நைஷ்கர்ம்ய சித்தி
அத்தியாயம்-2.2
Edited on 14-08-2024
ஆசாரியார் சாட்சி-த்ருக், அகங்கார-த்ருக் ஆகிய இவையிரண்டிற்குமிடையே உள்ள வேற்றுமையை
கூறுகிறார். இது மிகவும் முக்கியமானது ஏனென்றால் இவையிரண்டும் பௌதீகரீதியாக ஒன்றாக இருக்கிறது. இவையிரண்டையும்
அறிவைக் கொண்டுதான் பிரித்து பார்த்து புரிந்து கொள்ளமுடியும்.
இவையிரண்டிற்குமிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமையை ஆசாரியார்
இங்கே குறிப்பிடுகிறார். அதாவது அகங்காரம் தன்னளவில் மாற்றமடைந்து பார்ப்பவனாக
இருக்கிறது. எனவே இதை சவிகார த்ருக் என்றும் அழைக்கப்படுகிறது. மறுபுறம் சாட்சி
எந்தவொரு செயலும் செய்யாமல், மாற்றத்தையும் அடையாமல் மனதை பிரகாசிக்கிறது. உண்மையில் சாட்சி
பிரகாசிப்பவரும் அல்ல ஆனாலும் அதனுடைய இருப்பால்தான் பிரகாசிப்பவர் என்று கூறப்படுகிறது. எனவே ஆத்மா நிர்விகார-த்ருக் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக
வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் சூரியவொளி பிரகாசிக்கிறது.
அது ஒவ்வொரு மாணவனாக வரிசையாக பிரகாசிக்கவில்லை.
எனவே சூரிய ஒளியை அகர்ம-த்ருக் என்று கூறலாம். ஒருவர் எல்லா மாணவர்களை அறிய
வேண்டுமானால். அவர் ஒவ்வொரு மாணவனாக பார்த்து அறிந்து கொண்டால்தான் அனைத்து
மாணவர்களையும் அறிந்து கொள்ளமுடியும். எனவே மனம் வரிசைகிரமமாகத்தான விஷயங்களை கிரகித்து அறிவை அடைய
முடியும்.
அகங்காரம் என்கின்ற மனம்தான் பலவிதமான அனுபவங்களுக்குட்படுகிறது. ஒவ்வொரு அனுபவமும் எண்ணங்களின் மாற்றம்தான். எண்ணங்களின் ஓட்டம் என்று அழைக்கப்படுவது எண்ணங்களின் வருகையும், புறப்பாடும்தான் தவிர வேறில்லை. சிந்தனையே அனுபவம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆத்மாவின் இருப்பினால்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆத்மாவின் இருப்பினால்தான் மனதில் எண்ணங்கள் வந்து போகின்றன, ஒவ்வொரு எண்ணமும் அனுபவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்ணங்கள் ஆத்மாவின் இருப்பினால் தன்னை காட்டிக் கொள்கிறது. வெளிப்படுகின்ற எண்ணங்களே அனுபவமாகும். இந்த அனுபவங்கள் யாவும் மனதைச் சார்ந்தது. எனவே மனதைக் குறிக்கும் அடைமொழிகளான மகிழ்ச்சி, வருத்தம், வெறுப்பு, பொறாமை போன்ற பண்புகள் மனதை மட்டும்தான் சார்ந்ததாகும். அவைகள் ஆத்மாவைச் சார்ந்ததல்ல, ஆத்மா நிர்குணமானது.
பெரும்பாலான எண்ணங்கள்
வெளியேயுள்ள பொருட்களுடன் ஒத்துப் போகின்றன. உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருட்களிடத்தும்
முழுமையான வடிவம் இருக்கிறது. அதைச் சார்ந்த எண்ணங்களும் உருவமுடையதாக இருக்கிறது.
இந்த உருவ எண்ணங்கள்தான் அனுபவத்தை முடிவு செய்கிறது. சப்தவடிவ எண்ணங்கள் சப்த
அனுபவத்தையும், தொடு உணர்ச்சி வடிவ
எண்ணங்கள் தொடுகின்ற அனுபவத்தையும் கொடுக்கிறது. ஏனென்றால் எல்லா எண்ணங்களும் ஒரே
மாதிரியாக இருந்தால் எல்லா அனுபவங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு
எண்ணமும் தனித்துவம் கொண்டது அதனால் அது இயல்பாகவே வரம்பிற்குட்பட்டதாக
இருக்கிறது.
