்டிருப்பார்கள். பின்னால் நான் மனமல்ல என்றும், ஆத்மாதான் என்று புரிந்து கொள்ளும் போது மனவமைதி என்பது எந்த நிபந்தனைகளற்றது என்றும், எனவே அதை அடைவதில் முயற்சி செய்யாமல், ஆத்ம ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வான். ஆத்ம ஞானமே மனசாந்தியைக் கொடுத்துவிடும் என்பது நன்றாக தெரிந்துவிடுகிறது.

ஆத்மா பார்க்கப்படும் பொருளாக இல்லை. அதை அடைவதற்கு எந்த சாதனமும் தேவையில்லை. எனவே அதை எதாவது குறிப்பிட்ட சாதனத்தை பயன்படுத்தி அடைய வேண்டும் என்று முயற்சிப்பது வீணான செயலாகும்.
எந்தவொரு காரியமும் அதன் காரணத்தை அதற்கு வெளியே கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாக தங்க ஆபரணத்தின் காரணம் அதற்கு வெளியே கிடையாது. அதுபோல அக்ஞானத்தின் காரியமும் அக்ஞானத்திற்கு வெளியே கிடையாது. எனவே எல்லா மித்யா பதார்த்தங்களும் அக்ஞானத்தை ஆதாரமாக கொண்டுதான் இருக்கிறது. எல்லா அத்யாஸமும் (தவறான எண்ணங்களும்) அறியாமையை ஆதாரமாகக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கருத்து அன்வய-வியதிரேக நியாயத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது. கயிறு-பாம்பு உதாரணத்தில் அக்ஞானம் இருக்கும்போது பாம்பு தோன்றுகிறது. அக்ஞானமில்லாத போது பாம்பும் இருக்காது. கயிற்றின் மீது பாம்பை தவறாக காண்பது அக்ஞானத்தினால்தான் என்று தெரிகிறது. ஆதலால் பார்ப்பவன், பார்க்க உதவும் கருவி, பார்க்கப்படும் பொருள், பார்த்தல் இவை நான்கும் ஆத்ம அக்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சூட்சும சரீரம் (மனம், புலன்களின் சக்தி, புத்தி), ஸ்தூல சரீரம் மற்றும் அனைத்து வெளிப்பதார்த்தங்கள் அனைத்தும்  சைதன்யத்திலிருந்து பிரிக்கப்படுகிறது. இந்த சைதன்யம்தான் இவைகளை இணைக்கின்ற இணைப்பாகும். இந்த இணைப்பு இல்லாத போது வெளியுலக அனுபவங்கள் ஏற்படாது, வெளியுலக பொருட்கள் வெளிப்படாது. இணைப்பு ஏற்படும்போது இவைகள் அனுபவத்திற்கு வருகின்றது, வெளியுலக பொருட்கள் வெளிப்படுத்தப்படுகிறது. நமக்கு வெளியேயுள்ள உலகம் பல அடுக்குகளை தாண்டிதான் அனுபவத்திற்கு வருகிறது. ஆத்மாவுக்கும் சூட்சும சரீரத்திற்கும் இடையேயுள்ள ஒரு அடுக்கு காரண சரீரம். ஆத்மாவுக்கும், ஸ்தூல சரிரத்திற்கும் இடையே இரண்டு அடுக்குகள் உள்ளது. அவைகள் காரண சரீரம், சூட்சும சரீரம் ஆகும்.  ஆத்மாவுக்கும், வெளியுலகத்திற்கும் இடையே மூன்று அடுக்குகள் உள்ளது. அவைகள் காரண சரீரம், சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம் ஆகியவைகளாகும். சிதாபாஸம் இவைகளை முழுவதுமாக வியாபித்து பிறகு வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உலக விஷயங்கள், பொருட்கள் ஒரு பிரமாணத்தின் மூலமாக குறிப்பிட்ட அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஆத்மா வேறானது..

சத்ய-மித்யா சம்பந்தம்தான் ஆத்மா-அனாத்மாவுக்கிடையே உள்ள உறவாகும். இந்த உறவைப் பற்றிய அறிவுதான், இரட்டை-வடிவ தத்துவத்தை வெற்றிகரமாக பயிற்சி செய்வதற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. நான் சத்யம், உலகம் மித்யா என்ற தெளிவான அறிவை அடையவேண்டும்.
 
ஆசாரியார் ஆத்மா அறியப்படும் பொருளாக இல்லை என்று கருத்தை விளக்குகிறார். எது குறிப்பிட்ட அனுபவத்தால் அறியப்படுகிறதோ அதுவே பிரமேயம் எனப்படும்.. உதாரணமாக சப்தமானது குறிப்பிட்ட அனுபவத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் ஆத்மா அதுபோல அறியமுடியாததால் அதை அபிரமேயம் என்று அழைக்கப்படுகிறது. அறியப்படுவது அனைத்தும் அனாத்மாவாகும். அனாத்ம பிரமேயம் சைதன்யத்தால் பல அடுக்கு தடைகளால் மறைக்கபட்டிருக்கிறது. இந்த தடைகள் என்னென்ன என்ற கேள்வியெழுகிறது.
 
முதலாவதும் பொதுவானதுமான தடை அக்ஞானம். இங்கே அக்ஞானம் என்று குறிப்பிடுவது உணர்வற்ற வஸ்துக்களாம். முதல் தடை என்பது உணர்வற்ற தன்மையான அனாத்மாவாகும். அனாத்மா உணர்வுடையதாக இருந்தால் அது சைதன்யத்திற்கும் வேறாக இருக்காது. உணர்வற்ற தன்மை அதனுடைய இயல்பாக இருப்பதால் அது மறைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மேலும் அது அறியப்படுவதற்கு சிதாபாஸத்தின் உதவி தேவைப்படுகிறது. சிதாபாசம் அதை வியாபித்து அதன் இருப்பை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக மேசை மீதுள்ள பொருளை காட்டுவதற்கு வெளிச்சத்தின் வியாப்தி தேவைப்படுகிறது. ஒருவேளை மேசைக்கு அந்த சக்தியிருந்தால் அதுவே அந்த அதன் மீதுள்ள பொருளைக் காட்டிக் கொடுக்கும். வேறொன்றிலிருந்து இயல்பாக வருகின்ற வெளிச்சம் தேவையில்லை. அதேபோல ஜடத்தன்மையை இயல்பாக உடைய அனாத்ம வஸ்துவை காட்டிக் கொடுப்பதற்கு சைதன்யத்தின் வியாப்தி தேவைப்படுகிறது. எனவே அவைகளை பிரமேயம் என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த அனாத்மா பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஜடத்தன்மை என்ற தடையோடு கூடியதாக இருக்கிறது. இவைகளை பிரமேயமாக ஆக்குகிறது. இதேபோல பலதடைகள் இருக்கிறது. இந்த தடைகளின் அடிப்படையில் அனாத்மா பொருளானது பல உட்பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது மனம், இது இயல்பிலே ஜடமானது, சிதாபானின் வியாப்தியால் இது உணரப்படுகிறது.
 
இரண்டாவது வகையான அனாத்மா உடலாகும். இது உணர்வுமயமாக இயங்குவதற்கும். அதன் இருப்பை உணாந்து கொள்வதற்கும் சிதாபாசனின் வியாப்தி தேவைப்படுகிறது. எனவே இதுவும் ஒருவகையான பிரமேயம். மனம், உடல் என்கின்ற இந்த இரண்டு பிரமேயத்திற்கும் இடையே வேற்றுமை உள்ளது. இவையிரண்டும் உணர்வு தன்மையை ஆத்மாவிடமிருந்து கடனாக பெற்றாலும், மனதைப் போல உடலால் நேரிடையாக ஆத்மாவிடமிருந்து கடனாக பெறமுடியாது. ஒருவேளை அப்படி பெறமுடிந்தால் இறந்தபிறகும் உடல் உணர்வுடையதாக இருக்கமுடியும். எனவே உடலுக்கும் ஆத்மாவுக்கும் இடையே ஒரு அடுக்கு இருந்தாக வேண்டும். அதுவே மனமாகும். மனதின் மூலமாகத்தான் உடலால் சைதன்யத்தின் உணர்வை கடனாக பெறமுடியும் என்று விளங்குகிறது. மனதிற்கு ஒரு அடுக்கு தடைதான் இருக்கிறது. ஆனால் உடலுக்கோ இரண்டு அடுக்கு தடைகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆத்மாவின் சைதன்யத் தன்மை மனம் வழியேதான் உடலை அடைந்து உடலையும், புலன்களையும் உணர்வுடையதாக ஆக்குகிறது.
 
மூன்றாவது வகையான அனாத்மா உடலுக்கு வெளியேயுள்ள உலகத்திலுள்ள பொருட்களாகும். இவைகளும் பிரமேயங்களாகும். இவைகளும் இயல்பிலே ஜடமாகும். அவைகளுக்கும் சிதாபாஸ வியாப்தி தேவைப்படுகிறது. இவைகள் எப்படி சிதாபாஸனை அடைகிறது என்று பார்க்கும்போது, ஆத்மாவிலிருந்து சிதாபாஸன் மனதை அடைந்து, பிறகு உடலையும் அடைந்து, உடலிலுள்ள சூட்சும புலன்களை வியாபிக்கிறது. இதனால் ஸ்தூல புலன்கள் சக்தியடைந்து செயல்பட ஆரம்பிக்கிறது. புலன்களின் வழியே சிதாபாஸள் வெளியுலகப் பொருட்களை வியாபித்து ஜடத்தன்மையை நீக்குகிறது. இதிலிருந்து உலகத்திலுள்ள பொருட்களுக்கு மூன்று அடுக்கு தடைகளாக மனம், உடல், ஜடத்தன்மை இருக்கிறது. ஆனால் இந்த மூன்றுவகையான அனாத்மாக்களுக்குமிடையே பொதுவாக உள்ளது பிரமேயம் என்ற தன்மைதான்.
 
மூன்று அடுக்கு தடைகளை உடைய பிரமேயத்தை பிரமேய அனாத்மா என்றும், இரண்டு அடுக்கு தடைகளை உடைய பிரமேயத்தை பிரமான அனாத்மா என்றும், ஒரு அடுக்கு தடையை உடைய பிரமேயத்தை பிரமாத்ரு அனாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. பிரமேயம், பிரமாணம், பிரமாத்ரு ஆகிய மூன்றிற்கும் பொதுவான சிதாபான் தேவைப்படுகிறது.
 
சிதாபான் மனதை வியாபிக்கவில்லையென்றால் பிரமாதா-தெரிந்தவர் என்ற நிலை மறைந்துவிடும். சிதாபான் உடலை வியாபிக்கவில்லையென்றால் பிரமாணங்களான, ஞானேந்திரியங்கள் செயல்படாது. அதேமாதிரி வெளியுலகத்தை வியாபிக்கவில்லை என்றால் பிரமாதாவும் நிலையும் சென்றுவிடும். அதனால்தான்; ஆழ்ந்த உறக்கத்தில் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் ஆகியவைகள் இல்லாமல் போய்விடுகிறது.
 
ஆத்மா பிரமேயம் என்ற வகையை சாராது ஏனென்றால் அதற்கு சிதாபானின் உதவி தேவைப்படாது என்று ஆசாரியார் சுட்டிக் காட்டுகிறார். எனவே உணர்வு மயமான ஆத்மா அபிரமேயமாகும். ஆத்மா எந்தவொரு அனுபவத்தாலும் அறிந்து கொள்ள முடியாது. பின்பு ஆத்மாவின் இருப்பை நிரூபிக்கமுடியும். ஆத்மா எந்தவொரு அனுபவத்தைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாததாக இருந்தாலும் அது எப்போதும் எல்லா குறிப்பிட்ட அனுபவங்களின் மூலமாக வெளிப்படுகிறது. ஏனென்றால் எல்லா அனுபவங்களுக்கும் உணர்வு என்ற தன்மை மூலமாகத்தான் அனுபவிக்கப்படுகிறது.
 
ஒரு பொருளைப் பற்றிய அறிவை அடைவதற்கு அந்தப் பொருளும், கண்களும் மட்டும் போதாது. அதைக் காட்டக்கூடிய வெளிச்சமும் தேவை. பார்க்கப்படும் எல்லா பொருட்களிலும் வெளிச்சம் பரவியிருக்கிறது. ஒரு மனிதனைப் பார்க்கும்போது அவனருகில் உள்ள பொருட்கள் பார்க்கப்படாமலிருக்கலாம். அந்தப் பொருட்களைப் பார்க்கும்போது அந்த மனிதனைப் பார்க்காமலிருக்கலாம். அதற்கு மாறாக வெளிச்சம் எல்லா பொருட்களையும் ஒரே நேரத்தில் காட்டிக்கொடுக்கும். ஆனால் நாம் பொருட்களை கவனிப்பதில் மனதை செலுத்தியிருப்பதால் வெளிச்சத்தை புறக்கணித்துவிடுகிறோம். ஏனெனில் பார்ப்பவனுக்கு வெளிச்சத்தின் அனுபவம் தேவை கிடையாது. இந்த உதாரணத்தை போல ஆத்மா ஒரு குறிப்பிட்ட சம்பவத்திலோ, அனுபவத்திலோ வெளிப்படுவதில்லை. ஆனால் எல்லா அனுபவங்களிலும் வியாபித்து இருக்கிறது.  ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் எது அனுபவித்தாலும் அது பிரமேயம். ஆனால் ஆத்மா அனைத்து பிரமேயத்தின் அனுபவங்களிலும் அதன் மூலமும் உணரப்படுகிறது. பிரமேயங்கள் வேறுபடலாம் ஆனால் ஆத்மா மாறாதிருக்கும்.
 