அனுபவங்கள் குறிப்பிட்ட
இயல்பை உடையது, ஆனால் ஆத்மாவுக்கு
எந்த குறிப்பிட்ட இயல்பும் கிடையாது. எனவே இது நிர்விசேஷ சைதன்யம் என்று
அழைக்கப்படுகிறது. ஆத்மா தன்னைத்தானே பிரகாசிக்கும் தன்மை கொண்டது. மற்றவைகள்
அனைத்தும் வேறொன்றின் உதவியால் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடியும். மனமும்
தன்னைத்தானே வெளிக்காட்டிக் கொள்ள முடியாது. மனம் அமைதியாக இருக்கும்போது
ஆனந்தத்தை அனுபவிக்கின்றது, பாரமாக இருப்பதில்லை. மனம் பாரமாக இருக்கும்போது அது கவலையிலோ, பயத்திலோ இருக்கிறது
என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவன் இந்த மனதை தூங்கியோ, மதுவை குடித்தோ, போதைப்பொருட்களை
உட்கொண்டோ, தற்கொலை செய்து
கொண்டோ அழித்துவிட நினைக்கிறான.
ஆசாரியார் அடுத்து
காலதத்துவ அனுபவத்தை விளக்குகிறார். இந்த காலதத்துவம் படைப்புக்களில் உள்ள அனைத்து
பொருட்களின் பண்பாக இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
இருக்கிறது.
ஓவ்வொரு படைப்பும்
வெளித்தோற்றத்திற்கு வராத முந்தைய காலமும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்காலமும், மறைந்து விடுகின்ற எதிர்காலம் இருக்கிறது. இந்த
காலதத்துவம் மனதிற்கும் இருக்கிறது. இந்த உண்மையை அன்வயவியதிரேக தர்க்கம் மூலம்
நிரூபிக்கலாம். மனம் செயல்படும் போது கால தத்துவமும் செயல்படுகிறது. விழிப்பு
நிலையில் விழிப்புகாலமும், கனவுநிலையில் கனவுகாலமும் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் செயல்படாததால்
கால அனுபவம் மறைந்து விடுகிறது. ஆத்மாவிற்கு
கால தத்துவம் கிடையாது. ஏனென்றால் மூன்று காலங்களிலும் இருந்து கொண்டிருக்கிறது.
ஆத்மா தனியாக இருந்துகொண்டு
காலம், எண்ணங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் ஓட்டங்களை பார்த்துக்
கொண்டிருக்கிறது. ஆத்மாவுக்கு காலத்தோடோ, நிகழ்வுகளோடோ, எண்ணங்களோடோ தொடர்பு
கிடையாது. ஆற்றில் நீர்தான் ஓடிக் கொண்டிருக்கும் அதன் தரைதளம் அசையாமல் அப்படியே
இருக்கும். அதேபோல ஆத்மா அசையாமல் இருக்கிறது. நீர் போல காலமும், எண்ணங்களும், நிகழ்வுகளும்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
மக்கள் மோட்சத்தை
நினைத்தாலே பதற்றமடைகிறார்கள். அதனால் மோட்சத்தை அடைவதில் தீவிரமாக முயற்சி செய்வதில்லை. ஆசாரியார் சுட்டிக் காட்டுவது, நீதான் என்றும்
முக்தனாக இருப்பவன். உன்னுடைய மனம்தான் காலத்தால் பாதிப்புக்குள்ளாகிறது. ஆதலால்
சாதகர்கள் மோட்சத்தை அடையும் முயற்சியில் பதற்றம் அடைய தேவையில்லை. இந்த பதற்றமும்
ஒருவகையான சம்சாரமாக இருக்கிறது.
மனமானது எதையோ
சார்ந்திருக்கிறது என்பது அதனுடைய இரண்டு அம்சங்களைக் கொண்டு அறிந்து
கொள்ளலாம். ஒன்று அது உணர்வற்றது. ஆனால்
அது உணர்வுமயமாக இயங்குவதற்கு ஆத்மாவின் உதவி தேவைப்படுகிறது. இரண்டாவது அதன்
இருப்பிற்கு ஆத்மாவை சார்ந்திருக்கிறது.
நான் என்ற சொல்லில் ஆத்ம தத்துவம் உணரப்படுகிறது. அதேசமயத்தில் மனமும்
உணரப்படுகிறது.
ஆத்மாவின் இருப்பினால்தான்
மனம் தெரியவருகிறது. ஆத்மா தொடர்ந்து பிரகாசிப்பது போல மனமும் தொடர்ந்து
அனுபவிக்கப்படுகிறது. ஆனால் ஆத்மா எந்தவித மாற்றமும் அடையாதது, மனம் மாற்றத்தை
உடையது. ஆத்மா சத்யம், மனம் மித்யா. ஆத்மாவிற்கும், மனதிற்கும் இடையே உள்ள இந்த சத்ய-மித்யா-விவேகம் முக்கியாமானது.