எனவே ஆசாரியார் ஏன் ஆத்மாவை அனுபவிப்பதற்கு சிரமப்படுகிறாய் என்று கேட்கிறார். சூரிய வெளிச்சமானது தவிர்க்கமுடியாததாக இருப்பது போல ஆத்மாவும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் அது எப்போதும் தன்னைத்தானே பிரகாசித்து கொண்டிருக்கிறது.
 
ஆத்மாவை வாக்கால், மனதால் விளக்கமுடியாது என் உபநிஷத் வாக்கியத்தை படித்து விட்டு சில சாதகர்கள் தவறு செய்கிறார்கள். அதனால் ஆத்மாவை அடைவதற்கு மனதையும், புலன்களையும் நீக்கிவிட வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆத்மாவை நிர்விகல்ப சமாதி மூலம் அடைந்து விடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆத்மாவை எந்தவித முயற்சியும் இல்லாமல் உணர்வதற்கு எந்த தடைகளில்லாமல் இருக்கும் போது எதற்காக அதை அனுபவிப்பதற்கு செயலில் ஈடுபடவேண்டும்.
 
ஆத்ம அனுபவம் இல்லாதது பிரச்சனை இல்லை. அதன்மீது அனாத்மா குணங்களை ஏற்றி வைக்கிறோம். ஸ்தூல உடலின் பண்புகளை தவறாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம். சாதகர்கள் என்னிடத்தில் சாதன-சதுஷ்டய-சம்பத்தி இல்லையே, எவ்வாறு எப்படி நான் முக்தன் என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று குறைக் கூறிக்கொள்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் மனதின் குணங்களையும் ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கிறார்கள். இந்த சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற ஞானயோக தகுதிகள் யாவும் அனாத்மாவை சார்ந்தது. ஆனால் இவைகளை ஆத்மாவின் பண்புகளாக தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இதுவே ஆத்ம-அனாத்மா வடிவ அறிவை அடைவதற்கு தடையாக இருக்கிறது.
 
இந்த உலகம் அக்ஞான ஸ்வரூபமானது என்று எப்படி சொல்ல முடியும்?
வெறும் அறியாமையின் விளைவால்தான் முழுபிரபஞ்சமும் தோன்றுகிறது. எனவே அறியாமை காரணமாக இருக்கிறது; பிரபஞ்சம் காரியமாக இருப்பதால் அது ஜடம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அது உணர்வபூர்வமாக இயங்குவதற்கு ஆத்மாவின் சேதனம் தேவைப்படுகிறது.
 
உலகம் அறியாமையினால் தோன்றியது என்று ஏன் சொல்கிறீர்கள்? அப்படி தோன்றி இருந்தால் அதுவும் ஆத்மாவைப் போல் சத்மானதாக இருக்கும். எனவே அதை சத்யம் என்று ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது?
 
இந்த உலகம் அறியாமையினால் தோன்றியது என்று சொல்லும் போது அறியாமை என்பது மனதின் நிலைமையை குறிக்கின்ற அம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். பலர் புரிந்து கொள்ளாமல் உலகம் மனதின் காரியம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கயிறு-பாம்பு உதாரணம் மேலும் இந்த குழப்பத்தை அதிகரிக்கிறது.. கயிற்றில் தோன்றும் பாம்பு மனதால் தோற்றிவிக்கப்படுகிறது. ஆனால் வேதாந்தம் சொல்வது அனாத்மா அறியாமையின் விளைவாகும். மனமும் அறியாமையின் விளைவாகும். இந்த முழுபிரபஞ்சம் மனம் உட்பட அறியாமையின் விளைவாகும். இதையே மூலாவித்யா என்று அழைக்கப்படுகிறது. அறியாமை மனம் உட்பட உள்ள உலகத்தை தோற்றுவிக்கிறது. எனவே இதை மூலாவித்யா என்று அழைக்கப்படுகிறது. உலகமும் மனமும் மூலாவித்யாவின் காரியங்களாக இருப்பதால் அவைகள் பொய்யானவை, அக்ஞானத்தின் காரியங்களாகும். இதுவொரு ஆழமான கருத்து, ஆகவே சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வேதாந்தம் உலகத்தையும், மனதையும் நிராகரிக்கிறது.
 
மேற்கூறிய விளக்கத்திலிருந்து முதல் உண்மையான அனாத்மா அக்ஞான காரியம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த உண்மையான அனாத்மா ஜடம் என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. பிரம்மம் இயல்பாகவே உணர்வு ஸ்வரூபமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கிறது. அதிலிருந்து வேறுபட்ட அக்ஞானம் உணர்வற்ற ஜடமாகத்தான் இருக்கவேண்டும்.
 
ஆசாரியார் கூறுகியார், எல்லா எண்ணங்களும், அனுபவங்களும், எண்ணங்களின் பொருட்களும், அனுபவங்களின் விஷயங்களும் அனாத்மாவாகும். விழிப்பு நிலையில் வெளியேயுள்ள உலகத்தையும், உள்ளேயுள்ள எண்ணங்களையும் அனுபவிக்கிறான். எண்ணங்களோடு தொடர்பில்லாத உலகத்தை யாராலும் அனுபவிக்க முடியாது.. அதேபோல உலகத்தோடு தொடர்பில்லாமல் எண்ணங்கள் தோன்றாது. இவ்வாறு பிரமாதா, பிரமாணம், பிரமேயம் என்று திரிபுடியானது எண்ணங்கள்,பொருட்கள் என்று இரண்டாக குறைக்கப்படுகிறது. இவையிரண்டும் அனாத்மாவாகும். இவைகளுக்கும் சிதாபாஸன் மூலமாக உணர்வை கொடுப்பது ஆத்மாவாகும்.
 
உணர்வும், எண்ணங்களையும் பௌதீக ரிதியாக பிரிக்க முடியாது. அறிவின் மூலமாக அவைகளை கீழ்கண்ட ஐந்து அம்சங்ளைக் கொண்டு பிரித்தறிந்து கொள்ள முடியும். அவைகள்
  1. உணர்வு எண்ணத்தின் ஒரு பகுதியோ, காரியமோ அல்ல.
  2. உணர்வு எல்லா எண்ணங்களிலும் வியாபித்திருந்தாலும், ஒவ்வொரு எண்ணங்களிலிருந்தும் வேறுபட்டது.
  3. எண்ணங்களினால் வரையறுக்கப்படாதது
  4.  எண்ணங்கள் மறைந்தாலும் அது தொடர்ந்திருக்கும்
  5. ஆத்மாவுடன் தொடர்ந்திருக்கும்.
அனாத்மாவின் தர்மங்களான உணர்ச்சி வசப்படுதல், ஸ்தூலமாக இருத்தல், ஆண், பெண் போன்றவைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டு நான் இவ்வாறு இருக்கிறேன் என்று கூறுகிறோம்.  இவ்வாறு அனாத்மாவிற்கு சத்யத்வத்தை கொடுத்து விடுவதால் அதுவே பயத்திற்கு காரணமாக விடுகிறது. பதட்டத்தின் ஒவ்வொரு கணமும் பயமற்ற அனாத்மாவானது பயத்துக்கு காரணமான அனாத்மாவாக வெளிப்படுகிறது. உலகத்தின் உண்மைத்தன்மை மறந்து விடும்போது அதுவே வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் மாறுகிறது.. உலகத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு வாழும்போது அதுவே பொழுதுபோக்காக இருக்கிறது.
 