நான் என்ற சொல்
பயன்படுத்தும்போது ஆத்மாவும் பிரகாசிக்கிறது; மனமும் உணரப்படுகிறது. இவையிரண்டும் அருகருகே இருந்தாலும், ஒன்றாக
பிரகாசித்தாலும் இரண்டும் வெவ்வேற் இயல்புகளை உடையது. ஆத்மா உணர்வுமயமானது. மனம்
உணர்வற்றது. நிர்விகார ஆத்மா உயர்ந்த-நான் சவிகார அகங்காரம் கீழான-நான். ஆத்மா அனாத்மாவை பிரகாசிக்கிறது.
நான் சம்சாரி என்பது மனதையே
குறிக்கிறது, ஆத்மாவையல்ல. எனவே
முக்தியை கொடுக்க ஆத்மா சம்சாரத்தை நீக்க தேவையில்லை. நானே ஆத்மா என்று
உணர்ந்துவிட்டாலே முக்தனாகிவிடுவான்.
உடல்-மனம் தொகுப்பு
எப்போதும் கணிக்க முடியாதது, கட்டுபடுத்த முடியாதது, நீடித்திருக்க முடியாததாகும். அனாத்மாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது. ஆதலால் அனாத்மாவை கட்டுக்குள்
வைத்துக் கொள்ள முயற்சிப்பது, அதை தன்னுடையதாக வைத்துக் கொள்ள முயற்சிப்பது வாழ்க்கையை துயராமாக்கிக்
கொள்வது போலாகும். சில சமயங்களில் அதை தன்
கட்டுக்குள் வைத்திருக்கலாம், ஆனால் அதை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால்
அனாத்மாவை எல்லையற்ற காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.. எனவே உடல்-மனத்தொகுப்பை
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை விட்டுவிட்டு அவற்றை விஸ்வரூப
ஈஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய குடும்பம், சமுதாயம் இதில் கவனத்தை செலுத்தவேண்டும். இதுவே
உள்முக சந்நியாசமாகும்.
நான் எப்போதும்
சுதந்திரமானவன், உடல்-மனத்தொகுப்புத்தான்
சுதந்திரமற்றது. அதனால் இதை விஸ்வரூப ஈஸ்வரனிடம் விட்டுவிட வேண்டும். நம்முடைய
குறிக்கோள் மனதிலுள்ள உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வை நீக்குவதல்ல. அவைகள் என்னைச்
சார்ந்ததல்ல அதனால் அதை ஈஸ்வரனிடம் ஒப்படைத்துவிடுகிறேன் என்ற மனநிலையை அடைய வேண்டும்.
இதுவை உண்மையான சந்நியாசம். இதன் பலன் மனவமைதி.
அகங்காரம் எப்போதுமே
மாற்றத்தையுடைய விஷயங்களை அனுபவிக்கின்றது. ஆனால் ஆத்மா எப்போதுமே மாறாத-நான் என்பதை மட்டும்தான்
அனுபவிக்கிறது. நாம் எப்போதும் மாற்றத்தையுடைய விஷயங்களை நாடித்தான் செல்கின்றோம், மாற்றத்தை அடையாத ஆத்மாவை கவனிப்பதில்லை.
மேற்கண்ட கருத்தை
விளக்குவதற்கு இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் வெளிச்சத்தில் கையை
அசைக்கும் போது அசைகின்ற கையை மட்டும்தான் கவனித்துக் கொண்டிருப்போம். அதை
வியாபித்து அதன் இருப்பபைக் காட்டிக் கொடுக்கின்ற வெளிச்சத்தை முற்றிலுமாக கவனிக்க
மாட்டோம். அதேபோல உலக விஷயங்கனை அனுபவிக்கும்போது அவைகளின் மீதுதான் கவனம்
செலுத்துவோம். அவைகளை அனுபவிப்பதிலேதான் நம் மனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்.
அனுபவிக்கின்ற இந்த மனதிற்கு பின்னாலிருக்கின்ற ஆத்மாவை கவனிப்பதில்லை.
நாம் நான் என்ற சொல்லை
பயன்படுத்தும்போது மாறாதிருக்கின்ற ஆத்மாவையும், மாறிக்கொண்டிருக்கின்ற அகங்காரத்தையும் சேர்த்து
அனுபவிக்கின்றோம். அகங்காரம் என்பது மாறிக்கொண்டிருக்கும் உடல், மனம், எண்ணங்கள், உணர்ச்சிகள்
ஆகியவற்றின் தொகுப்பாக இருக்கின்றது. அதிலிருக்கின்ற சிதாபாசம் ஜாக்ரத் அவஸ்தையின் போது சுறுசுறுப்பாகவும், ஆழ்ந்த உறக்கத்தில்
அமைதியாகவும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை உடையது. இதற்கேற்றபடி உடலும், மனமும் மாற்றங்களை
அனுபவிக்கின்றது.