வானத்தில் வேகமாக நகர்கின்ற மேகங்கள் நிலவு வேகமாக நகர்வது போன்ற பிரமையை ஏற்படுத்துவது போல அனாத்மாவில் அனுபவிக்கின்ற இன்பங்கள் யாவும் அனாத்மாவை சார்ந்ததாகும். உண்மையில் ஆனந்தமானது ஆத்மாவின் இயல்பாகும். சத்துவ குணத்தினால் அனுபவிக்கின்ற இன்பங்கள் கூட அனாத்மாவை சார்ந்தது.
 
ஆத்மா தவறாக அனாத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதனுடைய இருப்பும், சத்யத்வமும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அனாத்மா மற்றும் அதன் பண்புகளை வேறுபாடுகளற்றதாக, உண்மையானதாக பார்க்க முனைகிறார். இப்படி சொல்லும் போது அப்படி பார்ப்பது ஆத்மாவா? அனாத்மாவா என்ற கேள்வி எழுகிறது.  ஆத்மா அகர்த்தா, அபோக்தா என்பதை நினைவுக்கு கொண்டு வரவேண்டும். இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை, மேலும் எப்போதும் தவறெதுவும் செய்ய முடியாது. அனாத்மாவும் ஜடமாக இருப்பதால் அதனாலும் தவறெதுவும் செய்ய முடியாது.
 
பொதுவாக ஒருவர் ஜீவனை அல்லது தன்னை குறிக்கும்போதெல்லாம் ஆத்மா, அனாத்மா கலவையைத்தான் குறிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நான் என்ற சொல்லின் பொருள் ஆத்மா-அனாத்மா-கலவையாகும். இந்த நான் என்ற சொல்லில் உயர்ந்த சத்யத்வ அம்சமும், கீழான சத்யத்வ அம்சமும் சேர்ந்திருக்கிறது. எல்லா செயல்களும் இந்த கலவையாக இருக்கின்ற நான் என்று குறிப்பிடப்படுகின்ற என்னால்தான் செய்யப்படுகிது. ஆத்மா மட்டுமோ அல்லது அனாத்மா மட்டுமோ எந்த செயல்களையும் செய்வதில்லை.
 
குறைந்த உண்மை நிலையற்ற அம்சத்தைக் கொண்ட தன்னை சத்யமென்று தவறாக புரிந்து கொள்கின்ற போக்கைத்தான் சம்சாரம் என்று அழைக்கப்படுகிறது. பின்பு மோட்சம் என்பது என்ன? மோட்சத்தை அடைவதற்கு குறைந்த சத்யத்வம்  கொண்ட அனாத்மாவான தன்னை நீக்க தேவையில்லை. ஒருவன் எது குறைந்த சத்யத்வம் கொண்டது, எது உயர்ந்த சத்யத்வம் கொண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதேசமயம் அனாத்மாவையும் கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உண்மையை புரிந்து கொள்வதற்கு அனாத்மா அகங்காரம்(மனம்) தேவைப்படுகிறது.  அவ்வாறு மனதை பயன்படுத்தும்போது அதனுடைய இயல்பான குறைந்த சத்யத்வத்தை கொண்டது என்று புரிதலுடன் இருக்க வேண்டும். இந்த தெளிவான அறிவே மோட்சத்தை அடைவதற்கு தேவை. இதைத் தவிர்த்து சமாதியோ, அமானுஷ்ய அனுபவங்களோ அல்ல. இந்த அனாத்மா-நான், ஜகத் இவைகள் உயர்ந்த-நான் என்று அழைக்கப்படும் சைதன்யத்துடன் தொடர்ந்து இருக்கட்டும். அவைகள் மித்யா என்று அறிவுடன் இருந்துவிட்டால் அவைகளே முக்தனாக வாழும்போது பொழுதுபோக்கு அம்சங்களாக மாறிவிடும்.
 
வேதாந்தத்தின் தனித்துவமான அணுகுமுறை என்னவென்றால், மக்கள் உறவுகளை பாதுகாப்பு என்று பார்க்க முனைந்தாலும், உண்மையில் அவர்களால் பாதுகாப்போ, பயமற்ற நிலையோ கிடையாது. ஏனென்றால் அந்த உறவுகளை இழக்கும் போது நிரந்தரமான கவலைகளை ஏற்படுத்துகிறது. வேதாந்தம் உறவுகளை த்வைதமாக பார்க்கிறது. த்வைதமே பயத்திற்கு காரணமாகிறது. அத்வைதமே பயமற்ற நிலையை கொடுக்கக்கூடியது என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் மக்கள அத்வைதத்தை கண்டு பயப்படுகிறார்கள். ஏனெனில் அது தனிமையைக் கொடுப்பதால், இரண்டாவதாக வேறான்று இல்லாத நிலையை கண்டு பயப்படுகிறார்கள்.
 
மூலாவித்யா என்பது மனதின் நிலையல்ல; மனதை உருவாக்குவது. அனுபவிப்பவன், அனுபவங்கள், அனுபவிக்கப்படும் கருவி இவை மூன்றிலிருந்தும் நான் வேறுபட்டவன். நான் வெறும் சாட்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறேன். மூன்று அவஸ்தைகளிலும் உள்ள அனுபவிப்பவன், அனுபவங்கள், அனுபவிக்கப்படும் கருவிகள் ஆகியவைகள் அவித்யாவை சார்ந்திருக்கின்றன. அவித்யா ஆத்மாவைச் சார்ந்திருக்கிறது. ஏனென்றால் மூலாவித்யாவிற்கென்று தனி இருப்பும், அறிவும் கிடையாது. அவைகள் ஆத்மாவிடமிருந்த பெறப்பட்டு திரிபுடிகளை உருவாக்குகிறது. மூலாவித்யாவின் இந்த சக்திக்கு விக்ஷேப சக்தி என்று அழைக்கப்படுகிறது.
 
இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மூலாவித்யா இருப்பது ஒரு வரமாகும். இதனுடைய சக்தியால் உருவாக்கப்படுகின் திரிபுடிகளால் ஜாக்ரத், கனவு நாடகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனுதவியால்தான் நான் பிரம்மன் என்று கூறமுடிகிறது.
 