ஆத்மா என்பது நாம்
குறிக்கின்ற, நான் சொல்லில்
இருப்பதால் உடலும், மனமும், உலகமும்
அனுபவிக்கப்படுகின்றது. இவைகள் இயங்குவதற்கு ஆத்மா தேவைப்படுவதால் அவைகள் ஆத்மாவை
சார்ந்திருக்கிறது. ஆனால் ஆத்மா தன்னுடைய அனுபவத்திற்கு எதையும்
செய்யவேண்டியதில்லை. எனவே ஆத்ம அனுபவத்திற்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
ஏனென்றால் அது எப்போதம் இருந்து கொண்டு இருக்கிறது. வேதாந்த உபதேசம் ஒருவனுடைய
கவனத்தை ஆத்மாவை நோக்கி திருப்ப முயற்சி செய்கிறது.
அகங்காரம் விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்ந்த உறக்கநிலை
என்று மூன்று நிலைகளாக மாறியிருக்கிறது.. ஆனால் இதை மூன்று நிலையிலும் மாறாமல்
இருப்பது ஆத்மாமட்டும்தான். அறிவு ஸ்வரூபமான ஆத்மா இருப்பதால்தான் ஒருவனால்
மூன்று நிலைகளிலும் அனுபவிக்கும்
விஷயங்களை நினைவுபடுத்தி சொல்ல முடிகிறது. மனமும், உடலும், புலன்களும் முதல் இரண்டு நிலைகளில் இயங்கினாலும் அவைகள் வெவ்வேறானவையாகும்.
- உணர்வுமயமானது உடலின் ஒரு பகுதியல்ல, அதன் காரியமுமல்ல. அதற்கு சொந்தமானதுமல்ல.
- இது சுதந்திரமானது, தனித்துவமானது, உயிருள்ள ஜீவராசிகளில் வியாபித்து இருக்கிறது.
- உடலால் வரையறுக்கப்படுவதில்லை
- உடலழிந்தாலும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது.
- ஆத்மாவை தொடர்பு கொள்ள முடியாது. எந்த செயல் செய்வதற்கும் இருக்காது.
- உணர்வுமயமானது எண்ணங்களின் ஒரு பகுதியோ, காரியமோ, சொந்தமோ கிடையாது.
- இது சுதந்திரமானது, தனித்துவமானது. மேலும் ஒவ்வொரு எண்ணங்களிலும் ஊடுருவி அவைகளை அனுபவமாக்குகிறது.
- எண்ணங்களால் வரையறுக்கப்படாதது. எண்ணங்களுக்கு இருப்பிடம் இருக்கிறது ஆனால் இதற்கு கிடையாது.
- எண்ணங்கள், அனுபவங்கள் முடிந்தாலும் இது தொடர்ந்திருக்கும்.
- இது தொடர்ந்திருந்தாலும் எந்தவொரு குறிப்பிட்ட அனுபவத்தையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அனுபவங்களை உருவாக்க எண்ணங்கள் கிடையாது.
எண்ணங்கள் அழிந்தால் அனுபவங்கள்
முடிந்துவிடும், ஆனால் ஆத்மா
தொடர்ந்து இருக்கும் என்ற கருத்தை தவறாக புரிந்து கொண்டு சிலர் தியானத்தில்
அமர்ந்து எண்ணங்களை அழித்துவிட்டால் ஆத்மாவை அடைந்திடலாம் என்று முயற்சி
செய்கிறார்கள். இது அவர்கள் ஆத்மாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
மூன்று சரீரங்களோடு கூடிய அகங்காரத்தை சிதாபாசத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார். பானையைப் போல மூன்று சரீரங்களும் தேய்வடையக் கூடியது. பானையில் உள்ள ஆகாசத்தைப் போல சைதன்யமும் எங்கும் வியாபித்திருக்கிறது, மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது. இந்த கருத்தை தியானம் செய்யலாம். அகங்காரத்தை பிரகாசிக்கும் ஆத்மாவை தோற்றுவித்தவர் யாரும் கிடையாது. அதற்கு தோற்றம், இருப்பு. தேய்வு, அழிவு என்ற மாற்றங்கள் எதுவும் கிடையாது.