இந்த மூலாவித்யாவினிடத்தில் ஆவரண சக்தியும் இருக்கிறது. அதுவும் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. இது இருப்பதனால் திரிபுடி ஒவ்வொன்றின் கீழான சத்யத்வத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. இந்த ஆவரண சக்தியை நீக்கிவிட வேண்டும். அதன்பிறகு மூலாவித்யா தொடர்ந்து இருக்க அனுமதிக்கலாம். திரிபுடிகளும், உலகமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கலாம். இந்த திரிபுடி அவித்யாவில் அடித்தளமாக இருக்கிறது, ஆத்மாவில் தங்கியிருக்கவில்லை.
 
மூலாவித்யா அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று சொல்லும் போது முழு மூலாவித்யாவையும் குறைச் சொல்ல தேவையில்லை. அதிலுள்ள ஆவரண சக்தியை மட்டும்தான் பிரச்சினையை கொடுக்கிறது. எனவே வேதாந்த உபதேசத்தைக் கொண்டு அந்த சக்தியை  அழித்துவிட வேண்டும். விக்ஷேப சக்தியை அழிக்க தேவையில்லை. அது பொய்யென்ற அறிவை மட்டும் அடைந்திட்டாலே போதுமானது. விக்ஷேப சக்தி மாயை என்று அழைக்கப்படுகிறது.
 
மேற்கூறிய அறிவை அடைந்தவுடன் சாதகன் ஜீவ-ஈஸ்வர-ஜகத் என்ற திரிபுடியிலிருந்து ஆத்மா-அனாத்மா என்ற இரட்டைக்கு வந்துவிடுவான். இந்த அறிவை அடையாத வரையில் அவன் திரிபுடியிலே இருந்து கொண்டிருப்பான். இந்த நிலையில் உலகம் அவனுக்கு துயரத்தை கொடுத்து கொணடிருப்பதைப் போல உணர்வான். ஞானயோக சாதகன் இந்த உலகத்துக்கு சைதன்யத்துக்கு நிகரான சத்யத்வத்தை கொடுக்கக்கூடாது.
 
நம்முடைய பிராரப்த கர்மப்படி என்ன நடக்கிறதோ அதை அப்படியே நடக்க விட்டுவிட வேண்டும். ஆனால் அதனால் வருகின்ற இன்ப-துன்பங்கள் அனைத்தும் மித்யா என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவைகளை எதிர்கொள்ள வேண்டும்.

பிராரப்தமும் மித்யா, மூலாவித்யாவும் மித்யா என்ற அறிவுடன் இருக்க வேண்டும். இந்த அறிவை அடைவதற்கு மூலாவித்யாவிலுள்ள ஆவரண சக்தியை நீக்க வேண்டும். இந்த அறிவை அடைவதற்கு நான் உயர்நிலை சத்யமான ஆத்மா என்றும், வந்துபோகின்ற நிலையற்ற விஷயங்கள் என்னைத் தொடுவதில்லை என்கின்ற உறுதியான நம்பிக்க இருக்க வேண்டும். நான்தான் ஆத்மா என்ற அபரோக்ஷ ஞானத்தை அடைந்தவுடன் இந்த ஆவரண சக்தி சென்றுவிடும்.
 
இந்த அகில உலகமும் மித்யாவானால், வேதாந்தமும், அதை உபதேசிக்கும் குருவும் சத்யமா அல்லது மித்யாவா என்று கேள்வியெழுகிறது. ஆத்மாவை  தவிர மற்ற அனைத்தும் அனாத்மாவென்று சொல்லும்போது வேதாந்த பிரமாணமும், குருவும் மித்யாதான். இப்போது மித்ய பிரமாணம் எப்படி சத்ய ஆத்மாவை காட்டிக் கொடுக்கின்றது என்ற சந்தேகம் மனதில் எழுகிறது. இந்த சந்தேகத்தை ஆசாரியார் தீர்த்து வைக்கிறார்.
 
பயங்கரமான கனவு கண்டு கொண்டிருப்பவனை அதே பயங்கரமான கனவு எழுப்பி விட்டுவிடும். விழித்தெழுந்தவனுக்கு தான் கனவுதான் கண்டோம் என்று நன்கு தெரியும். மேலும் அது பொய்யானதுதான் என்றும் தெரியும்,  ஆனால் விழித்தவன் உண்மையானவன். இதிலிருந்து நாம் பொய்யான கனவுக்கு ஒருவனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடக்கூடிய சக்தியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல மித்யா சாஸ்திரம் ஒரு பிரமாதாவை எழுப்பலாம் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தலாம் என்பது தெரிகிறது. ஒருவனுடைய தூக்கம் மித்யா கெட்ட கனவினால் துறப்பது போல சாதகனுடைய அறியாமை மித்யா சாஸ்திரம் மூலம் நீங்குகிறது என்று ஆசாரியார் கூறுகிறார்.
 
முதலில் கெட்ட கனவினால் விழித்தெழுந்தவன் கனவுலகம் சென்றுவிட்டது என்று சொல்வான். பிறகு கனவுலகம் என்றவொன்றே கிடையாது, இருந்தால்தானே அது சென்றுவிட்டது என்று சொல்லமுடியும் என்று சொல்வான். அதேபோல ஞானி முதலில் நான் விடுதலை அடைந்து விட்டேன் அதனால் சம்சாரம் என்னை விட்டுசென்று விட்டது என்பான். பிறகு சம்சாரம் என்றவொன்று இருந்தால்தானே நான் அதிலிருந்து விடுதலையடைவதற்கு என்று சொல்வான்.
 
மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் பார்த்து அது மேகங்களால் மறைக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறோம். காற்றடித்து மேகங்கள் கலைந்து சென்றுவிடும்போது சூரியனை பார்க்கும்போது சூரியனை மறைத்திருந்த மேகங்கள் சென்றுவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் சூரியன் அந்த மேகக்கூட்டங்கனைவிட பலமடங்கு பெரியது என்று தெரிந்தாலும் மறைத்தலை அதன் மீது ஏற்றிவைத்து சொல்கிறாம். உண்மையில் இந்த மறைத்தல் பார்ப்பவனுடைய கண்களை சார்ந்தது. ஆனால் அதை சூரியனிடத்தில் ஏற்றி வைக்கிறோம். அதேமுறையில் மறைவு நீங்குதலும் பார்ப்பவனுடைய கண்களைச் சார்ந்தது அதை சூரியனிடத்தில் ஏற்றி வைக்கிறோம்.
 
வேதாந்த மாணவனுக்கு தான் நீண்ட காலமாக வேதாந்தத்தை உபதேசமாக பெற்றாலும் இன்னும் அபாரோக்ஷ ஞானத்தை அடையவில்லையே, சம்சாரத்தில் இருந்து விடுதலையடையவில்லையே என்ற வருத்தம் இருந்து கொண்டேயிருக்கும். தற்கால வேதாந்த மாணவர்களில் சிலர் சொல்வது, நான் வேதாந்த சிரவணத்தின் போது நன்கு புரிந்து கொண்டேன். ஆனாலும் இரட்டை வடிவ தத்துவத்தை செயலுக்கு கொண்டுவர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள். மேலும் சிலர் தங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது ஆனால் சம்சார விடுதலையை தள்ளிப்போடும் நோக்கத்துடன் செயல்படுவார்கள்.
 