அகங்காரம் ஆழ்ந்த உறக்கத்திலும், இறப்பிலும் தற்காலிகமாக இல்லாமலிருக்கும். தூங்கும் போது யாருக்கும் தனித்துவம் கிடையாது, ஆனாலும் மாறாத ஆத்மா தொடர்ந்திருக்கும். நான் இருக்கிறேன் என்று சொல்லும்போது அகங்காரத்தை பயன்படுத்துவதில்லை. இதையே தானே ஒளிரக்கூடிய தன்மையயை உடையது என்று கூறுகிறோம். உதாரணத்தில் கூறப்பட்ட அசைகின்ற கையில் ஒளிர்கின்ற ஒளியை அனுபவிக்க எந்த முயற்சியும் தேவை கிடையாது. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்கு அகங்காரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆத்மானுபவம் தொடர்ந்திருந்தாலும் அதை செயலுக்கு பயன்படுத்த அகங்காரம் தேவைப்படுகிறது.
சாட்சி அனுபவம் மாறாமல் அகங்கார அனுபவத்துடன் கலந்து இருக்கிறது. எனவே சாதகன் இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாட்டை பயன்படுத்தி ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக மூன்று வகையான அனுபவங்களால் ஆத்மாவை அனாத்மாவிலிருந்து பிரித்தறிந்து கொள்ளலாம். அவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- நிகழ்கால அனாத்மா அனுபவங்கள், தற்போதைய பண்புகளுடன் கூடிய விழிப்புணர்வு.
- கடந்தகால அனாத்மா அனுபவங்கள், முந்தைய பண்புகளுடன் கூடிய விழிப்புணர்வு.
- கடந்தகால, நிகழ்கால அனுபவங்களின் சமன்பாடு. இந்த சமன்பாடு பொதுவாக அன்றாட உரையாடல்களில் வெளிப்படுகிறது.. உதாரணமாக நான் நேற்று வகுப்பில் கலந்து கொண்டேன். நான் இன்றைய வகுப்பில் கலந்து கொள்கிறேன். இப்படி சொல்லும்போது கடந்தகாலமும், நிகழ்காலமும் இணைக்கப்படுகிறது.
இந்த சமன்பாடு செய்வதற்கு
கடந்தகால, நிகழ்கால பண்புகளை
புத்தி பூர்வமாக விட்டுவிட வேண்டும். ஒருவன் அறிவுபூர்வமாக தன்னை கடந்தகால, நிகழ்கால பண்புகளிலிருந்து, விலக்கிக்
கொள்ளும்போது இரண்டிற்கும் பொதுவான சுயஉணர்வு மட்டும் மிஞ்சி
நிற்கும். இந்த நீக்குதலை பாகத்தியாக லட்சணை என்ற நியாயத்தை பயன்படுத்தி செய்ய
வேண்டும். இப்படி செய்யும்போது பண்புகள் நீக்கப்பட்ட நிர்குணமான சுய உணர்வே சாட்சி
சைதன்யம் என்று புரிந்து கொள்ள வேண்டும். பிறகு சாதகன் நான் சாட்சியாக இருக்கிறேன்
(அஹம் சாக்ஷி அஸ்மி) என்று கூறிக்கொள்ளலாம்.
அதேபோல அஹம் பிரஹ்மாஸ்மி என்ற வாக்கியம் சொல்லும்போது நான் என்று குறிப்பிடுவது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவைத்தான். மேலும் கடந்தகால வருங்கால பண்புகள் புறக்கணிக்கப்படுகிறது. சிறுவன், இளைஞன், வயோதிகன் போன்றவை மாறிவரும் பண்புகளாக இருக்கும்போது மாறாமல் இருந்து கொண்டிருக்கும் ஆத்மவுணர்வே சாட்சியாகும். இதுதான் வேதாந்த உபதேசத்தில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலாகும். சாதகன் இதை புரிந்து கொண்டுவிட்டால் சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான்.
நான் துயரத்துடன் இருக்கிறேன் என்று வாக்கியத்தின் பொருள் ஆத்மா மனதை அறிகிறது அந்த மனம் துயரத்துடன் இருக்கிறது என்பதுதான். உலக யுக்தி நான் துயரத்தை அனுபவிக்கிறேன் என்பது. வேதாந்த யுக்தி நான் துயரத்தை அனுபவிக்கிறேன் ஆனால் நான் துயரமாக இல்லை என்பதுதான். நான் மனம் அல்ல. மனதை கணிக்க முடியாது, கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஆத்மாவோ என்றும் இருந்து கொண்டிருப்பது, மனதைப் பற்றிய அக்கறையில்லை என்ற இந்த கருத்து உறுதியான நம்பிக்கையாக மாற வேண்டும்.
அதேபோல அஹம் பிரஹ்மாஸ்மி என்ற வாக்கியம் சொல்லும்போது நான் என்று குறிப்பிடுவது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவைத்தான். மேலும் கடந்தகால வருங்கால பண்புகள் புறக்கணிக்கப்படுகிறது. சிறுவன், இளைஞன், வயோதிகன் போன்றவை மாறிவரும் பண்புகளாக இருக்கும்போது மாறாமல் இருந்து கொண்டிருக்கும் ஆத்மவுணர்வே சாட்சியாகும். இதுதான் வேதாந்த உபதேசத்தில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலாகும். சாதகன் இதை புரிந்து கொண்டுவிட்டால் சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான்.
நான் துயரத்துடன் இருக்கிறேன் என்று வாக்கியத்தின் பொருள் ஆத்மா மனதை அறிகிறது அந்த மனம் துயரத்துடன் இருக்கிறது என்பதுதான். உலக யுக்தி நான் துயரத்தை அனுபவிக்கிறேன் என்பது. வேதாந்த யுக்தி நான் துயரத்தை அனுபவிக்கிறேன் ஆனால் நான் துயரமாக இல்லை என்பதுதான். நான் மனம் அல்ல. மனதை கணிக்க முடியாது, கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஆத்மாவோ என்றும் இருந்து கொண்டிருப்பது, மனதைப் பற்றிய அக்கறையில்லை என்ற இந்த கருத்து உறுதியான நம்பிக்கையாக மாற வேண்டும்.
இந்த உணர்தல், அனுபவித்தல்
ஆத்மாவால் வேண்டுமென்று செய்யப்படும் செயல் அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள
வேண்டும். ஆத்மாவின் இருப்பினால் மனமானது உணரப்படுகிறது. அனுபவிக்கப்படுகிறது, பார்க்கப்படுகிறது. மனம்
ஆத்மாவின் இருப்பினால் அனுபவத்தை அடைவதால் ஆத்மாவுக்கு அனுபவிப்பவன் என்ற பொய்யான பெயர் கிடைக்கிறது.
ஆத்மா மனதை உணர்கிறது, இன்பம், துன்பம், வெறுப்பு, வருத்தம்
போன்றவைகளையும் உணர்கிறது. இவையிரண்டிற்கும் இடையே உள்ள உறவையும் அறிகிறது. எப்படி சூரியனின்
வெளிச்சம் நீரில் விழுந்தாலும் ஈரமாவதில்லையோ, நெருப்பின் மீது விழுந்தாலும்
பாதிக்கப்படுவதில்லையோ அதேபோல ஆத்மா இவைகளோடு எந்த உறவும் இல்லாமல் உணர்கின்றது.
அனாத்மாவான மனம் அனாத்மாவான
உலகத்திற்கு வெளிப்படுகிறது. இவை இரண்டுக்குமிடையேயான தொடர்பு
தவிர்க்க முடியாதது. ஆதலால் உணர்ச்சிகளும் தவிர்க்க முடியாதது. மாறிக்
கொண்டிருக்கும் உலகம் மாறுகின்ற உணர்ச்சிகளை உருவாக்குகிறது. இதனால் மனம்
மாறிக்கொண்டேயிருக்கிறது. கர்ம வாசனைகளும் மனதை மாற்றிக்கொண்டிக்கிறது.
மாறிக்கொண்டிருக்கும் மனநிலைகளான நம்பிக்கை, அவநம்பிக்கை, உற்சாகம், மனச்சோர்வு போன்றவைகள் கர்ம
வாசனைகளினால் வரும் விளைவுகளாகும். இவ்வாறு மனம்
வெவ்வேறு அனாத்மாக்களின் தாக்கங்களுக்குட்பட்டதாக இருக்கிறது. ஆனால் நாம் இவைகளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆத்மா என்றும் மனம் இல்லையென்ற உண்மையை
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லா அனுபவங்களும் பரஸ்பரம்
ஒன்றுக்கொன்று வேறாக இருப்பதால் நம்மால் ஒரு நேரத்தில் ஒரு அனுபவத்தை மட்டும்தான
அனுபவிக்க முடியும். ஆதலால் மன அனுபவங்கள் தொடர்ச்சியான ஒட்டத்தின் வடிவமாக
இருக்கின்றது. தூணைப் பார்க்கும் போது தூண் அனுபவம்
மட்டும்தான் ஏற்படும், மனித அனுபவம் ஏற்படாது. ஒவ்வொரு அனுபவமும் மற்ற அனுபவங்களுக்கு வேறாக
இருக்கும். எனவே ஒருவனுக்கு பலவித அனுபவங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றாகத்தான்
அனுபவிக்க முடியும். ஏனென்றால் அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரக்கூடியது. மனமும்
அவைகளுக்கேற்றபடி மாற்றத்தை அடைகின்றது. ஆதலால் மனம் மாற்றத்துடன் கூடியதாக இருக்கிறது. ஆத்மா இந்த
அகங்காரத்தை தான் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆத்மா மாறுகின்ற தன்மை உடையதாக இருந்தால் கடந்தகால ஆத்மா, நிகழ்கால ஆத்மா என்ற
சமன்பாட்டை ஏற்படுத்தமுடியாது.