காரகம் எங்கேயிருக்கிறதோ அங்கே செயல்கள் இருக்கும். காரகம் சென்றுவிட்டால் செயலும் சென்றுவிடும். முன்பு ஒரு விவிதிஷ சந்நியாசியாக இருந்தார். இப்போது வித்வத் சந்நியாசியாகி விட்டார். விவிதிஷ சந்நியாசியாக இருக்கும்போது வெளியே உள்ள குடும்பத்தை விட்டுவிட்டார். வித்வத் சந்நியாசியாக இருக்கும்போது உள்ளே இருக்கின்ற குடும்பத்தையும் விட்டுவிடுகிறார்.

தொகுப்புரை
இந்த கீழ்கண்ட தொகுப்புரையானது நூலிலுள்ள ஸ்லோகங்களின் வரிசைப்படியோ அல்லது கருத்துக்களின் வரிசைப்படியோ கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் ஐந்து தலைப்புக்களின் தொகுப்பை மட்டும் கூறுகிறது. அவைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
(1)  ஆத்ம-அனாத்ம விவேகம்
(2)  அனாத்மாவின் மித்யத்வ விவேகம்
(3)  அக்ஞானமே சம்சாரத்திற்கு காரணம்
(4)  ஆத்மஞானமே மோட்சத்திற்கு காரணம்
(5) 
வேதாந்த மகாவாக்கியமே ஆத்மஞானத்தை கொடுக்கும்.
 
1. ஆத்ம-அனாத்ம விவேகம்:
உடல்-மனம் தொகுப்பு அல்லது ஸ்தூல சரீரம் அனாத்மாவான வெளியேயுள்ள பிரபஞ்சத்திள்ளே அடங்குகிறது. இந்த கருத்தை உடலுக்கும் உலகத்துக்கும் இடையேயுள்ள ஒற்றுமையையும், மனதுக்கும் உலகத்துக்கும் இடையேயுள்ள ஒற்றமையையும் எடுத்துக் காட்டி நிலைநாட்டுகிறார். இந்த  உலகத்துக்கும் உடலுக்கும் இடையே உள்ள பொதுவான ஐந்து ஒற்றுமையை சுட்டிக்காட்டுகிறார்.
  1. த்ருஷ்யத்வம் - அனுபவிக்கப்படும் பொருளாக இருப்பது. உடலும், உலகமும் அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கிறது.
  2. பௌதிகத்வம் - உடலும், உலகமும் பஞ்சபூதத்தினாலனவைகள்.
  3. சகுணத்வம் - உடலும், உள்ளமும் பண்புக்கூறுகளைக் கொண்டவைகள். உடலுக்கு ஐந்துவகையான குணங்கள் உண்டு. அவைகள் சப்தம், ஸ்பரிஸம், ரூபம், சுவை மற்றும் மணம் ஆகும். உலகத்திற்கு இதே மாதிரியான ஐந்து குணங்களுண்டு.
  4. சவிகாரத்வம் - உடலும், உலகமும் மாற்றத்திற்குட்பட்டவைகளாகும்.
  5. ஆகமாபாயித்வம் - ஜாக்ரத் அவஸ்தை உலகம் வந்து, உறங்கும் போது போகக்கூடியது. அதேபோல கனவு அவஸ்தை உலகமும் வந்து, ஜாக்ரத் அவஸ்தையின் போது போகக்கூடியது. அதுபோல ஸ்தூல உடலும் ஜாக்ரத் அவஸ்தையில் வந்து கனவு அவஸ்தையின்போது சென்று விடும். கனவு காண்பவனுக்கு ஜாக்ரத் அவஸ்தை உடல் இருக்காது.
மேற்கூறிய ஒற்றுமையிலிருந்து உடலும் அனாத்மா என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இதேமுறையை மனதிற்கும் பொருத்திப் பார்த்து மனமும் அனாத்மா என்று அறிந்து கொள்ளலாம். மனமும் அறியப்படும் பொருளாக இருக்கிறது. நாம் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் மிக,மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் மனதைச் சார்ந்தவைகளாகும். மற்றவர்களால் இந்த உணர்ச்சிகளை கவனிக்கவும் முடியாது, தெரிந்து கொள்ளவும் முடியாது. மனதில் உணர்ச்சிகளால் இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறோம். இதையே த்ருஷ்யத்வம் என்ற உலகத்தின் த்ருஷ்யத்வமும் ஒன்றாக இருப்பதை பார்க்கலாம்.
 
இரண்டாவது அம்சமான பௌதிகத்வம் என்பது மனமும் ஐந்து சூட்சும பூதங்களால் உருவானது என்பதிலிருந்து நிலைநாட்டப்படுகிறது. மூன்றாவது அம்சமான சகுணத்வம் என்பது மனதிற்கும் ஆனந்தம். வருத்தம், சஞ்சலம் போன்ற குணங்கள் உண்டு என்பதன் மூலமும், நான்காவது அம்சமான சவிகாரம் என்பது மனநிலையானது மாற்றங்களை உடையாது என்பதன் மூலமும், ஐந்தாவது அம்சமான வந்து-போவது என்பது ஜாக்ரத், கனவு நிலையில் இருக்கின்ற மனமானது ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாமல் போகிறது என்பதன் மூலமும் நிலை நாட்டப்படுகிறது. இந்த பொதுவான அம்சங்களை உலகத்தோடு ஒப்பிட்டு ஆசாரியார் மனமும் அனாத்மா என்று விளக்கத்தை முடிக்கிறார்.
 
அகங்காரம் மேற்கூறிய ஐந்து அம்சங்களை கொண்டதால் அதுவும் அனாத்மா என்று ஆசாரியார் கூறுகிறார். ஆத்மா என்பது எது என்ற கேள்வி எழுகிறது. அனாத்மா இயல்பாகவே வெறும் ஜடம். மனமும், உடலும் ஜடம். ஆனால் நமது அனுபவத்தில் இவைகள் உணர்வுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜடமான இவைகள் எங்கிருந்தோ உணர்வுடன் இயங்கும் சக்தியை பெற்றிருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த சக்தியை கொடுத்திருக்கின்ற சக்தியை உடையதை ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா இயல்பாகவே அறிவு சக்தியுடனும், உணர்வு சக்தியுடனும் இருக்கிறது. ஆதலால் ஆத்மா அனாத்மாவிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. அதனால் அனாத்மாவின் குணங்களுக்கு எதிரான குணங்களை இயல்பாக கொண்டது. ஆத்மா பார்க்கக்கூடியதல்லாததாகவும், உருவமற்றதாகவும், நிர்குணமானதும், மாற்றத்தையடையாததாகவும், நிலையானதாகவும் இருக்கிறது.
 
2. அனாத்ம மித்யாத்வம்
வேதாந்தத்தின் முதல் கருத்து ஆத்மாவும், அனாத்மாவும் வெவ்வேறானது என்பதாகும். இரண்டாவது கருத்து அஹம் சத்யம் ஜகத் மித்யா என்பதாகும்.
இந்த கருத்தை விளக்குவதற்கு ஆசாரியார் மூன்று வாதங்களை அளிக்கிறார்.
 
முதல் வாதம்
அனைத்து பிரபஞ்சமும் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது. இதை எப்படி நிரூபிக்க முடியுமென்றால், ஆழ்ந்த உறக்கத்தில் இந்த திரிபுடிகள் இல்லாததால் அனாத்மாவானது ஒடுங்கிய நிலையில் இருக்கிறது. அதனால் இந்த அவஸ்தையை நிர்விகல்ப ரூபம் என்று அழைக்கப்படுகிறது. அனாத்மா பார்ப்பவன், பார்க்க உதவும் கருவி, பார்க்கப்படும் பொருள் என்று திரிபுடி வடிவமாக இருக்கிறது. இவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. உதாரணமாக உருவமும், நிறமும் கண்கள் இல்லாமல் நிரூபிக்க முடியாது. அதேமாதிரி பார்க்கும் சக்தியை நீரூபிக்க இவைகள் தேவை. அடர்ந்த இருட்டில் எதையும் பார்க்க முடியாததால், நம் கண்கள் சக்தியுடன் இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம். பார்ப்பவனின் இருத்தலையும் பிரமாணம், பிரமேயம் இல்லாமல் நிரூபிக்க முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் உலகமானது ஓடுங்கிவிடுவதால் பார்க்கப்படும் பொருள் இல்லாததால் பார்ப்பவன் இருத்தலை நிரூபிக்க முடியாது.
 
திரிபுடிக்கு தனக்கென்று சொந்த இருத்தல் இல்லையென்பதால் அவைகளின் இருத்தலுக்கு ஆத்மாவைத்;தான் சார்ந்திருக்க வேண்டும். எல்லா விவகாரங்களும் திரிபுடியை சார்ந்துதான் நடைபெறுகிறது. ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை. ஆனால் அதன் உதவியால்தான் எல்லா செயல்களும் செய்யப்படுகின்றன. இந்த அம்சத்தில் ஆகாசமும் எந்த செயல்களும் செய்வதில்லை ஆனால் அதனிடத்தில் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. அதேபோல ஒளியின் உதவியால் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன, ஆனால் அது எந்த செயலும் செய்வதில்லை. இதேபோல ஆத்மாவின் உதவியால்தான் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. ஆனால் ஆத்மா எதுவும்; செய்வதில்லை. இந்த கருத்தானது வேதாந்தத்தில் ஆத்மா எதனோடும் ஒட்டாதது, செயலெதுவும் செய்யாதது  என்பதை எடுத்துக் காட்டுகிறது.
 
இவ்வாறு முதல் விவாதத்தில் அனாத்மாவின் மித்யாத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டாவது வாதம்
அனாத்மா சைதன்யத்தைப் போல் இல்லாதது, சைதன்யத்துக்கும் வேறானதாக இல்லாதது.
 
அனாத்மா முற்றிலும் மாறுபட்ட தன்மை உடையது, பார்க்கப்படுவது, குணங்களை உடையது, மாற்றமடையக்கூடியது, வந்து-போகக்கூடியது. ஆகவே சைதன்யத்துக்கு நிகராக அனாத்மாவை கூறமுடியாது.  ஆதிசங்கரர் தனது பிரம்மசூத்திர அத்யாஸ பாஷ்யத்தில் ஆத்மாவை விளக்கும் போது ஆத்மாவும், அனாத்மாவும் இருளும்-ஒளியும் போல வெவ்வேறானது என்று கூறியிருக்கிறார்.
 
எந்த வஸ்துவும் உணர்வில்லாமல் தனியே இருக்கமுடியாது. ஏனெனில் வஸ்துவை உணர்விலிருந்து தனியே பிரித்துவிட்டால் அதன் இருப்பை நிரூபிக்க முடியாது. அது ஜடமாக இருப்பதால் வஸ்து என்று கூறமுடியாது, ஆதலால் அதன் இருப்பது போல் தோன்றுகின்ற இருத்தலையே ஆத்மாவால்தான் வழங்கப்படுகிறது.
 
மூன்றாவது வாதம்
உண்மையிலே அனாத்மாவுக்கு சொந்தமான இருத்தல் தன்மை இருந்தால் வேதாந்தம் அதை நீக்கியிருக்காது. உபநிஷத் இருமைகள் இல்லையென்று கூறுகிறது. ஆகாசம், வாயு, நீர், நிலம், நெருப்பு, உடல். மனம், பாவ-புண்ணியம் போன்றவைகள் இல்லையென்று கூறுகிறது. மேலும் இந்த உலகம் பிறக்கவேயில்லை என்கிறது. தோன்றியிருப்பதைபோல் தெரிகிறது என்று சொல்லும்போது உலகமும் நீக்கப்படுகிறது. இதிலிருந்து உலகமே மித்யாவென்ற கருத்து உறுதியாகிறது.
 
எது இருக்கிறதோ அதை இல்லையென்று சொல்லமுடியாது. எது உண்மையிலே இல்லையோ அதை இல்லையென்று சொல்லத் தேவையில்லை. எது இருப்பது போல் தோன்றுகிறதோ அதைத்தான் இல்லையென்று நீக்கமுடியும்.
 
எனவே ஆசாரியார் மேற்கூறிய மூன்று வாத்தின்படி அனாத்மா மித்யாவென்று நிலை நாட்டியுள்ளார்.
 
3. அக்ஞானமே சம்சாரத்திற்கு காரணம்
நான் உயர்நிலை சத்யம் என்றும் உடல், மனம், எண்ணங்கள் போன்றவைகளை  அனுபவித்தாலும் அவைகள் யாவும் குறைவான சத்யத்வத்தை உடையது. இவைகள் யாவையும் என் பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்துகிறேன். அவைகளின் விவகாரங்களில் நான் பங்கேற்கமாட்டேன். ஆதலால் அவைகளால் பாதிக்கப்படமாட்டேன். இந்த உண்மையை அறியாதவன் சம்சாரத்தில் விழுந்து எல்லா துயரங்களையும் அனுபவிக்கின்றான்.
 
வாழ்க்கையில் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அவைகளால் நான் பாதிக்கப்படமாட்டேன் என்றக் கருத்தை நினைவு கூறவேண்டும். ஏனென்றால் நான் எதனோடும் ஒட்டாதவன், எந்த விஷயத்திலும் பங்கேற்காதவன், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறேன். இந்த உண்மையை ஒருவர் விடாமுயற்சியுடன் நினைவில் நிறுத்தி வைத்திருந்தால் அவருக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் வராது. இதை மறந்துவிட்டு அனாத்மாவை உண்மையென்று நம்பினால் அதனால் வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியாது, துயரத்தைத்தான் அனுபவிக்க வேண்டும்.
 