நான் வேண்டுமென்றே
கவனிக்கும் செயலைச் செய்கிறேன் என்று செய்தியை பார்ப்பவன் என்ற சொல் தெரிவிக்கவில்லை.
ஆத்மாவின் இருப்பினால்தான் மனமானது பார்க்கப்படுகிறது.
உயிரோட்டமான மனதின் பார்வையிலிருந்து ஆத்மாவானது பார்ப்பவனாக அடையாளம்
காட்டப்படுகிறது. உண்மையில் ஆத்மா பார்ப்பவனல்ல, வெறும் சாட்சியாக இருக்கிறது.
ஆத்மாவாகிய நான்
உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற தேவையில்லை, ஏனென்றால் அவைகள் என்னிடத்தில் இல்லை. சாதகன் இந்த வேதாந்த தத்துவத்தை நன்கு
புரிந்து கொண்டிருந்தால் நான் உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறவில்லை என்று சொல்லமாட்டான்.
சில சாதகர்கள் வேதாந்தத்தை
படித்து முடித்துவிட்டேன். இனிமேல் மனதிலுள்ள உணர்ச்சிகளை, பிரச்சனைகளை வேதாந்த
அறிவைக் கொண்டு அவைகளை நீக்கிக் கொள்வேன். ஆத்மாவை நான் அறிந்து கொண்டேன். இப்போது
அனாத்மாவை நீக்கிக் கொள்வதற்கு தேவையான சாதனத்தை கடைப்பிடித்து அனாத்ம பிரச்சனைகளை
நீக்கிக்கொள்வேன் என்ற நினைப்பது ஆத்ம-அனாத்ம-விவேகத்தின் அடிப்படையான தவறாகும்.
இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் - பிறப்பு, இறப்பு, வியாதி, வயோதிகம் இவைகள் இந்த
உடலுக்கு வந்தாலும் நான் அவைகளால் ஒட்டாதவன், சச்சிதானந்த ஸ்வரூபத்தை உடையவன் என்று உறுதியான நம்பிக்கையை உடையவன்தான்
வேதாந்தி. உடலைப் பற்றிக் கவலைப்படுபவன், தன் புகைப்படத்திற்கு வரும் சேதத்தைப் பற்றி கவலைப்படுவதைப் போலாகும். தன்
உடலும் மித்யா, புகைப்படத்திலுள்ள
தன் உருவமும் மித்யா என்று உணர்ந்து கொள்ள வேண்டும். மோட்சம் என்பது, பிறப்பு, இறப்பைப் பற்றி
கவலைப்படாத நிலையேயாகும். உலகில் நடந்து கொண்டிருக்கும்
தொடர்ச்சியான மாற்றங்களைப் பற்றி கவலைப்படாத நிலையே மோட்சமாகும்.
வேதாந்தியானவன் நீண்ட ஆயளை
பிரார்த்திக்கக்கூடாது, சீக்கிரம் இறந்துவிட வேண்டும் என்றும்
பிரார்த்திக்கக்கூடாது. ஏனென்றால் முழுவாழ்க்கையே ஆத்மாவில் நாடகமாக இருக்கிறது.
ஆனால் அவைகளால் ஆத்மா பாதிக்கப்படுவது கிடையாது.
நீண்ட குச்சியானது நீருள்ள பாத்திரத்தில் மூழ்கும்போது நீர் மேல் மட்டத்திற்கு
கீழே வளைந்து காணப்படும். இந்த வளைவு வெறும் தோற்றம்தான். குச்சிக்கு எந்த சேதமும்
கிடையாது. ஆத்மா குச்சியுடனும், மாயா நீருக்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது மாறாத ஆத்மா மாயாவின் சக்தியால்
மாறுகின்ற அனாத்மாவாக பார்க்கப்படுகிறது. ஆத்மாவே வளையாத குச்சி போல்
சாட்சியாகவும், வளைந்த குச்சி போன்ற
அனாத்மாவாகவும் இருக்கிறது. எனவே ஆத்மாவை அடைவதற்கு எந்த
சாதனமும் தேவையில்லை. நானே நித்ய-மாறாத-முக்த ஸ்பவரூபத்தை உடையவன் என்ற உறுதியான
அறிவும், நம்பிக்கையும்
அடைந்தாலே போதுமானது.