இது கனவில் நடக்கின்ற பொதுவான நிகழ்வுக்கு ஒத்திருக்கிறது. ஒருவர்; கனவில் ஒரு உலகத்தை தோற்றுவித்து அதில் நுழைகிறார். அது உண்மையானது என்று நினைக்கிறார். அதனால் கனவானது நம்மை தொந்தரவு செய்யும் சக்தியை பெறுகிறது. கனவில் மட்டுமல்ல விழித்த பின்னரும் சிறிது நேரத்திற்கு அதன் பாதிப்பு இருக்கும். சில நேரங்களில் கனவினால் மனதில் ஏற்பட்ட பயத்தினால் படபடப்பு, வியர்வை போன்ற உடல் அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறோம்.
 
நாமே கனவை உருவாக்குகிறோம், அதற்கு இருத்தலையும், சக்தியையும் கொடுக்கிறோம், பிறகு தொந்தரவை அடைகிறோம். ஆசாரியார் கூறுகிறார், நாம் அறியாமையினால் அனாத்மாவிற்கு சத்யத்வத்தை கொடுக்கிறோம். இதையே அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. அத்யாஸத்தின் விளைவே சம்சாரமாகும்.
 
4. ஞானம்தான் மோட்சத்திற்கு காரணம்:
சம்சார நிவிருத்திக்கு உதவுகின்ற நிலையான தீர்வுகள் ஆத்மஞானத்தை அடைதல், அத்யாஸத்திலிருந்து நீங்கியிருத்தல் ஆகியவைகளாகும்.  கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் சம்சாரத்தில் அடைகின்ற துயரத்திற்கு தற்காலிக தீர்வைத்தான் கொடுக்கும். அத்யாஸம் நீங்கிவிட்டால் உலகம் மித்யாவென்ற அறிவை அடைவோம். அதனால் உலகம் மறைந்து விடாது. உலகத்திற்கு சத்யத்வத்தை கொடுத்துவிட்டால், அதற்கு துயரத்தைக் கொடுக்கும் சக்தியைக் கொடுத்துவிடுகிறோம். அக்ஞான நிவிருத்தியானது உலகத்திற்கு தவறாக கொடுத்திருக்கும் சத்யத்வத்தை எடுத்துக்கொள்கிறது. ஜகத் மித்யா என்று அறிவானது சம்சார விடுதலைக்கு நிலையான தீர்வாகும்.
 
5. வேதாந்த மகாவாக்கியமே ஆத்மஞானம் :
ஆசாரியார் குருமுகமாக கேட்கப்பட்ட வேதாந்த மகாவாக்கிய பிரமாணத்தால் மட்டுமே ஆத்மஞானத்தை அடைய முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார்,.  ஸ்ருதி பிரமாணத்தை தவிர்த்துள்ள மற்ற பிரமாணங்கள் அனைத்தும் அனாத்ம விஷயங்களை அறிவதற்கு மட்டுமே பயன்படுகிறது.
 
ஆத்மா நாடகத்தில் பங்கேற்காத ஊடகமாகும். ஆத்ம உலகமாக நாம-ரூபங்களுடன் உலகமேடையில் நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகாவாக்கிய விசாரம் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். சரியான முறையில் படிப்பது என்பது சாதகன் த்வம்(ஜீவாத்மா), தத்3(பரமாத்மா) மற்றும் அஸி(ஜீவ-ஈஸ்வர-ஐக்கியம்) இதை சரியாக புரிந்து கொள்வதற்கு அதிக காலம் செலவிட வேண்டும். வேதாந்த உபதேசத்தின் பல பகுதிகள் சரீ-த்ரய-விவேகம், அவஸ்தா-த்ரய-விவேகம், பஞ்சகோச விவேகம், த்ருக்-த்ருஷ்ய-விவேகம் போன்றவைகள் த்வம் பத ஜீவாத்மாவை விளக்குகின்றன.
 
சாதகன் தத்3 பதம் குறிக்கின்ற பரமாத்மாவைப் பற்றிய விரிவான விசாரம் செய்ய வேண்டும். பரமாத்மா நிரந்தரமான கடவுள், நான் அவருடைய நிரந்தர பக்தன் என்ற அளவோடு நின்று விடக்கூடாது. எனவே ஞானயோக சாதகன் அஸி பத விசாரத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த அஸி பதம்தான் நானே பரமாத்மா என்ற அறிவைக் கொடுக்கும்.
 
ஜீவ-ஈஸ்வர ஐக்கிய ஞானத்தைக் கொடுக்கக்கூடிய அஸி பத விசாரம் மிக முக்கியமானது. இந்த விசாரத்தை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும். மகா வாக்கியத்தின் பொருளை வாச்யார்த்தம், லட்சியார்த்தம், லட்சணங்கள் ஆகியவைகளை பயன்படுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.
 
இந்த விசாரத்தின் மூலமாக சாதகன் நான் சத்யம்; ஜகத் மித்யா என்ற அறிவை அடைந்திட வேண்டும். ஜகத் மித்யா என்ற அறிவு மிகமிக முக்கியம். ஜகத் சத்யமாக இருந்துவிட்டால் மோட்சம் என்பதை அடையவே முடியாது. கர்ம பந்தமானது மிகவும் சக்தி வாய்ந்தது. அது எல்லோரையும் திணறடிக்கக்கூடியது. ஜகத் சத்யமாக இருந்துவிட்டால் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கர்மபந்தத்தில் மாட்டிக் கொள்வார்கள்.
 
ஈஸ்வரனுக்கும் சில கடமைகள் உண்டு. அவரே படைப்பவர், காப்பவர். அழிப்பவராக, கர்மபலனைக் கொடுப்பவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் விருப்பத்திற்கு படைக்கும் தொழிலை செய்ய முடியாது. கர்மவிதியின்படிதான் அவர் படைக்க வேண்டும். பகவான் உலகில் துன்பங்ளை நிர்பந்தத்தினால் உருவாக்குகிறார். இந்த துன்பங்களை அனைத்து ஜீவராசிகளுக்கும் கர்மவிதிப்படி பகிர்ந்தளிக்கிறார். பகவானுக்கு துன்பங்களை ஜீவராசிகளுக்கு கொடுக்க வேண்டாம் நினைத்தாலும் அவரால் அவ்வாறு செய்ய முடியாது. பகவான் துன்பங்கள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறார். ஏனென்றால் படைக்கப்பட்ட உலகமும் மித்யா உலகத்தில் படைக்கப்பட்ட துன்பங்களும் மித்யா என்ற அறிவுடன் இருக்கின்றார்.. ஜீவர்களும் இந்த அறிவை அடைந்து சம்சாரத்திலிருந்து விடுதலை அடையலாம், மோட்சத்தை அடையலாம்.
-----oo000oo----

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...