ஆசாரியார் சீடன் சுலபமாக புரிந்து
கொள்வதற்காக ஆத்மா, அனாத்மா என்ற இருமையை தற்காலிகமாக அறிமுகப்படுத்தினார். ஆத்மா பார்ப்பவன், அனாத்மா
பார்க்ப்படுவது என்றும், ஆத்மா குணங்களற்றது, அனாத்மா குணங்களையுடையது என்றும், ஆத்மா உணர்வமயமானது, அனாத்மா உணர்வற்றது என்றும் இவை இரண்டிற்கும் இடையே உள்ள
வேற்றுமைகளைக் கூறி இரண்டிற்குமிடையே ஒரு சுவரை எழுப்பி விட்டார். நான் ஆத்மாதான் என்றாலும் அனாத்மாவாக காட்சியளிக்கிறேன் என்ற யோசனையை
சொல்வதற்காக இருமையை அறிமுகப்படுத்தினார். எப்படி நீருக்குள் பாதி
மூழ்கியிருக்கும் குச்சியானது வளைந்து காணப்படுகிறது. நீரிலிருந்து எடுத்தவுடன்
அந்த வளைவு மறைந்து நேராக காட்சியளிக்கிறதோ அதுபோல நான் ஆத்மாதான் ஆனால் மாயை
வழியே பார்க்கும்போது நானே அனாத்மாவாக காட்சி அளிக்கிறேன். மாறாத சாட்சியாகிய
ஆத்மா நான்தான் அதேசமயம் மனமாகிய பார்ப்பவனாகவும் தோன்றுகிறேன் என்ற அறிவை அடைந்திட வேண்டும்.
உயிரோடிருக்கும் போதே
முக்தியை அடைந்திடலாம். இறந்தபிறகு அடைகின்ற விதேஹ முக்திதான் அடையப்படவேண்டிய
முக்திநிலை என்று தவறாக நினைத்து விடக்கூடாது. வாழும்போதே ஆத்ம ஞானத்தை
அடைந்துவிட்டாலே முக்தனாக இருக்கலாம்.
எனவே மனம்தான் மாறுகின்ற
பார்ப்பவன் என்று சொல்வதற்கு பதிலாக நானே மாறிக் கொண்டிருக்கின்ற மனமாக
காட்சியளிக்கிறேன். மாற்றத்தையுடைய மனம் என்மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது என்று
சொல்லலாம். இது மாயையின் செயலால்
நடைபெறுகிறது அதனால் நான் எந்தவிதமான மாற்றத்தையும் அடைய மாட்டேன். மனதில்
ஏற்படும் மாற்றங்கள் நீக்கப்படும்போது அவைகள் அனுபவிக்கவில்லையென்று பொருளல்ல.
மாறிக் கொண்டிருக்கும் அனுபவங்கள் அனைத்தும் மித்யாவாகும். மாற்றங்கள்
நீக்கப்படும்போது, பொய்யென்று விலக்கும் போது அவைகளை அனுபவிக்கின்ற சம்சாரியும் மித்யாவாகும். நான் மட்டும் சத்யமாக இருந்து கொண்டு எதனால்
பாதிக்கப்படுவதில்லை.
என் மனதில் எண்ணங்களின்
ஓட்டமிருந்து கொண்டிருந்தாலும், நான் எதனோடும் ஒட்டாமல், பாதிக்காமல், மாறாமல் இருந்து
கொண்டிருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன் என்று உறுதியாக நினைக்கும் போதே முக்திநிலை
அடைந்து விட்டோம். இந்த முக்திநிலையை இவ்வளவு நாள் கழித்துத்தான் நான் அடைவேன் என்று
காலத்தைக் குறிக்கக்கூடாது..
மோட்சம் என்பது
மனதிலிருந்து விடுதலை அடைவதாகும். இதை புரிந்து கொண்டால் முக்திநிலை நம்முடைய
இயல்பாகிவிடும். இதன்பிறகு மோட்சத்தை அடைவதற்கு
சாதன-சதுஷ்டய-சம்பத்தி ஒரு நிபந்தனையாக இருக்காது. மோட்சம் எனது இயல்பாகி விடும்போது
நிபந்தனைகளுக்கு அவசியமில்லை. எனவே சாதன-சதுஷ்டய-சம்பத்தி மோட்சத்தை அடைவதற்கான
சாதனம் அல்ல புரிந்து கொள்ளலாம். நான் என்றும் முக்தனாகவே இருக்கிறேன் என்ற மனநிலையின் அடிப்படையில் என்னை
மதிப்பிடக்கூடாது. நான் சாட்சி சைதன்யமாக இருப்பதால் முழு அனாத்மாவுடனும், மூன்று சரீரங்களுடனும், மனநிலைகளுடனும் எந்தவித தொடர்பும் இல்லாதவனாக இருக்கிறேன் என்று உண்ர வேண்டும்.
--oo00oo--
No comments:
Post a Comment